மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பாஸ்கா காலம் 6ஆம்ஞாயிறு
2-ஆம் ஆண்டு

இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணிகள் 10: 25-26,34-35,44-48 | 1 யோவான் 4: 7-10 | யோவான் 15:9-17

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


இயேசு என்ற அந்த அன்பின்‌ வடிவம்‌ நம்மைப்‌ பாவம்‌ என்ற தீயில்‌ இருந்து காப்பாற்ற நமக்காகப்‌ பரிகாரம்‌ புரிந்தது. பழைய ஏற்பாட்டிலே 'இருக்கின்றவராக இருக்கிறவர்‌ நானே” (வி.ப. 3:14) என்று மோசேயுக்கு ஆண்டவர்‌ தம்மை வெளிப்படுத்தினார்‌. ஆனால்‌ புதிய ஏற்பாட்டில்‌ அந்த உன்னத தேவன்‌ அன்பே (1 யோவா. 4:8) என்று வெளிப்படுத்தப்படுகிறார்‌.

கடவுள்‌ தன்‌ ஏக மகனை அனுப்பும்‌ அளவுக்கு உலகத்தின்‌ மீது அன்பு கொண்டார்‌. எனவே இந்தத்‌ தந்தையின்‌ அன்பின்‌ அவதாரம்தான்‌ ஆண்டவர்‌ இயேசு.

அந்த ஆண்டவர்‌ இயேசு தன்‌ சீடர்களை நோக்கி இரு உண்மைகளை வெளிப்படுத்துகிறார்‌.

  • இனி உங்களை நான்‌ ஊழியர்‌ என்று சொல்லேன்‌. உங்களை நண்பர்கள்‌ என்கிறேன்‌. ஏனெனில்‌ தந்‌தை எனக்கு வெளிப்‌படுத்தியதெல்லாம்‌ உங்களுக்கு அறிவித்தேன்‌. எனவே நீங்கள்‌ என்‌ நண்பர்களாய்‌ இருந்தால்‌ நான்‌ வெளிப்படுத்தினதை (உண்மை) எல்லாம்‌ மக்களுக்கு அறிவியுங்கள்‌ (யோவா. 15:15).
  • தன்‌ நண்பனுக்காக உயிரைக்‌ கொடுப்பதைவிட மேலான அன்பு யாரிடமும்‌ இல்லை. நான்‌ கட்டளை இட்டதை நீங்கள்‌ செய்தால்‌ நீங்கள்‌ என்‌ நண்பர்கள்‌ (யோவா. 15:13) என்றார்‌ இயேசு.

  • ஏன்‌ இந்த வார்த்தைகளை இவ்வளவு அழுத்தமாக நம்மிடம்‌ வைக்கிறார்‌ என்றால்‌ தான்‌ போதித்ததைச்‌ செய்து காட்டியவர்‌. நான்‌ உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்‌. நான்‌ அன்பு செய்ததுபோல நீங்களும்‌ ஒருவரை ஒருவர்‌ அன்பு செய்யுங்கள்‌ என்றார்‌. ஏனெனில்‌ நமக்காகத்‌ தன்‌ உயிரையே கொடுத்தார்‌ (யோவா. 13:34).
முடிவுரை

உளவியல்‌ கருத்தரங்கு 30 இளம்‌ ஆண்‌, பெண்களுக்கு 3 நாட்கள்‌ நடத்தினேன்‌. 2-வது நாள்‌ உங்களுக்கு ஆழ்ந்த, உங்கள்‌ இரகசியங்களை ஒழிவு மறைவு இன்றி வெளிப்படுத்தும்‌ நண்பர்‌, நீங்கள்‌ அதிகமாக நேசிக்கும்‌ நண்பர்‌ யார்‌ என்று எழுதுங்கள்‌ என்றேன்‌. பலரும்‌ பலரது நண்பர்களைக்‌ குறிப்பிட்டு எழுதினார்கள்‌. இன்று இதே பரீட்சையை வைத்தால்‌ நீங்கள்‌ என்ன எழுதுவீர்கள்‌?

ஒருவர்‌ கூட நான்‌ எதிர்பார்த்த, நண்பரைக்‌ குறிப்பிடவில்லை. அது யார்‌ தெரியுமா?

அதுதான்‌ நமக்கு நாமே முதல்‌ நண்பர்‌.

உன்‌ மீது நீ அன்புகூர்வதுபோல உன்‌ அயலான்‌ மீதும்‌ அன்பு கூர்வாயாக (லூக்‌. 10:27)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுளின் குழந்தைகளுக்கு எது அழகு?

இன்றைய அருள்வாக்கின் மையக் கருத்து சகோதர அன்பு. நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை (யோவா 15:12) என்கின்றார் இயேசு.

பத்திரிகை ஒன்றில் வெளிவந்த நெஞ்சைத் தொடும் ஓர் உண்மைச் சம்பவம். அது ஓர் இரயில் பயணம். அந்த இரயில் நாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டது. அந்த இரயிலில் பயணம் செய்தவர்களுள் வயதான இரண்டு தம்பதியரும் இருந்தனர்.

உறங்கும் நேரம் பிறந்தது. வயதான அந்தப் பெண் உறங்கச் செல்வதற்கு முன்னால் கணவரது கையை ஒரு நாடாவால் கட்டி மறுமுனையை தனது கையில் கட்டிக்கொண்டார். அப்படி அவர் செய்ததற்குக் காரணம் என்ன?

அவரது கணவர் ஒரு மன நோயாளி. அவர் மத்திய அரசுத் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஆனால் எப்படியோ அவரது மனநிலை பாதிக்கப்பட்டு, அவர் ஒரு குழந்தையைப் போல் ஆனார். பாவம்! அவரது மனைவியைக் கூட அவரால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. அந்த மனைவிக்கு கணவரின் வாழ்விலே புதுமை நடக்கும் என்ற நம்பிக்கை!

நிகழ்ச்சியிலே வருகின்ற அந்தப் பெண் வாழ்ந்த வாழ்வுக்குப் பெயர்தான் அன்பு வாழ்வு! உறக்கத்தில்கூட நான் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கின்றேன் என்று அவரது கணவருக்கு அவருடைய கையைக் கட்டியிருந்த நாடா வழியாக எடுத்துச்சொன்ன அந்த மனைவி ஓர் அன்பு மனைவி

அன்பிலே மூன்று வகையான அன்பு உண்டு :
1. நம்மை அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்வது.
2. நம்மை அன்பு செய்யாதவரையும் அன்பு செய்வது.
3. நமது பகைவர்களையும் அன்பு செய்வது.

நம்மை அன்பு செய்பவர்களை மட்டும் அன்பு செய்வது எல்லாரும் செய்யக்கூடிய ஒன்று. தம்மை அன்பு செய்யாதவரையும் அன்பு செய்பவர்கள் புனிதர்கள். நமது பகைவர்களையும் அன்பு செய்வது இயேசுவின் அன்பு; அது நம்மை இயேசுவுக்குள் வாழவைக்கும் (இரண்டாம் வாசகம்). ஆள் பார்த்துச் செயல்படாத கடவுளைப் போல் (முதல் வாசகம்) வாழ முற்படுவதே கடவுளின் குழந்தைகளுக்கு அழகு.

