மீட்பின் மாபெரும் விழா - கிறிஸ்து பிறப்பு

கிறிஸ்து பிறப்பு:

இது ஒரு புதுப்படைப்பு. உலகின்பல்வேறு இடங்களில் மனித முயற்சி உழைப்பால் புதிய புதிய பொருட்கள் உற்பத்தியாகின்றன. ஆனால் மனித பிறப்பு அப்படியல்ல; கடவுள் தம் சாயலாக மனிதனைப் படைத்தார். அவ்வாறே குழந்தை பிறக்கும்போது தன் பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி வடிவத்தில் பிறக்கிறது. எனவே குழந்தை பிறப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இயேசுவின் பிறப்பு மாறுபட்ட ஒன்றாகும். மனிதகுலம் மீட்படைய பரம தந்தை தம் ஒரே மகன் மண்ணில் பிறந்திடச் சித்தம் கொண்டார். எனவே, "அவரிடம் நம்பிக்கைக் கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்" (யோவா 1:12). எனவே இயேசு பாலன் பிறப்பு நமக்கு மகிழ்ச்சி தரும் மாபெரும் விழாவாகும். எனினும் 2020-ம்ஆண்டை அர்த்தமுள்ள முறையில் கொண்டாடி "எளியோர் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்!" (திபா 41:1) என்ற இறைவார்த்தையை வாழ்வாக்கி, கொரோனா எனும்கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளித்து, அவர்கள் இழந்த மகிழ்ச்சினை மீண்டும் பெற்று நம்பிக்கையுடன் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடிட நல்வழி காட்டுவோம். அப்போது "அவர்கள் என்மீது அன்பு கூர்ந்ததால் அவர்களை விடுவிப்பேன்" (திபா 91:14) என்ற இறைவாக்கு நம் எல்லோருக்கும் விடுதலை அளிக்கும். இம்மானுவேல் - 'கடவுள் நம்மோடு இருக்கிறார்' என்று மகிழ்ந்து கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடிடுவோம். "தம் சொந்த மகனென்றும் பாராது, அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள்" (உரோ 8:32), நம்மீது கொண்டுள்ள அன்பு உறுதியாகிறது. இதுவே கிறிஸ்து பிறப்பு நமக்களிக்கும் மாபெரும் பரிசாகும். இதை அன்பின் பரிசு என்று நாம் சொல்லலாம்.

ஒளியால் உண்டான அதிர்ச்சி:

பகலெல்லாம் ஆடுகளை மேய்த்த இடையார்கள் அயர்ந்து தூங்கும் நள்ளிரவு. திடீரென்று ஆண்டவருடைய தூதர் அவர்கள் முன் வந்து நின்ற போது ஆண்டவரின் மாட்சி அவர்களைச் சுற்றி ஒளிர்ந்தது (லூக் 2:9). இதைக் கண்ட இடையர்கள் அஞ்சினர். வானதூதர் அவர்களிடம் "அஞ்சாதீர்கள்! இதோ எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்துள்ளார்" (லூக்2:10-11) என்றார். தூதர் சொன்னதைக் கேட்ட இடையர்கள் "வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கிற இந்த நிகழ்ச்சியைப் போய் பார்ப்போம்" (லூக் 2:15) என்று விரைந்து சென்று மரியாவையும், யோசேப்பையும், தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும் இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர் (லூக்2:17-18).

அதன்பின் கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்றார்கள். குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியுடன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்துகுழந்தையை வணங்கிய பின் பொன்னும்,சாம்பிராணியும், வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள் (மத் 2:11-12). கபடஉள்ளம் கொண்ட ஏரோது இயேசுவின்பிறப்பைக் கேட்டு கலங்கினான். ஆனால் "நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்" (திபா 1:6) என்ற வாக்கின்படி, குழந்தையை வணங்கியபின் விண்மீன் அவர்களை வேறு வழியில் நடந்திச் சென்றது. எனவே நாம் ஒளியின் வழி சென்று இருளின் ஒளியென (திபா 11:2-4) கிறிஸ்து பிறப்பை அறியாத மக்களுக்கு எடுத்துச் சொல்லி "எழுந்து பிரகாசி! உன்னில் ஒளி தோன்றியுள்ளது" (எசா 60:1)என்று ஒளியின் விழாவாம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒளியேற்றிக் கொண்டாடிடுவோம்.

இயேசு பிறப்பால் மகிழ்ச்சி:

மகிழ்ச்சிமிகு எந்த மனிதனும் கண்ணீர் சிந்த மாட்டான். மாறாக, எதைக் குறித்தும் கலங்காது "புதிய தொரு பாடலைப் பாடுங்கள் அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாருங்கள்" (திபா 149:1) என்று அகமகிழ்ந்து துதிப்பான். எனவே "கபடமற்ற உள்ளம் கொண்ட அனைவரும் மகிழ்வர். அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்"(திபா 5:11) என்றும், "ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள்" (பிலி 4:4) என்றும் தூய பவுலடியார் கூறுகின்றார். ஆம், குழந்தை பிறந்த வீட்டில் இனிப்பு வழங்கி மகிழ்கின்றோம்

.

ஆனால் இயேசு பிறப்போ ஏழ்மையானது. எனினும் உலகமே மகிழ்ந்து கொண்டாடும் இவ்விழாவானது நம் அகக்கண்களைத் திறந்து, பாவத்திலிருந்து விடுபட்டு விடுதலையின் மகிழ்ச்சியை அளிக்கின்றது. எனவே "ஆண்டவரே, என் மீட்பின் கடவுளே!" (திபா88:1) என்று பாடித் துதித்திட மகிழ்ச்சி அளிக்கிறது. ஆதலால் நாம் பாவத்திலிருந்து விடுபட்டு, கடவுளை "அப்பா தந்தையே"(உரோ 8:15) என்று மகிழ்ந்து துதித்திட முடிகிறது. எனவே தான் கடவுள் "அவர்கள் என் மீது அன்பு கூர்ந்ததால் அவர்களை விடுவிப்பேன்" (திபா 91:14) என்கிறார். இதனால் நாம் பாவத்திலிருந்து விடுபட்டு, அன்பு உறவில் மகிழ முடிகிறது. ஏனெனில் "அவர் செய்தவியத்தகு செயல்களை நினைத்து" (திபா105:5) மகிழ்ந்து பாட முடிகிறது. ஆதலால் "மகிழ்வோம், மகிழ்வோம்" என்று இயேசு பிறப்பினை மகிழ்ந்து கொண்டாடிட முடிகிறது."என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது" (லூக் 1:47)என்று மரியாவோடு சேர்ந்து மகிழ்ச்சி நிறை உள்ளத்தோடு கிறிஸ்மஸ் விழாவைக் கொண்டாடிடுவோம்.

அமைதியின் விழா:

அமைதியில்லா உலகிற்கு அமைதியின் பாலன் அன்னை மரியா வழியாய் மனவுரு எடுத்து மண்ணில் பிறந்துள்ளார். எனவே நாம் பெற்றோம் அமைதி! எனினும் நாடு, வீடு எங்குமே பகைமை, வெறுப்பு, பணவெறி மக்களை ஆட்டிப் படைக்கின்றன. ஒரு நாடு அடுத்துள்ள அண்டை நாடுகளுடன் போர் தொடுக்கிறது. இருப்பினும் இயேசுபிறப்பை அறிவிக்கும் வானதூதர், "பூமியில் நல்மனத்தோருக்கு அமைதி" என்று வாழ்த்துகிறார். ஆம், இந்த வாழ்த்தினை வாழ்வாக்கிட திருப்பலியில் குருவானவர் "ஆண்டவரின் அமைதி உங்களோடு இருப்பதாக!" என்று வேண்டி நம்மை அமைதியால் நிரப்புகிறார். இந்த அமைதி நம் மனப்புண்ணை ஆற்றிடும் அருமருந்தாகும். அமைதிமிகு உள்ளத்தில் அச்சமுமில்லை, ஐயமுமில்லை. இதை மனதில் படும்படியாக தூய பவுல் தன் ஒவ்வொரு மடலின் தொடக்கத்திலும் "நம் தந்தையாம் கடவுளிடமிருந்ததும், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும், அமைதியும் உரித்தாகுக" (கலா 1:3) என்றுவாழ்த்துகிறார்.

ஆம், இத்தகு நல்அமைதியை இயேசு பிறப்பு நமக்குத் தருகிறது. "அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர்! வல்லமைமிகு இறைவன்! என்றுமுள்ளதந்தை! அமைதியின் அரசர்!" (எசா 9:6). ஆம்,யாரெல்லாம் இயேசு வழியில் நடக்கிறார்களோ அவர்கள் பெறுவது அமைதியாகும். ஏனெனில்" அவர் என் ஆற்றல், என் பாடல், என் மீட்பும் அவரே" (திபா 118.14) என்கிறது. எனவே தான் புனித பிரான்சிஸ் அசிசியார் 'அமைதியின் தூதுவனாய் என்னைப் பயன்படுத்தும்' என்று இறைவனிடம் வேண்டுகிறார். நம்திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இந்த அமைதி உலகில் நிலவிட, நம்மை அமைதியின் தூதுவர்களாய் பணியாற்றப் பணிக்கிறார்.

எனவே, வரவிருக்கும் கிறிஸ்து பிறப்பை ஆரவாரமின்றி அமைதியான முறையில் கொண்டாடி, உலகில் அமைதி நிலவிடச் செபிப்போம்.

அன்பின் விழா:

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம். அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர் தந்தையின் ஒரே மகன்" (யோவா 1:14). இருப்பினும் மனுக்குலத்தின் மீது கொண்ட அன்பால் மண்ணில் மனிதனாய் பிறந்தார். சாதி, இனம், மொழி வேறுபாடின்றி, எல்லோரும் மீட்படைந்து பாவத்திலிருந்து விடுபட மாடடைக் குடிலில் இயேசு பாலன் பிறந்துள்ளார். "உன் குற்றங்களை என் பொருட்டுத் துடைத்தழிக்கிறேன். இனிமேல் உங்கள் பாவங்களை நினைவில் கொள்ளமாட்டேன்" (எசா 43:25) என்கிறார் நம் ஆண்டவர் இயேசு. எனவே இயேசு பிறப்பு அன்பின் விழாவாக அமைந்திட, ஒப்பரவு அருட்சாதனம் பெற்று நம் பகைவர், அயலாரை மன்னித்து அன்பைப் பொழிந்திடுவோம். அதன் வழியாய் நம் உள்ளத்தைத் தூய்மையாக்கி இயேசு நம்மில் பிறந்திட இடம் கொடுப்போம். எளியவர் உணவு உண்டு நிறைவு பெற்றிட இடம் கொடுப்போம். "எளியவர்உணவு உண்டு நிறைவு பெற்றிட" (திபா22:26) நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்தளித்து, அன்பு உறவில் வளர்வோம்.

சிறப்பாக 2020-ம் ஆண்டு கிறிஸ்துபிறப்பை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் விதமாக கொரோனா எனும் கொடியநோயால் பாதிக்கப்பட்டு வேலை இழந்துவறுமையில் வாடுவோர்க்குப் பகிர்ந்தளித்து "உன் நோய்களையெல்லாம் குணமாக்கும்" (திபா 103:3) ஆண்டவரின் அன்பைச் சுவைத்து மகிழ்ந்திடு சகோதரமே என்று வாழ்த்துகையில் "அன்பும் நட்பும் எங்குள்ளதோ அங்கே இறைவன் இருக்கிறார்" என்பதை உலகம் அறிந்திட அன்பின் சாட்சிகளாய்" சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணைநன்று! எத்துணை இனியது!" (திபா 133:1)என்று குடும்ப உணர்வோடு ஒருவர் ஒருவருக்காய் செபித்து, அன்பின் பிறப்பினை மகிழ்ந்து கொண்டாடிடுவோம்.

அருட்சகோ.ஜோவிட்டா, தூய சிலுவைமடம், திருச்சி