நாம் வாழும் இன்றைய காலக் கட்டத்திலே திறமையும், சக்தியும் வாய்ந்த மனிதர்களைத் தேடிச் செல்கின்றது இன்றைய சமுதாயம். திறமை மிக்க ஆசிரியர்களைத் தேடுகிறார்கள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க சக்தியும், திறமையும் வாய்ந்த மருத்துவரை நாடுகின்றான் ஒரு நோயாளி. திறமை வாய்ந்த சமையல் கலைஞனை தேடுகின்றான் ஓர் உணவக உரிமையாளன். திறமை வாய்ந்த ஓட்டுநரை நாடுகின்றான் ஒரு அதிகாரி தன் காரை ஓட்ட. இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் திறமையை நாடுகின்றோம். ஆனால் திறமையானது பிறப்பிலே வந்துவிடுவதும் இல்லை. புத்தக அறிவால் நிறைவு பெறுவதும் இல்லை. மாறாக மனிதனின் அன்றாட அனுபவத்தில் நிறைவு காண்பதுதான் திறமை. பழமொழி ஆகமம் 24- ஆம் அதிகாரம், 3-4 வசனங்கள் தருவது போல எந்த ஒரு செயலும் முதலில் ஞானத்தோடு திட்டமிடுவதால், அறிவோடு செயல்படுவதால், காலக்குறிகளுக்கு ஏற்றவாறு அமைப்பதால் திறமை மிக்க செயலாகும் என்று நிரூபிக்கப்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஞானத்தின் இருப்பிடமாகத் திகழ்ந்த இயேசு என்ற திறமை மிக்க ஒப்பற்ற தலைவர் திறமை மிக்கவர்களைத் தேடவில்லை. ஆனால் சாதாரண, படிப்பறிவில்லா பாமரராக கடலிலே தொழில் நடத்திய மீனவர்களை அழைத்தார். தன் ஞானத்திலே பயிற்சி கொடுத்தார். ஆவியின் சக்தியிலே பலப்படுத்தினார். திறமை மிக்க சீடர்களாக உருவாக்கினார். தான் கொடுத்த நற்செய்தியை அறிவிக்க இருவர் இருவராக அனுப்பினார். நற்செய்தியை அறிவிக்க திறமை மிக்க பாத்திரங்களாக மாறினார்கள். சாட்சி பகரும் உண்மை வீரர்களாக மாறினார்கள். இவர்கள் ஆற்றிய அரும்பெரும் செயல்களை நற்செய்தி ஏட்டிலே நாம் காணலாம். வாசித்து மகிழலாம்.
இன்றைய நாட்களிலே இறைவன் உன்னையும் அழைக்கலாம். தனியாக அல்லது குடும்பமாக . எதற்காக? குடும்பங்களைக் கட்டி எழுப்ப உன்னை அழைக்கலாம். இன்று எத்தனையோ குடும்பங்கள் பிளவுபட்டுக் கிடக்கின்றன. கணவன் மனைவிக்குள்ளே பிரிவு. பெற்றோர் பிள்ளைகளுக்குள்ளே விரிசல். திருமணத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்படுகின்றன அல்லது மறைக்கப்படுகின்றன. கணவன் குடித்து குடும்பத்தின் பொறுப்பற்ற நிலையிலே வாழும் காட்சி. அதனால் மனைவி கண்ணீர் கடலிலே தவிக்கும் காட்சி. மனைவி கணவனை மதிக்காத நிலையிலே தான்தோன்றித் தனமாக மாறும் காட்சி. பணம், பதவி, இன்பம் இவைகளுக்கு இடம் கொடுத்து, உண்மை அன்புக்கு இடமின்றி வறண்ட பாலைவனமாக இன்று எத்தனையோ குடும்பங்கள் காட்சித் தருகின்றன. இத்தகைய குடும்பங்களைக் கட்டி எழுப்ப இறைவன் உன்னையும் உன் வாழ்க்கை துணைவர், துணைவியையும் அழைக்கலாம்.
சென்னை மாநகரத்திலே எனக்குத் தெரிந்த சாதாரண கூலி வேலை செய்யும் ஒரு குடும்பம் உண்டு. நல்லதோர் குடும்பம். கணவனும் மனைவியும் இன்பத்திலும், துன்பத்திலும் ஒன்றுபட்டு வாழும் தம்பதிகள். என்னைச் சந்தித்தபோது அவர்களின் பணி வாழ்வில் ஒன்றை என்னிடம் மகிழ்ச்சியோடு கூறினார்கள். வாரத்தில் இரண்டு நாட்கள் மாலையில் சில குடும்பங்களை நாங்கள் கணவன் மனைவியுமாக சந்திக்கின்றோம். இறைவன் அன்றாட வாழ்வில் எங்களுக்குச் செய்த இணையற்ற கொடைகளை எடுத்துச் சொல்லுகின்றோம். எப்படி எங்கள் வாழ்வில் துன்பங்களையும், சவால்களையும் சந்திக்கின்றோம் என்பதையும் பகிர்ந்து கொள்ளுகிறோம். நாங்கள் சந்திக்கும் குடும்பங்கள் எங்களிடம் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சிகளைக் கவனத்தோடு நாங்கள் செவிமடுக்கின்றோம். இறுதியாக எங்களுக்குத் தெரிந்த சிறிய செபத்தால் குடும்பத்தோடு சேர்ந்து செபிக்கின்றோம். இது எங்களைப் பலப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்கள்.
ஆம் நண்பா! நீயும் உன் மனைவியும் இதற்குச் சான்றாகத் திகழலாம் அல்லவா! சகோதரியே! நீயும் உன் கணவனும் இதற்குச் சான்று பகரலாமே! என்ன தகுதி எனக்கு உண்டு? என்ன திறமை எனக்கு உண்டு என்று திகையாதே! இறைவனுக்குத் தகுதியுள்ளவர்கள் தேவையல்ல. தகுதியற்ற உன்னை தகுதியுள்ளவராக்குவார். உறுதியூட்டும் இறைவனால் எனக்கு எதையும் செய்ய ஆற்றல் உண்டு என்று புனித பவுல் அடிகளார் பிலிப்பியருக்கு எழுதிய மடலிலே 4-ஆம் அதிகாரம் 13 - ஆம் வசனத்தில் குறிப்பிடுவது போல் தேவன் உன்னை ஆற்றல் மிக்க பாத்திரமாக மாற்றுவார். ஆனால் ஒன்று, நீ பிற குடும்பங்களுக்கு திருத்தூதராக மாறும்போது முதலில் நீ உன் குடும்பத்திற்கு திருத்தூதராக மாறுவாய். அது உன்னைப் பலப்படுத்தும். உன் குடும்பம் நிறைவும் மகிழ்ச்சியும் பெறும். பலப்படுத்தும் தேவன் உன்னை வழிநடத்துவாராக.
துறவு மனத்தவரின் தூயவாழ்வு எப்படி இருக்க வேண்டும்?
இயேசு அவருடைய சீடர்களுக்கு அளித்த அறிவுரை வழியாக மனத் துறவைப் பற்றிய விளக்கமொன்றை நமக்குத் தருகின்றார். அவர் தம் சீடர்களைப் பார்த்து, பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையிலே செப்புக்காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம். அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் (மாற் 6:8-9) என்கின்றார்.
துறவின் மையம் வெறுமை போல தோன்றும்! ஆனால் துறவு உண்மையிலேயே நிறைவானது, வல்லமை மிக்கது, ஆற்றல் வாய்ந்தது.
இரு நண்பர்கள்! இருவரும் துறவிகள்! ஒருவர் முற்றிலும் துறந்தவர்! மற்றொருவர் சற்றே மாறுபட்டவர். இருவரும் ஓர் ஆற்றைக் கடக்க வேண்டிய சூழ்நிலை! மாலை நேரம்!
முற்றிலும் துறந்தவர், "ஓடக்காரருக்குக் கொடுக்க, என்னிடம் பணமில்லை ; இங்கேயே தங்குவோம். காலையில் யாராவது நமக்கு உதவிசெய்வார்கள்” என்றார். மற்றவரோ, "இது காடு. மிருகங்களால் நமக்கு ஆபத்து ஏற்படலாம். என்னிடம் பணமிருக்கின்றது. ஆற்றைக் கடந்து விடுவோம்" என்றார்.
இருவரும் அக்கரையை அடைந்தார்கள். அப்போது முற்றும் துறந்தவரைப் பார்த்து அவருடைய நண்பர், "உம்மைப்போல நானும் முற்றும் துறந்திருந்தால் ஆற்றைக் கடந்திருக்க முடியாதே" என்றார்.
அதற்கு முற்றும் துறந்தவர் சொன்னார் : "உன் துறவு மனப்பாங்குதான் நம்மை இக்கரை சேர்த்தது. நீ பொருளைப் படகோட்டிக்குக் கொடுக்காமல் இருந்திருந்தால் நாம் வந்து சேர்ந்திருக்க முடியாது. மேலும் என் பையில் பணமில்லாதபோது உன்னுடையது என்னுடையதாயிற்று. எனக்குத் தேவையானது எனக்கு எப்படியும் கிடைத்துவிடுகின்றது. பொருள் இல்லாததால் ஒருபொழுதும் நான் துன்புற்றதில்லை” என்றார்.
இதனால்தான் இயேசு பற்றற்ற வாழ்வுக்கு, துறவு வாழ்வுக்கு நம்மை அழைக்கின்றார். இல்லறத்தில், தனியறத்தில் வாழ்பவர்கள் கூட துறவை மேற்கொள்ளலாம். மனத் துறவு - இது எல்லாருக்கும் பொதுவானது. துறவு மனம் படைத்தோர் ஒருபோதும் ஏமாறுவதில்லை - ஏனென்றால் அவர்கள் எதையும் எதிர்பார்ப்பதில்லை!
துறவு மனம் படைத்தோர் எதையும் இழப்பதில்லை - ஏனென்றால் அவர்கள் எதையும் பற்றிக்கொள்வதில்லை! ( முதல் வாசகம் ).
மேலும் அறிவோம் :
பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (குறள் : 350).
பொருள் : எவற்றின் மீதும் பற்று வைக்காமல் இருப்பவரிடம் பற்று வைக்கலாம். உலகச் செல்வங்கள் மீது பற்றுக்கொள்வோர் அவை நிலையற்றவை என்பதை உணர்ந்து, பற்றற்றான் ஆகிய இறைவன் மீது பற்று வைப்பர்.
பெந்தக்கோஸ்து சபையைச் சார்ந்த கிறிஸ்துவர்கள், "இயேசு வருகிறார் என்ற தலைப்பில் பல துண்டுப் பிரசுரங்களை அச்சடித்து அவற்றை ஒரு பேருந்து நிலையத்திலிருந்த பயணிகளுக்குக் கொடுத்தனர். மேலும், ஒரு பேருந்து நடத்துனரிடம் அதைக் கொடுக்க, அவர் அதைப் படித்துப் பார்த்துவிட்டு, "இயேசு வருகிறாரா? யார் வந்தாலும் வரட்டும்; ஆனால், மரியாதையாக 'டிக்கட்' வாங்கிக் கொண்டுதான் பேருந்தில் ஏறவேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இன்று இயேசுவே வந்தாலும், அவர் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டுதான் பேருந்தில் ஏறமுடியும்: பயணம் செய்ய முடியும், அப்படியிருக்க, இன்றைய நற்செய்தியில், இயேசு தம் சீடர்களை நற்செய்திப் பணிக்காக அனுப்பும்போது, அவர்கள் தங்களுடன் உணவோ, பையோ, காசோ எதுவுமே எடுத்துச் செல்லவேண்டாம் என்று கட்டளையிடுகிறாரே; இது நடைமுறைக்கு ஒத்துவருமா? என்று நாம் கேட்கலாம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு இரண்டு உண்மைகளை வலியுறுத்துகிறார். ஒன்று, நற்செய்தியை அறிவிப்பவர்கள் பணத்தை அல்ல, கடவுளையே நம்பித் தங்கள் தாதுரைப் பணியை மேற்கொள்ள வேண்டும். இரண்டு, நற்செய்தியைக் கேட்பவர்கள் அதை அறிவிப்பவர்களின் இன்றியமையாத் தேவைகளை நிறைவு செய்யக் கடமைப்பட்டுள்ளாளர்.
நற்செய்தியை அறிவிப்பவர்கள் கடவுளை மட்டுமே நம்பித் தங்கள் பணியை ஆற்றவேண்டும், செல்வமும் சொத்துக்களும் நற்செய்திப் பணிக்கு மாபெரும் இடையூறாகவும் வேகத் தடைகளாகவும் உள்ளன. நற்செய்திப் பணிக்காகச் சொத்துக்களைக் குவிப்பவர்களுக்கு. இறுதியில் அச்சொத்துக்களைக் கட்டிக் காப்பதற்குத்தான் நேரமிருக்கும்; நற்செய்திப் பணிக்கு நேரமிருக்காது.
நற்செய்தி அறிவிப்பவர்கள் ஊர் ஊராகச் செல்லவேண்டும். எவ்வளவுக்கு அதிகமாகப் பொருள்கள் அவர்களிடம் உள்ளதோ, அவ்வளவுக்கு அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குச் செல்லத் தயங்குவார்கள்.
