மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணிகள் 4: 32-35 | 1 யோவான் 5: 1-6 | யோவான் 20: 19-31

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


இறைவன்‌ மீது நம்பிக்கைக்‌ கொண்ட மக்கள்‌ அனைவரும்‌ ஒரே உள்ளமும்‌, ஒரே உயிருமாய்‌ இருந்தார்கள்‌. எல்லாம்‌ அவர்களுக்குப்‌ பொதுவாய்‌ இருந்தது என்று முதல்‌ வாசகம்‌ அறிவிக்கிறது. ஆதிக்‌ கிறிஸ்தவர்கள்‌ உண்மையான விசுவாசம்‌, ஒற்றுமை, அமைதி, தேவைக்கேற்ப பகிர்வு, தெளிவான சிந்தனை இவைகளை மையமாகக்‌ கொண்டு வாழ்ந்ததால்‌ அவர்கள்‌ அனைவரும்‌ பகிர்விலும்‌, நம்பிக்கையிலும்‌ நிலைத்திருந்தனர்‌. பகிர்வையும்‌ நம்பிக்கையையும்‌ இரு கண்களாகக்‌ கருதினார்கள்‌. செயலற்ற நம்பிக்கை பயனற்றதாகும்‌ (தொ நூ. 2:20), ஆதிக்‌ கிறிஸ்தவர்கள்‌ போட்டி, பொறாமை, சுயநலம்‌ போன்ற நஞ்சுக்‌ குணங்கள்‌ இல்லாமல்‌, பகிர்வும்‌, சகோதர வாஞ்சையும்‌, பொதுநோக்குப்‌ பார்வையும்‌ கொண்டு வாழ்ந்தனர்‌. அதுவே அவர்கள்‌ இறைவன்‌ மீது கொண்ட நம்பிக்கையை அதிகரித்தது. இயேசுவின்‌ உயிர்ப்பை முதலில்‌ நம்ப மறுத்தவர்‌ தோமா.

தோமா தனது நம்பிக்கையை இழக்கக்‌ காரணம்‌ அவர்‌ மற்ற சீடர்களிடமிருந்து விலகித்‌ தம்மைத்‌ தனிமைப்படுத்திக்‌ கொண்டார்‌. அவர்‌ மீண்டும்‌ சீடர்களுடன்‌ இணைந்தபோதுதான்‌ உயிர்த்த ஆண்டவர்‌ அவருக்குத்‌ தோன்றினார்‌. குழம்பிய நிலையில்தான்‌ தெளிந்த சிந்தனை பிறக்கும்‌. குழம்பிய குட்டையில்தான்‌ தெளிந்த நீர்‌ கிடைக்கும்‌. எனவே குழம்பிய நிலையில்‌ இருந்த தோமா இயேசுவைக்‌ கண்ட பிறகு தெளிவு பெற்றார்‌. நீரே என்‌ கடவுள்‌. நீரே என்‌ ஆண்டவர்‌ (யோவான் 20:29) என்றார்‌. தோமாவைத்‌ தவிர வேறு யாரும்‌ இயேசுவைக்‌ கடவுள்‌ என்று நேரடியாக அழைக்கவில்லை. அம்மா ஊட்டினால்தான்‌ சாப்பிடுவேன்‌ என்று அடம்‌ பிடிக்கும்‌ குழந்தையைப்போல, இயேசுவைப்‌ பார்த்தால்தான்‌ நம்புவேன்‌ என்று சொன்ன தோமா, காயத்தோடு காட்சி தந்த இயேசுவைக்‌ கண்டவுடன்‌, என்‌ ஆண்டவரே என்று கதறினார்‌. அதன்‌ விளைவு, நாடுகள்‌ கடந்து இந்தியாவுக்கு வந்து நற்செய்திக்காக உயிரைத்‌ தியாகம்‌ செய்தார்‌.

ஆபிரகாம்‌ லிங்கன்‌ ஒரு முறை நாட்டில்‌ மிக முக்கியமான அதிகாரிகளை அழைத்துப்‌ பேசும்போது, எல்லா அதிகாரிகளும்‌ என்னை விட்டுப்‌ போனாலும்‌, இந்த நாட்டிலுள்ள உயர்‌ மட்டமும்‌ என்னைக்‌ கைவிட்டாலும்‌, இறைவன்‌ மேல்‌ உள்ள உறுதியான நம்பிக்கையாலும்‌, என்னிடம்‌ உள்ள தன்னம்பிக்கையாலும்‌ இறுதிவரை நிலைத்து நின்று வெற்றிகரமாகச்‌ செயல்படுவேன்‌ என்றார்‌. தோமா இறை மனித நம்பிக்கையின்‌ அடித்தளமானவர்‌. நம்பிக்கையின்‌ நங்கூரம்‌. விசுவாசத்தின்‌ வித்து. தியாகத்தின்‌ திரு உருவம்‌. தெளிவு பெற்ற பின்‌ விசுவாசத்தில்‌ வைரமாகத்‌ திகழ்கின்றார்‌. முதலில்‌ மறுத்தவர்‌, நம்பிக்கை கொண்ட பிறகு, என்‌ ஆண்டவரே, என்‌ கடவுளே, என்று சொன்ன வார்த்தைகள்‌ மூலம்‌ கிறிஸ்தவர்களின்‌ விசுவாசக்‌ கண்களைத்‌ திறந்துவிட்டவர்‌ என்றே கூறலாம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அச்சங்கள் பலவகை

சீடர்களின் அச்சத்தைத் தீர்த்து வைப்பவராக இன்றைய நற்செய்தியிலே இயேசு காட்சி அளிக்கின்றார். அன்று யூதர்களுக்கு அஞ்சி அவர்கள் தங்கியிருந்த வீட்டின் கதவுகளை மூடி வைத்திருந்தனர்.

பச்சை மரமாகிய இயேசுவுக்கே இந்த மக்கள் மரண தண்டனை அளித்து விட்டார்கள். நம்மை என்னச் செய்யப்போகின்றார்களோ? என்பதை எண்ணி சீடர்கள் பயந்தார்கள். இயேசு பட்ட பாடுகள் அனைத்தும் அவர்கள் கண் முன்னால் நின்று அவர்களை அச்சுறுத்தின.

அச்சம் அந்தச் சீடர்கள் மனத்திலிருந்ததால் அவர்களிடம் மகிழ்ச்சி இல்லை. அச்சமிருக்கும் இடத்திலே அமைதியிருக்காது. அமைதியில்லா இடத்திலே மகிழ்ச்சி இருக்காது.

நான் ஒரு நாள் மாலை நேரத்தில் வங்கக் கடலோரத்தில் நடந்து கொண்டிருந்தேன். அங்கே ஓர் அழகான ஆண் குழந்தை, அந்தச் சிறுவனுக்கு வயது நான்கு இருக்கும். அவனுடைய பெற்றோர் அந்தக் கடற்கரையிலிருந்த மணல் மேடுகளில் ஒன்றின் மீது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தச் சிறுவனோ கடலைப் பார்த்தோ , கடலலைகளைப் பார்த்தோ பயப்படாமல் கடலோரத்தில் விளையாடிக்கொண்டிருந்தான். தாயும், தந்தையும் தன் அருகிலிருப்பதால், தனக்கு எந்த ஆபத்தும் நேராது ; அப்படியே நேர்ந்தாலும் தனது தாயும், தந்தையும் தன்னைக் காப்பாற்றிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அவன் அப்படி அச்சமின்றி விளையாடிக்கொண்டிருந்தான்.

நம்மை அன்பு செய்யும் ஒருவர் நம் அருகில் இருக்கும்போது, அதுவும் அன்போடு கலந்த ஆற்றல் மிக்க ஒருவர் நம்மோடு இருக்கும்போது நாம் எதற்கும் அஞ்சுவதில்லை.

இன்றைய நற்செய்தியில் சீடர்களை அன்பு செய்த இயேசு அவர்கள் அருகில் நின்றபோது சீடர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதைக் காண்கின்றோம்.

நம்பிக்கையில் உயிரை ஊற வைப்போம்!ஒரு மனிதனை இல்லாமை அச்சுறுத்தலாம்; இயலாமை அச்சுறுத்தலாம்;கல்லாமை அச்சுறுத்தலாம்; அறியாமை அச்சுறுத்தலாம்; நோய் அச்சுறுத்தலாம்; பேய் அச்சுறுத்தலாம்!

வாழ்க்கையிலே எத்தனையோ வகையான அச்சங்கள்!
வானம் இடிந்து போகுமோ என்ற அச்சம்!
பூமி தூர்ந்துபோகுமோ என்ற அச்சம்!
கடல் தொலைந்து போகுமோ என்ற அச்சம்!
சூரியன் சுண்டிப் போகுமோ என்ற அச்சம்!
சந்திரன் சரிந்து போகுமோ என்ற அச்சம்!
இதோ உயிர்த்த ஆண்டவர் நம்முன்னே நின்று நம் ஒவ்வொருவரையும் பார்த்து இவ்வாறு கூறுகின்றார்:

வறுமையிலிருந்து மக்களை நான் விடுவித்திருக்கின்றேன் (யோவா 2:1-11). பசியிலிருந்து மக்களை நான் விடுவித்திருக்கின்றேன் (யோவா 6:1-13). பாவத்திலிருந்து மக்களை நான் விடுவித்திருக்கின்றேன் (லூக் 7:36-50), மரணத்திலிருந்து மக்களை நான் விடுவித்திருக்கின்றேன் (யோவா 11:1-44). நான் உன்னோடு இருந்தால் அச்சம் தரக்கூடிய எதுவும் உன்னருகில் வராது. நீ எல்லா நம்பிக்கையையும் என் மீது வைத்து தொடக்க கால கிறிஸ்தவர்களைப் போல வாழ முற்படு (முதல் வாசகம்); உலகை வெல்வது நம்பிக்கையே என்ற என் அடியார் யோவானின் கூற்றுக்குச் செவிமடு (இரண்டாம் வாசகம்). அப்போது நீ துணிந்து நிற்பாய், நிமிர்ந்து நிற்பாய் !

மேலும் அறிவோம் :

அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்(கு) இயல்பு (குறள் : 382).

பொருள் : அச்சம் எதுவுமில்லாத துணிவு, தேவைப்படுவோர்க்கு வேண்டியவற்றை வழங்கும் கொடைச் சிறப்பு, வருமுன் காக்கும் அறிவாற்றல், அயர்வில்லாத ஊக்கம் ஆகிய நான்கும் நாடாளும் வேந்தனுக்கு உரிய இயல்புகள் ஆகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வித்தை காட்டுபவர் ஓர் ஊருக்குச் சென்று, இரண்டு இரும்புக் கம்பங்களை நீண்ட இடைவெளி விட்டுத் தரையில் ஊன்றி, இரு கம்பங்களுக்குமிடையே ஒரு பெரிய இரும்புக் கம்பியைக் கட்டி, பஜார் மக்களை வித்தைக்கு அழைக்க, அவர்களும் திரண்டு வந்தனர், அம்மக்களிடம், "நான் இந்த இரும்புக் கம்பியின் மீது ஒரு "சைக்கிளைத் தூக்கிக் கொண்டு நடக்கமுடியும் என்று நம்புகிறீர்களா?" என்று கேட்டபோது. அனைவரும், "உங்களால் முடியும்" என்று சொல்ல, அவரும் சைக்கிளைத் தூக்கிக் கொண்டு இரும்புக் கம்பியின் மீது நடக்க, அனைவரும் கரவொலி எழுப்பி அவரைப் பாராட்டினார். அடுத்து அவர் அவர்களிடம், "ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு இந்த இரும்புக் கம்பியின் மீது நடக்கமுடியும் என்று நம்புகிறீர்களா?" என்று கேட்டபோது. அனைவரும், "உங்களால் நிச்சயமாக முடியும்" என்றனர். ஆனால் யாருமே அவரை நம்பித் தங்கள் குழந்தையை அவரிடம் கொடுக்க முன்வரவில்லை! அவர்கள் அவரை எண்ணத்தளவில் நம்பினாலும் மனத்தளவில் நம்பவில்லை!

நாமும் கடவுளைக் கொள்கையளவில் நம்பி, அவரை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மனத்தளவில் அவரிடம் நம்மை முழுமையாகக் கையளிக்க இன்னும் பக்குவமடையவில்லை. நமது கடவுள் நம்பிக்கை முழுமையடையவில்லை.

இயேசுவின் உயிர்ப்பை முதலில் நம்ப மறுத்தார் தோமா. ஆனால் உயிர்த்த இயேசுவை அவர் நேரில் கண்டபோது அவரது நம்பிக்கை உச்சக் கட்டத்தை அடைந்தது. உயிர்த்த ஆண்டவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்" (யோவா 20:29) என்றார், அவர் கூறியது உண்மையிலேயே விசுவாச அறிக்கையாகும். நற்செய்தியில் தோமாவைத் தவிர வேறு யாருமே இயேசுவைக் 'கடவுளே' என்று நேரடியாக அழைக்கவில்லை. இவ்வாறு தோமா நம்பிக்கைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

புனித தோமாவுடன் இணைந்து நாமும் உயிர்த்த ஆண்டவர் மீது நமக்குள்ள நம்பிக்கையை ஆழப்படுத்தி அவரிடம் சரணடைவோம். 'இயேசு ஆண்டவர்' என்று வாயினால் அறிக்கையிட்டு, கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார் என்று உள்ளத்தால் நம்பினால் நாம் மீட்படைவோம் (உரோ 10:9).

நம்பிக்கையைத் தொடங்கி வைப்பவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது நமது கண்களைப் பதியவைத்து, மனந்தளராது எவ்வித இன்னல் இடையூறுகளையும் மேற்கொள்ள வேண்டும் (எபி 12:2-3). இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் குறிப்பிடுவதுபோல, தமது நம்பிக்கைதான் உலகை வெல்லுகிறது (1யோவா 5:4). நம்பிக்கையைக் கேடயமாகக் கொண்டுதான் நாம் தீயோனை வெல்ல முடியும் (எபே 6:16).

நமது நம்பிக்கையைச் செயலில் காட்டவேண்டும், கிறிஸ்துவ. வாழ்வு என்பது, 'அன்பின் வழியாய்ச் செயலாற்றும் நம்பிக்கை' (கலா. 5:6), செயலற்ற நம்பிக்கை பயனற்றது (யாக் 2:20)...

இன்றைய முதல்வாசகம் இயேசுவின் சீடர்கள் எவ்வாறு தங்களது நம்பிக்கைக்குச் செயல் வடிவம் கொடுத்தனர் என்பதை விவரிக்கிறது. நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் வாழ்ந்தனர். அவர்களுக்கு எல்லாமே பொதுவுடைமையாக இருந்தது, செபக்கூடத்தில் அப்பத்தைப் பிட்டுப் பகிர்ந்தது போலவே, வீட்டிலும் தங்களது உணவை மற்றவர்களுடன் கபடற்ற உள்ளத்துடன் பகிர்ந்தனர் (திப 4:32-35), அவர்களுடைய வழிபாட்டிற்கும் வாழ்க்கைக்கும் இடையே முரண்பாடில்லை, தொடக்கத் திருச்சபையில் நாம் காண்பது சமத்துவபுரம், சம்பந்தி.

ஒருவர் தனது நண்பர் வீட்டிற்குச் சென்றபோது, நண்பர் அவருக்குச் சுவையான சூப்புக் கொடுத்தார். அதில் கொஞ்சம் மீதி வைத்துக் கொண்டார். அந்த விருந்தினர் தொடர்ந்து மூன்று நாள் வத்தார். ஒவ்வொரு நாளும் முதல் நாளில் மீதியிருந்த சூப்பில் தண்ணீரைச் சேர்த்துச் சுட வைத்துக் கொடுத்தார். நான்காம் நாள். குப்பைக் குடித்த விருந்தினர் நண்பரிடம், "இதுஎன்ன! சூப்பா?" என்று கேட்டதற்கு, அவரிடம் நபர் கூறினார்: "இது சூப்பல்ல, சூட்பினுடைய சூப்பினுடைய சூப்பினுடைய சூப்பு."

நாம் இப்போது கடைப்பிடிப்பது நற்செய்தியில்லை, மாறாக, நற்செய்தியினுடைய, நற்செய்தியினுடைய, நற்செய்தியினுடைய நற்செய்தி, நற்செய்தியில் கலப்படம் செய்து அதன் வீரியத்தைக் குறைத்து விட்டோம். நாம் இன்று கடைப்பிடிக்கும் நற்செய்தி சாரமற்றச் சக்கை, எனவே, "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" (1யோவா 3:18).

தோமா தனது நம்பிக்கையை இழக்கக் காரணம், அவர் மற்றச் சீடர்களிடமிருந்து விலகித் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டார், அவர் மீண்டும் மற்றச் சீடர்களுடன் இணைந்தபோதுதான் உயிர்த்த ஆண்டவர் அவருக்குத் தோன்றினார். இயேசு தோமாவுக்குத் தனிப்பட்ட முறையில் தோன்றவில்லை.

சிலர் இன்று தங்கள் நம்பிக்கையை இழப்பதற்குக் காரணம், அவர்கள் திருச்சபையின் உறவு ஒன்றிப்பிலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்கின்றார், தாயிறு திருவழிபாட்டிற்குக் கூட அவர்கள் வருவதில்லை. அவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கிறார் பிரேய திருமடலின் ஆசிரியர், "சிலர் வழக்கமாக நமது சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது. ஒன்று கூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக" (எபி 10:25).

எனவே, குறைந்த அளவு ஞாயிறு தோறும் திருவழிபாட்டில் கலந்து கொண்டு, * திருக்கட்டத்திலும் அருள்வாக்கிலும் திருப்பணியாளரிடத்திலும், சிறப்பாக அப்பம் பிடுதலிலும் கிறிஸ்துவை அடையாளம் கண்டு, நமது நம்பிக்கையும் அன்பும் வலிவும் பொலிவும் மிக்கதாக மாற்றுவோமாக.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அடையாளப்படுத்தும் காயங்கள்

திருத்தூதர்களில் மூன்று பேருடைய கல்லறைகளின் மீது மட்டும் பேராலயங்கள் கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றன. இன்றும் அவை புகழ்பெற்று விளங்குகின்றன.

  1. இத்தாலியின் உரோமை மாநகரில் பேதுரு பேராலயம்
  2. ஸ்பெயினில் கம்பொஸ்டெல்லா மாநகரில் யாக்கோபு பேராலயம்
  3. இந்தியாவில் சென்னை மாநகரில் தோமா பேராலயம்.

சென்னை தூய தோமா பேராலயம் இன்று தேசியத் திருத்தலமாகித் திரள் திரளாகத் திருப்பயணிகளை - சுற்றுலாப் ஆர்வலர்களை ஈர்க்கிறது.

இந்தியத் திருநாட்டின் மீது இயேசு கொண்டிருக்கும் அன்புக்கு எடுத்துக்காட்டு தூய தோமா. தன் திருத்தூதர்களில் ஒருவரை - அதுவும் தூய தோமாவை இந்த நாட்டில் நம்பிக்கைத் தீபம் ஏற்ற அனுப்பினார் எனில், இயேசு நம்நாட்டை எவ்வளவு நேசித்திருக்க வேண்டும்! தோமாவை நினைத்தாலே நம் நெஞ்சமெல்லாம் பெருமிதத்தால் விம்மி எழும்.

உயிர்த்த இயேசு சீடர்களுக்குத் தோன்றினார். அப்போது தோமா அங்கு இல்லை. இயேசுவின் தழும்புகளைப் பார்த்து “ஆணிகள் இருந்த இடத்தில் என் விரலை விட்டால் ஒழிய நம்ப மாட்டேன்” என்றார். தோமாவின் ஐயப்பாட்டினை நீக்க இயேசு மீண்டும் தோன்றினார். தோமாவை அழைத்து “இதோ என் கைகள். இங்கே உன் விரலை விடு” என்று கூறினார். மகிமையான அந்தக் காயங்கள் தோமாவில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கிச் சரணடைய வைத்தது! நம்பாத தோமாவை நம்ப வைத்தது இயேசு தன் காயங்களைக் காட்டித்தானே!

இயேசுவின் உயிர்ப்பை முதலில் நம்ப மறுத்தார் தோமார். ஆனால் உயிர்த்த இயேசுவை நேரில் கண்டதும் அவரது நம்பிக்கை உச்சத்தை அடைந்தது. "நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்" என்றார். நற்செய்தியில் தோமாவைத் தவிர வேறு எவருமே இயேசுவைக் கடவுள் என்று நேரடியாக அழைத்ததில்லை. இவ்வாறு தோமா நம்பிக்கைக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

கோடி அற்புதர் தூய அந்தோனியாரின் பார்வையில் இயேசுவை அடையாளப்படுத்தும் தோமாவின் காயங்கள். ஒருநாள் அலகை இயேசுவின் உருவில் பதுவை அந்தோனியாருக்குத் தோன்றி, “எதற்கும் ஒருகாலம் உண்டு என்று விவிலியம் சொல்ல வில்லையா? இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு கடும்தவம் தேவைதானா? முதிர்ந்த வயதில் அதில் முனைப்பைக் காட்டலாமே!" என்று சோதித்ததாம். இந்தக்காட்சியின் உண்மைத் தன்மையைச் சந்தேகித்த அந்தோனியார் கேட்டாராம்: “'நீ உண்மையில் இயேசு என்றால் உன் கைகளையும் கால்களையும் துளைத்திருக்கும் காயங்களைக் காட்டு", "நான் விண்ணிலிருந்து வருகிறேன் என் மகிமையான உடலில்" என்று அலகை சொல்ல, “சாத்தானே, அப்பாலே போ, வடுக்கள் இல்லாக் கிறிஸ்து, கிறிஸ்து அல்ல” என்றாராம் அந்தோனியார். சவாலைச் சந்திக்கச் சக்தியற்ற பேய் தலைதெறிக்க ஓடி மறைந்ததாம்.

இயேசுவின் காயங்கள் அடையாளப்படுத்துபவை மட்டுமல்ல. நமக்கு அடைக்கலம் தருபவை. தூய பெர்னார்து சொல்வார்: “நீங்கள் அவருடைய விலாவில் கையை விட்டால் மட்டும் போதாது நீங்கள் முழுவதும் நுழைய வேண்டும். அவருடைய விலாவில் உள்ள வாயில் வழியாக இயேசுவின் திரு இருதயத்துக்குள் தஞ்சம் புக வேண்டும்”. அவரது காயங்களில் நாம் புகலிடம் தேடும் போது, உயிர்த்த இயேசுவின் மீது வைக்கும் நம்பிக்கைக்கு இன்றைய வழிபாடு வாக்களிக்கின்ற பரிசுகள் மூன்று .

1. சமாதானம் (அமைதி) உறவின் முறிவு சாவில் வந்து முடிகிறது. உறவின் முறிவுக்கும் சாவுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை நாம் மறைநூலில் காணலாம். விலக்கப்பட்ட கனியை உண்டதால் இறைவனோடு உறவு முறிந்தது, அதனால் சாவு நுழைந்தது (தொ.நூல்.2:17) மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு முறிந்ததால் வந்ததும் சாவுதான். அதுதான் முதல் கொலை (தொ.நூ.4:8). இப்படி உறவுகள் முறிந்தாலேயே இறுதியாகக் கிறிஸ்து ஏற்றதும் சாவுதான். இயேசுவின் உயிர்ப்பால் புது உறவு, புது வாழ்வு. அதனால், தான் தோன்றும் போதெல்லாம் “உங்களுக்கு அமைதி உரித்தாகுக” என வாழ்த்துகிறார்.

2. ஒப்புரவு (பாவ மன்னிப்பு.) “மன்னிப்பைக் கொடு மன அமைதி பெறு” - இது திருத்தந்தை 2ம் அருள்சின்னப்பரின் 1997 உலக அமைதி நாள் செய்தி. இறைவனோடும் அயலாரோடும் இயற்கையோடும் என்னோடும் நான் ஒப்புரவாகிற போது அமைதி என்னில் நிலைபெறும். அமைதி நிலைபெற்றால் ஆனந்தம் என்னைத் தானே வந்தடையும். அது உயிர்ப்பின் மகிழ்ச்சி.

3. தோழமை (சகோதர அன்பு) ஒப்புரவாகி உறவைப் புதுப்பிக்கின்றோம். அன்பு என்பது ஒன்றிக்கும் ஆற்றல் என்கிறார் தூய அக்வினாஸ் தோமா. ஆக, குடும்பத்தில் பங்கில் சமுதாயத்தில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் நிலவும் போது நாம் உயிர்ப்பின் மக்கள் நேருகிறது ஆகிறோம். கிறிஸ்தவர்களை “அல்லேலூயா மக்கள்" என்பர், ஒரு தொடக்கக் காலக் கிறிஸ்தவர்கள் உண்மையிலேயே அல்லேலூயா மக்களாகத் தான் இருந்தார்கள் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் - விவிலியத்தில் பார்க்கிறோம். அதுவும் உடைமைகளைப் பொதுவாக்கிப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு (தி.ப.2:44). இதுதான் அல்லேலூயா கிறிஸ்தவம்.

இன்றைய நற்செய்தியின் இறுதிவாக்கியம் விவிலியத்தின் தெளிவான நோக்கத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. "இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் ஒரு பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பட்டன" (யோவான் 20:31). நம்புவதற்காகவும் அதனால் புதுவாழ்வு பெறுவதற்காகவும், அதாவது

-உயிர்ப்பால் வரும் நம்பிக்கை. நம்பிக்கையின் அடித்தளமே இயேசுவின் உயிர்ப்புத்தான். "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால்... நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் பொருளற்றதாய் வார்த்தைகளில் மரியா வெளிப்படுத்தியதும் போராட்டமே! இருக்கும்” (1 கொரி.15:14)

- நம்பிக்கையால் வரும் புதுவாழ்வு. தொடக்க கால திருச்சபையின் வாழ்வுதான் அது. (தி.ப.2:42) பேதுரு சுட்டிக் காட்டும் புதுப்பிறப்பு (1 பேதுரு 1:3) கிறிஸ்தவ நம்பிக்கையே இயேசுவின் உயிர்ப்பில் வேரூன்றியது.

- தூய தோமாவுடன் இணைந்து நாமும் உயிர்த்த ஆண்டவர் மீது நம்முடைய நம்பிக்கையை ஆழப்படுத்தி அவரிடம் சரணடைவோம். "இயேசு ஆண்டவர் என்று வாயினால் அறிக்கையிட்டு, கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார் என்று உள்ளத்தால் நம்பினால் நாம் மீட்படைவோம்” (உரோமை 10:9) உங்களுக்கு அமைதி உரித்தாகுக! அல்லேலூயா!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறை இரக்கத்தின் ஞாயிறு

இந்தியாவில், அதிலும் குறிப்பாக, தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் (பிரச்சாரங்கள்) சூடு பிடித்துள்ளன. கோடை வெயிலின் வெப்பத்தையும் சேர்த்து, தேர்தல் களம் கொதி நிலையை அடைந்துள்ளது என்று சொன்னால், அது மிகையல்ல. தேர்தலையொட்டி, ஒவ்வொரு கட்சியும், ஊடகங்களையும், சமுதாய வலைத்தளங்களையும் விளம்பரங்களால் நிறைத்து வருகின்றன. அண்மையில், தமிழக கட்சியொன்று வெளியிட்ட விளம்பரம், வேலையில்லாத ஏழை இளையவரை மையப்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் வறியதொரு சூழலில் இருக்கும் தன் வீட்டின் முன் அமர்ந்து, கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருப்பதுபோல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. திடீரென அந்த இளைஞர், உரத்தக் குரலில், வீட்டினுள் இருக்கும் தந்தையை அழைக்கிறார். ஆவலுடன் வெளியே வரும் தந்தையிடம், தன் வங்கிக்கணக்கிலும், தந்தையின் வங்கிக்கணக்கிலும் பல இலட்சம் ரூபாய் வைப்பு நிதியாக சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் இளைஞர். அத்துடன், தனக்கு வேலையும் கிடைத்துவிட்டதாகக் கூறுகிறார்.
இதைத்தொடர்ந்து, அடுத்த காட்சியில், அந்த இளைஞர், பரிதாபமான ஒரு கட்டிலில் புரண்டபடி, 'தனக்கு வேலை கிடைத்துவிட்டது' என்று தூக்கத்தில் உளறிக்கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இளைஞரின் தந்தை, அவரை தட்டியெழுப்பி, இப்படி கனவு கண்டு வாழ்க்கையை வீணாக்கவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்.

ஒவ்வொரு இந்தியரின் வங்கிக்கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்றும், இளையோருக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும் என்றும் வாக்குறுதிகளை அடுக்கிய அரசியல் கட்சி, கடந்த பத்தாண்டுகளில் எதுவும் செய்யாமல் இருப்பதை நாம் அறிவோம். தேர்தல் வந்ததும், 'வானத்தை வில்லாக வளைப்பதாகவும், கடல் மணலில் கயிறு திரிப்பதாகவும்' வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஈர்ப்பது, அரசியல் கட்சிகள் பின்பற்றும் பொதுவான ஒரு யுக்தி.

அரசியல் கட்சியொன்றை நாம் கற்பனை செய்துகொள்வோம். அந்த கட்சியினர் பின்வருமாறு கூறுவதாகவும் கற்பனை செய்து பார்ப்போம்: "எங்களுடைய கட்சி ஆட்சிக்கு வந்தால், சமுதாயத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகள் அனைத்தும் நீக்கப்படும். மக்களிடையே உள்ள சொத்துக்கள் அனைத்தும் பொதுவில் சேர்க்கப்பட்டு, அவரவருக்குத் தேவையான அளவு பிரித்து கொடுக்கப்படும். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இனி இராது" என்று அந்த கட்சியின் அறிக்கை கூறினால், அதை, ஒரு கனவுலகம் என்று நாம் கூறுவோம்.

இத்தகைய கனவுலகம் அன்று எருசலேமில் உருவாக்கப்பட்டிருந்தது. இயேசுவின் வழியை நம்பினோர் இணைந்து உருவாக்கிய சமுதாயம் எவ்வாறு இருந்தது என்பதை இன்றைய முதல் வாசகம் இவ்வாறு கூறுகிறது:

திருத்தூதர் பணிகள் 4:32-35

அந்நாள்களில், நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர்.
தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலங்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டுவந்து திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும்.

இந்த வாசகம் கத்தோலிக்க உலகின் ஆலயங்கள் அனைத்திலும் இந்த ஞாயிறன்று ஒலிக்கும். இந்த வாசகத்தைக் கேட்கும்போது, உள்ளம் மகிழ்வால் நிறைவடைகிறது. அதே நேரம் 'இப்படிப்பட்ட ஒரு சமுதாயம் இருந்திருக்க முடியுமா?' என்ற சந்தேகமும் எழுகிறது. மனித உள்ளம் மகிழ்வில் நிறையும்போதும், வேதனையில் வீழும்போதும், சந்தேகங்கள் எழுகின்றன. தங்கள் தலைவரும், போதகருமான இயேசு உயிர்த்துவிட்டார் என்ற மிக அற்புதமான செய்தியைக் கேட்டதும், சீடர்களில் ஒருவரான தோமா அதை நம்ப மறுத்ததும், அவரது சந்தேகத்தைத் தீர்க்கும் வண்ணம் இயேசு தோமாவைச் சந்தித்ததும் இன்றைய நற்செய்தியாக (யோவான் 20:19-31) வழங்கப்பட்டுள்ளது.

இந்த நற்செய்தியை மையப்படுத்தி நாம் சிந்தனைகளை மேற்கொள்ள, அமெரிக்க ஐக்கிய நாட்டின் டெக்ஸாஸ் (Texas) மாநிலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு உதவியாக இருக்கும்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் ஏதென்ஸ் (Athens) என்ற நகரில் வாடகைக் கார் ஓட்டிவந்தவர் பாட்ரிக் கிரீன் (Patrick Greene). இவர் இறை நம்பிக்கையற்றவர். தன் இல்லத்தைச் சுற்றி வாழும் கிறிஸ்தவர்கள் தங்கள் மத உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டும் முயற்சிகளை வன்மையாக எதிர்த்து வந்தார். கிறிஸ்மஸ் விழாவையொட்டி ஏதென்ஸ் நகரின் நீதி மன்றத்திற்கு வெளியே குடில் ஒன்று அமைக்கப்பட்டபோது, பாட்ரிக் அவர்கள், சிறு கூட்டம் ஒன்றைத் திரட்டி, போராட்டம் நடத்தினார். நகராட்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
இவர் இந்த வழக்கை ஆரம்பித்த ஒருசில வாரங்களில், பாட்ரிக் அவர்களின் கண் பார்வை மங்க ஆரம்பித்தது. மருத்துவ ஆய்வில், இவருக்கு அறுவைச் சிகிச்சை தேவை என்றும், அச்சிகிச்சைக்குப் பிறகும் கண் பார்வை முற்றிலும் திரும்புமா என்பது உறுதியில்லை என்றும் சொல்லப்பட்டது. அவரால் வாடகைக் கார் ஓட்ட முடியாமல் வீட்டில் தங்க வேண்டியதாயிற்று. அவர் தொடுத்திருந்த வழக்கினால், வங்கியிலிருந்த அவரது சேமிப்பும் கரையத் துவங்கியது. எனவே, சில வாரங்களில் அவர் தன் வழக்கை 'வாபஸ்' பெற்றுக்கொண்டு வீட்டுக்குள்ளேயே அடைபட்டார்.

அவருடைய அயலவர்களில் ஒருவர், ஜெஸிக்கா என்ற பெண். இவர் பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சபையைச் சேர்ந்தவர். பாட்ரிக் அவர்களின் உடல்நிலையைப்பற்றி ஜெஸிக்கா கேள்விப்பட்டார். அவர் தொடுத்திருந்த வழக்கைப் பற்றியும் அவருக்குத் தெரியும். இருப்பினும், அவர் பாட்ரிக்கிற்கு உதவ முன்வந்தார். "இறைவன் அன்பை கிறிஸ்தவர்கள் வழியாக பாட்ரிக் அனுபவித்ததில்லை என்று நினைக்கிறேன். தன் வழக்குகள் வழியே, அவர் எங்களை ஒரு கன்னத்தில் அறைந்துள்ளார். மறு கன்னத்தை அவருக்குக் காட்டும் தருணம் இது" என்று ஜெஸிக்கா அவர்கள், ஒரு நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பாட்ரிக்கின் உடல் நிலையைப் பற்றி அவர் தன் கோவிலில் எடுத்துக்கூறினார்.

ஊரே அறிந்த கடவுள் நம்பிக்கையற்ற ஒருவரின் மருத்துவச் செலவுக்கு அக்கோவிலைச் சேர்ந்தவர்கள் நிதி திரட்ட ஆரம்பித்தனர். பாட்ரிக் அந்த நிதியை வாங்க மறுத்தார். தன் அறுவைச் சிகிச்சை மூலம் நல்ல பலன் கிடைக்கும் என்று மருத்துவர்கள் உறுதி கூறாததால், பாட்ரிக் அறுவைச் சிகிச்சை மீதும் நம்பிக்கையற்று போனார்.
அவரது மறுப்பையும் பொருட்படுத்தாது, பாப்டிஸ்ட் ஆலய உறுப்பினர்கள் வேறு எவ்வகையில் அவருக்கு உதவமுடியும் என்று பாட்ரிக்கிடம் கேட்டனர். தனக்கு எந்த வேலையும் இல்லாததால், தன் இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க ஏதாவது நிதி உதவி செய்யும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டார். அந்தக் கோவிலைச் சேர்ந்தவர்கள் தன் தேவைகளுக்காக ஒருவேளை பத்து அல்லது 20 டாலர்கள் தருவார்கள் என்று எதிர்பார்த்தார் பாட்ரிக். சில நாட்கள் சென்று, பாப்டிஸ்ட் ஆலயத்திலிருந்து அவருக்கு 400 டாலர்கள் வந்து சேர்ந்தன.
நாட்கள் செல்லச் செல்ல, அவருக்கு இன்னும் அதிக உதவிகள் வந்தன. அவர் இல்லத்தைச் சுற்றி வாழ்ந்த கிறிஸ்தவக் குடும்பங்கள் அவர் இல்லத்திற்கு வந்து நேரம் செலவழித்தனர், அவருக்காகச் செபங்கள் செய்தனர். அவர்கள் அன்பில் அவர் தினமும் மூழ்கினார். கடவுள் மறுப்பு என்ற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டிருந்த அவரது பெருமையும், ஆணவமும் அடியோடு சரிந்தன. உயிர்ப்புத் திருவிழாவன்று அவர் ஒரு கிறிஸ்தவ சபையில் சேர்ந்தார். அச்சபையின் பணியாளர்களில் ஒருவராக மாற அவர் பயிற்சிகள் மேற்கொண்டார்.

பாட்ரிக் கிரீன் அவர்கள், தன் வாழ்வில், இறைவனைத் தொட்டுணர்ந்தது, நமக்கெல்லாம் நல்லதொரு பாடம். இறைவனை நேரில் சந்திப்பதோ, இறை அனுபவத்தை நேரடியாகப் பெறுவதோ நடக்காத காரியம் என்பதால், இறைவனை நம்ப மறுத்தவர் பாட்ரிக். இறை நம்பிக்கை கொண்டவர்களை ஏளனமாகக் கருதினார்; வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அவர்களுக்குத் தன் எதிர்ப்பைத் தெரிவிப்பதில் பெருமைகொண்டார். அவரை இறைவன் சந்தித்தார். அவர் எதிர்பார்த்த நேரடி அனுபவத்தில் அவரைச் சந்திக்கவில்லை, மறைமுகமாக, ஒரு கிறிஸ்தவ சமுதாயத்தின் வழியாக இறைவன் அவரைச் சந்தித்தார்.
இறை நம்பிக்கையற்றவர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைந்த பாட்ரிக், தன் பார்வையை இழக்க ஆரம்பித்தபோது வேறு பல உண்மைகளைக் காணமுடிந்தது. உடலளவில் பார்வை இழந்து, உள்ளத்தில் பார்வை பெற்ற பாட்ரிக் போன்றவர்களை மனதில் எண்ணி, இயேசு கூறும் அழகியச் சொற்களை இன்றைய நற்செய்தியில் நாம் இவ்வாறு கேட்கிறோம்: "காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" (யோவான் 20:29)

சந்தேகமும், இரக்கமும் சந்திக்கும் ஞாயிறு இது. உயிர்ப்புப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறை, 'இறை இரக்கத்தின்' ஞாயிறு என்று கொண்டாடுகிறோம். இறை இரக்கம் அல்லது இறைவனின் பேரன்பு என்ற கதிரவன் எழும்போது, சந்தேக மேகங்கள் கலைந்துவிடும் என்பதை இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கிறது.
கிறிஸ்தவ மறையின் ஆணிவேராக விளங்குவது, இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு. இந்த மறையுண்மை இல்லையெனில், கிறிஸ்தவ மறை அர்த்தமில்லாமல் போய்விடும். (காண்க. 1 கொரிந்தியர் 15:14) நம் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமான உயிர்த்த கிறிஸ்துவை மீண்டும் ஒருமுறை இஞ்ஞாயிறன்று சந்திக்க வந்திருக்கிறோம்.

சென்ற வாரம், எரியும் மெழுகுதிரிகளை ஏந்தி, பாஸ்காப் புகழுரையைப் பாடி, இயேசுவின் உயிர்ப்பை அறிக்கையிட்டபோது, நமக்குள் ஒரு நிறைவும் மகிழ்வும் தோன்றியதை உணர்ந்தோம். உயிர்த்த இயேசு இன்று நமக்கு முன் தோன்றினால், உடனே அவர் திருவடி பணிந்து நம் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வெளியிட எவ்விதத் தயக்கமும் இருக்காது. முதல் உயிர்ப்புத் திருவிழாவில் இத்தகைய மகிழ்வு, நிறைவு, உற்சாகம் இருந்ததாகத் தெரியவில்லை. அது ஒரு திருவிழாவாக இருந்ததா என்பதே சந்தேகம்தான். சந்தேகம்... உயிர்த்த இயேசுவைச் சீடர்கள் சந்தித்த நிகழ்வுகள் அனைத்திலும் அடிப்படையில் இழையோடிய ஓர் உணர்வு... சந்தேகம். இந்த நிகழ்வுகள் அனைத்தின் சிகரமாக இன்று நாம் நற்செய்தியில் காண்பது, சந்தேகம் கொண்டிருந்த தோமாவை இயேசு சந்தித்த அழகான நிகழ்ச்சி.

நம் வாழ்வை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளிலேயே அதிக ஆபத்தானது எது தெரியுமா? சந்தேகம். சந்தேகம் ஒரு கூட்டு உணர்வு; பல உணர்வுகளின் பிறப்பிடம் அது. சந்தேகம் குடிகொள்ளும் மனதில் கூடவே பயம், கோபம், வருத்தம், நம்பிக்கையின்மை என்ற பல உணர்வுகள் கூட்டுக் குடித்தனம் செய்யும். தோமா இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகப்பட்டார் என்று கேட்டதும், நம்மில் பலர், உடனே ஒரு நீதியிருக்கை மீது அமர்ந்து, "என்ன மனிதர் இவர்? இயேசுவோடு மூன்று ஆண்டுகள் நெருக்கமாய் பழகிவிட்டு, எப்படி இவரால் சந்தேகப்பட முடிந்தது?" என்ற கேள்வியை கேட்டு, "தோமா இப்படி நடந்துகொண்டது தவறு." என்ற தீர்ப்பையும் தந்துவிடுகிறோம். நீதியிருக்கைகளில் அமர்ந்து தீர்ப்பு எழுதுவது எளிது.

இயேசுவின் உயிர்ப்பைப்பற்றி தலைமுறை, தலைமுறையாய் ஆயிரமாயிரம் விளக்கங்களைக் கேட்டு வந்துள்ள கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் இன்று வாழும் நமக்கே அந்த உயிர்ப்பு குறித்த நம்பிக்கையில் அவ்வப்போது தடுமாற்றம் ஏற்படுகிறது. அப்படியிருக்க, உயிர்ப்பு பற்றிய எண்ணங்களில் தெளிவில்லாத யூத சமுதாயத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்து வளர்ந்த சீடர்களில் ஒருவர் இயேசுவின் உயிர்ப்பைச் சந்தேகித்தார் என்பதற்காக அவரைக் கண்டனம் செய்வது தவறு. தீர்ப்பிடுவது தவறு.

கல்வாரியில் இயேசு இறந்ததை நீங்களோ, நானோ நேரடியாகப் பார்த்திருந்தால், ஒரு வேளை தோமாவை விட இன்னும் அதிகமாய் மனம் உடைந்து போயிருப்போம். அந்த கல்வாரி பயங்கரத்திற்குப் பின் ஒன்றுமே இல்லை என்ற முடிவுக்கும் வந்திருப்போம். ஆகவே, தீர்ப்புகளை வழங்க நாம் அமர்ந்திருக்கும் நீதி இருக்கைகளிலிருந்து முதலில் எழுந்து வருவோம். குற்றவாளிக் கூண்டில் நாம் நிறுத்தியுள்ள தோமாவின் நிலையில் நம்மை நிறுத்தி, இந்த நிகழ்வைச் சிந்திப்போம். எல்லா சீடர்களுமே சந்தேகத்தில், பயத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அவர்களது பயம், சந்தேகம் எல்லாவற்றிற்கும் காரணம் இருந்தது. அதையும் புரிந்து கொள்ள முயல்வோம்.

தங்கள் குடும்பங்களையும், மீன் பிடிக்கும் தொழிலையும் விட்டுவிட்டு இயேசுவை நம்பி மூன்றாண்டுகள் வாழ்ந்தவர்கள் இந்தச் சீடர்கள். இந்த மூன்று ஆண்டுகளில் இயேசுதான் அவர்களது உலகம் என்ற நிலை உருவாகியிருந்த நேரத்தில், அந்த உலகம், ஆணி வேரோடு வெட்டப்பட்டு, சிலுவையில் தொங்கவிடப்பட்டது. எருசலேமில், கல்வாரியில், அவர்கள் கண்ட காட்சிகள், அவர்களை முற்றிலும் நிலைகுலையச் செய்துவிட்டன. இயேசு அவர்கள் வாழ்வில் விட்டுச்சென்ற வெற்றிடத்தை, சந்தேகமும் பயமும் நிரப்பிவிட்டன. யாரையும், எதையும் சந்தேகப்பட்டனர். தங்களில் ஒருவரே இயேசுவைக் காட்டிக்கொடுத்ததால், இதுவரை அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த நம்பிக்கை தொலைந்து போனது. சிலுவையில் கந்தல் துணிபோல் தொங்கிக் கொண்டிருந்த இயேசுவை உடலோடு புதைப்பதற்கு முன்பே, மனதால் அவரைப் புதைத்துவிட்டனர் சீடர்கள்.

நம் வாழ்வையும் சந்தேகம் ஆட்டிப் படைக்கும்போது நாம் செய்வது என்ன? உள்ளத்தையும் சிந்தனையையும் இறுகப் பூட்டிவிட்டு, இருளில் புதையுண்டு போகிறோம். உறவுகளில் ஏற்படும் சந்தேகங்களைத் தீர்க்கும் சிறந்த வழி என்ன? மனம் விட்டுப் பேசுவது. இதைத்தான் இயேசு செய்து காட்டினார். மனதில் துளிர்க்கும் சந்தேகத்தை வேரறுக்க வாய் வார்த்தைகள் மட்டும் போதாது, சில வேளைகளில் ஆங்கிலத்தில் சொல்வதுபோல் 'physical proof', உடலளவு நிரூபணங்கள் தேவைப்படலாம். இவை அனைத்தையும் இயேசு வழங்கினார் என்பதை இன்றைய நற்செய்தி தெளிவாக்குகிறது. வாய் வார்த்தைகளாலும், தன் உடலையை நிரூபணமாக அளிப்பதாலும் தோமாவை, நம்பிக்கையற்ற சந்தேகக் கல்லறையிலிருந்து இயேசு உயிர்ப்பிக்கிறார்.

இயேசுவின் அழைப்பை ஏற்று, தோமா இயேசுவைத் தொட்டாரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. உடலால் தோமா இயேசுவைத் தொட்டிருக்கலாம், தொடாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த அழைப்பின் மூலம் அவர் மனதை இயேசு மிக ஆழமாகத் தொட்டார். எனவே அந்த மிக ஆழமான மறையுண்மையை தோமா கூறினார். "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!" (யோவான் 20:28) இயேசுவை, கடவுள் என்று கூறிய முதல் மனிதப்பிறவி தோமாதான். தன்னை இயேசு இப்படி ஆழமாய்த் தொட்டதால், அவர் கண்ட அந்த அற்புத உண்மையை, உலகெங்கும், சிறப்பாக, இந்திய மண்ணிலும் பறைசாற்றினார் தோமா.

இறைவனின் பேரன்பும், இரக்கமும் எத்தனையோ அற்புதங்களை ஆற்றவல்லது. அறிவுத்திறனுக்கு எட்டாத இறைவனை நம்பும்போது, அவரது இரக்கத்தை நம்பும்போது, நம் வாழ்வில் உருவாகும் சந்தேகப் புயல்கள் தானாகவே அடங்கும்; சந்தேகத்தில் புதையுண்ட நாம், கல்லறைகளிலிருந்து உயிர் பெறுவோம். இந்த அற்புதங்களை ஆற்றும் இறை இரக்கத்தை நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் உணர, சந்தேகத் தோமாவின் பரிந்துரை வழியாக இறைவனை மன்றாடுவோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

உயிர்ப்பின்‌ காலம்‌ நம்மை அன்பு, எதிர்நோக்கு, நம்பிக்கை (1கொரி 14:13) கொண்டு கடவுளின்‌ உடன்‌ இருப்பை உணர்ந்து கொள்ள தூண்டுதல்‌ தருகிறது. இன்றைய நற்செய்தி, சீடர்கள்‌ யூதர்களுக்கு அஞ்சி நடுங்கிக்கொண்டு இருந்தார்கள்‌. அவர்களின்‌ நிலையை அறிந்து இயேசு சீடர்களுக்கு தன்னுடைய உடன்‌ இருத்தலை உணர்த்தும்‌ விதமாக அமைந்துள்ளது. ஏனென்றால்‌ இயேசுவோடு மூன்று ஆண்டுகள்‌ பொதுவாழ்வில்‌ உடன்‌ இருந்தவர்கள்‌ சீடர்கள்‌. இயேசுவின்‌ இறப்புக்கு பிறகு வாழ்கையில்‌ ஏதுவுமில்லை என்று முடிவு செய்து அஞ்சி நடுங்கிய சீடர்களுக்கு தன்‌ உடன்‌ இருப்பை உணர்த்தி அவர்களை திடப்படுத்துகிறார்‌.

இவற்றை உணரமால்‌ இருப்பதற்கு காரணம்‌ அவர்களின்‌ நம்பிக்கையற்ற நிலையும்‌, எதிர்நோக்குப்‌ பற்றி உறுதிபாடு இல்லாத நிலையற்ற தன்‌.மையும்‌ ஆகும்‌. இவர்களின்‌ நம்பிக்கையை உறுதிப்‌ படுத்தவே, தோமாவின்‌ நம்பிக்கையற்ற தன்மை வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால்‌ நற்செய்தியின்‌ அழத்திற்கு சென்று பாரத்தால்‌ தனிபட்ட தோமாவின்‌ நம்பிக்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த சீடர்களின்‌ நம்பிக்கையை ஆழப்படுத்தும்‌ வண்ணம்‌ அமைந்துள்ளது.

இயேசு சீடர்களை நோக்கி றியது அடையாளங்களையும்‌, அருஞ்செயல்களையும்‌ கண்டாலன்றி நீங்கள்‌ நம்ப மாட்டடீகள்‌ என நான்‌ உங்களுக்கு சொல்கிறேன்‌ (யோவா 7:48). தோமாவிடம்‌ இதோ என்‌ கைகள்‌, இங்கே உன்‌ விரலை இடு. ஐயம்‌ தவிர்த்து நம்பிக்கை கொள்‌ (யோவா 20:28). “நீ என்னை கண்டதால்‌ நம்பினாய்‌, காணாமலே நம்புவோர்‌ பேறுபெற்றோர்‌” (யோவா 20:29).

“அவருடைய கட்டளைகளை நாம்‌ கடைபிடித்து வாழ்ந்தால்‌ நாம்‌ அவரின்‌ உடன்‌ இருப்பை உணர்ந்து கொள்வோம்‌ என்பதே உண்மை. நமது நம்பிக்கை, எதிர்நேர்க்கு ஆகியவற்றை மையமாக வைத்து நம்முடைய வாழ்வை அமைத்துக்‌ கொள்வோம்‌. கடவுளின்‌ உடன்‌ இருப்பை உணர்வோம்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

மூன்று பயணங்கள்!

இன்று பவனியில் நாம் வாசிக்கும் நற்செய்தி வாசகம், ‘எருசலேமை நெருங்கியபோது’ என்று தொடங்குகிறது. ஆண்டவர் இயேசுவுடன் இணைந்து நாமும் இன்று எருசலேமை நெருங்கி நிற்கிறோம். எருசலேம் என்பது இயேசுவைப் பொருத்தவரையில் இறுதி அல்ல, மாறாக, புதிய தொடக்கம். இங்கிருந்துதான் இயேசு மாட்சியுடன் உயிர்த்தெழுந்தார், இங்கிருந்தே தம் சீடர்களைப் பணிக்கு அனுப்பினார், இங்கேதான் புதிய இஸ்ரயேல் என்னும் திருஅவை தொடங்கியது.

இன்று நாம் வாசிக்கக் கேட்ட வாசகங்களை இணைத்துப் பார்க்கும்போது, இயேசு மேற்கொண்ட மூன்று பயணங்களை அவை முன்மொழிகின்றன:

(அ) எருசலேம் நோக்கிய பயணம்
(ஆ) கொல்கொதா (கல்வாரி) நோக்கிய பயணம்
(இ) விண்ணகம் நோக்கிய பயணம்

இயேசுவின் மேற்காணும் மூன்று பயணங்களோடு நம் வாழ்க்கைப் பயணத்தையும் இணைத்து சிந்திப்போம்.

(அ) எருசலேம் நோக்கிய பயணம் – ‘ஓசன்னா!’

இந்தப் பயணத்தை இயேசுவே தொடங்குகிறார். தாம் பயணம் செய்ய வேண்டிய வாகனத்தை – கழுதைக்குட்டியை – தாமே தேர்ந்தெடுக்கிறார். ‘இது ஆண்டவருக்குத் தேவை’ என்று சொல்லப்பட்டு, கழுதை கொண்டுவரப்படுகிறது. தொடர்ந்து, சீடர்கள் தங்கள் மேலாடைகளை கழுதையின்மேல் விரிக்கிறார்கள், மற்றவர்கள் இலைதழைகளை வெட்டி வழியில் பரப்புகிறார்கள். இயேசு-சீடர்கள்-மக்கள் என அடுத்தடுத்து செயல்களில் ஈடுபடுகிறார்கள். கழுதையில் பவனி என்பது இங்கே கவனிக்க வேண்டியது. இயேசுவின் சீடர்கள் தங்களுடைய ஆண்டவர் ஓர் அரச மெசியாகவாக வந்து உரோமை வெற்றிகொள்வார் என்று அவரைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். தாம் தேர்ந்துகொள்ளும் கழுதைக்குட்டி அடையாளம் வழியாக அவர்களுக்குக் கற்பிக்க விரும்புகிற இயேசு, தம் ஆட்சி ஆன்மிகம் சார்ந்தது என்றும், அமைதியை விரும்புவது என்றும் கூறுகிறார்.

மக்கள், ‘ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!’ என்று அக்களிக்கிறார்கள். ‘ஓசன்னா’ என்றால் ‘எங்களை மீட்டருளும்! எங்களைக் காப்பாற்றியருள்க!’ என்று பொருள். உரோமையின் அடிமைத்தளையிலிருந்த இயேசுவின் சமகாலத்து மக்கள், இயேசுவே தங்களைக் காப்பாற்ற வந்த அரசர் என நினைத்து, ‘ஓசன்னா’ முழக்கம் எழுப்புகிறார்கள். வாடகைக் கழுதையில் வந்த இறுதி நம்பிக்கையாக இயேசுவை அவர்கள் வரவேற்றார்கள். உரோமை அரசை வீழ்த்துகிற இயேசு தாவீதின் அரசை நிலைநாட்டுவார் என்பது அவர்களுடைய எதிர்நோக்கு.

இந்தப் பவனியில் நாமும் ஒருவராக அன்று நின்றிருந்தால் நாமும் இதே நம்பிக்கையையும், எதிர்நோக்கையுமே கொண்டிருப்போம்.

எளிமை, அமைதி, நம்பிக்கை, எதிர்நோக்கு ஆகியவற்றை அடையாளப்படுத்துகிறது இயேசுவின் முதல் பயணம். இந்தப் பவனியில் இயேசுவை எருசலேமுக்குள் அழைத்து வருபவர்கள் மக்கள். அவர்கள் எழுப்புகிற வாழ்த்தொலி, ‘ஓசன்னா!’

(ஆ) கொல்கொதா (கல்வாரி) நோக்கிய பயணம் – ‘சிலுவையில் அறையும்!’

மாற்கு நற்செய்தியாளர் எழுதியபடி இயேசுவின் பாடுகள் வரலாற்றை வாசிக்கக் கேட்டோம். இந்தப் பயணத்தையும் இயேசுவே தொடங்குகிறார். கழுதைக்குட்டியை அவிழ்க்குமாறு தம் சீடர்களை முன்னர் அனுப்பிய இயேசு, பாஸ்கா உணவை உண்ணுவதற்கான இடத்தை ஏற்பாடு செய்வதற்காக அவர்களை அனுப்புகிறார். கழுதைக்குட்டி, இல்லம், அவற்றின் உரிமையாளர்கள் என அனைவர்மேலும் இயேசு ஆற்றல் கொண்டவராக இருக்கிறார். கொல்கொதா நோக்கிய பயணம் பல பயணங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது: கெத்சமனி நோக்கி, தலைமைச்சங்கம் நோக்கி, பிலாத்து நோக்கி.

பவனியில் கழுதைக்குட்டியின்மேல் தங்கள் மேலுடைகளைப் போட்ட சீடர்கள் இயேசுவைக் காட்டிக்கொடுக்கிறார்கள், மறுதலிக்கிறார்கள், அவரை விட்டுத் தப்பி ஓடுகிறார்கள். ‘ஓசன்னா!’ என்று தங்களுடைய எதிர்நோக்கைத் தெரிவித்த மக்கள், அவநம்பிக்கை மற்றும் வெறுப்பின் உச்சத்தில், ‘சிலுவையில் அறையும்’ எனக் கத்துகிறார்கள். இவர்களுடைய செயல்கள் மாற்றத்துக்குக் காரணம் இவர்கள் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொண்டதே. இயேசுவை ஓர் அரசியல் மெசியாவாகக் கருதினார்கள். அவருடைய தளம் ஆன்மிகம் சார்ந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள இயலவில்லை.

தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவைக் கொன்றாகிவிட்டது என மகிழ்ச்சி அடைகிறார்கள். பிலாத்துவோ இந்தக் கலவரத்தை அடக்கியாயிற்று என்று நினைத்து பெருமிதம் கொள்கிறார். தலைமைக்குருக்கள் பொறாமையால்தான் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார்கள் என நினைத்தாலும், விழாக்காலத்தில் எருசலேமின் அமைதியே அவருடைய முதன்மையான தேவையாக இருந்தது. இறுதியில், சிலுவைக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், ‘இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்!’ எனச் சான்று பகர்கிறார்.

தனிமை, பகைமை, வெறுப்பு, பொறாமை, பிடிவாதம் ஆகிய எதிர்மறை உணர்வுகள் நிறைந்ததாக இந்தப் பயணம் இருந்தாலும், பயணத்தின் தொடக்கத்தில் இளவல் ஒருவர் இயேசுவின் தலைமேல் எண்ணெய்பூசி வெளிப்படுத்தும் அன்பும், நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை அறிக்கையும் நேர்முகமான உணர்வுகளை எழுப்புகின்றன. இந்தப் பயணத்தில் மக்கள் எழுப்புகிற வாழ்த்தொலி, ‘ஓசன்னா!’

(இ) விண்ணகம் நோக்கிய பயணம் – ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’

எருசலேம் நோக்கிய பவனி, கொல்கொதா நோக்கிய பயணம் என்னும் நம் பார்வையைச் சற்றே அகலமாக்கி, இப்பயணங்கள் இயேசுவின் நீண்ட பயணத்தின் சில பகுதிகளே என மொழிகிறது இன்றைய இரண்டாம் வாசகம். மனத்தாழ்மை, ஒற்றுமை, துன்பத்தின் வழியாகவே வெற்றி என்னும் அறிவுரையை பிலிப்பி நகரத் திருஅவைக்கு வழங்குகிற பவுல், ஒரு கிறிஸ்தியல் பாடல் வழியாக இயேசுவை அவற்றின் முன்மாதிரியாக மொழிகிறார். கடவுள் வடிவை விடுத்து, தம்மையே வெறுமையாக்கி, மனித உரு ஏற்கிற இயேசு, சாவை ஏற்கும் அளவுக்கு, சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குத் தம்மையே தாழ்த்துகிறார். கடவுளோ அவரை உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அளிக்கிறார். பவுல் இங்கே மொழிகிற முதன்மையான அடையாளம் சிலுவை.

மண்ணகம் நோக்கி வந்த இயேசு விண்ணகம் ஏறிச் செல்கிறார். சிலுவையில் இறந்த அவர் உயிர்த்தெழுகிறார். இந்தப் பயணத்தை வழிநடத்துபவர் கடவுளே. இந்தப் பயணத்தின் இறுதியில் மக்கள் எழுப்புகிற வாழ்த்தொலி அல்லது அறிக்கை, ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’ என்பதாகும்.

திருப்பாடுகளின் வாரத்திற்குள் நுழைகிற நாம் மேற்காணும் மூன்று பயணங்களையும் மனத்தில் இருத்துவோம். கழுதைக்குட்டியில் அரசர்போலப் பயணம் செய்கிற இயேசு, சிலுவை என்ற அரியணையில் அமர்கிறார். இது முரண் அல்ல, மாறாக, இரு பக்கங்கள்.

தவக்காலத்தின் முத்தாய்ப்பாக இருக்கிற இந்த வாரத்தில், இயேசுவின் பயணங்களோடு நம் வாழ்க்கைப் பயணத்தையும் இணைத்துக்கொள்வோம். நம்பிக்கை, எதிர்நோக்கு என நேர்முகமாக பயணம் அமைந்தாலும், சில நேரங்களில் தனிமை, பகைமை, காட்டிக்கொடுக்கப்படுதல், மறுதலிக்கப்படுதல், இறப்பு, சோகம், இழப்பு ஆகியவை நம் வாழ்க்கை அனுபவங்களாகவும் இருக்கின்றன. இறுதியில், வெற்றி என்பது உறுதியாக உள்ளது.

(அ) ‘ஆண்டவர் என் துணையாக உள்ளார்’

முதல் வாசகத்தில், எசாயா இறைவாக்கு நூலிலிருந்து, துன்புறும் ஊழியனின் மூன்றாவது பாடலை வாசிக்கக் கேட்டோம். இஸ்ரயேல் மக்களை உருவகிக்கிற இந்தப் பணியாளர் நிராகரிப்பையும் வன்முறையையும் துன்பத்தையும் அவமானத்தையும் எதிர்கொண்டாலும் இறுதியில், ‘ஆண்டவர் என் துணையாக உள்ளார்’ எனக் கண்டுகொள்கிறார். தம் தனிமையிலும் தந்தையின் உடனிருப்பை உணர்ந்தார் இயேசு. இறைவனின் உடனிருப்பை நாம் கண்டுணர்வதற்கான வாரமாக இந்த வாரம் அமையட்டும்.

(ஆ) சிலுவை

இன்று நாம் ஏந்துகிற குருத்து சிலுவை மரமாக மாறுகிறது. குருத்தின் மென்மை மறைந்து சிலுவையின் வன்மை இயேசுவைத் தழுவிக்கொள்கிறது. மென்மையும் வன்மையும் மாறி மாறி வரும் நம் வாழ்வில் சிலுவையைப் பற்றிக்கொள்வோம். சிலுவையின் அவமானத்தை தம் உயிர்ப்பின் வழியாக மாட்சியாக உயர்த்துகிறார் இயேசு. துன்பங்களின் வழியாக மீட்பு அல்லது வெற்றி என்பதை உணர்ந்தவர்களாக, சின்னஞ்சிறு துன்பங்கள் வழியாகவே நம் வாழ்க்கை நகர்கிறது என்பதை ஏற்றுக்கொள்வோம்.

(இ) மனமாற்றம்

உயிர்ப்புக்கான தயாரிப்பாக, நம் தாய்த் திருஅவை ஒப்புரவு அருளடையாளம் செய்ய நம்மை அழைக்கிறது. நம் பாவங்களுக்காக ஒட்டுமொத்தமாக இயேசு இறந்தார் எனில், தனிப்பட்ட பாவங்கள் நம்மில் இறக்க வேண்டுமெனில், நாம்தான் முயற்சி எடுக்க வேண்டும். நாம் தொடர்ந்து செய்கிற பாவங்கள் நாம் மேற்கொள்கிற தெரிவுகள் என்பதை மனத்தில் இருத்துவோம். இறைவனின் மன்னிப்பை உணர்ந்தவர்களாக ஒருவர் மற்றவருடன் ஒப்புரவாகுவோம்.

புனித வாரத்திற்குள் நுழைவோம் சிலுவையோடு!

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser