இயேசுவின் உருமாற்றம்
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தபோர் மலையில் உருமாற்றம் பெற்ற காட்சியை இன்று வாசிக்கக் கேட்டோம். இயேசு தபோர் மலையில் மட்டும் விண்ணகத் தந்தையால் வெளிப்படுத்தப் படவில்லை. வானதூதர்கள் வழியாக, சாத்தான் வழியாக, திருமுழுக்கு யோவான் வழியாகவும் ஆண்டவர் இயேசு, மெசியா, கடவுளின் பரிசுத்தர், அன்பார்ந்த மகன், பாவம் போக்கும் செம்மறி என்றெல்லாம் வெவ்வேறு இடங்களில் வெளிப்படுத்தப்படுகிறார்.
இன்றைய நற்செய்தியைக் கவனித்தால் நான்கு கேள்விகளுக்கு விடைதரும் நிகழ்ச்சியாக அமைகிறது. நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எதற்காக இங்கே வந்தேன்? எங்கே போகிறேன்? என்பதைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சியாகத்தான் இந்த தபோர் மலை அனுபவம். பல தடவை தன் பணி வாழ்வில் தன்னை வெளிப்படுத்திய இயேசு, தான் இறுதியாக எதிர்கொள்ள இருக்கும் துன்பத்தில் பெற இருக்கும் சக்தியை தன் சீடர்கள் அறிய வேண்டும் என பேதுரு, யாக்கோபு, யோவான் மூவரையும் மலைக்கு அழைத்துச் சென்று அவர்கள் முன் உருமாறி தன் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துகிறார். புனித மாற்கு குறிப்பிடுவதுபோல, எந்த சலவைக்காரனும் இதுவரை வெளுக்க முடியாத அளவுக்கு அவரது ஆடைகள் ஒளி வீசின என வாசிக்கிறோம்.
- சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறுபவர்கள், அதற்கு முன்பாகத் துன்ப நடை போட வேண்டியுள்ளது.
- கனவை நனவாக்கி இலட்சிய வாழ்வில் தலைசிறந்த வீரனாக, ... வீராங்கனையாக மாற, தியாகம் செய்து, உறுதி கொண்ட நெஞ்சத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
- உளி பட்ட பாறை தான் உண்மையான சிலையாக மாறுகின்றது.
- அறுபட்டு, துளைக்கப்பட்ட மூங்கில்தான் புல்லாங்குழலாக மாறுகிறது. அறுபட்டு துளைக்கப்படும்போது அழகை இழக்கிறது. ஆனால் பிறருக்கு பயனாக மாறுகிறது.
பிரசவ வேதனை அனுபவிக்கும் ஒரு பெண்தான் சமுதாயத்தில் அம்மா என்ற உயர்ந்த நிலையை அடைய முடியும்.
ஆம்! வாழ்வில் துன்பத்தைத் தழுவாதவர் இன்பத்தைக் காண முடியாது. சோதனைகள், வேதனைகள் நம்மை நெருங்கும்போது தான் நாம் வலிமை பெறுகிறோம். ஆபத்துகள் நெருங்கும் போதுதான் நாம் வீரம் பெறுகிறோம். அச்சமும் நாணமும் கொண்டிருந்த கண்ணகிதானே ஓர் அரசை கவிழ்த்தாள். ஊரையே எரித்துச் சாம்பலாக்கினாள். தன் கணவன் கள்வன் என்று அநீதியாகப் பழி சுமத்தப்பட்டுக் கொலையுண்ட. போது துன்பமும், துயரமும், வேதனையும் அவளது ஆற்றலை வெளிப்படுத்தியது. ஆம்! துன்பங்கள் நம்மை கூர்தீட்டும் சாணைக் கற்கள். இன்பங்கள் மட்டுமல்ல. துன்பத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொள்வதுதான் உருமாற்றம். நிலைப்பாடு எடுப்பதுதான் உருமாற்றம். கனவுகளை நனவாக்கத் திட்டமிடுவதுதான் உருமாற்றம். ஒரு முடிவில் மற்றொரு தொடக்கம் உண்டு. விதை தரையிலே விழுந்து மடிவது முடிவு அல்ல. அதிலிருந்து பயிர் முளைப்பது தொடக்கம். அதிலிருந்து மரம் உண்டாகி, கனி கொடுப்பது தொடக்கம்.
இயேசுவின் உருமாற்றம் நம் வாழ்வின் தொடக்கம். மக்கள் மீட்புப் பெற இயேசு உருமாற்றம் பெறுகிறார். எப்படி? தபோர் மலையில் மாட்சியுடன் காட்சி கொடுத்த இயேசு, இன்பமயமாக, ஒளி மயமாக உருமாற்றம் பெற்ற இயேசு ஒலிவ மலைக்குக் கடந்து சென்றார். அங்கே இரத்த வியர்வையிலே கிடக்கிறார். தன்னோடு மூன்று ஆண்டுகள் இருந்த யூதாஸ் அங்குதான் காட்டிக் கொடுக்கிறான் தன் தலைவரை. உணர்ச்சி வசப்பட்ட பேதுருவும் கொலை வெறி கொண்டு காவலனின் காதைத் துண்டித்தார். இயேசு கைதியாக விலங்கிடப்பட்டதும் இந்த ஒலிவ மலையில்தான். இதோடு நிற்கவில்லை. மாறாகக் கல்வாரி மலைக்கும் சென்று நமக்காக உயிர் கொடுக்கிறார். நாம் உருமாற்றம் பெறத் தன் உருவை இழக்கிறார். ஆம்! இந்த தபோர் மலை அனுபவம்தான் ஒலிவ மலைக்குச் சென்று இரத்த வியர்வை அடையவும், கல்வாரியில் உயிர் கொடுக்கவும் துணிவைத் தந்தது இயேசுவுக்கு.
துன்பத்தின் வழியாகத்தான், சிலுவைச் சாவின் வழியாகத்தான் மீட்பின் மகிமை என்பதை இயேசுவின் உருமாற்றம் அறிவிக்கிறது. கோழைகளாக வாழாது புனித பவுல் அடிகளாரைப் போல அஞ்சா நெஞ்சம் கொண்டவர்களாக வீழ்ந்தாலும், அழிந்துபோக மாட்டேன் என்ற நிலைப்பாட்டிற்கு நம் வாழ்வை மாற்ற வேண்டும்.
இறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்
ஒரு பணக்கார மனிதன் அனைத்து வசதிகளோடு வாழ்ந்து வந்தான். தன் இளம் வயதில் வேண்டினான், இறைவா! இந்த போலித்தனமான உலகத்தில் மக்கள் அனைவரும் சுயநலவாதிகளாக வாழ்கிறார்கள். இந்த உலகத்தை மாற்றும் என்று வேண்டினான்.
சில ஆண்டுகள் கழித்து நடுத்தர வயதில், இறைவா! என் உறவினர், என் பிள்ளைகள், எம் ஊர் மக்கள் மோசமானவர்கள். இவர்களை மாற்றும் என்று மன்றாடினான்.
ஆனால் காலம் கடந்து வயதான காலத்தில், இறைவா! முதலில் என்னை மாற்றும், என் சுயநல ஆசைகளிலிருந்து விடுவித்தருளும் என மன்றாடினார். இதிலிருந்து நாம் அறிவது, மாற்றம் என்பது முதலில் என்னில், உன்னில் தொடங்க வேண்டும். தன்னில் நிறைவு கண்டால்தான் சமூகத்தை மாற்ற முடியும். இத்தகைய மாற்றத்திற்காக தந்தையின் ஒப்புதலைப் பெற தபோர் மலை சென்றார் இயேசு. நாமும் உள்ளம் உருமாற்றம் பெற இயேசுவின் ஒப்புதலைப் பெறுவோம். அவரது குரலுக்குச் செவிமடுப்போம். போலி மாற்றங்களைக் களைந்து உண்மை உருமாற்றம் பெற நமது உள்ளத்திற்கு வேகத் தடை போட்டு நின்று நிதானமாகச் செயல்படுவோம்.
கீழ்ப்படிதலே பெரிது !
கடவுளின், பரமதந்தையின் அன்புக்குரியவர்களாக வாழ விரும்பினால் நாம் என்ன செய்யவேண்டும்? என்பதற்கு இன்றைய வாசகங்கள் பதில் தருகின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் எப்படி இறைவனின் அன்புக்கு உரியவரானார் என்பதைப் பற்றி நாம் படிக்கின்றோம். அவர் கடவுளின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததால், இறைவனுடைய விருப்பத்தின்படி அவர் நடக்க முன்வந்ததால் அவர் கடவுளுக்கு ஏற்புடையவரானார்.
இன்றைய நற்செய்தியிலே இறைத் தந்தை, இயேசுவைக்குறித்து, "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" (மாற் 9:7) என்கின்றார். இதற்குக் காரணம் இயேசு சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார் (பிலி 2:8). இயேசு, என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பது மே என் உணவு (யோவா 4:34) என்கின்றார். யோவா 5:30-இல் "என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகின்றேன்” என்கின்றார் இயேசு.
