வார்த்தை மனுவுருவானார்!

ஹலோ குட்டீஸ்களே, அன்புள்ளம் பெற்றோர்களே!
வார்த்தை வழியாக மனிதன் எப்படி வாழ நம் வேண்டுமென்று பழைய ஏற்பாட்டில் பலமுறை கற்பிக்க முற்பட்டார். இறைவன் முயன்று முடியாத போது எப்படி மனிதன் இருக்க வேண்டும் எனும் எதிர் நோக்கை மனதில் கொண்டு தன் திட்டத்தையே மாற்றிக் கொண்டார் இறைவன். அவர் மண்ணகத்தில் அடியெடுத்த நாளே கிறிஸ்துமஸ் பெருவிழா.

சின்ன குழந்தை இயேசுவின் பிறப்பு மானிடர் அனைவருக்கும் சிறப்பு சேர்க்கும் பொன் விழா! அகிலம் முழுவதும் அகமகிழ்ந்து கொண்டாடும் நன்னாளே கிறிஸ்துமஸ்!

இந்த வையகம் வாழ்வாங்கு வாழ்ந்திட வறியோர் - துன்புறுவோர் - ஒதுக்கப்பட்டோர் - அகதிகள் நோயுற்றோர் வாழ்வு வளம் பெற, புவியோர் அமைதி காண, விண்மீன் வழிகாட்ட - வானவர் அமைதி கீதம் முழங்க! மரியின் மைந்தன் மண்ணகம் வந்து பிறந்தார்.

சின்ன குழந்தை இயேசுவுக்கு என்ன- கொடுக்கப் போறீங்க? சில ஆலோசனைகள்! உங்கள் பிஞ்சு உள்ளத்தை புல்லாங்குழல் போல் வெறுமையாகவும், அதே வேளையில் பல இனிய இசையை மீட்டிடும் வீணையாகவும் மீட்டிடுங்கள்! மழலை இயேசுவின் மனநிலையைக் கொண்டுள்ள நாம், இறைமகனின் பிறப்பு ஓர் மாட்டுத் தொழுவத்தில் இங்கே! உம் போன்ற ஏழை பிஞ்சு உள்ளங்கள் மழலை மன்னவனை கண்டு தரிசிக்க - இன்புற ஏற்ற இடம் மாட்டுத் தொழுவம் தான் என்பதை மழலை பாலகன் உணர்ந்து தான் தன் பிறப்பை மாட மாளிகையில் பதிவுச் செய்யவில்லை. மாறாக இடையர் காவலர்கள், அன்னையின் அன்பு மழலைகள்தான் தன்னை தரிசிக்க வேண்டும் என்ற நோக்கே கிறிஸ்து பாலகனின் வருகையின் கருப்பொருள் என்பதை மனதின் ஆழத்தில் பதிவுச் செய்திடுவீர்.

வயதிற்கேற்ப மூவொரு இறைவனின்டை படைப்பு - மீட்பு - பராமரிப்பு எனும் முப்பணியை தரணியருக்கென்று இறைவன் விரும்புகின்றார். விவிலியச் சிந்தனைகளை வாசித்து மனதில் நிறுத்தி செயல் வடிவம் கொடுத்திட ஞானத்தை ஆவியாரிடமிருந்து பெற்றிடுங்கள். இறைவார்த்தை வழி நிறை வாழ்வு என்பதை மழலை இயேசுவில் மகிழ்ந்திடுங்கள். எதிர்மறை எண்ணங்களை அகற்றிருங்கள்! இதுவே கிறிஸ்து மழலை பாலகனுக்கு நாம் வழங்கும் ஞான பரிசு என்பதை அறிந்திடுங்கள்.

புல்லாங்குழலில் உட்புகும் காற்று இன்னிசையைத் தருவது போல - நாம் இன்று கண்டு மகிழும் மழலை பாலகனின் பேரொளி நம் வாழ்வின் இன்ப ஒளியாகட்டும் தாலாட்டுப் பாடி சின்ன குழந்தை இயேசுவுக்குக் கிறிஸ்மஸ் மங்களம் ஒளிரட்டும்!

வானதூதரின் வார்த்தைகளைக் கேட்ட மரியாள் 'ஆகட்டும்' எனும் சொன்ன தாழ்ச்சியே நமது ஆடையாகட்டும்! வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே வந்துதித்த மழலை மன்னவனுக்கு தாலாட்டு கானம் மீட்டிடுவோம்!

புனித அன்னை தெரசாவைப் போன்று மழலையர் விடுதியை நாடிடுவோம். முதியோர் - அனாதைகள் - மாற்றுத் திறனாளிகள் - மனநலம் குன்றியவர்களின் மலர்மஞ்சமாக நாம் மாறிடுவோம்.

நாள்தோறும் திருமறைக்கல்வியை பயின்றிடுவோம். கிறிஸ்து பிறப்பு விழாவின் நற்செய்தியை வறியோரின் இன்முகத்தில் பதிவுச் செய்வோம்! அன்றாட வழிபாடுகளில் இணைந்திடுவோம். இறையருளில் நாம் திளைத்திட சின்ன பாலகன் குழந்தை இயேசுவிடம் நம்மையே ஈந்திடுவோம். இகமதை வென்றிடுவோம்! வார்த்தை மனுவுருவானவர் என்றென்றும் நம்மில் வாழ்கின்றார் என்ற சிந்தனையில் தவழ்ந்திடுவோம்.

அருள்சீலி அந்தோணி