மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பாஸ்கா காலம் 3ஆம்ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணி 3:13-15,17-19 |1 யோவான் 2:1-5 | லூக்கா 24: 35-48

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


ஒரு தடவை கடவுள்‌ மனநிறைவற்ற ஒரு மனிதனுக்குத்‌ தோன்றி, மகனே! உனக்கு என்ன வேண்டும்‌ என்று கேட்டார்‌. எனக்குத்‌ தர வேண்டும்‌ என்று விரும்புகிற நீ யார்‌ என்று கேட்டான்‌ அவன்‌. அவரோ நான்தான்‌ உன்னைப்‌ படைத்துக்‌ காத்து வழிநடத்தும்‌ இறைவன்‌ என்றாராம்‌. ஆம்‌! நீர்‌ கடவுள்‌ என்பதை எண்பிக்க என்ன அடையாள அட்டை (ற) வைத்திருக்கிறீர்‌ என்றானாம்‌!

ஆம்‌ அன்பார்ந்தவர்களே! இதேபோல்தான்‌ நம்‌ ஆண்டவர்‌ உயிர்த்த பின்‌ தன்‌ சீடர்களுக்குக்‌ காட்சித்‌ தந்தார்‌. அவர்களோ ஐயோ! இது ஆவி என்றெல்லாம்‌ அச்சம்‌ அடைந்து நடுங்கினார்கள்‌. இயேசு காட்டிய அடையாள அட்டை என்ன? என்‌ கைகளைப்‌ பாருங்கள்‌. கால்களைப்‌ பாருங்கள்‌. என்னைத்‌ தொட்டுப்‌ பாருங்கள்‌, எனக்கு எலும்பும்‌ தசையும்‌ இருப்பதைக்‌ காண்கிறீர்களே! இவை ஆவிக்கு கிடையாதே என்றார்‌ (லூக்‌. 24:89). என்‌ முகத்தைப்‌ பாருங்கள்‌ என்று இயேசு கூறவில்லை. தன்‌ கைகளிலும்‌, கால்களிலும்‌ ஏற்பட்டத்‌ தழும்பைப்‌ பார்க்கும்படி சொல்கிறார்‌. ஏனெனில்‌ மகிமையுடன்‌ உயிர்த்த நம்‌ ஆண்டவர்‌ இயேசு பாடுகளின்‌ தழும்புகளுடன்‌ உயிர்த்தார்‌ என்பதை ஒருபோதும்‌ மறக்க முடியாது. அவரது விழுப்புண்கள்தான்‌ நமக்கு வாழ்வு தந்தது. எனவேதான்‌ அவரோ நம்‌ குற்றங்களுக்காகக்‌ காயமடைந்தார்‌. நம்‌ தீச்செயலுக்காக நொறுக்கப்பட்டார்‌. நமக்கு நிறைவாழ்வளிக்க அவர்‌ தண்டிக்கப்பட்டார்‌. அவர்தம்‌ காயங்களால்‌ நாம்‌ குணமடைகின்றோம்‌ (எசா. 53:5) என்று முன்‌ அறிவிக்கிறார்‌.

நான்தான்‌ இயேசு என்பதைக்‌ காட்டச்‌ சீடர்களுக்கு முன்பாக வேக வைத்த மீனையும்‌ உண்டார்‌ என லூக்கா தன்‌ நற்செய்தியில்‌ குறிப்பிடுகிறார்‌. நாயினும்‌ கடையேன்‌ யான்‌ அதாவது நாயை விட கேடு கெட்டவன்‌ என்று நம்‌ நாட்டு ஞானிகள்‌ கூறுவர்‌. ஏனெனில்‌ நாயானது தன்‌ தலைவர்‌ மாறுவேடத்தில்‌ வந்தாலும்‌ தன்‌ மோப்ப சக்தியால்‌ அவரை அடையாளம்‌ கண்டு கொள்ளும்‌. ஆனால்‌ கடவுள்‌ பல்வேறு வடிவங்களில்‌ வரும்போது அவரை அடையாளம்‌ கண்டு கொள்ளும்‌ ஆற்றல்‌ மனிதருக்கு இல்லையே! எனவேதான்‌ நாயினும்‌ கேடு கெட்டவர்கள்‌ என வருந்துகிறார்கள்‌ ஞானிகள்‌.

உயிர்த்த இயேசு சீடர்களுக்கு வேற்று உருவில்‌ தோன்றினார்‌ (மாற்‌. 16:12-14)
எம்மாவுக்குச்‌ சென்ற சீடர்கள்‌ அவரை அடையாளம்‌ கண்டு கொள்ளவில்லை (லூக்‌. 24:16)
மதலேன்‌ மரியா இயேசுவைத்‌ தோட்டக்காரனாக நினைத்தார்‌ (யோவா. 20:18)
திபேரியா கடல்‌ அருகே அவர்‌ தோன்றிய போதும்‌ சீடர்கள்‌ அவரை அறியவில்லை (யோவா. 21:4) காரணம்‌ இவர்கள்‌ மந்தப்‌ புத்தியுடன்‌ மதி மயங்கியவர்களாக இருந்தார்கள்‌.
பரிசேயர்களோ, கடவுளின்‌ மீட்புத்‌ திட்டத்தைப்‌ புரிந்து கொள்ளவில்லை. காரணம்‌ ஆணவம்‌, தலைக்கனம்‌ அவர்களை ஆட்கொண்டது.

யூதர்களோ இயேசுவின்‌ மீட்புத்‌ திட்டத்தில்‌ பங்கு பெறவில்லை. ஏனெனில்‌ அறிவற்றவர்களாக உலகத்‌ தலைவர்களின்‌ போக்குக்குத்‌ தலைசாய்ப்பவர்களாக மாறிவிட்டார்கள்‌.

முடிவரை

ஆனால்‌ அன்பார்ந்த சகோதரர்களே! சகோதரிகளே! இன்றைய வார்த்தை வழிபாட்டுக்கு வாருங்கள்‌. பேதுரு ஆவியானவரைப்‌ பெற்றபின்‌, வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள்‌ கொன்றுவிட்டீர்கள்‌; ஆனால்‌ கடவுள்‌ இறந்த அவரை உயிரோடு எழுப்பினார்‌. இதற்கு நாங்களே சாட்சிகள்‌ (தி. ப. 3:15) என்றார்‌ துணிவுடன்‌. அதே பேதுருவும்‌, யோவானும்‌ தலைமைச்‌ சங்கத்தின்‌ முன்பாக என்ன ஆனாலும்‌ சரி, நாங்கள்‌ கண்டதையும்‌, கேட்டதையும்‌ எடுத்துரைக்காமலிருக்க எங்களால்‌ முடியாது (தி.ப. 4:20) என்றனர்‌.

இன்றும்‌ இயேசு நம்‌ வாழ்வில்‌ பல்வேறு நிகழ்வுகளில்‌ பல்வேறு வடிவங்களில்‌ தோன்றி நான்தான்‌ என்கிறார்‌. ஏன்‌ இந்த திருப்பலியிலும்‌ கூட, வார்த்தை வடிவிலும்‌ அப்ப இரச வடிவங்களிலும்‌ தோன்றி நான்தான்‌ என்கிறார்‌. நாம்‌ அவரை அடையாளம்‌ கண்டு கொள்ளாதவாறு நமது பய உணர்வு, பகைமை, தாழ்வு மனம்‌, குற்ற உணர்வு, தன்னலம்‌, ஆணவம்‌, முன்‌ சார்பு எண்ணங்கள்‌ போன்றவை நமது விசுவாசப்‌ பார்வையை மறைக்கின்றன.

அருமையான சகோதரர்களே! எங்கள்‌ Mission என்ன! எங்கள்‌ Vision. என்ன என்று சிந்திக்கும்‌ இந்த நாட்களில்‌ ஆண்டவரின்‌ இரண்டாம்‌ வருகை வரை, அவரை மறை நூலிலும்‌ அரும்‌ அடையாளங்களிலும்‌, அப்பம்‌ பிடுவதிலும்‌, சிறப்பாக ஏழை, எளிய மக்களிடத்தில்‌, அவர்களின்‌ இன்ப துன்பங்களிலும்‌, கவலை, கண்ணீரிலும்‌, ஏக்கங்களிலும்‌, ஏமாற்றங்களிலும்‌ அடையாளம்‌ காண முயற்சிப்போம்‌.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஆண்டவரை அறிந்துகொள்வோம்.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க நாட்டிலே நடந்த ஓர் உண்மை நிகழ்ச்சி. உலகப் புகழ்பெற்ற மாபெரும் நயாகரா நீர்வீழ்ச்சி! அதன் மீது கயிறு ஒன்று கட்டப்பட்டது. அதன் நீளம் ஆயிரத்து நூறு அடிகள். கையிலே எந்தக் கம்பும் இல்லாமல் அக்கயிற்றின் மீது பிரான்ஸ் நாட்டு நிபுணர் பிளாண்டைன் என்பவர் நடந்து காட்டினார்.

அவர் நடந்து சென்றதைப் பார்க்க பெரிய கூட்டம்! அந்தக் கூட்டத்தைப் பார்த்து பிளாண்டைன், "உங்களில் யாராவது முன்வந்தால், அவர்களை நான் என் தோள் மீது சுமந்துகொண்டு இந்தக் கயிற்றின் மீது நடந்து காட்டுகின்றேன்” என்றார். ஹாரி கால்கார்டு என்பவர் முன்வந்தார். ஹாரி கால்கார்டைச் சுமந்து கொண்டு பிளாண்டைன் கயிற்றின் மீது நடக்கத் துவங்கினார். கயிறு ஆடத்துவங்கியது. ஹாரி கால்கார்டின் மனத்துக்குள் அச்சம் புகுந்தது: கீழே பார்த்தார்.

பயணத்தைத் துவங்குவதற்கு முன் கயிற்றின் மறுபக்கம் போய் சேரும்வரை கீழே பார்க்கக்கூடாது என்று பிளாண்டைன் ஹாரி கால்கார்டை எச்சரித்திருந்தார். அதை மறந்து ஹாரி கால்கார்டு கீழே பார்த்தார். அவர் கண்கள் முன்னே சீறிப்பாய்ந்து கீழே விழுந்து கொண்டிருந்த மாபெரும் ஆறு! அவர் பயங்கரமான பள்ளத்தாக்கிற்குள், கற்பாறைகள் மீது விழுந்து கொண்டிருந்த தண்ணீரைப் பார்த்தார். அவர் நெஞ்சம் படபடத்தது, உடல் நடுங்கியது.

அப்போது பிளாண்டைன் தம் தோள் மீது சுமந்து சென்றவரிடம், கீழே பார்க்காதே! பார்த்தால் உன்னைக் கீழே போட்டுவிடுவேன் என்றார். அதன் பிறகு சுமக்கப்பட்டவர் கீழே பார்ப்பாரா? கீழே பார்க்கவில்லை ! மேலே பார்த்தார். அவரது அச்சம் அவரைவிட்டு அகன்றது ; நடுக்கம், குழப்பம், மயக்கம் அனைத்தும் மறைந்து போயின! வெற்றிகரமாக பிளாண்டைன் கயிறின் மறுபக்கத்தை அடைந்தார். இன்று நம் நடுவே உயிர்த்திருக்கும் இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்து : "உங்களை நான் சுமந்து செல்கின்றேன்! நீங்கள் என் தோள் மீது இருக்கின்றீர்கள். என் மீது நீங்களிருக்கும்போது உங்கள் பாவப் பள்ளத்தாக்குகளை, பயங்கரக் குற்றங்களை, ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் அவமானச் செயல்களைப் பார்க்காதீர்கள். மேலே பாருங்கள். அன்பும், அருளும் மிக்க என் விண்ணகத் தந்தையைப் பாருங்கள். இரக்கமே உருவான அவரிடம் உங்களுக்காகப் பரிந்து பேசுகின்றேன் (இரண்டாம் வாசகம்). அவர் ஒருபோதும் உங்களை உதறித் தள்ளமாட்டார்" என்கின்றார்.

இயேசுவும் (நற்செய்தி), அவருடைய சீடர்களும் (முதல் வாசகம்) நம்மிடம் எதிர்பார்ப்பது மனமாற்றம் ! அவர்கள் விரும்பும் மனமாற்றத்தை நாம் அடைய ஓர் அருமையான வழி விண்ணகத் தந்தையை நம்பிக்கையோடு நோக்குவதாகும்.

இறைவனைப் பார்க்கும்போது அவரின் மூன்று முக்கியமான குணங்களை நமது மனக்கண் முன்னால் நிறுத்திக்கொள்வது நல்லது :

 1. கடவுளின் பாசம்: நாம் கடவுளின் உருவிலே படைக்கப்பட்டவர்கள் (தொநூ 1:27]. ஆகவே அவர் நம்மை ஒருபோதும் வெறுப்பதில்லை (எசா 49: 15-16).
 2. கடவுளின் ஒப்பந்தம்: "இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்து கொள்வேன்; நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன். மாறாத அன்புடன் உன்னோடு மலர் ஒப்பந்தம் செய்துகொள்வேன்; ஆண்டவராம் என்னை நீயும் அறிந்து கொள்வாய்" (ஓசே 2:19-20) என்கின்றார் நம் இறைவன்.
 3. கடவுளின் பொறுமை : "ஆண்டவர் ... உங்களுக்காகப் பொறுமையோடிருக்கின்றார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாற வேண்டுமென விரும்புகின்றார்” (2 பேது 3:9) என்கின்றார் புனித பேதுரு.
மேலும் அறிவோம் :

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார் (குறள் : 3).

பொருள் :
அன்பால் இறைவனை நினைந்து போற்றுபவர் உள்ளமாகிய தாமரையில் வீற்றிருப்பவன் இறைவன். அந்த இறைவன் திருவடிகளைப் பின்பற்றி, நல்ல நெறியில் செல்வோர் பூவுலகில் நெடுங்காலம் புகழுடன் வாழ்வர்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இரண்டுபேர் கிணற்றில் குதித்தனர், அவர்களில் ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்; மற்றவரோ தண்ணீர் மேல் மிதந்தார். காரணம் என்ன? தண்ணீரில் மூழ்கி இறந்தவர் தலைக்கனம் பிடித்தவர், தண்ணீர்மேல் மிதந்தவர் மர மண்டையர்.

மெசியா பாடுபட்டு, சிலுவையில் இறந்து, உயிர்த்தெழுந்து உலகை மீட்க வேண்டும் என்னும் கடவுளின் மீட்புத் திட்டத்தைப் பரிசேயர்கள் புரிந்து கொள்ளவில்லை; ஏனெனில் அவர்கள் தலைக்கனம் பிடித்தவர்கள். இயேசுவின் சீடர்களும் புரிந்து கொள்ள வில்லை; ஏனெனில் அவர்கள் மரமண்டையினர். உண்மையில், உயிர்த்த ஆண்டவர் எம்மாவுக்குச் சென்றுகொண்டிருந்த இரு சீடர்களையும் 'அறிவிலிகளே, மந்த உள்ளத்தினரே' என்று கடித்துகொண்டார். (லூக் 24:25).

இன்றைய நற்செய்தியில் உயிர்த்த இயேசுவைக் கண்ட சீடர்கள் திகிலும் அச்சமும் கொண்டவர்களாய். ஏதோ ஓர் ஆவியைக் காண்பதாக நினைத்தனர். இயேசுவோ, "நான்தான்" என்றுகூறி, அவர்கள் கண்டது ஓர் ஆவியல்ல, மாறாக எலும்பும் தசையும் கொண்ட, ஊனுடல் எடுத்த அதே நாசரேத்து இயேசு என்பதை எண்பித்தார்.

கடவுள் ஒருவருக்குத்தோன்றி, "நான் தான் கடவுள்" என்று கூறியபோது, அம்மனிதர், "நீங்கள் கடவுள் என்பதை எண்பிக்க அடையாள அட்டை காட்டுங்கள்" என்று கேட்டாராம்.

உயிர்த்த ஆண்டவர் தம் சீடர்களுக்குக் காட்டிய அடையாள அட்டை என்ன? "என் கைகளையும் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள். எனக்கு எலும்பும் தசையும் இருப்பதைக் காண்கிறீர்களே. இவை ஆவிக்குக் கிடையாதே” என்றார் (லூக் 24:39).

'என் முகத்தைப் பாருங்கள்' என்று இயேசு கூறாமல், தமது கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் ஏற்பட்டத் தழும்பைப் பார்க்கும்படி கேட்கிறார். மகிமையுடன் உயிர்த்த இயேசு பாடுகளின் தழும்புகளுடன் உயிர்த்தெழுந்தார் என்பதை நாம் ஒருபோதும் மறக்கமுடியாது, வீர மரணம் அடைந்த அதே இயேசு விழுப்புண்களுடன் உயிர்த்தெழுந்தார்.

