மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலத்தின் 6ஆம் ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
லேவி 13:1-2, 44-46 | 1கொரிந்தியர் 10:31-11:1 | மாற்கு 1: 40-45

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


தொழுநோயாளி குணம்‌ பெறுதல்‌

இன்றைய முதல்‌ வாசகமும்‌ மூன்றாம்‌ வாசகமும்‌ தொழுநோயாளியின்‌ நிலையையும்‌, இயேசு தொட்டு குணமாக்கியதையும்‌ விவரிக்கிறது.

1. இயேசு வாழ்ந்த காலத்தில்‌ தொழுநோயாளியின்‌ நிலை என்னா?

ஒரு மனிதனுக்குத்‌ தொழுநோய்‌ உண்டு என்று தெரிந்தால்‌ குருவிடம்‌ கொண்டு வருவார்கள்‌. அவன்‌ தீட்டு உடையவன்‌ என அறிவிப்பார்‌. உடனே அவனை அடைத்து வைக்க வேண்டும்‌. பின்‌ தொழுநோயால்‌ பாதிக்கப்பட்டவருக்குக்‌ கிழிந்த உடை அணிந்து தலைவாராமல்‌ மக்கள்‌ நடமாட்டம்‌ இல்லாத மலைகள்‌, பாளையங்களுக்கு அவர்‌ அனுப்பப்படுவார்‌. ஊரிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்‌. தீண்டத்தகாதவர்களாக கருதப்படுவார்‌. யாராவது அந்தப்‌ பக்கம்‌ வந்தால்‌ இந்தத்‌ தொழுநோயாளி தீட்டுத்‌ தீட்டு என்று சத்தம்‌ கொடுத்து அல்லது மணி அடித்துச்‌ சொல்ல வேண்டும்‌. யாரும்‌ இந்த மனிதனைத்‌ தொடக்கூடாது. இவனும்‌ யாரையும்‌ தொடக்கூடாது. மனித நடமாட்டம்‌ உள்ள பகுதிக்கும்‌ இந்த தொழுநோயாளி வரக்கூடாது என்பது கட்டளை. சுருங்கச்‌ சொல்ல வேண்டுமானால்‌ தீண்டத்தகாதவர்களாக, ஊர்கள்‌, நகரங்களை விட்டு, மலைகள்‌ பாளையங்களிலே தனிமைப்படுத்தப்‌ பட்டவர்கள்‌ இவர்கள்‌. இந்தக்‌ காட்சியைப்‌ பென்கர்‌ (Bengur) என்ற திரைப்படத்தில்‌ அழகாகச்‌ சித்திரித்திருப்பதை நீங்கள்‌ பார்த்திருக்கலாம்‌.

2. இயேசு எவ்வாறு தொழுநோயாளியிடம்‌ நடந்துகொள்கிறார்‌?

ஒரு தொழுநோயாளி, சமுதாயக்‌ கட்டுப்பாடுகளையும்‌ மீறி, கடந்து இயேசுவிடம்‌ வருவதைப்‌ பாருங்கள்‌. எந்த மணியையும்‌ அவன்‌ அடிக்கவில்லை. தீட்டுத்‌ தீட்டு என்று சத்தமும்‌ போடவில்லை. ஆனால்‌ இயேசுவின்‌ முன்பாக மண்டியிட்டு, இயேசுவே! நீர்‌ விரும்பினால்‌ என்னைக்‌ குணமாக்க உம்மால்‌ கூடும்‌ (மாற்கு 1:40) என்றார்‌. கூடியிருந்த மக்கள்‌ எல்லோரும்‌ இங்கே உன்னிப்பாகக்‌ கவனிக்கிறார்கள்‌! என்ன நடக்கப்‌ போகிறது என்பதைப்‌ பார்க்கிறார்கள்‌. இயேசுவின்‌ மனநிலையைப்‌ பாருங்கள்‌! அவர்‌ அவனை அதட்டி விரட்டுகிறாரா? அல்லது பார்த்தும்‌ பாராதது போல கடந்து செல்கிறாரா? மாறாக இயேசு தன்‌ கரத்தை நீட்டித்‌ தொட்டு நான்‌ விரும்புகிறேன்‌, நீ குணமாய்‌ இரு என்றார்‌ (மாற்‌கு1:41) அவன்‌ குணமடைகின்றான்‌. தீண்டத்‌ தகாதவனாகக்‌ கருதப்பட்ட இந்த மனிதனைக்‌ கிறிஸ்து மனித நேயத்தோடு பார்க்கிறார்‌. இவனும்‌ இறைவன்‌ சாயலாகப்‌ படைக்கப்பட்டவன்‌. மனித மாண்புக்குரியவன்‌ என்பதை வெளிப்படுத்தும்‌ வண்ணம்‌ ... அவனைத்‌ தொட்டு மீண்டும்‌ மனித சமுதாயத்தோடு இணைக்கிறார்‌. இயேசு தொழுநோயாளியைத்‌ தொடுவதற்குத்‌ தயங்கவில்லை. இரத்தப்போக்கினால்‌ துன்புற்ற ஒரு பெண்ணைத்‌ தொட அனுமதித்தார்‌ (மாற்கு 5:24-29). பாவி மரிய மதலேனாள்‌ தொட அனுமதித்தார்‌. பாவியையும்‌, பிணியாளனையும்‌ தொட்டார்‌. ஏனெனில்‌ இயேசுவின்‌ உள்ளம்‌ இரக்கம்‌, மன்னிப்பு, அன்பு, பரிவு இவைகளால்‌ ஆட்கொள்ளப்பட்டது. மனிதனால்‌ வெறுக்கப்பட்ட மக்களை மதிக்கிறார்‌, அன்பு காட்டுகிறார்‌.

3. நமது பதில்‌ என்ன?

இந்த உன்னதமான உயர்ந்த எண்ணம்‌ கொண்ட இயேசுவை நினைத்துப்‌ பெருமைப்படும்‌ நாம்‌ எந்த நிலையில்‌ உள்ளோம்‌. ஏதோ ஆச்சரிய கண்களோடு இயேசுவை நோக்குவதோடு இருக்கிறோமா! இதோடு மட்டும்‌ இருந்தால்‌ நாம்‌ கிறிஸ்தவர்கள்‌ அல்ல!!! நான்‌ செய்தது போல நீங்களும்‌ செய்யுமாறு நான்‌ உங்களுக்கு முன்‌ மாதிரிகை காட்டினேனே! (யோவா. 13:15) என்கிறார்‌ இயேசு.

நிகழ்ச்சி
ஒரு தடவை ஒரு பெண்மணி தன்‌ 5 வயது சிறுவனோடு பலியில்‌ பங்கெடுக்கச்‌ சென்றாள்‌. பலி முடிந்து ஆலயத்தில்‌ உள்ள சுரூபங்களையெல்லாம்‌ பக்தியோடு தொட்டுக்‌ கும்பிட்டு, தன்‌ மகன்‌ ஜானையும்‌ தொட்டுக்‌ கும்பிட வைத்து வீட்டிற்கு வீதி வழியாக வந்து கொண்டிருந்தாள்‌. வீதியிலே இருவரும்‌ நடந்து வரும்போது ஜானின்‌ பள்ளித்தோழன்‌ சேகர்‌ ஓடோடி வந்து ஜானின்‌ கையைப்‌ பிடித்தான்‌. தாயோ கையைத்‌ தட்டிவிட்டாள்‌. ஜான்‌ பயந்தான்‌! அம்மா ஏன்‌ அவனைத்‌ தொடவிடவில்லை என்று கேட்க, அவன்‌ தீண்டத்‌ தகாதவன்‌. அவனைத்‌ தொடக்கூடாது என்றாள்‌ தாய்‌. ஆனால்‌ அம்மா கோவிலில்‌ சுருபங்களைத்‌ தொட்டோமே! என்றான்‌, அதில்‌ கடவுள்‌ உண்டு என்றாள்‌ தாய்‌. ஜான்‌ அம்மாவை நோக்கி, அம்மா அந்த மண்ணுக்குள்ளே கடவுள்‌ உண்டு என்றால்‌, இந்த மனிதனுக்குள்ளே கடவுள்‌ இல்லையாம்மா என்று கேட்டபோது தாய்‌ பேசமுடியாது அமைதியானாள்‌. ஆம்‌ இதுதான்‌ வழிபாட்டுக்கும்‌, வாழ்க்கைக்கும்‌ இடையே உள்ள முரண்பாடு. இன்று கடவுளை மறுப்பதற்குக்‌ காரணமாக இது உள்ளது.

ஏழைகளின்‌ உடலிலும்‌ இரத்தத்திலும்‌ உள்ள கிறிஸ்துவை மதிக்காதவன்‌, நற்கருணையிலுள்ள கிறிஸ்துவின்‌ உடலையும்‌ இரத்தத்தையும்‌ எப்படி மதிக்க முடியும்‌? கிறிஸ்துவே ஏழையாக, தொழுநோயாளியாக, ஒடுக்கப்பட்டவராக இருக்கிறாரே!!

1985-ஆம்‌ ஆண்டு பெங்களூரில்‌ டெக்கான்‌ கெரால்டு என்ற பத்திரிக்கையிலே சிலுவையிலிருந்து ஓம்‌ கடந்தேன்‌ என்ற செய்தியானது பிரசுரிக்கப்பட்டது. ஒரு தலித்‌, கிறிஸ்தவராக மாறினார்‌. ஏனென்றால்‌ இயேசு சாதிகளைக்‌ கடந்து மனித மாண்பை மதிப்பவர்‌ என்று. ஆனால்‌ நான்‌ கிறிஸ்தவனாக மாறிய பின்‌ எனக்குப்‌ பெருத்த ஏமாற்றம்‌! வேதனை!! ஏனென்றால்‌ கிறிஸ்தவத்தில்‌, குருக்கள்‌, துறவிகள்‌, கிறிஸ்தவர்கள்‌ வேறுபாடு காட்டி என்னை தீட்டுப்பட்டவனாகவே நடத்தினார்கள்‌. ஏனெனில்‌ கிறிஸ்து இந்த சீடர்களிடத்தில்‌ தோல்வி அடைந்துவிட்டார்‌. எனவே திரும்பவும்‌ இந்து மதம்‌ வந்துவிட்டேன்‌ என எழுதினார்‌ அந்த மனிதன்‌.

முடிவுரை

அருமையான சகோதரனே! சகோதரியே! தீண்டத்தகாதவர்‌ என்று யாரும்‌ நம்‌ அகராதியில்‌ இருக்கக்கூடாது. கிறிஸ்தவர்களுக்கு - தீண்டாமை என்பது ஒரு பாவம்‌ மட்டுமல்ல அது ஒரு தெய்வ நிந்தனையும்‌ ஆகும்‌.

இரண்டாவது, உடலை அழுகச்‌ செய்யும்‌ தொழுநோயைவிட ஆன்மாவை அழுகச்‌ செய்யும்‌ பாவத்‌ தொழுநோய்‌ மிகவும்‌ பயங்கரமானது. அதற்கு மருந்து என்ன? தொழுநோயாளியிடம்‌ உம்மைக்‌ குருவிடம்‌ காட்டு (மாற்‌. 1:44) என்கிறார்‌ இயேசு. ஆம்‌! பாவ நோயினின்று விடுதலை பெற நாம்‌ குருவிடம்‌ செல்ல வேண்டும்‌. அதாவது ஒப்புரவு அருட்சாதனத்தை அணுக வேண்டும்‌. எப்படித்‌ தொழுநோய்‌ பெற்றவன்‌ உடலில்‌ உணர்ச்சி மழுங்கிவிடுகிறதோ, அதேபோலத்தான்‌ ஒப்புரவு அருட்‌சாதனத்தை அணுகாதவர்களிடத்தில்‌ காலப்‌ போக்கில்‌ பாவ உணர்வும்‌ மழுங்கிவிடும்‌.

யாருடைய பாவங்களை நீங்கள்‌ மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும்‌ (யோவா. 20:23). திருச்சபையில்‌ தண்ணீரும்‌ உண்டு, கண்ணீரும்‌ உண்டு என்கிறார்‌ புனித அம்புரோஸ்‌. தண்ணீர்‌ திருமுழுக்கைக்‌ காட்டுவது. கண்ணீர்‌ ஒப்புரவு அருட்சாதனத்தைக்‌ குறிக்கிறது.

எனவே போலியான காரணங்களைக்‌ காட்டி ஒப்புரவு அருட்சாதனத்தைத்‌ தவிர்க்காமல்‌, அதை அடிக்கடி பெற்று பயன்பெறுவோம்‌. ஏனெனில்‌ இந்த அருட்சாதனத்தில்‌ இயேசு நம்மைத்‌ தொடுகிறார்‌. அன்புடன்‌ அரவணைத்து முத்தமிடுகிறார்‌. உன்‌ பாவங்கள்‌ மன்னிக்கப்பட்டன என்கிறார்‌ (லூக்‌. 7:48).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இயேசுவைப்போல வாழ முடியுமா?

ஏழை எளியவரோடு தம்மையே ஐக்கியப்படுத்திக்கொண்டவர் இயேசு. ஏழ்மையிலே பிறந்து, ஏழ்மையிலே வாழ்ந்து, ஏழ்மையிலே இறந்தவர் இயேசு. அவர் பிறந்தபோது பிறப்பதற்கு இடமில்லை; வாழ்ந்தபோது தலைசாய்க்க இடமில்லை; அவர் இறந்தபோது அவருக்கென்று ஒரு சொந்தக் கல்லறை இல்லை! ஓர் ஏழைப்பங்காளனாகத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவர் இயேசு (லூக் 4:16-22).

பணமில்லாதவர்கள் மட்டும் ஏழைகள் அல்ல! உடல் நலம் இல்லாதவர்களும் ஏழைகள்தான். இல்லை என்ற சொல்லுக்குச் சொந்தக்காரர்கள் அனைவரும் ஏழைகள்தான்! இதோ இன்றைய நற்செய்தியிலே உடல் அழகு இல்லாத ஒரே காரணத்திற்காக சமுதாயத்தைவிட்டுத் தள்ளிவைக்கப்பட்டிருந்த, அனைவராலும் புறக்கணிக்கப்பட்டிருந்த (முதல் வாசகம்) தொழுநோயாளிகளைத் தேடிச்சென்று அவர்களை இயேசு குணமாக்குவதைப் பார்க்கின்றோம்!

ஏழைகளின் மீதும், இல்லாதவர்கள் மீதும் இயேசுவுக்கு எப்பொழுதுமே தனிப் பிரியம்! இதை தெள்ளத்தெளிய அவர் மத்தேயு 25:30-41-இல் வெளிப்படுத்தியுள்ளார்.

இயேசுவிடமிருந்து வரம்பெற ஓர் அழகான, எளிய வழி அவர் வழியில் நடக்க முன்வருவதாகும்! கிறிஸ்துவைப் போல நம்மால் வாழமுடியுமா? இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடிகளார்: நான் கிறிஸ்துவைப்போல் நடப்பது போன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள் (1 கொரி 11:1) என்கின்றார். ஆக, கிறிஸ்துவைப்போல் வாழ்ந்தவர்கள் இந்த உலகத்திலே வாழ்ந்திருக்கின்றார்கள்!

அன்று மட்டும் அல்ல, இன்றும் கிறிஸ்துவின் மதிப்பீடுகளை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து, ஏழைகளோடு தங்களையே சங்கமமாக்கிக்கொள்ளும் உயர்ந்த மனிதர்கள் நம் நடுவே இல்லாமலில்லை!

இதோ ஓர் உண்மை நிகழ்வு!

பொள்ளாச்சியிலே இந்திய - சோவியத் நட்புறவு பற்றிய ஒரு பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த தலைவர்களுக்குக் கூட்டத்தை நல்லமுறையில் நடத்தப் போதிய நிதி இல்லை. ஆகவே பி.எம்.சுப்ரமணியம் என்பவர் பேசியபோது, தோழர் மா.வேலாயுதம் துண்டு ஏந்தி வருவார். உங்களால் முடிந்த அளவு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திரு.மா.வேலாயுதம் அவர்களுக்கு நிதி வசூலிக்க ஒரு துண்டு தேவைப்பட்டது. மேடையில் இருந்தவர்களில் திரு .பி.எம். சுப்ரமணியத்திடம் மட்டும்தான் ஒரு துண்டு இருந்தது. ஆகவே மா.வேலாயுதம் அவர்கள் அவரிடம் சென்று துண்டைக் கொடுங்கள். நிதி வசூலித்துவிட்டு திருப்பித் தருகின்றேன் என்றார். பி.எம்.சுப்பிரமணியம் துண்டைக் கொடுக்க மறுத்துவிட்டார். பிறகு எப்படியோ ஒரு மஞ்சள் பையைக் கொண்டு நிதி வசூலைச் செய்தார் திரு.மா.வேலாயுதம்.

பொதுக்கூட்டம் முடிந்தது. திரு. பி.எம்.சுப்ரமணியம் திரு. மா.வேலாயுதத்தைப் பக்கத்தில் அழைத்து, தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து, விரித்து உதறிக் காட்டினார். துண்டில் ஆயிரம் கண்கள். ஆம், அத்தனைக் கிழிசல்கள். அதைப் பார்த்தவரின் கண்கள் குளமாயின. இன்று உலகில் பலகோடி மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இன்று எய்ட்ஸால் பாதிக்கபட்டவர்களின் கண்களில் ஒன்று கங்கை, மற்றொன்று காவிரி! அவர்களை ஆற்றுவாருமில்லை, தேற்றுவாருமில்லை! இயேசுவைப் போல வாழ நமது மனத்தை பதப்படுத்திக்கொள்வோம். பழுத்த தென்னங்கீற்றை தண்ணீர் பதப்படுத்துகின்றது. தூண்டில் கம்பை நெருப்பு பதப்படுத்துகின்றது.

ஆன்மிக வாழ்வைப் பொறுத்தவரையில் நமது மனத்தை பதப்படுத்தும் தெய்வீகத் தண்ணீர், தெய்வீக நெருப்பு, தெய்வீகக் காற்று தூய ஆவியார். தூய ஆவியாரே உண்மையான அன்பால் என்னை அருள்பொழிவு செய்தருளும்.

மேலும் அறிவோம் :

மனத்தான்ஆம் மாந்தர்க்(கு) உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல் ( குறள் : 453)

பொருள் :
மனிதர் ஒவ்வொருவருக்கும் தோன்றும் உணர்வு அவரவர் உள்ளத்தைச் சார்ந்து அமையும் ! ஆனால், அவர் தம் பண்பு அவர் பழகும் கூட்டத்தாரைச் சார்ந்ததாகவே விளங்கும்!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!

இளவரசி ஆலிசின் மகள் 'டிப்தீரியா" என்னும் தொண்டை அழற்சி நோயால் புழுவாகத் துடித்தாள், இந்நோய் ஒரு பயங்கரத் தொற்று நோய், எக்காரனாத்தை முன்னிட்டும் தன் மகளைக் கட்டிப் பிடிக்கவோ முத்தமிடவோ கூடாது என்று மருத்துவர் ஆலிசை எச்சரித்திருந்தார், ஆனால், ஆலிசின் மகள் மூச்சு விடமுடியாமல் திணறிக் கொண்டு, 'அம்மா, என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடும்மா' என்று கதறி அழுதபோது, ஆலிசு மருத்துவரின் எச்சரிக்கையையும் மறந்து, தன் மகளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான், அத்நோய் அந்நேரமே அவரைத் தொற்றிக் கொள்ள ஒரு சில நாள்களில் ஆவிசு இறந்தார். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!

தொழுநோயாளிகளைத் தொடக்கூடாது என்ற சட்டத்தை மீறி இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து ஒரு தொழுநோயாளியைத் தொட்டுக் குணமளிக்கிறார். அவ்வாறே இரத்தப் போக்கினால் துன்புற்ற ஒருவர் தன்னைத் தொட்டுக் குணமடைய அவர் அனுமதித்தார் (மாற் 5:24- 20), கிறிஸ்து பாவிகளையும் பிணியாளர்களையும் தொட்டார், பாவிகளும் பிணியார்களும் அவரைத் தொட அனுமதித்தார், அவர் எவரையும் தீண்டத்தகாதவராகக் கருதவில்லை. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!

இக்காலத்தில் தொழுநோய் ஏறக்குறைய ஒழிக்கப்பட்டு விட்டது, தொழுநோயாளிகளுக்கு, மருத்துவ மனைகளும் புனர்வாழ்வு மையங்களும் உள்ளான, ஆனால் கிறிஸ்துவின் காலத்தில் தொழுநோய் ஒரு வியாதியாக மட்டுமல்ல, தீட்டாகக் கருதப்பட்டது, தொழு நோயாளிகள் ஊரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்; தீண்டத் தகாதவம்யாகக் கருதப்பட்டனர். ஆனால் கிறிஸ்து அவர்களை மனித நேயத்துடன் பார்க்கிறார். அவர்களும் இறைவனுடைய சாயலாகப் படைக்கப்பட்டவர்கள், மனித மாண்புக்குரியவர்கள் என்பதை வெளிப்படுத்தும் வண்ணம் அவர்களைத் தொட்டுக் குணமாக்கி, மீண்டும் மனித சமுதாயத்துடன் இணைக்கிறார்.

ஒருமுறை பள்ளி மாணவிகள் என்னிடம், 'காலாண்டுத் தேர்வு பாவம், அரையாண்டுத் தேர்வு குற்றம்: முழு ஆண்டுத் தேர்வு மனித நேயமற்ற செயல் என்றனர். ஆனால் உண்மையில், 'தீண்டாமை ஒரு பாவம்; தீண்டாமை ஒரு குற்றம்; தீண்டாமை மனித நேயமற்றச் செயல்,' இதை நாம் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டாலும், நடைமுறையில் தீண்டாமை முற்றிலும் வேரறுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது,

ஓர் உணவகத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்காகத் தனிப்பட்ட "டம்ளர்கள்' இருந்தன, அங்கு வந்த தாழ்த்தப்பட்ட ஒருவர், "இவ்வுணவகத்திற்கு வரும் ஈக்கள் எல்லா டம்ளர்களிலும்' உரிமையுடன் உட்காருகின்றன. இந்த மக்களுக்கு இருக்கின்ற உரிமை கூட தாழ்த்தப் பட்டவர்களுக்கு இல்லையே'' என்று ஆதங்கப்பட்டார், பசுக்களைத் தெய்வமாகக் கருதும் இப்பாரதநாட்டில், தாழ்த்தப்பட்ட மக்கள் உயிருடன் தோலுரிக்கப் படுகின்றனர், மனிதக் கழிவைச் சாப்பிடும் இழிநிலைக்குத் தள்ளப்படுகின்றனர், நெஞ்சுப் பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மானிடரை நிணைந்துவிட்டால்! -

தன் சிறிய மகனுடன் ஆலயத்திற்குச் சென்ற ஒரு தாய், அவனிடம் அங்கிருந்த சிலையைத் தொட்டுக் கும்பிடும்படி கேட்டபோது, அச் சிறுவன், 'அது சாமியில்லை களிமண் பொம்மை" என்றான். அம்மா கோபத்துடன் அவனைக் கன்னத்தில் அறைந்து, 'உன் வயசுக்கு மேலே பேசுற: அதுதான் நம்ப குலதெய்வம், தொட்டுக் கும்பிடு' என்றார். வேறுவழியின்றி அச்சிறுவன் அச்சிலையைத் தொட்டு வணங்கினான். ஆலயத்திலிருந்து வெளியே வந்தபோது அவனுடன் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்த 'நவீன்' என்ற பையனைப் பார்த்தவுடன் அவனுடன் விளையாடச் சென்றான். அம்மா அவனைப் பார்த்து, 'டேய் அவனுடன் விளையாடாதே; அவன் கீழ் சாதிப். பையன்; தீட்டு ஒட்டிக்கும்' என்றார், அதற்கு அவன், 'என்னம்மா களிமண் பொம்மையிலே சாமி இருக்குதுன்னு சொல்றே, மனிதனைத் தொடாதே என்று சொல்றே' என்று கேட்டான், நமது வழிபாட்டிற்கும் வாழ்க்கைக்கும் இடையேயுள்ள முரண்பாடுதான் இன்று பலர் கடவுளை மறுப்பதற்குக் காரணமாக உள்ளது.ஏழைகளின் உடலிலும் இரத்தத்திலும் உள்ள கிறிஸ்துவை மதிக்காதவர் நற்கருணையிலுள்ள கிறிஸ்துவின் உடலையும் இரத்தத்தையும் மதிக்கமுடியாது.

கிறிஸ்துவே ஏழையிலே ஏழையாக, தொழுநோயாளியிலே தொழுநோயாளியாக இருக்கிறார், புனித பிரான்சிஸ் அசிசியார் ஒரு தொழுநோயாளியை ஆரத்தழுவி முத்தம் கொடுத்தபோது, அத்தொழுநோயாளியின் முகம் கிறிஸ்துவின் முகமாக மாறியதைக் கண்டார், தொழுநோயால் பீடிக்கப்பட்ட ஓர் இந்து பூசாரியை, அன்னை தெரசா தன் மடியில் வைத்து முத்தம் கொடுத்தபோது, அந்த அன்னையின் முகத்தில் காளி தேவதையைப் பார்த்தார் அத்தொழுநோயாளி!

மற்றவர்களை நாம் தொடவேண்டும்; மற்றவர்களும் தம்மைத் தொடவிட வேண்டும், நமது தொடுதலானது குண மளிக்கும் தொடுதலாக இருக்கவேண்டும். தீண்டத்தகாதவர்கள் என்று யாரும். நமது அகராதியில் இருக்கக்கூடாது. கிறிஸ்துவர்களுக்குத் தீண்டாமை ஒருபாவம் மட்டுமல்ல; அது ஒரு தெய்வ நிந்தனையுமாகும்.

உடலை அழுகச் செய்யும் தொழுநோயைவிட ஆன்மாவை அழுகச் செய்யும் பாவத் தொழுநோய் மிகவும் பயங்கரமானது. அதற்கு மருந்து என்ன? தொழுநோயாளியிடம், 'உம்மைக் குருவிடம் காட்டு' என்கிறார் கிறிஸ்து. ஆம், பாவத்தொழுநோயினின்று விடுதலைபெற குருவிடம் செல்ல வேண்டும், அதாவது ஒப்புரவு அருள் அடையாளத்தை அணுக வேண்டும். இக்காலத்தில் மக்கள் இந்த அருள் அடையாளத்தைத் தவிர்க்கின்றனர், உடலில் தொழுநோய் கண்ட இடத்தில் உணர்வு மழுங்கிவிடும், அவ்வாறே ஒப்புரவு அருள் அடையாளத்தை அணுகாதவர்களிடம் காலப்போக்கில் பாவ உணர்வு மழுங்கிவிடும்.

பல்வேறு வகையில் பாவமன்னிப்பு அடைய முடியும் என்றாலும், பாவ மன்னிப்பிற்காக இயேசு வழங்கியுள்ள சாதாரண வழி ஒப்புரவு அருள் அடையாளமாகும். 'எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ அவை மன்னிக்கப்படும்' (யோவா 20:23). 'திருச்சபையில் தண்ணீரும் உண்டு; கண்ணீரும் உண்டு' (புனித அம்புரோஸ்), தண்ணீர் திருமுழுக்கையும், கண்ணீர் ஒப்புரவு அருள் அடையாளத்தையும் குறிக்கிறது,

போலியான காரணங்களைக் காட்டி ஒப்புரவு அருள் அடையாளத்தைத் தவிர்க்காமல், அதை அடிக்கடி அணுகுவோம். இந்த அருள் அடையாளத்தில் கிறிஸ்து நம்மைத் தொடுகிறார்; அன்புடன் அரவணைத்து முத்தமிடுகிறார், 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' (லூக்கா 7:48) என்றும், 'அமைதியுடன் செல்க' (லூக் 7:50) என்றும் உறுதியளிக்கின்றார், உலகம் தர முடியாத அமைதியை அவர் நமக்கு வழங்குகிறார்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வெற்றி = நம்பிக்கை + முயற்சி

தொழுநோயாளிகளின்‌ திருத்தூதர்‌ என்று அழைக்கப்படுபவர்‌ தமியான்‌. அவர்‌ பெல்ஜியம்‌ நாட்டில்‌ 1840ஆம்‌ ஆண்டு பிறந்தார்‌. 1864இல்‌ குருவாக அருள்பொழிவு பெற்றார்‌. 33 ஆவது வயதில்‌ அன்னை தெரசாவைப்‌ போல்‌ “அழைப்புக்குள்‌ அழைப்புப்‌ பெற்றார்‌. தொழுநோயாளிகளின்‌ பூமியான மொலோக்கா தீவில்‌ அவர்‌ ஆற்றிய பணி வியப்புக்குரியது.

45ஆவது வயதில்‌ ஒரு நாள்‌ தற்செயலாக கொதிநீர்‌ அவரது கால்களில்‌ கொட்டியது. அவருக்கு ஆச்சரியம்‌! கொதிநீரின்‌ சூட்டையோ அதன்‌ வலியையோ கொஞ்சம்‌ கூட உணரவில்லை. புரிந்து கொண்டார்‌ - தொழுநோய்‌ தன்னையும்‌ தொற்றிக்‌ கொண்டதை. இதனை மறுநாள்‌ திருப்பலியில்‌ உடன்‌ தொழுநோயாளர்களுக்கு எப்படி வெளிப்படுத்தினார்‌ தெரியுமா? மறையுரையில்‌ சகோதரர்களே என்று அழைக்காமல்‌ “தொழுநோயாளர்களாகிய நாம்‌” ( We Lepers ) என்று தொடங்கினார்‌. அங்கிருந்த அனைவருமே அப்போது தமியான்‌ தங்களுக்காகத்‌ தன்னை அர்ப்பணித்தவர்‌ மட்டுமல்ல, தங்களில்‌ ஒருவராகிவிட்டவர்‌ என்று உணர்ந்தார்கள்‌.

1889ஆம்‌ ஆண்டில்‌ தமியான்‌ இறந்ததும்‌ இங்கிலாந்து நாட்டில்‌ இருந்த அவருடைய நண்பர்கள்‌ பளிங்காலான சிலுவையை அவருடைய கல்லறையில்‌ நாட்டி அதனடியில்‌ பொறித்திருந்த வார்த்தைகள்‌ “தம்‌ நண்பர்களுக்காக உயிரைக்‌ கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும்‌ இல்லை” (யோ. 15:13).

“நம்‌ பிணிகளைத்‌ தாங்கிக்‌ கொண்ட, நம்‌ துன்பங்களைச்‌ சுமந்து கொண்ட” (மத்‌. 8:17, எசாயா. 53:4) இயேசு தொழு நோயாளிகளின்‌ மீது கொண்டிருந்த பரிவுக்கு உயிருள்ள சாட்சியம்‌ தமியானின்‌ வாழ்வும்‌ சாவும்‌.

தொழுநோய்‌ ஒருவன்‌ செய்த பாவத்தின்‌ பயனா என்று ஆராய்வதைவிடப்‌ பாவத்தால்‌ பீடிக்கப்பட்ட ஆன்மாவன்‌ அடையாளம்‌ என்று கொள்வதே பொருத்தமானது.

எல்லா நோய்களுமே மனிதனுக்கு ஒரு வேதனை தான்‌. ஆனாலும்‌ சில நோய்கள்‌ மனிதனைப்‌ பிரித்தாளுகின்றன - எய்ட்ஸ்‌ போல்‌. இன்று கூட பலர்‌ எய்ட்ஸ்‌ நோயாளிகளை அருவெறுப்புடன்‌ பார்ப்பதும்‌, ஏளனமாக ஒதுக்குவதும்‌ நிகழத்தானே செய்கின்றன!

எகிப்து நாட்டினர்‌ தொழுநோயை “சாவுக்கு முன்‌ சாவு” (Death before death) என்கிறார்கள்‌. காரணம்‌ அது உயிர்‌ பறிக்கும்‌ நோய்‌ மட்டுமல்ல, உறவு பறிக்கும்‌ நோய்‌.

தொழுநோயின்‌ கடுமையை உணரவேண்டுமா? பழைய ஏற்பாட்டில்‌ யோபுவின்‌ மனநிலை மாற்றங்கள்‌ உணர்த்தும்‌. பல்வேறு இழப்புக்கள்‌ இன்னல்கள்‌ சூழ்ந்த போதெல்லாம்‌ “ஆண்டவர்‌ அளித்தார்‌; ஆண்டவர்‌ எடுத்துக்‌ கொண்டார்‌”. (யோபு 1 : 21), “நன்மையைக்‌ கடவுளிடமிருந்து பெற்ற நாம்‌ ஏன்‌ தீமையைப்‌ பெறக்கூடாது?” (யோபு 2 : 10) என்றெல்லாம்‌ தன்‌ நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர்‌, தொழுநோய்‌ பிடித்ததும்‌ ““ வாய்‌ திறந்து தாம்‌ பிறந்த நாளைப்‌ பழிக்கத்‌ தொடங்கினார்‌” தாயின்‌ வயிற்றில்‌ கருவான நேரத்தைச்‌ சபிக்கத்‌ தொடங்கினார்‌ (யோபு 3 : 1-3)

இயேசுவின்‌: காலத்தில்‌ தொமுநோய்‌ தீராத கொடிய நோயாக மட்டுமல்ல. தீண்டத்தகாத தீட்டாகவும்‌ கருதப்பட்டது. (யூதர்‌ பார்வையில்‌ தீண்டத்தகாத நான்கு பிரிவினர்‌: 1. தொழுநோயாளர்‌, 2. மாதவிடாய்ப்‌ பெண்கள்‌, 3. தூய்மைச்‌ சடங்குவரை பிள்ளை பெற்ற பெண்கள்‌, 4. புற இனத்தவர்‌).

தீண்டாமை என்பது பாவம்‌ என்று சிறு வயதிலிருந்தே பாடப்‌ புத்தகங்களில்‌ பதிவு செய்து கற்றுக்‌ கொடுத்தாலும்‌ தீண்டாமை ஒழிந்தபாடில்லையே! மத்திய அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம்‌ பீகார்‌ மாநிலத்தில்‌ சசராம்‌ என்னும்‌ நகரில்‌ அண்ணல்‌ காந்தியின்‌ உருவச்சிலையைத்‌ திறந்து வைத்தார்‌. நிகழ்ச்சி முடிந்து ஜெகஜீவன்ராம்‌ சென்றபிறகு காந்தியின்‌ சிலையைக்‌ கங்கை நீரால்‌ கழுவினார்கள்‌. ஏனென்றால்‌ தொட்டுத்‌ திறந்து வைத்தவர்‌ ஒரு தலீத்‌ இனத்தவர்‌ என்பதால்‌ சிலையே தீட்டுப்பட்டு விட்டதாம்‌. என்ன கொடுமை இது!

தொழுநோயாளி தீட்டுப்பட்டவர்‌, அவரோடு தொடர்பு கொள்பவரும்‌ தீட்டுப்பட்டவர்‌ என்பது மோசேயின்‌ சட்டம்‌ (லேவி. 13:1-2). பாதுகாப்புச்‌ சட்டம்‌ என்றாலும்‌ அது மனித நேயமற்றது. இருப்பினும்‌ இந்தச்‌ சட்டத்தைச்‌ சாபமாகக்‌ கருதி மனமுடைந்து போகாமல்‌, நம்பிக்கையோடு இயேசுவை நாடி வருகிறார்‌ இந்தத்‌ தொழுநோயாளர்‌. நோயைப்‌ பெரிதுபடுத்தி மனீதனை வீரட்டிய சமூகத்திலிருந்து மாறுபட்டு, நோயை விரட்டி மனிதத்தை முதன்மைப்படுத்தி மறுவாழ்வு வழங்குகிறார்‌ “இயேசு. மனிதனின்‌ மதிப்பு அவனுக்குள்ளே இருக்கிறது. உடல்‌ நலியலாம்‌, ஊனமுறலாம்‌. ஆனால்‌ உடலுக்குள்‌ இருக்கும்‌ மனிதனோ தொடர்ந்து கடவுளின்‌ சாயலைத்‌ தாங்குகிறான்‌. கடவுளின்‌ கைகளுக்குத்‌ தீண்டத்‌ தகாதவர்‌ என்று யாருமில்லை. தொழுநோயாளியை உலகம்‌ விரும்பவில்லை, அருவெறுக்கிறது. ஆனால்‌ கடவுள்‌ விரும்புகிறார்‌. எனவே உடல்‌ அழுகியவனாய்‌ உள்ளம்‌ நொறுங்கியவனாய்‌ வேதனையில்‌ வீழ்ந்து துடித்த அந்தத்‌ தொழுநோயாளிமேல்‌ மனமிரங்குகிறார்‌. அவனைத்‌ தொடுகிறார்‌. அவனும்‌ நலமடைகிறான்‌.

நம்பிக்கை * முயற்சி - வெற்றி. கடவுளை நம்பினோர்‌ கை விடப்படார்‌. முயற்சியுடையோர்‌ இகழ்ச்சி அடையார்‌. “செயலற்ற நம்பிக்கை பயனற்றது” (யாக்‌. 2:20). தொழுநோயாளி தான்‌ இருக்கும்‌ நிலையிலிருந்து மாறி நலம்‌ பெற விரும்புகிறார்‌. நீதியற்ற சமூக அமைப்பை மீறி இயேசுவிடம்‌ வருகிறார்‌. இயேசுவும்‌ சட்டத்தை மீறி அவனைத்‌ தொட்டுக்‌ குணப்படுத்துகிறார்‌.

மாற்றங்களை நாம்‌ விரும்பவில்லையெனில்‌ கடவுள்‌ கூட நம்மில்‌ செயலாற்ற இயலாது. நம்நிலை மாற்றப்பட வேண்டுமென்றால்‌ முதலில்‌ அதை நாம்‌ விரும்ப வேண்டும்‌. அப்போதுதான்‌ அது நம்‌ செபமாக மாறும்‌.

செபம்‌ இறைவனை மாற்றுவதில்லை. மாறாக செபிப்பவரை மாற்றுகிறது.

அடுத்து இம்மாற்றங்களை விரும்பினால்‌ மட்டும்‌ போதாது. அவை நடைபெற 'நாம்‌ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்‌. இயேசுவிடம்‌ துணிந்து வரத்‌ தொழுநோயாளி முயன்றார்‌. எனவே வெற்றி பெற்றார்‌. “Do not pray for anything that you are not ready to work for" என்பது ஆங்கிலப்‌ பொன்மொழி. அதாவது நாம்‌ எதற்காகச்‌ செபிக்கிறோமோ, அதற்கான தடைகளையும்‌ மீறி உழைக்கவும்‌ தயாராக இருக்க வேண்டும்‌. எடுத்துக்காட்டாக ஏழைகள்‌ வாழ்வில்‌ வளமை வரவேண்டும்‌ என்று செபித்தால்‌ ஏழைகள்‌ நலனுக்காக உழைக்க வேண்டும்‌. படிக்காமல்‌ இறைவனிடம்‌ செபித்தால்‌ போதுமா? ஒவ்வொரு மாற்றமும்‌ நம்‌ உழைப்பை எதிர்பார்க்கிறது.

“துன்ப வேளையில்‌ என்னைக்‌ கூப்பிடுங்கள்‌. உங்களைக்‌ காத்திடுவேன்‌. அப்போது நீங்கள்‌ என்னை மேன்மைப்படுத்துவீர்கள்‌”” (தி.பா. 50:15). அந்த நம்பிக்கையில்‌ தொழுநோயாளர்‌ இயேசுவிடம்‌ வந்து “நீர்‌ விரும்பினால்‌ எனது நோயை நீக்க உம்மால்‌ முடியும்‌ “என்று முழந்தாள்‌ படியிட்டு வேண்டினார்‌ (மார்க்‌. 1:40).

நம்‌ செபம்‌ எப்படி இருக்க வேண்டும்‌ என்பதற்கு ஓர்‌ அற்புதமான எடுத்துக்காட்டு. கடவுள்‌ என்றாலே அவரது வல்லமை மட்டுமல்ல (முடியுமா முடியாதா என்பதல்ல கேள்வி. அவரால்‌ இயலாதது என்ன?) அவரது விருப்பம்‌ நம்‌ நினைவுக்கு வர வேண்டும்‌. இறைவன்‌ நம்‌ நன்மையையே விரும்புகிறவர்‌ என்ற அடிப்படையில்‌ எழுவது இச்செபம்‌ “நீர்‌ விரும்பினால்‌...”

இறைவன்‌ நம்மை அன்பு செய்கிறார்‌. அன்பு செய்வது என்பது என்ன? அன்பு என்பது பிறர்‌ நலம்‌ வீரும்புவது. பிறர்‌ நன்மையை விரும்புவது. அவர்‌ விரும்புவதுதான்‌ நம்‌ நன்மையாக இருக்க முடியும்‌ என்ற விசுவாச வெளிப்பாடுமாகும்‌ அது.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அன்பே மிக உன்னத சிகிச்சை

நோயாளரின் உலக நாள்

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள், பார்கின்சன்ஸ் (Parkinson’s) நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்ற உண்மை, 1991ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. தான் ஒரு நோயாளர் என்பதை உணர்ந்ததும், நோய்களால் துன்புறும் கோடான கோடி மக்களுடன் தன்னையே அவர் இணைத்துக்கொண்டார். நோயுற்றோரை மையப்படுத்தி, 1992ம் ஆண்டு, நோயாளரின் உலக நாளை அவர் உருவாக்கினார். ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 11ம் தேதி, லூர்துநகர் அன்னை மரியாவின் திருநாளன்று, இந்த உலகநாள் சிறப்பிக்கப்படுகிறது. பிப்ரவரி 11ம் தேதி, இந்த ஞாயிறு, 32வது முறையாக, நோயாளரின் உலக நாளை நாம் சிறப்பிக்கின்றோம்.

நோயாளருக்கென ஓர் உலக நாளை அர்ப்பணிப்பது குறித்து, நம்மில் பலர் கேள்வி எழுப்பலாம். நோய் என்றதும், எதிர்மறையான எண்ணங்கள் பெருமளவு நம் மனதில் உருவாவதால், இந்தக் கேள்வியை எழுப்புகிறோம். நோயை நாம் கொண்டாடவில்லை, மாறாக, நோயுற்றோர் காட்டும் நம்பிக்கை, துணிவு, இவற்றையும், நோயுற்றோர் மீது மற்றவர் காட்டும் அக்கறை, பரிவு இவற்றையும், நாம் கொண்டாடுகிறோம்.

பார்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள், இந்த நோயோடு, தன் வாழ்வின் இறுதி 14 ஆண்டுகள் எவ்விதம் வாழ்ந்தார் என்பதையும், நோயுற்றோர் பலருக்கு நம்பிக்கையாகத் திகழ்ந்தார் என்பதையும் நாம் அறிவோம். நோயுறுதல், நலமடைதல் என்ற அனுபவங்களிலிருந்து நமக்குத் தேவையான, தெளிவானப் பாடங்களைப் பயில, நோயுற்றோரை இயேசு குணமாக்கும் மற்றொரு நிகழ்வை, இந்த ஞாயிறன்றும் சிந்திக்க வந்திருக்கிறோம்.

நலம் பெறுவதற்கு, மருத்துவ உதவிகள் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒருவர் நலமடைவதற்குத் தேவையான முதல் படி, தான் நலமடைவோம் என்று, அவர் உள்மனதில் எழும் நம்பிக்கை. இந்தக் கருத்தை சென்ற ஞாயிறு நாம் சிந்தித்தோம். நமது நம்பிக்கையின் ஊற்றான இறைவனை நாடிவருவதால் குணமடைகிறோம் என்பதை, ஒரு மருத்துவரே தெளிவாகக் கூறியுள்ளார்.

ஹென்றி மிச்செல் (Henry Mitchell) என்ற பேராசிரியர், கடுமையான ஒரு நோயிலிருந்து குணமடைந்தார். குணமளித்த மருத்துவருக்கு அவர் நன்றி சொன்னபோது, அந்த மருத்துவர் தந்த பதில், பேராசியரை வியப்புறச் செய்தது. மருத்துவர் சொன்னது இதுதான்: "முதலில் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். அடுத்து, உங்களைச் சுற்றியிருந்து, செபித்தவர்களுக்காக நன்றி சொல்லுங்கள். நீங்கள் குணமடைந்ததில் என் பங்கு மிகக் குறைவே" என்று மருத்துவர் சொன்னதும், அவர் மிக அதிக அளவு தாழ்ச்சியுடன் பேசுவதாக பேராசிரியர் மிச்செல் அவரிடம் சொன்னார். மருத்துவரோ, மறுமொழியாக, "நான் சொல்வதை நீங்கள் நம்பாமல் போகலாம். ஆனால், இதுதான் உண்மை. மருத்துவர்களாகிய நாங்கள் யாரையும் குணப்படுத்துவது கிடையாது. குணமடைவதற்குத் தடையாக உங்களுக்குள் இருக்கும் கிருமிகளை நீக்குவது ஒன்றையே, நாங்கள் திறம்படச் செய்கிறோம். மற்றபடி, நீங்கள் குணமடைவது, எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை" என்று கூறினார். இதைத்தான் புகழ்பெற்ற அறிஞர் ஒருவர் (Banjamin Franklin), வேறுவிதமாகக் கூறியுள்ளார்: "கடவுள் குணப்படுத்துகிறார்; குணப்படுத்தியதற்கான பணத்தை மருத்துவர் வசூல் செய்கிறார்" என்று.

ஒருவர் நலம் அடைவதற்கு, முதலில், இறைவனின் அருள், இரண்டாவது, நோயாளியிடமும், அவரைச் சுற்றியிருப்போரிடமும் உருவாகும் நம்பிக்கை, மூன்றாவது, மருத்துவரின் திறன் என்ற இந்த வரிசையில், நம் சிந்தனைகள் அமையவேண்டும்.

நோயாளரின் உலக நாளை எண்ணிப் பார்க்கும்போது, அண்மையில் நாம் சிறப்பித்த மற்றொரு முக்கியமான நாளும் நினைவுக்கு வருகிறது. மகாத்மா காந்தி கொலையுண்ட சனவரி 30ம் தேதி, அல்லது, அதற்கு அருகில் வரும் ஞாயிறன்று, தொழுநோயாளரின் உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு, சனவரி 28, ஞாயிறன்று, நாம் தொழுநோயாளரின் உலக நாளைக் கடைபிடித்தோம். நோயுற்றோரைப் பற்றி, சிறப்பாக தொழுநோயுற்றோரைப் பற்றி சிந்திக்க, இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்கு வாய்ப்பைத் தருகின்றன.

இன்றைய நற்செய்தியின் அறிமுக வரிகள் இதோ: ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார். (மாற்கு நற்செய்தி 1:40-42)

இப்போது நாம் கேட்ட இப்பகுதியை, “ஆண்டவர் வழங்கும் நற்செய்தி” என்று, உரத்தக் குரலில், அழுத்தந்திருத்தமாகக் கூறலாம். இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள கருத்து மட்டுமல்ல, அக்கருத்தைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களும் நற்செய்தியாக ஒலிக்கின்றன. தொழுநோயுற்ற ஒருவர் நலமடைகிறார் என்ற நிகழ்வு, நல்ல செய்திதான். சந்தேகமேயில்லை. இந்த நிகழ்வைச் சொல்ல பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களும், நல்ல செய்திதான். அந்த சொற்களைப் பற்றி நாம் முதலில் சிந்திப்பது நல்லது. இன்றைய நற்செய்தியில், தொழுநோயாளரைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், மரியாதை கலந்த சொற்களாக ஒலிக்கின்றன. இந்த அழகிய மாற்றம், கடந்த சில ஆண்டுகளாக, நம் சமுதாயத்தில் உருவான மனமாற்றம்.

ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன், நாம் பயன்படுத்திய விவிலியத்தில், தொழுநோயாளருக்குச் சரியான மரியாதை வழங்கப்படவில்லை. 1986ம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ் விவிலியத்தில், இன்றைய நற்செய்தி பகுதி எவ்விதம் எழுதப்பட்டிருந்தது என்பதையும், 1995ம் ஆண்டு வெளியிடப்பட்டு, இப்போது நாம் பயன்படுத்தும் விவிலியத்தில் இதே பகுதி எவ்விதம் எழுதப்பட்டுள்ளது என்பதையும் இணைத்துப் பார்த்தால் நாம் அடைந்துள்ள மனமாற்றத்தைப் புரிந்து கொள்ளலாம். 1986 வெளியான விவிலியப் பதிப்பில் நாம் வாசிப்பது இதுதான்: ஒரு நாள் தொழுநோயாளி ஒருவன் இயேசுவிடம் வந்து முழந்தாளிட்டு, “நீர் விரும்பினால் என்னைக் குணமாக்க உம்மால் கூடும்” என்று வேண்டினான். (மாற்கு 1:40)

இதே இறைவாக்கியம், 1995 வெளியான விவிலியப் பதிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். (மாற்கு 1:40)

பழைய விவிலியப் பதிப்பில் தொழுநோயாளியைச் சுட்டிக்காட்ட, ‘அவன்’, என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய விவிலியப் பதிப்பில், தொழுநோயாளரை, ‘அவர்’, என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். தொழுநோயாளரை, ஒரு மனிதராக மதித்து, அவருக்குரிய மரியாதையை வழங்குவது, நாம் அண்மைய ஆண்டுகளில் பின்பற்றும் அழகான முன்னேற்றம்.

தொழுநோய், தொழுநோயாளர் என்ற வார்த்தைகளைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம். 1986க்கும் முந்தைய விவிலியப் பதிப்புக்களில், ‘தொழுநோயாளர்’ என்ற சொல்லுக்குப் பதில் ‘குஷ்டரோகி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம். ஆங்கிலத்தில், leper என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ‘குஷ்டரோகி’ என்பதற்கும், ‘தொழுநோயாளர்’ என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள். Leper என்பதற்கும் leprosy patient என்பதற்கும் எத்தனையோ வேறுபாடுகள் உள்ளன. வெறும் சொற்களில் காணப்படும் வேறுபாடுகள் அல்ல. மாறாக, அவர்களைக் குறித்து நாம் கொண்டிருக்கும் எண்ணங்களை, அச்சொற்கள் வெளிப்படுத்துகின்றன. இப்போது, ஆங்கிலத்திலும், தமிழிலிலும் சரியானச் சொற்களைப் பயன்படுத்தும் அளவு நாம் பக்குவமடைந்துள்ளோம்.

நாம் பயன்படுத்தும் வார்த்தைகளின் வலிமையைப் பற்றி நாம் நன்கறிவோம். ஒருவரை நாம் எவ்வித வார்த்தைகள் கொண்டு அழைக்கிறோம் என்பதிலேயே, அவரைக் குறித்து நாம் கொண்டிருக்கும் மதிப்பு, அல்லது, அவமதிப்பு ஆகியவை தெளிவாகத் தெரிந்துவிடும். ஒருவரை, ‘குஷ்டரோகி’ என்று சொல்லும்போது, அவர் அந்த நோயாகவே மாறிவிட்டதைப்போன்ற உணர்வு எழுகிறது. அதற்குப் பதில், அவரை, ‘தொழுநோயாளர்’ என்று சொல்லும்போது, சந்தர்ப்பச் சூழ்நிலையால் அவர் அந்த நோயில் துன்புறுவதை ஏற்றுக்கொள்கிறோம். அப்படிப்பட்ட புரிதலில், அவரைப்பற்றி சிறிதளவாகிலும் உள்ளத்தில் மரியாதை பிறக்கும். சாதிய மடமை என்ற நோயால் துன்புறும் இந்திய சமுதாயத்தில், ஒரு சில குலங்களில், குடும்பங்களில், இடங்களில் பிறந்தவர்களுக்கு, அவர்களுக்கென்று உரிய பெயரை மறந்துவிட்டு, அல்லது, மறுத்துவிட்டு, அவர்கள் பிறந்த சாதியை அவர்களது அடையாளமாக மாற்றிவிடுகிறோம். இந்தியாவின் சாபக்கேடாக விளங்கும் இந்தச் சமுதாயக் குற்றத்திற்கு, இந்நேரத்தில் இறைவனிடம் மன்னிப்பு வேண்டுவோம்.

முத்திரைகள் குத்தி, மக்களைப் பிரிப்பதில் யூத மதத் தலைவர்கள் கைதேர்ந்தவர்கள். நோயுற்றோரை, இறைவனிடமிருந்து பிரிந்தவர்கள், எனவே பாவிகள் என்று அவர்கள் தீர்மானித்தனர். அதிலும், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனிதர்களுடன் வாழத் தகுதியற்ற பெரும் பாவிகள் என்ற முத்திரை குத்தப்பட்டது. தொழுநோய் என்ற முத்திரை குத்தப்பட்டவர்கள் அனுபவிக்க வேண்டிய கொடுமைகளை, இன்றைய முதல் வாசகம் இவ்வாறு சொல்கிறது: தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, தீட்டு, தீட்டு, என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார். (லேவியர் 13:44-46)

இஸ்ரயேல் மக்கள் தொழு நோயாளர்களை நடத்திய விதம் மிகக் கொடுமையானது. அந்த நோய் உடையவர் ஊருக்கு வெளியே தங்கவேண்டும், ஊருக்குள் வரவேண்டிய அவசியம் இருந்தால், தீட்டு, தீட்டு, என குரலெழுப்பியவாறு வரவேண்டும். அதைக் கேட்டதும், எல்லாரும் விலகி விடுவார்கள். தொழுநோயாளி யாரையாவது தீண்டிவிட்டால், அவர்களும் தீட்டுப்பட்டவர் ஆகிவிடுவார்கள். ஒரு சில சமயங்களில், இப்படி நேர்ந்த தவறுகளுக்கு, அந்த நோயாளி கல்லால் எறியப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம்.

இந்தப் பின்னணியில் நாம் இன்றைய நற்செய்தி நிகழ்வைக் கற்பனை செய்து பார்க்கவேண்டும். இயேசுவைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருந்தது. அந்நேரத்தில், அங்கு வந்த தொழுநோயாளியின் மனதில், பெரும் போராட்டம் நிகழ்ந்திருக்கும். அந்தக் கூட்டத்தின் நடுவே சென்றால், அவர்கள் கோபத்திற்கு ஆளாகலாம், அந்தக் கோபம், வெறியாக மாறினால், கல்லால் எறியப்பட்டு, கொல்லப்படலாம். இதெல்லாம் தெரிந்திருந்தும், அந்தத் தொழுநோயாளி, இயேசுவை அணுகிச் சென்றார். அந்த நம்பிக்கையே, அவர் குணமடைந்ததற்கு முதல் படியாக அமைந்தது.

இயேசு, தூரத்தில் நின்றபடி, அவரைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால், இயேசு, தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் குணமாக்க விரும்பினார். எனவே, தன் கரங்களை நீட்டி தொழுநோயாளரைத் தொட்டார். இயேசு இவ்வாறு செய்தது, சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும். அதிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பது, இயேசுவின் நோக்கம் அல்ல. மாறாக, அவர்களும் நலம் பெறவேண்டும் என்பதே, அவர் எண்ணம். மதத் தலைவர்கள் தவறாகக் கற்பிக்கும் சட்டங்களால் கட்டுண்டு, மனிதர்களை, விலங்குகளிலும் கேவலமாக நடத்திவந்த இஸ்ரயேல் மக்களைக் குணமாக்கவே, இயேசு இதைச் செய்தார். தொழுநோயாளியின் உடலைத் தொட்டு குணமாக்கிய இயேசு, சூழ இருந்தவர்களின், மனதைத் தொட்டு, குணமாக்க முயன்றார்.

மூன்றாவது வாரமாக, இயேசுவின் குணமளிக்கும் நிகழ்வுகளை நாம் ஞாயிறு நற்செய்திகளில் கேட்டுவருகிறோம். குணம் பெறுவோம் என்ற நம்பிக்கை ஒருவர் மனதில் உதிப்பதுதான் அவர் குணம் பெறுவதற்கான முதல் படி என்று, சென்ற வாரம் சிந்தித்தோம். நோயுற்றவர்கள், மனிதப்பிறவிகளுக்குரிய மரியாதையைப் பெறுவது அவர்கள் குணம் பெறுவதற்குத் தேவையான மற்றொரு முக்கிய வழி என்பதை, இன்றைய நற்செய்தியில் நாம் கற்றுக்கொள்கிறோம்.

இன்றைய உலகில், தொழுநோய் ஒழிக்கப்பட்டுவிட்டதாக நாம் கூறிவந்தாலும், இன்னும் ஆயிரக்கணக்கானோர் இந்த பயங்கர நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் வெளிப்படையான நிராகரிப்பு மற்றும் மறைமுகமான புறக்கணிப்பு ஆகியவற்றை சந்தித்து வருகின்றனர். கோவிட்-19 பெருந்தொற்றின் வேளையில், நாம் அனைவரும் 'சமூக தூரம்' மற்றும் 'தனிமைப்படுத்துதல்' ஆகியவற்றின் வேதனைகளை உணர்ந்திருக்கிறோம். கோவிட் பெருந்தொற்று மட்டுமல்ல, சாதிவெறி மற்றும் இனவெறி ஆகிய கிருமிகள் இன்னும் நம் சமுதாயத்தில் அர்த்தமற்ற பிளவுகளை உருவாக்கியுள்ளன. நம் சமுதாயத்திலிருந்து இந்நோய்கள் நீங்கவேண்டும் என்று, பிப்ரவரி 11ம் தேதி நாம் கொண்டாடும் லூர்துநகர் அன்னைமரியாவின் பரிந்துரையை இறைஞ்சுவோம்.

நாம் ஏற்கனவே கூறியதுபோல், ஒவ்வோர் ஆண்டும், பிப்ரவரி 11ம் தேதி, லூர்து நகர் அன்னை மரியாவின் திருநாளாக மட்டுமல்லாமல், நோயாளரின் உலக நாளாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இவ்வாண்டு சிறப்பிக்கப்படும் நோயாளரின் 32வது உலக நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று" - உறவுகளை குணமாக்குவதன் வழியே, நோயுற்றோரை குணமாக்க... என்ற மையக்கருத்துடன் தன் செய்தியை வெளியிட்டுள்ளார். இச்செய்தியில் அவர் கூறும் ஒரு சில எண்ணங்களுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்:

கோவிட்-19 பெருந்தொற்றின்போது யாரையும் காண அனுமதியின்றி, தனித்து விடப்பட்ட நோயாளிகளை நினைத்துப் பார்க்கிறேன். போர் மற்றும் அதன் துயரமான விளைவுகளால், ஆதரவும் உதவியும் இல்லாமல் தவிப்பவர்கள் படும் வேதனையில் நானும் பங்கு கொள்கிறேன். இன்றைய சமுதாயத்தில், போர், மிக பயங்கரமான நோய்.

அமைதி மற்றும் அதிக வளங்களை பெற்றிருக்கும் நாடுகளிலும், முதியோர், மற்றும் நோயுற்றோர் தனிமையிலும், ஒருசில வேளைகளில், கைவிடப்பட்ட நிலையிலும் வாழ்வதை நாம் அறிவோம். சுயநலத்தை போற்றி வளர்க்கும் நம் கலாச்சாரத்தின் ஒரு வெளிப்பாடு, தனிமை என்ற இந்த நோய். வாழ்க்கையில் இந்த மைய உண்மையை நினைவில் கொள்வோம்: யாரோ நம்மை வரவேற்றதால், நாம் உலகிற்கு வந்தோம்; நாம் அன்பிற்காக படைக்கப்பட்டோம். சமுதாயத்தின் நோய்களைக் குணப்படுத்த நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய முதல் சிகிச்சை, அன்பு ஒன்றே.

தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, மனநலத்தையும், உடல் நலத்தையும் இறைவனிடமிருந்து பெற்றுத்தரும் லூர்துநகர் அன்னை மரியாவின் பரிந்துரை வழியே, நாம் அனைவரும், உடல் நோய்கள் மற்றும், சமுதாய நோய்கள் அனைத்திலுமிருந்து நலம் பெற்று வாழ, இறையருளை இறைஞ்சுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

32-ஆவது உலக நோயுற்றோர் நாள்
அவர் நலமடைந்தார்!

ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 11-ஆம் நாளில், அன்னை கன்னி மரியாவை லூர்து அன்னையாக நினைவுகூர்கிற அன்று, உலக நோயுற்றோர் நாளைக் கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு 32-ஆவது உலக நோயுற்றோர் நாளின் செய்தியாக ‘மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று: உறவுகளைக் குணமாக்குவதன் வழியாக நோயுற்றோரைக் குணமாக்குதல்‘ என்னும் தலைப்பில் செய்தி வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் செய்தியையும் இந்நாளின் வாசகங்களையும் இணைத்து இன்றைய நாளில் சிந்திப்போம்.

இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்களில் மையமாக இருக்கின்ற ஒரு வார்த்தை ‘தொழுநோய்.’ தொழுநோய் பீடித்தவர் ‘நடைபிணம்’ என்று அந்த நாள்களில் கருதப்பட்டார் தொழுநோயாளர் அன்றைய எபிரேய மற்றும் கானானிய சமூகத்தில் மூவகை துன்பங்களை அனுபவித்தார்:

(அ) உடல்சார் துன்பம்: தொழுநோய் பீடித்த உடல் புண்களால் நிறைந்து நாற்றமெடுக்கும். தோலின் நிறம் மாறும். தோல் தன் உணரும் தன்மையை இழக்கும். தோலுக்கு உணரும் தன்மை இல்லாததால் நாய் அல்லது பூனை புண்களை நக்கினாலும், எறும்புகள் அல்லது ஈக்கள் மொய்த்தாலும் உணர முடியாது. கை மற்றும் கால் விரல்கள் சூம்பிப் போகும். மருந்துகள் இல்லாத நிலையில் இறப்பு ஒன்றே இதற்கான மருந்து என்று கருதப்பட்டது.

(ஆ) உறவுசார் துன்பம்: தொழுநோய் ஒருவர் மற்றவருக்குப் பரவக் கூடிய நோய் என்பதாலும், மருந்துகள் அல்லது தடுப்பு மருந்துகள் இல்லாத நிலையில் சமூகப் பரவலைத் தடுப்பதற்காக, நோயுற்ற நபரைத் தொற்றொதுக்கம் செய்வது வழக்கம். இப்படியாக தொழுநோய் பீடித்த ஒருவர் அவருடைய குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து பிரித்துவைக்கப்பட்டதால் உறவுசார் துன்பத்தையும் அவர் அனுபவிக்க நேரிட்டது.

(இ) சமயம்சார் துன்பம்: ஒருவர் தான் செய்த பாவத்திற்கு கடவுள் தரும் தண்டனையே தொழுநோய் என்று கருதப்பட்டது. கடவுளால் மட்டுமே இதைக் குணமாக்க இயலும் (காண். நாமான் நிகழ்வு) என்ற நிலை இருந்ததால், இந்நோய் பீடிக்கப்பட்டவர் கடவுளின் சாபத்துக்கு ஆளானவராகக் கருதப்பட்டார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். லேவி 13), தொழுநோய் பீடித்தவரை எப்படித் தொற்றொதுக்கம் செய்ய வேண்டும் எனவும், அவர் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றியும் ஆண்டவர் மோசே மற்றும் ஆரோனுக்கு வலியுறுத்துகிறார். கடவுளிடமிருந்து வரும் பாவம் என்று கருதப்பட்டதால் குருக்களே இந்நோய் பற்றிய தொற்றொதுக்கத்தை அனுமதிப்பவர்களாகவும், மீண்டும் மக்களை ஊருக்குள் அழைப்பவர்களாகவும் இருக்கின்றனர். தொழுநோய் என்பது கடவுள் மோசேக்குத் தரும் அடையாளமாகவும், முணுமுணுத்த மிரியாமுக்கு அவர் வழங்கிய தண்டனையாகவும் இருக்கிறது.

இரண்டாம் வாசகத்தில், புனித பவுல் கொரிந்து நகரக் குழுமத்தில் எழுந்த உணவுசார்ந்த பிரச்சினை ஒன்றைப் பற்றி அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார். சிலைகளுக்குப் படைத்தவற்றை உண்பதா வேண்டாமா என்ற பிரச்சினை கொரிந்து நகரில் எழுகின்றது. கொரிந்து நகரில் இருவகையான நம்பிக்கையாளர்கள் இருந்தனர். முதல் வகையினர் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்தனர். சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டதால் தங்கள் நம்பிக்கை மறைந்து போகும் என்று எண்ணவில்லை. இரண்டாம் வகையினர் நம்பிக்கையில் வலுவற்று இருந்தனர். சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவு இவர்களைப் பொருத்தவரையில் ஓர் இடறலாகக் கருதப்பட்டது. நம்பிக்கையில் வலுக்குறைந்து நின்றவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் மற்ற குழுவினர் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டனர். அவர்களுக்கு அறிவுறுத்துகின்ற பவுல், ‘நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும் எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்ய வேண்டும் எனவும்,’ மேலும் ‘ஒருவர் மற்றவருக்குப் பயன்தருவதையே நாட வேண்டும்’ என்றும் சொல்கின்றார். இவ்வாறாக, அவர்கள் மற்றவர்களைப் பற்றிய அக்கறை கொண்டிருக்க அழைக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வருகின்றார். அவர் இயேசுவை எங்கே சந்திக்கிறார் என்று தெரியவில்லை. தொழுநோயாளர் வசிக்கும் இடத்திற்கு இயேசு சென்றாரா, அல்லது ‘தீட்டு, தீட்டு’ என்று கத்திக்கொண்டே தொழுநோயாளர் இயேசுவிடம் வந்தாரா என்ற குறிப்பு இல்லை. மேற்காணும் இரண்டு நிலைகளிலும் இயேசு தம் சமகாலத்துச் சமூகத்தின் புரிதலைப் புரட்டிப் போடுகின்றார். ‘நீர் விரும்பினால் எது நோயை நீக்க உம்மால் முடியும்’ என்னும் தொழுநோயாளரின் வார்த்தைகளில் நம்பிக்கை தெரிவதோடு, இறைவிருப்பம் நிறைவேறுவதையே அவர் விரும்புகிறார் என்ற அவருடைய நல்லுள்ளமும் தெறிகிறது.

இயேசுவின் வல்ல செயல் மூன்று நிலைகளில் நடந்தேறுகிறது: ஒன்று, தொழுநோயாளர்மேல் இயேசு பரிவு கொள்கின்றார். இரண்டு, அவரைத் தொட்டு நலம் தருகின்றார். மூன்று, அவரை மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்காக மோசேயின் கட்டளையை நிறைவேற்றுமாறு பணிக்கின்றார்.

இயேசுவின் பரிவுள்ளம் தொழுநோய்பீடித்தவருக்கு நலம் தருவதுடன் அவரைக் குழுமத்துடனும் கடவுளுடனும் இணைக்கிறது.

முதல் படைப்பு நிகழ்வில் அனைத்தும் நல்லதெனக் காண்கிற கடவுள், மனிதரைப் படைத்தபோது அதை மிகவும் நல்லதெனக் காண்கிற கடவுள், ‘மனிதன் தனிமையாக இருப்பது நல்லது அன்று’ என்று கருதுகிறார். மனிதனுக்கு ஏற்று துணையை கடவுள் உருவாக்குவதன் வழியாக, மனிதர்கள் ஒருவர் மற்றவருடன் இணைந்து வாழ வேண்டும் என்று நிர்ணயிக்கிறார்.

நோயுற்றவர்கள் தங்கள் நோய்தரும் வலியை அனுபவிப்பதோடு தனிமையையும் அனுபவிக்கிறார்கள். கடவுள் தங்களுக்குத் தண்டனை கொடுத்துவிட்டதாக எண்ணிக் கடவுளிடமிருந்து தள்ளிப் போகிறார்கள். உறவினர்கள், நண்பர்கள், மற்றும் குழுமத்திலிருந்து தங்களையே தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள். நல்ல சமாரியன் எடுத்துக்காட்டில் நாம் காணும் காயப்பட்ட நபர்போல நோயுற்றவர் தனிமையில் கிடக்கிறார். குருவும் லேவியும் அவரை விட்டு விலகிச் செல்கிறார்கள். நல்ல சமாரியரோ அவர் அருகில் வருகிறார். அவருடைய உடனிருப்பே நலம் தருவதாக மாறுகிறது. காயப்பட்ட அந்த நபரை சாவடியில் சேர்க்கிறார் சமாரியர். முழுமையாக அவர் நலம் பெறும்வரை இன்னொருவரிடம் ஒப்படைக்கப்படுகிறார். இவ்வாறாக, மனிதர்களின், மனித உறவுகளின் உடனிருப்பே காயப்பட்டவருக்கு நலம் தருகிறது.

இன்றைய நாள் நமக்கு விடுக்கும் செய்தி என்ன?

(அ) இயேசுவைப் போல பரிவுள்ளம் கொள்வது

இயேசுவின் பரிவு என்னும் உணர்வு, தொடுதல் என்னும் செயலாக மாறுகிறது. நல்ல சமாரியர் தான் கொண்டிருந்த பரிவின் பொருட்டே தன் பயணத்தை நிறுத்தித் தன் கழுதையிலிருந்து இறங்குகிறார்.

(ஆ) உடனிருப்பைக் காட்டுதல்

‘தொடுதல்’ என்னும் செயல் ஒருவர் மற்றவருக்கு நாம் காட்டும் உடனிருப்பை எடுத்துரைக்கிறது. நாம் இந்த உலகிற்கு வந்தபோது நம்மை ஏந்திக்கொள்வதற்குக் கைகள் இருந்தன. நம் இருத்தல் மற்றவர்களுடைய உடனிருப்பால் சாத்தியமாகிறது எனில், நம் உடனிருத்தலால் மற்றவர்களுடைய இருத்தலும் மேன்மையுற வேண்டும்.

(இ) குழுமத்துடன் மறுஇணைப்பு செய்தல்

நலம் பெற்றவர் மீண்டும் குழுமத்துடன் சேருமாறு அனுப்புகிறார் இயேசு. மறுபக்கம், நோயுற்றவர்களை நம் சிந்தனையில் ஏந்த வேண்டும். அவர்களுடைய தேவைகளை நாம் கண்டுணர வேண்டும். அவர்களுக்கான சிறப்பான மேய்ப்புப் பணி அக்கறை வளர வேண்டும்.

‘அவர் நலமடைந்தார்’ – ஏனெனில், இயேசு அவரைத் தொட்டார்.

கடவுளின் பரிவுள்ளம் நம் இன்னல்களினின்று நம்மை விடுவிக்கிறது என்கிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 32).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுள் நமது நலனை விரும்புகிறார்!

"எப்படி இருக்கீங்க ?; நல்லாருக்கீங்களா? ;சௌக்கியமா ?" என்ற வார்த்தைகளே பெரும்பாலும் நமது உரையாடலின் தொடக்கமாக இருக்கிறது. . இதன் உள்ளார்ந்த அர்த்தம் என்ன? நாம் ஒருவர் மற்றவரின் நலவாழ்வை விரும்புகிறோம் என்பதல்லவா. ஒருவேளை ஒருவர் நலமாக இல்லை என நாம் அறிந்திருந்தால் குறைந்த பட்சம் "சரியாகிவிடும். வேண்டிக்கொள்கிறேன் " என்றாவது கூறமாட்டோமா! நோய் என்பது ஒரு தனிப்பட்ட நபரை மட்டுமல்ல மாறாக அவர் வாழ்கின்ற சமூகத்தையே பாதிக்கிறது. நோயாளி உடலாலும் மனதாலும் வேதனைப்படுகிறார். சுற்றியுயவர்களையோ பரிதாபமும், பயமும் ஏன் சில வேளைகளில் எரிச்சலும் கூட ஆட்கொள்கிறது என்றாலும் அது தவறல்ல.

அப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியதில் தொழுநோய் முதலிடம் பிடிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கொரோனா நோயின் போது நம்மிடம் அதிகமாக சொல்லப்பட்ட வார்த்தை "சமூக இடைவெளி " என்பதாகும். அது நமது வாழ்வை எவ்வளவு பாதித்தது. எவ்வளவு மனஅழுத்தத்தை தந்தது என்பதை நாம் அறிவோம். அதைவிட பன்மடங்காக துன்புற்றவர்கள்தான் யூத காலத்தில் வாழ்ந்த தொழுநோயாளிகள். நோயினால் ஏற்பட்ட வலியைவிட சமூக புறக்கணிப்பால் உறவுகள் உதறியதால் அவர்கள் பட்ட நெருக்கம் பெரிது. அப்படி சமூகமே உதறித்தள்ளினாலும் கடவுள் யார் மூலமாவது தன்கருணையை பொழிந்து அவர்களுக்கு நல்வாழ்வை தருவார். ஏனென்றால் அவர் தம் மக்களின் நலவாழ்வையே விரும்புகிறார்.கொரோன காலத்தில் தம்முயிரை துச்சமென கருதி உழைத்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் போன்றோர் கடவுளின் சாயலை பிரதிபலித்தனர் அன்றோ. தொழுநோயாளிகளுக்காக உழைத்த நம் அன்னை தெரசா இயேசுவை நம் கண்முன் கொணர்கிறார் அல்லவா!

கடவுள் நம் நல்வாழ்வை என்றுமே விரும்புகிறார் என்ற கருத்தை நற்செய்தியில் தொழுநோயாளர் சுகம் பெற்ற நிகழ்வு வாயிலாக மிக அழகாக நமக்கெல்லாம் எடுத்துரைக்கிறது இன்றைய வழிபாடு. உடலாலும் மனதாலும் நொந்தவராய் "நீர் விரும்பினால் என்னைக் குணமாக்கும் " என்று இயேசுவிடம் சரணாகதியான அவரை "நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக "என்று கூறி நலமாக்கினார் இயேசு. சமூகத்தில் அம்மனிதர் அடைந்த எல்லா அவமானங்களையும் நோயோடு சேர்த்து துடைத்து புதிய தோலை மட்டுமல்ல புதிய வாழ்வை தந்தார் இயேசு.

இந்நிகழ்வு நமக்கு சொல்லும் பாடம் என்ன? நலம் பெற வேண்டுமெனில் நம் நலவாழ்வை விரும்பும் கடவுளிடம் சரணாகதியடைய வேண்டும் என்பதுதானே. அதுமட்டுமல்ல பிறரின் நல்வாழ்வை விரும்புபவர்களாகவும் நாம் வாழ வேண்டும் என்பதும்தான்.

இன்று உலக நலம் நாடுவோர் தினம். நாம் பிறர் நல்வாழ்வை இயேசுவைப்போல விரும்புவோம்.அவரிடம் சரணடைந்து நாமும் நல்வாழ்வை பெறுவோம்.

இறைவேண்டல்

இயேசுவே! நான் விரும்புகிறேன் என்று தொழுநோயாளரின் நலவாழ்வை நீர் ஆதரித்ததுபோல எம்மோடு வாழ்வோரின் நலம்விரும்பிகளாக வாழவும் நாங்களும் நலம்பெறவும் வரமருளும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser