மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

மரியா இறைவனின் அன்னை
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எண்ணிக்கை 6: 22-27 | கலாத்தியர் 4: 4-7 | லூக்கா 2: 16-21

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


-->

இறைவனின் அன்னையாகிய தூய கன்னி மரியா பெருவிழா

ஆண்டின் முதல் நாளாம் இன்று நாம் மரியாவை கடவுளின் தாய் என்ற மகிமையில் உயர்த்தி இந்தப் புதிய ஆண்டையே தொடங்குகின்றோம். நாசரேத் என்ற சிற்றூரிலே வாழ்ந்த சாதாரண ஏழைப் பெண் மரியாவை ஏன் உயர்ந்த நிலையிலே இன்று திருச்சபை முன் நிறுத்துகின்றது? கடந்த வாரத்தில் சரித்திர நாயகனாகப் பிறந்த இயேசுவின் சரித்திரப் பிறப்பை கிறிஸ்மஸ் விழா என்று அழைத்துக் கொண்டாடினோம். ஆனால் இன்று உண்மையாகவே கிறிஸ்மஸ் கொண்டாடிய முதல் படைப்பை திருச்சபை முன் வைக்கின்றது.

கிறிஸ்மஸ் என்றாலே நம் நினைவுக்கு வருபவை கிறிஸ்மஸ் வாழ்த்துக் கடிதம், கோயில் மின் அலங்காரம், கேரல், குடில், புதுப்புதுப் பாடல்கள் - புத்தாடை உடுத்திப் பாதித் தூக்கத்தில் நல்லிரவு பூசை, விருந்து இன்னும் பல. ஆனால் குடிலில் பிறந்த இயேசுவை மறந்தே கிறிஸ்மஸ் கொண்டாடினால் என்ன அர்த்தம்? கிறிஸ்து நம்மில் பிறக்கின்ற நாள் தான் நமக்குக் கிறிஸ்மஸ். கிறிஸ்து முதன் முதலில் பிறந்தது மரியா மூலமாக - இதற்குக் காரணமாக மரியாவில் விளங்கியவை இரண்டு, ஒன்று, மரியா ஆண்டவருக்கு அடிமையானாள் (லூக். 1:38). இரண்டு, ஆவியானவரின் ஓவியம் ஆனாள் - பரிசுத்த ஆவி அவள் மீது நிழலிட்டார். இந்த இரண்டு நிகழ்ச்சியும் மரியா வாழ்க்கையில் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனிடத்திலும் நடைபெறாமல் கிறிஸ்து பிறக்க முடியாது. வேறு எந்தக் குறுக்கு வழியும் (Short cut way) கிடையாது. முதலாவதாக இயேசுவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு மனம் திரும்பி அவருக்கு அடிமையாக வேண்டும். உலகத்திலே பணம், பதவி, பட்டம், ஆடை, ஆபரணம், குடி, சூதாட்டம், சிற்றின்பம், மோகம், காமம், இச்சை, சினிமா போன்ற பலவற்றுக்கு அடிமையாக வாழ்வதிலிருந்து விடுதலை பெற்றால் நம்மில் கிறிஸ்து பிறப்பார். அன்றிலிருந்து நம் எண்ணங்களில், உணர்வுகளில், அறிவுகளில், திறமைகளில், பேச்சில், செயலில், பழக்க வழக்கங்களில் எல்லாம் இயேசு இருப்பார். மரியா கடவுளின் வார்த்தையைக் கேட்டாள், விசுவசித்தாள். அதை உள்ளத்தில் இருத்தினாள் - சிந்தித்து வந்தாள், கீழ்ப்படிந்தாள். அதன்படி நடந்தாள். இதைத் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தாள்.

எனவே மரியாவின் வாழ்வு ஒரு விசுவாசப் பயணம் என அழைத்தால் மிகையாகாது. துன்பம், துயரம், கலக்கம் எத்தனையோ வந்தன. அத்தனையும் அவள் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்து வந்தாள் (லூக். 2:19). ஏனெனில் இறைவனாகிய எசமானுக்குத் தன்னையே அடிமையாக்கிக் கொண்டவள். எனவே ஆவியானவர் தான் விரும்பும் வழியில் உருவாக்கும் ஓவியமாக படைக்கப்பட்டவள் மரியா. ஆம்! மரியாவை ஒரு புதுமைப் பெண்ணாக, புரட்சிப் பெண்ணாக, புத்துலகுப் பெண்ணாக, புத்தெழுச்சிப் பெண்ணாக, புதிய ஏற்பாட்டுப் பெண்ணாக ஏற்றிப் போற்றுகின்றோம். அதே நேரத்திலே இன்றைய சமுதாயத்திலே பெண்களின் நிலைமையை எண்ணிப் பார்க்கின்றோமா? இன்றைய விஞ்ஞான முன்னேற்ற நிலையிலே இன்றையப் பெண்கள் விலை பொருளாக வெளி மார்க்கெட்டிலே விற்கப்படும் கால்நடைகளைப் போல் வரதட்சணைக்கு அடிமையாக்கப்பட்டவர்களாக, ஆண்களுக்குப் பெண்கள் அடிமை என்ற நிலையிலே, ஆண்களின் காமக் கண்களில் அகப்பட்டு கற்பிழந்து தவிக்கும் நிலையைச் சிந்திக்கிறீர்களா? கடவுள் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார். இருவரும் இறைவனின் சாயல் என்பதை மறந்து விடாதீர்கள்.

2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் தியோரலா கிராமம். P.U.C படித்த ரூப் கன்வர் என்ற பெண்மணி கல்யாணம் முடித்து எட்டு மாதம் வாழ்ந்து இறந்த தன் கணவன் பால்சிஸ்கோடு உடன்கட்டை ஏற - அவளை விறகு கட்டையில் ஏற்றி உயிரோடு எரித்த போது 4000 பேர் கூடி நின்று 'சதி மாதா ஹீ ஜெய்' என்று ஆவேசத்துடன் கோசமிட்டது கொடுமையில்லையா?