கடவுளுக்கு மிகவும் பிரியமானது கீழ்ப்படிதலே (1 சாமு 15:22). பரம தந்தை விரும்பிய கீழ்ப்படிதலை அவருக்குக் கொடுத்த இயேசு, அவரின் அன்புக்குரியவரானார்.
கீழ்ப்படிதலின் தாயாக விளங்குவது எது? நம்பிக்கைதான் கீழ்ப்படிதலின் தாய். நம்பிக்கை என்றால் என்ன? இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் அடிகளார் கேட்பதுபோல, "கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?" (உரோ 8:31-32) என்று கேட்பதற்குப் பெயர்தான் நம்பிக்கை. பால் குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கியவள் தன் பிள்ளை மீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கமாட்டேன் (எசா 49:15) என்ற இறைவார்த்தைகளை நமது வாழ்வின் மையமாக்கிக்கொள்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை.
கடவுள்மீது நம்பிக்கை வைப்பவர்களை எந்தச் சக்தியாலும் எதிர்க்க முடியாது !
ஓர் அடர்ந்த காட்டின் வழியே ஒரு வழிப்போக்கன் சென்றுகொண்டிருந்தான். திடீரென அவன் முன்னே வந்த ஒரு பெரிய பூதம் அந்த மனிதனைப் பார்த்து, "உன்னை நான் ஒரு கேள்வி கேட்பேன். அதற்குச் சரியான பதிலைச் சொன்னால் உன்னை விட்டுவிடுகின்றேன்” என்றது. அதற்கு அந்த மனிதன், "சரி, கேள்" என்றான். அந்தப் பூதம் அவனைப் பார்த்து, இந்த உலகத்திலேயே மிகவும் பலம் வாய்ந்த மனிதன் யார்?” என்றது.
"கடவுள் மீது முழுநம்பிக்கை வைத்திருப்பவனே, இந்த உலகத்திலேயே பலம் வாய்ந்த மனிதன்” என்று பதில் வந்தது. அதைக் கேட்டதும், அந்தப் பூதம், “இவன் மீது கைவைத்தால், என் மீது கடவுள் கைவைத்துவிடுவார்” எனச் சொல்லி அந்த இடத்தைவிட்டு மறைந்துவிட்டது.
நம்பிக்கை என்பது கடையில் கிடைக்கும் பொருள் அல்ல; மாறாக, அது ஒரு தெய்வீக வாழ்வு (1 கொரி 12:9): அது கேட்பவர்களுக்குக் கொடுக்கப்படும் (லூக் 11:9-13).
நமது மனத்திலே நம்பிக்கை விதை முளைக்குமானால், அது செடியாக வளருமானால், அச்செடியில் கீழ்ப்படிதல் என்னும் மலர் மலர்வது உறுதி !
கீழ்ப்படிதல் இருக்கும் இடத்திலே இறை அன்பு
பாரங்களுக்குப் பாதமாக வரும்!
தோல்விகளுக்குத் தோளாக வரும்!
பாமரர்க்குப் பாரியாக வரும்!
இறை அன்பு - அது
நிழலை நிஜமாக்கும்!
சோதனையைச் சாதனையாக்கும்!
துயரத்தை மகிழ்ச்சியாக்கும்!
மேலும் அறிவோம் :
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் ; அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை (குறள் : 985).
பொருள் : செயல் திறமை என்று போற்றப்படுவது எல்லாருக்கும் பணிந்து நடக்கும் பண்பாகும்! அந்தப் பணிவே சால்புடைய பெருமக்களின் பகைவரையும் நண்பராக மாற்றும் ஆற்றல் வாய்ந்த படைக் கருவியும் ஆகும்!
சிறுவன் ஒருவன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்போது, பெரியவர் ஒருவர் அவனிடம், 'பள்ளிக்குச் செல்ல உனக்குப் பிடிக்கிறதா?' என்று கேட்டதற்கு, அச்சிறுவன், "பள்ளிக்குச் செல்லவும், பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பவும் பிடித்திருக்கிறது. ஆனால், இந்த இரண்டிற்கும் இடையே நடப்பதுதான் {வகுப்புகள்) எனக்குப் பிடிக்கவில்லை" என்றான்.
நம்மில் பலருக்குக் கிறிஸ்துவின் பிறப்பும் உயிர்ப்பும் பிடித்திருக்கிறது, ஆனால், இந்த இரண்டிற்கும் இடையே நடந்த அவருடைய பாடுகளும் சிலுவை மரணமும் பிடிக்கவில்லை. கிறிஸ்து முதன் முறையாகத் தமது பாடுகளை முன்னறிவித்தபோது, அவருடைய சீடர்களுக்கு அது பிடிக்கவுமில்லை, விளங்கவுமில்லை. எனவேதான் பேதுரு கிறிஸ்துவைத் தனியாக அழைத்து அவரைக் கடித்து கொன்டார் (மாற் 8:32). மெசியாவின் சிலுவையும் சிலுவை மரணமும் சீடர்களுக்கு மாபெரும் இடறவாக இருந்தன.
எனவே, சிலுவையின் இடறலைச் சீடர்களுடைய மனதிலிருந்து அகற்ற, இயேசு பேதுரு, யாக்கோப்பு, யோவான் ஆகிய மூவருடன் ஒக் உயர்ந்த மலைக்குச் சென்று அவர்கள் முன்பாகத் தோற்றம் மாறி, தமது தெய்வீக மாட்சிமையை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். இந்த மூன்று சீடர்கள் தான் இயேசு கெத்சமனித்தோட்டத்தில் இரத்த வேர்வை வேர்க்கும்போதும் இயேசுவுடன் இருக்கப் போகின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்ந்த மலையும் ஒளிரும் மேகமும் இறைப்பிரசன்னத்தின் வெளிப்பாடாகும். இயேசுவுடன் மோசேயும் எலியாவும் தோன்றுகின்றனர், பழைய உடன்படிக்கையில் சட்டமும் இறைவாக்குகளும் முக்கியத்துவம் பெறுகின்றன, சட்டத்தின் பிரதிநிதியாக மோசேவும் இறைவாக்கினார்களின் பிரதிநிதியாக எலியாவும் தோன்றுகின்றனர். இவ்வாறு சட்டமும் இறைவாக்கும் இயேசுதான் மெசியா என்று சான்று பகர்கின்றன. அத்துடன் தந்தையாகிய கடவுளும் இயேசு தம் அன்பார்ந்த மகன் எனச் சான்று பகர்கிறார். உயர்ந்த மலையில் நிகழ்ந்தது ஓர் இறைத் தோற்றம் அல்லது திருக்காட்சியாகும் (Theophathy).
மோசேயும் எலியாவும் இயேசுவுடன் அவர் எருசலேமில் படவேண்டிய அவருடைய பாடுகளைப் பற்றிச் பேசினர் என லூக்கா குறிப்பிடுகின்றார் (லூக் 9:31). மெசியா பாடுபட்டே மாட்சிமை அடைய வேண்டும் (லூக் 24:26) என்ற இறையியல் உண்மை அப்போது வெளிப்படுத்தப்படுகிறது.
தவக்காலத்தில் சிலுவையின் மறைபொருளை நன்குணரவேண்டும். இறைவனுடைய மீட்புத் திட்டம் இயேசுவின் சிலுவை வழியாகவே நிறைவேறுகின்றது. இயேசுவைப் பின்பற்ற விரும்புவோர் சிலுவை சுமந்தே அவரைப் பின்பற்ற வேண்டும். இயேசுவின் சீடர்களுக்குச் சிலுவை விருப்பப்பாடமில்லை, கட்டாயப்பாடமாகும். ஒருவர் தம்மை இழந்தால்தான் வாழ்வு பெறமுடியும், தம் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புபவர் அதை இழந்துவிடுவார் (மத் 16:24-25).
இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் தமது ஒரே மகன் ஈசாக்கை இழக்க முன்வந்தார். எனவேதான் அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார் இயற்கையில் எந்தவொரு பொருளும் தனது பழைய உருவத்தை இழந்த பின்னர்தான் புதிய உருவைப் பெற இயலும். கோதுமை மணி முளைப்பதற்குமுன் அது மண்ணில் விழுந்து மடிய வேண்டும். சந்தனக் கட்டை மணம் கொடுப்பதற்கு முன் அது அரைக்கப்படவேண்டும், கரும்பு வெல்லமாக மாறுவதற்கு முன், அது பிழியப்படவேண்டும். மெழுகுதிரி ஒளி தருவதற்கு முன் அது கரைந்து உருகவேண்டும், பால் சுவை தருவதற்குமுன் அது காய்ச்சப்பட வேண்டும், தங்கம் ஆபரணமாவதற்குமுன் அது நெருப்பில் சுடப்பட வேண்டும். பெண் பிள்ளைப்பேறு அடைவதற்குமுன் அவர் பேறுகால வேதனையுற வேண்டும். அவ்வாறே நாம் கிறிஸ்துவில் புதுப்படைப்பாக மாறுவதற்குமுன், நமது ஆனவமும் சுயநலமும் இறத்து புதைக்கப்பட வேண்டும்.
அரச பக்திமிக்க ஓர் இளைஞன் ஒவ்வொரு நாளும் தனது உடலிலிருந்து பல துளி இரத்தமெடுத்து, அதைக் கொண்டு அரசருடைய உருவப்படத்தை வரைந்து, அதை அரசருடைய பிறந்த நாளன்று பிறந்தநாள் பரிசாக அவருக்குக் கொடுத்தான். நாமும் அவ்வாறே இரத்தம் சிந்தி, அதாவது தியாகங்கள் செய்து தியாக இரத்தத்தைக் கொண்டு இயேசுவின் உருவத்தை வரைய வேண்டும், அதாவது இயேசுவின் சாவுக்கு ஒத்தவர்களாக உருமாற்றமடைய வேண்டும். " இப்போது நாம் அனைவரும் , ஆண்டவரின் மாட்சிமையைப் பிரதிபலிக்கிறோம். இவ்வாறு மேன்மேலும் மாட்சிமை பெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம்." ( 2கொரி 3:18).
காக்கா என்றும் கறுப்பாக இருப்பதற்குக் காரணம் என்ன? அது இன்னும் உஜாலாவுக்கு மாறவில்லையாம்! உஜாலா சொட்டு நீலம் ஆடைகளை வெண்மையாக்குகிறது, இயேசு உருமாற்றமடைந்தபோது, அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்தச் சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெண்மையாக ஓளிவீசின (மாற் 8:4).
நாம் திருமுழுக்குப் பெற்றபோது நமது மேன்மையின் அடையாளமாகத் திருச்சபை நமக்கு ஒரு வெண்ணிற ஆடையைக் கொடுத்து அதை மாசு படாமல் விண்ணக வாழ்வுக்குக் கொண்டு, போகும்படி பணித்தது, மீட்படைந்தோர் விண்ணகத்தில் வெண்ணிறஆடை அணிந்திருப்பர். (திவெ 7:9), இவர்கள் தங்கள் ஆடைகளைச் செம்மறியின் இரத்தத்தில் தோய்ந்து வென்மையாக்கிக் கொண்டனர் (திவெ 7:14), இயேசுவின் இரத்தம் நம்மை எல்லாவிதப் பாவங்களிலிருந்தும் விடுவித்து நம்மைத் தூய்மையாக்க வல்லது. இத்திருப்பலியில் நாம் இயேசுவின் திருவுடலை உட்கொள்ளும் போதெல்லாம் திடமடைகிறோம், அவரது இரத்தத்தைப் பருகும்போதெல்லாம் கழுவப்படுகிறோம். இதன் விளைவாக நாம் இயேசுவின் சாயலுக்கு ஒத்தவர்களாய் உருமாறவேண்டும். ஒவ்வொரு நாளும், நமது வாழ்க்கைச் சூழலில், தன்னலம் மறந்து பிறருக்காக வாழ்ந்து நம்மையே நாம் இழக்கும்போது நாம் இயேசுவாக மாறுகிறோம். அந்நிலையில் வாழ்வது நாமல்ல, கிறிஸ்துவே நம்மில் வாழ்கிறார் (கலா 2:20).
நாம் சாவுக்குப் பயப்படத் தேவையில்லை, ஏனெனில், நாம் சாகமாட்டோம், வேற்றுருப் பெறுவோம், அழிவிற்குரிய நம் உடல் அழியாமையையும், சாவுக்குரிய நம் உடல் சாகாமையையும் அணிந்து கொள்ளும் (1 கொரி 15:51-54), இயேசுவின் இரண்டாம் வருகையின்போது, படைப்பனைத்தும் புத்துயிர் பெறும்போது, நாமும் அவரைப்போலவே இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோலவே அவரைக் காண்போம் (1 யோவா 3:2).
உருமாற்றத் திருக்காட்சி
என்றோ எங்கோ படித்த புதுக்கவிதை இது!
''இன்றுகூட எல்லாரும்
அரிச்சந்திரன்களாக இருக்க முடியும்.
இறுதியில் இறைவன் வந்து
அருள் புரிவதாய் இருந்தால்!”
ஆபிரகாமின் விசுவாசம் அப்படி ஒரு நம்பிக்கையையா அடிப்படையாகக் கொண்டது? இறுதியில் இறைவன் தன் மகனைப் பரிகொடுக்க விடமாட்டார் என்ற எதிர்பார்ப்பா ஒரேப் மலையை நோக்கி அரை நடக்க வைத்தது?
இருட்டிலே நடந்தார் - எது நேர்ந்தாலும் சரி, இறை விருப்பப்படி எல்லாம் நடக்கட்டும் என்ற மனத் தெளிவோடு! நீதிமானை வாழ பாவக்கும் விசுவாச உறுதியோடு!
அவர் கண்முன்னே நம்பிக்கை ஒளி!
விசுவாசத்தால் மலைகளை அசைக்கலாம், பெயர்க்கலாம், அகற்றலாம், மலைபோல துன்பங்களையும் சோதனைகளையும் கடுகளவு நம்பிக்கை காணாமல் செய்து விடும்.
ஆபிரகாமைப் பொருத்தவரை - கண்ணால் காண முடியாததை யெல்லாம் காண வைக்கும் கண் விசுவாசம், காதால் கேட்க முடியாததை யெல்லாம் கேட்கச் செய்யும் காது விசுவாசம். கரத்தால் தொட்டு உணர முடியாததையெல்லாம் தீண்ட வைக்கும் கரம் விசுவாசம். இயலாது, நடக்க முடியாது என்று எண்ணுவதையெல்லாம் சாத்தியமாக்கும் ஆற்றல் விசுவாசம்.
பறவைகளால் பறக்க முடிகிறது. நம்மால் முடிவதில்லை. ஏன் தெரியுமா? பறவைகளுக்கு நிறைய விசுவாசம் உண்டு. விசுவாசம் என்பது இறக்கையாகும். To have faith is to have wings. விசுவாசமுள்ள மனிதனுக்கு விடிவதெல்லாம் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளில்! அவன் விழித்து எழுவதெல்லாம் புத்துணர்வு கலந்த எதிர்பார்ப்புக்களில்!
வானத்து விண்மீன்கள் போல உன் இனம் பலுகும் பெருகும் என்பது வாக்குறுதி. ஆனால் இருக்கும் ஒரே மகனையும் எனக்குப் பலிகொடு என்பது எதார்த்தம். இது எப்படி?
கடவுள் என்ன நரபலி கேட்கும் பயங்கரப் பேர் வழியா? ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் பல சமயங்களிலும் தங்கள் தெய்வங்களுக்கு நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் இறைவன் ஆபிரகாமின் நம்பிக்கையைச் சோதிக்க அவர் மகனைப் பலியிட வேண்டும் என்று கேட்ட போது அது அவருக்குப் பெரும் சோதனையாகத் தோன்றியதே தவிர பெரிய தவறாகத் தோன்றவில்லை.
முடிவில் கதையின் கருவும் நிறைவும் முற்றிலும் வேறுபட்டவை. அதன் உச்சம் ஈசாக் பலியாகவில்லை என்பது தானே! நெஞ்சுருக்கும் அந்த நிகழ்வின் நோக்கம் என்ன?
ஆபிரகாம் எவ்வளவு உண்மையும் நம்பிக்கையும் உள்ளவர், எவ்வளவு பிரமாணிக்கமானவர் என்பதை அறிந்து கொள்ள அல்ல; (முக்காலமும் உணரும் கடவுளுக்கு அது முன்கூட்டியே தெரியும்) மாறாகக் கடவுள் எவ்வளவு பிரமாணிக்கம் உள்ளவர், வார்த்தை தவறாதவர் என்பதை ஆபிரகாமுக்கு உணர்த்தவே இந்தச் சோதனை. ஒவ்வொரு சோதனையிலும் சோதிக்கப்படுவது மனிதன் மட்டுமல்ல, கடவுளும் தான்!
ஈசாக்கை எரிபலியாக்கும் நிகழ்வு தந்தையான கடவுளின் பேரன்புப் பிரதிபலிப்பு. இறைமகன் இயேசு சிலுவையில் பலியான மீட்பு வரலாற்று நிகழ்ச்சிக்கு ஒரு முன்னோட்டம். அதனால்தான் "தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள்" (உரோமை 8:32) ஆபிரகாமின் பலியை மறுசிந்தனை செய்தார். மாற்றுப் பலிப்பொருளுக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் தன்மகன் இயேசு கல்வாரியில் பலியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கு மாற்றுப் பலிப்பொருள் பற்றி சிந்திக்க விரும்பவில்லை. சாவிலும் கூடத் தன் உடன்படிக்கையை முறிக்காத அன்பு இது. இப்படிப்பட்ட அன்பு எப்படி சாக முடியும்? அதனால்தான் அது உயிர்த்தெழுந்தது. அன்பே நிரந்தரம் என்பதற்குச் சாட்சியாக நம் நடுவே அது உயிர் வாழ்கிறது.
மீட்புப் பயணம் சிலுவை வழியே - இறைமகன் இயேசுவுக்கு மட்டுமல்ல, அவரது சீடர்களுக்கும் கூட.
சிலுவை இயேசுவுக்குச் சுமையாகக் கனத்தது;
சீடர்களுக்கு இடறலாக இருந்தது!
இயேசு தபோர் மலையேற... இரு நோக்கங்கள்:
தன் சிலுவையைச் சுமக்க இறையாற்றல் தேடி... தன் தந்தையைப் பார்த்துச் செபிப்பதற்காக. விண்ணரசுக்குக் குறுக்கு வழியில்லை. குறுகிய வழிதான் உண்டு. குறுக்கு வழி சிலுவையைத் தவிர்ப்பது; குறுகிய வழி சிலுவையைச் சந்திப்பது! சவாலாக ஏற்பது! துன்பத்தைக் குடித்துச் சமாளி - இது பாமரன் நிலை! துன்பத்தைச் சிரித்துச் சமாளி! (“இடுக்கண் வருங்கால் நகுக”) - இது வள்ளுவர் தத்துவம் (திருக்குறள் 621) துன்பத்தைச் செபித்துச் சமாளி - இது கிறிஸ்தவ வாழ்க்கை முறை.
சிலுவையின் இடறலை நீக்கித் தன் சீடர்களை நம்பிக்கை வாழ்வில் வலுப்படுத்த... அனுபவிக்கப் போகும் எதிர்கால மகிமையை அவர்களுக்கு உணர்த்தி அவர்களை உறுதிப்படுத்த. சிலுவை யூதர்களுக்கு இடறல். கிரேக்கர்களுக்கு மடமை. அழைக்கப்பட்ட நமக்கோ கடவுளின் ஞானமல்லவா! தெய்வ வல்லமையல்லவா! இறைவனின் பேரன்பு அல்லவா! (1 கொரி.1:2329). சிலுவையின்றி மகிமை ஏது? தியாகமின்றிச் செழுமை ஏது? "அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும். அப்போது தான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்". (ரோமை 8:17).
தியாகம், உருமாற்றம்
தியாகம், மனம் திரும்புதல், மாற்றம் மற்றும் உருமாற்றம் அல்லது, தோற்றமாற்றம் ஆகியவை தவக்காலத்தில் பயன்படுத்தப்படும் சில முக்கிய கருத்துக்கள். தவக்காலத்தின் இரண்டாவது ஞாயிறன்று வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், தியாகம் (ஆபிரகாமின் தியாகம்) மற்றும் உருமாற்றம் (தோற்றமாற்றம்) பற்றிய கருத்துக்களைப் பற்றி சிந்திக்க நம்மை அழைக்கின்றன.
ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில், நாம் ஒவ்வொருவரும், தனிப்பட்ட முறையில் மாற்றம் பெறுவதற்கு அழைக்கப்படுகிறோம். ஆனால், அத்துடன் நம் கடமை முடிந்துவிடுவதில்லை. நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்திலும், நாட்டிலும், நல்ல மாற்றங்களை உருவாக்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். அத்தகைய மாற்றங்களைக் கொணர, நாம் ஒவ்வொருவரும் பல்வேறு தியாகங்களை மேற்கொள்ள முன்வரவேண்டும்.
இவ்வாண்டு, உலகின் மக்கள் தொகையில் பாதி பேர் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் புனிதப் பணியில் ஈடுபடுவர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஏட்டளவிலாவது, மக்களாட்சி நடைபெறுவதாகச் சொல்லப்படும் நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் இரண்டும், 2024ம் ஆண்டு தேர்தலில் ஈடுபடவுள்ளன. இவ்விரு நாட்டு மக்களும் தங்கள் வாக்குரிமையை தகுதியான முறையில் பயன்படுத்தி, மக்களாட்சியைக் காப்பாற்றும் வகையில் மாற்றங்களை கொணர்வர் என்று நம்புவோம்.
மாற்றம், தியாகம் ஆகியவற்றைப் பற்றி சிந்திக்க அழைக்கும் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு, பிப்ரவரி 25ம் தேதியன்று சிறப்பிக்கப்படுவதை, இறைவன் நமக்கு வழங்கியுள்ள அருள்நிறைந்த தருணமாக எண்ணிப்பார்க்கலாம். ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1986ம் ஆண்டு, பிப்ரவரி 25ம் தேதி, மக்கள் சக்தியால் உருவான புரட்சியொன்று பிலிப்பீன்ஸ் நாட்டில் மக்களாட்சியை மீண்டும் கொணர்ந்தது. 20 ஆண்டுகளாக அந்நாட்டில் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் நடத்திவந்த சர்வாதிகார ஆட்சியை விரட்டியடித்து, மக்களாட்சி கொண்டுவரப்பட்டது. ஏறத்தாழ 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களும், அவர்களோடு இணைந்து போராடிய அரசியல் மற்றும் மத அமைப்புக்களும் கொண்டிருந்த துணிவு, மற்றும் தியாகம் ஆகியவை, இந்த மாற்றத்தைக் கொணர்ந்தது.
தற்போதைய உலகச் சூழலில் மக்களாட்சி என்ற உரிமை பெருமளவில் சிதைந்துள்ளது. அண்மைய புள்ளிவிவரங்கள் இதை உறுதி செய்கின்றன. 2005க்கும், 2021க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்களின் சுதந்திரம் படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, உலகில், 120 முதல் 125 நாடுகளில் மக்களாட்சி முழுமையாக, அல்லது, அரைகுறையாக உள்ளது. இந்தியாவிலும், அதைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், மியான்மார், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை ஆகிய அனைத்து நாடுகளிலும், மக்களாட்சி பல்வேறு வழிகளில் சிதைந்துள்ளது.
இரஷ்ய அரசுத்தலைவன் விளாடிமிர் புடின் கட்டுப்பாடு ஏதுமின்றி தன் நாட்டில் நடத்திவரும் அடக்குமுறைகளை நாம் அறிவோம். இந்த அடக்குமுறைகளை எதிர்த்து, உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தபோதிலும் தன்னை யாரும் எதுவும் செய்யமுடியாது என்ற ஆணவத்தில் புடின் ஆட்சி நடைபெறுகிறது. அந்நாட்டில், புடினுக்கு எதிராக துணிவோடு குரல் கொடுத்துவந்த எதிர்க்கட்சித் தலைவர், அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) அவர்கள், பிப்ரவரி 16ம் தேதி, கொல்லப்பட்டார். உலகின் வடதுருவத்தில் உள்ள ஒரு சிறையில் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ள இவரது உடலை, இரண்டு வாரங்களுக்குப் பின்னரே தரமுடியும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த இரு வாரங்களில், அவரது உடலில் நடத்தப்பட்ட சித்ரவதைகள் மற்றும், அவரது உடலில் ஏற்றப்பட்ட நச்சுப் பொருள்கள் அனைத்தின் தடயங்களும் அழிக்கப்படும் என்று கூறப்படுகிறது. உலகின் பல நாடுகள் எழுப்பிவரும் கண்டனங்களைப்பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல் விளாடிமிர் புடின் என்ற தனி மனிதன் நடத்தும் அரக்கத்தனமான ஆட்சி, நமக்கெல்லாம் நல்லதொரு பாடம்.
தனி மனிதர்கள் கட்டுக்கடங்காத சக்தியை கைப்பற்றிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதற்கு, இரஷ்யா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் நேரடியான எடுத்துக்காட்டுகள். இந்தியா போன்ற நாடுகள் மறைமுகமான எடுத்துக்காட்டுகள். மக்கள் சரிவர விழித்தெழாமல் போனால், தேர்தல்களை சந்திக்கவிருக்கும் இந்தியாவிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் இத்தகைய அரக்கர்கள் ஆட்சியைக் கைப்பற்றக்கூடும். இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த மக்களாகிய நமக்கு சக்தி உள்ளது என்பதை பிலிப்பின்ஸ் நாடு நமக்கு உணர்த்தியுள்ளது. மக்களின் சக்தியால் மாற்றங்கள் உருவாகும், ஆனால், அந்த மாற்றங்களைக் கொணர, நாம் ஒவ்வொருவரும் தியாகங்களைச் செய்யவேண்டும்.
இந்த ஞாயிறு வழிபாட்டுக்கென தரப்பட்டுள்ள வாசகங்கள் வழியே, மாற்றம், உருமாற்றம் மற்றும் அதற்குத் தேவையான தியாகம் ஆகியவற்றை சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு தோற்றம் மாறிய நிகழ்வு வழியாகவும் (மாற்கு 9:2-10), ஆபிரகாம், தன் மகனையேப் பலியிடத் துணிந்த தியாகத்தின் வழியாகவும் (தொடக்க நூல் 22:1-2, 9a, 10-13, 15-18) நம் வாழ்க்கைக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக்கொள்ள முயல்வோம்.
தொடக்க நூலிலிருந்து வழங்கப்பட்டுள்ள முதல் வாசகத்தின் அறிமுக வரிகள், நாம் வாழ்வில் அடிக்கடி கேட்கும் ஓர் ஆழமான கேள்வியை நினைவுபடுத்துகின்றன: தொடக்க நூல் 22:1-2
அக்காலத்தில், கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார். அவர் அவரை நோக்கி, “ஆபிரகாம்!” என, அவரும் “இதோ! அடியேன்” என்றார். அவர், “உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக் கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல். அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரிபலியாக அவனை நீ பலியிடவேண்டும்” என்றார்.
‘கடவுள் ஆபிரகாமைச் சோதித்தார்’ என்று இன்றைய முதல் வாசகத்தில் காண்கிறோம். வாழ்வில் நாம் அவ்வப்போது, அல்லது, அடிக்கடி கேட்பது: "ஏன்தான் கடவுள் என்னை இவ்வளவு சோதிக்கிறாரோ?" என்ற வேதனை நிறைந்த கேள்வி. இப்படி ஒரு கேள்வியை மற்றவர் என்னிடம் எழுப்பும்போது, ஓர் அருள்பணியாளர் என்ற முறையில், பல வேளைகளில் பதில் சொல்லமுடியாமல் தவித்திருக்கிறேன். நான் சொல்ல முயன்ற பதில்களில் எனக்கு ஓரளவு தெளிவைத் தந்த பதில் இதுதான்: "கடவுள் யாரை அதிகம் நேசிக்கிறாரோ, அவர்களுக்கு அதிகம் சோதனைகள் தருகிறார்... விசுவாசத்தில் யார் அதிகம் வேரூன்றியிருக்கிறார்களோ, அவர்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த சவால்களை அனுப்புகிறார். அந்தச் சோதனைகளை, சவால்களை வெல்வதன் வழியே, மற்றவர்களுக்கு நம்பிக்கைத் தரும் ஒரு பாடமாக அவர்கள் வாழ்வு அமையவேண்டும் என்பது கடவுளின் விருப்பமாக இருக்கலாம்" என்ற பதிலே, எனக்கும், பிறருக்கும், ஓரளவு தெளிவைத் தந்த பதில்.
வாழ்க்கையோடு போராடும் பலரை நாம் சந்தித்திருக்கிறோம். அந்தப் போராட்டங்களில் அவர்கள் வெற்றி கண்டனரா, இல்லையா, என்பதைவிட, அவர்கள் அந்தப் போராட்டங்களை எதிர்கொண்ட பக்குவம், நமக்குப் பாடமாக அமைகின்றது. விவிலியத்தில் நாம் சந்திக்கும் பல எடுத்துக்காட்டான மனிதர்களின் வாழ்வில் இது நடைபெற்றுள்ளது. ஆபிரகாமில் ஆரம்பித்து, மோசே, யோபு, இறைவாக்கினர்கள், மரியா, இயேசு, சீடர்கள் என்று, பலரும், இறைவன் மீது கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையின் அடிப்படையில் தங்கள் போராட்டங்களை வென்றனர் என்பதை நாம் பார்க்கிறோம்.
ஆபிரகாமை இறைவன் சோதித்த நிகழ்வின் வழியே நாம் பயிலக்கூடிய பாடங்கள் பல உள்ளன. இறைவன் ஆபிரகாமுக்குத் தந்தது, ஒரு கொடுமையான சோதனை. குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த ஆபிரகாமுக்கு, ஈசாக்கு பிறந்தபோது, அவரது வயது 100 (காண்க. தொ.நூல் 21:5). ஈசாக்கு வழியாக, ஆபிரகாமின் சந்ததி, வானில் உள்ள விண்மீன்கள் போலவும், கடற்கரை மணலைப் போலவும் பெருகும் என்று கூறிய அதே இறைவன், இப்போது அந்த நம்பிக்கையை வேரறுக்கும் வண்ணம், ஈசாக்கைப் பலியிடச் சொல்கிறார்.
"உன் நாட்டிலிருந்து... புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்" (தொ.நூல் 12:1) என்பதில் ஆரம்பித்து, இறைவன் வழங்கிய கட்டளைகள் அனைத்திற்கும் மறுப்பு ஏதும் சொல்லாமல் பணிந்து பழகிப்போன ஆபிரகாமுக்கு, மகனைப் பலிதரவேண்டுமென இறைவன் கொடுத்த கட்டளை பேரதிர்ச்சியைத் தந்திருக்கும். இந்தக் கொடுமையை நிகழ்த்த இறைவன் ஓர் இடத்தையும் தேர்ந்தெடுக்கிறார். அது ஒரு மலை.
மலைகள் இறைவனின் இருப்பிடம்; அங்கு இறைவனைச் சந்திக்கலாம், இறைவனின் அருள்கொடைகளால் நிறைவடையலாம் என்ற நம்பிக்கையில் வளர்ந்தவர் ஆபிரகாம். நிறைவடைவதற்குப் பதில், தன்னிடம் உள்ளதை பறித்துகொள்வதற்கு இறைவன் தன்னை ஒரு மலைக்கு அழைக்கிறார் என்ற எண்ணம், ஆபிரகாமுக்குப் பெரும் சவாலாக இருந்திருக்கும். இருந்தாலும் புறப்படுகிறார். அவர் புறப்பட்டுச் சென்ற அந்தப் பயணம் அணு, அணுவாக அவரைச் சித்ரவதை செய்த பயணம். இந்தப் பயணத்தைக் கொஞ்சம் ஆழமாகச் சிந்திப்பது நல்லது.
ஒரு நொடியில் உயிர் துறப்பதற்கும், நாள்கணக்கில், அல்லது, மாதக்கணக்கில், சித்ரவதை செய்யப்பட்டு உயிர் துறப்பதற்கும் உள்ள வேறுபாட்டை எண்ணிப் பார்க்கலாம். அத்தகையச் சித்ரவதைக்கு, ஆபிரகாம் உள்ளாக்கப்பட்டார். இந்தப் பலியை, ஆபிரகாம் தன் வீட்டுக்கருகில், நிறைவேற்றியிருக்கலாம். ஆனால், அந்தப் பலியை நிறைவேற்ற இறைவன் வேறோர் இடத்தைக் குறிப்பிட்டார். இறைவன் சொன்ன அந்த மலையை அடைய ஆபிரகாம் மூன்று நாள் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்த மூன்று நாட்களும், அந்தத் தந்தையின் மனம், எவ்வளவு சித்ரவதை அடைந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். வழியில் தந்தையும், மகனும் என்ன பேசியிருக்க முடியும்? தன் மகனைக் கண்டபோதெல்லாம், ஆபிரகாமின் உள்ளம், இரணமாகி, இரத்தம் சிந்தியிருக்கும்.
அவர்கள் மலையை அடைந்தபின், ஆபிரகாம், சிறுவன் ஈசாக்கின் தோள் மீது விறகுகட்டைகளை சுமத்துகிறார். சிறுவனும், அந்தக் கட்டைகளைச் சுமந்துகொண்டு மலைமீது ஏறுகிறான். போகும் வழியில், தந்தையிடம், "அப்பா, இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான ஆட்டுக்குட்டி எங்கே?" (தொ.நூல் 22:7) என்று கேட்கிறான். கள்ளம் கபடமற்ற அந்தச் சிறுவனின் கேள்வி, ஆபிரகாமின் நெஞ்சை ஆயிரம் வாள் கொண்டு கீறியிருக்கும். கண்களில் பொங்கியக் கண்ணீரை மறைப்பதற்கு, தலையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு, ஆபிரகாம், "கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே" என்று, ஏதோ ஒரு பதிலை, ஒப்புக்காகச் சொல்லி, சமாளிக்கிறார்.
மகனைப் பலிதருவது என்பதே, மிக, மிக அரக்கத்தனமான கட்டளை. அந்தக் கட்டளையை ஆபிரகாம் உடனடியாக நிறைவேற்ற விடாமல், இறைவன் அவருக்குக் கூடுதலாக ஏன் மூன்று நாள் நரக வேதனையையும் தந்தார்? எளிதில் பதில் சொல்லமுடியாத ஒரு கேள்வி இது. விவிலிய விரிவுரையாளர்கள் இதற்குக் கூறும் விளக்கம் இது: இந்த நிகழ்வு, பல வழிகளில், கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது. இயேசுவின் பாடுகள் மூன்று நாட்கள் தொடர்ந்தன. சிறுவன் ஈசாக்கு, பலிக்குத் தேவையான கட்டைகளைச் சுமந்து, மலைமீது ஏறியதுபோல், இயேசுவும் சிலுவையைச் சுமந்து, கல்வாரி மலைமீது ஏறினார். ஈசாக்கு கேட்ட கேள்விகளுக்குப் பதில்சொல்ல இயலாமல், ஆபிரகாம் துன்புற்றார். பாடுகளின்போது, இயேசு கேட்ட கேள்விகளுக்கு, விண்ணகத் தந்தை பதில் ஏதும் தரவில்லை. இந்த நிகழ்வில் ஆபிரகாம் மூன்று நாட்கள் நரக வேதனை அடைந்ததைப் போல, தந்தையாம் இறைவனும், இயேசுவின் பாடுகளின்போது, கொடூர வேதனை அடைந்தார். இப்படி பல ஒப்புமைகள் வழியே, இந்த நிகழ்வு, கல்வாரிப் பலியை நினைவுறுத்துகிறது என்று, விவிலிய விரிவுரையாளர்கள் விளக்கமளித்துள்ளனர்.
மகனைப் பலி கேட்ட இறைவன், இறுதியில், ஆபிரகாமுக்கு, மலையுச்சியில், இறையனுபவத்தை அளிக்கிறார். நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு மலையுச்சியில், இயேசுவின் தோற்ற மாற்றம் என்ற இறையனுபவம் பெற்ற சீடர்களிடம், இறைவன், பலியை எதிர்பார்க்கிறார். வேதனைகள் மற்றும் தியாகங்களின் உச்சக்கட்டமாக இறையனுபவத்தைப் பெறுவதும், இறையனுபவத்தின் உச்சக்கட்டமாக, வேதனைகளையும், தியாகங்களையும் மேற்கொள்ள துணிவு கொள்வதும், நம்பிக்கை என்ற நாணயத்தின் இரு பக்கங்கள்.
இயேசுவின் தோற்ற மாற்ற நிகழ்வின் இறுதியில், நற்செய்தியாளர் மாற்கு பதிவு செய்துள்ள வரிகள், நமக்கு ஒரு முக்கியப் பாடத்தைச் சொல்லித் தருகின்றன. இயேசுவின் தோற்ற மாற்றத்தைக் கண்ட பேதுரு, தன்னிலை மறந்து, பரவசத்தில் மூழ்கினார். பேதுரு இயேசுவைப் பார்த்து, "ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்" என்றார். (மாற்கு 9:5)
.
அதுவரை இயேசுவை சாதாரண மனித நிலையில் கண்டு பழகிப் போயிருந்த பேதுருவுக்கு, 'வெள்ளை வெளேரென ஒளி வீசிய' இயேசுவின் தோற்றம், பேரானந்தத்தை அளித்திருக்க வேண்டும். அந்த இயேசுவை விட்டுவிட மனமின்றி, பேதுரு, கூடாரம் அமைக்க முன்வந்தார். பேதுருவின் இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, நற்செய்தியாளர் மாற்கு, தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. (மாற்கு 9:6) என்ற கூற்றை இணைத்துள்ளார். இது நமக்கு ஓர் எச்சரிக்கையாக ஒலிக்கிறது. ஆழமான இறையனுபவங்கள் நம்மை நிறைக்கும் வேளையில், சுயநல எண்ணங்கள் பிறந்தால், கடவுளுக்கு ஒரு கூடாரம் அமைத்து, அவரை அங்கேயே பூட்டிவைத்து, அவர்மீது தனிப்பட்ட உரிமை கொண்டாடும் தவறான முடிவுக்கு வந்துவிடுவோம்.
சொல்வது என்னவென்று அறியாது, பேசிய பேதுருவுக்கு மேகங்களின் வழியாக இறைவன் சொன்ன பதில்: "என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்" (மாற்கு 9:7) என்பதே. அந்த அன்பு மகன் இயேசு என்ன கூறுவார்? “இங்கே தங்கியது போதும். வாருங்கள் மலையை விட்டிறங்கி நம் பணியைத் தொடர்வோம்” என்று இயேசு கூறுவார்.
கடவுள் அனுபவங்கள் வாழ்க்கைக்குத் தேவை. கடவுள் தங்குவதற்கு, கடவுளோடு தங்குவதற்கு கூடாரங்கள், கோவில்கள் அமைப்பது நல்லதுதான். ஆனால், கடவுளை, கோவில்களிலேயே தங்கவைப்பதோ, அங்கேயே நாம் தங்கிவிடுவதோ தவறு. இறை அனுபவம் பெற்ற அந்த அற்புத உணர்வோடு, மீண்டும் மலையைவிட்டு இறங்கி, சராசரி வாழ்வுக்குத் திரும்பவேண்டும். அங்கே, மக்கள் மத்தியில் இறைவனைக் காணவும், அப்படி காண முடியாதவர்களுக்கு இறைவனைக் காட்டவும் நாம் கடமை பட்டிருக்கிறோம்.
தோற்றமாற்றம் அடைந்த இயேசு, சீடர்களை அழைத்துக்கொண்டு, மலையிலிருந்து இறங்குகிறார். எதற்காக? மக்களை உருமாற்ற. மக்களை உருமாற்றும் பணியில் நாமும் இணைவோம் வாருங்கள்! குறிப்பாக, தேர்தலை சந்திக்கவிருக்கும் நாடுகளில், மக்களாட்சியைக் காப்பதற்கு நாம் அணி திரள்வோம், தியாகங்கள் செய்வதற்கு தயாராக இருப்போம்.
இன்றைய இறை வார்த்தை வழிபாடானது உருமாற்றம் பெற்று வாழ அழைப்பு கொடுக்கின்றது.
- மோரியா மலையில் ஆபிரகாமும் சீனாய் மலையில் மோசேயும் கார்மேல் மலையில் எலியாவும் இறைவனை சந்தித்தனர்.
- மோசே மிகப்பெரிய சட்ட மாமேதை. எலியா இறைவாக்கினர். இறைவாக்கினர்களுள் முதன்மையானவர் எலியாதான். இறைவனின் குரலாக முழங்கியவர் மிகவும் போற்றத்தக்கவர்.
- இவர்கள் இருவருமே இூயசுவின் உருமாற்றத்தின் போது இயேசுவை சந்திக்கின்றனர். இயேசு இவர்களை விட மேலானவர் என்பதும் இவர்கள் முன்னறிவித்தபடியே இறைமகன் மனு குலத்தை மீட்கப் போகின்றார் என்பதையும் உலகிற்கு உணர்த்துகின்றார்கள்.
- பாடுகளை முதன்முறை அறிவித்த பிறகு நடைபெறுகிற இந்த உருமாற்றம், தொடர்ந்து இந்த மீட்பு பாதையில் சீடர்கள் உடனிருந்து உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
- உருமாற்றம் நம்மிலும் நிகழ வேண்டும். இதை தான் இன்றைய முதல் வாசகத்தில் ஆபிரகாம் வலியுறுத்துகிறார். கொடை என கொடுத்த ஒரே மகனை பலியாக ஒப்புக்கொடுக்கின்றார். அவருடைய துணிவும் நம்பிக்கையும் ஆண்டவரின் ஆசியைப் பெற்று தருகிறது.
- தாபோர் மலை உருமாற்றம் ஜெபத்தோடு தொடங்குகிறது.காண்க லூக்கா 9:27
- கெத்சமணி உருமாற்றம் கூட ஜெபத்தில் தான் நடைபெறுகிறது காண்க லூக்கா 22:41 அங்கு மோசே தோன்றியது போன்று இங்கே வான தூதர்கள் தோன்றுகின்றார்கள்.
- உருமாற்றத்தை விட உள்ள மாற்றமே சிறந்தது. அப்போது "நாமும் இங்கே இருப்பது எவ்வளவு நல்லது "என்று சொல்ல முடியும்.
- இந்த தவக்கால இரண்டாம் ஞாயிறு உள்ளம் மாற்றம் பெற்று கடவுளின் பிள்ளைகளாக வாழ ஆசி வேண்டுவோம்.
இறந்து உயிர்த்தெழுதல்
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு நற்செய்தி வாசகம் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை நம்முன் கொண்டுவருகின்றது. மாற்கு நற்செய்தியாளர், உருமாற்ற நிகழ்வின் இறுதியில், சீடர்களால் இந்நிகழ்வைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று பதிவு செய்கின்றார். மாற்கு நற்செய்தியாளரைப் பொருத்தவரையில், இயேசுவுக்கு அருகில் இருப்பவர்கள் அவரைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள், அல்லது புரிந்துகொள்ள இயலாமல் இருப்பார்கள். நற்செய்தி வாசகத்தின் இறுதியில், ‘இறந்து உயிர்த்தெழுதல்’ என்றால் என்ன என்று சீடர்கள் ஒருவர் மற்றவரோடு பேசிக்கொண்டிருக்கின்றனர்.
இறந்து உயிர்த்தெழுதல் – இவ்விரண்டு வார்த்தைகளையே இன்றைய நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.
இயேசுவின் வாழ்வில் இறந்து உயிர்த்தெழுதல் என்பது ஒரு மீட்புச் செயல். இச்செயலின் வழியாகவே அவர் நம் பாவங்களிலிருந்து நமக்கு விடுதலை தந்தார்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 22), ஈசாக்கு பலியிடப்படும் (!) நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமைச் சோதிக்கும் நோக்குடன் அவருடைய ஒரே மகனான ஈசாக்கைப் பலியிடுமாறு சொல்கின்றார். ஆனால், பலியிட முயன்ற ஆபிரகாமைத் தடுக்கின்றார். இந்த நிகழ்வின் பின்புலத்தில் இருப்பது, குழந்தைகள் பலியிடப்படல் நிகழ்வு. கானான் நாட்டில் வழக்கத்திலிருந்த தெய்வ வழிபாட்டில் குழந்தைகள் பலியிடப்படுதல் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது. மழை, வறட்சி, குடும்பத்தில் செழிப்பு, போரில் வெற்றி போன்ற காரணங்களுக்காக குழந்தைகள் பலியிடப்பட்டனர் என்பதை தொல்பொருள் ஆராய்ச்சிகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. கானான் நாட்டினரின் இந்தப் பழக்கத்தால் இஸ்ரயேல் மக்களும் ஈர்க்கப்பட்டனர். மனாசே அரசரின் காலம் வரை இந்தப் பழக்கம் இஸ்ரயேலில் இருந்தது. ஆனால், கானானியரின் இந்த வழக்கம் இஸ்ரயேல் மக்களிடையே பரவ விரும்பாத ஆசிரியர், ஈசாக்கு பலியிடப்படும் நிகழ்வு வழியாக, ‘ஆண்டவராகிய கடவுள் விரும்புவது கீழ்ப்படிதலைத் தவிர, பலியை அல்ல’ என உணர்த்துகிறார். ஏனெனில், ஆண்டவராகிய கடவுள் குறுக்கிட்டுத் தடுத்துவிடுகின்றார். ஆனால், இதையொத்த இன்னொரு நிகழ்வில், நீதித்தலைவர் இப்தா தன் ஒரே மகளை, கன்னி மகளைப் பலியிடும் நிகழ்வில் கடவுளின் குறுக்கீடு எதுவும் இல்லை என்பதை நாம் மனத்தில் வைத்துக்கொள்வோம் (காண். நீத 11:39).
ஈசாக்கு பலியிடப்படும் நிகழ்வில், ஈசாக்கு இறந்து உயிர்த்தெழுகின்றார். அதாவது, பலியிடப்படுமாறு விறகுகளில் அமர்த்தப்பட்டவர் ஆண்டவராகிய கடவுளின் குறுக்கீட்டால் விடுவிக்கப்படுகின்றார். அதற்கும் மேலாக, ஆபிரகாம் தன் கீழ்ப்படிதலின் வழியாக, நம்பிக்கையில் உயிர்த்தெழுகின்றார். ஆபிரகாமுக்கு இது ஓர் இறந்து உயிர்த்தெழுகின்ற அனுபவமாக இருந்தது.
மேலும், இது ஆபிரகாமிற்கு வைக்கப்பட்ட சோதனை என்று சொல்வதை விட கடவுளுக்கு வைக்கப்பட்ட சோதனை என்றே நாம் சொல்லலாம். ஏனெனில் இங்கே சோதிக்கப்படுவது கடவுள் தான். எப்படி? ஆபிரகாம் ஒருவேளை தன் மகனைப் பலியிட்டிருந்தால், கடவுள் ஆபிரகாமிற்குத் தந்த ‘உன் சந்ததி பெருகும்’ என்ற வாக்குறுதி (தொநூ 12:1-13) பொய்யாகிவிடும். ஆகவே, கண்டிப்பாக கடவுள் தலையிட்டு இந்த பலியை நிறுத்துவார் என்பது வாசகருக்கும், கடவுளுக்கும் தெரியும். ஆனால், ஆபிரகாமிற்குத் தெரியாது. அங்கே தான் வருகிறது ஆபிரகாமின் நம்பிக்கை. ‘கடவுள் குறுக்கிடுவார்’ என ஆபிரகாம் நம்பவில்லை. மாறாக, இந்தப் பலியினால் ஈசாக்கு இறந்து போனாலும், கடவுளால் புதிய சந்ததியைத் தரமுடியும் என கடவுளின் வல்லமையை நம்பினார். ஆக, ஆபிரகாமின் நம்பிக்கை குருட்டுத்தனமான நம்பிக்கை என்று சொல்ல முடியாது. இங்கே ஆபிரகாமின் மனம் மட்டும் வேலை செய்யவில்லை. மாறாக, அவரின் மூளைதான் அதிகம் வேலை செய்கிறது. ஆக, இந்த சோதனையினால் கடவுளும், ஆபிரகாமும் இன்னும் நெருக்கமாகின்றனர்.
இவ்வாறாக, ஆபிரகாம் இறந்து உயிர்த்தெழுகின்றார்.
இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:31-34), கடவுளின் அன்பு பற்றி உரோமை நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல், ‘கடவுள் நம் சார்பாக இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்?’ என்ற கேள்வியைத் தொடுத்து, அவரே விடையும் பகர்கின்றார். அதாவது, தன் மகனை நமக்காக ஒப்புவித்த கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார். அதாவது, இயேசு இறந்து உயிர்த்தெழுந்ததன் வழியாக நம்மோடு உடனிருக்கின்றார். இறப்பிலிருந்து உயிர்த்தெழச் செய்த, அதாவது, இறப்பின்மேல் வெற்றி கொண்ட கடவுள் நம்மோடு இருக்கும்போது எதுவும் நமக்கு எதிராக இருக்க முடியாது என்பது பவுலின் கருத்து. ‘கடவுள் நம் சார்பாக இருக்கிறார்’ என்ற சொல்லாடல் ஒரு ‘மிலிட்டரி’ சொல்லாடல். போருக்குச் செல்லும் நேரத்தில் மட்டும்தான் யார் யாரோடு இருக்கிறார்? யார் சார்பாக இருக்கிறார்? என்ற கேள்விகள் எழும். அவ்வகையில் எதிரியோடு போராடும் நம் சார்பில் கடவுள் இருக்கிறார் என அழுத்துமாகச் சொல்கிறார் பவுல்.
இன்றைய இரண்டாம் வாசகம் வெறும் நான்கு கேள்விகள் தாம்: (அ) நமக்கு எதிராக இருப்பவர் யார்? (ஆ) நமக்கு அருளாதிருப்பாரோ? (இ) யார் குற்றம் சாட்ட இயலும்? (ஈ) யார் தண்டனைத் தீர்ப்பு அளிக்க இயலும்? விடை தெரிந்தே கேட்கப்படும் கேள்விகள் இவை. இக்கேள்விகளின் பதில், ‘இல்லை’ என்ற வார்த்தை மட்டுமே.
பவுல் தன்னுடைய மனமாற்றத்திற்கு முன்பாக, தானே ஆண்டவருக்கு எதிராகப் புறப்பட்டுச் செல்கின்றார். அவரைத் தடுத்தாட்கொள்கின்ற ஆண்டவர் இப்போது தன்னோடு இருப்பதாகப் பவுல் எழுதுகிறார். பவுலைப் பொருத்தவரையில் இதுவே அவருடைய இறந்து உயிர்த்தெழுதல். ஆண்டவருக்கு எதிராக இருந்த சவுல், ஆண்டவரைத் தன் சார்பாகக் கொண்டவராக உயிர்த்தெழுகின்றார்.
இயேசுவின் உயிர்ப்பு நிகழ்வை உருமாற்ற நிகழ்வு என நற்செய்தியாளர்கள் பதிவு செய்துவிட்டனர் என்பதும், உருமாற்ற நிகழ்வு அவருடைய உயிர்ப்பு நிகழ்வின் முன்னோட்டம் என்றும் சில விவிலிய ஆசிரியர்கள் விளக்கம் தருகின்றனர். இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரையில் இறப்பைத் தழுவாதவர்கள் மூன்று பேர்: ஏனோக்கு, எலியா, மற்றும் மோசே. ‘மோசே இறந்துவிட்டார்’ என்று நாம் இச 34-இல் வாசித்தாலும், அவரின் கல்லறை எங்கிருக்கிறது என்று தெரியாததால் அவர் இறக்கவில்லை என்பதே பலருடைய கருத்து.
இன்றைய நற்செய்திப் பகுதி ‘வெளிப்பாடு’ இலக்கிய நடையைக் கொண்டிருக்கிறது.இயேசு தன் சீடர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துகின்றார். ‘வெள்ளை வெளேரன ஆடை’ (தானி 7:9, 12:3), மலையில் வெளிச்சம், குரல் (விப 24:15-18), கூடாரம் (விப 33:7-11) என்னும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகள் இங்கே எதிரொலிக்கின்றன.
இந்த நிகழ்வில் இயேசு இறந்து உயிர்த்தெழுவது முன்னோட்டமாகக் காட்டப்பட்டாலும், அவருடைய சீடர்களே இறந்து உயிர்க்கின்றனர். உருமாற்ற நிகழ்வின் முதல் பகுதியில், எலியாவும் மோசேயும் சீடர்களுக்குத் தோன்றுகின்றனர். ஆனால், இறுதியில், ‘தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.’ இதற்கிடையில், பேதுரு, இயேசுவுக்கும் மோசேக்கும் எலியாவுக்கும் மூன்று கூடாரங்கள் அமைக்க விரும்புகின்றார். மேகத்தினின்று குரல் ஒலித்த போது திருத்தூதர்கள் இயேசுவைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.
திருத்தூதர்கள் இந்நிகழ்வில் இறந்து உயிர்க்கின்றனர். அதாவது, இயேசுவைப் பற்றிய தங்களுடைய பழைய புரிதலுக்கு இறந்து புதிய புரிதலுக்கு உயிர்க்கின்றனர். ஆனால், அதைப் பற்றிய தெளிவில்லாமல் இருக்கின்றனர்.
‘இறந்து உயிர்த்தெழுதலை’ இன்று நாம் எப்படிப் புரிந்துகொள்வது?
தவக்காலத்தின் முதல் வாரத்தில் நாம் தனிமையில் இருந்தோம். பாலைவனத்தில் தனித்திருந்த இயேசு, தான் சோதிக்கப்படும் நிகழ்வில் தன்னுடைய தனித்துவத்தைக் கண்டுகொள்கின்றார். தனித்திருக்கும் நாம் தன்னிறைவில், தனிமைத்தவத்தில் நாம் யார் என்று நம்மை அடையாளம் கண்டுகொள்கின்றோம்.
தவக்காலத்தின் இரண்டாம் வாரத்தில், நம் தனிமையை நாம் இறைமையோடு இணைத்துக் கொள்கின்றோம். முதல் வாசகத்தில், தன் பணியாளர்களையும் கழுதைகளையும் மலைக்குக் கீழே விட்டுச் செல்கின்ற ஆபிரகாம் இறையனுபவம் பெறுகின்றார். நற்செய்தி வாசகத்தில் தனக்கு மிகவும் நெருக்கமான மூன்று திருத்தூதர்களை மட்டும் அழைத்துச் செல்கின்ற இயேசு அவர்கள்முன் தோற்றம் மாறுகின்றார். திருத்தூதர்கள் அங்கே இறைமையைக் கண்டுகொண்டு, இறைவனின் குரலையும் கேட்கின்றனர்.
இறந்து உயிர்த்தெழுதல் நம் வாழ்வில் நடைபெற நாம் என்ன செய்ய வேண்டும்?
- இறை இணைப்பு
ஆண்டவராகிய கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்ததன் வழியாக அவருடன் தன்னை இணைத்துக் கொள்கின்றார் ஆபிரகாம். உருமாற்ற நிகழ்வில் திருத்தூதர்கள் வானத்திலிருந்து வந்த குரல் வழியாக இறைவனுடன் தங்களை இணைத்துக்கொள்கின்றனர். புனித பவுல் தமஸ்கு நகர் செல்லும் வழியில் ஆண்டவரோடு இணைக்கப்படுகின்றார். இறை இணைப்பு நம் வாழ்வில் ஏதாவது ஒரு வழியில் வரலாம். தாவீது அரசருக்கு அது நாத்தான் இறைவாக்கினர் வாயிலாக வருகிறது. புனித அகுஸ்தினாருக்கு அது ஒரு குழந்தையின் குரலாக வருகிறது. இறைவனோடு தான் இணைந்துள்ளதை அறியும் அந்த நொடி மாந்தர்களின் வாழ்வு உயிர்ப்பு பெறுகிறது. ஏனெனில், உயிர்ப்பு என்பதே இறைவனில் இணைவது தானே.
- நொறுங்குதல்
‘இந்த இயேசு யார்?’ என்று புரிந்துகொள்ள இயலாமல் திருத்தூதர்கள் உடைந்துகிடக்கின்றனர். புனித அகுஸ்தினாரும் தன் உடல்சார் இன்பம், பேரார்வம், இறுமாப்பு ஆகியவற்றால் நொறுங்கிக் கிடக்கின்றார். நொறுங்குதல் நடைபெறும்போது நாம் நமக்குள்ளே இறக்கின்றோம். ஒரு கோதுமை மணி போல மடிகின்றோம். மீண்டும் புத்துயிர் பெற்று எழுகின்றோம்.
- குன்றா எதிர்நோக்கு
‘இனி வாழ்க்கை இனிமையாகச் செல்லும்’ என்ற நம்பிக்கையில் உருவாகும் காத்திருத்தலே எதிர்நோக்கு. எதிர்நோக்குவதற்கு இடம் இல்லாதது போலத் தெரிந்தாலும் ஆபிரகாம் எதிர்நோக்கினார் என்கிறார் பவுல். என் வாழ்வு மாற்றம் பெறும் என்னும் எதிர்நோக்கு என்னை உந்தித் தள்ளிக்கொண்டே இருத்தல் வேண்டும்.
இறுதியாக,
உருமாற்றம் என்பது நம் வாழ்விலும் நடக்கின்ற ஒரு நிகழ்வு. மாற்றம் நல்லதை நோக்கியதாக இருந்தால் நாம் இறந்து உயிர்க்கின்றோம். கெட்டதை நோக்கியதாக இருந்தால் இறந்துபோகின்றோம். இறந்து உயிர்த்தெழுதல் நம் வாழ்வில் நடக்கும் தருணங்கள் பல. தவறான பழக்கவழக்கங்கள், தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை உணர்வுகள் போன்றவற்றலிருந்து நாம் இறந்து உயிர்த்தல் நலம். அப்போது நாமும் திருப்பாடல் ஆசிரியர் போல, ‘உயிர் வாழ்வோர் நாட்டில் நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன்’ என்று சொல்ல முடியும்.
மோரியா மலை, தாபோர் மலை என்னும் இரு மலைகளும் கல்வாரி மலையின் முன்னடையாளங்களாகத் திகழ்கின்றன. இறந்து உயிர்த்தல் இன்றும் என்றும் நம்மில் தொடர்கிறது.
கடவுளுக்காய் எதன் மீதான பற்றை நான் விட்டுக்கொடுக்கிறேன்?
அன்புக்குரியவர்களே
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறுக்குள் நாம் காலடி எடுத்து வைக்கிறோம். இத்தவக்காலம் கடவுள் மீது அதிக பற்று வைக்கவும் அதற்காக தேவையற்ற பற்றுக்களை நாம் விட்டொழிக்கவும் நம்மை அழைக்கிறது. அது பல சமயங்களில் எளிதான காரியமல்ல. நம்மை பல துன்பங்களுக்கு உள்ளாக்கும். மன அழுத்தத்தையும் கலக்கத்தையும் துன்பத்தையும் தரும். ஆனால் அதன் முடிவில் நாம் பெறும் ஆசிரோ அளப்பெரியதாய் இருக்கும். இன்றைய வாசகங்கள் இத்தகைய செயலுக்கு நம் கண் முன் இரு மாபெரும் மனிதர்களை உதாரணமாய் தருகின்றது.
முதலாவதாக ஆபிரகாம். ஆபிரகாம் நம்பிக்கையின் தந்தை மட்டுமல்ல. கீழ்படிதலுக்கும் சிறந்த உதாரணம் என்றால் அது மிகையில்லை. கடவுள் மேல் பற்று கொண்டதால் முன்பின் தெரியாத இடத்திற்கு கூட போகத் தயாரானவர். கடவுள் சொன்ன அனைத்தையும் அப்படியே செய்தவர். இம்முறை தன் ஒரே மகனைப் பலியிடுமாறு கடவுள் கேட்டார். நாமாக இருந்திருந்திருந்தால் கடவுளிடம் என்ன சொல்லியிருப்போம் " கடவுளே நான் முதிர்ந்த வயதில் குழந்தை வேண்டுமென்று நான் கேட்டானா? நீராகத் தந்தீர். அக்குழந்தையை நான் மிகவும் நேசிக்கிறேன். இப்போது அக்குழந்தையை பலியாகக் கேட்கிறீரே. என்ன விளையாடுகிறீரா? இது உமக்கு ஞாயமா?" என்று ஏதாவது புலம்பி இருப்போம். கோபப்பட்டிருப்போம். அக்காரியத்தை செய்திருக்க மாட்டோம். ஆனால் கனத்த இதயம் கொண்டிருந்தாலும் ஆபிரகாம் கடவுளுக்கு கீழ்படிந்து அவர் சொன்னதை செய்யப் புறப்பட்டார். இவ்வாறாக கடவுளுக்காக தான் முதிர் வயதில் பெற்ற ஒரே அன்பு மகன் மீதான பற்றினை விட்டுக்கொடுத்தார்.
இரண்டாவதாக இயேசு தாபோர் மலையில் தன் சீடர்கள் முன் உருமாறுகிறார்இயேசு. அப்போது மாட்சிவிளங்கும் தோற்றம், எலியா யோசேப்பின் உடனிருப்பு, இவரே என் அன்பார்ந்த மகன் என்ற தந்தையின் நற்சான்று,அத்தோடு நாம் இங்கேயே இருப்போம் என்ற பேதுருவின் கூற்று ஆகியவை இயேசுவுக்கு கிடைத்தது. ஆயினும் அவற்றை பற்றி கொண்டு இருக்கவில்லை இயேசு. தாபோர் மலையிலிருந்து கீழே இறங்குகிறார் கல்வாரி மலை ஏறுவதற்காக. தந்தையின் மீது பற்று கொண்டவராய் உலகப்பற்று அனைத்தையும் துறந்தார் அவர்.
இப்போது நம்மை சோதித்தறியும் நேரம். ஆபிரகாம் மற்றும் இயேசு கடவுளின் மேலுள்ள அன்பை அல்லது பற்றை உறுதிப்படுத்த தங்களுக்கு உகந்தவற்றை நீதியானவற்றை கூட இழக்கத் துணிந்தனர். ஆனால் கடவுள் நம்மிடம் எதை விடச் சொல்கிறார்? நம் தீய நாட்டங்களையும் நம் வாழ்விற்கு ஊறு விளைவிக்கும் உலகப்பற்றுகளையும் அல்லவா. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு கடவுளிடம் பற்று கொண்டவர்களாய் அவருடைய ஆசிர்வாதத்தை பெற நாம் இன்னும் தயங்குகிறோமே! இனியாவது முயல்வோமா? இறைபற்றை ஆழப்படுத்துவோமா? சிந்திப்போம்.
இறைவேண்டல்
எங்கள் மீது அன்பு கொண்ட இறைவா! உம்மீது பற்றுள்ளவர்களாய் வாழ்ந்து உம் ஆசிரை பெற எதையும் இழக்கக்கூடியவர்களாய் வாழும் மனம் தாரும். ஆமென்.