தனது பங்கிலே 100 தென்னம்பிள்ளைகளை நட்டுவளர்த்த பங்குத்தந்தை. அம்மரங்கள் காய்க்கும்வரைத் தன்னை அப்பங்கிலிருந்து மாற்றக்கூடாது என்கிறார். கட்டடம் கட்டிக் கொண்டிருக்கும் பங்குத்தந்தை. அக்கட்டடம் கட்டி முடியும்வரை பணிமாற்றத்தை எதிர்க்கிறார், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, பல இலட்சங்களைத் தனியார் நிறுவனத்தில் கொடுத்து வைத்த துறவறச் சபைக் குரு. அந்நிறுவனம் திவ்லாகி, 'மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியவுடன் மாரடைப்பால் மரணமடைகிறார்!
"எவரும் இருதலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. நீங்களும் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது” (மத் 8:24). ஆண்டவரின் இவ்வருள் வாக்கை மறந்தத் திருப்பணியாளர்கள் காலப்போக்கில் திருவாளர்களாக மாறிவிடுவதில் வியப்பொன்றுமில்லை, பொருளாளர்கள் அருளாளர்களாக இருப்பது ஒருபோதும் இயலாது. புனித சாமிநாதர் மூன்றாம் 'இன்னசென்ட்' என்ற திருத்தந்தையைச் சந்தித்தபோது, திருத்தந்தை அவரிடம், "பேதுரு தன்னிடம் பொன்னோ வென்ளியோ இல்லை என்றார். ஆனால் நான் அவ்வாறு கூற முடியாது. ஏனெனில் என்னிடம் ஏராளமாகப் பொன்னும் வெள்ளியும் உள்ளன என்றார். அதற்குச் சாமிநாதர் திருத்தந்தையிடம், "உங்களிடம் பொன்னோ வெள்ளியோ இல்லை என்று கூறமுடியாது. ஆனால் நீங்கள் முடவனைப் பார்த்து எழுந்து நட' என்றும் சொல்ல முடியாது" என்று பதிலடி கொடுத்தார். பேதுருவும் ஏனைய திருத்தத்தங்களும் புதுமை செய்தனர்; ஏனெனில் அவர்களிடம் பொன்னும் வெள்ளியுமில்லை. இக்காலத்தில் திருப்பணியாளர்களிடம் ஏராளமாகப் பொன்னும் வெள்ளியும் இருப்பதால் அவர்களால் புதுமை செய்ய இயலவில்லை .
திருப்பணியாளர்கள் தங்கள் அருள் பணிக்குப் பணம் வாங்கக் கூடாது. ஏனெனில் கொடையாக, அதாவது, இலவசமாகப் பெற்றுக் கொண்டதைக் கொடையாக, இலவசமாகவே வழங்க வேண்டும் (மத் 10:8) என்பதுதான் இயேசுவின் விருப்பம்.
ஒரு பங்கிற்கு உறுதிப்பூசுதல் கொடுப்பதற்காக ஆயர் சென்ற போது, உறுதிப்பூசுதல் பெறும் சிறுவர்கள் ஓர் உறையுள் 10 ரூபாய் வைத்து ஆயருக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டுமென்று பங்குத்தந்தைக் கேட்டிருந்தார், ஓர் உறையுள் 10 ரூபாய் இருந்தது: அத்துடன் ஒரு காகிதத்துண்டில், “பரிசுத்த ஆவியைப் பெறுவதற்குமா இலஞ்சம் கொடுக்க வேண்டும்?" என்று எழுதப்பட்டிருந்தது.
திருப்பலி நிறைவேற்றுவதற்கும் திருவருள் சாதனங்களை வழங்குவதற்கும் இறைமக்களிடமிருந்து பெறப்படுவது இலஞ்சமோ கட்டாயக் கட்டணமோ அல்ல; மாறாக, திருப்பணியாளர்களைப் பராமரிப்பதற்காக இறைமக்கள் கொடுக்கும் விருப்பக் காரிக்கையாகும், திருப்பணியாளர்கள் இழிவான ஊதியத்திற்காகப் பணி செய்யலாகாது (1பேது 5:2). ஆனால், பங்கு மக்கள் தங்களது பங்குப்பாரியாளரைப் பராமரிக்க வேண்டிய கடமையும் உரிமையும் கொண்டுள்ளனர். இக்கடமையை இயேசுவும் புனித பவுலும் வலியுறுத்துகின்றனர்.
'வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே' (மத் 10:10 இயேசு வின் சீடருக்கு ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் கொடுப்பவரும் கைமாறு பெறுவார் (காண்க: மத் 10:42) "நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்கு உரியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் ஆண்டவர் பனரித்திருக்கிறார்" (1கொரி 9:14), “இறைவார்த்தையைக் கற்றுக் கொள்வோர் அதைக் கற்றுக் கொடுப்போருக்குத் தமக்குள்ள நலன்கள் அனைத்திலும் பங்கு அளிக்க வேண்டும்" (கலா 6:6).
ஞாயிறு திருப்பலி முடிந்து, தனது சிறிய மகனுடன் வீடு திரும்பிய ஒரு பெண்மணி, பங்குத் தந்தையின் பிரசங்கத்தைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்து. கண்டபடி அவரைத் திட்டினார். அவருடைய சிறிய மகன் அவரிடம், "ஆமா, நீ போட்ட 10 பைசாவுக்கு இதைவிட நல்ல பிரசங்கம் வேணுமா? பேசாம வாங்கம்மா" என்றாள், 10 பைசா உண்டியலில் போட்டுவிட்டு, 10,000 கேள்விகள் கேட்பார் பலர் உண்டு.
ஒவ்வொருவரும் தங்கள் மாதவருமானத்தில் 1/10 பகுதியை கொடுக்கவேண்டாம்: 1/100 பகுதியாவது கொடுத்தாலே போதும். பங்குத் தந்தையைக்கூடப் பராமரிக்காத பங்கு மக்கள் கடவுளிடமிருந்து கொடைகளை எதிர்பார்க்க முடியுமா?
*கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்" (லூக் 6:33) "மனவருத்தத்தோடோ கட்டாயத்தினாலேயோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்குரியவர், கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்பவல்லவர்" (2கொரி 9:7-8).
விறகுக்கட்டை விணையாகும்
வீரலாற்றுப் புகழ்பெற்ற வயலின் வித்தகர் பகாநினே (Paganine) என்பவர் ஒருமுறை இன்னிசைக் கச்சேரி நிகழ்த்த அரங்கேறினார். அவரைக் கண்டதும் திரளான இரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆர்ப்பொலி எழுப்பினர். உற்சாக வரவேற்பு! வாழ்த்தை ' ஏற்று அவையை வணங்கி அமர்ந்தார். வயலினை எடுக்கப் பெட்டியைத் திறந்தார். ஒரே அதிர்ச்சி. ஒரு கணம் செயலற்று நின்றார். வழக்கமாக அவர் இசைக்கும் வயலினைக் காணோம். பதிலாக வேறொன்று இருந்தது. பெட்டியை வைத்திருந்த இடமெல்லாம் தேடினார். ஒவியமாக அவர் போற்றிப் பேணிய வயலினை எவரோ திருடிவிட்டு மாற்று வயலினை வைத்திருந்தனர். தன்னையே தேற்றித் திடப்படுத்திக் கொண்டு மக்களைப் பார்த்துச் சொன்னார்: "என் இனிய இரசிகப் பெருமக்களே, என் உயிரான வயலினை எவரோ திருடிவிட்டனர். பதிலாக வேறொன்றை வைத்துவிட்டு! ஆவலோடு துடித்துக் கொண்டிருக்கிற உங்களை மேலும் காக்க வைக்கவோ, ஏமாற்றத்துக்கு ஆளாக்கவோ விரும்பவில்லை. இசை என்ன இசைக் கருவியில் மட்டும்தானா இருக்கிறது? இசைக்கின்ற கலைஞனின் திறமையிலும் கேட்கின்ற மக்களின் இரசனையிலும் இல்லையா? Yes, the music is not in the tnstrument but in the soul" சொல்லிவிட்டு அமர்ந்து இசைக்கத் தொடங்கினார். பிரமித்து நின்றது மக்கள் பெருவெள்ளம்.
கடவுளைப் போல் மகத்தான கலைஞன் வேறு யார்? அவன் புல்லை எடுத்து புல்லாங்குழலாக்கி இசைப்பான். விறகுக்கட்டையை எடுத்து வீணையாக்கி மீட்டுவான். இறைப்பணியின் மாட்சி தனி மனிதத் திறமையில் அல்ல. “இசைப்பதெல்லாம் இறைவனே” என்ற தாழ்ச்சியான தன்னுணர்விலும் இசையை ஏற்கும் மக்களின் . முறையான இர சனையிலுமே! ஆனால் இன்று...இறைப்பணியாளர்களின் செயல்பாடுகளாகட்டும், இறைமக்களின் சிந்தனைப் போக்காகட்டும் ... நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?!
இயேசு தன் சீடர்களை அனுப்பியது போதனைப் பணிக்கு மட்டுமல்ல. சாட்சிய வாழ்வுக்கும்கூட. வாழ்வுக்கும் பணிக்கும் பொலிவும் நிறைவும் தருவது வாழ்வுக்கான பண்புகள். எடுக்க வேண்டிய நிலைப்பாடு, சந்திக்க வேண்டிய சவால்கள், எதிர்கொள்ள நேரும் இடற்பாடுகள் இவை பற்றிய தெளிவு. இயேசு தன் சீடர்களுக்கு இந்தத் தெளிவைத் தருகிறார்.
நமது போதனை நம்பகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அதாவது நமது போதனைக்கும் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு வேண்டும். ஒவ்வொரு கிறிஸ்தவனும் இயேசுவின் சீடன். சீடன் என்பவன் குருவைப் பின்பற்றுபவன் மட்டுமல்ல. குருவைப் பிரதிபலிப்பவன். அதுதான் உண்மையான சீடத்துவம். “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக் கூட இடமில்லை” (மத். 8:20). இயேசு எந்த அளவுக்கு எளிமையை அணிந்து கொண்டார் என்றால் திருத்தூதர் பவுல் கூறுவது போல “கடவுள் வடிவில் விளங்கிய அவர். கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்'' (பிலிப். 2:6,7).
எளிமை இல்லாத தொண்டு, தன்னலத்தை, ஆணவத்தை வெளிப்படுத்தும். நாம் ஆற்றும் தொண்டு அருத்தமிழக்காமல் இருக்க இறைவன் விரும்பும் எளிமையை அணிந்து கொள்வோம். இன்றைய நற்செய்தியில் சீடனாக இருப்பதற்கான தகுதிகளை இயேசு தெளிவாக வரையறுத்துக் காட்டுகிறார். தன்னலம் மறந்து அருப்பண உணர்வுடன் ஒருவன் தன்னை இயேசுவின் சீடனாக மாற்றிக் கொள்ளும் போது இந்த உலகில் அவனுக்குப் பாதுகாப்பு நிச்சயமாக இருக்காது.
கிறிஸ்தவன் இயேசுவின் சீடன். இயேசுவின் இறையாட்சிப்பணியே அவனது இலட்சியம். அந்தப் பணியைத் தொடர்வதே அவனது வாழ்வு. “அனைத்தையும் கிறிஸ்துவுக்குள்" ஒன்று சேர்க்க வேண்டும்” (எபேசி. 1:10) என்னும் இறைத்திட்டத்தை, இறையாட்சிப் பணியை நிறைவேற்றுவதே அவனது ஆன்மீகம், அருள்வாழ்வு.
பணப்பற்றோ பதவி (அதிகார) வெறியோ வாழ்க்கை வசதிகளையும் சொத்து சுகங்களையும் தேடும் மனப்பான்மையோ இந்தப் பணிக்கு இடையூறுகளே! அதனால்தான் பணிக்கு இன்றியமையாதவை தவிர வேறு எதையும் நற்செய்திப் பணியாளன் கொண்டிருக்கலாகாது (மார்க். 6:8-9); எளிய வாழ்க்கை முறையே ஆறையாட£சிப் பணிக்கு ஏற்றது என்கிறார் நற்செய்தி நாயகன் இயேசு.இயேசுவுக்கு எளிமையே வலிமை.
மேலும் இப்பணியில் ஈடுபடுகின்றவர்களுக்கு உண்மையான தாழ்ச்சி வேண்டும். தாம் ஆண்டவரால் அனுப்பப்பட்டவர்கள் (மார்க். 6:7) என்ற உணர்வு எப்போதும் வேண்டும். நீதியின் இறைவாக்கினர் ஆமோஸ் கூடத் தனது இறைவாக்குப் பணியை தனது திறமையாக நினைக்கவில்லை. “நான் இறைவாக்கினர் இல்லை. இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை. நான் ஆடு மேய்ப்பவன். காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டுபோன என்னை . ஆண்டவர் தேர்ந்தெடுத்து என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று இறைவாக்கு உரைத்திடு' என்று அனுப்பினார்” (ஆமோஸ் 7 : 14-15)
எரோபோவாம் இஸ்ரயேலை ஆட்சி செய்த காலம். சமுதாயச் சீர்கேடுகள் பணக்காரர்களின் சொகுசான. வாழ்வுக்கு ஒத்தடம் கொடுத்த, அரியணை ஏறிய அநீதிக்குச் சமயம் பாதுகாப்பு அளித்த காலக்கட்டம் அது. அதனை வன்மையாகக் கண்டனம் செய்கிறார் ஆமோஸ் (7:3). ஆண்டவனுக்கு ஊழியம் செய்வதை விடுத்து அரசனுக்கு ஊழியம் செய்து பிழைப்பு நடத்திய அர்ச்சகன் அமாட்சியா ஆமோசை எதிர்க்கிறார். “காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு. , யூதாவின் நாட்டுக்குப் ... போய் இறைவாக்குரைத்து உன் பிழைப்பைத் தேடிக்கொள்...” (ஆமோஸ். 7:12) என்று விரட்டுகிறான். எனினும் ஆமோஸ் துணிச்சலோடு இறைச் செய்தியை அறிவிக்கிறார்.
இறையாட்சியின் மொத்த உரு இயேசுவே! ஆம், இயேசுதான் இறையாட்சி, இறையாட்சியின் பள்ளிக்கூடம். பயிற்சித்தளம், பாசறை எல்லாமே. திருத்தூர்தர்கள் இயேசுவோடு தங்கி உறவு கொண்டது "இறையாட்சி அனுபவம் பெறுவதற்காகவே, இயேசுவால் அழைக்கப்பட்ட நாம் அனைவரும் இறையாட்சியின் மாணவர்களே! நற்செய்தி அறிவிப்புப் பணி ஓர் உன்னதமான பணி. கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் வல்லமையையும் மக்களுக்கு (வெளிப்படுத்தும் பணி. நற்செய்தி அறிவிப்பவர்கள்' கருவிகளே. கடவுளே அவர்கள் வழியாகச் செயல்படுத்துகிறார். சான்று பகர்கின்ற வாழ்க்கை இறை வார்த்தையின் வல்லமையை முழுமையாக _- வெளிப்படுத்தும் பணிபுரிவோம். சாட்சிகளாவேம்.
திரு அவையின் மரபில் இதுவரை இல்லாத “பிரான்சிஸ்” என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார் இன்றையத் திருத்தந்தை. ஏழையாய் இருந்த இயேசுவை நெருங்கிப் பின்சென்ற அசிசியாரின் நினைவை மீண்டும் வெளிப்படுத்துகின்றார். திரு அவை ஏழ்மை உணர்வோடு ஏழைகளில்: இறைவனைக் காண அழைக்கிறார்.
அண்ணல் காந்தியிடம் ஒரு சிறுமி “தாத்தா, நீங்கள் ஏன் சட்டை போடுவதில்லை? என் அப்பாவிடம் சொல்லி உங்களுக்குச் சட்டை வாங்கித் தரவா?” என்று கேட்டாள். சிரித்துக்கொண்டே நான் மட்டும்: சட்டை போட்டால் போதாது. ஆயிரக்கணக்கான என் தம்பிதங்கையர் இந்த நாட்டில் சட்டை போடாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கும் சட்டை கிடைத்தால் அப்போது நானும் சட்டை போடுவேன்” என்றார் காந்தியார். இத்தகைய மனநிலை இயேசுவின் சீடர்களுக்கு வேண்டும்.
மனிதர்களின் தகுதியை முன்னிட்டு அல்ல அவரது அழைப்பு (1 கொரி. 1:25-27) தகுதியின்மைதான் இயேசுவின் சீடனாகத் தேவையான ஒரே தகுதி. எனவே அவர்கள் தங்களை நம்பியிராமல் தங்களை அழைத்து அனுப்புகிறவரை மட்டுமே நம்பியிருக்க வேண்டும். மனிதக் கருவிகள் நடலாம், நீர்ப்பாய்ச்சலாம். ஆனால் விளையச் செய்பவர் ' ஆண்டவரே (1 கொரி. 3:6). அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் “செல்வதும் சொல்வதும்” தான்!
தன்னைப் பறைசாற்ற... இறைவனைப் பறைசாற்ற
நம்மைப்பற்றிப் பறைசாற்றவோ, அல்லது, நம் தலைவர்களைப்பற்றி துதிபாடவோ பெரும் முயற்சிகள் மேற்கொள்ளும் நாம், இறைவனைப் பறைசாற்ற என்ன முயற்சிகள் எடுக்கிறோம் என்பது, இன்றைய ஞாயிறு வழிபாடு நம்முன் வைக்கும் ஒரு சங்கடமானக் கேள்வி.
இறைவனைப் பறைசாற்றும் இறைவாக்கினர்களைப் பற்றி சென்ற ஞாயிறு நாம் சிந்தித்தோம். இறைவாக்கினர்களைப் பற்றி இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள இந்த ஞாயிறு நமக்கு மீண்டுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறைவாக்கினர் ஆமோசை, இன்றைய முதல் வாசகத்தில் நாம் சந்திக்கிறோம். இறைவனின் பணியாளராய் வாழ்வதைப்பற்றி, இயேசு, தன் சீடர்களுக்குத் தந்த அறிவுரைகள், இன்றைய நற்செய்தியாக நமக்குத் தரப்பட்டுள்ளன.
இறைவாக்கினர்கள், இறைப்பணியாளர்கள் என்ற சொற்களைக் கேட்டதும், இது குருக்களுக்கும், துறவிகளுக்கும் ஒதுக்கப்பட்டத் தொழில் என்று முடிவெடுத்து, நாம் ஒதுங்கிவிட நினைக்கிறோம். இன்றைய வாசகங்களில் நாம் சந்திக்கும் யாருமே குருக்களாக, துறவிகளாக வாழ பயிற்சி பெற்றவர்கள் அல்ல. அனைவருமே, எளியத் தொழிலாளிகள்.
“நான் இறைவாக்கினன் இல்லை: இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை: நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு என்று அனுப்பினார்” (ஆமோஸ் 7: 14-15) என்று இறைவாக்கினர் ஆமோஸ் தன்னையே அறிமுகப்படுத்திக் கொள்வதை இன்றைய முதல் வாசகம் கூறுகிறது.
அதேவண்ணம், இயேசு, தச்சுவேலை செய்த தொழிலாளி என்பதும், அவரது சீடர்களில் பெரும்பாலானோர் மீன்பிடித் தொழிலாளர்கள் என்பதும் நாம் அறிந்த உண்மை. எனவே, நாம் அனைவருமே இறைவாக்கினர்களாக, இறைப்பணியாளர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளவர்கள் என்ற உண்மையை, முதலில் ஏற்றுக்கொள்வோம். இறைவாக்கினர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ள நம் அனைவருக்கும் தேவையானப் பாடங்களை, இன்றைய வாசகங்கள் சொல்லித்தருகின்றன. கவனமாகப் பயில முயல்வோம்.
விவிலியத்தில் நாம் சந்திக்கும் அத்தனை இறைவாக்கினர்களும் தீப்பிழம்புகள். இவர்களில், இறைவாக்கினர் ஆமோஸ், மிக உக்கிரமாக எரிந்த ஒரு தீப்பிழம்பு. அவரது நூலில் நாம் கேட்பதெல்லாம், இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் விடுத்த எச்சரிக்கைகள்.
ஆமோஸ் கூறிய கசப்பான உண்மைகளைக் கேட்க மறுத்த தலைமைக்குரு அமட்சியா, பெத்தேல் பகுதியைவிட்டு ஆமோசை ஓடிப்போகச் சொல்கிறார். "அரசனின் இடமான பெத்தேலில் இறைவாக்கு உரைக்காதே, வேண்டுமெனில் யூதேயா நாட்டுக்கு ஓடிப்போய், அங்கு இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்" என்று அமட்சியா அறிவுரைத் தருகிறார்.
அமட்சியா சொல்வதை ஆழ்ந்து சிந்தித்தால், அதில் புதைந்திருக்கும் அரசியலை நாம் இவ்வாறு புரிந்துகொள்ளலாம்: "ஆமோஸ், பெத்தேலில் நாங்கள் அரசனைப் புகழ்ந்து பாடி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம். அரசனுக்கும், மக்களுக்கும் நீ கூறும் எச்சரிக்கைகள் எங்கள் பிழைப்பைக் கெடுத்துவிடும். எனவே, எங்கள் பிழைப்பைக் கெடுக்காமல், நீ யூதேயாவுக்குப் போய், அங்கே இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள்" என்பதே ஆமோசுக்கு, அமட்சியா கூறும் அறிவுரை. ஓர் இறைவாக்கினர் எவ்வாறெல்லாம் வாழக்கூடாது என்பதை, அமட்சியாவின் சொற்களில் நாம் கற்றுக்கொள்ளலாம்.
அமட்சியாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஆமோஸ் என்ற தீப்பிழம்பு, இன்னும் அதிகமாகக் கொழுந்துவிட்டு எரிகிறது. "இறைவாக்கு உரைப்பது ஒரு பிழைப்புக்கென்றால், நான் இறைவாக்கினன் அல்ல. அரசனுக்குத் துதிபாடும் இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் அல்ல" என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் ஆமோஸ். மேலும், "நான் பிழைப்பு தேடிக்கொள்ள வேண்டுமெனில் ஆடு, மாடு மேய்த்து வாழ முடியும்" என்பதையும் அவர் அழுத்தந்திருத்தமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
பிழைப்புக்காக இறைவாக்கு உரைப்பது, மந்திரம் சொல்வது, பலிகள் ஆற்றுவது, போதிப்பது என்று வாழ்ந்த குருக்கள், மதத்தலைவர்கள், போலி இறைவாக்கினர்கள் மத்தியில், ஆமோஸ் போன்ற உண்மை இறைவாக்கினர்கள் அன்று வாழ்ந்தனர், இன்றும் வாழ்கின்றனர். பிழைப்பைத் தேடிக்கொள்வது வேறு; வாழ்வை, குறிப்பாக, நிலைவாழ்வைத் தேடிக்கண்டடைவது வேறு, என்பதைத் தெளிவுபடுத்தி, அந்த வாழ்வுப்பாதையைப் பிறருக்கும் காட்டிவரும் இறைவாக்கினர்கள், இன்றும் நம் மத்தியில் இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
இயேசு தன் சீடர்களை அருள்பணிக்கு அனுப்பி வைக்கும் இன்றைய நற்செய்திப் பகுதியும் ஒரு சில முக்கியமான பாடங்களைச் சொல்லித்தருகிறது. இயேசு தன் சீடர்களை இருவர் இருவராக அனுப்புகிறார் என்பதில் நமது முதல் பாடம் ஆரம்பமாகிறது. இருவர் இருவராக அனுப்பியதற்குப் பதில், சீடர்களை, ஒவ்வொருவராக, தனித்தனியாக அனுப்பியிருந்தால், அவர்கள் இன்னும் பல இடங்களுக்குச் சென்று இறையரசைப் பறைசாற்றியிருக்கலாமே; மனித சக்தியை (man power) சரிவரப் பயன்படுத்தும் மேலாண்மைப் (management) பாடங்கள் இயேசுவுக்குத் தெரியவில்லையே என்று குறைசொல்லத் தோன்றுகிறது. மேலாண்மைப் பாடங்களில், இருவராக, குழுவாகச் செயல்படும் வித்தைகள் சொல்லித் தரப்பட்டாலும், இறுதியில் தனியொருவர் பெறும் வெற்றியே முன்னிலைப்படுத்தப்படுகின்றது. தனியொருவர் வெற்றி பெறுவதற்கு, அடுத்தவரைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை என்ற பாதகமான பாடங்களும் இங்கு சொல்லித் தரப்படுகின்றன.
இறைவனின் பணி இதற்கு நேர்மாறானது. சமயப் பாரம்பரியங்கள் பலவற்றில், அருள் பணிகளுக்குச் செல்பவர்கள் இருவர் இருவராய்ச் சென்றனர் என்பதைப் படித்திருக்கிறோம். இருவராய்ச் செல்லும்போது, ஒருவர் மற்றொருவருக்கு உதவியாக இருக்கமுடியும்; பல வேளைகளில், ஒருவர், மற்றொருவரின் மனசாட்சியாகவும் செயல்பட முடியும்.
அருள்பணி புரியும் நேரங்களில், போதனைகள் நிகழும்; புதுமைகள் நிகழும்; மக்களிடம் பேரும் புகழும் ஓங்கும். இந்நேரங்களில், ஒருவர் தனியாகச் செயல்பட்டால், அந்தப் போதனைகளும், புதுமைகளும் ஏதோ தன் சொந்த சக்தியால் நிகழ்ந்ததைப்போல அருள்பணியாளர் உணரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் எழும். இருவராய் இப்பணிகளில் ஈடுபடும்போது, ஒருவர், தன்னையே வானளாவ உயர்த்திக் கொண்டால், அடுத்தவர் அவரைப் பத்திரமாக மீண்டும் தரைக்குக் கொண்டுவருவார். நான், எனது, என்னால் முடியும் என்று, சுயநலத்தில் சிக்கி, சிதைந்துவரும் நம் உலகிற்கு, இயேசு சொல்லித்தரும் இந்த முதல் பாடம் மிகவும் தேவை.
இரண்டாவது பாடம்... இவ்விதம் அனுப்பப்பட்டவர்களுக்கு இயேசு அதிகாரம் அளித்தார் என்று நற்செய்தியில் வாசிக்கிறோம். எவ்வகை அதிகாரம்? சீடர்கள், மக்களுக்குப் பணிபுரியச் செல்லும்போது, அம்மக்கள் மீது அதிகாரம் செலுத்த இயேசு அவர்களை அனுப்பவில்லை. மாறாக, அம்மக்கள் மத்தியில் வளர்ந்திருந்த தீய சக்திகள் மீது அதிகாரம் அளித்தார். மக்களுக்காகப் பணிபுரிந்த இயேசு, அவர்களை அதிகாரம் செய்ய தன் பணியை பயன்படுத்தவில்லை, அவர்களை, தீய சக்திகளிலிருந்து விடுதலை செய்யவே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தினார். அதே பாடத்தை, தன் சீடர்களுக்கும் இயேசு சொல்லித் தந்தார்.
மக்கள் பணியில் ஈடுபடுவதாகச் சொல்லி, மக்களின் நம்பிக்கையைப் பெறும் பலர், மக்களை அடக்கி, ஒடுக்கி, நசுக்குவதற்கு, தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், மக்கள் மத்தியில் வேரூன்றியிருக்கும் தீயசக்திகளை அடக்கி, ஒடுக்கி நசுக்குவதற்கு, தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தினால், இந்த மண்ணகம் விண்ணகமாக மாறியிருக்கும். அதிகாரம் என்ற பெயரில், மக்களை வதைக்கும் நம் தலைவர்கள், இயேசுவின் காலடிகளில் அமர்ந்து, இந்த ஒரு பாடத்தையாவது பயில்வார்களா? நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்வோம்.
பணியாளர், வார்த்தைகளால் மட்டும் போதிப்பது பயனளிக்காது, அவரது வாழ்வாலும் போதிக்கவேண்டும் என்பது, இயேசு சொல்லித்தரும் மூன்றாவது பாடம். பணியாளரின் வாழ்வு, மிக எளிமையான வாழ்வாக இருக்கவேண்டும் என்பதை, “பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” (மாற்கு 6: 8-9) என்ற இயேசுவின் வார்த்தைகள் தெளிவாக்குகின்றன. "Less luggage more comfort" அதாவது, "குறைவான சுமை, நிறைவான பயணம்" என்று இரயில் பெட்டிகளில் முன்பு எழுதப்பட்டிருந்த வரிகள் என் நினைவுக்கு இப்போது வருகின்றன. வாழ்க்கைப் பயணம் எளிமையாய் அமைந்தால், தேவையில்லாத சுமைகளை உள்ளத்தில் தாங்கி, பயணம் முழுவதும் பாடுபடவேண்டாம் என்று இயேசு சொல்வது எல்லாருக்கும் பொதுவான ஒரு நல்ல பாடம்.
"உங்களை வரவேற்பவருடன் தங்கி இருங்கள், வரவேற்க மறுப்பவர்களிடம் இருந்து விரைவில் விலகிச் செல்லுங்கள்" என்பது இயேசு நமக்குச் சொல்லித் தரும் நான்காவது பாடம். வரவேற்பு இல்லாத இடங்களிலிருந்து செல்லும்போது, “உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்” என்பதை இயேசு குறிப்பிட்டுச் சொல்கிறார்.
கால் தூசியை உதறிவிடுவதை, நாம் வழக்கமாக, ஒரு கோபச்செயலாக, நம்மை வரவேற்காதவர்களுக்குத் தரும் எச்சரிக்கையாகவே சிந்தித்துள்ளோம். இச்சொற்களை மற்றொரு கோணத்திலும் சிந்திக்கலாம். பணிசெய்ய செல்லுமிடத்தில் சரியான வரவேற்பு இல்லையென்றால், அந்த கசப்பான எண்ணங்களைச் சுமந்துகொண்டு அடுத்த இடம் செல்லவேண்டாம். அந்த கசப்பை அங்கேயே விட்டுவிடுங்கள். காலில் படிந்த தூசியைத் தட்டுவதுபோல், உங்கள் உள்ளத்திலிருந்து கசப்பான எண்ணங்களை தட்டிவிட்டுப் புறப்படுங்கள் என்று இயேசு தன் சீடர்களுக்குச் சொல்வதாக நாம் எண்ணிப்பார்க்கலாம். நம் உறவுகள், அல்லது, நண்பர்கள் நடுவே சரியான வரவேற்பு நமக்குக் கிடைக்கவில்லையென்ற கசப்பான எண்ணங்களை நம்மில் எத்தனை பேர் சுமந்து வருந்துகிறோம். பல வேளைகளில், இந்தக் கசப்புணர்வுகள், காலில் படிந்த தூசியாக இல்லாமல், கண்களில் விழுந்த தூசியாக உறுத்திக்கொண்டே இருக்கும். எந்த ஒரு கசப்பான நினைவையும், எண்ணத்தையும் கால் தூசியெனக் கருதி உதறிவிடுவதும், கண் தூசியாக சுமந்து வருந்துவதும் நமக்குத் தரப்பட்டுள்ள சுதந்திரம்.
இறைவாக்கினர்களாய், இறைவனின் பணியாளராய் வாழ அழைக்கப்பட்டுள்ள நாம் அனைவருமே கற்றுக் கொள்ளக்கூடியப் பாடங்களை இன்றைய வாசகங்கள் வழியே நமக்குச் சொல்லித்தந்த இறைவனுக்கு நன்றி பகர்வோம்.
மறையுரை
* கடவுளின் கட்டளையை கட்டிப்பிடித்தவர் எளியோரை வாட்டும் அநீதி கண்டு கலக்கம் அடைந்தவர். இறைவனிடம் இருந்து வரும் அறிவுரையை ஏற்க மறுத்ததால் இறைமக்களின் சாபத்திற்கு ஆளாவோம் என்பதை எடுத்துரைக்கிறது.
* இரண்டாம் வாசக பின்னணி கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் மனித சமுதாயமும் கிறிஸ்துவால் ஒன்றிணைக்கப்பட வேண்டும்.
* தாழ்ந்தவர் உயர்ந்தவர் என்ற நிலையிலிருந்து: மனமாறி கடவுளின் மீட்பை கண்டடைய வேண்டும்.
* மறையுரைசிந்தனை நிலையற்ற பொருளுக்காக உறவை உதாசீனப்படுத்தாதீர்.
* நம் கடவுளை நாம் தேடி அலையவில்லை மாறாக: அவரே நம்மை தேடி வந்தார். ஆவிக்குரிய ஆசி ( எபேசியர் 1:3) வலப்பக்கம் அமரும்
மேலான கொடையை தருபவர் (எபே 1:20. 2-6) கிறிஸ்து வழியாக நமக்கு அருளப்படும் அன்பு கிறிஸ்துவின் அன்பின் வழி எபே 1:5-6
பாவத்திலிருந்து விடுதலை (எபே 1:7).
வியத்தகு மாற்றங்கள்
பழைய பொருள்கள் விற்கக்கூடிய கடை ஒன்றில் வயலின் ஒன்று நெடுநாள்களாகக் கிடந்தது. அதை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்பதற்காக கடை உரிமையாளர் அதன் விலையைக் குறைத்துக்கொண்டே வந்தார். அதை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. ஒரு கட்டத்தில் அதை யாராவது ஒருவருக்கு இலவசமாகக் கொடுத்துவிடவும் நினைத்தார். ‘இதை வைத்து அடுப்புதான் எரிக்க முடியும்’ என்று பலர் அதை வாங்குவதைத் தவிர்த்தனர். ஒருநாள் வயலின் இசைக்கலைஞர் ஒருவர் அவ்வழியே செல்ல நேரிட்டது. கடையில் ஓரமாகக் கிடந்த வயலின் அவருடைய பார்வையை ஈர்த்தது. ‘இதை நான் பார்க்கலாமா?’ எனக் கேட்ட அவர், அங்கிருந்த பழைய துணியால் அதை நன்றாகத் துடைத்து, அறுந்துபோன கம்பிகளை இழுத்துக் கட்டி, அந்த வயலினை மீட்டத் தொடங்குகின்றார். வயலின் இசை கேட்ட மக்கள் அப்படியே மெய்மறந்து நிற்கின்றனர். சிறிது நேரம் மீட்டிய அவர் அதை அங்கேயே வைத்துவிட்டுத் தன் வழியே தொடர்கின்றார். ‘இந்த வயலின் எனக்கு வேண்டும்’ என்று ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக் கொண்டு அதை வாங்க விரும்புகின்றனர். உரிமையாளரோ அதைத் தனக்கென வைத்துக்கொள்ள விரும்புகிறார்.
நிற்க.
அடுப்பெரிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்று சொல்லப்பட்ட வயலின் வியத்தகு இசை எழுப்பும் இசைக்கருவியாக மாறியது எப்படி? இசைக்கலைஞனின் தொடுதல் அதன் மதிப்பை மாற்றுகிறது.
இறைவனின் தொடுதல் மனிதரில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது எனச் சொல்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
இன்றைய முதல் வாசகத்தை அதன் வரலாற்றுப் பின்னணியில் காண்போம். சாலமோனுக்குப் பிறகு ஒருங்கிணைந்து இஸ்ரயேல் பேரரசு, வடக்கே ‘இஸ்ரேல்,’ தெற்கே ‘யூதா’ என்று இரண்டாக உடைகின்றது. வடக்கே இருந்த பல முதன்மையான வழிபாட்டுத் தலங்களில் பெத்தேலும் ஒன்று. குலமுதுவர் யாக்கோபின் காலத்திலிருந்து பெத்தேல் ஒரு வழிபாட்டுத் தலமாக இருந்துவந்தது.
வடக்கே நிலவிய உடன்படிக்கைப் பிறழ்வுகளையும், கடவுளின் திருச்சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளையும் கண்டிக்கவும், வடக்கே உள்ள அரசர்களையும் தலைவர்களையும் எச்சரிக்கவும் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் ஆமோஸை அனுப்புகின்றார். ஆமோஸ் தெற்கே உள்ள யூதாவைச் சார்ந்தவர். அவருடைய சமகாலத்தவரான ஓசேயா போல அன்று நிலவிய சமூக அநீதியையும் பிறழ்வுகளையும் கண்டிக்கின்றார் ஆமோஸ். தெற்கே இருந்த வந்த ஒருவன் நமக்கு அறிவுரை சொல்வதா என்று நினைக்கின்றனர் வடக்கே உள்ள தலைவர்கள்.
இந்தப் பின்புலத்தில் பெத்தேலின் தலைமைக்குருவான அமட்சியாவுக்கும் ஆண்டவராகிய கடவுளின் இறைவாக்கினரான ஆமோஸூக்கும் இடையே ஏற்படும் முரண்தான் இன்றைய முதல் வாசகம். பெத்தேலின் தலைமைக்குரு என்ற நிலையில் அமட்சியா அதிகாரம் பெற்றிருந்தவராகவும், வடக்கே உள்ள அரசர்களின் ஆலோசகராகவும் இருந்தார். அரச அலுவலர் என்ற அடிப்படையிலும் அதிகாரம் பெற்றிருந்தார். அரசரின் எண்ணங்களை நிறைவேற்றுவதும், அரசருடைய பெயரால் அவ்வழிபாட்டுத் தலத்தை நிர்வாகம் செய்வதும் அவருடைய பணியாக இருந்தது.
ஆனால், அமட்சியாவுடன் ஒப்பிடும் போது ஆமோஸ் ஆடு மேய்ப்பவர், தோட்டக்காரர். இறைவாக்கினர் பணி அல்லது இறைவாக்கினர் குடும்பப் பின்புலம் என்ற எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை. ஆனால், அவருடைய இறைவாக்கினர் அதிகாரத்தின் ஊற்றாக இருந்தது கடவுளின் அழைப்பு. ஆமோஸ் தன் நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என அரசரின் அதிகாரத்தின் பெயரால் ஆணையிடுகின்றார் அமட்சியா. ஆனால், ஆமோஸ் தன் அதிகாரம் தன்னுடையது அல்லது இறைவனுடையது எனத் துணிந்து நிற்கின்றார். மேலும், ஆமோஸ் இறைவாக்கினரின் பணியின் உண்மைத்தன்மையை விளக்குவதாகவும் இப்பகுதி உள்ளது. கடவுளின் குறுக்கீடு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரை அரசருக்குச் சவால்விடும் இறைவாக்கினராக மாற்றுகிறது. ஆற்றல் இல்லாத ஒருவரை ஆற்றல்படுத்துகின்றது.
ஆக, இறைவனின் தொடுதல் வியத்தகு மாற்றத்தை ஆமோஸ் வாழ்வில் ஏற்படுத்துகிறது.
இரண்டாம் வாசகம் எபேசியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற கடிதங்களைப் போல இக்கடிதம் வாழ்த்து மற்றும் முன்னுரையுடன் தொடங்குவதில்லை. இதன் ஆசிரியர், இறைவனை நோக்கி எழுப்பப்படும் புகழாஞ்சலி போல இக்கடிதத்தைத் தொடங்குகின்றார். நம்பிக்கையாளர்கள்மேல் ‘கடவுள் பொழிந்துள்ள விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி’ அனைத்தையும் அவர் அறிந்து ஏற்றுக்கொள்கின்றார்.
‘தூயோராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்’ எனச் சொல்கின்றார் ஆசிரியர். ஆக, நம்பிக்கையாளர்கள் தூய்மையாகவும் மாசற்றும் இருந்ததால் கடவுள் அவர்களைத் தேர்ந்துகொள்ளவில்லை. மாறாக, அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் தூய்மையான மற்றும் மாசற்ற நிலையில் அவர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களைத் தேர்ந்துகொள்கின்றார். இந்த நோக்கம் கிறிஸ்து வழியாக நிறைவேறுகிறது. கிறிஸ்துவே தன் இரத்தத்தால் அவர்களை மீட்டுத் தூய்மைப்படுத்துகின்றார். கிறிஸ்துவின் வழியாகக் கடவுளோடு ஒப்புரவான அவர்கள் மேன்மையான எதிர்காலத்தைப் பெறுகின்றனர்.
இரண்டாவதாக, கிறிஸ்து வழியாக அனைத்தும் ஒன்றுசேர்க்கப்பட வேண்டும் என்பது இறைவனின் திருவுளம் என எழுதுகின்றார். ஆக, நம்பிக்கையாளர்கள் வழியாக இறைவனின் திருவுளம் நிறைவேறுகிறது. இறைவனின் மீட்புத் திட்டத்தில் நம்பிக்கையாளர்கள் முதன்மையான பங்காற்றுகின்றனர்.
இறுதியாக, இந்த அழைப்பு அல்லது மேன்மையான நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றார் ஆசிரியர். வேற்று தெய்வங்களை வணங்கி, தாழ்வான வாழ்க்கை நிலையில் இருந்த மக்கள் இப்போது தூய ஆவியால் முத்திரையிடப்பட்டவர்களாக இருக்கின்றனர். ‘முத்திரையிடப்படுதல்’ என்பது முதன்மையாக தெரிவுசெய்யப்படுதலைக் குறிக்கிறது. அதாவது, அவர்கள் எல்லாரையும் போன்றவர்கள் அல்லது முகமற்றவர்கள் அல்லர். மாறாக, தங்களுக்கென ஒரு மேன்மையான அடையாளத்தைக் கொண்டிருந்தவர்கள். இந்த மேன்மை இறைவனின் அழைப்பால் வருகின்றது.
ஆக, கிறிஸ்துவின் ஒப்புரவுச் செயல் வழியாக புறவினத்து மக்களையும் தன்னோடு ஒப்புரவாக்கிக்கொள்கின்ற கடவுள், நம்பிக்கையாளர்களுக்கு முத்திரையிடப்பட்டவர்கள் என்ற மேன்மையை வழங்குகின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகம், திருத்தூதர்கள் வாழ்வில் நிகழ்ந்த வியத்தகு மாற்றத்தை நம் கண்முன் கொண்டுவருகின்றது. மாற்கு நற்செய்தியின் இப்பகுதி வரை இயேசுவே நற்செய்தியைப் போதித்துக்கொண்டும், பிணிகளை நீக்கிக்கொண்டும், பேய்களை ஓட்டிக்கொண்டும் இருந்தார். ஆனால், இதுமுதல் அவருடைய சீடர்கள் அப்பணிகளைச் செய்வர். கலிலேயப் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்துகொண்டும், வரி வாங்கிக்கொண்டும், அல்லது தீவிரவாதிகளாகவும் இருந்தவர்களை தான் செய்த அனைத்துப் பணிகளையும் செய்யுமாறு ஆற்றல்படுத்துகின்றார். கடவுளின் ஆற்றல் இவ்வுலகில் செயல்படுகிறது என்பதற்கு அடையாளமாக அவர்கள் பேய்களை ஓட்ட வேண்டும். தங்களுடைய வாழ்வாதாரங்களாக இருக்கின்ற அனைத்தையும் விலக்கிவைத்துவிட்டு இறைவனின் பராமரிப்பை மட்டும் நம்பி அவர்கள் பயணம் செய்ய வேண்டும். அவரைப் போலவே அவர்கள் நிராகரிக்கப்பட்டாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். புறவினத்துப் பகுதிகளுக்குப் பயணம் செய்கின்ற யூதர்கள் புறவினத்து நகரங்களை விட்டு வெளியேறும்போது, தங்கள் கால்களில் ஒட்டியுள்ள தூசியை உதறிவிட்டுத்தான் தங்கள் ஊருக்குள் நுழைவர்.
இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுச் சென்றவர்கள் போதிக்கின்றனர், பேய்களை ஓட்டுகின்றனர், பிணிகளை நீக்குகின்றனர்.
சாதாரண மனிதர்களாக இருந்த திருத்தூதர்கள் இயேசுவின் அதிகாரத்தால் வியத்தகு ஆற்றல் பெற்றவர்களாக மாறுகின்றனர்.
ஆக, இன்றைய இறைவார்த்தை வழிபாடு, இறைவனின் தொடுதல் அல்லது அதிகாரம் சாதாரண மனிதர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் வியத்தகு மாற்றங்களை நம் கண்முன் கொண்டுவருகின்றது. தெக்கோவா நகரத்தின் ஆடு மேய்ப்பவர் இஸ்ரயேலின் இறைவாக்கினராக மாறுகின்றார். சிலைவழிபாட்டிலும் அறநெறிப் பிறழ்விலும் கிடந்த எபேசு நகர மக்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் மாறுகின்றனர். கலிலேய மீனவர்களும் பாவிகள் எனக் கருதப்பட்டவர்களும் இறைவன் மட்டுமே செய்யக்கூடிய நலம் தரும் பணியையும், தீமை அகற்றும் பணியையும் செய்கின்றனர்.
இறைவனின் தொடுதல் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை நாம் விவிலியத்தின் பல இடங்களில் வாசிக்கின்றோம். தன் மாமனாரின் மந்தையைப் பராமரித்து வந்த மோசே மிகப்பெரும் தலைவராக மாறுகின்றார். சக்கேயு அனைத்தையும் இழக்க முன்வருகின்றார். சமாரியப் பெண் முதன்மையான நற்செய்திப் பணியாளர் ஆகின்றார்.
இறைவன் நம் வாழ்வில் எப்படி வியத்தகு மாற்றங்களை நிகழ்த்துகிறார்?
(அ) நம் வாழ்க்கைப் பாதையை மாற்றுவதன் வழியாக
ஆடுமேய்க்கும் பணி செய்துகொண்டிருந்த ஆமோஸின் வாழ்க்கைப் பாதையை மாற்றி வடக்கே இஸ்ரயேலுக்கு இறைவாக்கினராக அனுப்புகின்றார் கடவுள். ஆசிரியப் பணி செய்ய வந்த அன்னை தெரசாவின் பாதையை மாற்றுகின்றார். பேராசிரியப் பணி செய்துகொண்டிருந்த சவேரியாரின் பாதை மாற்றப்படுகிறது. போரில் குண்டடிபட்டுக் கிடந்த இனிகோவின் பாதை மாறுகிறது. ஆக, பாதை தவறுவதில் அல்ல, மாறாக, பாதை மாறுவதில் நாம் இறைவனின் அருள்கரத்தைக் காண்கிறோம்.
(ஆ) புதிய நோக்கு அல்லது இலக்கை நிர்ணயம் செய்வதன் வழியாக
எபேசு நகர மக்களின் வாழ்வியல் நோக்கு அல்லது இலக்கை மாற்றுகின்றார் கடவுள். தங்கள் சிலைகளின்மேல் இருந்த பார்வையை அவர்கள் இனி இயேசுவின் சிலுவை நோக்கித் திருப்ப வேண்டும். நம் வாழ்வின் நோக்கங்களையும் இலக்குகளையும் சில நேரங்களில் இறைவனின் திருப்புகின்றார், அல்லது கூர்மைப்படுத்துகின்றார்.
(இ) நம்மை வெறுமையாக்குவதன் வழியாக
உணவு, பை, செப்புக்காசு, உடை போன்றவற்றால் தங்கள் கைகளை நிரப்பிக்கொண்டனர் திருத்தூதர்கள். வெறுமையான கைகளே இறைவனின் அருளை நிறைவாகக் கொள்ள முடியும் என்பதற்காக, அவர்களின் நிறைந்த கைகளை வெறுமையாக்குமாறு பணிக்கின்றார். ‘இது ஏன் இன்று நம்மை விட்டுப் போனது?’ என்று நாம் எதையாவது குறித்து ஏங்கி, வெறுமையை உணர்கின்றோம் என்றால், கடவுள் அதைவிட மேன்மையான ஒன்றை நம் கைகளில் கொடுக்கப்போகிறார் என்பது பொருள். ஒரே கையில் செப்புக்காசையும் இறைவனின் அருளையும் பெற்றுக்கொள்ள இயலாது என்பது இயேசுவின் போதனை.
இறுதியாக,
இன்று நாம் பலருடைய வாழ்வில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டுவருகிறோம். பெற்றோர் பிள்ளைகளின் வாழ்வில் மாற்றம் கொண்டுவருகின்றனர். ஆசிரியருடைய உடனிருப்பு மாணவரின் அறிவைப் பெருக்குகிறது. அருள்பணியாளரின் உடனிருப்பு இறைமக்களின் ஆன்மிக மாற்றத்திற்கு உதவுகிறது. மருத்துவரின் இருத்தல் நோய் நீக்குகிறது. இவை அனைத்திற்கும் மேலாக இறைவனின் உடனிருப்பும் தொடுதலும் நம்மை முழுமையாகப் புரட்டிப்போட்டு, வியத்தகு மாற்றத்தைக் கொண்டுவருகிறது.
நாம் பாதை மாறத் தயாராக இருக்கும்போதும், நம் இலக்கு மற்றும் நோக்கைக் கூர்மைப்படுத்தும்போதும், நம் கைகளை வெறுமையாக்கும்போதும் அவரின் தொடுதலை உணர முடியும்.
‘ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்!’ என்னும் திருப்பாடல் ஆசிரியரின் (காண். திபா 85) விண்ணப்பமே நம் விண்ணப்பமாகவும் இருப்பதாக!
கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை உணர்கிறோமா!
ஒரு கல்லூரியில் ஏற்கனவே மாணவர்களுக்கான தலைவன் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பிலுள்ள நிலையில் கல்லூரி முதல்வர் திடீரென மாணவர் தலைவருக்கான தேர்தலை இடையிலே அறிவித்தார். தலைவராக இருக்கும் அம்மாணவ இளைஞனுக்கு பயங்கரமான கோபம். அதனால் அவர் கல்லூரி முதல்வரை சந்திக்கச் சென்றார். அவரிடம் தான் ஏற்கனவே மாணவர் தலைவராக இருப்பதாகவும் தனக்கான காலம் முடியவில்லை எனவும் தேர்தல் நடத்துவது தவறு என்று வாதாடவும் சண்டையிடவும் தொடங்கினான். அமைதியாக இருந்த கல்லூரி முதல்வர் ஒரே ஒரு கேள்வி கேட்டார். "இப்போதாவது நீ கல்லூரி மாணவர் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதை உணர்கிறாயா? என்ற கேள்விதான் அது. அக்கேள்வியை கேட்ட போது அம்மாணவன் இத்தனை நாள் தான் மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையையே மறந்து தான்தோன்றி தனமாக வாழ்ந்து தன் நாட்களை வீணாக்கி பொறுப்புகளை தட்டிக்கழித்ததை உணர்ந்தான். அமைதியாக கல்லூரி முதல்வர் அறையிலிருந்து தலை குனிந்தவாறே வெளியேறினான்
.
அன்புக்குரியவர்களே நாம் அனைவரும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஒவ்வொருவரையும் அவர் ஒவ்வொரு காரியத்திற்காக தனிப்பட்ட விதத்தில் தேர்ந்தெடுத்துள்ளார் . மேலும் நம் அனைவரையும் அவர் பிள்ளைகளாக தூயோர்களாக வாழ உலகம் தோன்றும் முன்பே முன்குறித்து வைத்துள்ளார். இதை நாம் பல முறை உணரத் தவறுகிறோம். தேர்ந்து கொள்ளப்பட்ட நிலையை உணராததால் அதற்கான நோக்கத்தை நிறைவேற்றவும் தயங்குகிறோம் என்பதே உண்மை. இத்தகைய நிலையை நாம் மாற்றவே இன்று அழைக்கப்படுகிறோம். இதனால் நமது வாழ்வின் நோக்கமும் இறைசித்தமும் நம் வாழ்வில் நிறைவேறுவதோடு பலருக்கும் நன்மை உண்டாகிறது
.
இதற்கு இரண்டு உதாரணங்களை இன்றைய வாசகங்கள் தருகின்றன. முதலாவதாக ஆமோஸ் இறைவாக்கினர். தங்களுடைய நாட்டில் இறைவாக்கு உரைக்கக்கூடாது என்று சொன்னவரிடம் இறைவாக்கினர் வழிமரபில்லாத சாதாரண ஆடுமேய்க்கும் தன்னை ஆண்டவர் இறைவாக்குரைக்க தேர்ந்துள்ளார் என்று துணிச்சலோடுகூறி இறைத்தேர்வு தம் வாழ்வில் இருப்பதை உணர்ந்தவராய் நிற்கிறார்.
இரண்டாவதாக
நற்செய்தியில் இயேசுவால் தேர்ந்துகொள்ளப்பட்ட சீடர்கள் தங்கள் அழைப்பை உணர்ந்தவர்களாய் இயேசு சொன்னபடி நற்செய்தி பணிபுரிகிறார்கள்.கடவுளுக்கு மகிமையையும் பிறருக்கு நன்மையையும் சேர்க்கிறார்கள்.
நம்மையும் இறைவன் தேர்ந்துள்ளார். அவர் பிள்ளைகளாக வாழ ....அவர் சீடர்களாக வாழ ....சிலரை அருட்பணிபுரிய ....பலரை நம்பிக்கையுள்ள குடும்பங்களாக வாழ ...நற்செயல் புரிய ....அன்பு செய்ய ...
எனவே
நம் வாழ்வில் இறைத்தேர்வை உணர்வோம். இறைவன் நம்மை தேர்ந்து கொண்டதற்காகக நோக்கத்தையும் நிறைவேற்ற முயல்
வோம்.
இறைவேண்டல்
இறைவா! நீர் எம்மை தேர்ந்து கொண்டுள்ளீர் என உணர வரம் தாரும். ஆமென்.
பொதுக்காலம் 15-ஆம் ஞாயிறு
முதல் வாசகப் பின்னணி (ஆமோ. 7:12-15)
இறைவாக்கினர் ஆமோஸ் தெற்கே உள்ள யூதா நாட்டைச் சார்ந்தவர். ஆயினும் கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்து வடக்கே உள்ள இஸ்ராயேலுக்கு இறைவாக்கு உரைக்க செல்கின்றார். அங்கே அம்மக்களுக்கு எதிராக அவர்களின் செயல்களுக்கு எதிராக ஆண்டவரின் வாக்கை தெரிவிக்கின்றார். ஏனெனில் இஸ்ராயேல் நாடு செழிப்பற்று இருப்பினும் அதனை ஒரு சில செல்வந்தர்கள் வலியவர்கள் மட்டுமே அனுபவித்து ஏழைகளை எளியவர்களை 'நசுக்கினர். எளியோரை வாட்டும் அநீதி கண்டு கலகம். அடைகிறார். ஒரே இனம் ஒரே மக்கள் கொண்ட சூழ்நிலையிலும் தங்கள் சகமனிதனை கசக்கி பிழியும் நிலை கண்டு ஆண்டவர் ஆமோசை அவர்களுக்கெதிராக அனுப்புகிறார். ஆமோஸ் பெத்தேலின் குருவான அமட்சியாவுக்கு எதிராக வாக்குரைப்பது தான் இன்றைய வாசகம். இறைவனிடமிருந்து வரும் அறிவுரையை ஏற்க மறுத்தால் இறைவாக்கினரின் சாபத்திற்கு ஆளாவோம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
இரண்டாம் வாசகப் பின்னணி (எபே. 1:3-14)
கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும் மனித சமுதாயமும் கிறிஸ்துவால் ஒன்றிணைக்கப்பட வேண்டும். யூதர்கள் என்றும் புறவினத்தார் அதாவது யூதரல்லாத மக்கள் என்றும் தனித்தனியே அல்லாமல் கிறிஸ்து என்ற கடவுளின் மறைபொருளில் ஓற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்ற கருத்தைத் தூய பவுல் விளக்குகிறார்.
இம்மானிட சமுதாயத்தை பிளவுகளிலிருந்தும், வேற்றுமையிலிருந்தும், ஏற்றத் தாழ்வுகளிலிருந்தும் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை, முதலாளி அல்லது ஆளும்வர்க்கம், தொழிலாளி, உழைக்கும் வர்க்கம் என்ற ஏற்றத்தாழ்வில்லாமல் அனைவருமே, கிறிஸ்து இயேசுவுக்குள் இணைய வேண்டும். ஆதியிலே பாவத்தில் பிளவுபட்ட மனிதர்கள், உயிரினங்கள் யாவும் கடவுளின் மீட்பத்திட்டத்தில் ஒரு பங்கு வகிக்கின்றன என இவ்வாசகம் விளக்குகிறது.
நற்செய்தி வாசகப் பின்னணி (மாற்கு 67-13)
இறைமகன் இயேசுவின் மீட்புத்திட்டம் யூதர்களுக்கு மட்டுமல்ல உலகின் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். இறையாட்சியில் உரிமைக் குடிமக்களாக நாம் தகுதி பெற வேண்டுமெனில் இயேசு கிறிஸ்துவின் செயல்திட்டத்திற்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். மெசியா ஒரு குறிபிட்ட இனத்துக்கும் சொந்தமானவர் என்ற யூதர்களின் பாரம்பரியத்தை கேள்விக்கு உள்ளாக்கினார் மாற்கு நற்செய்தியாளர். எனவே தனது மீட்புப் பணி பிற இனத்தவரையும் சென்று சேர வேண்டும். ஆகவே தான் தனது சீடர்களை இருவர் இருவராக பிரித்து அனுப்புகிறார் இயேசு. மீட்பர் இயேசுவின் செய்தியாக நம் உள்ளங்களில் ஏற்கப்பட வேண்டும். அதற்கு நம் இதயம் திறக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது இவ்வாசகம்.
மறையுரை
பொருள் கொண்டு வாழ்ந்தால் கூடிவரும் சொந்தம் கோடி. வாழ வழியில்லாமல் தவிக்கும் நேரம் வந்தால் ஓடிவிடும் உறவும் கோடி. இதுதான் இன்றைய உலகின் உறவுநியதி. நிலையற்ற பொருளுக்காக உறவையும் நிறைபெற்றதாக்கிக் கொண்டதால் நாம்தான். ஆனால், பொன்னோ, பொருளோ, செல்வமோ, பணமோ கொடுக்காத ஏன் மனித அறிவே கூட தராத அமைதி, இன்பம், மகிழ்ச்சியை இறைவன் தனது மகன் வழியாக நம்மைத் தேடி வந்து அருள்கிறார். ஏசுவோ உலகின் எல்லா மக்களும் தனது மீட்பை அடைய வேண்டும் என விரும்பி தனது சீடர்களை மக்களைத் தேடி அனுப்புகிறார்.
நம் கடவுளை நாம் தேடி அலையவில்லை. மாறாக அவரே நம்மை தேடி வந்தார். அதுதான் அவரின் அன்பு. ஆனால் தேடி வந்த இறையன்பை நாம் ஏற்றுக் கொண்டோமா? என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்வு முறையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முதல் வாசகத்தில் பார்க்கிறோம் இறைவாக்கினரின் செய்தியைப் புறக்கணித்த செல்வந்தர்கள், ஓடுக்கியவர்கள் ஆணவம் பிடித்த ஆட்சியாளர்கள் ஆகியோர் அனைவரும் சபிக்கப்படுகின்றனர். இன்னும் பல்வேறு மனிதர்கள் வழியாகவும் இயற்கை வழியாகவும் இறைவனின் செய்தி வெளிப்படுகின்றது.
- இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு மக்கள் மடிந்து போவதும் நாம் இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்கு பதிலாக, அதனை துன்புறுத்தியுள்ளோம் என்பதும் செய்திதான்.
- வானம் பொழியவில்லை. பூமி தன் பலனைத் தரவில்லை. காரணம் மனிதர்கள் நம்மால் தான். அதுவும் இயற்கையை அழிக்கக் கூடாது என்ற செய்தி தான்.
- ஒரு மனிதன் தவறு செய்து தண்டனை அனுபவிக்கத்தான் என்றால் அந்தத் தவறை மற்றவர்கள் செய்யக் கூடாது என்பதும் செய்திதான்.
ஆனால் நம்மை தேடி வந்ததை ஏற்றுக் கொள்ள தயங்குவது ஏன்? காரணம் நம்மில் நிலையற்றவற்றின் மீதுள்ள ஆர்வம் ஆசைதான். இதையெல்லாம் விடுத்து கடவுள் தன் பக்கம் அழைக்கிறார் தனது சீடர்கள் வழியாக! அவர் அழைப்புக்கு நாம் செவி சாய்த்தால் என்ன கிடைக்கும் என்பதைத் தான் தூய பவுல் விளக்குகிறார்.
1) முதல் கொடை: ஆவிக்குரிய ஆசீர் (எபே. 1:3)
- தேடிவந்த கடவுளாம் இயேசுவின் அன்புக்கு செவிசாய்த்தால் நமக்கு விண்ணகம் சார்ந்த ஆவிக்குரிய வல்லமை அனைத்தும் அருளப்படும். என்னென்ன விண்ணகக் கொடைகள்?
- பலவகையான தீமைகளின் பிறப்பிற்குக் காரணமாக அவர். அன்பை உதறிய குற்றங்களின் காரணமாக இறந்து போன. வாழ்வு வாழ்ந்த நாம் கிறிஸ்துவின் அன்பின் மூலம் நம்மை. மீட்டுக் கொண்டார் கடவுள். அதே அருள் தான் கிறிஸ்துவாம் நாம் உயிர்தெழவும் விண்ணுலகில் அஹின் வலப்பக்கம் அமரும். மேலான கொடையும் தருகிறார் (எபே. 1:20.2:6).
- கிறிஸ்து இயேசுவின் வழியாக நமக்கு அருளப்பட்ட அன்பும், கொடையும் ஞானமும் பல வகைகளில் வெளிப்படுகின்றது. ஒவ்வொருவருக்கும் ஒருதனிக்கொடை இருக்கும். அந்த ஞானமானது, ஆட்சிப்புரிவோர், அதிகாரம் செலுத்தும் விண்ணுலகோர் ஆகியோருக்கு திருச்சபை வழியாக வெளிப்படும் (எபே. 3:10).
- கடவுளின் வல்லமை மிகுந்த ஆற்றல் பெற்ற நாம், மனிதர்களின் அந்த செயல்களை மட்டுமல்ல, அடக்கி ஆளும் ஆட்சி செலுத்துவோர், ஆணவப் போக்கால் அதிகாரம் செலுத்துவோர். ஆகியோருக்கு எதிராக மட்டுமல்ல மாறாக வான்வெளியில் தீய ஆவிகள் அனைத்தோடும் போராடும் வல்லமையை பெறுகிறோம் (எபே. 6:12).
இவ்வாறு கடவுளின் வல்லமை நம்மில் கிறஸ்துவோடு சேர்ந்து உயிர்த்து, அவர்களின் வலப்பக்கம் அமர, தீய ஆவிகளோடு எதிர்த்து போராட வல்லமைப் பெற நமக்கு என்ன தகுதி இருக்கிறது. கண்டிப்பாக அது தான் சக்தியால் அல்ல. “அவர் நம்மை தேர்ந்து கொண்டதால் தான்.” அவின் அன்பு மகன் கிறிஸ்துவோடு இணைந்து நம்மையும் அன்பின் வழியாய் தேர்ந்து கொண்டார். காரணம் நாம் தூயவர்களாக இருக்க வேண்டும் என்பது தான். (உரோ, 11:28; கொலோ. 3:12; 1தெச. 1:4; 2தெச. 2:13) ஆகியவை நாம் கடவுளின் அன்பால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பதை விளக்குகிறது. அப்படியெனில் பிறமக்களுக்கும், கிறிஸ்தவர்களாகிய நமக்கும் வாழ்வின் நடைமுறைகளில் வித்தியாசம் வேண்டாமா? பிறமக்கள் குறி கேட்கசென்றால் நாமும் செல்கிறோம். தெருக் குழாயில் சண்டை வந்தால் நாம் தான் முதலில் கெட்டவார்த்தை போட்டு திட்டுகிறோம். அண்ணன் தம்பி பிரச்சனையில் நாம்விட்டு கொடுப்பதில்லை. பிற மக்கள் இதனைப் பார்த்தால் ஏளனம் செய்வதில் தவறில்லை. தூய ஆவியின் வழியாக நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ள அன்பு (உரோ, 5:5) என்ன ஆனது?
2) 2-ஆம் கொடை: கிறிஸ்துவின் அன்பின்வழி (எபே 1:5-6)
இவ்வளவு நாளும் நாம் ஆலயம் தேடிவருகிறோம் என்றால் அதற்கு காரணம் தந்தை நமக்கு கொடுத்த கிறிஸ்துவின் அன்பு. கிறிஸ்துவின் அன்பின் வழியாகத்தான் நாம் அவரால் தேர்ந்து கொள்ளப்பட்டோம் என்பது நமக்கு தெரியும். அவர் தேர்ந்து கொண்டதன் காரணம் என்ன? உரோ. 8:29 தூய பவுல் கூறுகிறார். “தம்மால் முன்பே தோந்து கொள்ளப்பட்டவர்கள் தம் மகனின் சாயலுக்கு ஏந்றவாறு இருக்க வேண்டுமென கடவுள் முன் குறித்து வைத்தார்.” நாம் கிறிஸ்துவின் சாயல் என்றால் கண்ணுக்கு தோன்றும் உருவத்தில் மட்டுமல்ல, மாறாக அவரைப்போல் தூய்மையாக, புனிதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நமக்கு கிறிஸ்துவின் அன்பு என்ற கொடையை தந்துள்ளார்.
3) 3-ஆம் கொடை: பாவத்திலிருந்து விடுதலை (எபே. 1:7)
கிறிஸ்து இயேசு நம்மையெல்லாம் அவரின் இறப்பால் பாவங்கள் அனைத்திலிருந்தும் மீட்டு கொண்டார். நம் பாவங்களை அவர் சுமந்து அனைவருக்காகவும் இறந்தார். அவர் பிறப்பின் மூலமே நாம் வாழ்வு பெற்றோம். எனவே இறைவனின் அன்றாட குரலுக்கு செவிசாய்த்தால் மட்டுமே நம் துன்பக் கிண்ணம் நம்மை விட்டு அகலும். வேகமாக வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பத்தினால் கடவுளைவிட்டு மனிதன் தனியே பிரிந்து செல்லும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. பாவ மன்னிப்பு என்பது மறக்கப்பட்ட கொண்டிருக்கிற அருள் சாதனம் ஆகிவிட்டது பாவ மன்னிப்பினால் வரும் மன அமைதியை கடவுள் ஒருவரால் மட்டுமே தரமுடியும்.
4) 4-ஆவது கொடை: திருவுளத் தின் மறைபொருள் வெளிப்படூதல் (எபே. 1:9)
இறைவனின் திருவுளத்தை அறிய மனிதரால் முடியுமா? அவருடைய எண்ணங்களையும், சிந்தனைகளையும், திட்டங்களையும் அறிந்து கொள்ள முடியுமாயின் நாமும் அவருக்கு இணையாக அல்லவா இருக்க வேண்டும்! தூய பவுல் செல்கிறார் அந்த மறைபொருள் வெளிப்படூத்தப்பட்டு உள்ளது. நாமாக நம் அறிவுத்திறன் கொண்டு அறிய இயலாது ஆனால் கடவுள் அதை வெளிப்படுத்துகிறார். அந்த மறைபெருள் இது தான் “கால நிறைவில் விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்” (எபே. 1:10).
கடவுள் நம் அனைவருக்குமே சொந்தமானவர். இதில் எந்த பாகுபாடும் இருக்க கூடாது அவன் தாழ்ந்தவன், அவன் அந்த தவறு செய்தான் அதனால் ௮வன் அப்படிப்பட்டவன் தான், இவன் கீழ் வகுப்பைச் சார்ந்தவன், பொருளாதாரத்தில் குறைந்தவன் என்ற பாகுபாடுகள் நம் மனதிலும் உள்ளவை தானே! ஆனால் கடவுள் யாரையும் ஒதுக்க வில்லை. எபே. 3:2-3-இல் பவுல், அந்த மறைபொருள் எனக்கும் கொடுக்கப்பட்டூள்ளது என்று சொல்லி யூதரல்லாத பிற இனத்தவர்க்கும் நற்செய்தி அறிவிக்கிறார். ஏனெனில் யூதர்கள் மெசியா தங்கள் இனத்துக்கு மட்டும் தான் என்று எண்ணி மற்றவர்களை ஒதுக்கினர். இயேசு பிறந்தது முதல் இறப்பு வரை, தான் எல்லாருக்குமே சொந்தம் என வெளிப்படுத்தியுள்ளார். மூன்று ஞானிகள் அவரை சந்திக்க கீழ்திசை நாடுகளிலிருந்து வருகின்றனர். கீழ்திசை என்றால் புறவினத்தார், யூதரல்லாதவர், போன்றவர்கள் வாழும் பகுதி ஆனால் இயேசு அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார். எனவே அனைவரும் திருச்சபையில் ஒன்றாய் இருப்பது தான் கடவுளின் திருவுளம். கொலோ 1:19-20-இல் பார்க்கிறோம், “தம் முழு நிறைவு அவரில் குடி கொள்ள கடவுள் திருவுளம் கொண்டார்”. எனவே சுருக்கமாக சொன்னால் உயிர்வாழும் அனைவருமே கடவுள் முன் ஒன்றாயிருப்பதுதான்.
5) 5-ஆவது கொடை: நாம் அவரது உரிமை பேற்றுக்கு உரியவர்கள் (எயே. 14-11)
கடவுள் கிறிஸ்து வழியாக நம்மை தேர்ந்து கொண்டதால் நாம் அவருக்கு சொந்த பிள்ளைகளாக. இவ்வுலகில் இருந்தாலும், அது இவ்வுலக வர்ழ்வின் மதிப்பீடுகளை கொண்டதல்ல. மாறாக. கடவுள் தன்மை கொண்டது. “அப்பனுக்கு பிள்ளை தப்பாமால் பிறந்துள்ளான்” என சொல்வார்கள் அது கிறிஸ்தவர்கள் நமக்கும் பொருந்தும், காரணம், கடவுள் தந்தை என்றால், அவரது குணநலன்கள் நம்மிலும் இருக்கிறது. நாம் அவருக்கு மட்டுமே உரியவர்கள். பவுல் ஒரு யூதனாக இருந்தும் “நாம்” என்று சொல்லும் போது, அது யூதரையும், புறவினத்தாரையும் ஒன்றிணைக்கும் சொல்லாக இருக்கிறது.
6) ஆறாவது கொடை: கடவுளின் மாட்சியை புகழ்ந்து பாட அழைப்பு (எபே. 1:12)
மேற்சொன்ன அனைத்து அருள் கொடைகளும் கடவுள் தந்த பரிசு. தூய ஆவியின் வழியாய் நாம் பெற்றுக் கொண்ட அழியாத கொடை அத்தகைய பரிசு தந்தின் மாட்சியை பிறரோடு நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நமக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. சாதாரணமாக மேடையில் பேச யாரை அழைப்போம்? தகுதியுள்ள, திறமையுள்ள ஒரு பேருள்ளாரை அழைப்போம். காரணம் அவரிடம் செய்தி இருக்கிறது. கடவுள் நம்மையும் அழைக்கிறார் என்றால் நமக்குள்ளும் அவரது கொடை உள்ளது. அதனை பகிர்ந்து அவருக்காக சாட்சி வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார் நாம் தயாரா? நாம் ஒரு செயலில் வெற்றிக் கண்டால் “நான் தான் அதற்கு காரணம் என்முயந்சி இல்லை எனில் வெற்றி இல்லை. நான் தான் செய்தேன். யாரும் உதவ வில்லை.” என கூறுகிறோம். அது மனித இயல்பு தான் ஆனாலும் அது கடவுளின் கொடையன்றி வேறு எதுவும் இல்லை. நாம் அவரோடு இணைந்திருந்தால் மட்டுமே வெற்றி நமக்கு சொந்தம் இல்லையெனில் வெறுமை தான் மிச்சம்.
“நான்' என்று தனித்து சொன்னால் மூச்சு காற்று உள்ளே போய் விடும். நாம் என்று சொல்லும் போது அதற்கு மூச்சு காற்று சற்று அதிகம் வேண்டும். நம் மூச்சு கடவுளின் உயிர். அந்த உயிர் ஆவி நம் ஒவ்வொருஷிலும் உண்டு. எனவே இறைவன் மேல் முழு நம்பிக்கை இல்லாமல் அவரின் துணை இல்லாமல் மனித தன்மையோடு நம் வாழ்வை அமைத்தால் அது நிலைக்காது. குறுக்கு வழியில் முன்னேற நினைத்தால் நிம்மதியான வாழ்வு அமைதியான மனம் இருக்காது. தவறும் போது சுட்டிக் காட்டுவோம். சரியான திசையில் இறைவனை நோக்கி பயணிப்போம்.
பிற மறையுரைக் கருத்துக்கள்
1. இயேசு தன் சீடர்களுக்கு அசுத்த ஆவியின் மேல் அதிகாரம் செலுத்த தன் தாய ஆவியை தருகிறார். அவர்களும் பல பேய்களை ஓட்டினர். ஆனால் மாற்கு 9:18-இல் பார்க்கிறோம் அவர்களால் தீய ஆவியை விரட்ட முடியவில்லை. ஏன்? அவர்களால் முழு நம்பிக்கை, விசுவாசத்தோடு செய்ய முடியலில்லை. “நம்பிக்கையற்ற. தலைமுறையினரே” என்று கண்டிக்கிறார். இறைவன் மீது முழுமையான விசுவாசம் கொண்டிருந்தால் நாம் எதையும் சாதிக்கலாம்
.
2. சீடர்கள் சொல்லும் செய்தியை மக்கள் ஏற்க வில்லையெனில் அவர்களுக்கு எதிராக ஒரு அடையாள செயல் செய்ய சொல்கிறார் இயேசு. அவர்களின் பாதத்தில் உள்ள தூசியை தட்டிவிட்டு வரசொல்கிறார் ஆனால் அவர்களை தாக்கவோ கட்டாயப்படுத்தவோ சொல்லவில்லை. மாறாக அடையாளமாக சொல்கிறார். அடையாளங்கள் எப்போதுமே, பலவிதமான சிந்தனைகளை, அர்த்தங்களை குறிக்கும். மனிதர்களுக்கு எதிராக நாம் எந்த மாதிரியான எதிர்ப்பு அடையாளம் “காண்பிக்கிறோம். வன்முறையை தூண்டுவதாக நம் அடையாளம் அமையக் கூடாது.

பொதுக்காலம் - பதினைந்தாம் ஞாப்று
முதல் வாசகம்: ஆமோஸ் 7:12-15
இறைவாக்கினர் ஆமோஸ் யூதா நாட்டில் பெத்தலகேம் அருகில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆடுமாடுகளை மேய்த்து வாழ்க்கை நடத்தியவர். இவருக்கு ஒருநாள் இறைவாக்கு அருளப்பட்டது. இவர் பாலஸ்தீனா நாட்டின் வடபகுதிக்கு இறைவனால் அனுப்பப்பட்டார். வழிபாட்டு மையமாகிய பெத்தேலில் இறைவாக்கு உரைத்தார். அங்குள்ள அர்ச்சகனாகிய அமட்சியாவுக்கும் இவருக்கும் நடந்த உரையாடலே இன்றைய வாசகம்.
காட்சிகள் கண்டார்
நாட்டின் வடபகுதியில் இறைவன் வெட்டுக் கிளிகளை அனுப்பி, வறட்சியை ஏற்படுத்தி மக்களை அழிக்கப்போவதாக காட்சியில் கண்டார். இதைக் கேட்ட மக்கள் இவர்மேல் சினம் கொண்டனர். அர்ச்சகனாகிய அமட்சியா அரசனை அணுகி, நீ வாளால் மடிவாய் என்றும், உன் நாட்டு மக்கள் கொள்ளைப் பொருளாகக் கொண்டு போகப்படுவர் என்றும் ஆமோஸ் கூறுவதாக கோள் மூட்டினான்.. “காட்சி காண்பவனே போய்விடு; யூதாவின் நாட்டிற்குச் சென்று விடு. இனிப் பெத்தேலில் பிதற்றாதே. இது அரசனின் பரிசுத்த இடம். அரசர்க்குரிய கோயில்” என ஆமோசைப் பார்த்துக் கூறினான் (11- 12). ஆமோஸ் அவனை நோக்கி, “நான் உன்னைப் போல அரசு ஊழியத்தில் இருப்பவன் அல்லன்; நான் அரசர்க்கெல்லாம் அரசனாகிய இறைவனால் இறைவாக்குரைக்க அனுப்பப்பட்டவன் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்த என்னையும் இத்திருப்பணிக்கு அனுப்பிய இறைவனின் கருணையே கருணை” என்று இறைபுகழ் பாடினார்.
யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்
யாவர்க்கும் கீழாம் அடியேனை - யாவரும்
பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கு எம் பெருமான்
மற்றறியேன் செய்யும் வகை (திரு வாசகம்).
அமட்சியா தன் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடுமோ என் அஞ்சியே, ஆமோசை நாட்டை விட்டு விரட்டிவிட முயன்றான். இறைவாக்கினர் தன் பெயரால் பேசுவதில்லை. “இஸ்ரயேலே கேள்; இறைவன் சொல்வதைக் கேள்” என்றுதான், இறைவாக்கினரின் தொடக்க உரையே இருந்தது என்பதை மறந்துவிட்டான். இறைவன் எரேமியாவின் உதடுகளைத் தொட்டு, “இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன்” என்று கூறுவதே இதற்குச் சான்று (எரே. 1 : 9). ஆமோஸ் எதிர்ப்புகளுக்கிடையே இறைவனின் குரலானார். திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் இயேசுவின் முத்திரையைப் பெற்று அவரது குருத்துவத்தில், இறைவாக்குப் பணியில் பங்கு பெற்றுள்ளோம். ஆமோசைப் போல் அஞ்சா நெஞ்சுடன் உண்மைக்குச் சான்று பகர்வோமா?
அசலும் போலியும்
இறைவாக்குப் பணியில் பக்தர்கள் பட்ட பாடுகள் பல. எரேமியா துன்பத்தின் எல்லையைக் கண்டவர். மக்கள் விரும்பாததை எசாயா கூறியதால் மரணத்திற்காளானார். இவர்களெல்லாம் நமதாண்டவரின் முன்னோடிகள். உண்மைக்குச் சான்று பகர்ந்ததால் இயேசு தன் உயிரையே இழக்க வேண்டியிருந்தது. தம் சீடர்கள் இறைவாக்குப் பணியில் தம் உயிரையும் இழக்கத் தயாராயிருக்கவேண்டும் என்கிறார் இயேசு : “அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக் கூடங்களுக்குக் கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள் ” (காண் . லூக். 21: 12 - 18).
போலித் தீர்க்கதரிசிகளைப் பற்றி எச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்பதும் நமது ஆண்டவரின் அறிவுரை : “ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்” (மத். 7 : 15). நன்மைக்கும் தீமைக்கும் என்றுமே போராட்டம். திருச்சபையில் போலித் தீர்க்கதரிசிகள், அதாவது மக்கள் விரும்புவதையே கூறி அவர்களைத் திசைதிருப்பும் தீயோர் இருப்பர். இவர்களை முறியடிப்பதும், எத்தகைய எதிர்ப்புகளுக்கு இடையிலும் உண்மையை - அவை எவ்வளவு கசப்பானதாயினும் - எடுத்துரைக்கும் கடமையும் இயேசுவின் சீடர்களுக்கு உண்டு என்பதை உணர்கின்றோமா?
ஆடுகளை ஓட்டிக்கொண்டு போன என்னை ஆண்டவர் தெரிந்தெடுத்து ‘நம் மக்களாகிய இஸ்ரயேலிடம் போய் இறைவாக்குக் கூறு' என்று அனுப்பினார்.
இரண்டாம் வாசகம்: எபே.1:3-14
உரோமை நகர் சிறையில் சிந்திய முத்துக்களே எபேசியருக்கு எழுதிய திருமுகம். எபேசு நகரில் பவுல் மூன்று ஆண்டுகள் தங்கிப் பணி புரிந்துள்ளார். கொரிந்தியர்களுக்கு எழுதிய திருமுகம் இந்நகரில் தான் எழுதப்பட்டது. எபேசு தலத் திருச்சபை பல சபைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக கூறப்பட்டுள்ளது. பவுல் தனக்கும் தன் சீடர்களுக்கும் இறைவன் வாரி வழங்கிய அருட்கொடைகளைப் பட்டியல் போடுகிறார் இங்கு.
அருட்கொடைகள்
மீட்புத் திட்டத்தின் முதற்படி தெரிந்தெடுத்தல். இத்தேர்வு இன்றோ நேற்றோ நடந்ததன்று. காலங்களுக்கெல்லாம் முன்னதாகவே இறைவனின் இதய பீடத்தில் இடம் பெற்றவர்கள் நாம். “கிறிஸ்துவுக்குள்” என்ற சொல் இம் மடலில் முப்பது முறை இடம் பெறுகிறது; இன்றைய வாசகத்தில் பதினோரு முறை வருகிறது. எனவே கிறிஸ்து வழியாகவே தனி மனிதனும் திருச்சபையும் இறைவனது உள்ளத்தில் இடம் பெறுகின்றனர். இறைவன் என்னையும் ஒரு பொருட்டென எண்ணித் தேர்ந்துகொண்டார். “எங்கே என்னை இருந்திடத் தேடிக்கொண்டு அங்கே வந்து அடையாளம் அருளினார்” (அப்பா). தூயவரும் மாசற்றவருமாக இருப்பதற்காகவே நம்மைத் தேர்ந்து கொண்டார். நாம் மீட்புப் பெற்றதும் கிறிஸ்துவின் திரு இரத்தத்தால் தான். எனவே என்னைத் தேர்ந்தெடுத்து, பாவங்களை மன்னித்து அருள் வளத்தால் என்னை நிரப்பி, தாயவனும் மாசற்றவனுமாக மாற்றிய இறைவனுக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
என்னை ஒன்றும் அறியாத இளம் பருவந்தனிலை
என் உத்த அமர்ந்து அருளி யான் மயங்குதோறும்
அன்னை எனப்பரிந்தருளி அப்போதைக்கு அப்போது
அப்பன் எனத் தெளிவித்து அறிவுறுத்தி நின்றாய்;
நின்னை எனக்கு என்பேன், என் உயிர் என்பனோ?
நீடிய உயிர்த்துணையாம் நேய மது என்பேனா?
இன்னல் அறுத்து அருளுகின்ற என் குரு என்பேனா?
என் என்பேள்? என்னுடைய இன்பம் அது என்பேன் (திருவருட்பா)
தூய ஆலியின் செயல்
ஆவி என்ற சொல் இறைவனின் ஆற்றலைக் குறிக்கிறது. தூய ஆவி கடவுளின் ஒன்றிப்புக் கருவியாகச் செயல்படுகிறார் (2 : 18); இறைத் திட்டத்தின் நிறைவுக்கு மக்களை இட்டுச் செல்லும் வழியாகவும் உறுதி நிலையாகவும் இருப்பதும் தூய ஆவியேயாகும் (3 : 16). உலகின் இறுதிக்காலத்தில் - புதுயுகத்தின் தொடக்கத்தில் - ஆவியின் பொழிவு அதிகமாகக் காணப்படும் (யோவே, 2 : 28; எசா, 32: 15).
திருமுழுக்கின்போது தூய ஆவியின் முத்திரையை நாம் பெற்றுக் கொண்டோம். ஒரு பொருள், வளர்ப்புப் பிராணி, கொத்தடிமை ஆகிய வற்றின்மேல் தான் கொண்டுள்ள உரிமையைக் காட்ட, அவற்றைக் காத்துக் கொள்ள, ஒருவன் அவற்றின்மீது முத்திரையிடுகின்றான். இம் முத்திரை தீயினாற் சுட்ட தளும்பாக இருக்கலாம்; அல்லது வேறு ஒர் அடையாளமாக இருக்கலாம். “ஆண்டவர்க்குப் பிரமாணிக்கமாயிருந்தோர் நெற்றியில் குறி பெற்றார்கள்” என்கிறது வேதவாக்கு (எசே. 9:4; திவெ. 7:4; 9:4). தூய ஆவியின் முத்திரையாகச் செயல்படுவது அவரது பிரசன்னமும் ஆற்றலுமேயாகும். கிறிஸ்துவுக்குள் நாம் ஆவியானவரையும் அவரது ஆற்றலையும் பெற்றுள்ளோம்.
தூய ஆவியின் இந்த ஆற்றல் நாம் பெறப்போகும் உரிமைப் பேற்றின் அச்சாரமாக விளங்குகிறது. வணிக மொழியில் அச்சாரம் என்பது முன்பணம்; முழுத்தொகையும் பெறுவேன் என்ற நம்பிக்கை அச்சாரம் வாங்கியவருக்கு உண்டு. அப்படியே நாம் திருமுழுக்கில் பெற்றுக்கொண்ட தூய ஆவி இறுதிக் காலத்தில் முழுப்பேரின்பத்தையும் அடைவோம் என்பதற்கு அச்சாரமாகிறது. தந்த நம்மீது அன்பு கொண்டு தம் மகனை நமக்காக அனுப்பினார்; திருக்குமரன் தன் இரத்தத்தால் நம்மைக் குளிப்பாட்டி, அருள்வாழ்வை - இறைவாழ்வை வழங்கினார்; இந்த இறை வாழ்வு, வளர்ந்து பலன் அளிக்கப் பாடுபடுபவர் தூய ஆவி. மூவொரு கடவுளும் என்மீது அன்பு கொண்டு எனக்குச் செய்துள்ள நன்மைகளை எண்ணி வியப்பும் திகைப்பும் அடைகிறேனா?
நம்மைத் தன் பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் நம்மை முன்குறித்து வைத்தார்.
நற்செய்தி: மாற்கு 6:7-13
ஆண்டவரின் போதனையைக் கேட்டவர் பலர்; அவர்களில் பன்னிருவரைத் தன் திருத்தூதர்களாக அழைத்தார் ஆண்டவர். அவர்களுக்குத் தனிப் பயிற்சி அளித்தார். தன் பணியைச் செய்து வர அனுப்பினார். சாட்சியம் கூற இருவர் தேவை (இச. 19 : 15) எனவே இயேசுவும் இருவர் இருவராக அனுப்புகிறார்.
பயணத்தில் எளிமை
நீண்ட பயணத்திற்கு வேண்டிய மிதியடியையும் ஒரு கோலையும் தவிர, உணவு, உடை, பை, பணம் போன்ற எதையும் எடுத்துச் செல்ல வேண்டாம் என அவர்களுக்கு அறிவுரை கூறுகிறார் ஆண்டவர். தலை சாய்க்க இடமின்றி வாழ்ந்தவர் இயேசு; கையில் யாதொரு காசின்றி, மாபெரும் இறையரசை நிறுவிய மாமன்னர் இயேசு. இதையே தன் சீடர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பிக்கிறார். இறையரசுப் பணியை செல்வம் மாசுபடுத்துவதைக் கண்டார் அசிசியார். வறுமையை மணந்துகொண்டு அரிய செயல்களைச் செய்து முடித்தார். இறைவனின் பராமரிப்பு பற்றி எடுத்துரைக்க வேண்டிய சீடர்கள் (மத். 6: 28-33) அதிலே அனுபவம் பெற வேண்டும் என்பதற்காகவே பயணத்தில் எளிமையை, பிறர் உதவியை எதிர்பார்த்து வாழும் முறையைக் கடைப்பிடிக்கும்படி கற்பிக்கின்றார் இயேசு.
போதனையின் மையக் கருத்து.
“மனந்திரும்புங்கள்”” என்பதே அவர்கள் போதனையின் மையக் கருத்தாய் அமைய வேண்டும். “காலம் நிறைவேறிற்று; கடவுளரசு நெருங்கிவிட்டது. மனம் திரும்பி இந்த நற்செய்தியை நம்புங்கள் ” (1: 15) என்றே இயேசு தன் போதனையைத் தொடங்கினார். அப்படியே அவர்களும் போதிக்க வேண்டும். மனிதனில் மாபெரும் மாற்றம் ஏற்படுவதே மனந்திரும்புதலாகும். தன் பழைய பாவ வாழ்வை எண்ணி, அதற்காக மனம் வருந்தி புது வாழ்வுக்குத் திரும்புவதே இறையரசில் நாம் இடம் பெற முதல் நிபந்தனை. சுயநலம், பாவ நாட்டம், சாதி வெறி, 'தான்' என்ற தலைக்கனம் ஆகியவை நம் உடலுடனும் உயிருடனும் ஒட்டிக் கொண்டுள்ளன. அடிமனத்தினின்று இவை அகற்றப்பட்டால், இவற்றின் வெளிப்பாடுகளான திருட்டு, கொலை, குடிவெறி, காமக் களியாட்டம் ஆகியவை நாளடைவில் நம்மை விட்டகலும்.
பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவையும், இறையரசையும் உலகக் கண்ணோட்டத்தில் எடை போட்டனர். தங்கள் கணிப்பின்படி மெசியா இல்லாததால் இயேசுவை ஏற்க மறுத்தனர். அவர்களது இக்கணிப்பில் மாற்றம் தேவை. இயேசுவை, அவர் நிறுவும் இறையரசை யூத இனம் ஏற்றுக்கொள்வதே அவர்களது மனமாற்றமாகும். ஒவ்வொரு போதகரும் தான் போதிக்குமுன் “நான் இயேசுவில் விசுவாசம் கொண்டுள்ளேனா? நான் மனம் மாறியுள்ளேனா”' என்று தன்னையே கேட்டுக் கொள்ள வேண்டும்.
சமுதாயப் பணி
திருத்தூதர்கள் நற்செய்தியைப் போதிப்பதுடன் நற்பணியும் புரிந்தனர். பேய்களை ஓட்டினர்; பிணியாளரைக் குணப்படுத்தினர். மனிதன்: உடல் - ஆன்மாவின் கூட்டு. பாவத்தினின்றும், மனிதனைப் பீடித்துள்ள வறுமை, பிணி, மூட நம்பிக்கைகள் ஆகியவற்றினின்று விடுதலை அளிப்பதே திருத்தூதரின் பணியாகும்.
மருத்துவத் துறையில் எண்ணெய் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய், தண்ணீர், உமிழ் நீர் ஆகியவற்றை கருவியாகக் கொண்டு. ஆண்டவர் ஆற்றல் பல செய்தார். இன்றும் சாதாரணப் பொருள்களாகிய எண்ணெய், தண்ணீர், அப்பம் ஆகியவற்றையே திருவருட்சாதனங்களில் பயன்படுத்தி, இறையருளைப் பெறுகிறோம். இறைவன் அளித்த அதிகாரத்தால், திருச்சபைப் பணியாளர்கள் வழியாக இவை பாவம் நீக்கும் சாதனங்களாகின்றன (காண் யாக். 5 : 1). ஆண்டவர் செய்த அருட்பணி, திருத்தூதர்கள் செய்த அரும்பணி இன்றும் திருச்சபையில் தொடர்கிறது. முழு மனிதனுக்கும் விடுதலை அளிப்பதே திருச்சபையின் பணியாக வேண்டும்.
அவர்கள் சென்று மக்கள் மனந்திரும்ப வேண்டுமென்று அறிவித்தனர்.