கடவுள் நம்மோடு இருக்கின்றார்

 • குடிலில் குழந்தை இயேசுவைக் கண்ட ஒரு சிறுவன் கேட்ட கேள்வி. ஏன் அப்பா இந்த குழந்தை அழாமல் இருக்கிறான்? நம்ம தம்பி தினமும் அழுகிறானே - இவன் கையையும், காலையும் ஆட்டக் காணோமே. தகப்பனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை . அப்பா இது சுரூபம் என்றார். இவன் செத்துவிட்டானா? என்ன பதில் நீங்கள் சொல்லுவீர்கள்?
 • கடலில் சந்தித்த இரு மீன்கள். சிறிய மீன் கேட்டது: "கடல், கடல் என்று சொல்லுகிறார்களே அது எங்கே இருக்கிறது? உனக்குத் தெரிந்தால் சொல்.' 'நீ இருப்பதுதான் கடல்.' 'இல்லை நான் இருப்பது தண்ணீர். நான் கடலை அல்லவா தேடுகிறேன்.'

தாயின் இதயத்தை வெட்டித் தரும்படி காதலி கேட்கிறாள் தன் காதலனிடம். அவனும் அதை வெட்டி எடுத்துக்கொண்டு வருகிறான். கீழே அவன் விழ, மகனே பாதையைப் பார்த்து போ என்று அந்த இதயம் பேசுகிறது.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

மரியா: கருணை மழை

நாம் வளமுடன் வாழ வழி என்ன?
அவன் ஓர் அற்புத ஆயன், ஆட்டு இடையன். அவனிடமிருந்த ஒவ்வோர் ஆடும், என் ஆயன் நல்லவன். எனக்கென்ன குறைவு? நீண் ட பசும்புல் வெளி சேர்ப்பான் ; நீர்நிலைகளுக்கெல்லாம் என்னை அழைத்துச் செல்வான்; காரிருள் சூழும் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் எனக்குப் பயமே இல்லை! என்று பாடியது.

இப்படிப்பட்ட ஆயன் ஒருநாள் பொழுது சாயும் வேளையிலே மேய்ச்சலுக்குப்பின் தன் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பினான். ஓர் ஆற்றங்கரை ஓரமாக ஆடுகள் வரிசையாகச் சென்றுகொண்டிருந்தன. ஆறு நிறைய வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. அப்பொழுது நடக்கக்கூடாத ஒன்று நடந்தது. திடீரென ஒரு தாய் ஆடு தவறி ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. அது ஆற்று வெள்ளத்திலே அடித்துச் செல்லப்பட்டது. பாவம் அந்த ஆடு! ஆற்று நீரை எதிர்த்து நீந்தியது ; அதனால் எதிர்நீச்சல் போட முடியவில்லை ! அதன் உயிருக்கு ஆபத்து அதிகரித்துக்கொண்டே சென்றது. அதைக் காப்பாற்ற ஆயனின் மனம் வழிதேடி அலைந்தது. அவனுக்கு நீச்சல் தெரியாது.

நிலைகுலைந்து நின்ற அந்த ஆயனின் மனத்திலே ஓர் அருமையான எண்ணம் எழுந்தது. பக்கத்தில்தான் அவன் வீடு இருந்தது. வீட்டுக்கு ஓடினான். அந்த ஆடு குட்டிகளை ஈன்று சிலநாள்கள்தான் ஆகியிருந்தன. அதன் குட்டிகளில் ஒன்றைத் தூக்கிக்கொண்டு ஆற்றங்கரைக்கு ஓடிவந்தான். கரையிலே நின்றவண்ணம் அந்த ஆட்டுக்குட்டியைக் கத்தவிட்டான்! குட்டியின் கதறல் சத்தம் தாய் கட்டிகள் செவிகளில் விழுந்தது. அவ்வளவுதான்! அதற்கு எங்கிருந்துதான் ஆற்றல் வந்ததோ! அவ்வளவு பெரிய ஆற்றின் தண்ணீரை எதிர்த்து நீந்தி ஓரிரு நிமிடங்களில் கரையை அடைந்துவிட்டது.

இந்த உவமை நமக்கு உணர்த்தும் உண்மை என்ன?

ஒரு குழந்தையின் அழுகைக்கு அதன் தாயை தன் பக்கத்தில் கொண்டு வரும் ஆற்றல், சக்தி, வல்லமை உண்டு! -நமது அனுபவத்தைச் சற்று அலசிப்பார்ப்போம். நாம் குழந்தைகளாக இருந்தபோது, நமது தாயை நம் பக்கம் கொண்டுவரப் பயன்படுத்திய பயங்கர ஆயுதம் எது? - அழுகை! எங்கெல்லாம் குழந்தையின் அழுகுரல் கேட்கின்றதோ அங்கெல்லாம் தாய் இருப்பாள்! தாய்க்கெல்லாம் தாயாக விளங்குபவர் கடவுளின் தாய் - நமது அன்னை கன்னிமரியா! இவர் ஒருபொழுதும் கடவுளின் குழந்தைகள் (இரண்டாம் வாசகம்) அழுதபோது கைகட்டி நின்றவர் இல்லை!

லூக் 1:26-38 : அன்று உலகம் அழுதது ! உலக மக்கள், எங்களை நோயிலிருந்து காப்பாற்ற எங்களுக்கொரு மீட்பர் வேண்டும்! எங்களைப் பாவத்திலிருந்து காப்பாற்ற எங்களுக்கொரு மீட்பர் வேண்டும். எங்களை இயற்கையின் சீற்றத்திலிருந்து காப்பாற்ற எங்களுக்கொரு மீட்பர் வேண்டும் என அழுதனர்.

அங்கே மரியா தோன்றி உலக மீட்பராம் இயேசுவின் தாயானார் (நற்செய்தி).

யோவா 2:1-11 : கானாவில் திருமண வீட்டார் அழுதனர். அங்கே அன்னை மரியா தோன்றி தம் மகன் இயேசுவின் வழியாகப் புதுமை செய்து அந்தக் கல்யாண வீட்டாரின் கண்ணீரைத் துடைத்து, அனைவருக்கும் அருளும், அமைதியும் கிடைக்க வழி வகுத்தார் (முதல் வாசகம்).

யோவா 19:25-27 : மீண்டும் உலக மக்கள் அழுதார்கள் ! எங்கள் அம்மையும், அப்பனுமாயிருந்த இயேசு இறந்து விட்டாரே! இனி எங்களை வாழவைக்கப் போவது யார்? என்று அழுதனர். அன்னை மரியாவோ : இதோ நான் உங்கள் தாய் - நானிருக்கப் பயமேன் என்றார்.

மன்றாட்டுக்களில் பலவகை உண்டு! அதில் ஒருவகை அழுது மன்றாடுவது, அழுது செபிப்பது. அழுகைக்கு நமது தேவைகளை ஆணித்தரமாக மாதாவிடம், கடவுளின் தாயிடம். நமது அன்னை மரியாவிடம் எடுத்துச் சொல்லும் ஆற்றல் உண்டு.

அழுது மன்றாடுவோம் : அன்னைமரியிடமிருந்து அனைத்து வரங்களையும் பெற்று வளமுடன் வாழ்வோம்.

மேலும் அறிவோம் :

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ(டு)
ஐந்துசால்(பு) ஊன்றிய தூண் ( குறள் : 983).

பொருள் : அனைவரிடமும் அன்பு பாராட்டுதல், இழிந்த செயல்புரிய நாணுதல், பொதுநலத் தொண்டில் ஈடுபடுதல், பிறரிடம் பரிவு இரக்கம் கொள்ளுதல், உண்மையே பேசுதல் ஆகிய ஐந்து செயல்களும் சால்பு என்னும் நிறை பண்பாகிய மாளிகையைத் தாங்கும் பெரிய தூண்களாகும்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஒரு தாய் ஒரு கிராமத்தில் ஒரு குடிசை வீட்டில் தனது இரண்டு வயது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரைக் கருந்தேள் ஒன்று கொட்ட, அவர் வலியால் துடித்தார். வலி நின்றவுடன் தன் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி, “கடவுளே! இக்கருந்தேள் என் குழந்தையைக் கொட்டாமல் என்னைக் கொட்டியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன் ” என்றார். இந்நிகழ்வு ஒரு தாயின் ஈடு இணையற்ற அன்பை எடுத்துக்காட்டுகிறது.

தாயன்புக்கு நிகரான அன்பு இவ்வுலகில் வேறெதுவும் இல்லை. "ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்; அம்மாவை வாங்க முடியுமா?” என்று கேட்கின்ற திரைப்படப் பாடல். ஒரு சாதாரண தாயின் மகிமை இவ்வளவு என்றால், கடவுளையே ஈன்றெடுத்த தூய கன்னிமரியாவின் மகிமையை என்னவென்பது! புனித பொனவெந்தூரா என்பவர் மரியாவின் மகிமையைப் பின்வருமாறு கூறியுள்ளார்: “கடவுள் விரும்பியிருந்தால் இப்பொழுது நாம் காணும் விண்ணகத்தைவிட மேலான விண்ணகத்தையும் இப்போதுள்ள மண்ணகத்தைவிட மேலான மண்ணகத்தையும் அவரால் படைத்திருக்க முடியும். ஆனால் கன்னி மரியாவைவிட மேலான ஒரு தாயை அவரால் படைக்க முடியாது.” மரியன்னை அழகின் முழுமை; அருளின் நிறைவு; மாசுபடிந்த மனித குலத்தின் மங்காத மகிமை.

புத்தாண்டின் முதல் நாளாகிய இன்று திருச்சபை, “தூய கன்னி மரியா இறைவனின் அன்னை” என்ற பெருவிழாவைக் கொண்டாடுகிறது. கிறிஸ்துவிடம் மனித இயல்பு, இறை இயல்பு ஆகிய இரண்டு இயல்புகள் இருப்பினும், அவர் ஒரே ஆள். தொடக்கத்திலிருந்தே கடவுளுடன் கடவுளாக இருந்த அவர் வரலாற்றில் மனிதராகப் பிறந்தார். இந்த ஒரே ஆளாகிய கிறிஸ்து கடவுளாக இருப்பதால், அவரை ஈன்றெடுத்த அன்னை கன்னி மரியா உண்மையிலே கடவுளின் தாய் என்பதை விசுவாச கோட்பாடாக கி.பி. 431-ஆம் ஆண்டு எபேசு பொதுச்சங்கம் அறிக்கையிட்டுள்ளது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலில்,”காலம் நிறைவேறியபோது ... கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக ... அனுப்பினார்” (கலா 4:4-5) என்று கூறுகிறார். மரியாவைப் பெண்' என்று குறிப்பிடுகிறார். கானாவூர் திருமணத்தில் கிறிஸ்து மரியாவைப் பெண்மையின் மேன்மையைச் சுட்டிக்காட்டும் 'அம்மா' (யோவா 2:3) என்று அழைக்கிறார். அவ்வாறே அவர் சிலுவையில் தொங்கியபோதும் சிலுவை அடியில் நின்று கொண்டிருந்த மரியாவை ' பெண்ணே' (யோவா 19:26) என்று அழைக்கிறார். கிறிஸ்து தமது தாயை 'அம்மா' என்று என அழைத்தார்?

புகழ்பெற்ற பேச்சாளர் ஒருவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஒருவர் அடிக்கடி தும்மிக் கொண்டிருந்தார். “ஏன் அவர் அடிக்கடி தும்முகிறார்?” என்று அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் அவரைக் கேட்டதற்கு அவர் கூறிய பதில் : "பேச்சாளர் சும்மாவா பேசுகிறார்? பொடிவைத்துப் பேசுகிறார்.” கிறிஸ்துவும் தமது தாயை 'அம்மா' என்று பொடி வைத்து அழைத்தார். இவ்வாறு அழைத்ததன் மூலம் கிறிஸ்து மனித குலத்தின் முதல் பெண்ணாகிய ஏவாளுடன் மரியாவை ஒப்பிட்டு அவரைப் புதுமைப் பெண்ணாக, புதிய ஏவாளாகக் காட்டுகிறார்.

ஏவாளை ஏமாற்றிய அலகையிடம் கடவுள் கூறினார்: “உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்” (தொநூ 3:15). தொடக்க நூலில் குறிப்பிடப்பட்டுள்ள இப்பெண்ணாகிய ஏவாவுடன் மரியாவை ஒப்பிட்டு அவரைப் புதிய ஏவாள் என்றழைப்பது திருமறைத் தந்தையர்களின் மரபு.

புனித பெர்னார்து கூறுகிறார்: “பழைய பாம்பு தன் சாவுக்குரிய நஞ்சை ஏவாள் வழியாக மனிதருக்குள் புகுத்தியது. மீட்புத்தரும் மாற்றுமருந்தை மனிதருக்குத் தயாரித்துத் தந்தார் மரியா. ஏவாள் நம்மைக் கெடுத்தாள். மரியா நம்மை உய்வித்தார்."

ஏவாள் கடவுளுடைய வார்த்தையை நம்பவில்லை. ஆனால் மரியா கடவுளுடைய வார்த்தையை நம்பி, கடவுளுக்கு முற்றிலுமாகத்தம்மை ஒப்புவித்தார். மரியாவின் வாழ்வு முழுவதும் துணிச்சலான ஒரு நம்பிக்கைத் திருப்பயணம். மரியாவின் வாழ்வை நிர்ணயித்த இறையியல் சூத்திரம்: “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை ” (லூக் 1:37). மரியன்னையின் அடிச்சுவடுகளில் நடந்து, அவரின் கரம்பிடித்து, இப்புத்தாண்டில் நமது நம்பிக்கைப் பயணத்தைத் தொடர்வோம். இறை நம்பிக்கையால் மட்டுமே நாம் இவ்வுலகை வெல்ல முடியும். “கடவுளிடமிருந்து பிறந்த அனைத்தும் உலகை வெல்லும். உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே” (1 யோவா 5:4)./p>

ஓர் அறிஞரிடம் எந்தப் பிரச்சினையைச் சொன்னாலும் அவர் கூறிய ஒரே தீர்வு: “இதுவும் கடந்து போகும்.” புனித அவிலா தெரசாவின் அறிவுரை: “எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்; எல்லாம் கடந்துபோகும்; கடவுள் ஒருவரே என்றும் மாறாதவர்.” எனவே துணிவு கொள்வோம்; துன்பத்தை விரட்டி அடிப்போம். துன்பத்தைக் கண்டு கலங்காதவர்கள் துன்பத்தையே கலங்கடிக்கச் செய்வர் என்கிறார் வள்ளுவர்.

இடும்பைக்க இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் (குறள் 623).

இயேசு பிறந்த எட்டாம் நாள் அவருக்கு இயேசு என்று பெயரிட்டார்கள் (லூக் 2;21) என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது. நாம் மீட்படைய இயேசுவின் பெயரைத்தவிர வேறு எப்பெயரும் அருளப்படவில்லை (திப 4:12). இயேசுவின் பெயரைச் சொல்லி இப்புத்தாண்டைத் தொடங்குவோம். “ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையுைம் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே” (திபா 124:8). இந்த ஆண்டு முழுவதும் கடவுள் நம்மைக் கண்ணின் மணியெனக் காப்பாராக. அவரது பிரசன்னம் நமக்கு முன்னும் பின்னும் அரணாக அமைவதாக. இந்த ஆண்டு முழுவதும் நம்மை வழிநடத்த வேண்டிய அருள்வாக்கு: “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை.” இனிய நல் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

முயற்சியும் வெற்றியும்

ஒருநாள் கடவுள் உலகைப் பார்க்க வந்தார். ஒரே ஏமாற்றம், "மகிழ்ச்சியோடு இருப்பதற்கன்றோ மனிதர்களைப் படைத்தோம். ஆனால் எவர் முகத்திலும் மலர்ச்சி இல்லையே ஏன்?"

தொடங்கினார் கடவுள், செயலில் இறங்கினார். “இனி வெற்றியைத் தவிர மனித முயற்சிகள் வேறு எதையும் சந்திக்காதபடி புதிய உலகை - இப்போதையதை விடச் சிறந்த உலகைப் படைத்தார். அங்கே இரவு பகல் என்றில்லாமல் எப்போதும் சூரிய ஒளி. எங்கும் ஒளிமயம். மரமெல்லாம் பூ, காய், கனி... பூவிலிருந்து காய், காயிலிருந்து கனி என்றெல்லாம் இனி காத்திருக்கத் தேவையில்லை. எங்கும் கனி மயம். எங்கும் மலர் மயம். ஆண் பெண் அத்தனைபேர் உள்ளத்திலும் கரைபுரண்டது உற்சாகம்.

கொஞ்ச காலம்தான். கடவுள் மீண்டும் வந்தார். திரும்பவும் மனிதர் முகமெல்லாம் சோக இரேகைகள்! காரணம்? உறக்கமின்றித் தவிப்பு. 24 மணி நேரமும் சூரிய ஒளி என்றால் எப்படித் தூக்கம் வரும்? ஆளுக்கு ஒரு போர்வையைக் கொடுத்து அதற்குள் புகுந்து தூங்குங்கள் என்று சொன்னார் கடவுள்.

மனிதனுக்கு உறக்கமும் வரவில்லை. மகிழ்ச்சியும் வரவில்லை. "ஓடி ஆடி விளையாடுங்கள். உற்சாகம் பிறக்கும்” என்ற போது உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி கடவுளின் நினைவுக்கு வந்தது. ஜப்பான் தென் கொரியா என்று புறப்பட்டு விட்டார். அங்கோ விளையாட்டு மைதானங்களில் இரசிகர்கள் தலையில் வைத்த கையோடு எதையோ வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தனர். வீரர்களோ முழங்காலில் முகத்தைப் புதைத்து எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தனர். “எல்லாருக்கும் என்ன ஆச்சு?” கடவுள் குழம்பிப் போனார். அப்போது வீரன் ஒருவன் முறுமுறுத்தது கடவுளின் காதில் விழுந்தது: “எதிரி தோற்கவில்லையென்றால் நான் எப்படி வெற்றி பெறுவது?".

தோல்வியினால்தான் விளையாட்டுக்கு அழகு
இரவினால்தான் விடியலுக்கு அழகு
போராட்டத்தினால்தான் வெற்றிக்கு அழகு

வெற்றியைத் தவிர மனித முயற்சிகள் வேறு எதையும் சந்திக்காதபடி... அப்படி ஓர் உலகம்... இலட்சியமானதன்று.
வெற்றி அடைவதல்ல மகிழ்ச்சி
மகிழ்ச்சியாக இருப்பதே வெற்றி.

எனவே பலவீனமான உன்னை ஏற்றுக்கொள். பாவியான உன் அயலானை ஏற்றுக்கொள். துன்பமான சூழலை ஏற்றுக்கொள். அதுதான் கடவுளுக்குக்கூட மகிமை சேர்க்கும்!

“என் அருள் உனக்குப் போதும் ஏனெனில் மனித வலுவின்மையில்தான் என் வல்லமை சிறந்தோங்கும்” என்ற ஆண்டவரின் வாக்குறுதிக்கோ “என் வலுவின்மையிலும் இகழ்ச்சியிலும் இடரிலும் இன்னலிலும் நெருக்கடியிலும் கிறிஸ்துவை முன்னிட்டு நான் அகமகிழ்கின்றேன். ஏனெனில் நான் வலுவற்றிருக்கும் போது வல்லமை பெற்றவனாய் இருக்கிறேன்” என்ற திருத்தூதர் பவுலின் வாழ்க்கை அனுபவத்துக்கோ (2 கொரி.12:9,10) வேறு எப்படி விளக்கம் காண்பது?

டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை ஸ்டெஃபி கிராபிடம் செய்தியாளர் ஒருவர்: “நீங்கள் ஆடிய ஆட்டங்களிலேயே எதைச் சிறப்பானதாகக் கருதுகிறீர்கள்? அவர் சொன்ன பதில்: “மார்ட்டினா நவரத்திலோவாவோடு விளையாடிய ஓர் ஆட்டம்தான் மிகச்சிறப்பாக அமைந்தது. ஆனால் அதில் நான் தோற்றிருந்தேன்". தோல்வியில் கூட சிறப்பை, அழகைக் காணும் இரசனை. அழகான தோல்வி!

தோல்வி என்பது இழிவானது அல்ல. பாடம் புகட்டுவது. ஒருவர் தன்னுடைய நண்பரைப் பார்க்க ஆர்வத்தோடு புறப்பட்டுப் போனார். ஒரே மழை - சேறு - சகதி.... தரையில் வழுக்கி வழுக்கி விழுறாப்போல ஆயிட்டுது. எப்படியோ ஒரு மாதிரியாப் போய்ச் சேர்ந்தார். சேர்ந்ததும் சொன்னார்: “இங்கே வந்து சேருவதற்குள்ளே படாதபாடு பட்டுட்டேன். ஓர் அடிமுன்னே போனா நாலு அடி பின்னாலே சறுக்குது”.

அதைக் கேட்டதும் நண்பருக்கு ஆச்சரியம் “அது எப்படிங்க..... ஒரு அடி முன்னேறினால் நாலு அடி சறுக்கிட்டுது என்கிறீங்க.... அப்புறம் எப்படி இங்கே வந்து சேர்ந்தீங்க?” என்று கேட்டார்.

“அது ஒண்ணும் பெரிது இல்லீங்க... நான் உடனே திரும்பி எங்க வீட்டுக்குப் போறதுக்கு முயற்சி பண்ணினேன்..... அதனாலே இங்கே வந்து சேர்ந்திட்டேன்” என்றார்.

ஒருவர் புத்தாண்டு வாழ்த்துக்கூற எப்போதும் தயங்குவார். காரணம் கேட்டால் “புதிய ஆண்டு வருகிறது என்றாலே நம் ஆயுளில் ஓர் ஆண்டு குறைகிறது என்றுதானே பொருள். உங்கள் ஆயுளில் ஓர் ஆண்டு குறைய வாழ்த்துகிறேன் என்றால் எப்படி?" என்பார்.

நமது பார்வைதான் பொருள் கொடுக்கும் “முன்பு நடந்தவற்றை மறந்து விடுங்கள். முற்கால நிகழ்ச்சி பற்றி சிந்திக்காதிருங்கள். இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன். இப்பொழுதே அது தோன்றிவிட்டது. நீ அதைக் கூர்ந்து கவனிக்க வில்லையா? பாலை நிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன். பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன்” (எசா.43:18,19).

29.12.2003 புதுதில்லியில் 2002ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடந்தது. அதில் “கன்னத்தில் முத்தமிட்டால்” என்ற திரைப்படத்தில் சிறந்த பாடலுக்காக வைரமுத்து விருது பெற்றார். அவர் சொன்னது: “விருதுகளால் நான் என்றும் நிறைந்து போக மாட்டேன். இன்னும் நான் கேட்பதெல்லாம் கடக்க நிறையத் தூரங்களும், பறக்கப் புதிய சிறகுகளும் தான்!”

ஆம், நல்லார்க்கு நன்மைகள், வல்லார்க்கு வாய்ப்புகள், எல்லார்க்கும் இன்பங்கள் ஏந்தி வரட்டும் புத்தாண்டு!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

தாயின் விரல் பிடித்த பயணம்

சிற்றூர் ஒன்றின் நடுவே ஓர் உயர்ந்த மலை. அந்த மலைமேல் ஏற வேண்டும் என்று ஒருவருக்கு விருப்பம். ஏற்கெனவே மலையிலிருந்து இறங்கி வருகிற ஒருவரைச் சந்திக்கிற அவர், ‘மேலே எப்படிச் சென்றீர்கள்? மேலே என்ன பார்த்தீர்கள்?’ எனக் கேட்கிறார். அவரும் இவருக்குப் பதிலுரைக்கிறார். அந்த வழி தனக்குச் சரி வராது என நினைக்கிற இவர், தொடர்ந்து நடக்கிறார். சற்று நேரம் கழித்து இன்னொருவரைச் சந்திக்கிறார். அவரிடமும் அதே கேள்விகளைக் கேட்கிறார். தொடர்ந்து நடக்கிறார். ஏறக்குறைய முப்பது பேரைச் சந்திக்கிறார். கேள்விகள் கேட்கிறார். ‘மலைக்கு மேலே சென்றால் இதுதான் தெரியுமா? இவ்வளவு கஷ்டப்பட்டு ஏறுவது இதைப் பார்க்கத்தானா?’ எனச் சொல்லி கீழேயே தங்கிவிடுகிறார்.

நிற்க.

முப்பது பேருடைய அனுபவங்களை அவர் கேட்டிருந்தாலும் அவர்களுடைய அனுபவம் ஒருபோதும் அவருடைய அனுபவமாக மாறப்போவதில்லை.

புதிய ஆண்டுக்குள் இன்று நாம் நுழைகிறோம். ‘உங்களுடைய கவலைகள் எல்லாம் புத்தாண்டு வாக்குறுதிகள்போல மறைந்துபோவதாக!’ என்பது ஓர் இத்தாலியப் பழமொழி. இந்தப் புதிய ஆண்டு நமக்கு அமைதியின், வளர்ச்சியின், வெற்றியின் ஆண்டாக அமைய வாழ்த்துகள்.

நம் புதிய ஆண்டுப் பயணம் எப்படி இருக்க வேண்டும்?
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மூன்று பயணங்கள் பற்றி வாசிக்கிறோம்: (அ) தீவனத்தொட்டியை நோக்கிய இடையர்களின் பயணம். (ஆ) குழந்தையைச் சந்தித்தபின் தங்கள் இல்லம் நோக்கிய இடையர்களின் பயணம். (இ) அன்னை கன்னி மரியாவின் உள்மனப் பயணம்.

(அ) தீவனத்தொட்டியை நோக்கிய இடையர்களின் பயணம்

இயேசுவின் பிறப்புச் செய்தி இடையர்களுக்கு அறிவிக்கப்படுகிறது: ‘இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார்’. மேலும், விண்ணகத் தூதர் பேரணி கடவுளைப் புகழ்ந்து பாடுகிறது. வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றவுடன், இடையர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ‘வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கிற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்’ என்று சொல்லிக்கொண்டு விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் காண்கிறார்கள்’ (காண். லூக் 2:15-16).

பெத்லகேம் செல்லுமாறு வானதூதர்கள் இடையர்களுக்குக் கட்டளையிடவில்லை. அவர்கள் தாங்களாகவே புறப்படுகிறார்கள். தங்களுடைய ஆண்டவரை-மெசியாவை-மீட்பரைக் கண்டுகொள்ள விரும்புகிறார்கள். இறைவனை நோக்கிய இவர்களுடைய பயணம் உடனடியாகவும், விரைவாகவும், ஒருவர் மற்றவரோடு இணைந்ததாகவும் நடக்கிறது. மேலும், தங்கள் ஆடுகளை விட்டுவிட்டுப் புறப்படுகிறார்கள். மேலானதைப் பற்றிக்கொள்ள வேண்டுமெனில் கீழானதை விட வேண்டும்.

இந்தப் புதிய ஆண்டில் நம் பயணம் முதலில் இறைவனை நோக்கியதாக இருக்கட்டும். கண்டிப்பாக இறைவனை நோக்கிப் போக வேண்டும் என்னும் கட்டாயத்தால் அல்ல, மாறாக, ‘ஆண்டவர்-மெசியா-மீட்பர் எனக்குத் தேவை’ என்னும் தனிப்பட்ட விருப்பத்தால் போக வேண்டும். ஒவ்வொரு சூழலிலும் உடனடியாகவும் விரைவாகவும் நடைபெற வேண்டும். நாம் பயணத்தில் ஒருவர் மற்றவரை, குறிப்பாக, ஓர் ஆன்மிக வழிகாட்டியை நமக்கென வைத்துக்கொள்ள வேண்டும். ‘விரைவாகச் செல்ல வேண்டுமெனில் தனியாகச் செல், தூரமாகச் செல்ல வேண்டுமெனில் இணைந்து செல்’ என்பது ஆப்பிரிக்கப் பழமொழி (இப்பழமொழியை திருத்தந்தை பிரான்சிஸ், ‘கிறிஸ்து வாழ்கிறார்’ என்னும் திருத்தூது ஊக்கவுரையில் பயன்படுத்துகிறார்). கூட்டியக்கத்துக்கான மாமன்றம் பற்றிய கலந்தாலோசித்தலின் இறுதிக் கட்டத்தில் நிற்கிறோம். திருஅவையில் நாம் பெறும் இறையனுபவம் அனைவரையும் உள்ளடக்கிய அனுபவமாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

(ஆ) குழந்தையைச் சந்தித்தபின் தங்கள் இல்லம் நோக்கிய இடையர்களின் பயணம்

‘குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர்’ எனப் பதிவு செய்கிறார் லூக்கா (2:17-18). இயேசுவின் சமகாலத்தில் இடையர்களைப் பொய்யர்கள், திருடர்கள் என அழைக்கப்பட்டார்கள். ஏனெனில், தங்கள் கவனக்குறைவால் ஆடுகள் குறைந்துபோனால், ‘அவற்றைக் கொடிய விலங்குகள் கொன்றுவிட்டன’ என்றுப் பொய்யுரைப்பர். மேய்ச்சல் நிலத்தைத் தேடி அலைவதற்குச் சோம்பல்பட்டு, மற்றவர்களின் விளைநிலங்களில் மந்தையை மேயவிடுவர். இப்படிப்பட்டவர்கள் ஆண்டவர்-மெசியா-மீட்பர் பற்றிய செய்தியை உரைக்கிறார்கள். இவர்களுடைய சொற்களைக் கேட்டு அனைவரும் வியப்படைகிறார்கள். ஆக, அவர்கள் பெற்றிருக்கிற செய்தி அவர்களுடைய தான்மையைக் கூட்டுகிறது. மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன சொன்னாலும் நம் தான்மை என்பது நமக்கு உள்ளிருந்தே வருகிறது என்பதை இடையர்கள் உணர்ந்திருக்கிறார்கள். குழந்தையைப் பற்றி மரியா-யோசேப்பிடம் அறிவிக்கிறார்கள், மற்றவர்களிடமும் அறிவிக்கிறார்கள். இறையனுபவத்தைப் பெற்றவர்கள் அதைத் தங்களுக்குள் வைத்துக்கொள்ள இயலாது.

இடையர்களின் இந்தப் பயணம் நாம் ஒருவர் மற்றவரை நோக்கி மேற்கொள்ள வேண்டிய பயணத்தைக் கற்றுத்தருகிறது. நாம் மற்றவர்கள்மேல் முத்திரைகள் இடுவதுபோல, நம்மேலும் மற்றவர்கள் முத்திரைகள் இடுகிறார்கள். முத்திரைகளை உடைக்க வேண்டுமெனில் முற்சார்பு எண்ணங்களையும் பயங்களையும் விட வேண்டும். முன்பின் தெரியாத மரியா-யோசேப்பு ஆகியோருடனும் ஊராருடனும் உரையாடத் தொடங்குகிறார்கள். இடையர்களின் எளிய உள்ளம், திறந்த மனம் நமக்கு ஆச்சர்யம் தருகிறது.

(இ) அன்னை கன்னி மரியாவின் உள்மனப் பயணம்

‘நம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் மிக நீண்ட பயணம் நம் உள்மனப் பயணம்’ என்கிறார் பவுலோ கோயலோ. இந்தப் பயணத்திற்கு முடிவென்பதே கிடையாது. அன்றாடம் நம்மை நாமே தேடிக்கொண்டே இருக்க முடியும். ‘மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார்’ என நிகழ்வை நிறைவு செய்கிறார் லூக்கா (2:19). ‘அனைத்தையும் கருவூலமாக்கி … மரியா சேகரித்துக்கொண்டிருந்தார்’ என்றும் மொழிபெயர்க்கலாம். படங்களைக் கிழித்துப் போட்டு அவற்றை மீண்டும் சேர்த்துப் படத்தை உருவாக்கும் விளையாட்டில், நாம் ஒவ்வொரு படமாக ஒன்றோடொன்று பொருத்துவதுபோல, வானதூதரின் வருகை, மங்கள வார்த்தை, எலிசபெத்தை நோக்கிய பயணம், யோசேப்பின் தயக்கம், கனவில் அவர் பெற்ற தெளிவு, திருமுழுக்கு யோவானின் பிறப்பு, அகுஸ்து சீசரின் கணக்கெடுப்பு, பெத்லகேம் நோக்கிய பயணம், விடுதி, தீவனத்தொட்டி என அனைத்துப் புள்ளிகளும் ஒன்றோடொன்று இணைவதைக் காணத் தொடங்குகிறார். தன் உள் மனம் நோக்கிப் புறப்படுகிறார்.

மரியாவின் உள்மனப் பயணம் புத்தாண்டில் நாம் மேற்கொள்ள வேண்டிய மூன்றாவது பயணம் ஆகும். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ‘புள்ளிகளை இணைத்தல்’ பற்றிப் பேசினார். நம் வாழ்வில் நடக்கிற அனைத்து நிகழ்வுகளும், நாம் சந்திக்கிற அனைத்து நபர்களும் ஒன்றோடொன்று, ஒருவரோடொருவர் இணைந்தவை. வாழ்வின் நிகழ்வுகளைக் கொஞ்சம் தள்ளி வைத்து, நாம் கொஞ்சம் தள்ளி நின்று அவற்றைப் பார்க்கும்போது அவை இணைந்திருக்கிற விதம் நமக்குப் புரியத் தொடங்குகிறது. பொறுமையும், உணர்வுகள் மேலாண்மையும் இதற்கு அவசியம். அனைத்தையும் பொருத்திப் பார்க்கக் கூடிய ஒருவர், பொருந்தாதவற்றைப் புறந்தள்ளிவிட்டு மனஅமைதி கொள்வார். பொருந்தாதவற்றைப் பொருத்த முயற்சி செய்வதில் நாம் பல நேரங்களில் நம் வாழ்வில் அமைதியை இழந்துவிடுகிறோம்.

ஆக, இறைநோக்கிய, பிறர்நோக்கிய, தன்நோக்கிய என மூன்று பயணங்களை நாம் இப்புதிய ஆண்டில் மேற்கொள்தல் நலம். இடையர்களும் அன்னை கன்னி மரியாவும் நமக்குத் தூண்டுகோல்களாக நிற்கிறார்கள்.

புதிய ஆண்டிற்குள் நுழையும் நமக்கு கடவுள் தரும் ஆசீரைப் பட்டியலிடுகின்றது இன்றைய முதல் வாசகம் (காண்.எண் 6:22-27). ‘யோம் கிப்பூர்’ நாளில் பரிகாரப் பலி செலுத்திவிட்டு, திருத்தூயகத்திலிருந்து வெளிவரும் தலைமைக்குரு அங்கே கூடியிருக்கும் மக்களுக்கு வழங்கும் ஆசியுரையே இது. இந்த ஆசியுரையில் மூன்று வாய்ப்பாடுகள் உள்ளன: ‘ஆண்டவர் உனக்கு ஆசி வழங்குவாராக! உன்னைக் காப்பாராக!’ என்னும் ஆசி இறைவனை நோக்கிய நம் பயணத்துக்கான ஆசியாக இருக்கிறது. ஏனெனில், இறைவன் ஒருவரே நமக்கு ஆசி வழங்கவும் நம்மைக் காப்பாற்றவும் வல்லவர். ‘ஆண்டவர் அவர் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்வாராக! உனக்கு அருள்கூர்வாராக!’ என்னும் இரண்டாவது ஆசி, ஒருவர் மற்றவரை நோக்கிய நம் பயணத்துக்கான ஆசியாக இருக்கிறது. ஆண்டவருடைய திருமுகம் நம்மேல் ஒளிரும்போது நம்மால் மற்றவர்களிடம் இறைவனின் திருமுகத்தைக் காண முடியும். ‘ஆண்டவர் தன் திருமுகத்தை உயர்த்துவாராக! உனக்கு அமைதி தருவாராக!’ என்னும் மூன்றாவது ஆசி, நம் உள்மனப் பயணத்துக்கான ஆசியாக இருக்கிறது. நம் உள்மனத் தேடலின் நிறைவாக அமைதியை நாம் கண்டடைய அருள்கூர்கிறார் கடவுள்.

இன்று மரியாளை இறைவனின் தாயாக அழைத்து, அவரின் தாய்மையைக் கொண்டாடுகிறோம். ‘இறைவனின் தாய்’ என்றால், அவர் ‘இறைவனையே பெற்றெடுத்தார்’ என்ற பொருளில் அல்ல. ஏனெனில், ‘படைக்கப்பட்டவர்’ ‘படைத்தவரை’ பெற்றெடுக்க முடியாது. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நெஸ்டோரியஸ் என்ற கீழைத்திருஅவை (கான்ஸ்டான்ட்டிநோபில்) ஆயர் மற்றும் அவரது சீடர்கள் இயேசுவின் மனிதத் தன்மையை மட்டுமே ஏற்றுக்கொண்டு, மரியாளை ‘கிறிஸ்துவின் தாய்’ அல்லது ‘இயேசுவின் தாய்’ என அழைத்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூடிய எபேசு பொதுச்சங்கம் (431), ‘இம்மானுவேல்தான் கடவுள். இந்த இம்மானுவேலின் தாய் இறைவனின் தாய். இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சபிக்கப்படுக!’ என்று அறிவித்தது. ஆக, ‘இறைவனின் தாய்’ என்னும் தலைப்பு மரியாளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு என்பதைவிட, இயேசுவின் இறைத்தன்மைக்கு கொடுக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

காலத்தின் வரையறைக்குள் கடவுளும் வந்ததால், காலம் புனிதமாக மாறியது. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கலா 4:4-7), புனித பவுல், ‘காலம் நிறைவேறியபோது, திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகளாக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்’ என மொழிகிறார். காலத்தையும் இடத்தையும் கடந்தவர் கடவுள். காலத்திற்குள்ளும், இடத்திற்குள்ளும் இருப்பவர்கள் நாம். நம் இருப்பிற்குள் கடவுள் வரவேண்டுமென்றால், அவருக்கு நேரமும் இடமும் தேவை. நேரத்தையே, பவுல், ‘காலம் நிறைவுற்றபோது’ என்றும், இடத்தையே, ‘பெண்ணிடம்’ என்றும் குறிப்பிடுகிறார். மேலும், திருச்சட்டம் காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டது என்பதால், கடவுளின் மகனும் திருச்சட்டத்திற்கு உட்படுகின்றார். ‘கடவுளின் மகன்’ என்று இயேசுவைச் சொல்வதன் வழியாக, மறைமுகமாக மரியாளை ‘கடவுளின் தாய்’ எனச் சொல்கின்றார் பவுல். மேலும், காலத்திற்கு உட்பட்ட கடவுள், ‘இனி நீங்கள் அடிமைகள் அல்ல. பிள்ளைகள்தாம்’ என்று கடவுளின் பிள்ளைகளுக்குரிய உரிமைப்பேற்றைக் கொடுக்கின்றார் (காண். யோவா 1:12).

இன்றைய நாளில் இயேசுவுக்குப் பெயரிடும் நிகழ்வையும் கொண்டாடுகிறோம். கடவுள் மனித வரலாற்றுக்குள் நுழைந்ததோடல்லாமல் ‘இயேசு’ என்னும் பெயரையும் அவர் பெறுகிறார். தம் பெயருக்கேற்ப மானுடத்தைப் பாவத்தின் கட்டுகளிலிருந்து மீட்டு விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கிறார்.

புதிய ஆண்டுக்குள் நாம் அடியெடுத்து வைத்துள்ள இந்தப் பயணத்தை இறைவன்தாமே தம் அமைதியால் நிறைவுறச் செய்வாராக!

தாயின் விரல் பிடித்துத் தொடங்குவோம் புதிய பயணம் இன்று! மலைக்கு மேலே செல்வது கடினமாகத்தான் இருக்கும். ஆனால், மலைக்குச் சென்றால் அனுபவம் நம்முடையதாகும்!

புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser