இறைவன் வாழ்கிறார்! குழந்தைகள் வடிவில்!!

திருமதி. மி. அமலி எட்வர்ட் - நாகமலை, மதுரை-19

அழைப்பு மணி கேட்டு வாசலுக்கு வந்தேன்.
‘குட்மார்னிங் மேடம்’ சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தாள். ‘வா சுந்தரி பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகி விட்டது, உட்கார்' என சந்தோசம் பொங்க அழைத்தேன்.
“மேடம் எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க? உன் வீட்ல அப்பா தம்பி தங்கை எப்படி இருக்காங்க?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க மேடம்” என மகிழ்ச்சி பொங்க கூறினாள். "உன் கல்லூரி படிப்பு எப்படி உள்ளது? சட்டக் கல்லூரி மாணவியா உன்னை பார்ப்பதில் ரொம்ப பெருமையா இருக்கு சுந்தரி”
“இந்த சந்தோசத்திற்கு காரணமே நீங்க தானே மேடம்.”
அதெல்லாம் ஒன்னுமில்லமா, ஆசிரியரா நான் வழிகாட்டினேன் அவ்வளவு தான்.
சரி நீ வந்த விசயத்த சொல்லு
“மேடம் டிசம்பர் 25 அம்மா இறந்த நாள்.”
“அத மறக்க முடியுமா சுந்தரி அன்றைக்கு சாமி கும்பிடுறீங்களா?”
“இல்ல மேடம், அம்மாவால உதவி பெற்றவங்க ஆறு பேரும் ஒன்னா சேர்ந்து எங்க கிராமத்துக்கு வர்றோம்னு தகவல் சொன்னாங்க. எனக்கு என்ன சொல்லுறதுன்னே தெரியல ஆனா அவங்க எல்லாத்தையும் ஒன்னா பார்க்க போறோம்ங்கிற சந்தோசத்துல வரசொல்லிட்டேன்.”
நல்ல விசயம் சுந்தரி கேட்கவே சந்தோசமா இருக்கு.
மேடம் அன்னைக்கு நீங்களும் எங்க கூட இருக்கனும்னு தாத்தா கண்டிப்பா சொன்னாங்க. உங்களுக்கு நல்ல நாள். கிறிஸ்மஸ் நாளுனு தெரியும் மேடம். ஆனா இந்த ஒரு வருடம் மட்டும் எங்களோட சந்தோசத்துல பங்கெடுத்துக்கனும் மேடம் என்றாள்.
“சுந்தரி கண்டிப்பா வருவேன்ம்மா”
“நன்றி மேடம் நான் கிளம்புறேன். உங்க பிள்ளைங்க, ஐயா எல்லாரையும் கூட்டிட்டு வாங்க மேடம்.”
“சரிம்மா” என்றேன்.


அவள் சென்ற பிறகு சென்ற ஆண்டு அவளுக்கு நேர்ந்த துயர நிகழ்வு மனதில் ஓடியது.
தலைமையாசிரியை ஆக அந்த மேல்நிலைப் பள்ளிக்கு பொறுப்பெடுத்த போது, சுந்தரி 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். எப்போதும் அவள் முகத்தில் சோகம் தான் குடி கொண்டிருக்கும். அடிக்கடி விடுமுறை எடுத்து விடுவாள். நன்றாக படிக்கக் கூடிய பெண். வரலாறு பாடத்திற்கும் மதிப்பீட்டு கல்விக்கும் அவள் வகுப்பிற்கு செல்வேன். கவனமாக கவனிப்பாள். அருமையாய் கேள்விகள் பல கேட்டு பாடத்தை தெளிவாக புரிந்து கொள்வாள். ஆனால் விடுமுறை அடிக்கடி எடுப்பாள். ஒரு நாள் அவளை கூப்பிட்டு அவள் குடும்ப சூழலை கேட்டேன்.
“மேடம் எங்க அம்மா அப்பா இரண்டு பேரும் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க. அம்மா தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவங்க. அதனால் அப்பா வீட்ல ஒத்துக்கல. ஊரவிட்டு தள்ளி வச்சுட்டாங்க. அம்மா வீட்டுலேயும் உதவி கிடையாது. தனியா இரண்டு பேருமா ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் வாழ்க்கைய ஓட்டிருக்காங்க. எங்க வீட்ல நாங்க மூணு பேரு. ஒரு தம்பியும் தங்கையும் இருக்காங்க. அப்பா மில்லுல தான் வேலைபார்த்தாங்க. அதனால T.B வந்து இப்ப ரொம்ப கஷ்டப்படுறாங்க. வேலைக்கு போறதில்ல. அம்மா தான் காலனிக்குள்ள வீட்டு வேலை பார்த்து சம்பாதிக்கிறாங்க. இந்த கஷ்டத்துல அம்மாவோட அம்மா இத்தன வருஷமா எட்டிக் கூட பார்க்கல. இப்ப மனநலம் சரியில்லாம ரோட்டுல திரிஞ்சவங்கள அம்மா கூட்டிட்டு வந்து கவனிக்கிறாங்க. நல்லா இருந்தப்ப கவனிச்ச மாமா அவங்க மனநலம் சரியில்லாம போனப் பிறகு வெளில அனுப்பிட்டாங்க. அம்மா தற்செயலா ரோட்டு ஓரமா பாட்டி படுத்திருந்தத பார்த்திட்டு வீட்டுக்குக் கூட்டி வந்துட்டாங்க. அப்பாவுக்கும் பாட்டிக்கும் மருந்து செலவும் அதிகமாகுது. அதனால நான் “அம்மா உன் கூட இரண்டு வீட்டுல வேலை பார்த்தா நாம சமாளிச்சுக்கலாம்னு” சொல்லுவேன் மேடம். ஆனா அம்மா “இல்ல நான் படிக்காமத் தான் இப்படி கஷ்டப் படுறேன். உங்க மூணு பேரையும் நல்லா படிக்க மட்டும் வைக்கணும்னு” சொல்றாங்க. அம்மாவ நினைச்சா கஷ்டமா இருக்கும் மேடம். ஆனா அம்மா மனசு இந்த உலகத்துல யாருக்கும் வராது மேடம். அம்மா பேரு தங்க மணி. “பெயருக்கேத்த மாதிரி அவங்க தங்கம் தான் மேடம”; என கண்ணீர் மல்க கூறினாள்.
“சரி சுந்தரி, உன் அம்மா சொல்றத மாதிரி நீ நல்லா படி. படிச்சு அம்மாவ நல்லா கவனிச்சுக்கோ அதுதான் நீ அவங்களுக்கு காட்டுற நன்றி. நல்ல மதிப்பெண் வாங்கி பெருமை சேர்” என்று தோளில் தட்டினேன்.
கண்களை துடைத்துக் கொண்டு “நிச்சயமாக மேடம், நான் சட்டம் படிக்கணும்னு என் கனவு. தீண்டாமை இன்னும் நம்ம சமூகத்தை விட்டு போகல. அதுனால தானே எங்க அப்பாவ தள்ளி வச்சுட்டாங்க. அத ஒழிக்க நான் சட்டம் மூலமா முயற்சி எடுப்பேன் என்று கோபம் கொப்பளிக்க கூறினாள்.
“சுந்தரி சட்டம் என்ற பிரம்பால நாம தவறுகளை திருத்த முடியாது. அம்பேத்கர் சட்டம் படிச்சு அரசியலமைப்பை உருவாக்கியவர் தான். ஆனாலும் இன்றைக்கும் தீண்டாமை ஏன் ஒழியல? மனுசங்க மனம் மாறணும். அது சட்டத்தால மாத்த முடியாது. நல்ல காரியங்கள செய்து அவங்க மனசுல நல்ல விசயங்களை சொல்லிக்கிட்டு இருந்தோம்னா மனுசங்க மனசு மாறும். நீ சட்டம் படித்து சட்டம் தெரிஞ்சுக்க. அப்புறம் மாவட்ட கலெக்டருக்கு படி. நல்ல விசயங்களை செயல்படுத்து. தானா மனுசங்க மாறிருவாங்க சரியா சுந்தரி” என்றேன்.
ஆமாம் மேடம் நீங்க சொல்றது கரெக்ட் தான். “நிச்சயமா நான் சமுதயாத்துக்கு நல்லது செய்வேன் மேடம்” என்றாள்.
“நல்லது. ஏன்அடிக்கடி விடுமுறை எடுக்குற”.
“மேடம் அப்பாவையும் பாட்டியையும் ஆஸ்பத்திரி கூட்டிட்டு போவாங்க அம்மா. அப்பவெல்லாம் அந்த வீடுகளுக்குப் போய் வீட்டு வேல செய்யனுமே மேடம். பாவம் அம்மா எத எத பார்ப்பாங்க? இனிமே விடுமுறை எடுக்காம இருக்க முயற்சி செய்றேன் மேடம்” என்றாள்.
“இன்னும் 6 மாசம் தான் படிப்பில கவனம் செலுத்துனா மாநிலத்திலேயே முதலாவதா வர வாய்ப்பிருக்கு. என்ன உதவி வேண்டுமென்றாலும் தயங்காம கேளு. All the Best” என்றேன்.
“நன்றி மேடம்” என்று கூறி விடை பெற்றாள்.
தொடர்ந்து விடுமுறையின்றி நன்றாக படித்தாள். வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றாள். அரையாண்டு தேர்வு வந்தது. முதல் தேர்வு மட்டும் தான் எழுதினாள். அதன் பிறகு தேர்வுக்கு வரவே இல்லை. அவள் வீடும் எங்கு உள்ளது என யாருக்கும் சரியாக தெரிய வில்லை. அலைபேசி அவள் வீட்டில் இல்லாததால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. விடுமுறையும் வந்தது.
கிறிஸ்துமஸ் விழாவும் முடிந்தது. மனம் சுந்தரியையே நினைத்துக் கொண்டிருந்தது. “சே முகவரி கூட வாங்கி வைக்காமல் போய்விட்டோமே” என நொந்து கொண்டேன். அலைபேசி ஒலி கேட்க எடுத்தேன். மறுபக்கம் “நான்னு சுவாமி நாதன் பேசுறேன். நீங்க மேடம் மரியாவா?” “ஆமாம் நான் மரியா தான் பேசுறேன்” “சுந்தரி என்ற மாணவியை உங்களுக்குத் தெரியுமா?” என்றார்.
“ஆமாம் என்ன அவளுக்கு” என்றேன் பதட்டமாக.
“சுந்தரிக்கு ஒன்னுமில்ல. நீங்க ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு உடனே வரமுடியுமா?” என்றார்.
“சரி உடனே வர்றேன்” என்றேன். டூவீலரை எடுத்துக் கொண்டு விரைந்தேன். மனதில் ஏதேதோ கற்பனைகள். இறைவா அந்த பொண்ணு குடும்பத்துக்கு ஏன் இப்படி கஷ்டத்தை கொடுக்குறீங்க. அந்த பொண்ணு நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிட்டே போனேன்.
ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து அலைபேசியில் மருத்துவரை தொடர்பு கொண்டு அவர் இருக்கும் இடம் நோக்கி விரைந்தேன். அங்கு சுந்தரி மெலிந்து போய் கண்கள் வீங்கி சோகத்தின் மொத்தமாக அமர்ந்திருந்தாள். என்னைப் பார்த்தவுடன் “மேடம்” என கதறிக் கொண்டு என்னை அணைத்துக் கொண்டாள். “என்ன சுந்தரி என்னாச்சு” என பதடடமாக கேட்டேன். சத்தம் கேட்டு மருத்துவரே வெளியே வந்து விட்டார். நீங்க மேடம் மரியா தானே வாங்க உள்ளே போய் பேசலாம். சுந்தரி நீயும் வா” என்றார்.
மனம் வேகமாக படபடத்தது. என்ன அதிர்ச்சியை சொல்லப போகிறார் என்ற பயம் மனதில் ஓடியது. சுந்தரியை பார்த்தேன்.
“ தாங்க முடியாமல் மீண்டும் அழுதாள். “மேடம் அம்மாவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டிருச்சு. ஒரு வாரமா கோமா ஸ்டேஜில இருக்காங்க என்று நெஞ்சு அடைக்கும் அழுகையோடு கூறினாள். எதுவும் சொல்ல முடியாமல் அவளை அப்படியே தோளில் சாய்த்துக் கொண்டேன்.
மருத்துவரே பேச ஆரம்பித்தார். “சுந்தரி அம்மாவுக்கு மூளைச் சாவு ஏற்பட்டுள்ளது. இனி அவங்க மருத்துவ ரீதியாக குணப்படுத்த முடியாது. சுயநினைவு இனி வராது. இந்நிலையில் உங்கள் மாணவி சொன்ன ஒரு கருத்துதான் உங்களை இங்கு வரவழைத்துள்ளது” என்றார்.
புரியாமல் சுந்தரியை பார்த்தேன்.
“மேடம் நீங்க உறுப்பு தானம் பற்றி எங்களுக்கு கற்றுக் கொடுத்தீர்களே. அம்மாவின் உறுப்புக்கள் எது எது எடுக்க முடியுமோ அதை எடுத்து யார் யாருக்கு உயிர் கொடுக்க முடியுமோ கொடுங்கள் என மருத்துவரிடம் கூறினேன் என்றாள்.
ஒரு வினாடி எனது இதயத் துடிப்பு நின்றது. என்ன ஒரு மகத்தான குழந்தை? இந்த சின்ன வயதில் இப்படி கூட நினைக்க முடியுமா? இறைவா இந்த பொண்ணுக்கு நீண்ட ஆயுளையும் சந்தோசத்தையும் கொடு என உள்ளுர நினைத்தேன்.
“மேடம்” என்ற மருத்துவரின் குரல் கேட்டு திரும்பினேன்.
“இப்ப என்ன பிரச்சனை என்றால் சுந்தரியின் அப்பாவின் பெற்றோர் அதாவது இதுவரை அவள் அப்பாவை ஒதுக்கியவர்கள் தற்போது மகனின் துயரம் கண்டு சேர்ந்துள்ளனர். அவர்களிடம் இதைப் பற்றி பேச சுந்தரி பயப்படுகிறாள். குடும்பத்தார் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே நாங்கள் இதை செய்ய முடியும். இதற்கு உங்கள் உதவியை எதிர்பார்க்கிறாள்” என்றார்.
அவள் தலையை கோதி விட்டபடி கூறினேன். “ இந்த சின்ன வயதில் எண்ணத்தால் எட்ட முடியாத உயரத்தில் போய் விட்டாய். நல்லது செய்ய நினைக்கிற உனக்கு நான் உதவி செய்யலன்னா நான் நல்ல ஆசிரியரே இல்லம்மா. நான் உங்க தாத்தா பாட்டிக்கிட்ட பேசுறேன்” என்று உறுதியளித்தேன்.
இத்தனை ஆண்டுகளாய் கண்டுகொள்ளாத தாத்தா பாட்டி இப்ப கண்ணீரும் வேதனையுமாய் நிற்பதை பார்த்து கோபம் தான் வந்தது. முதலில் நான் யார் என்று அறிமுகப் படுத்தியபிறகு விசயத்தை மெதுவாக ஆரம்பித்தேன்.
“அதெல்லாம் முடியாது என் மருமக உடம்ப கூறுபோடப் போறீங்களா? போம்மா போ உன் வேவையை பார்த்திக்கிட்டு” என்றார் ஆவேசமாக.
“உங்களை பொறுத்தவரை உங்கள் மருமக தீண்டத்தகாதவங்க தானே? அவங்க உடம்ப எப்படி சார் தூக்கிட்டுப் போய் எரிப்பீங்க உங்களுக்கு தீட்டுப்படடுறாதா? என்றேன். அதிர்ச்சியாக என்னை பார்த்தார். தீண்டத்தகாத ஜாதில பிறந்த பொணணு கூட தான உங்க மகன் வாழ்ந்துருக்காரு இப்ப உங்க மகன கட்டிப்பிடிச்சு அழுறீங்களே தீட்டுப்படாதா உங்களுக்கு” என்றேன்.
ஐயா, மனித உடம்ப தாழ்ந்தவன் உயர்ந்தவன் பிரித்து பார்ப்பது தப்பு. உங்க கிராமத்திலேயே உள்ள ஒரு பெண்மணிக்கு இருதயம் பழுதாகி இருக்கிறது. இப்ப நீங்க அனுமதிச்சா சுந்தரி அம்மாவின் இருதயம் அவங்களுக்கு பொருத்தலாம்னு மருத்துவர் சொல்கிறார். உங்க பிடிவாதத்தால பலபேர் ஆரோக்கியமா வாழப்போறத கெடுத்துராதீங்க. “நம்ம எண்ணங்கள் தான் நம்மள தாழ்ந்தவங்களா உயர்ந்தவங்களானு சொல்லணும். நீங்க உயர்ந்தவங்களா தாழ்ந்தவங்களானு உறுதி பண்ணுங்க” என்றேன்.
ஒரு நிமிடம் ஆடிப்போனார் பதிலே பேசல.
இந்த நிமிடத்தை பயன்படுத்திக் கொண்டேன். ஐயா, மனுசங்க எல்லாரும் ஒரு ஜாதி தான். உயர்ந்தவங்க, தாழ்ந்தவங்க கிடையாது. உங்க பேத்திய நினைச்சுப் பாருங்க அம்மா இந்த உலகத்துல இனி நடமாட முடியாதுங்கிற நிலைமையில கூட அந்த சின்னப் பிள்ளை நாலு பேருக்கு உதவணும்னு நினைக்குது. அந்த உறுப்புக்கள் யார் யாருக்கு போகும்னு கூட தெரியாது. அதுல உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதின்னு பாகுபாடு பார்க்க முடியாது. உங்க எண்ணங்களையெல்லாம் இந்த பிஞ்சு உள்ளங்களில் விதைக்காதீங்க என்றேன்.
அமைதியாய் நின்றவர், ஒதுங்கி பயந்து நின்ற பேத்தியை அருகே சென்று கட்டிப் பிடித்து அழுதார். “அம்மா தாயி நீ தெய்வம்மா தெய்வம். செய்மா நீ நினைச்சமாதிரியே செய்மா’ என்றார்.
கண்களை துடைத்து என்னருகே ஓடி வந்து “நன்றி மேடம்” என்றாள். “சுந்தரி இதுவரை இந்தியா ஒரே ஒரு அம்பேத்கரைத் தான் பார்த்தது. இரண்டாவது நீதான்”; என்றேன்.
“மேடம் இனி அம்மாங்கிற உருவத்த நான் பார்க்க முடியாதே” என்று அழுதாள்.
“அம்மாவின் உடல் உறுப்புக்கள் மூலம் அம்மா உன் கூடத்தான் வாழ்வாங்க சுந்தரி. போ தாத்தா பாட்டி அப்பாவ கூட்டிப் போய் மருத்துவரிடம் ஒப்புதல் கூறு” என்றேன்.
சட்டப்படி அனைவரும் கையெழுத்து போட்டு செய்ய வேண்டிய முறைகளோடு செய்து முடிக்கும் வரை இருந்து விட்டு வீடு திரும்பினேன். மனம் முழுவதும் சுந்தரி நிறைந்திருந்தாள்.


உறுப்புக்களை பெற்று மறு வாழ்வு கிடைத்த ஆறுபேரில் ஒருவர் அவள் தாத்தா பாட்டி கிராமத்தைச் சார்ந்தவர். உயர் சாதி ஒருவரின் இருதயம் இன்று தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவரின் இருதயத்தால் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இன்று சுந்தரியை அந்த கிராமமே அன்பு செய்து மதிக்கிறது.
கண்கள், கல்லீரல், நுரையீரல், இதயம், இரத்தம், மூட்டு என சுந்தரியின் அம்மா உடல் உறுப்புக்கள் வாழ்ந்த கொண்டிருக்கிறது. பயனடைந்தவர்கள் அவளுக்கு பணம் தருகிறோம் என்று கூறிய போது சுந்தரி மறுத்து விட்டாள். ‘தானம்’ என்ற சொல்லுக்கு இழுக்கு சேர்த்து விடாதீர்கள் என்ற ஒற்றை வார்த்தையால் மீண்டுமாய் உயர உயர உயர்ந்தாள்.
தள்ளி வைத்த தாத்தா பாட்டி அவள் குடும்பத்தை ஒன்றாய் சேர்த்து நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். டிசம்பர் 25 அவள் அம்மாவின் இறந்த நாளில் உறுப்புக்களை தானமாக பெற்றவர்கள் அவள் அம்மாவை அவளிடம் காட்ட வருகிறார்கள். அதற்காகத் தான் என்னை அழைக்க வந்தாள்.
இறைவன் வாழ்கிறார் குழந்தைகள் வடிவில் ..