சிலுவையில் அறையப்பட்ட 'வரலாற்று இயேசுவும்' (Jesus of history), மாட்சியுடன் உயிர்த்தெழுந்த விசுவாச இயேசுவும் (Jesus of faith) ஒரே ஆள் தான் என்பதை ஐயத்திற்கு இடமின்றி எண்பிக்கிறார் நற்செய்தியாளர் லூக்கா, எனவேதான், உயிர்த்த இயேசு சீடர்களுக்கு முன்பாக வேகவைத்த மீனை உண்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார் . (லூக் 24:42-43). இயேசுவின் உயிர்ப்பு வரலாற்றிற்கு அப்பாற்பட்டது என்றாலும்கூட, அது உண்மை நிகழ்வு ஆகும்.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பேதுரு இயேசு உண்மையிலே உயிர்த்தார் எனச் சான்று பகர்கிறார் (திப 3:13-15). திருத்தூதர் யோவானும், "தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம், கையால் தொட்டுணர்ந்தோம்" என்கிறார் (1யோவா 1:1). எனவே திருத்தாதர்கள் இயேசுவைக் கண்டு, கேட்டு அவருடன் உண்டு. உற்று உணர்ந்தனர், அவர்கள் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் தான் (திப 4:20) நமக்கு அறிவித்துள்ளனர். அவர்களுடைய சாட்சியத்தை ஏற்று, நிலைவாழ்வும் நிறைமகிழ்ச்சியும் அடைய நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு உயிர்த்தெழுந்தது மண்ணாக வாழ்வுக்குத் திரும்புவதற்காக அன்று, மாறாக விண்ணக மகிமையில் நுழைவதற்காகவே. அவர் விண்ணகத் தூயகத்தில் அமைந்து விட்டார். (எபி 9:24), அவ்வாறு அவர் விண்ணகம் செல்லுமுன், மறைநூலைச் சரியாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் தம் சீடர்களின் மனக்கண்களைத் திறந்தார். அவர்கள் மீது தூய ஆவியைப் பொழியப் போவதாக வாக்களித்தார், "பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என்று அனைத்துலக மக்களுக்கும் போதிக்கும்படி போரித்தார் (லூக் 24:4549).

தூய ஆவியாரின் வல்லமையுடன், மறைநூலை மையமாகக் கொண்டு, அனைத்து நாட்டு மக்களுக்கும் 'மனமாற்றத்தின் நற்செய்தியை அறிவிப்பது திருச்சபையின் கடமையும் உரிமையுமாகும். இக்கடமையை ஆற்ற, விண்ணகத்தில் கடவுளின் வலப்பக்கம் அமர்ந்து நமக்காகப் பரிந்துபேசும் கிறிஸ்து (உரோ 8:34), உலகு முடியும் வரை எந்நாளும் நம்மோடு இருக்கிறார் (மத் 28:20) என்பதை நாம் உணர்ந்து வாழ்கிறோமா?

'நாயினும் கடையேன்', அதாவது 'நாயை விட நான் கேடுகெட்டவன்' என்ற தம் நாட்டு ஞானிகள் கூறுவர். ஏனெனில், நாயானது தனது தலைவர் மாறுவேடத்தில் வந்தாலும், தனது மோப்ப சக்தியால் அவரை அடையாளம் கண்டுகொள்ளும் ஆனால், கடவுள் பல்வேறு வடிவங்களில் வரும்போது அவரை அடையாளம் கண்டு கொள்ளும் ஆற்றல் மனிதருக்கு இல்லையே! எனவே, அவர்கள் நாயினும் கேடு கெட்டவர்கள் என வருந்துகின்றனர் ஞானிகள்.

உயிர்த்த இயேசு சீடர்களுக்கு வேற்றுருவில் (மாற் 16:12) தோன்றினார். ஆனால், எம்மாவுக்குச் சென்ற இரு சீடர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை (லூக் 24:18). மகதலா மரியாவோ அவரைத் தோட்டக்காரர் என நினைத்தார் (யோவா 20:15).

திபேரியாக் கடல் அருகே அவர் தோன்றியபோது சீடர்கள் அவரை அறியவில்லை (யோவா 21:4). இன்றும் இயேசு நம் வாழ்வில் பல்வேறு நிகழ்வுகளில், பல்வேறு வடிவங்களில் தோன்றி, "நான்தான்" என்கிறார். நாமே அவரை அடையாளம் கண்டு கொள்ளாதவாறு நமது பயஉணர்வு, பகைமை உணர்வு, தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு. தன்னலம், ஆணவம், முன் சார்பு எண்ணங்கள் போன்றவை நமது விசுவாசப் பார்வையை மறைக்கின்றன.

இயேசுவின் இரண்டாம் வருகைவரை, அவரை மறைநூலிலும் அருளடையாளங்களிலும் அப்பம் பிடுவதிலும் இன்னும் சிறப்பாக ஏழை எளிய மக்களிலும் நமது இன்பதுன்பங்களிலும் கவலை கண்ணீரிலும் ஏக்கங்கள் ஏமாற்றத்திலும் அடையாளம் கண்டு கொள்ளப்பழகிக் கொள்வோம்.

அன்றாட வாழ்வும் ஓர் அருளடையாளமே!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

உயிர்ப்பின் சாட்சிகள்

1941 ஜனவரித் திங்கள். ஒருநாள் இங்கிலாந்து நாட்டுக் கடலில் சென்று கொண்டிருந்த கப்பலை ஆர்த்தெழுந்த புயற்காற்று அலைக் கழித்தது. இரவு நேரம், கப்பலை இருள் கவ்வியது. கப்பல் புயற்காற்றில் அலைமோத பொருட்கள் அனைத்தும் வெளியில் நாலாபக்கங்களிலும் வீசி எறியப்பட்டன. தங்கள் உயிரைக் காப்பாற்ற பயணிகள் பாய்மரக் கம்பத்தோடு தங்களைப் பிணைத்துக் கொண்டார்கள். பிணைத்துக் கொண்டபோது உடலில் காயம் அடைந்தார்கள். உடலில் காயம் பட்டாலும், இரத்தம் கசிந்தாலும், பாய்மரத்தோடு பிணைத்துக் கொண்டால் உயிர் பிழைப்போம் என்ற உறுதியான நம்பிக்கை இருந்தது.

பொழுதும் புலர்ந்தது. புயலும் ஓய்ந்தது. புதுத்தெம்பும் மலர்ந்தது.

திருத்தூதர்கள் வாழ்விலும் இயேசுவின் மரணம் ஒரு சூறாவளியையே கிளப்பிவிட்டது. அந்நேரத்தில் இவர்கள் தங்களை மெசியாவின் பாடுகள் பற்றிய இறைவாக்குக்களோடு பிணைத்துக் கொண்டு இருந்திருந்தால் தங்களுடைய வாழ்வில் அலைக்கழிக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

தம்முடைய சீடர்களுக்குத் தெளிவைத் தந்து நம்பிக்கைக்கு இட்டுச் செல்ல எப்படியெல்லாம் முயற்சிக்கிறார் உயிர்த்த இயேசு! கலங்கிய உள்ளங்களுக்கு அமைதி அளிக்கிறார்: "உங்களுக்கு அமைதி உரித்தாகுக என்று அவர்களை வாழ்த்தினார்" (லூக்.24:36). பல்வேறு வழிகளில் அவர்களுடைய நம்பிக்கைக்கு வலுவூட்டுகிறார்: "நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள். எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே, இவை ஆவிக்குக் கிடையாதே என்று அவர்களிடம் கூறினார்" (லூக்.24:39) எம்மாவு சீடர்கள் போல, இறைவார்த்தை அவர்களது மனக் கண்களைத் திறக்கிறது: “அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார்” (லூக்.24:45) சீடர்களுடைய பணியை, பொறுப்பை நினைவூட்டுகிறார்: "மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும் பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள். என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும்... இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்" (லூக்.24:46-48)

இயேசுவின் சீடர்கள் அவரது உயிர்ப்புக்குச் சாட்சிகள்! எனவேதான் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட பேதுரு வீறுகொண்டு வீரியத்தோடு முழங்குகிறார்: “வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்று விட்டீர்கள். ஆனால், கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள்" (தி.ப.3:15)

இயேசுவின் உயிர்ப்பில் இரண்டு கோணங்கள் உண்டு.

 1. இயேசுவின் உயிர்ப்பு ஒரு வரலாற்று நிகழ்வு என்பது. இது கல்லறைக் காவலர்களுக்குக் கூடத் தெரியும்.
 2. இயேசுவின் உயிர்ப்பு மனிதகுல மீட்பு என்பது. இது அந்த நிகழ்ச்சியின் உட்பொருள். அதைத் திருத்தூதர்கள் மட்டுமே அனுபவ அறிவாகப் பெற்றனர். எனவேதான் அவர்கள் சாட்சிகள்.

உயிர்ப்பின் சாட்சிகள் என்பவர்கள் இயேசு உயிர்த்தார் என்பதைச் செய்தியாகச் சொல்பவர்கள் அல்ல. இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொண்டவர்கள். உயிர்த்த இயேசு உயிர்ப்பின் ஆற்றலைத் தம்மோடும், தம் வழியாகப் பிறரோடும் பகிர்ந்து கொள்கிறார் என்பதை உணர்ந்தவர்கள்.

உலகக் கண்ணோட்டத்தில் சாட்சி என்பவர் தான் கண்டதும் கேட்டதும் உண்மை என்று உறுதிமொழி கொடுப்பவர். ஆனால் விவிலியப் பார்வையில் தான் கண்டதற்கும் கேட்டதற்கும் தன்னையே அர்ப்பணிப்பவரே சாட்சி. கடந்த கால நிகழ்வாக அல்ல, இன்றைய எதார்த்தமாக வெளிப்பட வேண்டும் இயேசுவின் உயிர்ப்பு. கடந்த காலத்தைக் காட்டியே எந்தச் சமயமும் காலந்தள்ள முடியாது. அப்படி யென்றால் என்றோ ஒருநாள் சாவை வென்று கல்லறையினின்று இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதற்கு அல்ல, இன்று என் இதயக் குகையில் இயேசு எப்படி உயிரோட்டத்தோடு இயங்குகிறார் என்பதற்கு நான் சாட்சி. இயேசு பாவத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்பதற்கல்ல.

அவர் என் வாழ்வில் பாவத்தின் சக்திகளை வென்றுயிர்த்தார் என்பதற்கு நான் சாட்சி. உயிர்ப்பில் இயேசுவுக்கு என்ன நிகழ்ந்தது என்பதல்ல, உயிர்ப்பால் சீடர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதே சாட்சியத்திற்கான அடித்தளம். இயேசுவின் உயிர்ப்பால் மனிதன் பெறும் விடுதலை, காணும் மாற்றம், வாழ்க்கைத் திருப்பம் இவைதாம் நாம் சாட்சியா, எதிர் சாட்சியா என்பதை உணர்த்தும்.

இயேசு இயக்கம் பரவ உயிர்த்த இயேசுவின் சாட்சிகளாக நாம் திகழவேண்டியது தேவை. அதற்காக எங்கோ ஓர் இடறல், எவரோருவர் எதிர்சாட்சி என்பதால் இயேசுவைப் பற்றி அறிந்திருந்தும் அவரோடு இணைய மறுப்பது எந்த வகையில் நியாயம்? நாட்டின் தந்தை எனப் போற்றப்படும் அண்ணல் காந்தி சொன்னார், “நான் கிறிஸ்துவை நேசிக்கிறேன், ஆனால் கிறிஸ்தவர்களை வெறுக்கிறேன்” என்று.

தனக்கு ஆசை இருந்தும் கிறிஸ்தவச் சமயத்தைத் தழுவத் தடையாக இருந்ததாம். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவைப் போல் வாழ வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அடையாளங்களாக அமையப் பெற்றவை என்றைக்கும் உண்மைப் பொருளுக்குப் பதிலாக அமைய முடியாது. "அந்த நிலாவைத் தான் என் கையிலே புடிச்சேன்” என்று தண்ணீரில் நிழலாய்ப் படிந்த நிலவைக் கையிலே தாங்கிப் பாடினாளே, அது உண்மையான நிலவாக முடியுமா? அதுபோல அறிவை வளர்த்துக் கொள்ளப் பலமுறை விவிலியத்தைப் படிக்கலாம். ஆனால் படித்தபின் அந்தக் கருத்து சூப்பர் என்று சொல்லிவிட்டு, அதில் உள்ள உண்மையை எதிர்கொள்ள, ஏற்றுக் கொள்ள மறுப்பவரை என்ன வென்பது?

"இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற் காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன'' (யோவான் 20:31) வாழ்வு தரும்படியாக வாழ்வுக்கு உயிர்த்தெழுந்த கிறிஸ்து உண்மையான இறைமகன் என்பது அவரது உயிர்ப்பில்தான் தெளிவாகிறது. இந்த வரலாற்று உண்மையை ஏற்றுக் கொள்ள, கிறிஸ்தவன் சரியில்லை என்று சொல்வதில் அர்த்தம் இல்லை. இந்தச் சிந்தனை, கிறிஸ்தவன் வாழுகிற தவறான வாழ்க்கைக் கான சப்பைக் கட்டு அல்ல!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இறைவனின் அருள்வண்ணம்

‘The Power of Positive Thinking’, அதாவது, 'நேர்மறை சிந்தனைகளின் சக்தி' என்ற புகழ்பெற்ற நூல், 1952ம் ஆண்டு வெளியானது. மெத்தடிஸ்ட் சபையின் போதகரான நார்மன் வின்சென்ட் பீல் (Norman Vincent Peale) அவர்கள் உருவாக்கிய இந்நூலில், 17 பிரிவுகள் உள்ளன. ஒரு சில பிரிவுகளின் தலைப்புக்கள் இதோ: 'உன்னையே நீ நம்பு', அமைதி நிறைந்த சிந்தனை சக்தியை உருவாக்குகிறது, இறைவேண்டலின் சக்தியை முயன்று பார், புலம்புவதை கைவிடு, தோல்வியை நம்பாதே... 21ம் நூற்றாண்டில், சந்தேகத்தோடு போராடிக்கொண்டிருக்கும் நமக்குத் தேவையான பல பாடங்கள் இந்நூலில் காணக்கிடக்கின்றன.
போதகர் பீல் அவர்கள் கூறும் ஒரு சில எண்ணங்கள் இதோ: கடவுளிடமிருந்து பெரிய செயல்களை எதிர்பார்த்தால், கடவுளிடமிருந்து பெரிய செயல்கள் நம்மை வந்து சேரும். நம் உள்ளத்தின் ஆழத்தில் நம்பிக்கையை வளர்த்துக்கொண்டால், அது, நம் வாழ்வில் புதுமைகளை உருவாக்கும். பிரச்சனைகள் என்ற கடலில் தத்தளிக்கும் பலரை நாம் காண்கிறோம். தங்கள் வாழ்வில் புதுமைகள் நிகழப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்தவர்கள் இவர்கள்.

கல்வாரிக் கொடுமைகளைக் கண்ட இயேசுவின் சீடர்கள், இத்தகைய ஒரு மனநிலையில் இருந்தனர். அவர்களைத் தேடிவந்த இயேசு, தன் உயிர்ப்பின் சக்தியை அவர்கள் உணர்வதற்கு வழி செய்தார். கடந்த ஞாயிறு - இறை இரக்கத்தின் ஞாயிறு - சந்தேகக் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த சீடர் தோமாவை இயேசு சந்திக்க வந்த நிகழ்வைச் சிந்தித்தோம். அந்த சந்திப்பில், தோமாவிடம் உருவான மாற்றத்தையும் சிந்தித்தோம். இயேசுவின் உயிர்ப்பை சந்தேகத்தோடு அணுகிய தோமாவை, இயேசு, மகிழ்வின் சிகரத்திற்கு அழைத்துச் சென்றார். மகிழ்வின் சிகரத்தில் அவர், "நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்" (யோவான் 20:28) என்ற மிக உன்னதமான நம்பிக்கை அறிக்கையை வெளியிட்டார்.

