திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

06.12.2022 திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் - செவ்வாய்கிழமை

கடவுள் ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை

அருள்மொழி:

அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர் கூட நெறித் தவறிப் போகக் கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம். (மத்தேயு 18:14)

வார்த்தை வாழ்வாக:

காணாமல் போன ஓர் ஆட்டைப் பற்றிய உவமையைக் கூறியதன் பின்னர் மேற்கண்ட வார்த்தைகளை இயேசு சொல்கிறார். தன் பாதுகாப்பில் இருக்கின்ற தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் விட்டுவிட்டு, வழிதவறிச் சென்ற ஒற்றை ஆட்டை விடாமுயற்சியுடன் ஆயர் தேடிச் செல்கிறார். “அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சி அடைவதைவிட வழிதவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவாரென உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்” (மத்தேயு 18:13) என்று இந்த உவமையில் இயேசு கூறுகிறார்.

நாமெல்லாம் “இச்சிறியோருள் ஒருவராக” இருக்கின்றோம். மேலோட்டமாகப் பார்க்கும்போது, தொண்ணூற்றொன்பது ஆடுகளைவிட, வழிதவறிச் சென்ற ஓர் ஆட்டிற்காக ஆயர் மகிழ்ச்சியடைவது நியாயமற்றதாகத் தோன்றலாம். ஆனால், நாம் ஒவ்வொருவரும் வழிதவறிய ஆடாக இருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொண்டால், இதன் பொருளைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.

இந்த உவமையைச் சிந்திக்கும்போது, வழிதவறிச் செல்கின்ற நம்மைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான ஆயரின் ஆழமான வேட்கையை நாம் தியானிப்பது அவசியமாகிறது. நம்மைக் கண்டுபிடிப்பதற்காக ஆயர் காட்டுகின்ற அக்கறை, சோர்வற்ற பிரயத்தனம், விடாமுயற்சி ஆகியவற்றை நாம் உற்றுநோக்க வேண்டும். இத்தகைய மேலான அக்கறையைக் கடவுள் நம் மீது கொண்டுள்ளார் என்பதை நாம் ஒருநாளும் மறத்தலாகாது.

சிந்தனை:

வழிதவறிக் காணாமற்போன ஆடு நாம் தான் என்பதை இன்றைய நாளின் சிந்தனைக்கு அடுத்துக் கொள்வோம். நமது குற்றங்களின் விளைவாக நாம் ‘வழிதவறி’ இருக்கிறோம் என்பது மகிழ்ச்சியான நஒரு நிலைமை அல்ல. அச்சம், விரக்தி, மனக்குழப்பம், கோபம் ஆகிய உணர்ச்சிகளைக் குற்றங்கள் நம்முள்ளே உருவாக்குகின்றன. ஆனால், பாவநிலையின் மத்தியில் நல்லாயனாகிய இயேசுவை நோக்கி நம் கண்களை உயர்த்தும்போது நம்பிக்கை நம் மனதில் மீண்டும் உருவாகிறது. வழிதவறிய நம்மைக் கண்டுபிடிப்பதற்காக அக்கறையோடு கடவுள் தேடிக் கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையை நாம் மீண்டும் பெறுகிறோம். அவ்வாறு கடவுள் நம்மைத் தேடிக் கண்டுபிடிக்கும்போது, அவருடைய உள்ளம் மிகுந்த மகிழ்ச்சியடைகிறது.

இறைவேண்டல்:

ஆண்டவரே, பாவநிலையிலும், மனக்குழப்பத்திலும் இருக்கின்ற நான் உம்மை நோக்கி என் கண்களை உயர்த்துகிறேன். வழிதவறிய என்னை நீர் மீட்டெடுப்பீர் என நம்புகிறேன். எனக்காகச் சுடர்விட்டெரியும் உமது பேரன்பை எப்போதும் நம்புகிறேன். இயேசுவே, உம்மில் நான் நம்பிக்கை வைக்கின்றேன்.

அன்பின்மடல் முகப்பு