"கண்டிப்பா பிறந்தநாள் கொண்டாடிய ஆகணுமா”?

xmas2

நம் இருப்பு அடுத்திருப்பவாின் நம்பிக்கையாக

“நான் அதனால் தான் யாருக்கிட்டேயும் சொல்லாமலேயே இருந்தேன். எனக்கு அந்த ஒரு நாள் பிடிக்கவே பிடிக்காது. நான் ஏன்தான் பிறந்தேனு இருக்குது. இதுல வேற எனக்கு பிறந்தநாள் கொண்டாடியே ஆகணுமா? அதெல்லாம் வேண்டாம். எனக்கு டிசம்பர் 7ஆம் தேதி திங்கள் கிழமைதான் பிறந்தநாள், தயவுசெய்து எனக்கு கேக் வெட்ட வேண்டாம். ப்ளீஸ்!” என்று கனத்த இதயத்துடன் விழிகளில் கண்ணீர் பெருக்கெடுக்கத் தோழி ஒருவரின் குரல் ஒருபுறம் ஒலிக்கின்றது. மறுபுறம் 15 லட்சத்திற்கும் மேல் உயிர்களைக் காவுவாங்கி மேலும் நம்மைப் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கிவரும் கோவிட்-19 கொள்ளைநோய் மற்றும் அதனால் உருவாகியுள்ள பொருளாதார சீர்குலைவு, வேலையின்மை, பசி மற்றும் போர்கள், அரசியல் சாசன மற்றும் சனநாயக கோட்பாடுகளுக்கு எதிராக நடுவணரசு கொண்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கை, சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின் வழியே இயற்கை வளங்களை அழிக்கும் சட்டங்கள், சாதி, மத, இனப்பாகுபாட்டால் அரங்கேற்றப்படும் வன்முறைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், இவற்றினும் மேலாக இதுபோன்ற மனித மாண்புக்கும், உரிமைக்கும் எதிரான அநீதிகளுக்குக் குரல் கொடுக்கும் தந்தை ஸ்டேன் சுவாமி போன்ற மனித உரிமை காப்பாளர்களைக் கைதுசெய்து அடக்கும் கொடுங்கோன்மைச் சட்டங்கள் போன்ற பல தொடர் நெருக்கடியான பிரச்சனைகள் இவ்வுலகிலும், நம்வாழ்விலும் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் நம்பிக்கையற்ற, நிம்மதியற்ற, நிச்சயமற்ற எதார்த்தங்களை எதிர்கொள்ள அழைக்கின்றது.

நம் அன்னையர்கள் அறிவர். உயிர்களை இவ்வுலகிற்குப் பிறப்பிக்க அவர்கள் இறந்து உயிர்பெறும் அதிசயத்தை. ஆனால் பிறந்த அவ்வுயிர்கள் அழிக்கப்படுவது மானுடத்தின் வெட்கக்கேடு. தேசிய குற்றப் பதிவுகள் பணியகம் 2019 அறிக்கையின்படி வறட்சி மற்றும் கடன் தொல்லையால் இந்தியாவில் ஏறக்குறைய 43000 விவசாயிகள் மற்றும் தினசரி கூலிகள் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். ஏழ்மை மற்றும் வேலையின்மையின் காரணமாக ஒருமணி நேரத்திற்குக் குறைந்தபட்சமாக ஒரு தற்கொலை நிகழ்கின்றது. 18.92 கோடி மக்கள் போதிய ஊட்டச்சத்து இல்லாமலும் ஏறக்குறைய 7000 பேர் உணவின்மையாலும் தினமும் செத்து மடிகின்றனர்.

இவர்களின் பிறப்பும், இறப்பும் கண்டுகொள்ளாமலேயே அல்லது கண்டுகொள்ளபடாமலேயே நம்மில் பலரையும், இவ்வுலகையும் தொடர்ந்து கடந்து செல்கின்றது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இவர்களின் இறப்புக்குக் காரணமாயிருக்கும் நாம் எதற்காகப் பிறந்தோம்? எதற்காக வாழ்கிறோம்? இப்பிரச்சினைகளில் இருந்து மீட்பே இல்லையா? போன்ற பல கேள்விகளை நம்மிடையே எழுப்பி மனிதர்களாகப் பதிலிருப்புக் கொடுக்க அழைக்கின்றது. இக்கேள்விகளின் அர்த்தமாகவும், அடையாளமாகவும் நம் அன்றாட வாழ்வை எதிர்கொண்டு, தக்க பதிலிருப்பு கொடுக்க மனுவுரு எடுக்கிறார் மானுடமகன் இயேசு நம்மிடையே.

2000 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிக்கம் செலுத்தி வந்த உரோமைப் பேரரசின் விளிம்பில் இருந்த சிறு கிராமத்தில் வலுவற்ற இன்றைய அதே சூழல்கொண்டு பல்வேறு நோய்களினாலும், தீய சக்திகளின் ஆதிக்கத்தால் பெருகிய பாவங்களால் அடிமைப்படுத்தப்பட்டு, விளிம்பிற்குத் தள்ளப்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, நம்பிக்கையற்று வாழ்ந்தோரின் நடுவே நம்பிக்கையாகவும் ஆறுதலாகவும் மனுவுரு எடுத்தார் இயேசு. தன் பிறப்பின் மூலம் மக்களின் அன்றாட துன்பங்களில் பங்கு கொண்டு, ஆதிக்கச் சக்திகளை எதிர்த்துப் போராடி, வாழ்வின் எதார்த்தங்களை எதிர்கொண்டு அர்த்தம் காண, விடுதலை அடைய மீட்பின் பாதையை நமக்கு வெளிப்படுத்திய இயேசு, நம்மையும் அவ்வாறே வாழ அழைக்கின்றார்.

இன்று நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் பதிலிருப்பாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட "அனைவரும் உடன்பிறந்தோர்" என்ற திருமடல் உணர்த்துவதும் இந்நம்பிக்கையையே. இவ்வுலகில் எந்த ஒரு மனிதரும் தன்னந்தனியாகத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயலாது, மாறாக, அடுத்திருப்பவரை சகோதர, சகோதரிகளாக - அதாவது உடன்பிறந்தோராக - நோக்கினால் மட்டுமே தங்களையும் உலகையும் பாதுகாக்க முடியும் என்ற சிந்தனையை முன்னிலைப்படுத்தி உடன் பிறந்த உணர்வு, சமுதாய நட்பு மற்றும் நீதி ஆகிய பண்புகள் கொண்ட உலகைச் சமைப்பதற்கும், இவற்றிற்கு எதிராகச் செயல்படும் அனைத்துவித ஆதிக்கச்சக்திகளை அமைதி வழியில் தொடர்ந்து எதிர்க்கவும் உலக சமுதாயத்தை அழைக்கின்றார்.

கொரோனா ஏற்படுத்திய அச்சத்தினால் பல மாதங்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டு இன்று அன்றாட வாழ்க்கைச் சூழல்களை எதிர்கொள்ள மெதுவாக வெளியில் வரும் நாம் எவ்வாறு நம் இருப்பினை அடுத்திருப்பவர்களின் நம்பிக்கையாக மாற்ற முடியும்? இது சாத்தியமா?

இவ்வருட கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம், குறிப்பாக இதற்கான பல்வேறு சாத்திய கூறுகளைக் நமக்குக் காட்டி அவற்றைச் செயல்படுத்த அழைக்கின்றது.

அவற்றில் ஒருசிலவனவாக:

தங்கள் இல்லங்களிலும் குடும்பங்களிலும் அதிகநேரம் செலவிடக் கொரோனா கொடுத்த இந்த வாய்ப்பினைக் கொடையாகப் பயன்படுத்திக் குழந்தைகளும் பெற்றோர்களும் ஒன்றாக அமர்ந்து தங்கள் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்து அதற்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் நம்மை ஈடுபடுத்தி ஒருவர் மற்றவரின் நம்பிக்கையாகவும் ஆறுதலாகவும் இருக்க முயற்சிக்கலாம்.

குளிருக்கு இதமாக ஆடை அணிந்து கிறிஸ்து பிறப்பு திருப்பலி காணத் தயாராகும் நாம் வழி ஓரங்களில் நடுங்கிக் கொண்டிருக்கும் எளியோரைக் கண்கொண்டு ஆடை அணிவிக்கலாம்.

நம் இல்லங்களில் ஆடம்பர அலங்காரங்களைத் தவிர்த்து வேலை இழந்து வாழ்வாதாரத்திற்குப் போராடும் நம் அருகில் வாழும் புலம்பெயர்ந்த அல்லது ஏழை குடும்பம் ஒன்றினைத் தேர்வு செய்து நம்மால் இயன்ற நிதி அல்லது பொருளுதவி செய்து கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றலாம்.

பல்வேறு ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் சுமந்து அன்றாடம் கடந்து செல்லும் நமக்கு அடுத்திருப்பவர்களின் நம்பிக்கையாக நமது புன்னகையைப் பகிர்ந்து மழலை இயேசுவைப் பிரதிபலிக்கலாம்.

இயேசுவின் பிறப்பு வருடம் ஒரு முறை வந்து செல்லும் சடங்காக அல்லாமல் "கடவுள் நம்மோடு" என்ற இறை அனுபவமாகக் கொண்டாடப்படவும், நம் இருப்பு அடுத்திருப்பவர்களின் வாழ்வை வளப்படுத்தும் நம்பிக்கையாகவும் ஆழப்பட இறைவனிடம் வேண்டுவோம். மனுவுரு எடுத்த மழலை இயேசுவை நம் மனம் ஏந்தி மகிழ்ச்சியோடு "கண்டிப்பா பிறந்தநாளைக் கொண்டாடுவோம்."

மனதில் பல ஏக்கங்களையும் இன்னல்களையும் தாங்கி தன் அடையாளத்தை ஏற்றுக் கொள்ளமுடியாமல் வாழத் தகுதியற்றவர் என எண்ணி "கண்டிப்பா பிறந்தநாள் கொண்டாடிய ஆகணுமா" என்று கூறிய தோழி ஓர் மூன்றாம் பாலினத்தவர். நம்பிக்கையூட்டும் மழலை இயேசுவை அவரின் பிறந்தநாள் பரிசாக அன்பளிப்போம். அடையாளம் இழந்த பலரின் நம்பிக்கை அடையாளமாக மனுவுரு எடுப்போம் குழந்தை இயேசுவோடு விடுதலை வாழ்வு படைக்க!

அருள்சகோதரர் வேளாங்கன்னி சே.ச.