திருச்சிலுவையின் மகிமை
சிலுவையடியில் நின்று கொண்டிருக்கிறாள் அன்னை மாமரி. அவளது நெஞ்சத்தில் நிழலாடியது கடந்த கால நிகழ்வொன்று. இயேசுவின் குழந்தைப் பருவத்தில் நடந்ததாம். தன் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு பிதற்றுவதிலும் புலம்புவதிலும் பெண்களுக்கு ஈடோ இணையோ இல்லை. அன்னை மரியா அதற்கு விதிவிலக்கா என்ன? ஒரு நாள் தனது இரண்டு வயதுக் குழந்தை இயேசுவை முத்தமிட்டு, “என் அன்புச் செல்வமே, என்னை நீ எவ்வளவு நேசிக்கிறாய்?” என்று கேட்டாளாம். குழந்தை என்ன பதில் சொல்லும்? எவ்வளவு சாப்பிட்டாய் என்று கேட்டால்கூட இவ்வளவு என்று தன் இரு கைகளையும் அகல விரிக்கும். அதுபோலத் தன் இரு கைகளையும் அகல நீட்டி, “இவ்வளவு” என்று சொன்னதாம். கண்ட அன்னையின் உள்ளத்தில் கற்கண்டுப் பூரிப்பு! ஆரத்தழுவி முத்தமிட்டு இறுக அணைத்துக் கொண்டாள்.
அடுத்த கனம் நிமிர்ந்து பார்க்கிறாள். துணுக்குறுகிறது அவளது நெஞ்சம். இரு கைகளையும் விரித்திருந்த அந்தச் சின்னஞ்சிறு உருவம், திறந்திருந்த கதவு வழி வந்த கதிரவன் ஒளியில் கன்னங்கரிய சிலுவையாகத் தரையில் நிழலிட்டதுதான் காரணம். அதே நேரத்தில் அடுத்திருந்த தச்சுப் பட்டறையில் யோசேப்பு உளிகொண்டு எதையோ ஓங்கி அறைந்து கொண்டிருந்தார். அப்படியே குழந்தையை மார்போடு அழுந்த அன்னை அணைத்துக் கொண்டாள். "உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்" (லூக். 2:35) என்ற சிமியோனின் இறைவாக்கு நினைவுக்கு வந்தது. கால் செருப்பு கழன்று விழக் குழந்தை இயேசு நடுங்க நோக்கும் சகாய அன்னையின் திருப்படத்துக்கான பின்னணி இதுதான்.
இன்று சிலுவையடியில் அந்த இறைவாக்கு எழுத்துக்கு எழுத்து நிறைவேறுவது கண்டு அன்னையின் நெஞ்சம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது: இவ்வளவு பேரன்பா இறைவனுக்கு!
சிலுவை என்பது இறையன்புக் காவியம். "சிலுவையில் உயர்த்தப்படும்போது நான் அனைவரையும் ஈர்த்துக் கொள்வேன்”.
வெறும் இரு கட்டைகளின் இணைப்பான சிலுவை சிறுமையின், கேவலத்தின், அவமானத்தின், வேதனையின் சின்னம். அது வெற்றியின், விடுதலையின், மீட்பின் சின்னமாக வேண்டுமா? ஒன்றில் அதில் கிறிஸ்து தொங்க வேண்டும், இன்றேல் கிறிஸ்தவன் தொங்க வேண்டும். “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மத். 16:24). “தம் சிலுவையைச் சுமக்காமல் என்பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது" (லூக். 14:27).
இங்கேதான் - சிலுவையில்தான் கிறிஸ்தவர்களாகிய நம் வாழ்க்கை தொடங்குகிறது. இப்போது சிலுவை பற்றிய திருத்தூதர் பவுலின் புரட்சிச் சிந்தனை புரிகிறது. "நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம்” (1 கொரி. 1: 23-24). சிலுவை யூதர்களுக்கு இடறல் கிரேக்கர்களுக்கு மடமை. அழைக்கப்பட்ட நமக்கோ கடவுளின் ஞானம். கடவுளின் வல்லமை, கடவுளின் பேரன்பு. அதனால்தான் பெருமையின் சின்னமாக, பெருமிதப்பொருளாக எண்ணித் திருத்தூதர் பவுல் இயம்புவார்: “நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையையன்றி வேறு எதைப்பற்றியும் ஒரு போதும் பெருமை பாராட்டமாட்டேன்” (கலா. 6:14). ஏனெனில் அதிலேதான் நமக்கு உயிரும் உயிர்ப்பும். அதனாலேதான் நமக்கு மீட்பும் விடுதலையும்.
கிறிஸ்துவுக்காக உலகக் கண்களுக்கு முன்னே அறிவிருந்தும் முட்டாளானோர் உண்டு. தெளிவிருந்தும் பைத்தியமானவர் உண்டு. செல்வமிருந்தும் பிச்சைக்காரர் ஆனோர் உண்டு - புனித அசிசி பிரான்சிஸ் போல, அருளாளர் பரதேசி பீற்றர் போல.
முட்டாள்தனமே முழு ஞானம் என்பது சிலுவைக்குத்தான் முற்றிலும் பொருந்தும். ஆனால் அவர்கள் சிலுவைவழி கண்டது வாழ்வின் நிறைவு. “என் பொருட்டுத் தன் உயிரை இழப்பவன் அதனைக் காத்துக் கொள்கிறான்” என்பதன் வாழ்க்கை அனுபவம்.
சிலுவை என்பது தியாகம். ஆனால் இன்றோ அதைத் துன்பம் என்று எண்ணித் தூர ஓடுகிறான் மனிதன் - தற்கொலை எல்லைவரை. தற்கொலைக்கு இட்டுச் செல்லும் அளவுக்கு மனிதனைத் துன்பம் வாழ்க்கையின் விளிம்பில் கொண்டு போய் நிறுத்துகிறது. தற்கொலை கோழைத்தனத்தின் வெளிப்பாடு. மடத்தனத்தின் செயல்பாடு. பல் இருப்பதால்தானே பல்வலி, பல்லை உடைத்துக் கொண்டால் என்ன என்று எவனாவது நினைப்பானா? உயிர் இருப்பதால்தானே தொல்லையும் துன்பமும். உயிரை மாய்த்துக் கொண்டால் என்ன என்று எண்ணுவதும் அப்படித்தான்.
துன்பம், நாவல்போல், நாடகம்போல், காடு, மலை, கடற்கரை, பூங்கா என்று எல்லாக் காட்சிகளிலும் காதலனும் காதலியும் ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள், கட்டிப் பிடித்துப் புரள்கிறார்கள் என்றால் போரடிக்காதா? இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என்று கேட்கத் தோன்றாதா? கதைக்குச் சுவையூட்டுவது எது? ஒரு துன்பம், ஒரு தோல்வி, ஏமாற்றம், எதிர்பாராத அதிர்ச்சி ... இவைகள்தாமே! துன்பத்தை நாடகமாக்கிப் பார்த்து இரசிக்கும், நாவலாக்கிப் படித்து மகிழும் மனிதன் ஏன் துன்பத்தை வாழ்வாக்கி ஏற்கத் தயங்குகிறான்? தவறுகிறான்?
துன்பம் என்பது விசுவாசப் பயிற்சி. இங்கிலாந்து நாடு. கடும் பனிக்காலம். நடுங்கும் குளிர். ஏழைத்தாய் ஒருத்தி கந்தையில் பொதிந்த மழலையைக் கைகளில் ஏந்தி காட்டின் வழியே நடந்து கொண்டிருந்தாள். அந்த நேரம் அவ்வழியே வந்த வண்டி அவளைக் கண்டதும் நின்றது. ஏறிக் கொண்டாள். வண்டி வேகமாக ஓடியது. உறைய வைக்கும் குளிர்காற்றின் வேகம் வேறு. குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டாள். அவளது பற்கள் வெடவெட என ஆடின. முடிவில் இறுகக் கட்டிக்கொண்டன. வண்டி ஓட்டித் திரும்பிப் பார்த்தான். 'அம்மா' என்றான். அவளால் வாய் திறக்க முடியவில்லை. நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி, 'கீழே இறங்கு' என்றான் அதட்டலுடன். பயந்து நடுங்கி அவள் இறங்கிக் கொண்டிருந்தாள். வெடுக்கெனப் பிள்ளையைப் பிடுங்கிக் கொண்டு குதிரையைத் தட்டி விட்டான். சிட்டாகப் பறந்தது. அவளோ, “என் பிள்ளை, என் பிள்ளை” என்று கதறிக் கொண்டு வண்டிக்குப் பின்னாலேயே ஓடினாள். சிறிது தூரம் சென்றதும் வண்டியை நிறுத்திப் பதறித் துடித்த அவளிடம் பிள்ளையைக் கொடுத்தான்.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. நிமிர்ந்து, “ஏன்பா இப்படிச் செய்தாய்?” என்று கேட்க, அவன் “இப்பக் குளிருதா?” என்று கேட்டான். “இல்லை. நன்றாக வேர்த்து விட்டது” என்று அவள் சொல்ல, சிரித்துக் கொண்டே அவன் சொன்னான், "இதற்காகத்தான் ஓட வைத்தேன்".
ஓடு ஓடு என்றால் நாம் ஓடமாட்டோம். அதனால் கடவுள் சில சமயம் ஓட்டம் காட்டுகிறார். தெய்வத்தின் இந்தத் திருவிளையாடலைப் பற்றித்தான் திருப்பாடல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
"எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே. அதனால் உம் விதிமுறைகளை நான் கற்றுக் கொண்டேன்" தி.பா. 119:71)
இறைமகன் இயேசுவின் பலிபீடம் திருச்சிலுவை. இவ்வுலக மனிதருக்குப் புகலிடம் திருச்சிலுவை.
“சிலுவையிலே சிந்தை வைத்தால் தீமையெல்லாம் அகலும் செகமெல்லாம் சோதரமாய்த் திகழ்தல் பெறலாமே” என்று தமிழ்த்தென்றல் திரு. வி.க. பாடுகிறார்.
பழைய உடன்படிக்கையில் பாலை நிலத்தில் பாம்பால் கடியுண்டவர்கள், மோசே கோலில் உயர்த்திய வெண்கலப் பாம்பைப் பார்த்து உயிர் பிழைத்தனர். இந்த வெண்கலப் பாம்பு திருச்சிலுவைக்கு முன் அடையாளம். சுருங்கச் சொல்லின் விண்ணரசுக்குக் குறுக்கு வழி இல்லை. குறுகிய வழிதான் உண்டு. குறுக்குவழி சிலுவையைத் தவிர்ப்பது. குறுகிய வழி சிலுவையை உவந்து ஏற்பது.
திருச்சிலுவை மகிமை நாள்
இதைப் பார்ப்போர், பிழைத்துக் கொள்வர்!
நிகழ்வு:
2019ஆம் ஆண்டு நான் திருத்தொண்டராக எம் மறைமாவட்டத்தில் உள்ள பங்கு ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். தினந்தோறும் அப்பங்கில் திருப்பலி நடைபெறும். அருள்சகோதரிகள் திருப்பலிக்குத் தேவையான பொருட்களையெல்லாம் எடுத்து வைப்பார்கள். பீடத்தையும் அவர்கள்தான் தயாரிப்பார்கள். பீட அலங்காரமும் அவர்கள்தான் செய்வார்கள். ஒரு நாள் மாலை சரியாக 05.45 மணி இருக்கும், ஆலயப்பணி செய்கின்ற அருள்சகோதரிகளில் ஒருவர் பங்குத்தந்தையிடம் வந்து, ‘பாதர் பீடத்தில் வைத்திருந்த சிலுவையைக் காணோம்’ என்று பதற்றத்துடன் சொன்னார். பங்குத்தந்தையும் தேடிப் பார்த்தீர்களா, வேறு சிஸ்டர்ஸ் யாரும் எங்கையாவது வைத்திருக்க போகிறார்கள் என்று சொன்னார். அதை கேட்ட அருள்சகோதரி, ‘நான் எல்லா இடத்திலும் தேடிட்டேன். எங்க சிஸ்டர்ஸ் எல்லாத்திட்டையும் கேட்டேன்’ என்றார். உடனே நான் சொன்னேன்: ‘பாதர் கேமரால பாருங்க, யாரும் எடுத்துட்டு போறாங்களானு’. சற்றும் தாமதிக்காமல் பங்குத்தந்தை ஆலயத்தில் பொருத்தபட்டுள்ள கேமிராவில் பார்த்தார். வயதான பெண் ஒருவர் பீடத்திற்கு அருகே சென்று அங்கிருந்த திருச்சிலுவையை எடுத்து தன் புடவையில் முடித்து யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து விட்டு அதை எடுத்து செல்கிறார். யார் அது என்று நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். பாதர் சொன்னாங்க, சிஸ்டர் அந்த அம்மா வசதி வாய்ப்புகளோடு வாழ கூடியவர்கள். அவருடைய மகன், மகள் எல்லாம் வெளிநாட்டில் செட்டில் ஆனவர்கள். இவர்கள் ஏன் இப்படி செய்தார்கள் என்று புரியவில்லையே என்றார். அதற்கு அருள்சகோதரி சரி பாதர், விடுங்க. நான் அந்த அம்மாவ பார்த்து கேட்டு வாங்குறேன் என்று கூறிவிட்டு சென்றார். இரண்டு நாட்கள் கழித்து அந்த அம்மாவைப் பார்த்து, அருள்சகோதரி நடந்தவற்றையெல்லாம் கூறினார். அப்போது அந்த அம்மா நான்தான் எடுத்தேன். நாளை கொண்டு வந்து தந்துவிடுகிறேன் என்று சொன்னார். அதன்படியே அடு;த்த நாள் அந்த அம்மா பீடத்தில் இருந்த சிலுவையைக் கொண்டு வந்து கொடு;த்தார். அப்போது அருள்சகோதரி கேட்டார்: ‘அம்மா நீங்கள்தான் வசதி வாய்ப்போடு இருங்கீங்களே அப்புறம் ஏன் இத எடுத்தீங்க’ இல்ல சிஸ்டர் ‘எவ்வளவு காசு கொடுத்து வாங்கினாலும் கிடைக்காத, இப்பீடத்திலிருக்கிற இந்த திருச்சிலுவையின் ஆசீர்வாதம் என் குடும்பத்திற்கு வேணும்னு நினைத்தேன். அதான் எடுத்தேன், மன்னிச்சிடுங்க சிஸ்டர்’ என்றார். என்னே! அத்தாயின் திருச்சிலுவையின் மீதான பற்று.
இறைஇயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே!
இன்று நம் அன்னையாம் திருஅவை திருச்சிலுவையின் மகிமை விழாவைக் கொண்டாடுகின்றது. இன்றைய வாசகங்கள் அனைத்துமே திருச்சிலுவையினால் வரும் மீட்பைக் குறித்து ஆழமாய் எடுத்துரைக்கின்றன. கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நமக்கு திருச்சிலுவையாலன்றி வேறு எதனாலும் மீட்பு இல்லை என்பதை உறுதியாய் உரக்கச் சொல்கிறது இன்றைய ஞாயிறு வழிபாடு. வழக்கமாகவே திருச்சிலுவையின் மீது யாருக்கும் அவ்வளவு பற்று இருப்பதில்லை. சிலுவை என்றாலே அது துன்பத்தின் அடையாளம். இன்னலின் இருப்பிடம், வேதனையின் வாசல்தளம் என்று எதிர்மறை கண்ணோட்டத்தோடே பார்க்க பழகிவிட்ட நமக்கு இன்று புதிய பார்வையை, திருச்சிலுவை குறித்த ஆழமான இறைச்செய்தியை கொடுக்க விழைகிறது இத்திருச்சிலுவை மகிமை நாள். கத்தோலிக்க திருஅவையில் ஒரு விழா என்றால் அதற்கு நான் அடிப்படை தளங்கள் உள்ளன. 1. விவிலியம், 2. வரலாறு, 3. மரபு, 4. திருச்சபை ஆசிரியம் இந்த நான்கின் அடிப்படையில்தான் எந்தவொரு விழாவும் தனக்கான விளக்கத்தைப் பெறுகின்றது. அர்த்தத்தையும் உணர்த்துகிறது.
இவ்விழாவிற்கான வரலாற்றுப் பின்னணி என்ன?
நான்காம் நூற்றாண்டில் கிறித்தவ சமயம் அரசுசமயமாய் உருவெடுத்தது. அப்போதைய அரசன் கான்ஸ்டான்டின் கிறித்தவத்தின் மீதான தன் நம்பிக்கையை ஆழப்படுத்தினார். அக்கணம் அவருடைய தாய் புனித ஹெலனா உரோமைப் பேரரசு முழுவதும் ஆலயங்கள் கட்டுவதிலும், கிறிஸ்தவத்தைப் பரப்புவதிலும் ஆர்வம் காட்டினார். கி.பி.326ஆம் ஆண்டு அவர் எருசலேமுக்குப் புனித பயணம் மேற்கொள்கிறார். அங்கு இயேசுவை அடக்கம் செய்த கல்லறைக்குப் போகிறார். இரண்டாம் நூற்றாண்டில் அதன் மேல் கட்டப்பட்டிருந்த ஓர் உரோமைக் கடவுள் கோயிலை இடிக்க உத்தரவு விடுகிறார். அப்போது அவர் மூன்று சிலுவைகளைக் கண்டுபிடிக்கிறார். அதில் இயேசுவின் சிலுவை எது என தெரியாமல் தவிக்கிற பொழுது, ஒரு பரிசோதனையை நம்பிக்கையின் அடிப்படையில் முன்னெடுக்கிறார். நோயினால் துன்புறும் ஒரு பெண்மணியின் கையையும், இறந்த படைவீரர் ஒருவரின் கையையும் அந்த சிலுவையில் வைக்க செய்கிறார். முதல் இரண்டு சிலுவையிலிருந்து எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மூன்றாவது சிலுவையில் கை வைத்தவுடன் நோயினால் வருந்திய பெண்மணிக்கு நோய் நீங்கிற்று, மரித்த படைவீரர் உயிரோடு எழுந்தார். இதனைக் கண்டு புனித ஹெலனா மகிழ்ச்சி கொண்டார். மிகுந்த மரியாதையோடும், மதிப்போடும், தெய்வீகத் தன்மையோடு கி.பி. 326 ஆண்டில் அவ்விடத்தில் ஆலயம் கட்டியெழுப்ப கான்ஸ்டான்டின் உத்தரவிட்டார். ஏறக்குறைய 9ஆண்டுகள் கழித்து கி.பி. 335ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி அவ்வாலயம் புனிதம் செய்யப்பட்டு, செப்டம்பர் 14ஆம் நாள் திருச்சிலுவையானது நிறுவப்பட்டு, மக்களால் வணக்கம் செலுத்தப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை திருச்சிலுவையின் மகிமை நாளை நாம் கொண்டாடி மகிழ்கின்றோம்.
பிரியமானவர்களே,
இந்நிகழ்வைப் போன்று கத்தோலிக்க திருஅவை வரலாற்றில் சிலுவையைக் குறித்து நிறைய காரியங்களைப் பார்க்கின்றோம். திருச்சிலுவையின்றி கத்தோலிக்க கிறித்தவ வாழ்வே இல்லை எனலாம். இதைத்தான் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித தியோடார் நம் தொடக்க பெற்றோர் ஆதாம் - ஏவாள் வீழ்ந்த நிகழ்வை ஒப்பிட்டு இவ்வாறு சொல்கிறார்: ‘ஒரு மரம் நம்மை அழித்தது. இன்னொரு மரம் நம்மை மீட்டது’ (A tree once destroyed us; another tree now brought us life). இவர் மட்டுமல்ல கி.பி. 347 முதல் கி.பி. 407 வரை கான்ஸ்தாந்திநோபிளின் ஆயராக இருந்த புனித ஜான் கிறிசோஸ்டம் சிலுவையைக் குறித்து பின்வருமாறு தன் மறையுரையில் குறிப்பிடுகிறார்: “சாத்தானுக்கு எதிரான வெற்றிப் பதக்கம் சிலுவை! பாவத்திற்கு எதிரான வாள் சிலுவை! தொடக்கப் பாம்பைக் குத்திக் கொல்ல இயேசு பயன்படுத்திய கத்தி சிலுவை! தந்தைக் கடவுளின் உளவிருப்பம் சிலுவை! மகன் கடவுளின் மகிமை சிலுவை! தூய ஆவியாரின் சந்தோ~ம் சிலுவை! சம்மனசுகளின் அலங்காரம் சிலுவை! திருஅவையின் அரண் சிலுவை! பவுலடியாரின் பெருமை சிலுவை! புனிதர்களின் கோட்டை சிலுவை! உலகின் ஒளி சிலுவை!”
இத்தனை மாண்புக்குரியதாக சிலுவைப் பார்க்கப்படுகின்றது என்றால் இத்திருச்சிலுவை உணர்த்தும் அல்லது கற்றுக்கொடுக்கும் படிப்பினைகள் என்னென்ன சிந்திப்போம்!
திருச்சிலுவை – மீட்பின் அடையாளம்:
இன்றைய முதல் வாசகமும், நற்செய்தியும் நமக்கு ஒருசேர சொல்கிற ஒரே ஒரு பாடம். பார்த்தோர் பிழைத்தனர். பார்ப்போர் பிழைப்பர் என்பதுதான். திருச்சிலுவையை உற்றுநோக்கி செபிக்கிற எல்லோருமே மீட்பைத்தான் சுவைக்கிறார்கள். எல்லா ஆலயங்களிலும் திருச்சிலுவையைத்தான் மையமாக நாம் வைத்திருக்கின்றோம். பாடுபட்ட இயேசுவின் திருச்சிலுவையிலிருந்து பொங்கிவழியும் இரத்தத்துளிகளால் நாம் மீட்பைப் பெறுகிறோம். தானி 9:5இல் “நாங்கள் பாவம் செய்தோம். வழிதவறி நடந்தோம். பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதி நெறிகளையும் கைவிட்டோம்” என்று நாம் வாசிக்கின்றோம். இவற்றை நம் வாழ்வில் வைத்திருப்பதால்தான் நம்முடைய மீட்பைப் பெற முடியாமல் போனோம். இதைக்கண்ட கடவுள் தன் ஒரே பேறான மகனை இவ்வுலகிற்கு அனுப்பினார். எதற்காக? இழந்து போனதைத் தேடி மீட்க, எனவேதான் லூக் 19:10இல் “இழந்து போனதை தேடி மீட்கவே மானிடமகன் வந்துள்ளார்” என்று வாசிக்கின்றோம். அத்தகைய மீட்பை நமக்கு வழங்குவதுதான் திருச்சிலுவையின் மகிமை. இதைத்தான் புனித பேதுரு தன் முதல் திருமுகத்தில், “சிலுவையின் மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார்” (1பேதுரு2:24) ஆக இறைமகன் இயேசு கிறிஸ்து தன் திருச்சிலுவையால் மீட்பை வழங்குகிறார். அம்மீட்பைப் பெற நம்மை நாமே தகுதிப்படுத்துவோம்!
திருச்சிலுவை – விடுதலையின் அடையாளம்:
இயேசு சிலுவையில் தொங்கிய பொழுது: ‘எல்லாம் நிறைவேறிற்று’ (யோவா 19:30) என்று ஏழு சிலுவை மொழியில் ஒன்றாக உச்சரிக்கிறார். இயேசு உச்சரித்த இந்த வார்த்தையின் கிரேக்க மூலத்தை நோக்கினால், அதன் வார்த்தை இவ்வாறு வருகிறது – ‘telelestai’.. இது கிரேக்க வார்த்தைகளில் பயன்படுத்தப்படும் கணக்குப் பதிவியல் கணக்கீடு ஆகும். குறிப்பாக கடன் பெற்றோரின் வரவு-செலவு கணக்குகளை இந்த வார்த்தையைச் சொல்லித்தான் கேட்பார்களாம். அதற்கு ஆங்கிலத்தில் ‘Paid in Full’ என்று அர்த்தம். அப்படியென்றால் இயேசு கிறிஸ்து தன்னை முழுவதுமாக நம் பாவக்கடனுக்கான சிலுவையில் கையளித்தார் என்பது தெளிவாக்குகிறது. இதைத்தான் புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகம் 2:14,15 இல் பின்வருமாறு கூறுகிறார்: “நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்து விட்டார். தம் சிலுவையினால் கிடைத்த வெற்றியால் ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகியோரின் படைக்கலன்களைக் கிறிஸ்து பிடுங்கிக் கொண்டு அவர்களை இகழ்ச்சிக்குள்ளாக்குமாறு ஊர்வலமாக இழுத்துச் சென்றார்.” ஆக எல்லாப் பாவக்கடனுக்கும் பரிகாரமாக இயேசு தன்னையே சிலுவையில் கையளித்து நமக்கு விடுதலை வாழ்வு வழங்கியுள்ளார். அத்தகைய சிலுவையின் வழியாய் பெற்ற விடுதலை வாழ்வை இன்று நாம் உளமார கொண்டாடுவோம்!
திருச்சிலுவை – நம்பிக்கையின் அடையாளம்:
இயேசுவின் சிலுவையின் மீது நம்பிக்கையோடு கை வைத்து செபித்தால் நிச்சயம் நன்மை நடக்கும், நல்லது நடக்கும் என்று நான் அடிக்கடி கூறுவேன். வரலாற்றில் காணும் போது சிலுவைப் போர் என்பதும், புனித ஹெலனாவின் திருச்சிலுவைப் பயணம் என்பதும் நம்பிக்கையின் அடையாளங்கள்தான். சிலுவையை நம்பிக்கையோடு தூக்கினால், சுமந்தால், கை வைத்து செபித்தால் நிச்சயம் நமக்கு அருளும், ஆசீரும் கிடைக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. காரணம், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தில் 12:2 இல் “நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்” என்று வாசிக்கின்றோம். நம்பிக்கையோடு சிலுவையில் வீற்றிருக்கும் இயேசுவைக் கண்டால் நிச்சயம் நம் வாழ்வில் நலமும் வளமும் கிடைக்கும்!
திருச்சிலுவை – தாழ்ச்சியின் அடையாளம்:
‘தாழ்ந்தோர் வீழ்வதில்லை’ என்று சொல்கிறோம். தாழ்ச்சியே புண்ணியங்களில் எல்லாம் தலைசிறந்த புண்ணியமாய் பார்க்கப்படுகிறது. தாழ்ச்சியோடு வாழ்ந்தோர் எல்லோரும் மாட்சியை மட்டுமே கண்டுள்ளனர். அன்னை மரியா தாழ்ச்சியோடு வாழ்ந்தமையால் இன்று பேறுபெற்ற அன்னையாக விளங்குகிறார் (லூக் 1:48). புனித யோசேப்பு தாழ்ச்சியோடு இறைத்தந்தையின் வார்த்தைக்கு செவிசாய்த்ததால்தான் (மத் 1:24) இன்று திருஅவையின், குடும்பத்தின் பாதுகாவலராக இருக்கின்றார். இறைமகன் இயேசுகிறிஸ்துவும் தாழ்ச்சியோடு தன் வாழ்வை அளித்து, நம் பாவங்களுக்காக திருச்சிலுவையில் ஏறினார். இதைத்தான் பிலி 2:8 இல் “சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்” என்று வாசிக்கின்றோம். திருச்சிலுவையைப் பார்க்கும் நாம் அனைவருமே அத்தகைய தாழ்ச்சியைத் தமதாக்கிக் கொள்ள இத்திருச்சிலுவை மகிமை நாள் அழைக்கிறது.
திருச்சிலுவை – வல்லமையின் அடையாளம்:
கி.பி. 326இல் புனித ஹெலனா மூன்று சிலுவைகளில் எது இயேசுவின் சிலுவை என்று கண்டறிய அவர் செய்த செயலில் தென்பட்டது கடவுளின் வல்லமையே. சிலுவையின் வல்லமையை புதுமையாக நாம் காண்கிறோம். இயேசுவின் சிலுவையைத் தொட்டவுடன் வல்லமை வெளிப்பட்டதால்தான் அப்பெண்மணியும், படைவீரரும் சுகமடைவதைப் பார்க்கிறோம். அப்படியென்றால் திருச்சிலுவை வல்லமையின் அடையாளமாய் கொண்டாடப்படுகிறது. இதைத்தான் புனித கொரிந்திருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால் மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை” . திருச்சிலுவையின் மீது யாரெல்லாம் நம்பிக்கையோடு தங்கள் எண்ணத்தை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பைப் பதிக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் சிலுவையின் வல்லமையைக் காண்பார்கள்.
இதுபோன்றே திருச்சிலுவையானது – மன்னிப்பின் அடையாளமாகவும், ஆசீர்வாதத்தின் அடையாளமாகவும், வாழ்வின் அடையாளமாகவும் விளங்குகிறது. ஆகவே திருச்சிலுவையின் மகிமை நாளில் இயேசு தன்னுயிரைக் கையளித்த சிலுவையின் மாண்பையும், மதிப்பையும் உணர்ந்து திருச்சிலுவையைக் கொண்டாடுவோம்! திருச்சிலுவையின் மகிமையைப் பறைசாற்றுவோம்!!
“நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகிறோம்” (1கொரி 1:23)
மறையுரைக் குறிப்புகள்
🕇 இறைவார்த்தையில் நம்பிக்கை கொண்டோர்:
-இறந்தோர் உயிர்பெற்றெழுந்ததைக் கண்டனர்.
-உடல் நலம் பெற்றனர்.
-அரும் அடையாளங்களைக் கண்டனர்.
-வாழ்க்கை மாற்றம் பெற்றனர்.
-புனிதர்கள் மற்றும் மாமனிதர் ஆயினர்.
-இயற்கைப் பேரிடர்களிலிருந்து விடுதலைப் பெற்றனர்.
🕇 இன்றைய முதல் வாசகம் கூறுகின்றபடி பாம்பு கடியிலிருந்து மீண்டனர்.
🕇 இறைவார்த்தை நிலைவாழ்வைப் பற்றி விளக்கம் அளிக்கிறது. அதை
அடையும் வழிமுறைகளைக் கற்றுக்கொடுக்கிறது.
🕇 நிலைவாழ்வு வழங்குவதாக இறைவார்த்தை வெளிப்படுத்தப்படுகிறது
(யோவான்11:25-26).
🕇 நிலைவாழ்வைப் பெற்று தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கும் இயேசுவை
🕇 அந்நிலைக்கு உயர்த்தியது திருச்சிலுவையில் அவர் இறந்த வரலாற்று
நிகழ்வுதான்.
🕇 சிலுவை துன்பங்களின் அடையாளம் என அஞ்சத் தேவையில்லை. அதுவே
நமது பெருமை. அதுவே கிறிஸ்தவர்களாகிய நாம் பெற்ற மாபெரும் கொடை.
🕇 அவரவர் சிலுவையைச் சுமந்து கொண்டே இயேசுவைப் பின்பற்றி
வர வேண்டும் என்று இயேசு அழைப்பு விடுப்பது நிலைவாழ்வை நோக்கிய
பயணமாகக் கருதப்படுகிறது (காண். மத் 10:38).
“அவரோடு செல் அவருக்காக நில்”
செப்டம்பர் 14ம் நாளைக் கத்தோலிக்கத் திருஅவை "திருச்சிலுவை மகிமை நாள்” ஆகச் சிறப்பிக்கின்றது. மரத் துண்டுகளால் ஆன கொடியவர்களின் உயிர் போக்கும் ஒரு கொலை கருவி, உலகோர் பார்வையில் ஒர் அவமானத்தின் சின்னம் - இன்று அதே உலக மக்களின் பார்வையில் மகிமைக்குரிய பொருளாய் சின்னமாய் மாறியது எப்படி?...
இந்த மாற்றத்தின் முதல் காரணம் சேர்க்கை.
பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெறும் என்பது தமிழ் முதுமொழி. இயேசுவுக்கு முன் பல மனிதர்களோடு இணைந்து அதே கல்வாரியில் அவமானத்தின் சின்னமாய் நின்ற சிலுவை இயேசுவோடு இணைந்த பின் அவருடைய பாடுகள் மரணம் மற்றும் குறிப்பாக அவருடைய உயிர்ப்பிற்குப் பின் உலகில் வெற்றியின் சின்னமாகவும் மீட்பின் அடையாளமாகவும் நிலை நிற்கின்றது. இயேசு என்றால் சிலுவை ; சிலுவை என்றால் இயேசு
என்ற உன்னத நிலைக்கு உலகோர் பார்வையில் உயர்வு பெற்றிருக்கிறது.
இந்தச் சிலுவை பாரமிக்கதாகவும், கொடிய விஷமுட்கள் கொண்டதாகவும், விகாரமானதாகவும் இருந்தது. இருப்பினும், இயேசுவின் விருப்பத்திற்கு
அவரோடு இணைந்து சென்றதால், அவருக்காக நின்றதால், மகிமையைத் தனதாக்கிக் கொண்டது. பூவோடு நார் இணைந்தால் போதுமா?... பூக்களை இணைத்து மாலையாக்கி மன்னவன் கழுத்தில் விழப் பயன்படும் போதுதானே அந்த நாருக்கும் அரசமரியாதை உரித்தாகுகிறது. ஆம், யூதர்களின் அரசன் என்று அறிக்கையிடப்பட்ட இயேசு செந்நீரை ஆடையாய், முள்முடியை மகுடமாய், மூன்று ஆணிகளைத் தன் சிம்மாசனமாய் - கொண்டு விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையில் தனது இறையாட்சியின் கட்டளைகளைப் பிரகடனப்படுத்தியபோது
இந்த மரச்சிலுவை அவரைத் தாங்கியவண்ணம் தோளோடு தோள் கொடுத்து அவரோடு அவருக்காக அவருடைய உயிருள்ள வார்த்தைகளின்
மௌன சாட்சியாக நின்றது.
1) இயேசு, மண் (மனிதம்) இனிக்க மன்னிப்பு
என்று தனக்குத் தீமை செய்தோரை மன்னித்திட இறைவேண்டல் ஏறெடுத்த போதும்… (லூக்கா நற்செய்தி 23:34)
2)இருபுறம் விரித்த கரங்களின் கனியான அன்பால்
தன்னை நேசித்து மதித்த நல்ல கள்ளனுக்கு வான் வீடு வழங்கிய போதும் (லூக்கா நற்செய்தி 23:41-42)
3) அதே கரங்களின் மற்றொரு கனியான அரவணைப்பால்
தனக்குப் பின் தரணியில் தனித்து விடப்படும் தன் அன்னைக்கும் தன்னை நேசித்த சீடனுக்கும் தாய் பிள்ளை உறவைப் பாதுகாப்பான அன்பின் அரவணைப்பில் உறுதி செய்த போதும் (யோவான் நற்செய்தி 19:26-27)
4) முடிவாக அனைத்தும் நிறைவேறிற்று என்று உணர்ந்தபோது, தனது ஆவியைத் தந்தையின் கரத்திற்குள் ஒப்படைத்து தனது முழு அர்ப்பணத்தை
அகிலம் அறியச் செய்த போதும் (லூக்கா நற்செய்தி 23:46)
இயேசுவிற்கு உறுதுணையாக இந்த மரச்சிலுவை முழுமையான சாட்சியாக் கல்வாரியில்
நின்றது. இறைமகன் இயேசு கல்வாரியில் வெளிப்படுத்திய மன்னிப்பு, அன்பு, அரவணைப்பு, அர்ப்பணம்…
ஆகிய விண்ணையும் மண்ணையும் இணைக்கும் உன்னதச் சத்தியங்களுக்குச் சலனமற்ற சாட்சியாக இந்த மரச்சிலுவை நிற்கின்றது.
வெறும் இயேசுவின் சேர்க்கை மட்டும் போதுமா?...
போதாது.
மாறாக, வாழ்க்கை பயணத்தில் எளிமையாக இயேசுவோடு துணை போகும் பண்பும், கல்வாரியில் இயேசுவின் வார்த்தைகளுக்குச் சாட்சியாக உடன் நிற்கும் உறுதியும் எப்படி மரச்சிலுவையைத் திருச்சிலுவையாக
மாற்றியதோ அதுபோல; இப்பண்புகள் நமக்கும் எதிர் நோக்கின் மகிமையை உறுதி செய்கின்றன. இன்று, இத்திருச்சிலுவைத நமக்குக் கூறுவது.
என்னைப் போல் நீங்களும் இயேசுவால் மகிமை அடைய வேண்டுமெனில்
1) வாழ்க்கை பயணத்தில் அவரோடு துணிந்து
துணை செல்லுங்கள்
2) அவரின் வார்த்தைகளுக்கு உயிருள்ள சாட்சியாகச் சாட்சிய வாழ்வு
வாழுங்கள். என்பதாம்.
எதிர்நோக்கின் பயணிகளாக எதிர்காலத்தைக் கணிக்கும் நாம், நிகழ்காலத்தில் “வேதத்தை - வார்த்தையை”
வாழ்வாக்குவோம். நிச்சயம் - நம் கடந்த காலக் கல்வாரி நினைவுகள் நம் வழிகளைச் செம்மைப்படுத்தும்.
“அவரோடு செல் - அவருக்காக நில்”
என்ற விருது வாக்கு நம்மையும் திருச்சிலுவை மகிமையின் பங்காளிகள் ஆக்கும். செல்வோம், நிற்போம், உலகை வெல்வோம்.
சிலுவை வாழ்வின் குறி
கிறிஸ்தவர்களாகிய நமக்கு பரிச்சயமான மற்றும் அல்ல, மாறாக, நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டு ஓர் அடையாளம் திருச்சிலுவை. இத்திருச்சிலுவையின் மகிமையை இன்று விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றோம். இந்த விழாவின் பின்புலம் அல்லது மரபாகக் கருதப்படுவது என்ன? கிபி இரண்டு முதல் நான்கு நூற்றாண்டுகளில் இயேசு அறையப்பட்டு உயிர்நீத்த சிலுவையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் ஆர்வம் உரோமையர்கள் மற்றும் தொடக்கக் கிறிஸ்தவர்களிடையே இருந்தது. இதன்படி 326-ஆம் ஆண்டு எருசலேமில், கான்ஸ்டான்டைன் பேரரசரின் தாய் புனித ஹெலனா அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட திருச்சிலுவை பல இடங்களுக்குப் பவனியாகக் கொண்டுவரப்பட்டதன் பின்புலத்தில்தான் திருச்சிலுவையின் மகிமை விழா தொடங்கியது.
திருச்சிலுவை நமக்கு வெறும் அடையாளம் மட்டுமல்ல. மாறாக, நம் வழிபாட்டை திருச்சிலுவை அடையாளத்தால் தொடங்குகிறோம், நிறைவு செய்கிறோம். ஆசீர் அளிக்கும்போதும் இதே அடையாளத்தையே பயன்படுத்துகின்றோம். அணிகலனாக, ஆபரணமாக, இல்லங்களில், ஆலயங்களில் என எங்கும் சிலுவையே வீற்றிருக்கின்றது. இயேசு சிலுவையை எப்படிப் பார்த்தார் என்பதையும், பவுல் எப்படிப் பார்த்தார் என்பதையும் இன்றைய இறைவார்த்தை வழிபாட்டில் வாசிக்கக் கேட்கின்றோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவா 3:13-17) நிக்கதேமிடம் உரையாடுகின்ற இயேசு, ‘பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்’ என்கிறார். ‘உயர்த்தப்படுதல்’ என்பதுற்கு யோவான் நற்செய்தியில் இரு பொருள்கள் உண்டு: ஒன்று, இயேசு சிலுவையில் உயர்த்தப்படுவது. இரண்டு, இறப்புக்குப் பின்னர் உயிர்த்தெழுந்தவராய் இயேசு விண்ணேறிச் செல்வது. இந்த இடத்தில் முதல் பொருளே மேலோங்கி நிற்கிறது. நிக்கதேம் ஒரு யூதர் என்பதால் முதல் ஏற்பாட்டு நிகழ்வை அறிந்திருக்க வாய்ப்புண்டு. அந்த நிகழ்வின்படி (இன்றைய முதல் வாசகம்) பாலைநிலத்தில் தனக்கு எதிராக முணுமுணுத்த மக்களைத் தண்டிக்கும்படி ஆண்டவராகிய கடவுள் பாம்புகளை அவர்கள் நடுவே அனுப்புகின்றார். பின்பு அவர்கள் தன்னை நோக்கிக் கூக்குரல் எழுப்பியபோது, அவரே ஒரு வெண்கலப் பாம்பைச் செய்து கம்பத்தில் உயர்த்துமாறு மோசேக்குச் சொல்கின்றார். வெண்கலப் பாம்பைப் பார்க்கும் அனைவரும் நலம் பெறுகின்றனர். உயர்த்தப்பட்ட பாம்பு மக்களுக்கு நலம் தருகின்றது. சிலுவையில் உயர்த்தப்படும் இயேசுவும் அனைவருக்கும் மீட்பு தருகின்றார். தாங்கள் நொறுக்கப்பட்டதன் அடையாளமாக அவர்கள் வெண்கலப் பாம்பை நோக்கிக் கண்களை உயர்த்துகின்றனர். நாம் சிலுவையை நோக்கி நம் கண்களை உயர்த்தும்போதும் நமக்காக இயேசு நொறுக்கப்பட்டதை நாம் உணர்கின்றோம்.
இரண்டாம் வாசகத்தில், பிலிப்பி நகர மக்களுக்கு எழுதுகின்ற பவுல், தன் சமகாலத்தில் விளங்கிய கிறிஸ்தியல் பாடல் ஒன்றை மேற்கோள்காட்டி, இயேசுவின் தற்கையளிப்பை ஓர் இறையியலாக வடிக்கின்றார். கடவுள் தன்மையில் இருந்த இயேசு அத்தன்மையைப் பற்றிக்கொண்டிராமல் தன்னையே வெறுமையாக்கி சிலுவைச் சாவுக்குத் தன்னை உட்படுத்துகின்றார். இயேசுவின் நொறுங்குநிலை, தாழ்ச்சி, மற்றும் உருக்குலைந்த நிலையின் அடையாளமாகச் சிலுவை திகழ்கின்றது.
இயேசு தன் பாடுகளை முன்னுரைக்கும் இடத்தில் எல்லாம் சிலுவை துன்பத்தின் அடையாளமாக இருப்பதாகத் தெரிகின்றது. பேதுருவும் கூட அத்தகையதொரு புரிதலைக் கொண்டிருந்ததால்தான், ‘ஆண்டவரே! இது உமக்கு வேண்டாம்’ என்று இயேசுவைத் தடுக்கின்றார்.
இத்திருவிழா நமக்குச் சொல்லும் பாடம் என்ன? துன்பத்தின் அடையாளமாக இருக்கின்ற சிலுவையே நம் மீட்பின் அடையாளமாக இருக்கின்றது. இதுதான் வாழ்வின் இருதுருவ நிலை. சிலுவை என்பது வாழ்வின் இரு துருவ நிலையின் அடையாளம். ஒரே நேரத்தில் அது விண்ணை நோக்கி நம் கண்களை உயர்த்துமாறு அழைக்கிறது. அதே வேளையில் இந்த மண்ணுடன் நம் கால்களை ஆணி அடித்து இறுக்குகிறது. நேர்கோடும் குறுக்குக் கோடும் என வாழ்க்கையின் பாதைகள் மாறி மாறி மறைவதையும், நெட்டையும் குட்டையும் இணைந்ததே நாம் என்றும் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது. இன்றைய நாளில் திருச்சிலுவையின்முன் சற்று நேரம் அமர்ந்து, அதைப் பற்றித் தியானித்து, அதனோடு நம்மையே பிணைத்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.
திருச்சிலுவையின் மகிமை விழா - மறையுரை 1
அறிமுகம்:
அன்பு சகோதர சகோதரிகளே, இன்று நாம் திருச்சிலுவையின் மகிமை விழாவைக் கொண்டாடுகிறோம். இந்த விழா, இயேசு கிறிஸ்துவின் திருச்சிலுவையை மையப்படுத்தி, அவரது பலியின் மகத்துவத்தையும், அதன் மூலம் நமக்கு வந்த மீட்பையும் நினைவுகூர்கிறது. திருச்சிலுவை வெறும் மரக்கட்டைகள் அல்ல; அது கடவுளின் அன்பின் அடையாளம், மனித குலத்தின் மீட்பின் அடையாளம், நம்பிக்கையின் அடையாளம். இன்றைய மறையுரையில், திருச்சிலுவையின் மகிமையையும், அது நமது வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் சிந்திப்போம்.
விவிலியப் பின்னணி
இன்றைய முதல் வாசகத்தில் (எண்ணிக்கை 21:4-9), இஸ்ரயேல் மக்கள் பாவம் செய்தபோது, அவர்களைத் தண்டிக்க விஷப்பாம்புகளை அனுப்பிய கடவுள், மோசேயிடம் ஒரு வெண்கலப் பாம்பை மரத்தில் உயர்த்தி வைக்கச் சொன்னார். அதைப் பார்த்தவர்கள் குணமடைந்தனர். இது இயேசுவின் சிலுவையை முன்னறிவிக்கிறது. நற்செய்தியில் (யோவான் 3:13-17), இயேசு தம்மைப் பற்றி, “மனித மகன் உயர்த்தப்பட வேண்டும், அவர்மீது நம்பிக்கை கொள்பவர்கள் நித்திய வாழ்வு பெறுவார்கள்” என்று கூறுகிறார். இந்த வார்த்தைகள், சிலுவையின் மூலம் கிடைக்கும் மீட்பை தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
திருச்சிலுவையின் மகிமை
🕇1 அன்பின் வெளிப்பாடு: திருச்சிலுவை, கடவுளின் எல்லையற்ற அன்பின் மிகப்பெரிய அடையாளம். “தம் ஒரே மகனை அனுப்பும் அளவுக்கு கடவுள் உலகை நேசித்தார்” (யோவான் 3:16). இயேசு தம் உயிரைப் பலியாக்கி, நம்மைப் பாவத்திலிருந்து மீட்டார். இந்த அன்பு நம்மை மாற்றவும், நம்மைச் சுற்றியவர்களை நேசிக்கவும் நம்மை அழைக்கிறது.
🕇2 வெற்றியின் அடையாளம்: உலகின் பார்வையில், சிலுவை தோல்வியின் அடையாளமாகத் தோன்றலாம். ஆனால், கிறிஸ்தவ நம்பிக்கையில், அது பாவத்தையும் மரணத்தையும் வென்ற வெற்றியின் சின்னம். இயேசு சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்ததன் மூலம், நமக்கு நித்திய வாழ்வைப் பெற்றுத் தந்தார். இந்த வெற்றி, நமது வாழ்வில் நம்பிக்கையையும் உறுதியையும் அளிக்கிறது.
🕇3 நம்பிக்கையின் அழைப்பு: திருச்சிலுவை நம்மை நம்பிக்கையுடன் வாழ அழைக்கிறது. வாழ்க்கையில் துன்பங்களும் சவால்களும் வரும்போது, சிலுவையைப் பார்த்து, கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதை உணர்கிறோம். சிலுவையைத் தழுவுவது, கடவுளின் வாக்குறுதிகளை நம்புவதாகும்.
நமது வாழ்வில் திருச்சிலுவையின் பொருள்
🕇 அன்பு சகோதரர்களே, இன்றைய உலகில், திருச்சிலுவையின் செய்தி நமக்கு முக்கியமான பாடங்களைத் தருகிறது.
🕇 தியாகம்: இயேசு தம் உயிரைத் தியாகம் செய்தது போல, நாமும் மற்றவர்களின் நன்மைக்காக தியாகம் செய்ய அழைக்கப்படுகிறோம்.
🕇 மன்னிப்பு: சிலுவையில் இயேசு தம் எதிரிகளை மன்னித்தார். நாமும் மற்றவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
🕇 நம்பிக்கை: துன்பங்களுக்கு மத்தியில், சிலுவை நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. கடவுளின் திட்டத்தில் எல்லாம் நன்மைக்கே என்று நம்புவோம்.
முடிவுரை:
அன்பு சகோதர சகோதரிகளே, திருச்சிலுவையின் மகிமை விழா, இயேசுவின் பலியை மட்டுமல்ல, அவரது அன்பையும் வெற்றியையும் நினைவுகூர்கிறது. இந்த விழாவில், நாம் நமது வாழ்வை சிலுவையின் ஒளியில் பரிசீலிப்போம். நமது பாவங்களை ஒப்புக்கொண்டு, மனமாற்றம் பெற்று, இயேசுவைப் பின்பற்றுவோம். திருச்சிலுவையை நம் வாழ்வின் மையமாக வைத்து, கடவுளின் அன்பில் வளர்ந்து, மற்றவர்களுக்கு அந்த அன்பைப் பகிர்ந்தளிப்போம்.
இறைவேண்டல்
அன்பின் இறைவா, உமது ஒரே மகனின் திருச்சிலுவையின் மூலம் எங்களை மீட்ட உமக்கு நன்றி. எங்கள் வாழ்வில் உமது அன்பையும் வெற்றியையும் பிரதிபலிக்க உதவி செய்யும். திருச்சிலுவையின் மகிமை வாழ்க! ஆமென்.
திருச்சிலுவையின் மகிமை – சிறப்பு மறையுரை 2
நேச மானிடரே, திருச்சிலுவையின் மகிமை விழாவின் இந்தப் புனித நாளில், நாம் நம் மீட்பரான இயேசு கிறிஸ்துவின் சிலுவையின் மகிமையையும், அதன் மூலம் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் அளவிட முடியாத அன்பையும் சிந்தித்து போற்றுகிறோம்.
சிலுவை, மனித கண்ணோட்டத்தில் வெட்கக்கேடான தோல்வியின் சின்னமாக தோன்றலாம். ஆனால், கிறிஸ்தவ நம்பிக்கையின் பார்வையில், அது தான் கடவுளின் மிகப் பெரிய வெற்றி மற்றும் மகிமையின் சின்னம். புனித பவுல் தமது கலாத்தியர் நிருபத்தில், "எனக்கு நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையைத் தவிர வேறெதையும் பற்றிப் பேசப் பழக்கமில்லை" (கலா 6:14) என்று கூறுகிறார். ஏன்? ஏனெனில் சிலுவையில், கடவுளின் ஞானமும் வல்லமையும் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டன.
நாம் இன்று நினைவுகூரும் இந்த மகிமை என்ன?
1. அன்பின் மகிமை: சிலுவை கடவுளின் அன்பின் உச்சத்தை நமக்குக் காட்டுகிறது. "கடவுள் உலகத்தை அவ்வளவாய் நேசித்ததால், தம் ஒரே மகனைத் தந்தார்" (யோவா 3:16). நம்முடைய பாவங்களுக்காக தண்டனை அனுபவிக்க, நமது குறைகளுக்காக துன்பப்பட, நம்மை மீட்பதற்காக சாவை ஏற்க கடவுளின் மகன் சிலுவையில் ஒப்புக்கொண்டார். இதைவிடப் பெரிய அன்பு வேறெது இருக்க முடியும்?
2. தியாகத்தின் மகிமை: சிலுவை தன்னலமற்ற தியாகத்தின் உன்னதமான பாடம். இயேசு, "தம் உயிரை யாரும் எடுத்துக் கொள்ள முடியாது, ஆனால் தாமாகவே அதை விட்டுக் கொடுக்கிறார்" (யோவா 10:18). இது ஒரு கட்டாயப்படுத்தப்பட்ட மரணம் அல்ல; இது ஒரு சுதந்திரமான, முழுமையான, அன்பான தியாகம். தன்னை முழுமையாகக் கொடுத்து, பிறருக்கு வாழ்வு அளிக்கும் மகிமை.
3. மீட்பின் மகிமை: சிலுவை வெற்றியின் குறியீடு. அங்குதான் பாவமும் மரணமும் தோற்கடிக்கப்பட்டன. அங்குதான் நமக்கு மன்னிப்பும் மீட்பும் வாங்கித் தரப்பட்டன. சிலுவை வழியாகவே, நாம் கடவுளின் மக்களாக ஏற்கப்பட்டோம், நித்திய வாழ்வுக்கான வாய்ப்பு கிடைத்தது. இது நமது நம்பிக்கையின் அடித்தளம்.
4. வலிமையின் மகிமை: புனித பவுல் கூறுவது போல், "சிலுவையின் சத்தம் அழிபவர்களுக்கு மூடன்தன்மைதான்; ஆனால் நம்மை மீட்பவர்களுக்கு அது கடவுளின் வல்லமை" (1 கொரி 1:18). சிலுவை, மனித வலிமையைக் காட்டுவது அல்ல; அது துன்பத்தின் நடுவே காட்டப்படும் கடவுளின் வல்லமை, மன்னிப்பின் வல்லமை, நம்பிக்கையின் வல்லமை.
நம் வாழ்க்கைக்கான அழைப்பு:
நம் வாழ்வில், நாமும் நமது சொந்த சிலுவைகளைச் சுமக்கிறோம் - துன்பங்கள், சோதனைகள், தியாகங்கள். இன்றைய விழா, நமது சிலுவைகளைப் பார்ப்பதற்கான ஒரு புதிய பார்வையை நமக்குத் தருகிறது. நமது ஆண்டவர் நம்மோடு இருப்பதால், நம் சிலுவைகள் மகிமையை நோக்கிய பாதையாக மாறும். நமது சிறு தியாகங்கள், அவரது பெரிய தியாகத்தோடு இணைந்து, மீட்பின் பணியில் பங்கு பெறும்.
நமது துன்பங்களில் நாமும் சிலுவையைப் பற்றி பிடிக்க முடியும். அதன் மூலம், அவரது உயிர்த்தெழுதலுக்கும், மகிமைக்கும் பங்கு பெற முடியும். நம் சகோதர, சகோதரிகளின் துன்பத்தில், நாம் கிறிஸ்துவின் திருஉடலைக் காண்கிறோம். அவர்களுக்கு சேவை செய்வதன் மூலம், சிலுவையைச் சுமக்கும் கிறிஸ்துவுக்கே சேவை செய்கிறோம்.
முடிவுரை:
ஆகையால், அன்பான சகோதர, சகோதரிகளே, இன்று நாம் திருச்சிலுவையின் மகிமையை வியப்போடும் நன்றியோடும் போற்றுவோம். நம் வாழ்வின் சிலுவைகளைத் தைரியமாக ஏற்று, கடவுளின் சித்தத்தில் அர்ப்பணிப்போம். நம்மை நேசித்து, நமக்காகத் தம்மை அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவின் அன்பைப் பிரதிபலிக்க முயற்சிப்போம். நம் சக மனிதர்களுக்கு அன்பும் சேவையும் செய்வோம்.
நம்மை மீட்டெடுத்த திருச்சிலுவையின் மகிமை, நம் வாழ்வையும், நம் மரணத்தையும் புனிதமாக்கும். நம் வாழ்க்கை முழுவதும், சிலுவையின் மகிமை நமக்கு வழிகாட்டியாகவும், ஆறுதலாகவும், வலிமையாகவும் இருக்கும்.
ஆண்டவரின் அமைதியும், சிலுவையின் மகிமையும், நம் அனைவரோடும் இருப்பதாக.
ஆமென்.
திருச்சிலுவையின் மகிமை விழா – சிறப்பு மறையுரை 3
அன்புள்ள சகோதர சகோதரிகளே,
இன்று நாம் திருச்சிலுவையின் மகிமை விழாவை கொண்டாடுகிறோம். இந்த திருநாளில் நாம் மரணத்தின் குறியீடாக இருந்த சிலுவையை, மீட்சியின் மற்றும் வாழ்வின் அறிகுறியாக கொண்டாடுகிறோம்.
மனித வரலாற்றில், சிலுவை என்பது மிகக் கொடூரமான தண்டனையாகவே இருந்தது. ஆனால் கிறிஸ்து அந்த சிலுவையை ஏற்று, அதில் தம்மை பலியாகச் செய்ததின் மூலமாக, அதே சிலுவை நமக்காக ஒரு மகிமையான வெற்றிக்கொடி ஆகியது.
சிலுவையின் வழியே நமக்கு மீட்பு
முதல் வாசகத்தில் நாம் காணும் இடத்தில், இஸ்ரயேல் மக்கள் வனாந்தரத்தில் பாம்புகளால் கடிக்கப்படுகின்றனர். மோசே ஒரு வெண்கலப்பாம்பை தூக்கி வைத்தபோது, அதை நோக்கியவர்கள் உயிர் பெற்று விடுகின்றனர். இது யேசுவின் சிலுவையை நோக்கி நம்பிக்கையுடன் வருகிற நம்மை மீட்கும் சம்பவத்தின் முன்னோடியாகும்.
யோவான் நற்செய்தியில், "மனிதகுமாரன் உயர்த்தப்பட வேண்டும்" என்கிறார். அது நமக்கு ஒரு அழைப்பு: நாம் எப்போதும் சிலுவையை நோக்கிப் பார்வையிடவேண்டும். நாம் வலியை சந்திக்கும்போதும், துக்கத்தில் மூழ்கும்போதும், நம்முடைய வாழ்வில் குழப்பம் ஏற்படும்போதும், அந்த உயர்த்தப்பட்ட சிலுவையிலேயே நம்முடைய துயரத்திற்கு தீர்வு இருக்கிறது.
பிலிப்பியர் எழுதும் மறைக்காப்பு: தாழ்மை மற்றும் மகிமை
பிலிப்பியர் கடிதத்தில், பவுல் எங்களை பின்வரும் வார்த்தைகளால் அழைக்கிறார்:
"தம்மைத் தாழ்த்தி, மரணத்திற்கு ஆயத்தமாகவும், சிலுவை மரணத்திற்கு உட்பட்டவராகவும் ஆனார். அதனாலே, கடவுள் அவரை மிக உயர்வாக உயர்த்தினார்..."
இங்கு நாம் காணும் விஷயம் என்னவென்றால், யேசுவின் தாழ்மையான மரணம் தான் அவருடைய மகிமையின் அடிப்படை. நம் வாழ்க்கையிலும் இதுவே உண்மை: நம்முடைய தியாகங்கள், நம்முடைய துன்பங்களை நம்பிக்கையுடன் ஏற்கும் மனோபாவம் தான், இறைவனின் மகிமையை நம்மில் வெளிப்படுத்தும்.
சிலுவை: நம் வாழ்வின் வழிகாட்டி
இன்று நம் வீடுகளில், தேவாலயங்களில், நம் கழுத்தில் நம்முடன் இருப்பது சிலுவைதான். ஆனால் அது வெறும் ஒரு ஆபரணமாக இல்லாமல், நம் வாழ்க்கையின் பாதையை வழிநடத்தும் ஒளியாக இருக்கவேண்டும்.
🕇சிலுவை என்பது தியாகத்தின் அடையாளம்.
🕇சிலுவை என்பது அன்பின் உச்சக்கட்டம்.
🕇சிலுவை என்பது வெற்றியின் அடையாளம்.
முடிவுரை: சிலுவையை வாழ்வில் எடுத்துச் செல்லுங்கள்
அன்புள்ளவர்களே, திருச்சிலுவையின் மகிமை விழாவான இந்நாளில், நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் சிலுவையை ஏற்று, அதை நம்பிக்கையுடனும் அன்புடனும் தாங்குவோம். நம்முடைய குற்றங்களை மன்னிக்கும் கர்த்தரின் அன்பை நினைவுகூர்வோம். அவருடைய உயிர்ப்பை நம்மில் வெளிப்படுத்தும் சாட்சியாக வாழுவோம்.
🕇திருச்சிலுவை நமக்காக – ஒரு மீட்சியின் வழி!
🕇திருச்சிலுவை நமக்குள் – ஒரு வாழ்வின் வலி!
🕇திருச்சிலுவை நம்மூடாக – ஒரு அன்பின் வெற்றி!
🕇ஆமென்.
திருச்சிலுவையின் மகிமை – சிறப்பு மறையுரை 4
“மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்… அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.”
சிறப்பு மறையுரை:
இன்று நாம் திருச்சிலுவையை மகிமைப்படுத்துகிறோம். இது ஒரு மரணக் கருவி அல்ல; இது உயிர்ப்பின் மரம். இது தண்டனையின் அடையாளம் அல்ல; இது அன்பின் அடையாளம். இயேசு சிலுவையில் உயர்த்தப்பட்டபோது, மனித வரலாற்றின் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்தது - இருள் ஒளியாக மாறியது, மரணம் வாழ்வாக மாறியது, சாபம் ஆசீர்வாதமாக மாறியது.
மோசே பாலைநிலத்தில் பாம்பை உயர்த்தியபோது, அதைப் பார்த்தவர்கள் வாழ்ந்தனர். அது ஒரு முன்னோட்டம். இயேசு, உண்மையான பாம்பாக, சிலுவையில் உயர்த்தப்பட்டார். ஆனால் இம்முறை, அவரைப் பார்க்கும் நாம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழும் மக்கள் நித்திய வாழ்வு பெறுகிறார்கள். ஏனெனில், அவர் நம்மை நோக்கி அல்ல, நம்மை மீட்க வந்தார்.
சிலுவை நமக்கு சொல்கிறது:
🕇 கடவுளின் அன்பு எல்லையற்றது.
🕇 மன்னிப்பு கடவுளின் இயல்பாகும்.
🕇 நம்முடைய வாழ்க்கையும், நம்முடைய துன்பங்களும், கடவுளின் அன்பில் பொருள் பெறுகின்றன.
இன்று நாம் சிலுவையை முத்தமிடுகிறோம். அது ஒரு அடையாளம் மட்டுமல்ல; அது நம்முடைய வாழ்வின் பாதை. நாம் நம்முடைய சிலுவைகளைச் சுமக்கும்போது, இயேசுவின் சிலுவையை நினைவில் கொள்வோம். அவர் நம்மைத் தனியாக விடவில்லை. அவர் நம்முடன் சிலுவையில் இருந்தார்; இன்றும் நம்முடன் இருக்கிறார்.
சிலுவையை மகிமைப்படுத்துவது என்றால் என்ன?
🕇அது நம்முடைய வாழ்வில் அன்பை தேர்ந்தெடுப்பது.
🕇நம்முடைய பகைவர்களை மன்னிப்பது.
🕇துன்பத்தில் நம்பிக்கையை இழக்காமல் இருப்பது.
🕇இயேசுவைப் போல, நம்மையே அடுத்தவருக்காக அர்ப்பணிப்பது.
இறுதி அழைப்பு:
சிலுவையை முத்தமிடுவோம்.
ஆனால் அதைவிட முக்கியம் – சிலுவையின் அன்பை நம் இதயத்தில் ஏற்றுக்கொள்வோம்.
சிலுவையை மகிமைப்படுத்துவது – இயேசுவைப் போல வாழ்வதே.
ஆமென்.
திருச்சிலுவையின் மகிமை
இன்று திருச்சபையானது திருச்சிலுவை மகிமை விழாவைக் கொண்டாடுகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இவ்விழா ‘திருச்சிலுவையின் மகிமை’, ‘சிலுவையின் வெற்றி’, ‘பெருமைமிகு திருச்சிலுவை நாள்”, ‘உயிர்வழங்கும் அரிய சிலுவை உயர்த்தப்பட்ட நாள்’ என பல்வேறு சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறது.
இப்பெருவிழாவைக் கொண்டாடும் வேளையிலே, இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்க்கும்முன் இதனுடைய வரலாற்றுப் பின்புலத்தை சற்று ஆய்ந்து பார்ப்போம்.
நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கான்ஸ்டன்டைன் என்ற உரோமைப் பேரரசரின் அன்னை, புனித ஹெலெனா அவர்கள், ஒருமுறை புனித பூமிக்கு திருப்பயணம் மேற்கொண்டபோது அங்கே ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூமியை அகழ்வதற்கு அவர்கள் தூண்டப்பட்டார். அவ்விடத்தை அகழ்ந்தபோது, மூன்று சிலுவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அம்மூன்று சிலுவைகளில் இயேசு அறையப்பட்டச் சிலுவை எது என்பதைக் கண்டுபிடிக்க, புனித ஹெலெனா ஒரு சோதனையை மேற்கொண்டார். அதாவது மரணப் படுக்கையில் போராடிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை அவர் அவ்விடத்திற்குக் கொணர்ந்தார். அப்பெண், முதல் இரு சிலுவைகளைத் தொட்டபோது, அவரிடம் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக மூன்றாவது சிலுவையை அவர் தொட்டதும் குணமடைந்தார். எனவே, அச்சிலுவையே இயேசு அறையப்பட்டச் சிலுவை என புனித ஹெலெனா அறிந்துகொண்டார்.
அச்சிலுவையைக் கண்டுபிடித்த இடத்தில், புனித கல்லறைக் கோவில் நிறுவப்பட்டது. இக்கோவில், 335ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு, செப்டம்பர் 13, 14 ஆகியத் தேதிகளில் அர்ச்சிக்கப்பட்டது. இந்த அர்ச்சிப்பின் நினைவாகத்தான் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 14ம் தேதியன்று திருச்சிலுவை உயர்த்தப்பட்டத் திருநாள் என்று திருச்சபை கொண்டாடப்படுகிறது. இயேசு அறையப்பட்ட சிலுவையின் ஒரு பெரிய துண்டு புனித கல்லறைக் கோவிலில் பாதுக்காக்கப்பட்டு வருகின்றது.
614 ஆம் ஆண்டு பெர்சிய நாட்டு அரசன் மெசபத்தோமியாவின்மீது (புனித நாடுகள் இருக்கும் பகுதி) படையெடுத்துக் சென்று அங்கிருந்த குருக்கள், கன்னியர்கள் கிறிஸ்தவர்கள் என்று பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்து, அங்கே இருந்த திருச்சிலுவையை எடுத்துக்கொண்டு போய்விட்டான். அதை 627 ஆம் ஆண்டு ஹெராக்ளியஸ் என்ற அரசன்தான் மீட்டுக்கொண்டு வந்து மீண்டும் அதே இடத்தில் நிறுவினான். அன்றிலிருந்து மகிமை பொருந்திய திருச்சிலுவை அதே இடத்தில் இருந்து அனைவருக்கும் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறது.
தூய ஆண்ட்ருஸ் இவ்வாறு கூறுவார், “திருச்சிலுவை நம்மை இருளிலிருந்து, ஒளிக்கு அழைத்து வந்தது. அதுவே நமக்கு வாழ்வு தந்தது; விண்ணகத்தின் கதவைத் திறந்து தந்தது” என்று. ஆம், இது எவராலும் மறுக்கமுடியாத உண்மை. பவுலடியார் கூட இதே கருத்தை 1 கொரி 1:18 ல் வலியுறுத்துவார். “சிலுவையைப் பற்றிய போதனை அழிவுறுவோருக்கு மடமை, ஆனால் மீட்புப் பெறும் நமக்கோ கடவுளின் வல்லமை” என்று.
இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் ஏதோம் என்ற நாட்டைச் சுற்றி வரும்போது, ஓர் என்ற மலையிலிருந்து “செங்கடல் சாலை” வழியாகப் பயணப்படும்போது மோசேக்கும், கடவுளுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள். இதனால் கடவுள் அவர்கள்மீது சினம் கொண்டு கொள்ளிவாய்ப் பாம்புகளை அனுப்பி சாகடிக்கிறார். ஆனால் மோசே மீண்டும் கடவுளிடத்தில் மன்றாடுகிறபோது, அவர் அவர்கள்மீது இரக்கம் கொண்டு, “வெண்கலப்பாம்பு ஒன்றைச் செய்து, அதனை மக்கள் நடுவே வை, அப்போது பாம்பினால் கடிபட்ட எவரும் அதனைப் பார்க்கிறபோது உயிர்பிழைப்பார்கள்” என்று மோசேயிடம் கூறுகிறார். மோசேயும் அவ்வாறே செய்ய, இஸ்ராயேல் மக்கள் உயிர்பிழைக்கிறார்கள்.
இப்பகுதியில் வரக்கூடிய வெண்கலப்பாம்பு திருச்சிலுவையின் முன் அடையாளமாக இருக்கிறது. எவ்வாறெனில் வெண்கலப்பாம்பைப் பார்த்தவர்கள் வாழ்வுபெற்றதுபோல திருச்சிலுவையை பார்ப்பவர்கள் வாழ்வு பெறுவார்கள்.
பொதுவாக சிலுவை மரணமானது அல்லது சிலுவையானது மிகவும் இழிவாகக் கருதப்பட்டது. இது கொடியவர்களுக்கும், நாட்டைக் காட்டிக் கொடுத்தவர்களுக்கும்தான் வழங்கப்படும். ஆனால் அப்படிப்பட்ட சிலுவைச் சாவை ஆண்டவர் இயேசு நம்மீது கொண்ட அன்பினால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறார்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் படிக்கின்றோம், “கடவுள் தன்மையில் விளங்கிய அவர், தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்கு கீழ்படிபவரானார்” என்று. ஆம், இயேசு தன்னை வெறுமையாக்கி, அடிமையின் கோலம்கொண்டு, சிலுவை மரணம் ஏற்றார் என்றால் அது அவர் நம்மீது கொண்ட அளவுகடந்த அன்புகொண்டிருக்கிறார் என்பதே உண்மை. தந்தைக் கடவுள் தன் மகனாகிய இயேசுவையே இவ்வுலகிற்கு அளித்தார் என்றால், இயேசு அதனைச் செயல்படுத்தினார். அதனால்தான் கடவுள், ஆண்டவர் இயேசுவை எப்பெயருகும் மேலாக உயர்த்துகிறார். நாமும் இறைவனின் திட்டத்தின்படி வாழ்ந்தோம் என்றால் கடவுள் நம்மை மேலும், மேலும் உயர்த்துவார்.
இயேசுவின் குழந்தைப் பருவத்தில் நடந்த நிகழ்ச்சியாகச் சொல்வர்.
ஒருமுறை இயேசு, பைட்ஸ் என்ற சிறுவனோடு பேசிக்கொண்டிருந்தபோது அவனித்தில், “எதிர்காலத்தில் நீ என்னவாக போகிறாய்?” என்று கேட்டார். அதற்கு பைட்ஸ், “நான் மிகப்பெரிய தச்சராக மாறி, அரசர் அமர்வதற்கான சிம்மாசனம் ஒன்றைச் செய்வேன். அரசர் அதில் அமர்ந்துகொண்டு எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குவார்” என்றான். இயேசுவும் சரி என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். பைட்ஸ் சில நாட்களுக்குப் பிறகு ஜாப்பா என்ற ஓர் இடத்திற்கு குடிபெயர்ந்தார்.
ஆண்டுகள் பல கழிந்தன. அப்போது இயேசுவை சிலுவையில் அறைய, பிரத்யோகமான சிலுவைமரம் ஒன்று தேவைப்பட்டது. எனவே அப்படிப்பட்ட சிலுவைமரம் செய்வதற்குப் பெயர்போன பைட்ஸ் அங்கே அழைத்துவரப்பட்டான். அவன் இயேசுவுக்குதான் சிலுவை செய்ய வந்திருக்கிறோம் என்று தெரியாமல் செய்தான்.
ஒரு சில நாட்களுக்கு பிறகு உண்மையை அறிந்துகொண்டு இயேசு அறையப்பட்டிருந்த சிலுவையை நோக்கி ஓடினான். அவரைப் பார்த்ததும் “நானே உமக்கு சிலுவை செய்யும்படி ஆகிவிட்டதே” என்று கண்ணீர்விட்டு அழுதான். அப்போது இயேசு அவனிடம், “நீ சிறுவயதில் என்னிடம் என்ன சொன்னாய் என்று யோசித்துப் பார். அரசன் அமர்வதற்காக சிம்மாசனம் செய்வேன், அதிலே அரசர் அமர்ந்துகொண்டு எல்லா மக்களுக்கும் ஆசி வழங்குவார் என்று சொன்னாய். இப்போது அனைத்துலகின் அரசனாகிய நான் இந்த சிலுவை என்ற சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு எல்லாருக்கும் ஆசி வழங்குகிறேன் பார்” என்று சொன்னார். இதைக் கேட்டு அவன் அமைதி அடைந்தான்.
சிலுவை அவமானச் சின்னமல்ல, அது அரியாசனம்; அது வெற்றியின் சின்னம் என்பதையே இந்நிகழ்வு உணர்த்துகிறது.
நாம் நமக்கு மீட்பைத்தரும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் அன்பை உணர்ந்து, அவரைப் போன்று இறைவழியில் நடப்போம். இறையாசிரை நிறைவாய்ப் பெறுவோம்.