மேலும் அறிவோம்:

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு (குறள் : 992).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அன்பில் நிலைத்திருக்க வேண்டும்

கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் பலர் விண்ணகம் சென்றனர், அங்கு அவர்கள் இந்துக்களையோ முகமதியர்களையோ அல்லது வேறு கிறிஸ்துவச் சபையினரையோ காணவில்லை, அதனால் அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் விண்ணகத்தின் நடுவே ஒரு பெரிய குறுக்குச்சுவர் இருப்பதைக்கண்டு, அவர்கள் பேதுருவிடம், "இக்குறுக்குச்சுவரின் மறுபக்கம் வேறுயாராவது இருக்கிறார்களா?" என்று கேட்டனர், அதற்குப் பேதுரு, "ஆம், நீங்கள் யாரெல்லாம் விண்ணகத்திற்கு வரமாட்டார்கள் என்று நினைத்தீர்களோ அவர்களை யெல்லாம் இக்குறுக்குச் சுவரின் மறுபக்கம் உங்கள் கண்ணில் படாமல் வைத்திருக்கிறோம்" என்றார். ஒரு குறிப்பிட்ட மதத்தினர் தான் விண்ணம் செல்வார்கள் என்னும் தவறான கருத்தைக் கொண்டவர்கள் சிந்திப்பதற்காக உருவாக்கப்பட்ட கதை இது!

மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டும் உரித்தான தனி உடமை அல்ல; அது எல்லா இனத்தாருக்கும் உரிய பொது உடமை என்பது. இன்றைய முதல் வாசகத்தில் தெளிவாக உணர்த்தப்படுகிறது. கொர்னேலியு என்பவர் யூத இனத்தைச் சேராத பிற இனத்தவர், ஆனால் கடவுளுக்கு அஞ்சி வாழ்ந்தவர். கடவுளுடைய ஆணையின் படி பேதுரு அவர் வீட்டிற்குச் சென்று மீட்பின் நற்செய்தியை அறிவித்துக் கொண்டிருந்தபோதே தூய ஆவியார் கொர்னேலியு மீதும் அவர் வீட்டிலிருந்த அனைவர் மீதும் இறங்கிவர, அவர்கள் அனைவரும் அயல்மொழிபேசி ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்தனர். திருமுழுக்குப் பெறுவதற்கு முன்னரே உறுதிப்பூசுதல் பெற்று விட்டனர்! இந்நிகழ்வு மூலம் பேதுரு அறிந்து, அறிவித்த உண்மை : "கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை. எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்" (திப 10:34).

மீட்படைய இயேசுவின் பெயரைத் தவிர வேறுபெயர் கிடையாது (திப 4:12) என்று ஆணித்தரமாக எடுத்துரைத்த பேதுரு, நல்மனம் கொண்ட அனைவரும் மீட்படைய இறைவன் வழிவகுத்துள்ளார் என்பதையும் அறிவித்துள்ளார். விண்ணகப் பேரின்பத்திற்கு எல்லா இனத்தவரும் அழைக்கப்பட்டுள்ளனர். விண்ணகத்தில் "யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன், அவர்கள் எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார் திருத்தூதர் யோவான் (திவெ 7:9).

ஆவியானவர் தாம் விரும்பியபடி செயல்படுகிறார். அதாவது அவருடைய செயல்பாட்டை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது (யோவா 3:8), மேலும், "கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது" (2தீமோ 2:9), "இறைவன் மீட்பைத் திருமுழுக்கு என்னும் அருள் சாதனத்துடன் கட்டுண்டிருக்கச் செய்துள்ளார், ஆனால் அவரோடு தமது அருள்சாதனங்களால் கட்டுண்டவர் அல்லர்" என்று 'கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்லி' (எண் 257) குறிப்பிட்டுள்ளது நமது கவனத்தை ஈர்க்கின்றது. ஆம், கடவுளின் கரங்களை எவரும் கட்டுப்படுத்த முடியாது.

தங்களுடைய குற்றமின்றி கிறிஸ்துவையும் திருச்சபையையும் அறியாதவர்கள், நேரிய உள்ளத்துடன் மனச்சான்றின் குரலைக்கேட்டு. கடவுளுடைய திருவுளத்தை நிறைவேற்றினால், அவர்களும் இறையருளால் மீட்புப் பெறமுடியும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இரண்டாம் வத்திக்கான் வங்கம் (திருச்சபை, எண் 18) எங்கெல்லாம் உண்மையும் நன்மையும் காணப்படுகிறதோ அவை அனைத்துமே உண்மைக்கும் நன்மைக்கும் காற்றாகிய கடவுளிடமிருந்தே வருகிறது என்பதை ஏற்று, பிறசமயத்தாரோடு நல்லுறவை வளர்ப்பது காலத்தின் கட்டாயமாகும்.

ஒருமுறை ஒரு சிறுவனிடம், "இந்துக்கள் விண்ணகம் செல்வார்களா?" என்று நான் கேட்டதற்கு, அச்சிறுவன், "நிச்சயமாகச் செல்வார்கள். ஏனென்றால், நாம் கிறிஸ்துவை அறிந்திருந்தும் கெட்டவர்களாக இருக்கின்றோம், ஆனால் இந்துக்கள் கிறிஸ்துவை அறியாதிருந்தும் நல்லவர்களாக இருக்கிறார்கள்" என்றான். அவன் சொன்னது எனக்கு வியப்பாக இருந்தது.

இந்துக்கள் மீட்படையலாம்; கிறிஸ்துவர்கள் மீட்படையாது போகலாம், புனித அகுஸ்தீனாரின் கூற்றை மேற்கோள்காட்டி இரண்டாம் வத்திக்கான் சங்கம் பின்வருமாறு கூறுகிறது, "திருச்சபையில் இணைந்திருந்தும், அன்பில் நிலைத்திராது, 'உள்ளத்தாலன்றி', 'உடலால் மட்டும் அதன் மடியில் தவழ்கின்றவர்கள் மீட்படைவதில்லை (திருச்சபை, எண் 14).

எனவே நாம் திருமுழுக்குப் பெற்றிருக்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் மீட்படைய முடியாது. திருச்சபையில் இருந்தால் மட்டும் போதாது, அன்பில் நிலைத்திருக்க வேண்டும். சென்ற ஞாயிற்றுக்கிழமை நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தியின் தொடர்ச்சியான இன்றைய நற்செய்தியில் தம் ஆண்டவர் அன்பை வலியுறுத்துகின்றார், "என் அன்பில் நிலைத்திருங்கள்... நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை" (யோவா 15:10,12)

இன்றைய இரண்டாவது வாசகத்திலும் திருத்தூதர் யோவான் பிறரன்பை முன்னிலைப்படுத்துகிறார். அன்பு செய்யாதவர்கள் கடவுளை அறியமுடியாது. ஏனெனில் அன்பே கடவுள் (1 யோவா 4:7-8). 7).

தெரு நடுவில் கீழே விழுந்து கிடந்த ஊனமுற்ற ஒருவரை மற்றொருவர் தூக்கிவிட்டு, அவருக்குப் பணமும் கொடுத்து உதவினார். ஊனமுற்றவர் தன் கண்களில் கண்ணீர் மல்க அவரிடம், "நீங்கள் இயேசு ஆண்டவரா?" என்று கேட்டார். அதற்கு அவர், “நான் இயேசு ஆண்டவர் அல்ல; ஆனால் அவரைப் பின்பற்றும் சீடர்களில் ஒருவர் நான்" என்றாம். இவ்வாறு தான் நாம் இக்காலத்தில் இயேசுவின் அன்பு நற்செய்தியின் சாட்சிகளாகத் திகழ வேண்டும்.

கடவுள் நமது அன்பிற்காகக் காத்திராமல், அவரே முதன் முதல் நம்மை அன்பு செய்து, நமது பாவங்களுக்குக் கழுவாயாகத் தமது மகனை அனுப்பினார், அவ்வாறே நாமும் பிறருடைய அன்பிற்காகக் காத்திராமல், பிறரை அன்பு செய்ய முன்வருவோம். ஏனெனில் கிறிஸ்துவின் பேரன்பு நம்மை ஆட்கொண்டு, நம்மை உந்தித் தள்ளுகிறது (2 கொரி 5:14).

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

ஒரு மெளன அலறல்

கருச்சிதைவுக்கு எதிராக எழுதிய மனித உயிரின் மாண்பு பற்றிய ஆங்கில நூல் “The silent Scream" அதாவது "ஒரு மௌன அலறல்” கவிதை நயம், கற்பனை வளம் நிறைந்த, ஆனால் நெஞ்சத்தை முள்ளாக உறுத்தும், நெருப்பாகப் பொசுக்கும் ஒரு மெளன அலறல். அதில் இப்படி ஒரு சில வரிகள்.

“உலகில் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு மனித உயிரும் சிறப்பான ஒரு செய்தியைச் சொல்ல, சிறப்பான ஒரு பாடலை இசைக்க சிறப்பான ஓர் அன்பைப் பகிர வருகிறது. அதற்குத் தாயின் கருவறையே கல்லறையாகிற போது, அல்லது தவிர்க்க இயலாத சூழல் காரணமாகப் பிறந்ததும் குப்பைத் தொட்டியோ முட்புதரோ அதற்குப் புகலிடமாகிற போது மனிதன் சொல்கிறான்: “கடவுளே, உனது சிறப்பான அந்தச் செய்தி எனக்கு வேண்டாம், சிறப்பான அந்தப் பாடல் வேண்டாம், சிறப்பான உமது அன்பு வேண்டாம்" என்று,

"கொலை செய்யாதே" என்கிறது ஐந்தாம் கட்டளை. ஏன்? உயிர் இறைவனுக்கு உரியது. அதை எடுக்க எவருக்கும் உரிமையில்லை என்பதால் மட்டுமா? அன்பு வேண்டாம் என்ற உறவின் முறிவால் இல்லையா?

திருமுழுக்கு மட்டும் போதாது இறைவனுக்கு உகந்தவர்களாக அன்பில் நிலைப்பது இன்றியமையாதது. அதுவும் "என் அன்பில் நிலைத்திருங்கள் என்கிறார் இயேசு.

“எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்” (1 தெச.5:16) இது நமக்காகக் கிறிஸ்து வழியாகக் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் என்கிறார் திருத்தூதர் பவுல். “உள்ள மகிழ்ச்சியே மனிதரை வாழ வைக்கிறது. அகமகிழ்வே மானிடரின் வாழ்நாளை வளரச் செய்கிறது" (சீராக்.30:22) மகிழ்ச்சியின் தேவையை வலியுறுத்தும் வசனம் இது!

அன்பு ஒன்றே மகிழ்வைத் தரும். மனநிறைவைத் தரும். "என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்” (யோவான் 15:11) என்கிறார் இயேசு. மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமாயின் அவர் சொல்வது: “நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்து இருப்பதுபோல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்" (யோவான் 15:10).

இயேசு குறிப்பிடும் கட்டளை என்ன? “நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவான் 13:34) இயேசு தன் இரத்தத்தால் முத்திரை யிட்டுத்தந்த புதிய கட்டளை. புதிய உடன்படிக்கை இவ்வன்பின் தனித்தன்மை.

"தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிடச் சிறந்த அன்பு யாரிடமும் இல்லை (யோவான் 15:13) அன்பின் ஆழத்தை உணர்த்த இயேசு நட்பை எடுத்துக்காட்டாகக் கையாளுகிறார். "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு இது நட்புக்கு வள்ளுவர் தரும் இலக்கணம். ஆனால் இயேசு அதற்கும் மேலே சென்று "நண்பர்களுக்காக உயிர் கொடுத்தல்” என்பதை முன்வைக்கிறார்.

இயேசு சொன்னது போலவே நமக்காக உயிரைக் கொடுத்தார். நாம் அவரது நண்பர்கள் என்பதற்காகவா? பாவிகள், பகைவர்கள் என்பதால் அன்றோ ! ''நாம் பாவிகளாய் இருந்த போதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்'' (உரோமை 5:8). பகைவர்களையும் நண்பர்களாகக் கருதியன்றோ உயிரைக் கொடுத்தார்!. அந்த அன்புக்கு கைமாறாக நாமும் உயிர்த்தியாகம் செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை. மாறாக “நான் கட்டளையிடுவது எல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாக இருப்பீர்கள்" (யோவான் 15:14) என்றார்.

பலனை எதிர்பாராமல் பிறரை அன்பு செய்ய வேண்டும் என்பதுதான் அவருடைய கட்டளை. நீ என்னை அன்பு செய்தால் நான் உன்னை அன்பு செய்வேன் என்று சொல்பவன் மனிதன். நீ என்னை அன்பு செய்யாவிட்டாலும் உன்னைத் தேடிவந்து அன்பு செய்வேன் என்பவர் இறைவன். (2 கொரி.5:14,15).

பத்துக் கட்டளைகளின் சாரமாக இரண்டு கட்டளைகள் நமக்குத் தரப்பட்டுள்ளன. இரண்டு கட்டளைகளுக்குமே அடிப்படை அன்புதான். அன்பை விதைப்போம். அன்பை அறுவடை செய்வோம்.

"நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள்''. (யோவான் 15:14)

இன்றைய மனிதனின் மன நிலை? பிறர் ஆணையிடப் பணிவதா? இதைச் செய் அதைச் செய்யாதே என்று பிறர் கட்டளை தந்து என் வாழ்க்கையை வழிப்படுத்துவதா? விடுதலை, சுதந்திரம், மக்களாட்சி என்ற உணர்வில் வளரும் தலைமுறையில்லவா இது!

கட்டளைகள் எல்லாம் வாழ்வின் வளத்தையும் நலத்தையும் நோக்கமாகக் கொண்டவை. வாழ்க்கையைத் தடையோட்டமாக்கி குறுக்கே தடைகளை வைத்து அவற்றில் மனிதன் தடுக்கித் தட்டுத் தடுமாறி விழுவதைப் பார்த்து மகிழ்பவர் அல்ல நம் கடவுள்.

இறைக் கட்டளைகளை எல்லாரும் கடைப்பிடித்தால் ஊர் எப்படி இருக்கும்! உலகம் எப்படி இருக்கும்! கற்பனை செய்து பாருங்கள். உங்கள் ஊரில் ஒருவர்கூடப் பொய் பேசுவதில்லை, பொறாமைப் படுவதில்லை, திருடுவதில்லை, பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை. பிறர் வளர்ச்சி கண்டு வயிறு எரிவதில்லை. எல்லாரும் எல்லாரையும் தன்னலமின்றி அன்பு செய்கிறார்கள்... இப்படிக் கூட ஓர் ஊர் இருக்குமா என்று நினைக்காதீர்கள். சும்மா கற்பனை செய்து பாருங்கள். அந்த ஊர் எப்படி இருக்கும்? அங்கே காவல் நிலையம் இருக்குமா? சிறைச்சாலை இருக்குமா? மருத்துவமனை இருக்குமா? அவைகள் எல்லாம் கடவுள் படைத்த அற்புத உலகில் மனிதனால் படிந்த கறைகளின் அடையாளங்கள்!

“கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை ” (தி.ப.10:34). பொதுமைப் பண்பு வாய்ந்த அன்பை அடிப்படையாகக் கொண்ட புதியதொரு சமுதாயமாக விளங்குவதே, விளங்க வேண்டியதே திருச்சபை.

“அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள் அவர்களே கடவுளை அறிந்துள்ளார்கள். அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை. ஏனெனில் கடவுள் அன்பாய் இருக்கிறார்”. (1 யோவான் 4:7,8).
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இதைவிட மேலான அன்பு இல்லை

ஆல்ப்ஸ் மலைப்பகுதியில், ஒரு கிராமத்தில், அழகான சிற்றாலயம் ஒன்று அமைந்திருந்தது. அவ்வாலயம், ஏன் அவ்விடத்தில் கட்டப்பட்டது என்பதைக் கூறும் கதை, ஆலயத்தைவிட அழகானது.

அந்த கிராமத்தில் இரு சகோதரர்கள் வாழ்ந்தனர். அவ்விரு சகோதரர்களும் தங்கள் பாரம்பரிய நிலத்தில் ஒன்றாக உழைத்து வந்தனர். நிலத்தில் விளைந்த தானியங்களை இருவரும் சமமாகப் பகிர்ந்துகொண்டனர். அவர்களில் ஒருவருக்கு திருமணம் ஆகி குடும்பத்தோடு வாழ்ந்தார். மற்றொருவர், பிரம்மச்சாரி.
பிரம்மச்சாரியாக வாழ்ந்தவர், ஒருநாள் தனக்குள், "நான் தனி ஆள். என் அண்ணனுக்கோ குடும்பம் உள்ளது. எனவே, தானியங்களைச் சமமாகப் பகிர்வது நியாயமல்ல" என்று சிந்தித்தார். இரவானதும், அவர், தன்னிடமிருந்த தானிய மூட்டைகளில் ஒன்றை எடுத்து, அதை அண்ணன் வைத்திருந்த தானிய மூட்டைகளோடு வைத்துவிட்டுத் திரும்பினார்.

அண்ணனும், அதேவண்ணம் சிந்தித்தார். "எனக்காவது ஆதரவு காட்ட குடும்பம் உள்ளது. தம்பிக்கு யாருமே இல்லை. எனவே, தானியங்களைச் சமமாகப் பகிர்வது நியாயமல்ல" என்று எண்ணிய அண்ணன், இரவோடிரவாக, ஒரு மூட்டையை எடுத்து, தம்பி வைத்திருந்த மூட்டைகளோடு வைத்துவிட்டுத் திரும்பினார்.
மாதங்கள் உருண்டோடின. அண்ணன், தம்பி இருவருக்கும், எப்படி தங்கள் தானிய மூட்டைகள் குறையாமல் உள்ளன என்பது, புதிராகவே இருந்தது. ஒருநாள் இரவு, இரண்டுபேரும், மூட்டைகளைச் சுமந்த வண்ணம், ஒருவரையொருவர் சந்திக்க நேர்ந்தது. உண்மையை உணர்ந்த இருவரும், ஆனந்த கண்ணீரோடு, தழுவிக்கொண்டனர்.

அப்போது, திடீரென, வானிலிருந்து குரல் ஒன்று கேட்டது: "இதோ, இங்கு என் ஆலயத்தை எழுப்புவேன். மக்கள் உள்ளார்ந்த அன்புடன், எங்கு சந்திக்கின்றனரோ, அங்கு, என் பிரசன்னம் என்றும் தங்கும்" என்று ஒலித்த குரல், அவ்விடத்தில் கோவில் கட்டப்படுவதற்குக் காரணமாக அமைந்தது என்ற பாரம்பரியக் கதை, அக்கிராமத்தில் சொல்லப்படுகிறது.

தன்னை மையப்படுத்தாமல், அடுத்தவரை மையப்படுத்தி எழும் உன்னத உணர்வே, உண்மையான அன்பு. அந்த அன்பை பறைசாற்றும் இதயங்களெல்லாம், ஆண்டவன் விரும்பி வாழும் ஆலயங்கள்தாமே!

ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்பு ஒன்றே, இயேசுவின் சீடர்களுக்கு அடையாளமாக அமையவேண்டும் என்ற முக்கியப் பாடத்தை, இன்றைய இரண்டாம் வாசகமும், நற்செய்தியும் வலியுறுத்திக் கூறுகின்றன. யோவான் எழுதிய முதல் திருமுகத்தின் 4ம் பிரிவிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், கடவுளின் அரியதோர் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அதுதான், "கடவுள் அன்பாய் இருக்கிறார்" (1 யோவான் 4:8) என்ற சொற்கள். "God is Love" அதாவது, "கடவுள் அன்பாய் இருக்கிறார்" என்ற மூன்று சொற்கள், கிறிஸ்தவ மறையின் இதயத்துடிப்பாக அமைந்துள்ளன. இன்னும் சொல்லப்போனால், இந்த உண்மை ஒன்றே, அனைத்து உண்மையான மதங்களின் உயிர்த்துடிப்பு.

இந்த இலக்கணத்தை பொன்னெழுத்துக்களால் எழுதி, அவற்றில் வைரக்கற்களைப் பதித்து, ஓர் உருவமாக்கி, அதற்கு ஒரு கோவில் எழுப்பி, நாம் வழிபட முடியும். அவ்வாறு செய்தால், "கடவுள் அன்பாய் இருக்கிறார்" என்ற இலக்கணத்தின் உண்மைப் பொருளை நாம் கொன்றுவிடுவோம். "கடவுள் அன்பாய் இருக்கிறார்" என்று கூறும் யோவான், அந்த அன்பு, வானத்தில் இருந்தபடியே, நம் வழிபாட்டை எதிர்பார்க்கவில்லை, மாறாக, அந்த அன்பை செயல்வடிவில் வெளிப்படுத்த, தன் மகனை இவ்வுலகிற்கு இறைவன் அனுப்பினார் என்று தெளிவுபடுத்துகிறார். இத்தகைய அன்பை உணர்ந்தவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை, யோவானின் திருமுகம் இவ்வாறு கூறியுள்ளது: அன்பார்ந்தவர்களே, கடவுள் இவ்வாறு நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் ஒருவர் மற்றவர்மீது அன்பு கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். (1 யோவான் 4:11)

"கடவுள் நம்மீது அன்பு கொண்டார் என்றால், நாமும் கடவுள் மீது அன்புகொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்" என்று யோவான் கூறியிருந்தால், அது, பொருளுள்ள வாக்கியமாகத் தெரிந்திருக்கும். ஆனால், யோவான் கூறியுள்ள சொற்கள் புதிராக உள்ளன. கடவுள் நம்மீது கொள்ளும் அன்புக்கு நாம் அளிக்கக்கூடிய பதிலிறுப்பு, நாம் மற்றவர்கள் மீது கொள்ளும் அன்பு என்று யோவான் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்தக் கண்ணோட்டத்தில் அவர் சிந்திப்பதற்குக் காரணம், இயேசு, இதே எண்ணங்களை இறுதி இரவுணவின்போது சீடர்களுக்குக் கூறியிருந்தார். அந்தப் பகுதி, இன்று, நற்செய்தியாக நம்மை அடைந்துள்ளது.

இந்த இறுதி இரவுணவின்போது, இயேசு, தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியபின்னர், புதிய கட்டளையொன்றை அவர்களுக்கு வழங்கினார்: "‘ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்’ என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்" என்றார். (யோவான் 13:34-35)

இயேசு வழங்கிய இந்தப் புதியக் கட்டளை, நாம் வழக்கமாகச் சிந்திக்கும் பாணியிலிருந்து வேறுபடுவதை உணர்கிறோம். "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் என்னிடம் அன்பு செலுத்துங்கள்" என்று இயேசு கூறியிருந்தால், அதை நாம் எளிதில் புரிந்துகொள்வோம். ஆனால், கிறிஸ்தவ அன்பின் நோக்கம் என்ன என்பதை இயேசு தெளிவாக்குகிறார். "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்பதை, தன் புதிய கட்டளையாகத் தருகிறார்.

இன்றைய நற்செய்தியில், அந்தக் கட்டளையை இன்னும் சிறிது விளக்கிக் கூறுகிறார். இயேசு கூறும் சொற்களைக் கேட்கும்போது, அவை, புரட்சிகரமான அன்பைப் பற்றி கூறுகின்றன என்பதைப் புரிந்துகொள்கிறோம். "என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல, நானும் என் தந்தை மீது அன்புகொண்டுள்ளேன்" என்றும், "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் என் மீது அன்பு கொண்டிருக்க வேண்டும்" என்றும் இயேசு சொல்லியிருந்தால், அவற்றை யாரும் எளிதில் புரிந்துகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் முடியும். ஆனால், இங்கு இயேசு, “என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன்” (யோ. 15:9) என்று கூறியபின், மீண்டும் ஒருமுறை தான் வழங்கிய புதிய கட்டளையை சீடர்களுக்கு நினைவுறுத்துகிறார். "நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை" (யோ. 15:12) என்று கூறுகிறார். அன்பு என்றால், 'உனக்கு நான், எனக்கு நீ' அல்லது, ‘நமக்கு நாம்’ என்று உருவாகக்கூடிய குறுகிய வட்டங்களை உடைத்து, அன்பிற்கு விடுதலை தரும்வண்ணம் இயேசு பேசுகிறார்.

நாம் ஒருவர் மீது அன்பு கொண்டால், அவர் பதிலுக்கு, நம்மீது அன்பு கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கை. ஆனால், இயேசு, தன் சீடர்களுக்குச் சொல்லித்தந்த அன்பு, பிரதிபலனை எதிர்பார்த்து காட்டப்படும் அன்பு அல்ல என்பது, தெளிவாகப் புரிகிறது. இந்த அன்பு, நீ-நான்-நாம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு வெளியேறி, அடுத்தவர், அதற்கடுத்தவர் என்று, மேலும், மேலும் பரந்து, விரிந்து செல்லவேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம்.
அன்பின் விரிவைப்பற்றி கூறிய இயேசு, அடுத்த வரியில், அன்பின் ஆழத்தையும் தெளிவுபடுத்துகிறார்: "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை" (யோ. 15:13) உச்சக்கட்ட சவாலாக ஒலிக்கும் இச்சொற்கள், கோடான கோடி உன்னத மனிதர்கள், அன்பின் சிகரங்களை அடைவதற்கு ஓர் உந்து சக்தியாக அமைந்து வருகின்றன.

அந்த உன்னத மனிதர்களில் ஒருவர், புனித டேமியன் தெ வூஸ்டர் (Damien de Veuster). 1850ம் ஆண்டு, ஹவாய் தீவுகளில் வாழ்ந்தவர்கள் நடுவே தொழுநோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டு, அருகில் இருந்த மொலக்காய் தீவுக்கு அனுப்பப்பட்டனர். அந்தத் தீவுக்கு அனுப்பப்படுவது, ஏறத்தாழ மரணதண்டனை தீர்ப்புக்குச் சமம். ஏனெனில், அந்தத் தீவில், மருத்துவர், மருந்துகள், குடியிருப்பு என்று எதுவும் கிடையாது. அங்கு செல்லும் அனைவரும், பகலில் சுட்டெரிக்கும் வெயிலிலும், இரவில் கடும் குளிரிலும் துன்புற்று, விரைவில் சாகவேண்டும் என்ற எண்ணத்தில் அங்கு அனுப்பப்பட்டனர்.
அத்தீவில், ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கு, இளம் அருள்பணியாளர், டேமியன் தெ வூஸ்டர் அவர்கள், ஆயரால் அனுப்பப்பட்டார். அந்த இளையவர், தச்சுவேலையில் திறமை பெற்றவர் என்பதால், மொலக்காய் தீவில் ஒரு சிற்றாலயம் நிறுவுவதற்கென அங்கு அனுப்பப்பட்டார். அந்தச் சிற்றாலயம், ஏற்கனவே கட்டைகளால் வடிவமைக்கப்பட்டு, கப்பலில் எடுத்துச் செல்லப்பட்டது. அந்த ஆலயத்தை குறிப்பிட்ட ஓரிடத்தில் பொருத்திவிட்டு திரும்பி வந்துவிட வேண்டும் என்று அருள்பணியாளர் டேமியனிடம் ஆயர் கூறியிருந்தார். தீவில் உள்ள தொழுநோயாளர் யாருடனும், எவ்வகையிலும் அவர் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்ற கண்டிப்பான கட்டளையுடன் ஆயர் அவரை அங்கு அனுப்பினார்.

தன் 33வது வயதில் மொலக்காய் தீவை அடைந்த இளம் அருள்பணியாளர் டேமியன் அவர்கள், கோவிலை வடிவமைத்துக்கொண்டிருந்த வேளையில், அங்கிருந்த மக்களின் நிலையைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். மரக்கட்டைகளைக் கொண்டு இந்த ஆலயத்தை உருவாக்குவதைவிட, அங்குள்ள மனிதர்களைக் கொண்டு, இறைவனுக்கு உயிருள்ள ஆலயத்தை உருவாக்குவது முக்கியம் என்று அவர் எண்ணினார். ஆயரின் அனுமதியுடன், அருள்பணி டேமியன் அங்கு தங்கினார். விரைவில், அவர், அம்மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். அவர்களுக்கு இல்லங்கள் அமைத்துத் தருவதில் தீவிரமாக ஈடுபட்டார்.

ஒரு சில நாட்கள், அல்லது, மாதங்கள் தங்கலாம் என்ற எண்ணத்தில் ஆரம்பமான அவர் பணி, 16 ஆண்டுகள் தொடர்ந்தது. 11 ஆண்டுகள் சென்றபின், ஒருநாள், அவர் குளிக்கச் சென்ற வேளையில், தன் கால்களைக் கொதிக்கும் நீரில் தவறுதலாக வைத்தார். அவரது கால்களில் கொப்பளங்கள் உருவாயின; ஆனால், அவர் அந்த வலியை உணரவில்லை. அன்று, அவர், தானும் தொழுநோயால் பாதிக்கப்பட்டதை உணர்ந்தார். வழக்கமாக அவர் திருப்பலியில் மறையுரை வழங்கும்போது, 'தொழுநோயுற்றோர்' என்று பொதுவாகக் குறிப்பிட்டுப் பேசுவார். தனக்கும் தொழுநோய் வந்துவிட்டது என்பதை உணர்ந்த அடுத்த நாள், அவர் கோவிலில் திருப்பலி நிறைவேற்றியபோது, "தொழுநோயாளிகளாகிய நாம்" என்று, அவர்களோடு தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக்கொண்டார்.

ஐந்து ஆண்டுகள் ஒரு தொழுநோயாளியாக அவர்கள் நடுவே வாழ்ந்த அருள்பணி டேமியன் தெ வூஸ்டர் அவர்கள், 1889ம் ஆண்டு, ஏப்ரல் 15ம் தேதி தன் 49வது வயதில் இறைவனடி சேர்ந்தார். ஒவ்வோர் ஆண்டும், புனித டேமியன் திருவிழா (மே 10ம் தேதி), சிறப்பிக்கப்படும் வேளையில், அன்பின் ஆழத்தைக் குறித்து இயேசு கூறிய சொற்கள், மீண்டும் ஒருமுறை உலகில் எதிரொலிக்கும்: தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. (யோவான் 15:13)

சில ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் ஒரு கண்காட்சித் திடலில் ஏற்பட்டத் தீவிபத்தில் பல பள்ளிக் குழந்தைகள் அகப்பட்டனர். அந்தக் கண்காட்சியைக் காண வந்திருந்த ஓர் இளைஞர், அக்குழந்தைகள் அனைவரையும் காப்பாற்றினார். எரியும் நெருப்புக்குள் பலமுறை சென்று, குழந்தைகளைக் காப்பாற்றியவர், இறுதியில், அந்தப் புகை மண்டலத்தில் மூச்சு முட்டி, மயங்கி விழுந்து, தீயில் கருகி இறந்தார்.

அந்த இளைஞருக்கும், அவரால் காப்பாற்றப்பட்டவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அடுத்தநாள் தன் பெயர் நாளிதழ்களில் புகைப்படத்துடன் வரும் என்ற எதிர்பார்ப்பில், அவர் அந்தத் தியாகச்செயலை மேற்கொள்ளவில்லை. மனித உயிர்களை, அதுவும் பிஞ்சு உயிர்களைக் காக்கவேண்டும் என்ற ஒரே ஓர் உந்துதலால், அவர் இந்த உன்னதச் செயலைச் செய்தார்.

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை என்று இயேசு சொன்னதன் முழுப் பொருளை உலகிற்கு உணர்த்தியுள்ளார், அந்த இளைஞர். அதாவது, அறிமுகம் ஏதுமற்ற பள்ளிக்குழந்தைகளும் தன் உறவே என்ற உண்மையை உணர்த்த, அவர்களுக்காக தன் உயிரை அந்த இளைஞர் இழந்தார். அந்த இளைஞரைப் போன்று, பல தியாக உள்ளங்கள், அறிமுகமே இல்லாதவர்களைக் காத்த முயற்சியில் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.

அன்பும், சுயநலமும், ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கூறுமளவு, தவறான பாடங்கள் இவ்வுலகில் பெருகிவரும் வேளையில், உலகினர் அனைவரும் நம் உறவுகளே என்ற உண்மை அன்பின் இலக்கணத்தை நமக்குத் தெளிவாக உணர்த்தும் உன்னத உள்ளங்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

கடவுளின் அருள்பெருக்கு

இயேசுவின் விண்ணேற்றமும் தூய ஆவியார் பெருவிழாவும் நெருங்கி வருகின்ற வேளையில் இன்றைய இறைவார்த்தை வழிபாடு கடவுளின் அருள்பெருக்கை நமக்கு நினைவூட்டுகிறது. நம் செயல்கள் ஒரு பக்கம் நமக்குப் பயன்களைத் தந்தாலும், கடவுளின் அருள்பெருக்கே மேலோங்கி நிற்கிறது என்றும், நீடித்த பயனைத் தருகிறது என்றும் மொழிகின்றன இன்றைய வாசகங்கள்.

இன்றைய முதல் வாசகப்பகுதியை பேதுருவின் மனமாற்றம் என அழைக்கலாம். திருத்தூதர் பணிகள் நூலில் எருசலேமிலிருந்து தமஸ்கு செல்லும் வழியில் பவுல் மனமாற்றம் அடைகிறார். பேதுருவின் மனமாற்றம் கொர்னேலியுவின் இல்லத்தில் நடந்தேறுகிறது. கொர்னேலியு ஓர் உரோமைப் படையின் நூற்றுவர் தலைவர். யூதர்களைப் பொருத்தவரையில் அவர் ஒரு புறவினத்தார். தன் யூத மேட்டிமை எண்ணத்தில் வாழ்கிற பேதுரு, புறவினத்தாரைத் தீட்டானவர்கள் எனக் கருதுகிறார். கடவுள் தூய்மை எனக் கருதுவதை மனிதர்கள் தீட்டு எனக் கருதக் கூடாது என்று காட்சிகள் வழியாக பேதுருவுக்குக் கற்பிக்கிறார் கடவுள். காட்சி முடிந்தவுடன் அவருடைய பயணம் கொர்னேலியுவின் இல்லம் நோக்கித் தொடங்குகிறது. பேதுருவைக் கண்டவுடன் அவருடைய காலில் விழுகிறார் கொர்னேலியு. உடனே பேதுரு, ‘நானும் மனிதன்தான். எழுந்திரும்!’ எனப் பணிக்கிறார். ‘நான்தான் கடவுள். நான் மட்டுமே தூயவர்’ என்ற நிலையிலிருந்த பேதுரு, காட்சியின் வழியாக, ‘நானும் மனிதன்தான்’ என்னும் அடிப்படையான உளமாற்றம் பெருகிறார். ‘கடவுள் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை’ என அறிவிக்கிறார்.

பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போதே தூய ஆவியார் அனைவர்மீதும் இறங்கி வருகிறார். பேதுரு கைளை விரித்து இறைவேண்டல் செய்யாமலேயே தூய ஆவியார் வருகிறார். இங்கேதான் பேதுரு மனமாற்றம் அடைகிறார்.

ஒரு தோட்டக்காரரைப் போல கைகளில் மண்வெட்டி பிடித்துக்கொண்டு தண்ணீர் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும், எவ்வளவு செல்ல வேண்டும் என கணக்கிட்டுக் கொண்டிருந்தார் பேதுரு. ஆனால் கடவுளோ திடீரென மழைபொழிவது போல தூய ஆவியாரைப் பொழிகிறார். வாய்க்கால்கள் நிறைந்தோடியதல்லாமல் பேதுரு கட்டிவைத்த பகுதிகளும் (‘பாத்தி’) உடைந்துகொண்டு போகின்றன. கடவுளின் அருள்பெருக்கின்முன் பேதுரு மௌனமாக நிற்கிறார். மீட்பு அனைவருக்கும் உரியது, கடவுள் அனைவர்மேலும் அருள்பொழிய வல்லவர் என்பதை உணர்கிற பேதுரு கூடியிருந்த அனைவருக்கும் திருமுழுக்கு கொடுக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் பிரியாவிடைப் பேருரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. திராட்சைச் செடி-கொடிகள் உருவகத்தின் தொடர்ச்சியாக வருகிற இந்தப் பகுதியில், இயேசு தமக்கும் தம் சீடர்களுக்குமான நெருக்கத்தை மூன்று வாக்கியங்களில் வெளிப்படுத்துகிறார்: (அ) உங்களை நான் நண்பர்கள் என்றேன். (ஆ) உங்களைத் தேர்ந்துகொண்டேன். (இ) கனிதருவதற்காக உங்களை ஏற்படுத்தினேன்.

(அ) நட்பு

‘பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல’ என்று முன்னர் தம் சீடர்களுக்கு மொழிகிற இயேசு, இங்கே, ‘உங்களை நண்பர்கள் என்றேன்’ எனச் சொல்லி, நண்பர்களுக்குள் ஒளிவு மறைவு இல்லாததுபோல, அவர்களுக்கும் தமக்கும் இடையே எந்த ஒளிவும் மறைவும் இல்லை என்கிறார். இங்கே, நட்பு என்ற நிலையில் சீடர்கள் இயேசுவோடு நெருக்கமாகிறார்கள். மனிதர்கள் கடவுளோடு நட்பு பாராட்டும் அளவுக்கு கடவுள் இங்கே இறங்கி வருகிறார். ‘வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார்’ என்னும் புரிதலைச் சற்றே நீட்டி, ‘வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டு நம்மைத் தம் நண்பர்களாக்கிக்கொண்டார்’ என்று சொல்லலாம். மேலும், நட்பு என்பது இயேசுவின் கொடை என்றாலும், அந்த நட்பில் அவர்கள் இணைந்திருக்க வேண்டும் என்றால், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றார். இவ்வாறாக, நட்பு என்பது கடவுளின் கொடையாகவும் நம் கடமையாகவும் மாறுகிறது.

(ஆ) தெரிந்துகொள்தல்

‘நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன்’ எனத் தம் சீடர்களுக்குச் சொல்கிறார் இயேசு. பழைய ஏற்பாட்டில், ஆண்டவராகிய கடவுள் ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களைத் தம் சொந்த மக்களாக, இனமாகத் தேர்ந்துகொள்கிறார். தொடர்ந்து, சந்திப்புக் கூடாரம் ஏற்படுத்தப்பட்டபோது, அங்கே பணி செய்வதற்காக குருக்களாக லேவியரையும், தலைமைக்குருவாக ஆரோனையும் தேர்ந்துகொள்கிறார். நீதித்தலைவர்களை, அரசர்களைத் தேர்ந்துகொண்டு அவர்கள் வழியாக கடவுள் மக்களை அரசாள்கிறார். இறைவாக்கினர்களைத் தேர்ந்துகொண்டு மக்களைக் கண்டித்துத் திருத்துகிறார். தேர்ந்துகொள்தல் கடவுளிடமிருந்து வருகிறது. ஆக, இது கடவுளின் முன்னெடுப்பு. முழுக்க முழுக்க அவருடைய கொடையும் அருளுமாகும். தேர்ந்துகொள்தல் வழியாக ஒருவர் சிறப்பான இடம் பெறுகிறார். இந்தச் சிறப்பிடம் என்பது அவருக்கு பெருமையை அல்ல, மாறாக, பொறுப்பைத் தருகிறது. தேர்ந்துகொள்ளப்பட்ட நபர் அந்த நிலையிலேயே தொடர்ந்து நிற்க வேண்டும்.

(இ) கனிதருவதற்காக உங்களை ஏற்படுத்தினேன்

தேர்ந்துகொள்தலின் அடுத்த நிலையில், ஆண்டவராகிய இயேசு தம் சீடர்களுடைய வாழ்வின் நோக்கத்தை வரையறுக்கிறார். கனிதருவதற்காக இயேசு அவர்களை நியமிக்கிறார் அல்லது அவர்களுக்குப் பொறுப்பை வழங்குகிறார். கனிதருதல் என்பது இங்கே உருவகமாக உள்ளது. கனி இனிமையும் சுவையும் நிறைந்ததாக இருப்பது மட்டுமல்லாமல், மற்றவர்களின் பசி தீர்க்கவும் பயன்படுகிறது. ஆக, சீடர்கள் தங்கள் இயல்பில் இனிமை கொண்டிருப்பதோடு, மற்றவர்களுடைய பசி தீர்க்கவும் தயாராக இருத்தல் வேண்டும். இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்’ என எழுதுகிறார் யோவான். நம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்துகொள்ள அன்பே அடிச்சட்டமாக இருக்கிறது.

கடவுளின் அருள்பெருக்கினால் புறவினத்தார்கள் தூய ஆவியைப் பெற்றுக்கொள்கிறார்கள். கடவுளின் அருள்பெருக்கே சீடர்களை நண்பர்கள் நிலைக்கு உயர்த்தி, அவர்களைத் தேர்ந்துகொண்டு, அவர்கள் கனி தருவதற்காக அவர்களை ஏற்படுத்துகிறது.

இன்றைய நாள் நமக்கு வழங்கும் பாடங்கள் எவை?

(அ) நன்றிப் பெருக்கு

கடவுளின் அருள்பெருக்கிற்கான நமது பதிலிறுப்பு நன்றிப்பெருக்கே. பேதுரு போல சில நேரங்களில் நாம் முற்சார்பு எண்ணம் கொண்டவர்களாகவும், மற்றவர்களைத் தீர்ப்பிடுபவர்களாகவும் இருக்கிறோம். முற்சார்பு எண்ணமும் தீர்ப்பிடும் மனப்பாங்கும் நீங்கும்போது நன்றியுணர்வு பெருக்கிறது. கடவுள் நம்மேல் அருள்பொழிகிறார் என்னும் கருத்து நமக்கு ஆறுதல் தருவதோடு, அந்த அருளுக்கேற்ற செயல்களை நாம் செய்யுமாறு நம்மைத் தூண்டுகிறது.

(ஆ) கடவுளின் நண்பர்கள்

நம் நண்பர்களின் உடனிருப்பு, எண்ணம், செயல்கள் நம்மைப் பாதிப்பதோடு, அவை நம்மேல் தாக்கத்தை ஏற்படுத்தி நம்மை மாற்றுகின்றன. அதனால்தான், ‘உன் நண்பன் யாரெனச் சொல். நீ யாரெனச் சொல்கிறேன்!’ என்று நாம் சொல்கிறோம். இயேசு நம்மைத் தமது நண்பர்களாக ஏற்றுக்கொள்கிறார். சீடர்களாக அவரைப் பின்பற்றுபவர்கள் நண்பர்களாக அவரோடு உடன் பயணிக்க இயலும்.

(இ) அன்புக் கட்டளை

‘நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும்’ என்பதே என் கட்டளை என்று புதிய கட்டளையை, அன்புக் கட்டளையை வழங்குகிறார் இயேசு. கடவுளிடமிருந்து பெறுகிற அன்பை நாம் ஒருவர் மற்றவருக்குப் பகிர்ந்துகொடுப்பதில்தான் அன்பு நிறைவு பெறுகிறது. நாம் அன்பு செலுத்துவதற்கும், அன்பைப் பெறுவதற்கும் தடையாக உள்ள பகைமை, கண்டுகொள்ளாத்தன்மை, எரிச்சல், வெறுப்பு, பயம், தயக்கம் ஆகியவற்றைக் களைதல் வேண்டும்.

இன்றைய பதிலுரைப்பாடலில், ‘உலகெங்கும் உள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்’ எனப் பாடுகிறார் திருப்பாடல் ஆசிரியர் (காண். திபா 98). அனைத்தும் கடவுளின் அருள்பெருக்கே என்று உணர்வதே மாபெரும் விடுதலை உணர்வு.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

இறைஉறவில் நிலைத்திருப்போமா?

வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த தன் தந்தையிடம், மகளானவள் பாசத்தோடு வந்து அமர்ந்து தனக்குப் பிடித்தமான ஒரு பொருளை வாங்கித்தருமாறு கேட்டாள். உடனே தந்தை தன் மகளை பாசத்தோடு அணைத்து "நான் சொல்வது போல நீ செய்தால் தான் வாங்கித் தருவேன் "என்றார். உடனே "சொல்லுங்கப்பா" என்று ஆர்வத்தோடு கேட்ட மகளிடம் "அப்பா அம்மா சொல்வதைக் கேட்டு நல்ல பிள்ளையாக இருக்கணும். நல்லா படிச்சு முதல் மதிப்பெண் வாங்கணும். எப்பவும் அப்பாவோட செல்ல பிள்ளையா இருக்கணும். அப்படி இருந்தால் உனக்குபிடித்ததை நான் செய்வேன் " என்றாராம். வேகமாக சிரித்த முகத்துடன் தலையாட்டினாள் மகள்.

ஆம். அன்புக்குரியவர்களே நாம் எல்லோருமே நமது தாய் தந்தையரிடமிருந்து இவ்வகை அனுபவங்களைப் பெற்றிருப்போம். நம்மை நல்வழிப்படுத்தவும் நாம் வாழ்வில் முன்னேறவும் அவர்கள் தங்கள் அன்புக் கட்டளைகளாலும் அறிவுரைகளாலும் இன்றுவரை நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது நாம் மறுக்க முடியாத ஒரு உண்மை.

இத்தகைய ஒரு தந்தைக்குரிய மனநிலையில் தான் இயேசுவும் " என் கட்டளைகளைக் கடைபிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்" எனக் கூறுகிறார்.
அன்றைய இஸ்ரயேல் மக்கள், ஆண்டவர் மோசே வழியாக அளித்த கட்டளையைக் கடைபிடிப்பதில் கருத்தாய் இருந்தனர். ஏனேனில் அக்கட்டளைகளை அவர்கள் இறைவனோடு கொண்டுள்ள உறவில் நிலைத்திருக்க உதவக்கூடிய வழிமுறையாய்க் கருதினர்.

புதிய இஸ்ரயேலராகிய நாமும் இறைவனோடு உள்ள உறவில் நிலைத்திருக்க இயேசு அழைக்கிறார். இயேசு அதற்கான வழிமுறையையும் நமக்கு வகுத்துத் தருகிறார். அன்பு வாழ்வே அவ்வழிமுறை.

இன்றைய இரண்டாம் வாசகத்திலும் அன்பைப் பற்றி தூய யோவான் எடுத்துரைக்கிறார்.
அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செய்வோரும் கடவுளிடமிருந்தே வருகின்றனர். அவ்வாறெனில் நாம் கடவுளோடு அன்புறவில் நிலைத்திருந்தால் மட்டுமே சக மனிதருக்கும் அன்பு செலுத்த முடியும். சக மனிதருக்கு அன்பு செலுத்த வேண்டுமென்பது தான் இயேசு நமக்குத் தரும் கட்டளை. இக்கட்டளையை நிறைவேற்றி நாம் அன்புறவில் வாழும் போது நமது வாழ்வு கனிகொடுப்பதாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும், அமைதி நிறைந்ததாகவும் இருக்கும். நாமும் கடவுளோடு உள்ள உறவில் ஆழப்பட முடியும். எனவே இறையுறவில் நிலைத்திருக்க அன்பு வாழ்வு வாழ்வோம். அதற்கான இறையருள் வேண்டுவோம்.

இறைவேண்டல்

அன்பு இறைவா நாங்கள் உமதன்புக் கட்டளையைக் கடைபிடித்து உம்மோடும் பிறரோடும் உறவில் வளர்ந்து அதில் நிலைத்திருக்க வரம் தாரும். ஆமென்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser