இம்மானுவேல் - கடவுள் நம்மோடு..

சகோ. குழந்தை யேசு ராஜன் - போபால்

holy Family'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள். மத்தேயு 1:23-24

அடுத்ததவரை மகிழ்ச்சிப்படுத்த வெகு சிலர் மட்டும் தான் வேதனையை ஏற்றுக் கொள்கிறார்கள். மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த மிகச் சொற்ப பேர்தான் பெரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த காலகட்டத்தில் கிறிஸ்து பிறப்பு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாமல் ஒரு சாதாரண கொண்டாட்டமாக சென்று விடுகிறது.

இந்த நவீன காலத்தில் பணம், பதவி என எல்லோரும் ஒடிக் கொண்டு இருக்கிறோம். நம்மில் பெரும்பாலனோர் இறந்த காலத்தைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டு வருகிறோம். மற்றும் சிலர் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டு வாழ்கிறோம். வேறு சிலர் இந்த ஓட்டத்தில் ஏன் ஓடிக் கொணடிருக்கிறோம்? என்று தெரியாமலேயே ஒடிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நிகழ் காலத்தில் வரும் செயல்களை நம்மால் முடிந்தவரை நன்றாக செய்து வாழ்ந்தால் நாம் கடவுளின் பிரசன்னத்தை உணரமுடியும்.

பிரான்ஸ் நாட்டிலே தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று சொல்ல முடியும்? அல்லது பெரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எப்படி கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று சொல்ல முடியும்? தினமும் ஒரு வேளைகூட சோற்றுக்கு வழி இல்லதாவர்கள் எப்படி கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று சொல்ல முடியும்? முடியுமா என்ற கேட்டால் முடியாது என்பது தான் பதில். அப்படி என்றால் கடவுள் நம்மோடு இருக்கிறாரா? இப்படிபட்ட நிலையில் தான் நம் ஒவ்வொருவருடைய வாழ்வும் ஓர் அர்த்தமுள்ள வாழ்வாக மாற வேண்டும். இயேசு நம் வழியாக பாதிக்கப்பட்டவர்கள், ஏழைகள், ஆதரவு இல்லாத மக்கள் மத்தியில் பிறக்க வேண்டும். கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தினால் நாம் மற்றவர்களை சந்தோசப்படுத்த வேண்டும்.

நாம் அனைவரும் மற்றொரு கிறிஸ்துவாக மாறவேண்டும். இயேசுவுக்கு கரங்கள் இல்லை, நாம் தான் இவருடைய கரங்கள், குறிப்பாக ஏழைகள், வேதனைகளால் துன்பப்படுவர்களை தொட்டு குணப்படுத்த.. எனவே கிறிஸ்து நம்முள்ளும் நாம் அவருள்ளுமாக மாறும்போது தான் ”இம்மானுவேல்” கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று சொல்ல முடியும். இந்த மாற்றம் நம் வாழ்வை மட்டும் அல்ல மற்றவருடைய வாழ்வுக்கும் உறுதுணையாக இருக்கும். இந்த மாற்றம் நம் வாழ்வில் மட்டும் அல்ல மாறாக மற்றவருக்காக அதுவும் குறிப்பாக சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கான வாழ்வுக்காக. இதை தான் இயேசு தனது ஆட்சி என்கிறார்.

அந்த ஆட்சியைத் தான் நாம் அவருடைய பிறப்பு இறப்பு உயிர்தெழுதல் வழியாக பெறுகிறோம். எனவே இந்த குழந்தை இயேசுவின் பிறப்பு விழாவானது ஒரு மாற்றமாக அமையட்டும். நாம் குழந்தை இயேசுவின் பிறப்பு விழாவில் மற்றவர்களை சந்தோசப்படுத்த முயற்சி செய்வோம். மற்றவர்கைளை சந்தோசப்படுத்த பணமோ, பொன்னோ, பொருளோ தேவையில்லை. மாறாக சிறிய புன்னகை, நலமா என்ற வார்த்தை, வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் மற்றும் உங்களுக்காக செபிக்கிறேன் என்ற வாக்குறுதி போதும் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்த... உலகத்தில் பெரிய காரியங்களை செய்து மகிழ்ச்சிப் படுத்துவதைவிட சிறிய காரியங்களை அன்போடு செய்தாலே உலகம் மகிழ்ச்சியடையும்.

இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் எல்லோரும் ”இம்மானுவேல்” கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று உணரமுடியும். அதை மகிழ்ச்சியோடு எந்தவித சந்தேகமின்றிச் சொல்லமுடியும்.