மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பாஸ்கா காலம் 5ஆம்ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-திருத்தூதர் பணிகள் 9: 26-31 | 1 யோவான் 3: 18-24 | யோவான் 15: 1-8

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


ஒவ்வொரு மதமும்‌ இந்த உலகிலே சில அடையாளங்களால்‌, குறிக்கப்படுகின்றன. இனம்‌ கண்டு கொள்ளப்‌ படுகின்றன. சிலுவை என்றால்‌ கிறிஸ்தவம்‌, திரிசூலம்‌ என்றால்‌ இந்து மதம்‌, வளர்பிறை (பிறைச்சந்திரன்‌) என்றால்‌ இஸ்லாமிய மதம்‌ என அடையாளம்‌ காட்டப்படுகின்றன. அதேபோல்‌ காவி உடை என்றால்‌ இந்து, வெள்ளை தொப்பி என்றால்‌ முஸ்லீம்‌, வெள்ளை அங்கி என்றால்‌ கிறிஸ்தவம்‌ எனவும்‌ அடையாளம்‌ காண்கிறார்கள்‌. அதேபோல்‌ ஆறுமுகம்‌ என்றால்‌ இந்து, அப்துல்‌ என்றால்‌ முஸ்லீம்‌, அந்தோணி என்றால்‌ கிறிஸ்தவன்‌ எனவும்‌ மக்கள்‌ நினைக்கிறார்கள்‌.

ஆனால்‌ அன்பார்ந்த சகோதரர்களே! சகோதரிகளே! நீ ஒரு கிறிஸ்தவன்‌. நான்‌ ஒரு கிறிஸ்தவன்‌ என்பதற்கு உண்மையான அடையாளம்‌ என்ன என்பதை உணர வேண்டும்‌. இது ஆடையாலோ, பெயராலே அல்லது அடையாளங்களாலோ அமைவது மட்டும்‌ அல்ல. மாறாக எந்த நிலையில்‌ ஒருவன்‌ வாழ்கிறான்‌, எந்த நிலையில்‌ இறைவனோடு உறவு கொண்டிருக்‌ கிறான்‌? எந்த நிலையில்‌ இறைவனின்‌ கட்டளையைக்‌ கடைப்பிடிக்கிறானோ அந்த நிலையில்தான்‌ அவன்‌ உண்மையான இறை பக்தன்‌ என்பதை வெளிப்படுத்த முடியும்‌. இன்று வாசித்த வாசகங்களில்‌ இவைதான்‌ நமக்குப்‌ பதிலாக அமைந்துள்ளன.

புனித பவுல்‌ வாழ்க்கையைப்‌ பற்றி வாசிக்கக்‌ கேட்டோம்‌. ஆரம்பத்தில்‌ ஆதி கிறிஸ்தவர்கள்‌ புனித பவுலை இயேசுவின்‌ சீடனாக ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்‌. ஏனெனில்‌ அவர்‌ வேத விரோதியாக இருந்தார்‌. பர்னபாஸ்‌ பவுலைத்‌ திருத்தூதர்களிடம்‌ - கூட்டிச்‌ சென்ற போதும்கூட ஏற்றுக்கொள்ளத்‌ தயங்கினார்கள்‌. ஆனால்‌ பவுலின்‌ புதிய வாழ்வும்‌, அவர்‌ வீரத்தோடும்‌, துணிவோடும்‌ போதித்த நிலையும்தான்‌ திருச்சபையை வளரச்‌ செய்தது.

புனித யோவான்‌ தான்‌ எழுதிய திருமடலிலே கூறுவதுபோல்‌ சொல்லிலும்‌, பேச்சிலும்‌ அல்ல. மாறாக செயலில்‌, கடவுளின்‌ கட்டளையைக்‌ கடைப்பிடிப்பதில்தான்‌ உண்மை அன்பை விளங்கச்‌ செய்ய முடியும்‌ (1 யோவா. 3:18, 19) என்கிறார்‌.

இந்த உண்மையான வாழ்வை, உறவை மிக அழகாக ஆண்டவர்‌ இயேசு உவமை மூலமாக, அடையாளம்‌ மூலமாகத்‌ தருகின்றார்‌.

நானே உண்மையான திராட்சைச்‌ செடி, நீங்கள்‌ அதன்‌ கொடிகள்‌ (யோவா. 15:1) என்கிறார்‌. ஒரு மரத்தின்‌ கிளைகள்‌ அந்த மரத்தோடு இணைந்திருந்தால்தான்‌ அது வளரும்‌. மலரும்‌, கனியும்‌ தர முடியும்‌.

ஒருநாள்‌ ஒரு மகன்‌ தன்‌ தாயைப்‌ பார்த்து கோபத்தில்‌ கேட்டான்‌. உனக்கும்‌ எனக்கும்‌ என்ன உறவு என்றான்‌. தாயோ அமைதியாக தொப்புழ்‌ கொடி உறவு என்றாள்‌. தொப்புழ்‌ கொடிதான்‌ தாயையும்‌ சேயையும்‌ இணைக்கிறது. தாயோடு அக்கொடி இணைந்திருந்தால்தான்‌ குழந்தை வயிற்றில்‌ உயிரோடு இருக்க முடியும்‌. அது அறுந்துவிட்டால்‌ குழந்தை உயிரோடு இருக்காது. , இதேபோல்‌ நாம்‌ ஆடை அலங்காரம்‌ செய்து பொட்டு இன்றி, பூவின்றி வந்தும்‌, கிறிஸ்துவோடு இணைந்திராவிட்டால்‌ என்ன பயன்‌? எனவேதான்‌ இயேசு சொன்னார்‌ ஒருவன்‌ என்னுள்ளும்‌ நான்‌ அவனுள்ளும்‌ இணைந்திருந்தால்‌ அவன்‌ மிகுந்த கனி தருவான்‌. _ என்னை விட்டுப்‌ பிரிந்து உங்களால்‌ ஒன்றும்‌ செய்ய முடியாது (யோவா. 15:5).

இந்த இணைந்து வாழ்விற்கு நாம்‌ என்ன செய்ய வேண்டும்‌.

ஆண்டவர்‌ இயேசு: நான்‌ உங்களை அன்புசெய்தது போல, நீங்களும்‌ ஒருவர்‌ மற்றவரிடம்‌ அன்பு செய்யுங்கள்‌ (யோவா. 13:34) _ என்ற கட்டளையைத்‌ தருகிறார்‌.

கொடுங்கள்‌ உங்களுக்குக்‌ கொடுக்கப்படும்‌ (லூக்‌. 6:38) என்கிறார்‌ இயேசு. இதை விளக்கும்‌ வகையில்தான்‌ அன்னை தெரசா அழகாகச்‌ சொன்னார்கள்‌: அமைதியின்‌ கனி செபம்‌ - செபத்தின்‌ கனி அன்பு. அன்பின்‌ கனி சேவை, கொடுத்தல்‌. கொடுத்தலின்‌ கனி மகிழ்ச்சி என்றார்கள்‌. இது ஆழமான, அழகான வாழ்க்கை நெறி.

இதைத்தான்‌ தாயுமானவர்‌ சொன்னார்‌:

அன்பர்‌ பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்‌ இன்ப நிலை தானே வந்து எய்தும்‌ பராபரமே

அன்பு இல்லாமல்‌ பிறருக்குக்‌ கொடுக்க முடியும்‌. ஆனால்‌ கொடுக்காமல்‌ அன்பு செய்ய முடியாது. எனவேதான்‌ அன்பே உருவான இறைவன்‌ நம்‌ வாழ்வுக்குத்‌ தேவையான அனைத்தையும்‌ கொடுப்பதோடு, நமது மீட்புக்காகத்‌ தன்‌ ஒரே மகனையே கொடுத்தார்‌ (யோவா. 3:16).

பசுவின்‌ பால்‌ முழுமையாக கன்றிற்கில்லை பூவின்‌ நறுமணம்‌ முழுவதும்‌ சோலைக்கில்லை குளத்து நீர்‌ முழுவதும்‌ குளத்திற்கில்லை ' மரத்தின்‌ கனி முழுவதும்‌ மரத்திற்கில்லை யாழின்‌ இசை முழுவதும் யாழிற்கில்லை

இவ்வாறு இயற்கையே பிறருக்காகப்‌ பயன்படும்போது நாம்‌ மட்டும்‌ நமக்காக வாழ்ந்தால்‌ பயன்‌ என்ன?
தனக்காக வாழ்பவன்‌ மிருகம்‌
தனக்காகப்‌ பிறருக்காக வாழ்பவன்‌ மனிதன்‌

பிறருக்காகவே வாழ்பவன்‌ - தெய்வம்‌

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

நாம் புல்லாங்குழல் ஆவோம்.

இன்றைய நற்செய்தியிலே, நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் கிடைக்கும் (யோவா 15:7) என்கின்றார் இயேசு. இயேசுவின் வார்த்தைகளைக் கூட்டி, பெருக்கி, வகுத்து, கழித்துப் பார்த்தால் மூன்றெழுத்து மிஞ்சும். இயேசுவுக்கு மூன்றெழுத்து; அவர் போதித்த வேதத்திற்கும் மூன்றெழுத்து. அந்த மூன்றெழுத்துதான் அன்பு என்னும் மூன்றெழுத்து. இந்த அன்பு நமக்குள்ளிருந்தால் நாம் விரும்பிக் கேட்பதையெல்லாம் அன்பே உருவான கடவுள் (1 யோவா 4:8) நமக்குத் தருவார்.

அன்பு என்றால் என்ன? என்பதற்கு இதோ ஒரு சிறு விளக்கம்.

அப்போது நான் 9-ஆம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். ஆண்டுத் தேர்வு எழுதும் நேரம். திடீரென டைஃபாய்ட் காய்ச்சல். படுத்த படுக்கையானேன். 21 நாள்கள். நிலமை மோசமாகிக்கொண்டே சென்றது. ஒரு நாள் இரவு! அது மறக்கமுடியாத இரவு! மணி 12 இருக்கும். என்னால் மூச்சுவிட முடியவில்லை! நான் செத்துவிடுவேனோ என்று பயந்தேன். அஞ்சி, அம்மா என்றேன். உடனே என்னப்பா? என்ற பதில் வந்தது! எல்லாரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால் என்னுடைய அன்னை மட்டும் உறங்கவில்லை. என் பக்கத்திலேயே படுத்திருந்தார்கள். நான், செத்துவிடுவேனோ என்று பயமாக இருக்கின்றது என்றேன். என் தாயோ, நீ சாகமாட்டாய் பயப்படாதே என்றார்கள்.

அமைதியாக குழந்தை உறங்க தாய் உறங்காமலிருப்பதற்குப் பெயர்தான் அன்பு! அஞ்சுகின்றவர்களைப் பார்த்து, அஞ்சாதே! என்று சொல்வதற்குப் பெயர்தான் அன்பு! ஆறுதல் தேடுகின்றவர்களின் அருகிலிருப்பதற்குப் பெயர்தான் அன்பு!

அச்சப்பட்ட இடையர்களைப் பார்த்து, அஞ்சாதீர்கள் (லூக் 2:10) என்ற வானதூதரைப் போல வாழ முன்வருவதற்குப் பெயர்தான் அன்பு!

தம்மை நோக்கி மன்றாடுகின்றவர் அனைவரின் பக்கத்திலும் இருக்கும் ஆண்டவரைப் போல வாழ முன்வருவதற்குப் பெயர்தான் அன்பு!

யாரால் அன்பு செய்ய முடியும்? ஒரு கோழையால் ஒருபோதும் அன்பு செய்யமுடியாது! அன்பு செய்ய ஆசைப்படுகின்றவர்களுக்கு சவுலிடமும், பர்னபாவிடமும் நின்று நிலவிய துணிச்சல் வேண்டும்.

கடவுளிட மிருந்து நமக்கு வேண்டிய அருளாதாரத்தையும், பொருளாதாரத்தையும் நாம் பெற்று வாழ ஓர் அழகான வழி அன்பு வழி (1 யோவா 3:22-23).

நாம் அன்பினால்
வார்க்கப்பட்ட புல்லாங்குழலாவோம்!
இறைவன் அவரது தெய்வீகக் கீதத்தை
அதன் வழியாக இசைக்கட்டும்!

மேலும் அறிவோம் :

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்பு (குறள் : 80).
பொருள் : அன்பு நிறைந்த உள்ளத்துடன் இயங்குவதே உயிருடன் கூடிய உடலாகும். அன்பு நெஞ்சம் இல்லாத உடல், உயிரற்ற எலும்புக்கூட்டைத் தோலால் போர்த்திய வெற்றுடல் ஆகும்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

பெறுவதை விட தருவதே இன்பம்

ஓர் ஊரில் விவசாயி ஒருவர் வேளாண்மையில் தலைகீழ் புரட்சியை ஏற்படுத்த விரும்பினார் வெங்காயத்தை நறுமணமிக்க வாசனைப் பொருளாக மாற்ற நினைத்தார். எனவே கற்பூரத்தினால் பாத்திகட்டி, கஸ்தூரியை உரமாகப்போட்டு, பன்னீரைப் பாய்ச்சி வெங்காயத்தை நட்டார். வெங்காயம் தனக்குரிய நாற்றத்தை இழந்து விட்டு, கற்பூரம், கஸ்தூரி, பன்னீர் ஆகியவற்றின் வாசனைகளை ஈர்த்து ஒருவாசனைப் பொருளாக அது உருவெடுக்கும் என்று கனவுகண்டார். வெங்காயம் நன்றாக உருண்டு, திரண்டு வளர்ந்தது. ஆனால், அதைப்பிடுங்கி முகர்ந்து பார்த்தபோது, அதில் கற்பூரத்தின் வாசனையோ கஸ்தூரியின் வாசனையோ பன்னீரின் வாசனையோ கடுகளவும் காணப்பட வில்லை, மாறாக, வெங்காயத்தின் இயல்பான நாற்றம் இம்மியளவும் குறையவில்லை. 'சென்மப் புத்தியைச் செருப்பால் அடித்தாலும் போகாது' என்ற பழமொழி உண்மையானது.

கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் எவ்வளவோ செய்தும் அவர்களது திமிர்பிடித்த குணம் சிறிதளவும் மாறவில்லை , இந்த அவலநிலையைக் கடவுள் திராட்சைத் தோட்டக் கவிதை வாயிலாக இறைவாக்கினர் எசாயா நூலில் எடுத்துரைக்கிறார். ஒருவர் தனது திராட்சைத் தோட்டத்தை நன்றாகப் பண்படுத்தி, நல்ல இனத் திராட்சைக் கொடியை நட்டு, அது நற்கனிகளைத் தரும் என்று எதிர்பார்த்தார், ஆனால் திராட்சைக் கொடியோ காட்டுக் கனிகளைக் கொடுத்தன. இஸ்ரயேல் மக்கள்தான் அத்திராட்சைத் தோட்டம், கடவுள் அவர்களிடம் எதிர்பார்த்த கனிகள் நீதியும் நேர்மையும்; ஆனால் அவர்கள் கொடுத்த கனிகளோ இரத்தப்பழியும் முறைப்பாடு(எசா 5:1-7).

இப்பின்னணியில் நாம் இன்றைய நற்செய்திக்கு விளக்கம் காணவேண்டும். இஸ்ரயேல் மக்கள் உண்மையான திராட்சைக் கொடி அல்ல. இயேசு, “நானே உண்மையான திராட்சைச்செடி" என்கிறார். (யோவா 15:1). அவர் தான் கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்றி, மீட்பின் கனியை வழங்கினார், இயேசுவின் சீடர்கள் அவரில் நிலைத்திருந்து, அவரோடு இணைந்திருந்து நற்கனி தரவேண்டும். அவரை விட்டுப் பிரிந்து அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது.

இயேசுவின் சீடர்களாகிய நாம் அவருடைய அன்பில் நிலைத்திருந்து, அவருடைய வார்த்தைகள் நமக்குள் நிலைத்திருந்து மிகுந்த கனிதர வேண்டும். அக்கனி நிலைத்திருக்க வேண்டும். இவ்வாறு நாம் கடவுளை மாட்சிமைப்படுத்த வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாகும்.

நாம் தரவேண்டிய கனியோ அன்பின் கனியாகும். “நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே எள் கட்டளை” (யோவா 15:17). இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் யோவான் கூறுவது போல, நாம் இயேசுவில் நம்பிக்கை வைத்து, அவருடைய அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்தால் நாம் கடவுளோடு இணைந்து வாழ முடியும், கடவுளும் நம்மோடு இணைந்திருப்பார் (1 யோவா 3:23-24).

நாம் இயேசுவோடும் இயேசு நம்மோடும் நாம் விண்ணகப் புனிதர்களுடனும் ஒருவர் மற்றவருடனும் இணைந்திருப்பது தான் 'புனிதர்களின் தோழமை' என்னும் கோட்பாடாகும். திராட்சைக் கொடி உருவகமானது புனிதர்களின் தோழமைக்கு இறையியல் அடிப்படையாகும். திராட்சைக் கொடியின் உயிர்தான் அதன் எல்லாக் கிளைகளிலும் உள்ளது. எனவே நாமனைவரும் கிறிஸ்துவோடு இணைந்து ஒரே திருச்சபையின் உறுப்பினர்கள். நாம்! இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள். கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்" (எபே 2:19), எனலே மனிதநேய அடிப்படையில் மட்டுமல்ல, புனிதர்களுடைய தோழமையின் அடிப்படையிலும் ஒருவர் மற்றவர்க்கு உதவிசெய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். "எல்லாருக்கும். சிறப்பாக, நம்பிக்கைக் கொண்டோரின் குடும்பத்தினருக்கும் நன்மை செய்ய முன் வருவோம்" {கலா 6:10).

மகிழ்ச்சியாக வாழ்வதற்கு வழி என்ன என்பதை அன்னைத் தெரசா பின்வருமாறு கூறியுள்ளார்; "மெளனத்தின் கனி செபம்; செபத்தின் கனி அன்பு; அன்பின் கனி சேவை; சேவையின் கனி மகிழ்ச்சி." அழகான, ஆழமான வாழ்க்கை நெறி!

தாயுமானவரும் பிறரன்புப் பணியில்தான் இன்பநிலை அடங்கியுள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார்.

“அன்பர் பணிசெய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால்
இன்பநிலைதானே வந்து எய்தும் பராபரமே."
“பெறுவதைவிடதருவதே இன்பம்" (திப 20:25)

பிறர்க்குக் கொடுத்துக் கொடுத்து இன்பம் பெறத் தெரியாத சுல்நெஞ்சம் உடையவர்கள், தமது உடமையை வைத்து வைத்து இறுதியில் இழந்து விடுவர் என எச்சரிக்கிறார் வள்ளுவர்,

”கத்துலக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடமை
வைத்து இழக்கும் வன் கணவர்” (குறள் 228)

அன்பு இல்லாமல் பிறர்க்குக் கொடுக்கமுடியும். ஆனால் கொடுக்காமல் அன்பு செய்ய முடியாது. எனவேதான் அன்பே உருவான கடவுள் நம்வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பதோடு, நமது மீட்புக்காகத் தமது ஒரே மகனையும் கொடுத்தார் (யோவா 3:18) அம்மகன் தம்மையே நமக்காகப் பலியாக்கித் தமது உடலையும் இரத்தத்தையும் நமக்குப் பிட்டுக் கொடுத்தார், பிழிந்து கொடுத்தார்.

”பசுவின்பால் முழுவதும் கன்றிற்கில்லை;
பூவின் நறுமணம் முழுவதும் சோலைக்கில்லை ,
நெற்கதிர் முழுவதும் வயலுக்கில்லை,
குளத்துநீர் முழுவதும் குளத்திற்கில்லை,
மரத்தின் கனி முழுவதும் மரத்திற்கில்லை,
யாழின் இசை முழுவதும் யாழிற்கில்லை”
இவ்வாறு இயற்கையிலே எல்லாமே தனக்காக மட்டும் பயன்படாது பிறர்க்காகப் பயன்படும்போது, நாம் மட்டும் நமக்காகவே வாழ்வது முறையா?

பிறரிடம் வாங்கி வாங்கி வாழ்ந்தார் என்ற நிலைமாறி, பிறர்க்குக் கொடுத்துக் கொடுத்துச் செத்தார் என்ற நிலையை அடைவோமாக. நாளை அல்ல, இன்றே அன்பென்னும் நற்கனி தருவோம், "நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம்" (1 யோவான் 3:18)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

சாலையோரம் ஒரு தடாகம்.

சாலையோரத்தில் ஒரு தடாகம். தடாகம் முழுவதும் பூத்துக் குலுங்கும் தாமரை மலர்கள். இந்த மலர்களுக்கு உயிர் அளிப்பது எது? ஒளி. உயிர் வளர்ப்பது எது? நீர். ஒருவர் தடாகத்தில் இறங்குகிறார். தண்டோடு இரு மலர்களைக் கொய்கிறார். ஒன்றைத் தண்ணீரிலும் இன்னொன்றைத் தரையிலும் வீசி எறிந்து விட்டுப் போய் விடுகிறார். மறுநாள் அதேவழியில் திரும்பும்போது பார்க்கிறார். தண்ணீரில் போட்ட மலர் அழுகிக் கிடக்கிறது. தரையில் வீசிய மலர் உலர்ந்து கிடக்கிறது. அதை அழுகச் செய்தது எது? நீர்தான். உலரச் செய்தது எது? ஒளி தான். உயிர் அளிக்கும் ஒளியே உலரச் செய்யுமா? உயிர் வளர்க்கும் நீரே அழுகச் செய்யுமா?

தடாகத்தில் வேரூன்றி நிற்கும் போது உயிர் வளர்க்கும் ஒளியே தடாகத்தோடு தொடர்பற்றுப் போகிறபோது மலரை உலரச் செய்கிறது. அதேபோல் உயிர் வளர்க்கும் நீரே, மலரை அழுகச் செய்கிறது. அவ்வாறே இறைவனை நினைப்பதும், இறைவனில் நிலைப்பதும்.

இறைவனை நினைப்பது, இறைவனில் நிலைப்பது என்பதுதான் எவ்வளவு கடினம்! கல்லூரி மாணவன் ஒருவன் இப்படிச் செபிப்பானாம்: "இறைவா, என்னால் உன்னை எங்கே நினைக்க முடிகிறது? தெருவெல்லாம் ஒரே சந்தடி ஆலயத்திற்குள் நுழைந்தாலோ பார்வையை இழுக்கும் பாவையர்!... இந்நிலையில் நான் உன்னை நினைக்கா விட்டால் என்ன, பொருட்படுத்தாதே. ஆனால் நீ மட்டும் என்னை நினைக்கத் தவறாதே".

வறுமையில், பிணியில், வாழ்க்கையின் மாயக் கவர்ச்சியில் கடவுளை நினைப்பது, கடவுளில் நிலைப்பது கடினம்தான். ஆனால் அந்தக் கடவுள் நம்மை நினைத்தால்...

படுக்கையிலிருந்து எழுந்ததும் புனித பிலிப்பு நேரி சொன்ன காலைச் செபம் என்ன தெரியுமா? “இறைவா, உன் கைகள் இன்று முழுவதும் என் தோள் மேல் இருக்கட்டும். இல்லையெனில் நான் உன்னைக் காட்டிக் கொடுத்து விடுவேன்" இது கடவுளுக்கு விடுத்த சவால் அல்ல. தனக்குத்தானே விடுத்துக் கொண்ட எச்சரிக்கை.

'Nothing good without God' என்பார்கள். GOOD என்ற நான்கெழுத்தில் GOD என்ற மூன்றெழுத்தை நீக்கினால் எஞ்சி இருப்பது என்ன? வெறும் '0'.

With Christ you are a hero. Without him just a zero. கிறிஸ்து இன்றி நமது வாழ்க்கை வெறும் சீரோ, சைபர், கூமுட்டை. கிறிஸ்து ஒருவரே மதிப்புள்ளவர். நமக்கு மதிப்பு ஊட்டுபவர். யார் முதலில் என்பதைப் பொருத்தது அது. எத்தனை பூஜ்யங்களை முதலில் அடுக்கிக் கடைசியில் இறைவன் என்ற ஒன்றை வைத்தால் அந்த ஒன்றுக்கு மட்டுமே மதிப்பு. பூஜ்யங்கள் வெறும் பூஜ்யங்களே! முதலில் ஒன்றை வைத்து அடுத்துப் பூஜ்யங்களை அடுக்கினால் ஒவ்வொரு பூஜ்யமும் மதிப்புப் பெறும், அந்த ஒன்றுக்கும் கூட மதிப்பூட்டும் - ஒன்று பத்தாக, ஒன்று நூறாக, ஒன்று ஆயிரமாக, ஒன்று இலட்சமாக, ஒன்று கோடியாக.

பம்பலூனா போரில் காயமுற்று இஞ்ஞாசியார் மருத்துவமனை யில் இருந்தபோது பொழுது போக்குக்காகப் படிக்க வீரர் வரலாறு கேட்டார். கிடைத்ததோ புனிதர் வரலாறு. "இவர்களால் முடிந்தால் என்னால் ஏன் முடியாது?' அப்பொழுது உணர்ந்தார்: “Nothing good without God", இறைவனிலன்றி நன்மையானது எதுவும் இல்லை . எல்லாம் தீமைகளே! இறைவனிலன்றி புனிதமானது எதுவும் இல்லை. எல்லாம் பாவங்களே! இறைவனிலன்றி வீரமானது எதுவும் இல்லை. எல்லாம் கோழைத்தனங்களே! “இறைவனின் அதிமிக மகிமைக்காகத்" தன்னையே அர்ப்பணித்தார். அவர் எழுதிய "மன்ரேசா' என்ற தியான நூலைப் பற்றிப் புனித சலேசியார் சொல்கிறார்: "அந்த நூலில் எத்தனை எழுத்துக்கள் உள்ளனவோ அதற்கும் அதிகமான புனிதர்களை உருவாக்கியுள்ளது".

மனித வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல, தவிர்க்க முடியாதவை. இன்பங்கள் சூழும் நேரம் கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என நினைக்கும் நாம், துன்பங்கள் வந்தால் மட்டும் கடவுள் நம்மை நாம் செய்யாத தவறுகளுக்காகத் தண்டிக்கிறார் என நினைத்து வருந்துகிறோம். திராட்சைக் கொடிக்கு உரமிட்டுத் தண்ணீர் ஊற்றும் போது மட்டுமல்ல, அதைக் கழித்துவிடும் போது கூட அதன் முழுமையான பலனை எதிர்பார்த்துத்தான் அவ்வாறு செய்கிறார். "கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனிதருமாறு கழித்து விடுவார் (யோவான் 15:2). கழிப்பதும் தறிப்பதும் திராட்சைக் கொடியின் நன்மைக்கே, ஆகவே இன்பங்களிலும் துன்பங்களிலும் இறைவன் நம்மைச் சமமாகவே அன்பு செய்கிறார் என்பதை உணர்ந்து இறைவனில் நிலைத்து நற்கனிகள் கொடுப்போம்.

திராட்சைக் கொடி செடியோடு இணைந்திருக்கவும், கனிதரவும் வேண்டும் என்ற இரு கருத்துக்கள் உவமையில் வலியுறுத்தப்படுகின்றன.

கனி தருவது இன்றியமையாதது. "கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்து விடுவார் . கொடி கனி தருவதற்குச் செடியோடு இணைந்திருத்தல் வேண்டும். இவ்வாறு கனி தருதல், இணைந்திருத்தல் இரண்டும் முக்கியமானவை. எனினும் கனி தருவதே முதன்மையானது. ஆக, கொடியின் குறிக்கோள் செடியோடு இருப்பதல்ல, மாறாகக் கனி கொடுப்பதே! கிறிஸ்தவச் செயல்பாட்டை முதன்மைப்படுத்தாது, கிறிஸ்தவராய்ப் பெயரளவில் இருப்பதிலே நிறைவு காண்பவர் இயேசுவின் சீடரல்லர்.

கிளைகளாகிய நாம் திராட்சைச் செடியான இயேசுவோடு மூன்று வழிகளில் இணையலாம்.

1. இயேசுவின் பெயரால் ஒன்று கூடும் போது, அவர் நம்மோடு, நம் மத்தியில் இருப்பதாக வாக்களித்திருக்கிறார். "இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூட்டியிருக்கிறார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்” (மத்-18:20)

2. இயேசுவின் வார்த்தைக்குச் செவி மடுக்கும் போது, நாம் கேட்பதையெல்லாம் தருவதாக வாக்களிக்கிறார். “நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்" (யோவான் 15:7) காண்க லூக்.10:16.

3. இயேசுவின் திரு உடலையும் தீரு இரத்தத்தையும் பகிர்ந்திடும் போது, "எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்' (யோவான் 6:56). நாம் இயேசுவின் மறையுடலின் உறுப்புக்கள். உடலை பிரிந்து உறுப்புக்கள் ஒன்றும் செய்ய இயலாது. அதுபோல் இயேசுவில் இணைந்து நாம் நற்கனிகள் தர வேண்டும் என்பதே தந்தையின் விருப்பம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

வலியின்றி வெற்றியில்லை

மரத்தில் இருந்த இலைக்கு 'போர்' அடித்தது. இன்னும் எத்தனை நாள் இந்த மரத்திலேயே தொங்கிக்கொண்டிருப்பது என்ற சலிப்பு அதற்கு. வானில் சிறகடித்துப் பறந்த பறவைகளைப் பார்த்து, ஏக்கப் பெருமூச்சு விட்டது. இலையின் ஏக்கம், எரிச்சலாக மாறியது. இந்தப் பாழாய்போன மரத்திலிருந்து எப்போதுதான் எனக்கு விடுதலை கிடைக்குமோ என்று புலம்பித் தீர்த்தது.

இலை, ஏங்கிக் காத்திருந்த அந்த விடுதலை நாள் வந்தது, இலையுதிர் காலத்தில். மரத்திலிருந்து விடுதலை பெற்ற இலை, தன்னை இதுவரைத் தாங்கி, வளர்த்துவந்த மரத்திற்கு விடைகூடச் சொல்லாமல், வீசியத் தென்றலில் மிதந்து சென்றது. பறவையைப் போல தானும் பறக்க முடிகிறதே என்று இலைக்கு நிலைகொள்ளா மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி, ஒரு சில நொடிகளே நீடித்தது.

உதிர்ந்த இலை, இறுதியில் தரையில் விழுந்தது. என்னதான் முயன்றாலும், அதனால் மீண்டும் பறக்க முடியவில்லை. தான் பறந்தபோது, தன்னைத் தாங்கியதுபோல் தெரிந்த காற்று, இப்போது, தன் மீது புழுதியை வாரி இறைத்தது. காய்ந்து விழுந்த மற்ற இலைகள் அதன் மீது விழுந்து மூடின. மனிதர்கள் அதனை மிதித்துச் சென்றனர். இலைக்கு மூச்சுத் திணறியது.

கண்களில் நீர் பொங்க, அண்ணாந்து பார்த்தது இலை. தான் வாழ்ந்த மரக்கிளையில் அசைந்தாடிய மற்ற இலைகள், தன்னைப் பார்த்து கைகொட்டிச் சிரிப்பதைப்போல் இருந்தது. "நான் அங்கேயே தங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே" என்ற ஏக்கம் இலையைச் சூழ்ந்தது.

மரத்துடன் இணைந்திருக்கும் வரையில் இலைக்கு இன்பமான வாழ்வு. பிரிந்தால், தாழ்வு... மரணம். இதையொத்த கருத்தை இன்றைய நற்செய்தியில் வலியுறுத்துகிறார் இயேசு:
“நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.” (யோவான் 15:5)

உவமைகளிலும், உருவகங்களிலும் பேசுவது, இயேசுவுக்குக் கைவந்த கலை என்று நமக்குத் தெரியும். நானே வாழ்வு தரும் உணவு, நானே உலகின் ஒளி, நல்ல ஆயன் நானே என்று, இயேசு, தன்னை, உருவகப்படுத்திக் கூறியுள்ள வாக்கியங்கள், யோவான் நற்செய்தியில் ஏழுமுறை இடம்பெற்றுள்ளன. நம் வாழ்விலும், நம்மைப்பற்றியும், அடுத்தவரைப்பற்றியும், அவ்வப்போது உருவகங்களில் பேசுகிறோம். விளையாட்டாக, கேலியாகச் சொல்லும் உருவகங்களைவிட, இக்கட்டான, நெருக்கடியான வேளைகளில் நாம் சொல்லும் உருவகங்கள் ஆழந்த பொருளுள்ளவை. "உங்களை நான் மலைபோல நம்பியிருக்கிறேன்" என்று, ஓர் இக்கட்டானச் சூழலில், நண்பரிடம் சொல்லும்போது, அவர்மீது நமக்கு உள்ள ஆழ்ந்த நம்பிக்கை வெளிப்படும். "என் மகள் கணக்குல புலி" என்று ஒரு தந்தை சொல்லும்போது, அவரது மகளைப்பற்றி அவர் கொண்டிருக்கும் உள்ளார்ந்த பெருமிதம் வெளிப்படும்.

நமது உண்மையான இயல்பு எப்போது அதிகம் வெளிப்படுகின்றது? எதிர்ப்பு, குழப்பம், போராட்டம் இவை பெருகும்போது, நமது உண்மை இயல்பு வெளிப்படும். வாழ்க்கை, மிகச் சீராக, சுமுகமாகச் செல்லும்போது, நாம் எதை நம்புகிறோம், எது நமது வாழ்வின் அடிப்படை என்ற கேள்விகளெல்லாம் எழாது. ஆனால், போராட்டங்களில், சங்கடங்களில் நாம் சிக்கிக்கொள்ளும்போது, நாம் எப்படிப்பட்டவர்கள், எதை நம்பி வாழ்கிறோம் என்ற உண்மைகள் வெளிப்படும். உண்மைத் தங்கமோ, போலித் தங்கமோ அழகியதொரு கண்ணாடி பேழைக்குள் இருக்கும்போது, ஒரே விதத்தில் மின்னும். வேறுபாடு தெரியாது. தீயில் இடப்பட்டால் தான் உண்மைத் தங்கமும், போலித் தங்கமும் தங்கள் உண்மை நிலைகளை வெளிப்படுத்தும்.

யோவான் நற்செய்தியில், இயேசு தன்னை உருவகப்படுத்திப் பேசிய 'நானே' என்ற வாக்கியங்கள் அனைத்தும், எதிர்ப்புகள், குழப்பங்கள் மத்தியில் சொல்லப்பட்டவை என்பதை உணரலாம். "நல்ல ஆயன் நானே" என்று இயேசு கூறியதை, சென்ற வார நற்செய்தியாக நாம் கேட்டோம். "உண்மையான திராட்சைச் செடி நானே" என்று, இயேசு, இன்றைய நற்செய்தியில் சொல்கிறார்.

"நல்ல ஆயன் நானே" என்று இயேசு சொன்னது, தன் புகழைப் பறைசாற்ற, அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. ஒரு நெருக்கடியான நேரத்தில், அதுவும், தன்னால் நன்மைபெற்ற ஒருவர், மதத்தலைவர்களிடமிருந்து வெறுப்பைத் தேடிக்கொண்டார் என்பதை அறிந்த நேரத்தில், இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னார். பார்வை இழந்த ஒருவரை இயேசு குணமாக்குகிறார். அந்த அன்பான, அற்புதமானச் செயலுக்குத் தவறானக் காரணங்கள் சொல்லி, இயேசுவை ஒரு பாவி என்று முத்திரை குத்துகின்றனர், பரிசேயர்களும், மதத்தலைவர்களும் (யோவான் 9:24); அது மட்டுமல்ல, இயேசுவின் புதுமையால் பார்வை பெற்றவரையும், யூத சமூகத்திலிருந்து வெளியேத் தள்ளினர் (யோவான் 9:34) என்று வாசிக்கிறோம். இந்நேரத்தில் இயேசு அங்கு செல்கிறார்.

பிறவியிலேயே பார்வை இழந்ததால், தன்னை ஒரு பாவி என்று முத்திரை குத்தி, வெறுத்து ஒதுக்கிய சமுதாயம், தான் பார்வை பெற்றபிறகும் தன்னை ஒதுக்கிவைத்ததை அறிந்து, அம்மனிதரின் உள்ளம் வேதனையில் வெந்து போயிருக்கும். அவர் உள்ளத்தில் நிறைந்த வேதனையாலும், வெறுப்பாலும், அவர் மீண்டும் தன் ‘பார்வை’யை இழந்துவிடக்கூடாது என்ற பரிவினால், இயேசு, ஒரு நல்லாயனாக, அவரைத் தேடிச்சென்றார். 9ம் பிரிவில் கூறப்பட்டுள்ள இந்நிகழ்வைத் தொடர்ந்து வரும் 10ம் பிரிவில் இயேசு 'நல்ல ஆயன் நானே' (யோவான் 10:14) என்று தன்னையே அடையாளப்படுத்துகிறார்.

இதைவிட நெருக்கடியான ஒரு சூழலில், தன் சீடர்கள் தவித்தபோது, இயேசு, தன்னை ஒரு திராட்சைச் செடியாகவும், அவர்களை, கிளைகளாகவும் ஒப்புமைப்படுத்திப் பேசினார். தன் சீடர்களுடன் இறுதி இரவுணவைப் பகிர்ந்தபோது, இயேசு, இவ்வார்த்தைகளைச் சொன்னார். அந்த இறுதி இரவுணவு, கலகலப்பான, மகிழ்வானச் சூழலில் பகிரப்பட்ட உணவு அல்ல என்பது நமக்குத் தெரியும். பயம், கலக்கம், சந்தேகம் என்ற எதிர்மறை உணர்வுகளில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு இவ்வார்த்தைகளைச் சொன்னார்.

இறுதி இரவுணவின்போது, சீடர்கள் கலக்கமடையக் காரணம் என்ன? பன்னிரு சீடர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுப்பார்; மற்றொரு சீடர், இயேசுவை மறுதலிப்பார் என்ற இரு பெரும் கசப்பான உண்மைகளை, இயேசு அவ்வேளையில் பகிர்ந்துகொண்டார். உண்மைகள் பொதுவாகவே கசக்கும்; அதுவும், நம்பிக்கைத் துரோகம், மறுதலிப்பு என்ற உண்மைகள் பெரிதும் கசக்கும். இயேசு கூறிய கசப்பான உண்மைகளால், நம்பிக்கை இழந்து, பயத்தில் மூழ்கிக்கொண்டிருந்த சீடர்களிடம், தன்னை ஒரு திராட்சைச் செடியாக ஒப்புமைப்படுத்தி இயேசு பேசுகிறார். அந்தச் செடியின் கிளைகளாக, தன் சீடர்கள் வாழவேண்டும் என்பதை அவர்கள் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிப்பதற்காக இயேசு இவ்வுருவகத்தைப் பயன்படுத்துகிறார்.

திராட்சைச் செடியும், கொடியும், பல சவால்களை நமக்கு முன் வைக்கின்றன. செடியுடன் கொடிகள் இணைந்துவிட்டால், எல்லாம் சுகமாக இருக்கும் என்ற தவறான கற்பனையை இயேசு தரவில்லை. “என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் என் தந்தை தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்.” (யோவான் 15:2) என்று இயேசு கூறினார். கனிகொடாத கொடிகள் வெட்டப்படும். கனிதரும் கொடிகளும், கூடுதல் கனி தரவேண்டுமெனில், துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று இயேசு சொல்கிறார்.

திராட்சைச் செடியும், கொடியும் பல வேதனைகளைத் தாங்கினால் மட்டுமே, தரமானக் கனிகள் தோன்றும். அதேபோல், சுவையுள்ள இரசமாக மாறுவதற்கு, திராட்சைக் கனிகள் கசக்கிப் பிழியப்படவேண்டும். இத்துன்பங்களில் எல்லாம் இயேசு தரும் ஆறுதலான எண்ணங்கள் எவை? திராட்சைத் தோட்டத்தை கவனத்தோடு, கரிசனையோடு நட்டு வளர்ப்பவர் விண்ணகத் தந்தை என்பதும், கிளைகள் அனுபவிக்கும் துன்பங்களில் இயேசுவும் உடனிருப்பார் என்பதும், இயேசு தரும் ஆறுதலான எண்ணங்கள்.

இயேசுவுடன் இணையும் வாழ்வு, பயன்தரும் வாழ்வாக, உயர்ந்து செல்லும் வாழ்வாக அமையும் என்பதை விளக்க மற்றோர் உருவகம் உதவியாக இருக்கும். அமெரிக்க இராணுவத்தில், பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களில், மேலே சுழலும் இறக்கைகளை ஹெலிகாப்டருடன் பிணைக்க, MRRN என்ற திருகாணிகளைப் பயன்படுத்தினர். MRRN என்றால், Main Rotor Retaining Nut, அதாவது, ‘சுழல் விசையுடன் பிணைத்து வைக்கும் மையத் திருகாணி’ என்று பெயர். இப்பெயர், சொல்வதற்கு, நீளமாக, கடினமாக இருந்ததால், இதற்குப் பதில், இராணுவ வீரர்கள், இந்தத் திருகாணியை, 'இயேசு திருகாணி' (Jesus Nut) என்று பெயரிட்டனர். இந்தப் பெயர் வைக்கப்பட்டதன் காரணத்தை வீரர்களிடம் கேட்டபோது, அவர்கள் தந்த விளக்கம், அழகான உருவகமாகத் தெரிந்தது.

ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருக்கும்போது, இந்த MRRN, அல்லது, 'இயேசு திருகாணி' கழன்றுவிட்டால், மேலே சுற்றும் இறக்கைகள் ஹெலிகாப்டரிலிருந்து பிரிந்துவிடும். அந்த இறக்கைகளின் சுழற்சியால் அதுவரை வானத்தில் தாங்கப்பட்ட ஹெலிகாப்டர், நேரே பூமியில் விழுந்து நொறுங்க வேண்டியதுதான். அந்நேரத்தில், ஹெலிகாப்டரில் இருப்பவர்களை, இயேசு மட்டுமே காப்பாற்றமுடியும் என்பதை வீரர்கள் உணர்ந்ததால், அந்த மையத் திருகாணிக்கு, 'இயேசு திருகாணி' என்று பெயரிட்டனர்.
ஹெலிகாப்டரின் இறக்கைகள் போல சுற்றிச் சுழலும் நமது வாழ்வை, இறுகப் பிணைப்பதற்கு இயேசு என்ற திருகாணி இல்லையெனில், வானில் பறப்பதாய் நாம் நினைக்கும் வாழ்வு, பாதாளத்தில் மோதி, சிதற வேண்டியதுதான்.

பொறுமையாக, கடின உழைப்புடன் வளர்க்கப்பட்ட திராட்சைத் தோட்டம் வளமான, சுவையான கனிகளைத் தருவதுபோல், நாம் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளும், இனி தொடரப்போகும் முயற்சிகளும் நல்ல கனிகளைத் தரவேண்டும் என்று இறைவனிடம் மன்றாடுவோம்.
இயேசு என்ற செடியுடன் இணைந்திருக்கும் வரை, நாம் மிகுந்த கனி தருவோம்.
இயேசு என்ற திருகாணியுடன் இணைந்திருக்கும் வரை, வானில் உயரப் பறப்போம்.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

அன்பு, கட்டளைகள்‌ ஆகிய இரண்டும்‌ வாழ்க்கைக்கு இரு கண்கள்‌ போன்றவை. அன்பு ஒரு மனிதனுக்குத்‌ தேவையான 'சுதந்திரத்தை வழங்குகிறது. நாம்‌ யாரை அதிகமாக அன்பு செய்கின்றோமோ அவர்களது அன்பில்‌ நாம்‌ முகமூடி அணிவதில்லை: நாம்‌ நாமாக இருக்கின்றோம்‌. அதே வேளையில்‌ இந்த சுதந்திரத்தைப்‌ பாதிக்காத அளவிற்கு நாம்‌ செயல்பட நமக்கு உதவுபவைதான்‌ கட்டளைகள்‌. எனவேதான்‌ இயேசு கட்டளைகளையும்‌, அன்பையும்‌ இன்றைய நற்செய்தியில்‌ தொடர்புபடுத்துகிறார்‌. நான்‌ என்‌ தந்தையின்‌ கட்டளைகளைக்‌ கடைபிடித்து அவரது அன்பில்‌ நிலைத்திருப்பதுபோல நீங்களும்‌ நிலைத்திருங்கள்‌ என்று சொல்லி கட்டளைகளைக்‌ கடைபிடித்தலும்‌ அன்பு செய்தலும்‌ இணைந்து செல்ல வேண்டும்‌ என்று அறிவுறுத்துகின்றார்‌.

இன்று பல பெற்றோர்கள்‌ இந்த இரண்டுக்கும்‌ உள்ள இணைப்பைச்‌ சரியாக புரிந்து கொள்ளாததன்‌ காரணமாக, தங்கள்‌ பிள்ளை வளர்ப்பில்‌ கணிசமான அளவு தவறி விடுகிறார்கள்‌. அன்பு என்ற பெயரில்‌, வரைமுறையற்ற சுதந்திரம்‌ கொடுத்துவிடுகிறார்கள்‌. கட்டளைகளை அவர்கள்‌ மீது சுமத்துவது கசப்புணர்வை அவர்களில்‌ ஏற்படுத்தும்‌ என்று நினைக்கின்றனர்‌. இன்னும்‌ சில பெற்றோர்களோ, கட்டளைகளுக்கு அதிக முக்கியத்துவம்‌ கொடுத்து தேவையான அளவு அன்பு காட்ட மறந்து விடுகிறார்கள்‌. இந்த இரண்டு நிலைகளும்‌ தவிர்க்கபடவேண்டும்‌.

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு

தந்தைக்கு மாட்சி

புது நன்மை பெறுவதற்கு முன்னர், ‘சின்ன குறிப்பிடம்’ அல்லது ‘புதிய குறிப்பிடம்’ வழியாக நாம் கற்ற மறைக்கல்வியில் முதலில் கேட்கப்படுகிற சில கேள்விகளில் ஒன்று, ‘கடவுள் நம்மை எதற்காகப் படைத்தார்?‘ ‘நாம் கடவுளை அன்பு செய்யவும், நம் செயல்கள் வழியாக கடவுளை மாட்சிப்படுத்தவும் அவர் நம்மைப் படைத்தார்’ என்று நாம் இக்கேள்விக்குப் பதில் சொன்னோம். நம் வாழ்வின் இலக்கு ‘கடவுளின் மாட்சி’ அல்லது ‘கடவுளை மாட்சிப்படுத்துவது’ என்று இருக்கிறது. புனித இரேனியு, ‘மனிதர்களின் மேலான வாழ்வே கடவுளின் மாட்சி’ என எழுதுகிறார். மலைப்பொழிவில் தம் சீடர்களை ‘உப்பு’, ‘ஒளி’ என அழைக்கிற இயேசு, ‘உங்கள் நற்செயல்களைக் கண்டு மனிதர்கள் உங்கள் விண்ணகத் தந்தையை மாட்சிப்படுத்துவார்கள்’ (காண். மத் 5:16) என எழுதுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில், ‘நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது’ என இயேசு மொழியும் சொற்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். இந்த வாக்கியத்தில் மூன்று சொல்லாடல்கள் உள்ளன: (அ) மிகுந்த கனி தருதல், (ஆ) சீடராய் இருத்தல், (இ) தந்தைக்கு மாட்சி அளித்தல். இந்த மூன்றும் சாத்தியமாக வேண்டும் என்றால், அதற்குத் தேவை ஒற்றைச்சொல்தான்: ‘இணைந்திருத்தல்.’

(அ) மிகுந்த கனி தருதல்

படைப்பின் தொடக்கத்தில் ஆண்டவராகிய கடவுள் நம் முதற்பெற்றோருக்குக் கொடுக்கக்கூடிய முதல் கட்டளை (முதல் கதையாடலின்படி), ‘பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்’ (தொநூ 1:28) என்பதே. மனிதர்கள் ஓய்ந்திருக்க வேண்டும் என்பதல்ல, மாறாக, தொடர்ந்து கனிதர வேண்டும் என்பதே கடவுளின் விருப்பமாக இருக்கிறது.

பழைய ஏற்பாட்டில், ‘கனி தருவதற்கு’ மூன்று வழிகள் தரப்பட்டுள்ளன: ஒன்று, மனிதர்கள் தங்களுடைய உழைப்பின் வழியாக. இதையே படைப்பின் இரண்டாம் கதையாடலில் வாசிக்கிறோம். படைப்பின் இரண்டாம் கதையாடலின்படி, ஆதாம் தோட்டத்தைப் பண்படுத்துபவராக இருக்கிறார் (காண். தொநூ 2:15). இரண்டு, திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதன் வழியாக. ‘திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர், அதைப் பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர் நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல இருக்கிறார். பருவகாலத்தில் கனிதந்து என்றும் பசுமையாக இருக்கிறார்’ (காண். திபா 1:2-3). மூன்று, ஆண்டவருக்கு அஞ்சுவதன் வழியாக. ‘ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்பவர் பேறுபெற்றோர்! … இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்’ (காண். திபா 128:1-3). ஆண்டவருக்கு அஞ்சி வாழ்தல் என்றால் ஞானத்தோடு வாழ்தல், நன்னடத்தையுடன் வாழ்தல்.

ஆக, உழைப்பு, திருச்சட்டம் கடைப்பிடித்தல், நன்னடத்தை வாழ்வு வழியாக ஒருவர் கனிதர இயலும் என்பது பழைய ஏற்பாட்டுப் புரிதலாக இருக்கிறது.

ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தில், புதிய வழி ஒன்றைக் கற்பிக்கிறார்: ‘இணைந்திருத்தல்.’ ‘ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்’ என்கிறார் இயேசு (காண். யோவா 15:5). ஆக, இயேசுவைப் பொருத்தவரையில் கனிதருதல் என்பது அவசியம். இயேசுவோடு இணைந்திருத்தல் வழியாக நாம் கனிதர இயலும்.

(ஆ) சீடராக இருத்தல் (மாறுதல்)

யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில் இயேசுவைப் பின்பற்றுதல் அல்லது அவருடைய சீடராதல் என்பது தனிப்பட்ட நபர் தன்னுடைய விருப்பத்துடன் எடுக்கிற ஒரு தெரிவு. அத்தெரிவு ஒருநாள் மட்டும் எடுத்தல் அல்ல, மாறாக, தொடர்ந்து நிலைத்திருத்தல். சீடராக ஒருவர் தினமும் உருவாகிக்கொண்டே இருக்க வேண்டும். நம் மனித வாழ்வு போல. நம்முடைய பிறப்பின் வழியாக அல்ல, அன்றாட உருவாக்கத்தின் வழியாகவே நாம் மனிதராக மாறுகிறோம்.

(இ) தந்தைக்கு மாட்சி அளித்தல்

இறுதி இராவுணவுப் பேருரையின் இறுதியில் இறைவேண்டல் செய்கிற இயேசு, ‘தந்தையே நேரம் வந்துவிட்டது. உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்’ எனத் தொடங்குகிறார் (காண். யோவா 17:1). மேலும், ‘நான் செய்யுமாறு நீர் என்னிடம் ஒப்படைத்திருந்த வேலையைச் செய்து முடித்து நான் உம்மை உலகில் மாட்சிப்படுத்தினேன்’ என்கிறார் (காண். யோவா 17:4). வேலைகளை நிறைவேற்றியதன் வழியாக, அவற்றைத் தந்தையோடு இணைந்து நிறைவேற்றியதன் வழியாக தந்தைக்கு மாட்சி அளிக்கிறார் இயேசு.

மேற்காணும் மூன்று கூறுகளும் – ‘கனி தருதல்,’ ‘சீடராக இருத்தல்,’ ‘தந்தைக்கு மாட்சி அளித்தல்’ – நம் வாழ்வின் முப்பரிமாண இலக்கு என எடுத்துக்கொள்ளலாம். அல்லது ‘தந்தைக்கு மாட்சி அளித்தல்’ என்னும் ஒற்றை இலக்கு, ‘கனி தருதல்,’ ‘சீடராக இருத்தல்’ என்னும் நம் செயல்கள் வழியாக வெளிப்படுகிறது என்று பொருள் கொள்ளலாம்.

இணைந்திருத்தல் – உருவகமும் அழைப்பும்

‘நானே திராட்சைச் செடி’ எனத் தன்னை வெளிப்படுத்துகிற இயேசு, ‘நான் உங்களோடு இணைந்திருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருங்கள்’ எனத் தம் சீடர்களை அழைக்கிறார். யோவான் நற்செய்தியில், ‘இணைந்திருத்தல்’ (கிரேக்கத்தில், ‘மெனேய்ன்’) என்பது முதன்மையான கருத்துரு. நற்செய்தியின் தொடக்கத்தில், இயேசுவைப் பின்பற்றுகிற முதற்சீடர்கள் அவரோடு தங்கியிருக்கிறார்கள் (‘இணைந்திருக்கிறார்கள்’).

‘திராட்சைச் செடி’ என்பது இஸ்ரயேல் மக்களுக்கு மிகவும் அறிமுகமான ஓர் உருவகம் (காண். எசா 5:1-7, எரே 2:21அ). திராட்சைச் செடி இருத்தலின் நோக்கம் கனிதருவதற்கே. திராட்சைச் செடி கனிதர வேண்டுமெனில் கொடி திராட்சைச் செடியோடு இணைந்திருக்க வேண்டும்.

இயேசுவோடு இணைந்திருத்தல் என்றால் என்ன?

(அ) ஊட்டம் பெறுதல் – கொடி செடியிடமிருந்து தனக்கான ஊட்டத்தைப் பெற்றுக்கொள்வதுபோல, இயேசுவிடமிருந்து நாம் ஊட்டம் பெறுகிறோம்.

(ஆ) இயல்பு பெறுதல் – கொடியும் செடியும் வேறு வேறு என்றாலும் அவை இணைந்திருக்கும்போது இரண்டும் ஒன்று என ஆகிவிடுகின்றன. அதுபோலவே, இயேசுவோடு இணைந்திருக்கும்போது அவருடைய இயல்பை நாம் பெற்றுக்கொள்கிறோம்.

(இ) பொறுப்புணர்வு பெறுதல் – செடி தன் ஆற்றலையும் வளத்தையும் தனக்கென வைத்துக்கொள்வதில்லை. மாறாக, செடியின் நுனி வரை அது அவற்றைக் கடத்திக்கொண்டே இருக்கிறது. இயேசுவோடு இணைந்திருக்கும் நானும் அவரிடமிருந்து பெறுகிற ஆற்றலையும் வளத்தையும் தொடர்ந்து மற்றவர்களுக்கு வழங்கிக்கொண்டே இருத்தல் வேண்டும்.

இயேசுவோடு இணைந்திராவிட்டால் என்ன நிகழும்?

(அ) நாம் கனிதர இயலாது.

(ஆ) நாம் உலர்ந்து விடுவோம்.

(இ) உலர்ந்த பகுதிகள் செடிக்குப் பாரமாக இருப்பதால் அவை வெட்டி எறியப்படுகின்றன. அதுபோல நாமும் இயேசுவிடமிருந்து அகற்றப்படுவோம்.

இயேசுவோடு எப்படி இணைந்திருத்தல்?

(அ) இயேசுவின் சொற்களைக் கடைப்பிடித்தல் அல்லது அவற்றுக்குச் செவிசாய்த்தல். இன்றைய முதல் வாசகத்தில், பவுல் (சவுல்) மக்களிடமிருந்து எதிர்ப்புகளைச் சந்திக்கிறார். மக்கள் அவரைக் கண்டு அஞ்சியபோது, பவுலுக்காக நற்சான்று பகர்கிறார் பர்னபா. இவ்வாறாக, பவுல் தன் அழைப்பை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள உதவி செய்கிறார். இவர்கள் வழியாக திருச்சபை வளர்ந்து அமைதியில் திளைக்கிறது.

(ஆ) இயேசுவின் புதிய கட்டளையான அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்தல். இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், ‘கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்’ என எழுதுகிறார் யோவான்.

வாழ்வியல் பாடங்கள்:

(அ) மிகுந்த கனி தருதல்

ஒரு மரம் கனி தரும்போது அது தன்னிடம் உள்ளதை தனக்கு வெளியே நீட்டுகிறது. தனக்கு வெளியே நகர்வதே கனி தருதல். நாம் பல நேரங்களில் நம் எண்ணங்களுக்குள் அல்லது தொடர் செயல்பாடுகளுக்குள் சிக்கி நிற்கிறோம். எண்ணங்கள் வழியாக, நம் செயல்கள் வழியாகவே நாம் கனிதர இயலும். நாம் எந்த வாழ்வியல் நிலையில், சூழலில் இருந்தாலும் நம் வாழ்விடத்தில் நாம் கனிதர இயலும். பிறர்நலன் நாடுதல், பிறருக்காகத் நம்மையே வழங்குதல் போன்றவற்றின் வழியாக நாம் கனிதர வேண்டும். கனிதருவதற்குப் பவுல் தயாராக இருந்தாலும், அவரைக் கண்டு மற்றவர்கள் அஞ்சுகிறார்கள், அவர்மேல் பொறாமை கொள்கிறார்கள், அவரை எதிர்க்கிறார்கள். ஆனால், துன்பத்திற்கான எதிர்த்தகைவு கொண்டிருக்கிறார்கள் சீடர்கள். எதிர்வரும் தடைகளையும் சவால்களையும் நாம் துணிந்து கடக்க வேண்டும். நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் கனிதருவதற்கே.

பெரிய பெரிய திட்டங்கள் வழியாக நாம் கனிதர வேண்டும் என்று காத்திருக்கத் தேவையில்லை. சின்னஞ்சிறிய செயல்கள் வழியாக – பூனைக்குட்டிக்கு பால் வைப்பதன் வழியாக, நம் மேசையை ஒழுங்குபடுத்துவதன் வழியாக, நம் அறையைச் சுத்தம் செய்வதன் வழியாக, தெருவில் நம்மைக் கடக்கும் ஒருவரைப் புன்னகையுடன் வாழ்த்துவதன் வழியாக, நமக்கு எதிராகச் செயல்பட்ட ஒருவரை மன்னிப்பதன் வழியாக என – நாம் கனிதர இயலும்.

கொஞ்சம் அல்ல, நிறைய, குலுங்கக் குலுங்கக் கனிதர வேண்டும் நாம்!

(ஆ) சீடராதல்

மாற்கு நற்செய்தியில் பன்னிருவரைத் தேர்ந்தெடுக்கிற இயேசு, அவர்கள் ‘தம்மோடு இருக்க வேண்டும்’ (காண். மாற் 3:14) என விரும்புகிறார். இயேசுவோடு இணைந்திருத்தலே முதன்மையான சீடத்துவம். மார்த்தா-மரியா நிகழ்விலும், இத்தகைய சீடத்துவத்தை முன்மொழிகிறார் இNயுசு (காண். லூக் 10). நாம் இயேசுவின் பக்தர்களாக அல்ல, மாறாக, அவருடைய சீடர்களாக மாறுதலே நாம் தேர்ந்துகொள்ள வேண்டியது. சீடர்களாக மாறுதல் என்பது தொடர்ந்து நற்செய்தியை அறிவித்தல் – முதல் வாசகத்தில் நாம் காணும் பவுல், பர்னபா போல.

(இ) தந்தைக்கு மாட்சி அளித்தல்

தன்னுடைய மகன் அல்லது மகள் நல்ல நிலைக்கு உயர்வதைக் காண்கிற தந்தை அவர்களைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறார். அவர்களுடைய நற்செயல்களும் மேன்மையான இருத்தலும் தந்தையின் மதிப்பை உயர்த்துகின்றன. தந்தைக்கு மாட்சி அளித்தல் என்பது புதல்வர், புதல்வியரின் பொறுப்பாக மாறுகிறது. நாம் எச்செயலை முன்னெடுத்தாலும், அதன் வழியாக கடவுள் மாட்சி பெறுகிறார் என்னும் எண்ணத்தில் அதை மேன்மையாகச் செய்ய வேண்டும். முப்பது மடங்கு, அறுபது மடங்கு அல்ல, மாறாக, நூறு மடங்கு கனி தருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதையே பவுல், ‘நீங்கள் செய்கிற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல, ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்’ (கொலோ 3:23) என அழைக்கிறார்.

இணைந்திருத்தல் என்பது செடிக்குச் சுமையாக மாறிவிடாதபடி, நாம் கனிதருவோம், சீடராவோம், தந்தைக்கு மாட்சி அளிப்போம்!

‘ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்கிறார்கள். அவர்கள் இதயம் என்றும் வாழ்கிறது’ (காண். திபா 22:26)

மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு
ser