நமக்காக பிறந்த குழந்தை
கிறிஸ்துமஸ் விழா, இறைவன் மனிதனுக்குத் தம்மையே வெளிப்படுத்திய விழா. தெய்வீக விழா - குழந்தைகளின் விழா - மனுக்குலத்தின் விழா!
குழந்தையை யார்தான் விரும்புவதில்லை? குழந்தையைக் கொஞ்சி மகிழாதவர்கள் உண்டோ ?
ஒரு நாள் சென்னையில் உள்ள அன்னை தெரெசாள் மடத்திற்குச் சென்றேன். வேண்டாமென்று தூக்கி எறியப்பட்டக் குழந்தைகளைப் பராமரிக்கும் இல்லம் அது. 'சிசு பவன்' என்ற அந்த இடத்தில் ஒரு குழந்தையைக் கண்டேன். ஓர் அருட் சகோதரி அந்தக் குழந்தையின் கதையை என்னிடம் கூறினார்கள்.
இரவு 10 மணிக்கு கல்லறை ஒன்றில் குழந்தை அழும் குரலை ஒரு பங்குத் தந்தை கேட்டார். யாரோ மூன்று நாள் குழந்தையைக் கல்லறையின் மீது தூக்கி எறிந்துவிட்டுச் சென்றுள்ளார்கள். அவர் அந்த குழந்தையைப் போலீசாரிடம் ஒப்படைத்து அன்னை தெரெசாள் மடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று மன்றாடினார். போலீசாரும் அப்படியே செய்தனர். இன்று அந்தக் குழந்தை அருள் சகோதரிகளின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றது.
குழந்தைகள் தினமாகிய கிறிஸ்துமஸ் விழாவன்று, இறைவன் ஒரு குழந்தை உருவம் எடுத்து நம்மிடையே குடிகொண்டார் என்று பேருண்மையைத் திருச்சபைக் கொண்டாடுகிறது.
வரலாற்றிலே பலவிதமாக இறைவன் தம்மையே வெளிப்படுத்தினார். இறைவன் உயர்ந்தவர், உன்னதர், மகத்துவர். நேரடியாகத் தன்னை வெளிப்படுத்தினால் அவரது மகிமையை மனிதன் தாங்க முடியாது என்று தம்மையே பல சின்னங்களின் வழியாகப் பழைய ஏற்பாட்டில் இறைவன் வெளிப்படுத்தினார்.
நெருப்புத் தூணாகவும், மேகத் தூணாகவும் இஸ்ராயேல் மக்களுக்கு வழி காண்பிக்கத் தக்கதாக, ஆண்டவர் பகலில் மேகத் தூணாகவும், இரவில் நெருப்புத் தூணாகவும் அவர்களுக்கு முன் சென்று இரவும் பகலும் அவர்களுக்கு வழித் துணையாய் இருந்தார். பகலில் மேகத் தூணும், இரவில் நெருப்புத் தூணும் ஒரு நாளும் விலகிப் போனதில்லை ' (தொநூ. 13:21-22)
'அப்போது, இஸ்ராயேல் பாளையத்தின் முன் நடந்து கொண்டிருந்த கடவுளுடைய தூதர் பெயர்ந்து அவர்களுக்குப் பின் நடந்தார். அவரோடு கூட மேகத் தூணும் விலகி அவர்கள் பின்னால் காணப்பட்டது' (தொநூ. 14:19).கடவுள் தம் மகிமையை, மாட்சியை இஸ்ரயேல் மக்களுக்கு அடிக்கடி காட்டி அவர்களை மகிழ வைத்தார். மனம் சோர்ந்து போன நேரத்திலெல்லாம் தம் மகிமையைக் காட்டி அவர்களுக்கு உணவூட்டி ஆறுதல் தந்தார். 'ஆரோன் இஸ்ராயேல் மக்கள் அனைவரோடும் பேசிக் கொண்டிருக்கையில், அவர்கள் பாலைவனப் பக்கம் திரும்பிப் பார்த்தனர். அந்நிமிடமே ஆண்டவரின் மாட்சி மேகத்திலே காணப்பட்டது' (தொநூ. 16:10)இறைவன் மனிதனோடு உறவாட வேண்டும், பேசி மகிழ வேண்டும் என்று விரும்பினார். தம்மையே வெளிப்படுத்தி தம் பிரதிநிதியான மோயீசனோடு பேசினார். 'மோயீசன் உடன்படிக்கைக் கூடாரத்தில் நுழைந்த பின்னரோ மேகத் தூண் வாயிலில் இறங்கி நிற்கும். அப்போது ஆண்டவர் மோயீசனோடு பேசுவார்' (தொநூ. 33:10).
தம் வாழ்க்கைப் பயணத்தை எப்படி, எப்பொழுது மேற்கொள்ள வேண்டுமென்று இறைவன் தம் மக்களை நடத்திச் செல்கின்றார். நல்ல ஆயனைப் போல தம் மக்களை வழி நடத்தி வந்தார். என்னே இறைவனின் அன்புப் பராமரிப்பு! 'இவையெல்லாம் முடிந்த போது ஒரு மேகம் சாட்சியக் கூடாரத்தை மூடினதுமன்றி, ஆண்டவருடைய மாட்சியும் அதனை நிரப்பியது. மேகம் எல்லாவற்றையும் மூடிக் கொண்டு, ஆண்டவருடைய மாட்சி மின்னி எரிந்ததினாலே, மோயீசன் உடன்படிக்கைக் கூடாரத்திற்குள்ளே நுழைய இயலாதிருந்தார். ' ஏனென்றால் மேகம் எல்லாவற்றையும் மூடிக் கொண்டிருந்தது. திருவுறைவிடத்திலிருந்த மேகம் எழும்பும் போது இஸ்ராயேல் மக்கள் புறப்பட்டுப் போவார்கள்.
மேகம் எழும்பாமல் மேலே தங்கியிருக்கும் போதோ, அவர்கள் பயணம் செய்யாமல், அவ்விடத்திலேயே இருப்பார்கள். ஏனென்றால், இஸ்ராயேல் மக்கள் எல்லோரும் தங்கள் இல்லிடங் களிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க, பகலிலே ஆண்டவருடைய மேகமும், இரவிலே நெருப்புச் சுடரும் உடன்படிக்கைக் கூடாரத்தின் மேல் தங்கியிருந்தன' (தொநூ. 40:32:36). இவ்வாறு ஏலியின், ஒளியின், நெருப்பின், மேகத்தின் வழியாக ஆதிகாலத்திலே மக்களோடு உறவாடிய இறைவன், இன்று தம் மகன் வழியாக நம்மோடு பேசுகின்றார், உறவாடுகின்றார். மனிதன் கடவுளைக் காண முடியாது. ஆனால், புதிய ஏற்பாட்டுக் காலத்திலிருந்து கடவுளை மனிதன் தொட்டு, பார்த்து உணரக் கூடிய அளவில் சந்திக்கின்றார். இந்த சந்திப்பிற்கு அவரே வழி வகைகளைச் செய்துள்ளார். தீர்க்கத்தரிசிகளின் வழியாகவும், நற்செய்தியாளர்கள் வழியாகவும் இப்பேருண்மையை வெளிப்படுத்துகின்றார்.
இறையண்ணல் இயேசு பிறப்பதற்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பே, இந்த சந்திப்பைப் பற்றி இசையாஸ் தீர்க்கதரிசி வழியாக நமக்கு முன்னறிவித்துள்ளார்.
''ஆதலால், ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார். இதோ, கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்'' (எசா. 7:14). உலகிலே அமைதியை நிலை நாட்ட இறைவனே ஒரு குழந்தையாக மனுவுரு எடுக்கச் சித்தம் கொண்டார். "ஏனெனில் நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளது; நமக்கு ஒரு மகன் தரப்பட்டுள்ளான்; ஆட்சியின் பொறுப்பு அவருடைய தோள் மேல் இருக்கும், அவருடைய பெயரோ, வியத்தகு ஆலோசனையாளர், வல்லமையுள்ள இறைவன், முடிவில்லாத் தந்தை அமைதியின் மன்னன்" என வழங்கப்படும்.
இந்தக் குழந்தை நீதியுள்ள அரசனாக நமக்குக் காட்சியளிக்கின்றார்.
நீதி, நெறிதவறி, திசை தெரியாமல் தவிக்கும் இந்த உலகிற்கு , நீதிமானாக இறைவன் எவ்வளவு அவசியம் என்பதை நாம் அறிவோம். அந்தத் தேவையை அறிந்துதான், நமக்கு இறையண்ணல் இயேசு நீதிமானாக நம்மிடையே தோன்றுகின்றார். ''யெஸ்ஸேயின் தண்டிலிருந்து ஒரு தளிர் கிளம்பும். அவன் வேரிலிருந்து ஒரு கிளை தோன்றும். ஆண்டவர் ஆவி அவர் மேல் தங்கும், ஞானமும் மெய்யுணர்வும் தரும் ஆவி, அறிவும் ஆண்டவரைப் பற்றிய அச்சமும் தரும் ஆவி, இந்த ஆவி அவர்மேல் தங்கும்.''
முன்னறிவிக்கப்பட்ட மெசியா, புதிய ஏற்பாட்டில் நிறைவு பெறும் பொருட்டு, மனிதனாகத் தோன்றுகிறார். அன்னை மரியாளுக்கு இந்த நற்செய்தி முதன் முதலாக கூறப்படுகின்றது. 'இதோ! உம் வயிற்றில் கருத்தரித்து ஒரு மகனைப் பெறுவீர். அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் மேன்மை மிக்கவராய் இருப்பார். உன்னதரின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தையான தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குலத்தின் மீது என்றென்றும் அரசாள்வார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது' (லூக். 1:31-34).
இப்படிப் பிறக்கும் குழந்தை நம் குழந்தை, மனுக்குலத்தின் குழந்தை, நம் மனித சுபாவத்தையே உயர்த்தும் குழந்தை. மனுக்குலம் அர்ச்சிக்கப்பட்டு உயர்த்தப்படும் நிகழ்ச்சிதான் கிறிஸ்துமஸ் மகிமையின் விழா, மாட்சிமையின் விழா - கிறிஸ்துமஸ்! இறைவனின் மாட்சிமை நமக்கு வெளிப்பட குழந்தையாகப் பிறக்கின்றார் இறைவன். வார்த்தை மனுவுருவானார்; நம்மிடையே குடி கொண்டார். அவரது மாட்சிமையை நாங்கள் கண்டோம். அவர் பெற்ற இம் மாட்சிமை ஒரேபேறான அவருக்கு ஏற்ற மாட்சிமையே! ஆகவே, அவர் அருளும் உண்மையும் நிறைந்து தந்தையிடமிருந்து விளங்கினார்" (யோவா.1:14).
இந்தப் பிறப்பில் அமைதி உள்ளது. தாழ்ச்சி உள்ளது. அருள் உள்ளது. ஆணவம் இல்லை, அராஜகம் இல்லை . " கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை விடாமல் பிடித்துக் கொண்டிருக்க வேண்டிய ஒன்றாகக் கருதவில்லை.
ஆனால், தம்மையே வெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்டு மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி தம்மைத் தாழ்த்திச் சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்படிபவரானார்'' (பிலிப். 2:6-8).
இவ்வாறு தம்மையே தாழ்த்தியதால் தான் இறைவன் அவரை உயர்த்தினார். மகிமையின் மகுடம் சூடச் செய்தார். ''ஊன் உருவில் அவர் தோன்றினார். தேவ ஆவியின் செயலாலே அவர் இறைவனுக்கு ஏற்புடையவரென விளங்கினார். வானதூதர்க்குத் தம்மைக் காண்பித்தார்.
புறவினத்தாருக்கு அறிவிக்கப்பெற்றார். விசுவாசத்தோடு உலகில் ஏற்கப் பெற்றார். மாட்சிமையிலே அவர் விண்ணேற்பு அடைந்தார்'' (1 திமோத்தேயு 3:16).
நாமும் - இயேசுவின் சீடராகிய நாமும் நம் அண்ணலைப் போல எளிமையிலும், தாழ்ச்சியிலும் வளர்வோமாக! கிறிஸ்துமஸ் விழா நமக்குக் குழந்தையுள்ளத்தைக் கொடுத்து, இயேசுவைப் போல் நாமும் தந்தையால் உயர்த்தப்பட்டு அவரது மகிமையிலும், மாட்சியிலும் பங்கு பெறுவோமாக!