மகிழ்வு, துயரம் ஆகிய உணர்வுகளின் உச்சங்களில் நாம் நம்ப முடியாமல், செயலிழந்து உறைந்து போகிறோம். “Oh my God, I can't believe this” “கடவுளே, என்னால் இதை நம்பவே முடியவில்லை” என்று மகிழ்வின் உச்சத்தில் நாம் கத்தியிருக்கிறோம். இதே வார்த்தைகளை, துயரத்தின் உச்சத்திலும் நாம் சொல்லிக் கதறியிருக்கிறோம். மகிழ்வு, துயரம் இரண்டின் உச்சநிலைகளும் நம்ப முடியாத ஒரு நிலைக்கு நம்மைத் தள்ளிவிடுகின்றன. அத்தகைய ஒரு நிலையில் இருந்த தோமாவை நாம் சென்ற ஞாயிறு நற்செய்தியில் சந்தித்தோம். அதேவண்ணம், மகிழ்வின் உச்சிக்குத் தள்ளப்பட்ட இயேசுவின் சீடர்களைப் பற்றி இன்றைய நற்செய்தியில் (லூக்கா நற்செய்தி 24:35-48) நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “சீடர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள்.” (லூக்கா 24:41)

தனது உயிர்ப்பை நம்பமுடியாத அளவு வியப்பும், மகிழ்வும் அடைந்த சீடர்களை இன்னும் அதிகமாய் வியப்பில் ஆழ்த்தி, உயிர்ப்பின் வல்லமையை இயேசு அவர்களுக்குக் காட்டியிருக்கவேண்டும். அதற்குப் பதிலாக, தன் உயிர்ப்பை நிரூபிக்க இயேசு செய்தது மிகவும் எளிமையான, சர்வ சாதாரணமான ஒரு செயல். இது நம்மை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. “உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று இயேசு கேட்கிறார். உயிர்த்தபின் இயேசு தன் சீடர்களைச் சந்தித்த பல நிகழ்வுகளில் உணவு ஒரு முக்கிய அங்கமாகிறது. தன் உயிர்ப்பை நிரூபிக்க, சீடர்களின் நம்பிக்கையை வளர்க்க, இயேசு, உணவை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதை, நாம் இரு கோணங்களில் சிந்திக்கலாம்.

முதல் கோணம்: பொதுவாக எந்த ஒரு குடும்பத்திலும் நிகழ்வது. ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்தால், அதுவும் வாழவேண்டிய வயதில் ஒருவர் மரணம் அடைந்தால், அந்தக் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் தாங்கமுடியாத துயரத்தில் மூழ்குவர். அவர்களின் எண்ணங்களிலிருந்து உணவும், உறக்கமும் விடைபெறும். இப்படிப்பட்ட ஒரு சூழலில், அக்குடும்பத்தினர் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள், எப்பாடு பட்டாவது அவர்கள் உண்பதற்கு வழிவகை செய்வர்.
இந்தக் கோணத்தில் நாம் இயேசுவின் செயலைச் சிந்திக்கலாம். கல்வாரி நிகழ்வுகளுக்குப்பின் மனமுடைந்து போயிருக்கும் சீடர்களும், அன்னை மரியாவும் கடந்த மூன்று நாட்களாக உண்ணாமல் இருந்ததால், அவர்களை மீண்டும் உண்ணும்படி வற்புறுத்தவே இயேசு உணவைப் பற்றிப் பேசுகிறாரோ என்று நான் எண்ணிப்பார்க்கிறேன். பரிவுள்ள ஒரு தாயின் அன்பு, உயிர்த்த இயேசுவில் தொடர்வதைக் காணலாம்.

இரண்டாவது கோணம்: இயேசுவும் அவரது சீடர்களும் கடந்த மூன்று ஆண்டுகள் பணிவாழ்வில் அதிகம் மூழ்கிப் போயிருந்தவர்கள். பலநாட்கள் பணியில் அதிக நேரம் செலவழித்ததால், உண்பதற்கு நேரமோ, சூழலோ சரிவர அமையாமல் தவித்துள்ளனர். அவர்களது பணியால், இறுதி சில மாதங்கள் பகையும் சூழ்ந்தது. எனவே, நிம்மதியாக ஓர் இடத்தில் அமர்ந்து உணவு உண்ட நேரங்கள் மிகக் குறைவே. அப்படி அவர்கள் சேர்ந்து உணவு உண்ட அரிய நேரங்களில், அவர்கள் மத்தியில் உணவு மட்டும் பகிரப்படவில்லை, உணர்வுகளும் பகிரப்பட்டன. இந்த ஆழமான பரிமாற்றங்களின் உச்சமாக மூன்று நாட்களுக்கு முன் அவர்கள் உண்ட அந்த இறுதி பாஸ்கா இரவுணவு அமைந்தது. அந்த இறுதி இரவுணவின் தாக்கம் இன்னும் அவர்கள் மனதில் ஆழமாய்ப் பதிந்திருந்தது. ஆழ்ந்த உறவுகளை, உண்மைகளை வெளிப்படுத்திய அந்த இரவுணவை மீண்டும் அவர்களுக்கு நினைவுறுத்த, இயேசு உயிர்த்தபின்பும் அவர்களோடு உணவருந்த வந்திருந்தார் என்றும் எண்ணிப் பார்க்கலாம்.

தன் பிரசன்னத்தை உலகில் தொடர்ந்து நிலைநிறுத்த, இறுதி இரவு உணவின்போது இயேசு உணவைப் பயன்படுத்தினார். உயிர்ப்புக்குப் பின் தனது பிரசன்னம் தொடர்கிறது என்பதை மீண்டும் அவர்களுக்கு வலியுறுத்திக் கூறுவதற்காக இயேசு உணவை மீண்டும் பயன்படுத்துகிறார். உயிர்ப்பு என்பது நம்மை வியப்பிலும் பிரமிப்பிலும் ஆழ்த்தும் ஒரு பெரிய மந்திரச் செயல் அல்ல. அது வெகு சாதாரண அன்றாட வாழ்வில் நம்முடன் இணைந்த ஓர் அற்புதம் என்ற ஓர் உண்மையை இந்த உணவுப் பகிர்தலில் இயேசு சொல்லித்தந்தார். இந்த நிகழ்வின் வழியே, இயேசு, தன் சீடர்களிடம் சொல்லாமல் சொன்னது இதுதான்: "கல்வாரிச் சிலுவையும், கல்லறையும் நம் உறவை அறுத்துவிட்டதென நீங்கள் எண்ணுகிறீர்கள். சிலுவையும், கல்லறையும் நம் உறவை அழித்துவிட முடியாது. உங்களுடன் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்த நான், இதோ உங்களோடு வாழ்வைத் தொடர வந்துள்ளேன். எனவே, உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?" என்று இயேசு கேட்டார். உணவின் வழியாக, உயிர்ப்பைப்பற்றி, தொடரும் தன் உறவைப்பற்றி இதைவிட அழகான பாடங்கள் சொல்லித்தர முடியுமா என்பது சந்தேகம்தான்.

உணவின் வழியாக உயிர்ப்பின் பெரும் உண்மையைக் கூறிய இயேசு, அதற்கு முன்னதாக, காயப்பட்ட தன் கரங்களையும், கால்களையும் சீடர்களுக்குக் காட்டுகிறார். இதை இன்றைய நற்செய்தியின் துவக்கத்தில் நாம் காண்கிறோம். (லூக்கா 24:36-40) காயப்பட்ட இயேசுவின் கரங்களும், கால்களும் அவரது உயிர்ப்பின் எளிமையான அடையாளங்கள். Tolstoy அவர்கள் எழுதிய ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது.

ஒரு நாட்டின் அரசன் தன் அவையில் பணிபுரியும் அனைவருக்கும் விருந்தொன்றை ஏற்பாடு செய்தார். அனைவருக்கும் அழைப்பிதழை அனுப்பினார். விருந்துக்கு வருபவர்கள் தங்கள் அழைப்பிதழைக் கையோடு கொண்டு வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அந்த விருந்தில் அரசனுக்கு அருகில் அமரும் வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரும் அழைப்பிதழைக் கொண்டு வந்திருந்தனர். விருந்து மண்டபத்தில் நுழைந்தபோது, அவர்களுக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. வாயில் காப்பவர்கள் அவர்கள் கொண்டு வந்திருந்த அழைப்பிதழைப் பார்க்கவில்லை, மாறாக, அவர்கள் உள்ளங்கைகளைப் பார்த்தனர். ஒவ்வொரு நாளும் அரண்மனையைக் கூட்டி, கழுவி சுத்தம் செய்யும் பணிப்பெண்ணின் கைகளைப் பார்த்த வீரர்கள், "அரசரின் சிறப்பு விருந்தினராக அமரும் வாய்ப்பு உங்களுக்கே உள்ளது. அரசர் மீது நீங்கள் கொண்டுள்ள விசுவாசமும், அன்பும் உங்கள் கைகளில் தெரிகிறது" என்று சொல்லி, அவரை அழைத்துச் சென்று அரசனுக்கு அருகே அமரவைத்தனர்.

வெடித்துச் சிதறிய கல்லறை, மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்த திருக்கோவிலின் திரை என்ற அடையாளங்களைவிட, ஆணிகள் அறைந்த இயேசுவின் காயப்பட்ட கரங்களும், கால்களும் சீடர்களின் மனங்களில் உயிர்ப்பின் அடையாளங்களாய் ஆழமாய்ப் பதிந்தன.
உயிர்ப்பு என்ற ஆழமான ஓர் உண்மையை வெகு வெகு எளிதான வாழ்வு அனுபவங்களின் வழியாக இயேசு எடுத்துரைத்ததால், சீடர்களின் உள்ளங்களில் இந்த மறையுண்மை வெகு ஆழமாகப் பதிந்தது. இந்த மறையுண்மைக்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்யும் அளவுக்கு அவர்கள் வாழ்வு மாறியது. உயிர்ப்பை ஒரு மாயச் சக்தியாக இறைமகன் இயேசு காட்டியிருந்தால், ஒரு நொடிப்பொழுது வியப்பில் சீடர்கள் பரவசம் அடைந்திருக்கலாம். ஆனால், அவர்கள் வாழ்வு மாறியிருக்குமா என்பது சந்தேகம்தான். வாழ்வை மாற்றும் ஒரு சக்தியாக இயேசு உயிர்ப்பைக் காட்டியதால், அதன் தாக்கம், சீடர்களின் வாழ்வு முழுவதும் தொடர்ந்தது.

மனித உறவுகளை அறுப்பதில் மிகவும் உறுதியான, முடிவான துண்டிப்பு சாவு என்று நாம் நம்புகிறோம். அந்தச் சாவும் உண்மையிலேயே ஒரு முடிவு அல்ல, கல்லறைக்குப் பின்னும் உறவுகள் தொடரும் என்பதைக் கூறும் மறையுண்மையே உயிர்ப்பு. அந்த மறையுண்மையை உணவு, காயப்பட்ட கரங்கள், கால்கள் போன்ற எளிதான மனித நிகழ்வுகளின் மூலம் இயேசு இன்று நமக்குச் சொல்லித் தந்ததற்காக அவருக்கு நன்றி சொல்வோம்.

கடவுள் மந்திர மாயங்கள் செய்யும் மந்திரவாதி அல்ல. நம் வாழ்வில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யும் அன்பர் அவர்.
மாயங்கள் செய்து மலைக்க வைப்பது மந்திரவாதியின் கைவண்ணம்.
வாழ்வில் மாற்றங்கள் செய்து நிலைக்க வைப்பது இறைவனின் அருள்வண்ணம்.

நம் சிந்தனைகளை, ஏப்ரல் 14ம் தேதியை நோக்கி திருப்புவோம். ஏப்ரல் 14, இஞ்ஞாயிறன்று, தமிழ் புத்தாண்டு நாளைக் கொண்டாடுகிறோம். பொதுவாக, புத்தாண்டு நாளன்று, வாக்குறுதிகள் எடுப்பது, பல கலாச்சாரங்களிலும் காணப்படும் வழக்கம். ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்வை மேம்படுத்த எடுக்கப்படும் வாக்குறுதிகள் இவை. தனிப்பட்ட வாழ்வை மட்டுமல்ல, சமுதாய வாழ்வையும் மேம்படுத்த, கனவுகள் தேவை, கனவுகளை நனவாக்க மன உறுதியுடன் கூடிய வாக்குறுதிகள் தேவை. தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும், இவ்வுலகிற்கும் தேவையான கனவை, வாக்குறுதியாக முழங்கிச் சென்றுள்ளார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அவர் முழங்கிய வாக்குறுதி இதோ:

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்...
இதயம் எலாம் அன்பு நதியினில் நனைப்போம்
‘இது எனது’ எனும் ஓர் கொடுமையைத் தவிர்ப்போம்
(பாரதிதாசன் கவிதைகள் 58, புதிய உலகு செய்வோம்)

பாரதிதாசனின் இவ்வரிகளை இவ்வேளையில் எண்ணிப்பார்க்க மற்றொரு முக்கியக் காரணம் உண்டு. உலகின் பல நாடுகளில், ஏப்ரல் 14ம் தேதி ஓர் உலக நாள் கடைபிடிக்கப்படுகின்றது. "இராணுவச் செலவை எதிர்க்கும் நாள்" உலகின் பல நாடுகளில் கடைபிடிக்கப்படுகின்றது. Stockholm International Peace Research Institute (SIPRI) என்ற ஆய்வு நிறுவனம், ஒவ்வோர் ஆண்டும் இராணுவச் செலவைக் குறித்தப் புள்ளிவிவரங்களை வெளியிடுகிறது. இந்நிறுவனம், 2023ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில், 2022ம் ஆண்டு, உலக நாடுகள் இராணுவத்திற்கு செலவிட்ட மொத்தத் தொகை... 2,24,000 கோடி டாலர்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

2020ம் ஆண்டு, உலகின் அனைத்து நாடுகளிலும் கோவிட் 19 பெருந்தொற்று பெரும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தியதால் பல்வேறு நாடுகளில் மக்கள்நலத் திட்டங்கள் பல நிறுத்தப்பட்ட நேரத்திலும், இராணுவச் செலவில் மட்டும் அரசுகள் கூடுதல் நிதியை ஒதுக்கிவைத்தன என்பதை அறியும்போது, வேதனைப்படுகிறோம்.
2022ம் ஆண்டில் இராணுவத்திற்கு உலக நாடுகள் செலவிட்ட 2,24,000 கோடி டாலர்கள், அதாவது, 1,86,38,760 கோடி ரூபாய் என்ற தொகையில் பத்தில் ஒரு பகுதியையாகிலும், மக்களின் வறுமை, பசி ஆகியவற்றைப் போக்கும் திட்டங்களுக்குச் செலவிட்டிருந்தால், குறிப்பாக, கோவிட் பெருந்தொற்றினால் தங்கள் வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்திருந்த மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் திட்டங்களுக்குச் செலவிட்டிருந்தால், அனைவரும் பாதுகாப்பு உணர்வுடன் வாழ்ந்திருக்கமுடியும். உலகில் போர் என்ற எண்ணமே எழாமல் போயிருக்கும்... இல்லையா?

2022ம் ஆண்டு, ஏப்ரல் 2,3 ஆகிய இரு நாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மால்டா நாட்டில் தன் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்து, உரோம் நகருக்குத் திரும்பி வந்த விமானப் பயணத்தில், தன் வழக்கப்படி, செய்தியாளர்களிடம் பேசினார். உக்ரைன் நாட்டில் துவங்கியிருந்த போரைப்பற்றிய கேள்வி எழுந்தபோது, அவர் சொன்ன கருத்துக்கள் நம்மைச் சிந்திக்க தூண்டுகின்றன:
"இரண்டாவது உலகப்போர் முடிவுற்றபோது, 'இனி ஒருபோதும் போர் கிடையாது' என்ற உறுதியான உள்ளத்துடன், ஐ.நா. அவையும், உலக நாடுகள் பலவும் அமைதியின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டு உருவாக்கிய அழிவுகளைக் கண்ணுற்ற உலகத் தலைவர்கள், அணு ஆயுத ஒழிப்பு குறித்து பேசிவந்தனர். ஆனால், 70 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் உலகத்தலைவர்கள், அணு ஆயுதங்களையும், வேறு இராணுவக் கருவிகளையும் வாங்கிக் குவிக்கின்றனர். போரிடுவது, இன்றைய உலகில் ஊறிப்போன ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது. தன் உடன்பிறந்த ஆபேலைப் கொன்ற காயினின் கொலை வெறியே நமக்குள் ஆழப் புதைந்துள்ளது" என்று கூறினார் திருத்தந்தை.

போர்க்கருவிகள் எல்லாம் அழிக்கப்பட்டு, போரே இல்லாமல் போகும் புத்தம் புது பூமி என்ற கனவை நனவாக்க இறைமகன் இயேசு உயிர்த்தெழுந்தார். “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்பதை தன் உயிர்ப்பிற்குப்பின் நிகழ்ந்த சந்திப்புகளில் கூறிய இயேசு, அமைதியின் அரசராய் நாம் வாழும் இல்லங்களில், ஊர்களில், நகரங்களில், இந்த உலகத்தில் நுழைய வேண்டுவோம். குறிப்பாக, உக்ரைன், காசா, சிரியா ஆகிய நாடுகளில் அமைதியின் அரசனாம் இயேசு வலம்வர வேண்டும் என்று சிறப்பாக மன்றாடுவோம்.

ஏப்ரல் 19, வருகிற வெள்ளி முதல், ஜூன் 1ம் தேதி முடிய இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள், நேர்மையுடன் நடைபெறவும், நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் தெளிவை மக்கள் பெறவும், தமிழ் புத்தாண்டில் நாம் செபிப்போம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இறையேசுவில்‌ பிரியமானவர்களே ! இன்றைய வார்த்தை வழிபாட்டில்‌ கடவுள்‌ மனமற்றத்திற்கு அழைப்பு விடுகிறார்‌. மனம்மாறுங்கள்‌ என்பது மனந்திரும்புதலைக்‌ குறிக்கும்‌. இருசெற்கள்‌ உள்ளன. அவை “மெத்தனோயா (Metanoia) “எப்பிஸ்த்ரோஃபே” (Epistrophe) ஆகியவையாகும்‌. இவை ஒன்றுக்கு மற்றொன்றாக மாற்றிப்‌ பயன்படுத்தப்‌ படுகின்றது. ஆயினும்‌ இந்த இரண்டு வார்த்தைகளிலும்‌ மிகப்பெரிய வேறுபாடும்‌ உள்ளது. “மெத்தனோயா” என்பது மனமற்றத்தின்‌ உள்ளாராந்த செயல்பாங்கை குறிக்கும்‌. “எப்பிஸ்த்ரோஃபே என்பது மனமற்றத்தின்‌ வெளிப்புற விளைவுகளைக்‌ குறிக்கும்‌. மனமாற்றத்திற்கான அழைப்பை ஒருவர்‌ ஏற்று வாழ்வை மாற்றுவதை குறிக்கும்‌. பாவம்‌ என்ற இருட்டு அறையில்‌ இருந்து வெளியே வந்து “நானே உலகின்‌ ஒளி என்று மனமாற்றத்திற்கான அழைப்பை விடுக்கிறார்‌.

ஏனென்றால்‌ நம்முடைய பாவங்களுக்கு கழுவாய்‌ அவரே: நம்‌ பாவங்களுக்கு மட்டுமல்ல அனைத்து உலகின்‌ பாவங்களுக்கு கழுவாய்‌ அவரே (1 யோவா 2:2). ஏனென்றால்‌ இயசு உயிர்த்த பிறகு நீங்கள்‌ மனம்‌ மாறுங்கள்‌. உங்கள்‌ பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறுவதற்காக ஒவ்வொருவரும்‌ இயேசு கிறிஸ்துவின்‌ பெயரால்‌ திருமுழுக்கு பெறுங்கள்‌ அப்பொழுது தூய ஆவியைக்‌ கொடையாகப்‌ பெறுவீர்கள்‌ (திப 2:38-39). இவற்றை தான்‌ தொடக்கால திருஅவையில்‌ திருத்தூதர்கள்‌ அறிவித்து வந்தார்கள்‌. மனமாற்றம்‌ பெற்று வாழ்வது என்பது கடவுளின்‌ சாயலாக மாறுவது. எனவே தான்‌ பவுலடியார்‌ “இப்பொழுது நாம்‌ அனைவரும்‌ முக்காடு இல்லா முகத்தினராய்‌ ஆண்டவரிடன்‌ மாட்சி பெற்று, அவர்‌ சாயலாக மாற்றம்‌ அடைகிறோம்‌. (2 கொரி 3:18) மனமற்றத்தின்‌ இலக்கு நாம்‌ கடவுளின்‌ சாயலை மீண்டும்‌ பெறுவதே

.
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

நீங்கள் சாட்சிகள்!

‘சான்று பகர்தல்,’ ‘சாட்சியாக இருத்தல்’ என்னும் சொல்லாடல்களை நாம் அதிக முறை கேட்டிருக்கிறோம். ‘சொற்கள் அல்ல, மாறாக, சான்று வாழ்வே நற்செய்திக்கு உகந்தது’ என திருஅவையின் ஏடுகளும் நமக்குக் கற்பிக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் சீடர்களுக்குத் தோன்றுகிற இயேசு, ‘இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்’ என்கிறார். முதல் வாசகத்தில், தூய ஆவியாரின் வருகைக்குப் பின்னர் எருசலேம் நகரில் உரையாற்றுகிற பேதுரு, ‘இதற்கு நாங்கள் சாட்சிகள்’ என அறிவிக்கிறார். இயேசுவின் அழைப்புக்குப் பதிலிறுப்பு செய்கிறார்கள் சீடர்கள்.

முதலில், ‘சாட்சி’ என்னும் சொல்லை விவிலியப் பின்புலத்தில்புரிந்துகொள்வோம்.

(அ) உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துதல்
ரூத்து நூலில், ரூத்தை திருமணம் செய்ய விரும்புகிற போவாசு ஊரின் பெரியவர்களை அழைத்து நிகழ்வுக்குச் சான்று பகருமாறு அமர்த்துகிறார். நடக்கிற ஒன்று உண்மையானது என் ‘சான்று’ பகர்கிறார்கள் இவர்கள் (காண். ரூத் 4:9).

(ஆ) அனுபவித்ததை மற்றவருக்கு அறிவித்தல்

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை வியத்தகு முறையில் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கிறார். சீனாய் மலையில் அவர்களோடு உடன்படிக்கை செய்துகொள்கிறார். தாம் தேர்ந்துகொண்ட மக்கள் தாங்கள் அனுபவித்ததை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்பது ஆண்டவரின் விருப்பமாக இருக்கிறது.

(இ) எச்சரித்தல்

காலப்போக்கில் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவராகிய கடவுளை மறந்து மற்ற கடவுளர்களை வழிபடத் தொடங்குகிறார்கள். கடவுளை விட்டு அவர்கள் தூரமாகச் சென்றபோது இறைவாக்கினர்கள் வழியாக அவர்களை எச்சரிக்கிறார் கடவுள்.

(ஈ) உயிர்துறத்தல்

ஆண்டவராகிய கடவுள்மேல் கொண்ட நம்பிக்கைக்காகத் துன்பம் ஏற்பதும், அவருக்காக உயிர் துறப்பதும் மறைசாட்சியம் எனக் கருதப்படுகிறது.

முதல் மற்றும் இரண்டாவது பொருள்களில், ‘சாட்சி’ என்னும் சொல் இன்றைய நற்செய்தி மற்றும் முதல் வாசகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சீடர்கள் இயேசுவுடைய உயிர்ப்பின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்துபவர்களாகவும், தாங்கள் அனுபவித்ததை மற்றவர்களுக்கு அறிவிப்பவர்களாகவும் மாற வேண்டும்.

சீடர்கள் என்ன அனுபவித்தார்கள்?

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவராகிய இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றுகிறார். உயிர்த்த ஆண்டவரைக் காண்கிற சீடர்கள் மகிழ்ச்சியும் அச்சமும் வியப்பும் கொள்கிறார்கள். தாம் ஆவி அல்ல, மாறாக தமக்கு உடல் இருக்கிறது என்பதை உணர்த்த விரும்புகிற இயேசு, பொறித்த மீன் துண்டு ஒன்றை அவர்கள் முன்பாக உண்கிறார். தொடர்ந்து, மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறக்கிறார். தாங்கள் கண்ட அனைத்தையும் மற்றவர்களுக்கு அறிவிக்கும் சாட்சிகளாக அவர்களை அறிவிக்கிறார்.

‘இயேசு இல்லை’ என்னும் நிலையிலிருந்து ‘இயேசு இருக்கிறார்’ என்னும் நிலைக்குக் கடந்து போகிறார்கள் சீடர்கள். இயேசு உயிர்த்துவிட்டார் என்று தாங்கள் கேள்வியுற்றது வதந்தி அல்ல, மாறாக, உண்மை நிகழ்வு என்பதைத் தங்கள் கண்களால் கண்டு உறுதி செய்துகொள்கிறார்கள். தாங்கள் வெறும் சீடர்கள் அல்ல, மாறாக, சாட்சிகள் என்னும் புதிய அழைப்பைப் பெற்றுக்கொள்கிறார்கள். ‘பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்’ என அறிவிக்கப்பட வேண்டும் என்னும் கட்டளையைப் பெறுகிறார்கள்.

சீடர்கள் எப்படி சான்று பகர்ந்தார்கள்?

‘இதற்கு நீங்கள் சாட்சிகள்’ என்னும் அழைப்பை அவர்கள் பெற்றாலும், தூய ஆவியாரின் வருகைக்குப் பின்னரே ஆற்றல் பெற்றவர்களாக வெளியே சென்று அறிவிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஓர் அறிவித்தல் நிகழ்வையே இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். எருசலேமில் கூடியிருந்த மக்களை நோக்கி உரையாடுகிற பேதுரு, ‘வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்’ என மக்களின் தவற்றைச் சுட்டிக்காட்டுவதோடு, அவர்களுடைய அறியாமையின் பொருட்டு அவர்கள் ஆற்றிய செயலுக்கு தீர்வு உண்டு என்று அறிவித்து, மனமாற்றத்தை முன்மொழிகிறார்கள்.

இயேசுவிடம் திரும்பி வருவதே மனமாற்றம் என்னும் திருத்தூதர்களின் அறிவிப்பை இன்றைய இரண்டாம் வாசகத்தில் உறுதிப்படுத்துகிறார் யோவான். ஏனெனில், இயேசுவே பாவக்கழுவாயாக இருக்கிறார்.

நாம் சான்று பகர்வது எப்படி?

(அ) சாட்சிகள் என்பவர்கள் அனுபவம் பெற்றவர்கள்
நீதிமன்ற வழக்காற்றில், ‘சாட்சி’ என்பவர் நிகழ்ந்த ஒன்றை நேரில் கண்டவராக இருக்கிறார். நிகழ்வை அவர் அனுபவித்தவராக இருக்கிறார். ‘இவற்றுக்கு’ என்று இயேசு சொல்வது வெறும் உயிர்ப்பு நிகழ்வுக்கு மட்டுமல்லாமல், சீடர்கள் தொடக்கமுதல் அனுபவித்த அனைத்துக்கும் என்று புரிந்துகொள்ளலாம். இயேசு கிறிஸ்து அனுபவம் பெறுபவர்களே அவருக்குச் சான்று பகர முடியும். அனுபவம் என்பது வெறும் நம் எண்ணத்தில் தோன்றுகிற எண்ணம் அல்ல, மாறாக, நம்மில் நிகழ்கிற ஓர் அடிப்படை மாற்றம். ஒரு சாட்சி எந்த அளவுக்கு நிகழ்வில் பங்கேற்கிறாரோ, அந்த அளவுக்கு மட்டுமே அவரால் சான்று பகர முடியும். இயேசு என்னும் நபருடைய விழுமியங்கள், மதிப்பீடுகள், பண்புகள், அவர் கொண்டு வருகிற மீட்பு அனைத்தையும் நாம் அனுபவித்தால் நம் சாட்சியம் ஆழமானதாகவும் மேன்மையாகவும் இருக்கும். ஆண்டவராகிய இயேசு நம் மனக்கண்களைத் திறந்தால்தான் நாம் அவரை அறிந்துகொள்ள முடியும். இன்றைய பதிலுரைப்பாடலில் திருப்பாடல் ஆசிரியரும் (காண். 4), ‘உமது முகத்தின் ஒளி எம்மீது வீசச் செய்யும்!’ என இறைவேண்டல் செய்கிறார். அவருடைய முகத்தின் ஒளி நம்மீது விழத் தொடங்கும்போது நாம் அவரை அறியத் தொடங்குகிறோம்.

(அ) சாட்சிகள் என்பவர்கள் பாலங்கள்

சாட்சிகள் என்னும் நிலையில் திருத்தூதர்கள் இயேசுவுக்கும் மற்றவர்களுக்கும் இடையே பாலங்களாக, இணைப்புக் கோடுகளாக நிற்கிறார்கள். மற்றவர்களை இயேசுவை நோக்கியும், இயேசுவை மற்றவர்களிடமும் கொண்டு செல்வது அவர்களுடைய பணியாக இருக்கிறது. நீதிமன்ற வழக்காற்றில் நீதிமன்றத்துக்கும் நிகழ்வுக்கும் இடையே உள்ள பாலமாக இருக்கிறார்கள் சாட்சிகள். நாம் பெற்றுள்ள இயேசு அனுபவத்தைப் பல நேரங்களில் நமக்கு நாமே வைத்துக்கொள்கிறோம். அல்லது, நம் வாழ்வை மேன்மைப்படுத்திக்கொள்ளவும், நம்மையே வலுப்படுத்திக்கொள்ளவும் அதைப் பயன்படுத்துகிறோம். இயேசு அனுபவம் என்பது வெளியே அறிவிக்கப்பட வேண்டியது. இப்படிப்பட்ட அறிவித்தால்தான் இன்றைய முதல் வாசகத்தில் நடந்தேறுகிறது.

(இ) சாட்சிகள் என்பவர்கள் வெளியே நகர்பவர்கள்

சாட்சிகள் என்பவர்கள் இயங்குபவர்கள். வெறும் அறைக்குள் மூடிக்கிடந்தவர்களை வெளியே நகர்த்துகிறார் இயேசு. வெளியே நோக்கி நகர்வதில்தான் வாழ்வு உண்டு என அறிவிக்கிறார். மூடிய அறைக்கு உள்ளே இயேசு நுழைந்ததற்கான காரணம், அந்த அறையிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்காகவே. குழந்தைகளாக நாம் கொண்டிருந்த, வளர வளர நாம் இழந்த ஒரு பண்பு நகர்தல். சிறு குழந்தைகளை யாரும் தங்கள் கட்டுக்குள் வைக்க முடிவதில்லை. அவர்கள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். கையை இறுகப் பிடித்தாலும் நழுவி ஓடுகிற அந்த நகர்தல் நம் மனித வாழ்வுக்கு அவசியம்.

‘இயேசு இறந்துவிட்டார், எல்லாம் முடிந்துவிட்டது’ என்று தேங்கி நின்ற தம் சீடர்களுக்குத் தோன்றுகிற இயேசு, தாம் உயிர்த்துவிட்டதை அவர்களுக்கு அறிவிப்பதோடு, அவர்கள் அடுத்துச் செய்ய வேண்டியவற்றையும் அவர்களுக்குக் கட்டளையிடுகிறார். ‘நீங்கள் ஏன் ஐயம் கொள்கிறீர்கள்? நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்?’ எனக் கேட்கிற அவர், அவர்கள் முன்பாக வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவர்களிடமிருந்து வாங்கி உண்கிறார் – என்னதான் தங்கள் தலைவர் இறந்துவிட்ட சோகம் இருந்தாலும், சீடர்கள் மீன் பொறித்துத்தான் வைத்துள்ளார்கள். இந்த மனப்பாங்கைத்தான் ஆண்டவர் விரும்புகிறார் – உண்ணுதல் என்பது விவிலியத்தில் தொடர்ந்து பயணித்தலுக்கான அடையாளம். விலக்கப்பட்ட கனியை உண்டபின்னர்தான் முதற்பெற்றோரின் வாழ்வு நகரத் தொடங்குகிறது. அவர்கள் அக்கனியை உண்ணவில்லை என்றால், இன்று நாம் ஒரு தோட்டதிற்குள்ளேயே திரிந்துகொண்டிருப்போம்! சோர்ந்து போன எலியாவுக்கு உணவு தருகிற ஆண்டவராகிய கடவுள், ‘எழுந்து உண். நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்’ எனக் கட்டளையிடுகிறார் (காண். 1 அர 19:7).

தம் சீடர்களின் மனக் கண்களைத் திறந்து அவர்கள் மறைநூலைப் புரிந்துகொள்ளத் தூண்டுகிற இயேசு, ‘மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவ மன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்’ என அவர்களை நகர்த்துகிறார்.

எங்கே எல்லாம் முடிந்தது என நினைத்தார்களோ, அங்கேயே – எருசலேமில் – தங்கள் பணியை அவர்கள் தொடங்க வேண்டும் எனக் கட்டளையிடுகிறார்.

இறப்பு, இழப்பு, நோய், மற்றவர்களின் கண்டுகொள்ளாத்தன்மை, சோர்வு, முதுமை போன்றவை நம்மை உறையச் செய்யும்போது, இயேசு உண்ட பொறித்த மீன் துண்டை நினைவில் கொள்வோம். எழுந்து உண்போம். நமக்குக் கொடுக்கப்பட்ட பணியை நினைவில் கொள்வோம். தொடர்ந்து நகர்வோம். நம்மைக் காண்கிற எவரும் நம்மில் கடவுளைக் காணுமாறு நம் வாழ்க்கையைத் தகவமைத்துக்கொள்வோம்.

‘இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்!’ என்னும் இயேசுவின் கட்டளை ‘இதற்கு நாங்கள் சாட்சிகள்’ என்னும் அறிவிப்பாக மாறுவதே நகர்வு, இயக்கம், வாழ்வு.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser