மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

தவக்காலத்தின் 4ஆம் ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
2குறிப்பேடு 36:14-16,19-23 | எபேசியர் 2:4-10 | யோவான் 3:14-21

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


நாம் ஒவ்வொருவரும் நம் தனிப்பட்ட வாழ்விலோ, குடும்ப வாழ்விலோ, சில நேரங்களில் துன்பங்கள், தோல்விகள், ஏமாற்றங்களை அனுபவித்து வருகிறோம். இப்படிப்பட்ட நேரத்தில் தான் மனித பலவீனத்தில் பல கேள்விகள் வருவதுண்டு! கடவுள் உண்டா ? கடவுள் காக்கின்றவரா? கடவுள் அன்பு செய்பவரா?

சில ஆண்டுகளுக்கு முன்பாக நம் நாட்டு ஆகாய விமானம் நாடு கடத்தப்பட்டு 159 பயணிகளை ஆப்கானிஸ்தானத்தில் இறக்கிய கொடுமை நாம் எல்லோரும் கேள்விப்பட்ட செய்தி. புதுமண தம்பதிகளாகத் தேனிலவு காணச் சென்ற தன் கணவன் தீவிரவாதிகளால் விமானத்தில் சுட்டுக் கொலையுண்ட காட்சி கண்டு துடித்தாளே ராசனா கபியாள். அந்த நேரத்தில் அன்பு செய்யும், காக்கும் கடவுள் ஒருவர் உண்டு என்று அந்தப் பெண்ணாலோ, அல்லது நாடு கடத்தப்பட்டு 8 நாட்களாக அந்தச் சிறிய விமானத்திலே அடைபட்டுக் கிடந்த பயணிகளாலோ நினைத்திருக்க முடியுமா? ஆம், இதே நிலை நமக்கும் நடந்தால் பதில் கூற முடியாத நிலைதான் ஏற்படும். ஏன் கிறிஸ்தவ பாதிரியாரான தந்தையையும், இரு மகன்களையும் தீயிட்டுக் கொளுத்தினார்களே ஒரிசாவில் கயவர்கள். மனைவியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?

இன்றைய முதல் வாசகத்தில் பாருங்கள். கொடுத்த வாக்குறுதியில் தவறிய இஸ்ரயேல் மக்களை இறைவன் தண்டித்தார். நாடு கடத்தினார். ஆனால் நாடு கடத்தப்பட்ட நிலையோடு முடியவில்லை கடவுளின் செயல்! மனம் திரும்பியபோது கடவுள் சைரஸ் என்ற மன்னன் மூலம் மீட்புக்கு வழிகாட்டினார். ஆலயத்தைக் கட்ட வைத்தார். இழந்த நாட்டைத் திருப்பிக் கொடுத்தார். அன்பும், அரவணைப்பும் கொடுக்கும் கடவுளாக அங்கே காட்சி தருகின்றார்.

அன்பார்ந்தவர்களே! துன்பம் உடலால் அனுபவிப்பதாக இருக்கலாம். அல்லது, ஆன்மிகம் சம்பந்தமாக இருக்கலாம். ஆனால் அது மனித சக்திக்கு அப்பாற்பட்ட இரகசியம். இரகசியத்திற்குத் தீர்வு காண முடியாது. இதைத்தான் நம் ஆண்டவர் நமக்கு வாழ்ந்து காட்டிக் கற்பித்தார்.

பிரான்ஸ் நாட்டிலே ஒரு பிச்சைக்காரன் வாழ்ந்து வந்தான். கல்லில் கலை வண்ணம் காண்பதில் கைதேர்ந்தவன். உலகிலே தலைசிறந்த சிலையொன்றைச் செய்ய வேண்டும் என்ற தீராத ஆசை. எனவே களி மண்ணைக் கொண்டு சிலையைச் செய்யத் தொடங்கினான். மெய்வருத்தம் பாராது, பசி நோக்காது, கண் துஞ்சாது, கருமமே கண்ணாயிருந்து நாளும் பொழுதும் தன் கனவை நனவாக்கினான். ஆனால் சிலையை முடித்த இரவு, மேகம் இருண்டு வர மழை மேகங்கள் மழைத் துளிகளைத் தெளிக்க, அது சிற்பியின் சிலையின் மீது விழுகிறது.

எந்த இடமும் கிடைக்காத அந்தப் பிச்சைக்காரன் எப்படியாவது தன் உயிரைவிட அதிகமாக நேசித்த சிலையைக் காப்பாற்ற வேண்டும் என்று தன் குளிர் போக்க வைத்திருந்த போர்வையைச் சிலையில் போர்த்தி, அந்தச் சிலையை அரவணைக்க விரும்பினான். மழையால், குளிரால் சிலையைக் கட்டி பிடித்த நிலையில் அவனும் உயிரற்றச் சிலையாக மாறிவிட்டான். பார்த்த மக்கள் பரவசத்தோடு தன் உயிர் கொடுத்து மண் உயிரைக் காத்தானே என்று பேசிச் சென்றார்கள்.

இதேபோல்தான் மீட்பின் வரலாற்றிலே நடந்தது அற்புத நிகழ்ச்சி ஒன்று. தன்னிகரில்லா சிற்பி, அவர்தான் நம் ஆண்டவர் இயேசு . மனிதன் மீது பாவம் என்ற மழைத் துளி பட்டபோது, அவனைக் காப்பாற்றத் தன் அன்பு என்னும் போர்வையில் அரவணைத்துத் தன்னுயிர் தந்து மண்ணுயிர் காத்தார் சிலுவை மரத்தில். இதைத்தான் தம் ஒரே பேரான மகன் மீது நம்பிக்கைக் கொள்ளும் எவரும் அழியா வாழ்வைப் பெரும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மீது அன்பு கூர்ந்தார் (யோவா. 3:16) என்கிறோம். ஆம் கடவுள் இந்த உலகத்தை அழிக்க அல்ல, வாழ வைக்கவே, காக்கவே திரும்பத் திரும்பத் தன் தூதுவர்களை அனுப்பிக்கொண்டே இருந்தார் (2 குறிப்பேடு 36:15). நான் நோயுற்றவருக்கே தேவை (லூக். 5:31-34) என்றார்.

அன்புக்குரியவர்களே புனித பவுல் அடிகளார் எபேசியருக்கு எழுதிய மடலில் (எபே. 2:10) கூறுவதுபோல் நாம் கடவுளின் கைவேலைப்பாடு. அவர் அனைத்து தீய சக்திகளினின்றும் நம்மைக் காக்க ஒரு போதும் தவறுவதில்லை . மனிதன் வேண்டுமானால் இறைவனின் கையைப் பற்றிக்கொள்ள மறுக்கலாம். ஆனால் இறைவன் ஒருபோதும் தம் கையை நீட்ட மறுப்பதில்லை , மறப்பதும் இல்லை . புனித பவுல் அடிகளார் கூறுவதுபோல , ஆதி மனிதனால் பாவம் நுழைந்தது, சாவும் பிறந்தது இந்த உலகில். இரண்டாம் ஆதாமால் மீட்பு கிடைத்தது. எனவே ஒவ்வொரு துன்பமும் ஒரு சிறு சாவுதான்.

எப்படிக் கிறிஸ்துவின் துன்பங்கள், பாடுகள், மரணம் மூலம் உலகிற்கு மீட்பு கிடைத்ததோ, அதேபோல் இந்த உலகில் மற்றவரின் துன்பமும் மீட்பாக மாறும்.

கடவுள் நம் தந்தை . நம்மைக் காக்கின்றவர். நமது குறுக்குக் கோடுகளையும் நேராக்குபவர்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

மூன்றாவது கை தேவை

சில மனிதர்களின் இதயங்கள்
ஈசல்களின் இறகுகள்!
கொஞ்ச நேரம்
படபடத்து விழுந்துவிடுகின்றன!
காரணம்? தனிமனித வாழ்க்கையிலும், சமூக வாழ்க்கையிலும் அவர்களுக்கு உண்டாகும் நெரிசல்கள், மனவடுக்கள், மோதல்கள். முரண்பாடுகள், நோய்கள், நொடிகள், ஏமாற்றங்கள், குழப்பங்கள்!

இதோ, வாடிவதங்கிக் கிடப்பவர்களுக்கு இன்று இயேசு வழிகாட்டுகின்றார். அவர் நம் ஒவ்வொருவரையும் பார்த்து : என்மீது நம்பிக்கைக் கொள். நீ அழியாத நிலைவாழ்வு பெறுவாய் என்கின்றார் (நற்செய்தி).

நம்பிக்கை என்றால் என்ன? காயப்படுத்தும் இறைவன் குணமாக்குவார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை. கல்தேயரின் மன்னன் வழியாக கோயிலை எரித்த கடவுள், பாரசீக மன்னன் சைரசு வழியாக அதைக் கட்டியெழுப்ப ஏற்பாடு செய்ததாக 2 குறி 36:14-23 கூறுகின்றது. காயப்படுத்தினாலும் கட்டுப் போடுபவர் அவரே; அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே என்கின்றது யோபு நூல் (யோபு 5:18). புனித பவுலடிகளாரோடு இணைந்து கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர், அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் (எபே 2:4) என்று அறிக்கையிடுவதற்குப் பெயர்தான் நம்பிக்கை.

நம்பிக்கை நம்மை நலமாக்கும் என்பதற்கு இதோ ஓர் உதாரணம்.

சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் அருங்கொடை மாநாடு மூன்று நாள்கள் நடைபெற்றது. இறுதி நாளில் குணமளிக்கும் வழிபாட்டில் கலந்துகொள்ள அந்நகரைச் சேர்ந்த, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் வெகு ஆவலாய் இருந்தாள்.

இயேசு தன்னைக் குணப்படுத்துவார் என்று நம்பினாள். அவளை அவளது உறவினர் செபக்கூட்டம் நடக்கும் இடத்திற்குக் கொண்டு சென்றனர். போகும் வழியில் ஒரு கடையில் தன் கால்களுக்கு ஏற்ற ஒரு ஜோடி காலணிகளை அவள் வாங்கினாள். குணம் பெற்று திரும்பி நடந்து வரும்போது அவை வேண்டுமே என அவள் எண்ணினாள். அவளின் நம்பிக்கை வீண்போகவில்லை. குணமளிக்கும் வழிபாட்டில் அவள் பூரண சுகமடைந்து நடக்க ஆரம்பித்தாள். திரும்பிச் சென்றபோது காலணிகளை அணிந்துகொண்டு வீட்டுக்குச் சென்றாள்.

உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர இயேசுவால் அவரது சொந்த ஊரில் வேறு வல்ல செயல் எதையும் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார் என்று நற்செய்தியில் படிக்கின்றோம் (மாற் 6:5-6அ).

நாம் நமது மன்றாட்டின் வழியாக நலம் பெற நமக்கு இரண்டு கைகள் இருந்தால் பற்றாது ; மூன்றாவது கை ஒன்று வேண்டும் - அதுதான் நம்பிக்கை. மேலும் அறிவோம் :

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு (குறள் : 734).

பொருள் : கொடிய பசி, நீங்காத நோய், அழிவு செய்யும் பகை ஆகிய தீமைகள் வராமல் அமைதியாக இயங்குவதே நல்ல நாடாகும்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

சாமிநாதர் சபைக்குருவும், இயேசு சபைக்குருவும், கப்புச்சின் சபைக் குருவும் உணவறைக்குச் சென்றனர். அங்கு ஒரு பெரிய பொரித்த மீன் மட்டும் இருந்தது. ஒரு பாத்திரத்தில் குழம்பும் இருந்தது. பொருத்தமான விவிலிய வசனத்தை யார் சொல்லுகிறாரோ, அவர் மட்டும் அந்த மீனைச் சாப்பிடலாம் என்று மூவரும் ஒத்துக்கொண்டனர். சாமிநாதர் சபைக்குரு கத்தியை எடுத்து "முதலும் முடிவும் நானே" என்று சொல்லி, மீனின் தலையையும் வாலையும் வெட்டி எடுத்துக் கொண்டார். இயேசு சபைக்குரு, "நானோ உயர்த்தப்பட்டபின் அனைத்தையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்" என்று சொல்லி மீதியிருந்த மீன் முழுவதையும் எடுத்துக் கொண்டார், கப்பூச்சின் சபைக்குரு வேறு வழியின்றி, தனது நீண்ட தாடியைக் குழம்பில் தோய்த்து, "ஆண்டவரே! ஈசோப் புல்லினால் என்மேல் தெளித்தருளும்" என்றார்.

இயேசு சபைக்குரு கூறிய விவிலிய வாக்கு இன்றைய நற்செய்தியில் முக்கிய இடம் பெறுகிறது. 'மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும்' பழைய உடன்படிக்கையில் பாலைவனத்தில் கடவுளுக்கும் மோசேக்கும் எதிராகப் பேசியவர்கள் கொள்ளிவாய்ப் பாம்புகளால் கடிபட்டு இறக்கும் நிலையில் இருந்தனர். கடவுள் கேட்டுக் கொண்டபடி, மோசே வெண்கலப் பாம்பு ஒன்றைச் செய்து, அதை ஒரு கோலில் உயர்த்திப் பிடித்தார், அப்பாம்பைப் பார்த்தவர்கள் உயிர் பிழைத்தனர் {எண் 21:4-9). கிறிஸ்து இந்நிகழ்ச்சியை நினைவிற் கொண்டு நிக்கதேமுவிடம் "மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்" என்கிறார்.

ஒத்தமைவு நற்செய்திகளில் கிறிஸ்து தம் பாடுகளை மூன்று முறை முன்னறிவிக்கின்றார் (எ.கா. மத் 16:21; 17:22; 20:18). ஆனால் யோவான் நற்செய்தியில் இயேசு மும்முறை மானிட மகன் உயர்த்தப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்,

"மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்" (யோவா 3:14); "நீங்கள் மானிட மகளை உயர்த்திய பின்பு, இருக்கிறவர் நானே , , என்பதை அறிந்து கொள்வீர்கள்" (யோவா 8:28); "நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக் கொள்வேன்" (யோவா 12:32), யோவானின் இறையியல் கண்ணோட்டத்தில் கிறிஸ்து சிலுவையில் அறையப்படவில்லை, மாறாக உயர்த்தப்பட்டார், அதாவது மாட்சிமையடைந்தார். சிலுவைச்சாவு மகிமையின் வாயில், கிறிஸ்து பாடுபடவேண்டிய நேரம் அண்மையில் வந்தபோது, "மானிட மகன் மாட்சிமை பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்றார்

(யோவா 12:23), துன்புறும் இறை ஊழியனைப் பற்றிய கவிதையிலும் இறைவாக்கினர் எசாயா, "இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார்" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது (எசா 52:13).

சிலுவையானது யூதருக்குத் தடைக்கல்; பிற இனத்தவருக்கு மடமை. ஆனால், உண்மையில் சிலுவை கடவுளின் வல்லமை, கடவுளின் ஞானம் (1 கொரி 1:23 24). கடவுள் தம் மக்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. கடவுளைக் கைவிட்ட இஸ்ரயேல் மக்கள் பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த இக்கட்டான காலத்திலும், கடவுள் பிற இன மன்னர் சைரசு வழியாக அவர்களுக்கு விடுதலையை அளிக்கிறார். அவர்கள் திரும்பவும் தங்கள் தாயகமாகிய எருசலேம் செல்ல மன்னர் அனுமதிக்கிறார் (முதல் வாசகம்).

கடவுள் மிகுந்த இரக்கம் உடையவர்; அவர் நம்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் (இரண்டாம் வாசகம் எபே 2:4). இத்தகைய அன்பும் இரக்கமும் கொண்ட கடவுள், எவரும் அழியாமல் நிலை வாழ்வு பெறத் தம் ஒரே மகனையே கையளிக்கும் அளவுக்கு உலகின்மேல் அன்பு கூர்ந்தார் (யோவா 3:16), ஆனால் அந்த அன்பு மகன் துன்புறும் ஊழியனாகச் சிலுவையின் வழியாகவே உலகை மீட்க வேண்டுமென்பதே, அவர் வகுத்த வழி, கிறிஸ்து கடவுளின் திட்டத்தை ஏற்று. சாவை ஏற்கும் அளவுக்கு. அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்தார். எனவேதான் கடவுள் அவரை உயிர்ப்பின் மூலம் உயர்த்தி மாட்சி பெறச் செய்தார் (பிலி 2:6-11), நாம் மீட்படைய கடவுளின் திட்டத்தை ஏற்கவேண்டும், சிலுலை வாயிலாகவே நமக்கு மீட்பு உண்டு. சிலுவையிலிருந்து விடுதலை அளிக்காமல், சிலுவையின் வாயிலாகவே விடுதலையளித்தார் கிறிஸ்து.

புனித வெரோனா பீட்டர் ஒரு காட்சி கண்டார். அக்காட்சியில் இயேசு ஒரு பாரமான சிலுவையைச் சுமந்துகொண்டு ஒரு பேராலயத்தின் வாயிலிலிருந்து பீடத்தை நோக்கி நடந்தார், பீடத்தை அடைந்தவுடன் அவருடைய சிலுவையே சிம்மாசனமாக மாற, அதில் அவர் அமர்ந்தார். அவரைப் பின்தொடர்ந்து அன்னை மரியாவும் இலட்சக்கணக்கான மக்களும் தங்களுடைய சிலுவையைச் சுமந்துகொண்டு பீடத்தை அடைந்தவுடன், அவர்களுடைய சிலுவைகளும் சிம்மாசனங்களாக மாற, அவர்களும் அவற்றில் அமர்ந்தனர். சிலுவையே மகிமையின் வழி என்பதை இக்காட்சி மூலம் அறிந்தார் வெரோனா பீட்டர். இவ்வுலகில் இருக்கும்வரை நம் வாழ்வில் சிலுவை, துன்பங்கள் ஏதாவது ஒரு வடிவத்தில் வந்தே தீரும். அச்சிலுவையை நாம் வாழ்வின் வைகறையாகப் பயன்படுத்த வேண்டும். பாபிலோனில் அடிமைகளாக வாழ்ந்த காலத்தில், இஸ்ரயேல் மக்களால் ஆண்டவருடைய பாடலை அன்னிய நாட்டில் பாட முடியவில்லை; அவர்களுடைய தாயகமாகிய எருசலேமை மறக்க இயலவில்லை (பதிலுரைப்பாடல், திபா 137:4-5).

விண்ணக எருசலேமை நோக்கிப் பயணிக்கும் நாமும் ஒருவகையில் இவ்வுலகிற்கு அன்னியர்களாக இருக்கின்றோம். "இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி வாழுங்கள் " (1 பேது. 1:17), விசுவாசத்திற்காகத் தங்கள் வாழ்வையே பணயம் வைத்தவர்கள், "இவ்வுலகில் தாங்கள் அன்னியர்கள் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை அதாவது விண்ணக நாட்டையே நாடுகிறார்கள்” (எபி 11:13,16).

விண்ணகமே நமது தாய்நாடு (பிலி 3:28), எனவே பயணம் செய்யும் திருச்சபையில் வழிப்போக்கர்களாய் உள்ள தாம், ஒருபோதும் சிலுவைக்குப் பகைவர்களாக வாழாமல் (பிலி 3:18), சிலுவையின் மறைபொருளை மேன்மேலும் ஆழமாக உணர்ந்து அதற்கேற்ப வாழ்வோம்,

பாலைவனத்தில் பாம்பால் கடிபட்டவர்கள் உயர்த்தப்பட்ட வெண்கலப் பாம்பைப் பார்த்துக் குணமடைந்தனர். அந்த வெண்கலப் பாம்பு சிலுவையின் முன்னடையாளம். சிலுவையில் உயர்த்தப்பட்டவரை, நம் பாவங்களுக்காக ஊடுருவக் குத்தப்பட்டவரை உற்று நோக்கி (யோவா 19:37), பாவக் காயங்களிலிருந்து விடுதலை பெற்று, திறை வாழ்வடைவோம் சிலுவையே மகிமையின் வாயில்.

'ஆண்டவரே, உலகின் மீட்பரே எங்களை மீட்டருளும்; உமது சிலுவையினாலும் உயிர்ப்பினாலும் எங்களை மீட்டவர் நீரே."

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்

சில ஆலயங்கள் வழிபாட்டுக்குரிய புனிதத் தலங்களாக மட்டுமல்ல கருத்தாழமிக்கக் கலைக் கூடங்களாகவும் காட்சி தருகின்றன.

பல ஆண்டுகளுக்கு முன்னே இங்கிலாந்து நாட்டில் ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக் கழகச் சிற்றாலயம் ஒன்றில் அமைந்திருந்த கண்ணாடிச் சித்திரம் அதற்குச் சான்று. பீடத்துப் பின் சுவரில், நுழைந்ததும் கண்ணில் பட்டு ஈர்க்கும் வகையில் இருந்தது அந்த ஒவியம். கண்ணாடியின் வெளிப்புறம் பழைய ஏற்பாட்டு நிகழ்வும் உள்புறம் அதற்கு இணையான புதிய ஏற்பாட்டு நிகழ்வும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருந்தன. வெளியிலிருந்து ஒளி கண்ணாடியை உடுருவுகிற போது இரண்டு காட்சிகளும் ஒருங்கிணைந்து ஒன்றுக் கொன்று நிறைவும் பொருள் விளக்கமும் தருவதாகத் தெரியும்.

ஆலயத்தில் உள்ளே இருந்து அந்தக் கண்ணாடியை உற்றுப் பார்த்தால், மோரியா மலையில் ஆபிரகாம் தன் மகன் ஈசாக்கைப் பலி கொடுக்க ஓங்கிய கையோடு இருப்பது மென்மையான ஒளியின் பின்னணியில் தெரியும். அதே நேரத்தில் கல்வாரிச் சிலுவையும் தெரியும். சிறிது அசைந்து வேறொரு கோணத்தில் கம்பத்தில் உயர்த்திய வெண்கலப் பாம்பையும் பார்க்கலாம்.

இயேசுவின் தியாக மரணம் பழைய ஏற்பாட்டில் நிழலாடும் நிகழ்வாகவும் புதிய ஏற்பாட்டில் நிறைவு காணும் நிகழ்வாகவும் இறைவனின் ஒட்டு மொத்த மீட்புத் திட்டத்தை எப்படித் தெளிவு படுத்துகின்றன!

திருவிவிலியம் முழுவதுமே மனித மீட்புக்காகத் தன்னுயிர் ஈந்த இயேசுவின் சிலுவையை நோக்கியது, மையமாகக் கொண்டது. கொள்ளி வாய்ப் பாம்புகளால் கடியுண்ட இசரயேல் மக்கள் சாவினின்று விடுதலை பெற கோவில் உயர்த்திய வெண்கலப் பாம்பை நோக்கியது போல, நிலைவாழ்வு காண சிலுவையில் தொங்கும் இயேசுவை நோக்கி மனத்தைத் திருப்பத் தவக்காலம் நம்மை அழைக்கிறது.

"பாம்புகளும் ஏணிகளும் என்ற விளையாட்டு தெரியுமா? வீடு நோக்கிய பயணம். பாதை முழுவதும் சிறிதும் பெரிதுமாக பாம்புகளும் ஏணிகளும், தாயத்தை உருட்டிப் போட அதில் வரும் எண்களுக்கேற்ப, காயை நகர்த்துகிறோம், யார் முதலில் வீட்டை அடைவது என்பதுதான் போட்டி. காய் ஏணியைத் தொட்டால் மேலே கிடுகிடுவென ஏறும். பாம்பின் வாயில் பட்டால் மடமடவெனக் கீழே இறங்கும், வீட்டை நெருங்கிய நேரத்தில் கூட பாம்பால் கடியுண்டு கீழே படுபள்ளத்தில் இறங்க நேரிடும்.

வாழ்க்கையும் அப்படித்தான். நமக்குப் பாம்பு எது, ஏணி எது?

பழைய உடன்படிக்கையில் பாலைவனத்தில் இறைவனுக்கும் மோசேக்கும் எதிராகக் கைகளை உயர்த்தியவர்களை, குரல் எழுப்பியவர்களைக் கொள்ள வாய்ப் பாம்புகள் கடிக்க, இறைவனின் ஆணைப்படி மோசே வெண்கலத்தால் பாம்பு ஒன்றைச் செய்து அதை உயர்த்திப் பிடித்தார். அதை உற்று நோக்கியவர்கள் உயிர் பிழைத்தனர் (எண்.24:4-9)

உலக மருத்துவத் துறை தனது சுகம் அளிக்கும் தொழிலின் அடையாளச் சின்னமாகக் கொண்டிருப்பது இந்தக் "கோலில் சுற்றிய பாம்பு”.

விவிலியத்தில் பாம்பு 1. பாவத்தின் சின்னமாகச் சித்திரிக்கப் படுகிறது. (ஏதேன் தோட்டத்தில் ஏவாளை வஞ்சித்த காரணத்தால்) 2. பாவத்தின் தண்டனையாகக் குறிக்கப்படுகிறது. (கொள்ளிவாய்ப் பாம்புகளைக் கொண்டு இசர யேலரைக் கடிக்க வைத்ததால்) 3.பாவத்தின் கழுவாயாக ஆக்கப்படுகிறது (வெண்கலப் பாம்பை பார்த்தவர்களை சாவினின்று விடுவித்ததால்). இந்த நிகழ்ச்சியுடன் தொடர்புபடுத்தி, மனித இனம் வாழ்வு பெற "பாலை நிலத்தில் மோசே யால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிட மகனும் உயர்த்தப்பட வேண்டும்" என்கிறார் இயேசு.

சிலை வழிபாட்டை வீரியத்துடன் எதிர்த்த இறைவன் வெண்கலப் பாம்பைச் செய்ய ஆணையிட்டது வியப்பைத் தருகிறது. இதனால் வெண்கலப் பாம்பைச் சிலுவையின் முன் அடையாளமாக இறைவன் மனத்திலிறுத்தி இந்த ஆணையைத் தந்திருக்க வேண்டும்,

நிழலின் அருமை வெயிலில் தெரியும். இறைவனின் அன்பு சிலுவையில் தெரியும். சிலுவை ஒருபக்கம் பாவத்தின் கொடுமையை வெட்ட வெளிச்சமாக்குகிறது. மறுபக்கம் எல்லையற்ற இறையன்பை வெளிப்படுத்துகிறது.

மீட்பு என்பது என்ன? இறையன்பின் அரவணைப்பிலிருந்து விலகிச் சென்ற நாம், மீண்டும் மனந்திரும்பி அந்த அன்பின் அரவணைப்புக்குள் வருவதுதான். அதற்குப் பாலைவனப் பாம்பாக இயேசு சிலுவையில் உயர்த்தப்படுகிறார். அவரைப் பார்த்து அவரோடு ஒன்றிக்கும்போது நாம் மீட்படைகிறோம்.

யோவானின் இறையியல் பார்வையில் இயேசு சிலுவையில் அறையப் படவில்லை; உயர்த்தப்பட்டார். அதாவது மாட்சிமை அடைந்தார். சிலுவைச் சாவு இயேசுவுக்கு மகிமையின் வாயில், மரணமடையும் நேரத்தை மாட்சிமை பெறும் நேரம் என்றே சொல்வார் (யோ. 12:23) துன்புறும் இறைஊழியன் பற்றி கவிதையிலும் எசாயா அதே சிந்தனையைத் தருவார் (எசா.52:13)

கிறிஸ்து மூன்றுமுறை தன் பாடுகளை முன்னறிவிப்பதாக மத்தேயு எழுதுகிறார் (மத்.16:21, 17:33, 20:18). இயேசு மூன்று முறையும் உயர்த்தப்படுவதாகவே குறிப்பிடுகிறார். (யோ. 3:14, 8:28, 12:32)

சிலுவையில் உயர்த்தப்பட்டவரை உற்றுநோக்குங்கள் பாவ நஞ்சு நீங்கும், உயிர் பெற்று வாழ்வோம்.

பாவ இருளின் பிடியில் நாம் சிக்கி அழியா வண்ணம் “நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில் தான் அன்பின் தன்மை விளங்குகிறது” (1 யோ.4:9,10)

அன்பே கடவுள். நம்பிக்கையே வாழ்வு.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

தவக்காலம் 4ம் ஞாயிறு - 'அகமகிழ்தல்' ஞாயிறு

தவக்காலத்தின் 4ம் ஞாயிறை, 'அகமகிழ்தல்' (Laetare) ஞாயிறெனக் கொண்டாடுகிறோம். இன்றையத் திருப்பலியின் வருகைப் பல்லவியில், எருசலேமே அகமகிழ்; அவள் மீது அன்பு கொண்ட அனைவரும் ஒன்று கூடுங்கள். துயருற்ற நீங்கள் மகிழ்ந்து, அக்களியுங்கள் (எசாயா 66:10), என்று காணப்படும் சொற்களின் அடிப்படையில், இந்த ஞாயிறு, 'அகமகிழ்தல்' ஞாயிறு என்ற பெயரைப் பெற்றுள்ளது. ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக (2023, அக்டோபர் 7 முதல்) எருசலேமிலும், அதைவிட குறிப்பாக, காசாப் பகுதியிலும் நடைபெற்றுவரும் போரையும், அழிவுகளையும் காணும்போது, 'எருசலேமே அகமகிழ்' என்று மனதாரக் கூறமுடியுமா என்ற கேள்வி நம்மை வாட்டுகிறது.

வரலாற்றில் பல முறை எருசலேமும், புனித பூமியும் போர்களையும், அழிவுகளையும் கண்டு வந்துள்ளன. அந்த அழிவுகளில் ஒன்றை, இன்றைய முதல் வாசகம் (குறிப்பேடு 2ம் நூல் 36:14-16,19-23) நமக்கு நினைவுறுத்துகிறது: கடவுளின் இல்லத்தை அவர்கள் எரித்து, எருசலேமின் மதில்களைத் தகர்த்தனர்; அங்கிருந்த அனைத்து அரண்மனைகளையும் தீக்கிரையாக்கி, விலையுயர்ந்த பொருள்கள் அனைத்தையும் அழித்தனர். மேலும் அவன் வாளுக்குத் தப்பியவர்களைப் பாபிலோனுக்கு நாடு கடத்தினான். (குறிப்பேடு 2ம் நூல் 36:19-20) ஆனால், முதல் வாசகத்தின் இறுதி பகுதி நம்பிக்கை தரும் சொற்களுடன் நிறைவுபெறுகிறது. “பாரசீக மன்னராகிய சைரசு என்னும் யாம் கூறுவது இதுவே: விண்ணகக் கடவுளாம் ஆண்டவர் மண்ணக அரசுகள் எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளார். மேலும் யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்குத் திருக்கோவில் எழுப்புமாறு எனக்குப் பணித்துள்ளார். எனவே, அவருடைய மக்களாக இருப்பவர் அங்கு செல்லட்டும்! கடவுளாம் ஆண்டவர் உங்களோடு இருப்பாராக!” (குறிப்பேடு 2ம் நூல் 36:23)

இஸ்ரேல் நாட்டன் இன்றையப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) அதிகார வெறியினால், இன்றைய புனித பூமியில் உருவாகிவரும் அழிவுகளையே நாம் ஊடகங்கள் வழியே கண்டுவருகிறோம். இருப்பினும், இது முழு உண்மை அல்ல. புனித பூமியில், இஸ்ரேல், பாலஸ்தீனா ஆகிய இரு நாடுகளிலும், அமைதியை, ஒப்புரவை விரும்பும் பல்லாயிரம் மக்கள், குறிப்பாக, அறிவு சார்ந்த ஆன்றோர் உள்ளனர். அவர்கள் கூறும் எண்ணங்களோ, அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளோ, ஊடகங்களில் பேசப்படுவதில்லை. காரணம், இந்த ஒப்புரவு முயற்சிகளால் அரசியல்வாதிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. அரசியல் தலைவர்கள், வெறுப்பை வளர்த்து, ஆயுதங்களைப் பயன்படுத்தி, அதன் வழியே ஆயுத வர்த்தகத்தை வளர்ப்பதிலேயே குறியாய் உள்ளனர்.
இருப்பினும், அகமகிழ்தல் ஞாயிறைக் கொண்டாடும் இந்த திருவழிபாட்டு நேரத்திலாவது, புனித பூமியில் ஒப்புரவைக் கொணர விழைவோரைக் குறித்து இறைவன் சந்நிதியில் நினைவுகூர்ந்து அவர்களுக்காக நன்றி செலுத்துவது, நம் கடமை. அதுவே, இந்த ஞாயிறன்று நாம் கொண்டாடும் அகமகிழ்தல் என்ற எண்ணத்திற்கு அர்த்தம் கொடுக்கும்.

புனித பூமியில், அமைதியை, ஒப்புரவைக் கொணர விழையும் ஒரு மருத்துவரைப் பற்றிய செய்தி, கடந்த மாதம், பிப்ரவரி 26ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணிபுரியும் இயேசு சபையினரால் நடத்தப்படும் 'America' என்ற மாத இதழில் வெளியானது. முஸ்தபா பர்கூத்தி (Dr. Mustafa Barghouti), என்ற 70 வயதான மருத்துவர், 'America' மாத இதழுக்கு அளித்த பேட்டியில், தற்போது அங்கு உடனடியாக நிலவவேண்டிய போர்நிறுத்தம், இஸ்ரேல், பாலஸ்தீனா ஆகிய இரண்டும், இரு வேறு நாடுகளாக, அல்லது, ஒரே குடியரசில் இரு வேறு குழுக்களாக ஒப்புரவுடன் வாழக்கூடிய சாத்தியங்கள் ஆகியவற்றைக் குறித்து பேசியுள்ளார். அவரது பேட்டியில், ஆயுதமற்ற, அகிம்சையைப் பற்றி அவர் கூறியுள்ள சொற்கள் உள்ளத்தைத் தொடுகின்றன: "நான் ஒரு மருத்துவராக, வெள்ளை மேலுடையை அணிந்து, காயமுற்றிருந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கும்போது, என்னை இஸ்ரேல் இராணுவம் சுட்டது. அதனால், 35 வெடிகுண்டு துண்டுகள், இன்னும் என் உடலில் பதிந்துள்ளன. இருப்பினும், அகிம்சை ஒன்றே இஸ்ரேல் பாலஸ்தீனா நாடுகளைக் காப்பாற்றமுடியும் என்ற என் நிலைப்பாட்டிலிருந்து நான் மாறமாட்டேன்." என்று கூறியுள்ளார். மருத்துவர் பர்கூத்தி அவர்கள், 2010ம் ஆண்டு நொபெல் அமைதி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் பர்கூத்தி அவர்களைப் போலவே, அமைதியையும், ஒப்புரவையும் விரும்பும் பல்லாயிரம் நல்ல உள்ளங்கள் இஸ்ரேல் பாலஸ்தீனா நாடுகளில் வாழ்கின்றனர். ஆனால், அவர்களது நல்லெண்ணங்களை ஊடகங்கள் வெளியிடுவதில்லை. ஒப்புரவு, மன்னிப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் இந்த அறிஞர்களின் எண்ணங்களை அகமகிழ்தல் ஞாயிறன்று நாம் கொண்டாடுவோம்.

தவக்காலத்தில், மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய அனுபவங்களால், நமது உள்ளங்கள் நிறைவடையும்போது உருவாகும் உண்மையான மகிழ்வைக் கொண்டாட, தாய் திருஅவை இன்று நம்மை அழைக்கிறார். 'அகமகிழ்தல்' ஞாயிறுக்கு முந்தைய வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களை, 'மன்னிப்பின் விழா'வாகக் கொண்டாட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார். இந்த இரு நாள்களிலும், பகலும், இரவும், ஒப்புரவு அருளடையாளம் பெறுவதற்காக, உலகெங்கிலும் உள்ள ஆலயங்கள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார். 2014ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் சிறப்பிக்கப்படும் இந்த மன்னிப்பின் விழாவுக்கு, "புதுவாழ்வு பெற்றவர்களாய் வாழும்படி…" (உரோமையர் 6:4) என்ற சொற்கள், இவ்வாண்டின் மையக்கருத்தாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மன்னிப்பையும், ஒப்புரவையும் கொண்டாடிய வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களைத் தொடர்ந்துவரும் இந்த ஞாயிறன்று, தந்தையாம் இறைவன் எவ்வாறு இவ்வுலகை கிறிஸ்துவோடு ஒப்புரவாக்கினார் (காண்க. 2 கொரி. 5:19) என்பதை சிந்திக்க ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புரவை உருவாக்க, இயேசு, தன்னையே நம்மில் ஒருவராகக் கரைத்துக்கொண்டார். அந்தக் கரைதலை நாம் 'மனுவுருவாதல்' என்று குறிப்பிடுகிறோம். மனுவுருவாதலின் ஆழத்தை உணர்த்தும் அழகிய சொற்களை இன்றைய நற்செய்தியில் (யோவான் 3:14-21) கேட்கிறோம். “தம் ஒரே மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார்.” (யோவான் 3:16)

விவிலிய வாக்கியங்கள், குறிப்பாக, நான்கு நற்செய்திகளின் வாக்கியங்கள் பல, மேற்கோள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாக்கியங்களிலேயே மிக அதிக அளவில் மேற்கோளாகப் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு வாக்கியம் உள்ளது என்றால், அது நாம் இப்போது வாசித்த இறைவாக்கியம் - யோவான் 3:16 - என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த வாக்கியம் "நற்செய்திகளின் நற்செய்தி" (Gospel of the gospels) என்று சொல்லப்படுகிறது. அன்பின் ஆழத்தைச் சொல்லும் ஓர் இலக்கணம் இது.

அன்பின் ஆழத்தைக் கூறும் பல நூறு கதைகளைக் கேட்டிருக்கிறோம். இந்தக் கதைகளில் சொல்லப்படுவதெல்லாம் ஒரு சில நாட்களில், மணித்துளிகளில் காட்டப்படும் ஆழமான அன்பு உணர்வுகள். இந்த உணர்வுகள் உண்மையானவை, உன்னதமானவைதான். ஆனால், நம் இல்லங்களில், நம் குடும்பங்களில், ஒவ்வொரு நாளும், திரும்பத் திரும்ப நிகழும் அன்புச் செயல்கள், கதைகளாக, செய்திகளாக வெளிவருவதில்லை. 'அகமகிழ்தல்' ஞாயிறன்று, நேரம் ஒதுக்கி, நமது குடும்பங்களில் ஒவ்வொரு நாளும் நடக்கும் அன்பு நிகழ்வுகளை அசைபோடுவோம். இந்தச் சின்னச் சின்ன நிகழ்வுகள் வழியே, சொல்லாமல் சொல்லப்படும் உன்னத அன்பு உணர்வுகளை இன்று அசைபோடுவோம்.

பல குடும்பங்களில், உடல்நலம், அல்லது, மனநலம் குன்றிய குழந்தைகள், வாழ்க்கைத் துணை, பெற்றோர் என்று, எத்தனையோ பேருக்கு, ஒவ்வொரு நாளும், தாய், தந்தை, கணவன், மனைவி, உடன்பிறந்தோர் என்று, குடும்பத்தில் மற்றவர்கள் செய்துவரும் பணிவிடைகள் அற்புதமானவை. இந்த உன்னதமான உண்மை நிகழ்வுகள், எந்த ஊடகத்திலோ, நூல்களிலோ வெளியாவதில்லை. பத்து, இருபது, முப்பது, நாற்பது என்று, பல ஆண்டுகள், ஒவ்வொரு நாளும் தொடரும் இந்த அன்புப் பணிகளை, கதைகளாக, ஒரு சில பக்கங்களில் சொல்லிவிடமுடியாது. வெளி உலகிற்கு தெரியாத வண்ணம், நம் குடும்பங்களில், ஒவ்வொரு நாளும், அன்புப் பணியில், தங்களையே தகனமாக்கும் ஆயிரமாயிரம் இதயங்களுக்காக, இறைவனிடம் இன்று சிறப்பாக நன்றி சொல்வோம்.

'அன்பு' என்ற இந்த உன்னதமான உண்மைக்கு, பல விபரீதமான இலக்கணங்களைப் புகட்டிவரும் உலகப் போக்கையும் இன்று சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை. உண்மையான அன்பை, மகிழ்வை வெளிச்சத்திற்கு வரவிடாமல் தடுத்து நிறுத்தும் இருளைக் குறித்து இன்றைய நற்செய்தியின் பிற்பகுதி இவ்வாறு சொல்கிறது: ஒளி உலகிற்கு வந்திருந்தும், தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்... தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. (யோவான் 3:19-20)

இருளுக்கு அதிகம் பழகிவிட்டால், ஒளி நம்மைத் துன்புறுத்தும். வேதனையான இந்த உண்மையை, வேடிக்கையான முறையில் கூறும் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. பாலை நிலத்தைக் கடந்துகொண்டிருந்தார், ஒரு வழிபோக்கர். இரவாகிவிட்டதால், அங்கேயே கூடாரம் அடித்துத் தங்கினார். நள்ளிரவில், திடீரென, அவருக்கு, பசி வயிற்றைக் கிள்ளியது. தன்னிடம், ஒரு சிறு மூட்டையில், அத்திப் பழங்கள் இருந்தன என்பது நினைவுக்கு வந்தது. எழுந்தார், விளக்கை ஏற்றினார், அத்திப்பழ மூட்டையை அவிழ்த்தார். முதல் பழத்தை எடுத்துக் கடித்தபோது, பழத்துக்குள் இருந்து புழு ஒன்று வந்ததைப் பார்த்தார். எனவே, அந்தப் பழத்தைத் தூக்கி எறிந்தார். அடுத்தப் பழத்தைக் கடித்தார். அதற்குள்ளிருந்தும் புழு வந்ததைப் பார்த்தார். விளக்குக்கு அருகே கொண்டு சென்று ஆராய்ந்தார். புழு நன்றாகவேத் தெரிந்தது. அதையும் தூக்கி எறிந்தார். அடுத்தப் பழத்தை எடுத்து விளக்கின் அருகே கொண்டு செல்லும்போதே உள்ளே புழு இருப்பது தெரிந்தது. இப்படியே ஆய்வு செய்துகொண்டிருந்தால், தான் சாப்பிட ஒரு பழமும் இருக்காது என்று அவர் உணர்ந்தார். உடனே அவருக்கு ஓர் எண்ணம் எழுந்தது. விளக்கை அணைத்துவிட்டு, மீதிப் பழங்களை இருளில் சாப்பிட்டு முடித்தார்.

இந்தக் கதைக்கு பெரிய விளக்கங்கள் தேவையில்லை. மனசாட்சி என்ற விளக்கை அணைத்துவிட்டால், பூச்சியும், புழுவும் மண்டிக்கிடக்கும் நம் எண்ணங்களெல்லாம் சரியென்றே தோன்றும். நமது 'பசிகளும்' அடங்கிவிட்டதாகத் தோன்றும். இதற்கு நேர் மாறாக, உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள். (யோவான் 3: 21) என்று இன்றைய நற்செய்தியின் இறுதியில், மனதிற்கு நிறைவுதரும் ஓர் உண்மையை இறைமகன் கிறிஸ்து உணர்த்துகிறார்.

எதிரெதிர் துருவங்களாக இருக்கும் 'ஒளி' மற்றும் 'இருள்' என்ற எண்ணங்கள், பல உன்னத உள்ளங்களைத் தூண்டியதால், பல தலைமுறைகளுக்குத் தேவையான உயர்ந்த கூற்றுகளை நாம் பெற்றுள்ளோம். ­பியோடோர் தொஸ்தோவ்ஸ்கி (Fyodor Dostoevsky) என்ற இரஷ்ய எழுத்தாளர், 1866ம் ஆண்டு வெளியிட்ட 'குற்றமும் தண்டனையும்' (Crime and Punishment) என்ற நெடுங்கதையில், "இரவு நேரத்தில், எவ்வளவுக்கெவ்வளவு இருள் மண்டிக்கிடக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு விண்மீன்கள் இன்னும் கூடுதலாக ஒளிவீசுகின்றன" (“The darker the night, the brighter the stars.”) என்ற கூற்றை பதிவு செய்துள்ளார். இருள் நம்மை அதிகம் சூழ்ந்திருக்கும்போது, சிறு, சிறு மகிழ்வுகளையும், நல்லெண்ணங்களையும் நாம் கூடுதலாக உணரவேண்டும் என்ற உண்மையை இக்கூற்று தெளிவாக்குகிறது.

கறுப்பின மக்களின் சம உரிமைகளைப் பெறுவதற்காக போராடிய மார்ட்டின் லூத்தர் கிங் ஜுனியர் (Martin Luther King Jr.) அவர்கள், 1963ம் ஆண்டு வெளியிட்ட 'அன்பு செய்வதற்கு சக்தி' (Strength to Love) என்ற நூலில் பதிவு செய்துள்ள கூற்று, மிக எளிதான, அதே வேளையில், மிக ஆழமான உண்மையைக் கூறுகிறது. "இருளைக்கொண்டு இருளைத் துரத்த இயலாது, ஒளி மட்டுமே அதைச் செய்யக்கூடும். வெறுப்பைக்கொண்டு வெறுப்பை விரட்டியடிக்க முடியாது. அன்பு மட்டுமே அதைச் செய்யக்கூடும்." (“Darkness cannot drive out darkness; only light can do that. Hate cannot drive out hate; only love can do that.”)

தீய சக்திகள் அணிதிரண்டு, இவ்வுலகை இருளில் மூழ்கச்செய்துகொண்டிருக்கும் இன்றையச் சூழலில், ஒளியாக விளங்கும் கிறிஸ்துவை நெருங்கிச் செல்ல, அவரைப்போல் ஒளியாக மாற, நாம் அழைக்கப்படுகிறோம். அந்த அழைப்பை ஏற்கப்போகிறோமா? அல்லது, இருளில் நம்மேயே புதைத்துக்கொண்டு, சுகம் காணப்போகிறோமா? எது நம்மை உண்மையில் அகமகிழ்வோடு வாழவைக்கும் என்பதை, ஓர் ஆன்ம ஆய்வாக மேற்கொள்ள, தவக்காலம் தகுந்ததொரு காலம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இன்று மங்களகரமான மகிழ்ச்சியின்‌ நாள்‌.

 • கடவுள்‌ நம்மை அன்பு செய்கிறார்‌. இதுதான்‌ மகிழ்ச்சிக்கு அடிப்படைக்‌ காரணம்‌. இத்தகைய கருத்துகளை வாசகங்கள்‌ நமக்கு எடுத்துரைக்கின்றன. கடவுள்‌ நம்மை எந்தப்‌ பாரபட்சமுமின்றி முழுமையாக அன்பு செய்கிறார்‌. இறைவாக்கினர்‌ எரேமியா கூறுவது போல்‌ "நமக்கு முடிவில்லா அன்பைக்‌ காட்டியுள்ளார்‌ தமது பேரன்பால்‌ நம்மை இழுத்துக்‌ கொள்கிறார்‌" (எரே 31:3).
 • தாயைப்‌ போல்‌, ஏன்‌ அவரை விட ஒரு படி மேலாக இறைவன்‌ நம்மை அன்பு செய்கிறார்‌ (எசா 49:15), இப்படிக்‌ கடவுள்‌ நம்மீது கொண்டுள்ள அந்த அன்பை அறிகின்றோம்‌. அன்புக்குரிய இறை மக்களாக நாம்‌ இருக்கின்றோம்‌. "அவர்‌ நம்மை அன்பு செய்வதால்‌ நாம்‌ வெற்றி யாளர்களாக இருக்கிறோம்‌" (உரோ 8:37).
 • எல்லாவற்றுக்கும்‌ மேலாக தந்தையாம்‌ இறைவன்‌ தம்‌ ஒரே மகன்‌ வழியாக நம்மை அன்பு செய்தார்‌ தம்‌ ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும்‌ எவரும்‌ அழியாமல்‌ நிலைவாழ்வு பெறும்‌ பொருட்டு அந்த மகனையே அளிக்கும்‌ அளவுக்குக்‌ கடவுள்‌ உலகின்‌ மேல்‌ அன்பு கூர்ந்தார்‌ (யோவா 3:16).
 • "நாம்‌ வாழ்வு பெறும்‌ பொருட்டு கடவுள்‌ தம்‌ ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார்‌ இதனால்‌ கடவுள்‌ நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது" (1யோவா 4:9) இதுதான்‌ கடவுளது அன்பின்‌ உச்சம்‌.
 • தந்தையின்‌ அன்பு இப்படிப்‌ பட்டதாக இருக்கின்றது என்றால்‌ மூவொரு கடவுளின்‌ இரண்டாம்‌ ஆளாகிய இறைமகன்‌ இயேசுவின்‌ அன்பு இணையற்றதாக இருக்கின்றது.
 • அவர்‌ தந்தையின்‌ திருவுளத்தை நிறைவேற்றத்‌ தம்மையே இம்மனுக்குலத்திற்குக்‌ கையளிக்கிறார்‌. அனைவரையும்‌ அன்பு செய்தார்‌ எவரையும்‌ வெறுக்கவில்லை.
 • "நல்ல ஆயன்‌ நானே; நல்ல ஆயர்‌ தம்‌ ஆடுகளுக்காகத்‌ தம்‌ உயிரைக்‌ ' கொடுப்பார்‌" (யோவா 10:11) என்று சொல்லி மந்தையைக்‌ காத்திடத்‌ தம்மையே கையளித்தார்‌.
 • "நண்பர்களுக்காக உயிரைக்‌ கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடம்‌ இல்லை" என்று கூறுகிறார்‌ இயேசு (யோவா 15:13).
 • "இயேசு கிறிஸ்து செல்வராய்‌ இருந்தும்‌ நமக்காக ஏழையானார்‌. அவருடைய ஏழ்மையினால்‌ நாம்‌ செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்‌" (காண்‌. 2 கொரி 8:9),
 • இப்படி தந்தையின்‌ அன்பை முழுமையாகக்‌ கிறிஸ்து வெளிப்‌ படுத்தினார்‌.
 • இறைமக்கள்‌ ஆகிய நாம்‌ கடவுளின்‌ அன்பை மையப்படுத்தி வாழ அழைக்கப்படுகின்றோம்‌. கடவுளின்‌ மக்களாகவே வாழ அழைக்கப்படு கின்றோம்‌. எனவே இறைமக்களாகிய நாம்‌ அனைவரும்‌ கிறிஸ்துவின்‌ அன்பின்‌ அகலம்‌, நீளம்‌, உயரம்‌, ஆழம்‌ என்னவென்று உணர்ந்து கடவுளை முழுமையாக அன்பு செய்ய வேண்டும்‌.
 • கடவுளின்‌ சாயலில்‌ உள்ள ஒவ்வொரு நபர்களிடமும்‌ அன்பு செய்து வாழ வேண்டும்‌. அன்பில்லாத ஒருவர்‌ கடவுளை அறிந்து கொள்வதில்லை ஏனெனில்‌ கடவுள்‌ அன்பாய்‌ இருக்கிறார்‌.
 • கடவுள்‌ அன்பிலிருந்து எதுவும்‌ பிரிக்காதவண்ணம் செயல்பட முயற்சி செய்வோம்‌.
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser