மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

தவக்காலம் முதல் ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
தொடக்கநூல் 9:8-15 | 1பேதுரு 3:18-22 | மாற்கு 1:12-15

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


மாற்றிக் கொள்ளும் காலம்தான் இந்த தவக்காலம்

தொடக்கம்

கிறிஸ்தவ வாழ்வு என்பது புதிய தொடக்கங்களின் வரலாறு. நமது வாழ்வைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பானது இக்கிறிஸ்தவ வாழ்வில் நமக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த தவக்காலம் நாம் மாறுவதற்காக வழங்கப்படுகிறது. நமது வாழ்வைச் சீர்தூக்கிப் பார்த்து, மாற்றிக் கொள்ளும் காலம்தான் இந்த தவக்காலம்.

இன்று வாசிக்கப்பட்ட நற்செய்தியிலே ஆண்டவர் இயேசு கூறும் இரு முக்கிய வார்த்தைகளைக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். காலம் நிறைவேறிற்று. கடவுளின் அரசு நெருங்கி விட்டது. மனம் திரும்புங்கள். இந்நற்செய்தியை நம்புங்கள் (மாற்கு 1:15) என்று அழைப்பு விடுக்கின்றார். கடவுளின் அரசு என்பது நீதியிலும், அமைதியிலும், மகிழ்ச்சியிலும் அடங்கியுள்ளது என்று புனித பவுல் அடிகளார் உரோ. 14:17ல் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் நீதியையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் சந்திக்க விரும்பினால் தன் பாவத்தை விட்டு விட்டு நலன்களுக்கெல்லாம் ஊற்றாகிய இறைவன் பக்கம் திரும்ப வேண்டும்.

பாவம் என்றால் என்ன?

கதை

ஒரு பாலைவனம். அதன் உள்ளே , நடுவே ஒரு சோலைவனம். அந்தச் சோலைவனத்தில் ஒரு சிறு குளம். அந்தக் குளத்தில் பல தவளைகள் வாழ்ந்தன. அந்தக் குளத்தில் மனித வார்த்தைகளில் சொல்லப்போனால், நீதியும், அமைதியும், மகிழ்ச்சியும் களி நடனம் புரிந்தன.

ஒருநாள் நஞ்சு நிறைந்த நாகப் பாம்பு வழி தவறி அந்தப் பாலைவனத்தில் அகப்பட்டுத் தவித்தது. மணலின் வெப்பத்தைத் தாங்க முடியாது இளைப்பாற இடம் தேடி அலைந்தது. இடம் கிடைக்காத நிலையில் தன் உடலைச் சுட்ட மணலிலிருந்து தப்பிக்கத் தன் வாலை மணலில் ஊன்றி உடலைத் தூக்கி உயர்த்திப் படம் எடுத்தது. உடலின் நிழல் மணல்மீது பட்டது. குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குட்டித் தவளையின் கண்ணில் பட்டது இது. அந்தப் பாம்பின் நிழலில் இளைப்பாற ஆசைப்பட்டது. தன் தாய் தந்தை மற்ற தவளைகளை விட்டு அந்தக் குட்டித் தவளை பாம்பின் நிழலை அடைந்தது. நல்ல பசியோடு இருந்த பாம்பு தவளையைக் கவ்விப் பிடித்து விழுங்கி விருந்தாடியது.

இந்தக் கதையில் வந்த தவளையின் உள்ளத்தில் எழுந்த தவறான ஆசைக்குப் பெயர்தான் பாவம். இதேபோன்று மனிதர்கள் தங்கள் உரிமை வாழ்வை, மன அமைதியை, மகிழ்ச்சியை இழக்கக் காரணமாக இருப்பது அவர்களின் உள்ளத்தில் எழும் வேண்டாத ஆசைகளே. தவறான ஆசைகள் எப்போதும் அழிவிற்கே இட்டுச் செல்லும். ஊனியல்பின் செயல்களான பரத்தமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலைவழிபாடு, பில்லி சூனியம், பகைமை , சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் இவைகளில் இருந்து விடுதலை பெற வேண்டும்.

நாம் இரு காலங்களுக்கு இடையில் உள்ளோம். முதலாவதாக இது வளர்ச்சியின் காலம். நமது குற்றங்களில் நாம் மூழ்கிப் போகாது, இறைவன் தரும் நற்செய்தியை ஏற்று வளர்ச்சி பெற வேண்டிய காலம். தொடக்க நூலில் 9:13-15ல் குறிப்பிடுவதுபோல ஆண்டவர் பக்கம் திரும்புவோர் வாழ்வு பெறுவர். இறைவன் நோவாவையும், அவர் புதல்வர்களையும் நோக்கி, என் வில்லை மேகத்தின் மேல் வைக்கிறேன். இது என் உடன்படிக்கையின் அடையாளம். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெரு வெள்ளமாக வராது என்றார். இந்த மீட்பைப் பெற்றுத் தரத்தான் கிறிஸ்து இறந்தார். எனவே முறையற்ற வாழ்வால் சோர்ந்து நம்பிக்கை இழந்து போகாதபடி நாம் வளர்ச்சி காணும் காலம். இரண்டாவது இது பயிற்சியின் காலம். இயேசு யோர்தான் நீரில் திருமுழுக்குப் பெற்று 40 நாட்கள் பாலைவனத்தில் தவமுயற்சியை மேற்கொண்டு தீமையை முறியடித்தார் (மாற். 1:12-13). நாமும் நம்மைப் பயிற்றுவிக்கப் பாலைவனம் அனுபவம் அடைய வேண்டும். குறையை அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும்.

பழைய ஏற்பாட்டிலே தாவீது அரசன் தவறான ஆசைக்கு இடம் கொடுத்து விபச்சாரம் செய்து அதை மறைக்கக் கொலையும் செய்தான். ஆன்மாவை இழந்தான். ஆனால் இறைவாக்கினர் நாத்தான் அறிவுரைக்குச் செவிமடுத்து (2 சாமு. 12:13) ஆண்டவரை ஏற்று மனம் மாறினான். அமைதி, மகிழ்ச்சியைப் பெற்றுக்கொண்டான். புதிய ஏற்பாட்டில் பாவியாக வாழ்ந்த மதலேன் மரியா இயேசுவின் பாதத்தைத் தொட்டுக் கண்ணீர் வடித்துப் பாவ ஆசைகளை விட்டு பரமனின் பாதத்தைப் பற்றிக் கொண்டாள். திசை மாறிய பறவைக்குத் தன் அன்பு கூட்டில் அடைக்கலம் கொடுத்தார் இயேசு. அவள் இழந்த சமாதானத்தை மீண்டும் கண்டடைந்தாள். பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம். உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக் கொள்வோமென்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலுமிருந்து நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்கு உரியவர், நேர்மையுள்ளவர் (1 யோவா. 1:8-9).

ஆகவே பாவ ஆசைகளை விட்டுவிட்டு, நமது மனதை எல்லா வரங்களுக்கும் ஊற்றாகிய இறைவன் பக்கம் திருப்புவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

பாவம் என்றால் என்ன ?

இயேசு சோதிக்கப்பட்டதாக புனித மாற்கு இன்றைய நற்செய்தியிலே கூறுகின்றார். ஆம். சாத்தான் இயேசுவைச் சோதித்தான். புனித மத்தேயு எழுதிய நற்செய்தியின்படி இயேசுவை மூன்றுமுறை சாத்தான் சோதித்தான். முதல் சோதனை வெளிப்புலன்களுக்கு, குறிப்பாக வாய்க்கு எதிரான சோதனை (மத் 4:3). இரண்டாவது சோதனை உள்புலன்களுக்கு, குறிப்பாக அறிவுக்கு எதிரான சோதனை (மத் 4:6). மூன்றாவது சோதனை இறைநம்பிக்கைக்கு எதிரான சோதனை (மத் 4:9).

“அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது" என்று புனித லூக்கா கூறுகின்றார் (லூக் 4:13). அலகை ஏற்ற காலத்திற்காகக் காத்திருந்தது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் காத்திருந்தது. இயேசு பாடுபடப்போவதற்கு முன்னால் சிலுவையைச் சுமக்கப்போவதற்கு முன்னால் அவரை அலகை சோதித்தது. இயேசு, தான் துன்பப்பட வேண்டும் என்பதைத் தமது சீடர்களிடம் கூறியிருந்தார் (லூக் 9:22, 17:25, 24:26, 24:46). இயேசு துன்பப்படக்கூடாது, கொலை செய்யப்படக்கூடாது என்று புனித பேதுரு கூறியபோது, இயேசு அவரைப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கின்றாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகின்றாய்" (மத் 16:23) என்றார். ஆனால் அவரோ லூக் 22:42-இல், "தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும் ..." என்று கூறுகின்றார். ஆம். சாத்தான் இயேசுவை நான்கு முறை சோதித்தான்.

சாத்தான் யார்?

பாவத்தின் மறு உருவம்தான் சாத்தான். சாத்தான் எங்கு இருக்கின்றானோ, அங்கே பாவமிருக்கும்; எங்கே பாவமிருக்கின்றதோ அங்கே சாத்தான் இருப்பான்.

பாவம் என்றால் என்ன? இறையாட்சிக்கு எதிராகச் செயல்படுவதே பாவம். சாத்தானின் வேலை, இறையாட்சிக்கு எதிராகச் செயல்பட நம்மைத் தூண்டுவதாகும். இறையாட்சி என்றால் என்ன? இறையாட்சி என்பது நாம் உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவியார் அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இத்தகைய இறையாட்சி மனப்பான்மையோடு கிறிஸ்துவுக்குப் பணிபுரிவோர் கடவுளுக்கு உகந்தோராயும், மக்களின் மதிப்புக்கு உரியோராயும் இருப்பர் என்று புனித பவுலடிகளார் கூறுகின்றார் (உரோ 14:17-18).

இன்றும் நாம் சாத்தானால் சோதிக்கப்படுகின்றோம்.

பாவச் சோதனைகளிலிருந்து விடுதலை பெற வழி ஏதும் உண்டோ? உண்டு என்கின்றார் இயேசு.

இதோ இயேசு நம்மோடு பேசுகின்றார் : நோவா காலத்துத் தண்ணீர் (முதல் வாசகம்) மக்களை அழித்தது. நான் தரும் தண்ணீரோ உங்களை வாழ வைக்கும் (இரண்டாம் வாசகம், யோவா 7:37-39). தூய ஆவியாரே நான் தரும் தண்ணீர். அவரால் உங்களை அருள்பொழிவு செய்துகொள்ளுங்கள்; அவரில் திருமுழுக்குப் பெற்றுக்கொள்ளுங்கள்.

நான் முதல் மூன்று சோதனைகளையும் வென்றது எப்படி? தூய ஆவியாரால் நான் பாலைநிலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டேன் (மாற் 1:12). அவர் எப்போதும் என்னோடு இருந்தார். அவரை எதிர்க்கும் சக்தி இந்த உலகத்தில் எந்த சாத்தானுக்கும் கிடையாது. நான்காவது சோதனையை விண்ணகத் தந்தை மீது நான் வைத்திருந்த அளவிடமுடியாத அன்பால் (கலா 5:22-23) வென்றேன். என் வழியில் நடங்கள். உங்களை எந்தத் தீய சக்தியும் தீண்டாது; எந்தப் பாவமும் நெருங்காது.

இயேசுவின் இந்த வார்த்தைகளின்படி நடந்தால் “பேய்களின் விருந்து மண்டபமாய் உன் மனசு மாறியதெப்படி? மூளையில் எப்போது முள் முளைத்தது உனக்கு?” என்று இறைவனோ, இறையடிகளார்களோ நம்மைக் கேட்கமாட்டார்கள். மாறாக இறைவனும், இறையடியார்களும் நம்மைப்பார்த்து, "நீ செல்லும் பாதை சரியான பாதை ... சிகரங்களில் வசிக்க சிங்காரமாய் நடந்துசெல்” என்பார்கள்.

மேலும் அறிவோம் :


வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது ( குறள் : 865).

பொருள் :
செயலுக்குரிய நல்ல வழியினை நாடாமலும் வெற்றிக்குரிய செயலைச் செய்யாமலும் தன்மீது வரும் பழிக்கு நாணாமலும் பண்பாடு இல்லாமலும் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

ஓர் இளைஞனின் தவக்காலக் கணிப்பு!

ஓர் இளைஞர் கூறினார்: "என்னைப் பொறுத்தமட்டில் ஓராண்டில் 325 நாள்களே உள்ளன. ஏனெனில் தவக்காலத்தின் 40 நாள்களும் எங்கள் வீட்டில் சுத்த சைவ உணவு: முட்டையோ மீனோ கறியோ கிடையாது. எனவே அந்த 40 நாள்களையும் கணக்கில் சேர்ப்பதில்லை. ஓர் இளைஞனின் தவக்காலக் கணிப்பு!

தவக்காலமென்பது அசைவ உணவைத் தவிர்ப்பதிலோ, பூவும் பொட்டும் வைக்காமல் இருப்பதிலோ, திரைப்படங்கள், மதுபானங்கள், புகைபிடித்தல் ஆகியவற்றை விலக்குவதிலோ அடங்கவில்லை, செபமும் தபமும் ஒறுத்தல் முயற்சிகளும் தவக்காலத்தில் அடிப்படை நோக்கமான ஆழமான இதய மனமாற்றத்தை உருவாக்க வேண்டும். இல்லையென்றால், இவையனைத்தும் பயனற்றவை; வெளிவேடம்.

இதய மனமாற்றமென்பது புதுப்படைப்பாக மாறுவதாகும். "ஒருவர் கிறிஸ்துவோடு இணைத்திருக்கும் போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார், பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ " (2 கொரி 5:17). கடவுள் உலகத்தைப் படைத்தபோது படைப்புகள் அனைத்துமே மிகவும் நன்றாயிருந்தது (தொநூ 1:31). ஆனால், மனிதர் தம் பாவத்தால் கடவுளின் படைப்பைர் சீரழித்தபோது, கடவுள் அதை மீண்டும் புதுப்படைப்பாக மாற்றினார்.

நோவாவின் காலத்தில் பாவர் சேற்றில் மூழ்கிக் கிடந்த உலகத்தை வெள்ளப் பெருக்கினால் அழித்துவிட்டு, நோவாலையும் அவருடைய குடும்பத்தையும் புதுப்படைப்பின் தொடக்கமாக விளங்கச் செய்தார். வெள்ளப் பெருக்கிற்குப்பின், கடவுள் தமது அருளன்பைப் புதுப்பித்து நோவாவுடன் உடன்படிக்கை செய்தார் (முதல் வாசகம்). கடவுள் தாம் நல்லவரென்றும், நேர்மையுள்ளவரென்றும், எளியோரை நேர்வழியில் நடத்தி, அவர்களுக்குத் தம் வழியைக் கற்பிப்பவரென்றும் எண்பித்தார் (பதிலுரைப்பாடல், திபா 25:8-9).

வெள்ளப் பெருக்கின்போது காப்பாற்றப்பட்ட தோவாவின் குடும்பத்தினர் எட்டுப் பேரும் தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர், இத்தண்ணீர் திருமுழுக்கிற்கு முன் அடையாளம் என்கிறார் தூய பேதுரு (இரண்டாம் வாசகம், 1 பேது 3:20-21). தண்ணீ ருக்கு ஆக்க சக்தியும் அழிக்கும் சக்தியும் உண்டு, வெள்ளப் பெருக்கு பாவ உலகை அழித்தது. ஆனால், பேழையில் இருந்த நோவாவின் குடும்பத்தைக் காப்பாற்றியது. செங்கடல் எகிப்தியன அழித்தது. ஆனால், இஸ்ரயேல் மக்களுக்கு வழிவிட்டுக் காப்பாற்றியது. திருமுழுக்குத் தண்ணீருக்கும் ஆக்க சக்தியும் அழிக்கும் சக்தியும் உண்டு. அது பழைய மனிதருக்குரிய பாவ இயல்பை அழிக்கிறது, கடவுளுடைய சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை உருவாக்குகிறது (எபே 4:22-24).

தவக்காலத்தின் இறுதிக் குறிக்கோளான இதய மனமாற்றம் இயேசுவின் பாஸ்கா மறைபொருளில், அதாவது அவரது சாவிலும் உயிர்ப்பிலும் பங்குபெறுவதில் நிறைவடைகிறது. பெரிய சனிக்கிழமை திருவிழிப்புத் திருப்பலியின்போது மனம் திரும்புவோர் திருமுழுக்குப் பெறுவர்; ஏற்கெனவே திருமுழுக்குப் பெற்றவர்கள் தங்களது திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொள்வர். நாம் பெற்ற திருமுழுக்கு நம்மிடமிருந்து ஜென்மப்பாவத்தைப் போக்கியது. ஆனால் ஜென்மப் பாவத்தின் விளைவாக தம்முன் குடி கொண்டிருக்கும் பாவ நாட்டங்களையும் பாவத்தின் மீதுள்ள கவர்ச்சியையும் போக்கவில்லை. எனவே, நம் வாழ்வின் இறுதி மூச்சுவலா பாவங்களையும் பாவத்திற்குக் காரணமான அலகையையும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. வாழ்க்கை என்பது ஒரு போர், காயமில்லாத போருண்டா? வாழ்க்கை என்பது ஒரு கடல், கொந்தளிக்காத கடல் உண்டா? வாழ்க்கை என்பது ஒரு வேள்வி, தீயில்லாத வேள்வி உண்டா?

திருமுழுக்கு பெற்றும் நாம் சோதிக்கப்படுகிறோமே என்று வியப்படையவோ வேதனைப்படவோ தேவையில்லை. திருமுழுக்குப் பெற்றவுடனே இயேசு அலகையால் சோதிக்கப்படும்படி அதுவும் ஆவியானவரால் பாலைவனத்திற்கு அனுப்பப்பட்டார் என்று இன்றைய நற்செய்தி கூறுகிறது (மாற் 1:12), இயேசு எல்லாவகையிலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டார் என்று எபிரேயர் திருமடல் கூறுகிறது (எபி 5:15).

மத்தேயுவும் (மத் 4:1-11), லுக்காவும் (லூக் 4:1-13) இயேசுவை அலகை எவ்வாறு சோதித்தது என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், மாற்குவோ இயேசு அலகையால் சோதிக்கப்பட்டார் என்று பொதுவாகக் குறிப்பிடுகிறார். இருப்பினும் மத்தேயுவோ லூக்காவோ குறிப்பிடாத ஒன்றை மாற்கு மட்டும் குறிப்பிட்டுள்ளார். அதாவது இயேசு பாலைவனத்தில் காட்டு விலங்குகளிடையே இருந்தார் (மாற் 1:13). காட்டு விலங்குகள் தீயசக்திகளைக் குறிக்கின்றன. தூய பவுல் எபேசில் காட்டு விலங்குகளோடு போராடியதாகக் குறிப்பிடுகிறார் (1 கொரி 15:32).

நாம் எதிர்த்துப் போராட வேண்டிய காட்டு விலங்குகள் நமக்கு வெளியே மட்டுமன்று, தமக்குள்ளேயும் இருக்கின்றன. 'தெய்வம் பாதி மிருகம் பாதி சேர்த்துச் செய்த கலவை தான். உள்ளே தெய்வம், வெளியே மிருகம், விளங்க முடியாத புதுக்கவிதை நான் (திரைப்படப் பாடல்).

ஒரு பெண் குரங்கு குட்டியொன்றை என்றது. அக்குட்டியைப் பார்த்து அழுத்து. ஏன்? என்று ஆண் குரங்கு கேட்டதற்கு, அப்பெண் குரங்கு, 'நமக்குப் பிறந்துள்ள குட்டியின் முகம் மனித முகத்தைக் கொண்டிருக்கிறது' என்றது. அதற்கு ஆண் குரங்கு, 'கவலைப்படாதே, போகப் போக நம் முகம் வந்துவிடும்' என்று அதைத் தேற்றியது! மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு உயர வேண்டிய மனிதர், மனித நிலையிலிருந்து மிருக நிலைக்குத் தாழ்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரியது. "நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள்" (கலா 5:15).

நம்மை மிருகமாக்கும் அலகையின் வஞ்சகத் தந்திரங்களை மன உறுதியுடன் எதிர்த்துப் போராட வேண்டும். அலகை இயேசுவைச் சோதிப்பதற்காகப் பயன்படுத்திய அதே மூன்று வழிகளைத்தான் நம்மையும் கெடுக்கப் பயன்படுத்துகிறது. கற்களை அப்பாமாக்கிச் சாப்பிட்டு உடல் இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள் (trust), கோபுரத்தின் உச்சியிலிருந்து குதித்து வல்லமையை வெளிப்படுத்து (Power), அலகையை வழிபட்டு செல்வத்தைக் குவித்துக்கொள் (Moncy), 'உலகமனைத்தும் தீயோனின் பிடியிலிருக்கிறது' (1 யோவா 5:19) என்று கூறும் யோவான், உலகில் இருப்பது எல்லாம், "உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு" என்று (1 யோவா 2:16) உலகின் நாடிப்பிடித்துச் சொல்லுகிறார். யோவான் குறிப்பிடும் இம்மூன்று சக்திகளும் இயேசுவின் மூன்று சோதனைகளுடன் ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது.

காமத்திற்காக, பதவிக்காக, பணத்திற்காக மனிதன் நாயாக அலைகிறான்; பேயின் வலையில் வீழ்கிறான்; தன்னையே இழக்கிறான். இயேசு மூன்று முறையும் விவிலியத்திலிருந்து மேற்கோள் காட்டி, கடவுளுடைய வார்த்தையைக் கொண்டே அலகையை வெல்லுகிறார் (இச 8:3; 6:16; 6:13). நாமும் தூய ஆவி அருளும் கடவுளின் வார்த்தையைப் போர்வாளாக எடுத்து அலகையை வெட்டி வீழ்த்துவோம் (எபே 6:17). "மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்" (மத் 4:4).

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

இந்தச் சோதனை எதற்கு?

நடுக்கடலில் ஒரு பயணிகள் கப்பல். பயணிகளில் ஒருவர் துறவி - சாது. பெரும்பாலோனோர் இளைஞர் பட்டாளம். சாதுவைக் கேலி செய்து கிண்டல் அடித்தது அக்கூட்டம். சிலர் தங்கள் காலணிகளைக் கூட கழற்றி சாது மீது வீசி விளையாடினர். ஆனால் சாதுவோ அமைதியாய் இருந்தார். புன்னகை பூத்திருந்தார்.

திடீரென ஓர் அசரீரி கேட்டது. "சாதுவே, நீ விரும்பினால் இந்தக் கப்பலை மூழ்கடிக்கிறேன். உன்னை அவமானப்படுத்தியவர்களை இந்த ஆழ்கடலில் அமிழ்த்தி சாகடிக்கிறேன்” இதைக் கேட்ட கப்பலில் இருந்த அத்தனை பேரும் கதிகலங்கி சாதுவின் காலில் சரணாகதி அடைந்தனர். சாதுவானவர் வான் நோக்கிக் கைகளை உயர்த்தி, "என் அன்பான கடவுளே, நீர் ஏன் சாத்தானின் மொழியில் பேசுகிறீர்? கப்பலைக் கவிழ்த்து என்ன பயன்? முடிந்தால் இவர்களின் மனத்தை மாற்றும்”. வானிலிருந்து கடவுள் பதிலளித்தார்: “என் அன்பு மகனே, உன்னில் நான் மகிழ்கிறேன். முன்பு ஒலித்தது என் குரல் அன்று! உண்மையிலேயே அது சாத்தானின் குரல் தான்! எவன் ஒருவன் சாத்தானின் குரலை இனம் கண்டுகொள்ள முடிகிறதோ, அவனே என்னுடைய குரலையும் புரிந்து கொள்ள முடியும்”.

கடவுளின் குரலையும் அலகையின் குரலைஸயம் தரம் பிரித்துக் காட்டும் கண்ணாடியே தவக்காலம்.

பேய் பேயாக வருவதில்லை. எடுத்த எடுப்பில் தீயவற்றில் வீழ்த்த தோன்றும் விதங்களிலும் சொல்லும் வார்த்தைகளிலும் உருமாறி, முகமூடி அணிந்துதான் வருகிறான். அந்தநேரத்தில் நம் அறிவு என்ன சொல்கிறது?

ஒவ்வொரு கணமும் நமது செயல், சொல், சிந்தனை அனைத்திற்குப் பின்னும் நம் உள்ளத்திலிருந்து எழும் ஒரு குரல் இருக்கும். இதனை உடல் ரீதியாக, அறிவியல் ரீதியாக மூளை கட்டளை இடுகிறது, உடலின் உறுப்புகள் இயங்குகின்றன என்பார்கள். இதை அப்படியே ஏற்றுக் கொள்வதனால் தன் வீட்டைத் தானே இடிக்கிறது போல் (தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப் போகும், லூக்.11:17) நமது உடலையும், மூளை உட்பட அனைத்து உறுப்புகளையும் நாசப்படுத்திக் கொள்ளும் ஒரு கட்டளையை நமது மூளை கொடுக்கக் கூடுமோ?

ஆன்மீகத்துக்கு முன்னே அறிவியல் கேள்விக்குறியாகிறது!

சிலர் குடிபோதைக்கு அடிமையாகிறார்கள். மற்றும் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். வேறு சிலரோ தங்களது தீய செயலால் பிறரையும் கெடுத்துத் தாங்களும் அழிந்து போகிறார்கள். ஆகவே நம் செயல்கள் அனைத்தும் வெறும் மூளையின் கட்டளைகள் 11ன்று அல்லாது அதற்கும் மேற்பட்ட ஏதோ ஒன்று செயல் ஊக்கியாக இருப்பதை உணர முடிகிறது. பலரை வாழ வைக்கும் செயல்களைச் சிலர் செய்வதைக் காண்கிறோம். தாங்கள் நல்வழியில் நடப்பதோடு பிறரையும் நல்வழிப்படுத்துவதைக் காண்கிறோம். காரணம்? நம் உள்ளத்திலிருந்து இருவிதமான குரல்கள் எழும்புகின்றன. ஒன்று நற்செயல்களைச் செய்ய வைத்து நம்மை வாழவைக்கும் இறைவனின் குரல்! மற்றொன்று திசெயல்கள் மூலம் பிறரையும் நம்மையும் அழிவுக்கு இட்டுச் செல்லும் இலகையின் குரல்!

எனவேதான் “இதோ பார், வாழ்வையும் நன்மையையும் சாவையும் தீமையையும் இன்று நான் உனக்கு முன்பாக வைத்துள்ளேன் (இ.ச.30;15)... அவரது குரலுக்குச் செவிகொடு" என்கிறார் மோசே வழியாக இறைவன்!

மத்தேயுவோ லூக்காவோ போல இயேசுவின் சோதனைகளைப் பட்டியலிடாமல், இயேசு சோதிக்கப்பட்டார் என்று பொதுவாகக் குறிப்பிடுகின்றார். ஆனால் மத்தேயுவோ லூக்காவோ குறிப்பிடாத ஒன்றை மார்க் மட்டும் குறிப்பிடுகிறார். "பாலை நிலத்தில் இயேசு காட்டு விலங்குகளிடையே இருந்தார்” (மார்க்.1:13)

நாம் எதிர்த்துப் போராட வேண்டிய தீய சக்திகளான காட்டு விலங்குகள் நமக்கு வெளியே மட்டுமன்றி நமக்குள்ளேயும் இருக்கின்றன. உயிரினங்களைப் படைத்த இறைவன் அவை ஒவ்வொன்றுக்கும் ஆயுள் காலத்தை 30 ஆண்டுகளாக நிருணயித்தார். அதில் திருப்தி அடையாத கழுதை, நாய், குரங்கு, மனிதன் மட்டும் திருப்தியின்றி முறையிட்டன.

கழுதை கடவுளிடம் "தினம் தினம் பொதிசுமக்கிற எனக்கு 30 ஆண்டுகள் என்பது வேதனையானது" என்றது. சரி என்று 18 ஆகக் குறைத்தார். "குரைத்துக் குரைத்து தொண்டை காய 30 வயதா?” என்ற நாய்க்கு ஆயுளை 12 ஆக்கினார். பிறகு குரங்கு "மரத்துல தொங்கித் தொங்கி ஆடுற என் பொழைப்புக்கு 30 தேவையா?” என்று கேட்க அதை 10 என்றாக்கினார்.

இறுதியாக வந்த மனிதன் “அனைத்தையும் அனுபவிக்க எனக்கு 30 ஆண்டுகள் எப்படிப் போதும்? அதனால் கழுதையில் ஒதுக்கிய 12, நாயில குறைத்த 18, குரங்கில் குறைத்த 20 எல்லாத்தையும் எனக்குச் சேர்த்துக் கொடுத்தா நல்லா இருக்கும்” என்று கெஞ்ச “சரி அப்படியே ஆகட்டும்” என்றாராம் கடவுள்.

அதனால்தான் மனிதன் 30 ஆண்டு ஓரளவு மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அடுத்த 12 ஆண்டு கழுதை மாதிரி குடும்பப் பாரத்தை சுமக்கிறான். அடுத்த 18 ஆண்டு நாய் மாதிரி சொத்துச் சேர்க்கவோ, சேர்த்ததைக் காக்கவோ அலையோ அலையின்னு அலைகிறான். பிறகு 20 ஆண்டு வயதாகி வீட்டில் மரியாதை போய் யார் என்ன சொன்னாலும் குரங்காட்டம் ஆடித் தவிக்கிறான்.

நமக்குள்ளே மிருகக்குணம் நிறையவே இருக்கு. கடித்து குதறாத அளவுக்கு காட்டு விலங்குகளாக எதிர்த்து நிற்கும் தீய சக்திகளுக்கு முன்னே நிராயுதபாணியாக நிற்பதா? அந்தப் போராட்டச் சோதனைக் களத்தில் ஏந்த வேண்டிய ஆயுதங்கள் என்ன? எபேசியருக்கு எழுதிய திருமடலில் (6:11-17) தூய பவுல் இடைக்கச்சையாக உண்மை, மார்புக் கவசமாக நீதி, நற்செய்தி அறிவிப்பின் ஆயத்த நிலையாக மிதியடி, தலைச்சீராக மீட்பு, போர் வாளாக இறைவார்த்தை என்று பட்டியலிடுவார். இவற்றில் முதல் நான்கும் தற்காப்புக்கானவைகள். எதிரியை வீழ்த்தக் கூடிய போர் வாளாக இருப்பது இறைவார்த்தை ஒன்றே!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

பிப்ரவரி 14, புதன்கிழமை, நாம் தவக்காலத்தைத் தொடங்கினோம். பிப்ரவரி 14ம் தேதி 'காதலர் தினம்' என்று அழைக்கப்படும் Valentine's Day அன்று நாம் திருநீற்று புதனையும் சிறப்பித்தோம். வாலன்டைன் (அல்லது புனித வாலன்டைன்) ஒரு வரலாற்று நபராக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரைப்பற்றி கூறப்படும் பாரம்பரியக் கதை நமக்கு உண்மை அன்பு, அல்லது உண்மைக் காதலைப் பற்றியும், தவக்காலத்தின் பொருள் குறித்தும் சிந்திக்க உதவுகிறது.

உரோமையப் பேரரசில் பிப்ரவரி மாதத்தில், Lupercalia என்ற திருநாள் கொண்டாடப்படும். அதைத் தொடரும் நாட்களில், இளம்பெண்களின் பெயர்களைச் சீட்டுக் குலுக்கி போட்டு, இளைஞர்கள் தெரிவு செய்வர். தெரிவு செய்யப்பட்ட இளம்பெண்ணும், இளைஞனும், நண்பர்கள் என்று அறிவிக்கப்படுவர். இப்படி ஆரம்பமாகும் நட்பு, பின்னர் காதலாகி, திருமண வாழ்வில் முடிவடையும்.

மூன்றாம் நூற்றாண்டில் இரண்டாம் கிளாடியஸ் (Claudius) மன்னனாய் இருந்தபோது, படைக்கு ஆட்கள் சேர்ப்பது அதிகக் கடினமாய் இருந்தது. இளைஞர்கள் தங்கள் காதலைத் துறந்து, படைகளில் சேர விரும்பவில்லை. எனவே, மன்னன் கிளாடியஸ், இந்த பிப்ரவரி மாதத் திருநாளையும், அதைத் தொடரும் காதல், திருமணம் இவற்றையும் தன் பேரரசில் முற்றிலும் தடை செய்தான். அக்காலத்தில் உரோமையில் வாழ்ந்த வாலன்டைன் என்ற அருள்பணியாளர், அரசனுக்குத் தெரியாமல், பல இளையோருக்கு திருமணங்கள் நடத்திவைத்தார். இதை அறிந்த அரசன், அந்த அருள்பணியாளரைக் கைது செய்து, சிறையிலடைத்து, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கினான். பின்னர், 270ம் ஆண்டு, பிப்ரவரி 14 அன்று வாலன்டைன் அவர்கள், தலை வெட்டப்பட்டு உயிர் துறந்தார்.

மனித வரலாற்றில் இதுவரை நடந்த எல்லா போர்களுமே வெறுப்பை, வெறியை வளர்த்து, வேதனைகளையே உருவாகியுள்ளன. தங்கள் காதலைத் துறந்து, போர்வெறியை வளர்த்துக்கொள்ள, வீரர்கள் முன்வரவில்லை என்பதை உணர்ந்த மன்னன் கிளாடியஸ், காதலை, திருமணங்களைத் தடை செய்தான். அன்பைத் தடுத்து, வெறியை உருவாக்க தன் அதிகாரத்தைப் பயன்படுத்தினான்.

வெறியை வளர்க்கும் இந்த அதிகாரத்தை எதிர்த்து, அன்பையும் காதலையும் வளர்க்க, அருள்பணியாளர் வாலன்டைன் செய்தது அழகான ஒரு முயற்சி. அந்த முயற்சியையும் அவர் பகிரங்கமாய் செய்திருக்கலாம். அவர் நினைத்திருந்தால், அவரது 'அன்புப் படை'யில் ஆயிரக்கணக்கான இளையோரைச் சேர்த்து போராடியிருக்கலாம். (‘அன்புப் படை’ என்பதே முரண்பட்ட, ஒன்றோடொன்று பொருந்தாத சொற்றொடர்). வாலன்டைன் அவர்கள், போராட்டம், கலவரம் என்று மன்னனை எதிர்த்திருந்தால், அந்த கலவரங்களில் பல உயிர்கள் பலியாகியிருக்கும். அன்பின் பெயரால் இந்தக் கொலைகளைச் செய்ய விரும்பாத அந்த அருள்பணியாளர், அமைதியாக, அரசனுக்குத் தெரியாமல் அன்பை வளர்த்து வந்தார். அற்புதங்கள் நடத்தி வந்தார்.

மனித வரலாற்றில், வெறுப்பு, வெறி ஆகிய எதிர்மறை உணர்வுகளே படை பலம், அதிகார பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஆர்ப்பாட்டம் செய்து, ஆரவாரமாய் வரலாற்றை ஆக்கிரமித்து வந்துள்ளன. இன்றும், காசா, உக்ரைன் போன்ற இடங்களில் நடைபெறும் போர்களில், அதிகாரத்தின் வெறியை, நேரடியாக நம்மால் காணமுடிகிறது. இந்தியாவின் அடிப்படைவாத அரசியலில் இந்த அதிகார வெறியை மறைமுகமாகக் காண்கிறோம்.

இவற்றின் எதிர் துருவத்தில், அன்பும், அதைச் சார்ந்த அற்புதங்களும், அமைதியாக, ஆனால் ஆழமாக மனித வரலாற்றில் இடம் பிடித்துள்ளன. படை பலத்தோடு ஆண்ட அரசன் கிளாடியஸுக்கு திருநாள் எதுவும் இல்லை. அன்பை வளர்த்த வாலன்டைனுக்கு திருநாள் உண்டு. ஆனால், இந்த அழகான, ஆழமான பின்னணியை மறக்கவைக்கும் அளவுக்கு, Valentine's Day என்பதற்கு, ‘காதலர் தினம்’ என்ற வியாபாரப் பெயரைச் சூட்டி, வர்த்தக நிறுவனங்கள் அடையும் இலாபத்திற்கு, நம் இளையோர் எல்லை மீறி பலியாகி வருவது கசப்பான உண்மை. பணம் இல்லையெனில், பரிசு இல்லையெனில், அன்போ, காதலோ இல்லை என்று எண்ணும் அளவுக்கு, இந்த நாள் பணக்காரத் திருநாளாகி விட்டது. அன்பு, காதல் ஆகிய புனிதமான உணர்வுகளுக்கு சாயம் பூசும் வியாபார உலகம் சொல்வது தான் உண்மை அன்பு, உண்மை காதல் என்று குழம்பிப் போயிருக்கும் நம் இளையோர் தெளிவு பெற இறை அருளை வேண்டுவோம்.

அதேவேளையில், மன்னன் கிளாடியஸ் போல, இன்றைய இளையோரை வெறுப்பில் வளர்க்கும் உலகத் தலைவர்கள், இந்தியத் தலைவர்கள் காட்டும் பாதை, நம் இளையோர் அனைவரையும் அழிவுக்கு இட்டுச்செல்லும் என்பதை இளையோர் உணர்ந்து, அன்பின் பாதையை தெரிவு செய்ய தேவையான உள்ளொளியை தூய ஆவியார் வழங்கவேண்டும் என்று சிறப்பாக செபிப்போம்.

Valentine's Day என்றழைக்கப்படும் அன்பின் திருநாளன்று நாம் தவக்காலத்தைத் துவங்கியிருப்பதை, இறைவன் நமக்கு வழங்கியுள்ள வரமாக எண்ணிப்பார்ப்போம். நாம் துவங்கியுள்ள தவக்காலம் முழுவதையும், அன்பு எண்ணங்களால், செயல்களால் நிறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வோம். மேலும், இந்த வழிபாட்டு காலத்திற்கு, நாம் வழங்கியுள்ள பெயர், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. தமிழில் ‘தவக்காலம்’ என்று நாம் அழைப்பதை, ஆங்கிலத்தில் Lent அல்லது Lenten Season என்று அழைக்கிறோம்.

Lent என்ற சொல், 'lente' என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. இலத்தீன் மொழியில், 'lente' என்றால், ‘மெதுவாக’ என்று பொருள். Lenten என்ற சொல், Lencten என்ற ஆங்கிலோ சாக்ஸன் (Anglo Saxon) சொல்லிலிருந்து வந்தது. இதன் பொருள் 'வசந்தகாலம்'. 'மெதுவாக', 'வசந்தகாலம்' என்ற இரு சொற்களையும் இணைக்கும்போது உருவாகும், ‘மெதுவாக வரும் வசந்தகாலம்’ என்ற சொற்றொடர், தவக்காலத்திற்கு அழகியதோர் அடையாளம்.

உலகின் பல நாடுகளில், மூன்று மாதங்கள் கடும் குளிர்காலம். குளிர்காலத்திற்கு முன்னர், மூன்று மாதங்கள் இலையுதிர் காலம். எனவே, ஏறத்தாழ ஆறு, அல்லது ஏழு மாதங்கள், மரங்களும் செடிகளும், தங்கள் இலைகளை இழந்து, பொழியும் பனியில் புதைந்துபோகும். இந்த மாதங்களில், மரங்களையும், செடிகளையும் பார்க்கும்போது, அவற்றில் உயிர் உள்ளதா, அவை பிழைக்குமா என்ற ஐயம் மேலோங்கி இருக்கும். ஆனால், அந்த பனிக்குள்ளும், சிறு துளிர்கள், கண்ணுக்குத் தெரியாதபடி வளர்ந்திருக்கும். பனிப்போர்வை, சிறிது சிறிதாகக் கரையும்போது, புதைந்துபோன துளிர்கள், தலை நிமிரும். வசந்தகாலத்தில் மீண்டும் தாவர உலகம் தழைத்துவரும்.

‘வசந்தம்’ - கேட்பதற்கு அழகான சொல், அழகான எண்ணம். உண்மைதான். ஆனால், அந்த வசந்தம் வருவதற்கு முன், சவால்கள் நிறைந்த மாற்றங்கள், பொறுமையாக நிகழவேண்டும். ஆறு மாதங்களாய் உயிரற்று காணப்படும் தாவர உலகில், திடீரென, ஓரிரவில், மாற்றங்கள் உருவாகி, அது பூத்துக் குலுங்குவது கிடையாது. நம் கண்ணையும் கருத்தையும் ஈர்க்காத வகையில், மிக, மிக மெதுவாக, வசந்த காலம் வந்துசேர்கிறது. மெதுவாக, நிதானமாக, மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம், தவக்காலத்திற்கு அழகியதோர் அடையாளம்.

அடையாளங்கள், மனித வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தவக்காலம் என்றதும், பொதுவாக, சாம்பல், சாக்குத்துணி, சாட்டையடி என்ற சோகமான அடையாளங்களே மனதை நிரப்பும். ஆனால், தவக்காலத்தை, ‘மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம்’ என்ற கோணத்தில் பார்க்க நம்மை அழைக்கிறது, திருஅவை.

மாற்றத்தை, மிகக் குறிப்பாக, மனமாற்றத்தை உருவாக்க நமக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் அரிய வாய்ப்பு, தவக்காலம். மாற்றத்தை நமக்கு நினைவுறுத்த, தவக்காலத்தின் முதல் நாளான திருநீற்றுப் புதனன்று நாம் பயன்படுத்தும் ஓர் அடையாளம் - சாம்பல். அருள்பணியாளர், நம் நெற்றியில் சாம்பலைக் கொண்டு சிலுவை அடையாளம் வரைந்தபோது, "மனம் திரும்பி நற்செய்தியை நம்புங்கள்" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினார். சில ஆண்டுகளுக்கு முன், சாம்பலைப் பூசும் நேரத்தில், அருள் பணியாளர் பயன்படுத்திய வார்த்தைகள், நம் இறுதி முடிவை நினைவுறுத்தும் வார்த்தைகளாக அமைந்தன: "நீ மண்ணாக இருக்கிறாய்; மண்ணுக்கேத் திரும்புவாய்."

சாம்பலை, அழிவாக, மரணமாக மட்டும் எண்ணிப்பார்க்காமல், புதிய மாற்றங்களைக் கொணரும் அடையாளமாகவும் காண்பதற்கு, நம் அனைவருக்கும் தெரிந்த 'சின்டரெல்லா' (Cinderella) என்ற பாரம்பரியக் கதை உதவியாக இருக்கும். 'சின்டரெல்லா' என்ற இந்தப் பெயர், இரு சொற்களின் இணைப்பு. 'Cinders', அதாவது, சாம்பல், மற்றும், 'Puella', அதாவது, 'சிறுமி' அல்லது 'சிறிய பெண்' என்ற இரு சொற்களும் இணைந்து உருவானதே, Cinderella.
இந்தப் பாரம்பரியக் கதையின் கருத்து, மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. "ஒருவர் அழகு மிக்கவராக, அனைவராலும் விரும்பித் தேடப்படுபவராக, பெரும் விருந்துகளில் கலந்துகொள்பவராக மாறுவதற்கு முன், சாம்பலுடன், தனிமையில் நேரத்தைச் செலவிடவேண்டும். அவருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை, யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், பணிவோடு செய்யவேண்டும்" என்பதே, சின்டரெல்லா கதை நமக்குச் சொல்லித்தரும் பாடம். தவக்காலம், நம்மை, சாம்பலில் அமர அழைக்கிறது.

ஒரு பொருள், நெருப்பில் அழிந்ததும், உருவாவது சாம்பல். எனவே, சாம்பலை நாம் அழிவின் அடையாளமாகவே பெரும்பாலும் கருதுகிறோம். ஆனால், அதே சாம்பல், உயிர்களை வளர்க்கும் உரமாகவும், பொருள்களில் படிந்திருக்கும் கறைகளை நீக்கி, அவற்றை ஒளிமயமாக்கும் காரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
அழிவின் அடையாளங்களாக நாம் கருதும், சாம்பலையும், நெருப்பைப்போலவே, பெருவெள்ளமாக வரும் நீரையும், அழிவின் அடையாளமாகக் கருதுகிறோம். பெருவெள்ளத்தின் அழிவிலிருந்து, அற்புதங்களை நிகழ்த்திய இறைவனை, இன்றைய முதல் வாசகம் - தொடக்கநூல் 9: 8-15 - நமக்கு நினைவுறுத்துகிறது. நோவா காலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் இறுதியில், இறைவன், புதியதொரு வாக்குறுதியை அளித்தார். அந்த வாக்குறுதியின் அடையாளமாக வானவில்லை விண்ணில் பதித்தார். கிறிஸ்தவ மறையில் மட்டுமல்லாமல், பல்வேறு மறைகளிலும், கலாச்சாரங்களிலும், வானவில், நம்பிக்கையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அழிவிலிருந்து அற்புதங்களை உருவாக்கும் இறைவனின் வார்த்தைகள் இன்றைய முதல் வாசகத்தில் இவ்வாறு ஒலிக்கின்றன: கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது: “இதோ! நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும், பேழையிலிருந்து வெளிவந்து உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன்... நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்.” (தொடக்கநூல் 9: 8-13)

ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று, இயேசு, சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க, திருஅவை நம்மை அழைக்கிறது. தவக்காலத்தை, ‘மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலம்’ என்ற வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதுபோல், சோதனைகளையும் கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வோம்.
‘சோதனை’ என்ற வார்த்தையைக் கேட்டதும், அவ்விடத்தை விட்டு ஓடிவிடவேண்டும் என்ற அச்சமே நம்மில் பலருக்கு தோன்றும். ஆறஅமர சிந்தித்தால், சோதனைகள் இல்லாத மனித வாழ்வு இல்லை என்ற உண்மையை நாம் உணரலாம். இயேசுவே சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். இயேசு சோதனைகளைச் சந்தித்ததும், அவற்றை அவர் வென்றதும், இன்றைய நற்செய்தி (மாற்கு 1:12-15) நமக்குச் சொல்லித்தரும் நல்ல பாடங்கள்

.

தவக்காலத்தின் முதல் ஞாயிறன்று பகிரக்கூடிய மறையுரையைப் பற்றி இன்னொரு அருள்பணியாளரோடு நான் பேசிக்கொண்டிருந்தேன். ‘சோதனை’ என்ற வார்த்தையை நான் சொன்னதும், அவர் "சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி" என்ற பழைய திரைப்படப் பாடலைப் பாட ஆரம்பித்தார். தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் சிக்கிய ஒரு வீட்டுத்தலைவன் பாடுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது. நம்மால் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற நம்பிக்கையின்மையை, உள்ளத்தில் ஆழமாக ஊன்றிவிடும் ஆபத்தான சொற்கள் இவை.

சோதனைகளை நாம் எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? நோவா காலத்தில் வந்ததுபோல், தப்பித்துக்கொள்ள முடியாத அளவு பெருகிவரும் ஒரு காட்டாற்று வெள்ளமாக, சோதனைகளையும், அதில் அடித்துச் செல்லப்படும் பரிதாபமானப் பாவிகளாக நம்மையும் எண்ணிப் பார்க்கிறோம். இத்தகைய எண்ணங்களுக்கு இடம்கொடுக்கும்போது, சோதனைகளுக்கு ஓர் அபூர்வ சக்தியை நாம் தருகிறோம். சோதனைகளுக்கும், அவற்றின் அடிப்படைக் காரணமான தீய சக்திக்கும் அளவுக்கு மீறிய முக்கியத்துவம் கொடுப்பதால், உள்ளத்தில் நம்பிக்கை குலைகிறதே, அதுதான் இன்று நம்மில் பலர் சந்திக்கும் மாபெரும் சோதனை. சோதனைகள் சக்தி வாய்ந்தவைதான். மறுப்பதற்கில்லை. ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், அவற்றோடு போராடி வெற்றிபெறவும், நமக்கு சக்தி உள்ளது. இதையும் நாம் நம்பவேண்டும்.

நாம் வாழும் உலகில், ஆக்கப்பூர்வமான செயல்கள், ஆயிரக்கணக்கில், ஒவ்வொரு நாளும் நடக்கின்றன. ஆங்காங்கே தீயவைகளும், அழிவுகளும் நடக்கின்றன. ஆனால், நல்ல நிகழ்வுகளை காட்டுவது, விறுவிறுப்பைத் தராது என்பதாலும், அவற்றால், இலாபம் இல்லை என்பதாலும், ஊடகங்கள், மீண்டும், மீண்டும், வன்முறைகளையும், குற்றங்களையும், விறுவிறுப்பானச் செய்திகளாகப் படைக்கின்றன. ஊடகங்கள் காட்டிவரும் அந்நிகழ்வுகளின் தொகுப்பையே, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து பார்க்கும்போது, "ச்சே, என்ன உலகமிது" என்ற எண்ணம் ஆழமாகப் பதிகிறது. "சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி." என்று நம்மைச் சொல்லவைத்து விடுகின்றது.
இப்படி ஓர் இயலாத்தன்மை ஒவ்வொரு நாளும் நமக்கு ஊட்டப்படும்போது, இந்த உலகத்தின் அழிவு சக்திகளுக்கு முன் நாம் வெறும் பார்வையாளர்கள் தான்... நம்மால் எதுவும் செய்ய முடியாது என்ற தவறான முடிவுக்கு நாம் வருகிறோம். இதுவே இன்று நம் மத்தியில் உள்ள பெரிய சோதனை. இந்தச் சோதனையை முதலில் நாம் வெல்ல வேண்டும்.

தன் பணிவாழ்வைத் துவக்குவதற்கு முன்னதாகவே இயேசு சோதனைகளைச் சந்தித்தார். சோதனைகளைக் கண்டு அவர் துவண்டு போயிருந்தால், அவர் தன் மீட்புப் பணியைத் துவக்கியிருக்கவே மாட்டார். நல்லவேளை. இயேசு தனக்கு வந்த சோதனைகளை இனம் கண்டு வென்றதால், துணிவுடன் தன் பணிகளைத் துவக்கினார். அதிலும் குறிப்பாக, தன் உறவினரும், முன்னோடியுமான யோவான் கைது செய்யப்பட்டதை அறிந்தபின், இயேசு, அவரது கைது நிகழ்வால் மனம் தளர்ந்து போகாமல், "கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக்கொண்டே கலிலேயாவிற்கு வந்தார்" (மாற்கு 1:14) என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது.

"கலிலேயாவிற்கு வந்தார்" என்ற சொற்களில் பொதிந்துள்ள பொருள், நாம் சோதனைகளை எவ்வாறு சந்திக்கவேண்டும் என்பதற்கு மற்றுமொரு பாடமாக அமைகின்றது. யூதேயா, கலிலேயா ஆகிய இரு பகுதிகளும், ஏரோது மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. தன் உறவினரான யோவானைக் கொலை செய்தது ஏரோது என்பதை அறிந்தும், அவரது அதிகாரத்திற்கு கீழ் இருந்த கலிலேயாவிற்கு இயேசு வந்தார். அவர் அங்கு வந்தது, ஏரோதுக்கு சவால் விடும் தன் துணிவைக் காட்டும் ஒரு வருகை அல்ல, மாறாக, தான் பறைசாற்ற வந்த நற்செய்தியின் சக்தியால் அவர் அந்த முடிவை எடுத்தார்.

இயேசு சோதனைகளைத் துணிவுடன் சந்தித்து வென்றது, அதைத் தொடர்ந்து நற்செய்தியை பறைசாற்ற சென்றது ஆகிய நிகழ்வுகள், நமக்கு நல்லதொரு பாடமாக அமைய வேண்டும்.
நாம் துவங்கியிருக்கும் தவக்காலம், நம் ஒவ்வொருவருக்குள்ளும் ‘மாற்றங்களைக் கொணரும் வசந்தகாலமாக’ விளங்க இறைவனை வேண்டுவோம். இந்த மாற்றங்கள் நிகழவிடாமல், நம்மைத் தடுத்து நிறுத்தும் மனத்தளர்வு என்ற சோதனையை வெல்வதற்கும், மனத்தளர்வில் ஆழ்ந்திருக்கும் இவ்வுலகிற்கு நற்செய்தியைப் பறைசாற்றுவதற்கும், தூய ஆவியார் நமக்கு துணிவை வழங்கவேண்டுமென்று மன்றாடுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

பிரியமான வாசகர்களே ! பொதுவாக கிறிஸ்தவ நம்பிக்கையின்‌ கருவான இயேசுவின்‌ மரணம்‌ உயிர்ப்பு இயற்றை முறைப்படி கொண்டாட நம்மையே நாம்‌ தயாரிக்கின்ற காலம்‌ தான்‌ தவக்காலம்‌.

 • இன்றைய வாசகங்களில்‌ நற்செய்தியில்‌ ஆண்டவர்‌ இயேசு பாலைவனத்தில்‌ சோதிக்கப்பட்டதையும்‌ முதல்‌ வாசகத்தில்‌ கடவுள்‌ நோவாவுடன்‌ செய்த உடன்படிக்கையையும்‌ இரண்டாம்‌ வாசகத்தில்‌ கிறிஸ்துவின்‌ உடன்படிக்கையை புனித பேதுருவின்‌ வார்த்தையில்‌ கொடுக்கப்பட்டிருப்பதையும்‌ நாம்‌ தியானிக்கின்றோம்‌.
 • முதல்‌ வாசகத்தில்‌ சொல்லப்பட்டது போல நாம்‌ உடன்படிக்கையின்‌ மக்களாக வாழ வேண்டும்‌ என்றால்‌ முதலில்‌ சோதனைகளில்‌ புடமிட பட வேண்டும்‌. மனம்‌ மாற வேண்டும்‌. நற்செய்தியை வாழ்ந்தும்‌ காட்ட வேண்டும்‌. இதுதான்‌ தவக்காலம்‌ நமக்குக் கொடுக்கின்ற அழைப்பு.
 • நம்முடைய வாழ்வில்‌ மனமாற்றம்‌. காலத்தின்‌ கட்டாயம்‌. மனமாற்றத்தை நாம்‌ ஒவ்வொருவரும்‌ மேற்கொள்ள வேண்டும்‌.
 • சோதனைக்கு உட்படாத வண்ணம்‌ நாம்‌ இறைவனை சிக்கென பிடித்துக்‌ கொள்ள வேண்டும்‌.
 • தவக்காலத்தில்‌ நாம்‌ உள்ளார்ந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும்‌ ஆன்ம சோதனைக்கு நம்மையே நாம்‌ ஆட்படுத்தப்பட வேண்டும்‌. இந்த ஆன்ம பரிசோதனை நாம்‌ இறைவனிடமிருந்து எவ்வளவு தூரம்‌ விலகி நிற்கின்றோம்‌ ?2அவர்‌ கற்பித்த அறநெறிகளிலிருந்து எப்படியெல்லாம்‌ விலகி நிற்கின்றோம்‌2 என்பதனை அறிந்து கொள்ள உதவி செய்யும்‌.
 • திருவிவிலிய அடிப்படையில்‌ பாலைவனம்‌ ஒரு சோதனை களம்‌. இறைவனும்‌ மனிதனும்‌ உரையாடும்‌ புனித களம்‌.
 • விடுதலைப்‌ பயண நூலில்‌ இஸ்ரேல்‌ மக்களின்‌ நம்பிக்கையை புடமிட்ட இடம்‌ பாலைவனம்‌. பாலைவனத்தில்‌ நம்முடைய அடிப்படை தேவைகளை நாம்‌ நிறைவேற்றிக்‌ கொள்ள முடியாது. அதற்காக நாம்‌ போராட வேண்டும்‌. வறட்சி கடுமையான வாழ்க்கையை எதிர்த்து போராடினால்‌ தான்‌ நாம்‌ விரும்பித் தேடும் ஆறுதல்‌ கிடைக்கும்‌.
 • முதல்‌ வாசகத்தில்‌ நோவா எப்படி மற்ற மனிதர்களிடமிருந்து விலகி காணப்பட்டாரோ பாவம்‌ செய்யாமல்‌ கடவுளுக்குப் பிடித்த விதத்தில்‌ வாழ்ந்தாரோ நற்செய்தியில்‌ இயேசுவும்‌ பாலைவனத்தில்‌ பாவம்‌ செய்யாமல்‌ சோதனையில்‌ விலக்கி வாழ்கிறாரோ அதேபோல நாமும்‌ நம்முடைய அன்றாட வாழ்க்கையில்‌ உடன்படிக்கையின்‌ மக்களாகவும்‌ பாவத்தை விலக்கிப் புண்ணியத்தை சிக்கன பிடித்துக்‌ கொண்டு உடன்படிக்கையின்‌ மக்களாக வாழ்வோம்‌ கடவுளின்‌ பிள்ளைகளாக இருப்போம்.‌
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

புதிய தொடக்கங்கள்

‘ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது’ என்கிறார் சபை உரையாளர் (காண். 7:8). தொடக்கங்களே முடிவுகளை நிர்ணயிக்கின்றன எனச் சொல்கின்ற இன்றைய வாசகங்கள் புதிய தொடக்கங்கள் நோக்கி நம்மை அழைக்கின்றன.

நாற்பது நாள்கள் பெருவெள்ளத்திற்குப் பின்னர் நோவா மற்றும் அவரோடு உடனிருந்த குடும்பத்தாரோடு ஆண்டவராகிய கடவுள் பேசுகிற சொற்களே இன்றைய முதல் வாசகம். ஒரு வாக்குறுதியும், ஓர் அடையாளமும் இங்கே முன்மொழியப்படுகின்றன. ‘என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வராது!’ என்னும் வாக்குறுதியையும், ‘என் உடன்படிக்கையின் அடையாளமாக என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்’ என்னும் அடையாளமும் இங்கே தரப்படுகின்றன.

பண்டைக்கால மேற்கு ஆசியாவில் வானவில் என்பது கடவுளின் ஆயுதமாகக் கருதப்பட்டது (காண். திபா 7:12-13). உடைந்த வில் அல்லது தொங்கவிடப்பட்ட வில் போர் நிறுத்தம் அல்லது அமைதியைக் குறித்தது (காண். திபா 46:9). ஆண்டவராகிய கடவுள் மனுக்குலத்தை அழிப்பதற்காக அவர்கள்மேல் தொடுத்த போரை நிறுத்திக் கொள்வதோடு, அவர் என்றும் அவர்களைத் தேடி வருவதாக வாக்குறுதி கொடுக்கிறார்.

மனிதர்களின் தீச்செயல்களையும் தீய இயல்பையும் எண்ணங்களையும்விட ஆண்டவராகிய கடவுளின் இரக்கம் மேன்மையானதாக இருக்கிறது. அவரே முயற்சி எடுத்து உடன்படிக்கையை ஏற்படுத்துகிறார். அவரே வாக்குறுதி கொடுக்கிறார். வாக்குறுதியில் நிலைத்திருப்பதற்கான அடையாளத்தையும் தனக்கென குறித்துக்கொள்கிறார்.

நோவாவும் அவருடன் இருந்தவர்களும் செய்ய வேண்டியது எனக் கடவுள் அவர்களுக்கு எதையும் வரையறுக்கவில்லை. அவர்கள் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். வெள்ளப்பெருக்கு என்பது அழிவின் அடையாளமாக அல்ல, புதிய தொடக்கமாக அவர்களுக்கு இருக்கிறது.

இரண்டாம் வாசகத்தில், துன்புறும் தன் திருஅவைக்கு எதிர்நோக்கு தருகிற பேதுரு, ஆண்டவராகிய இயேசு துன்பங்களின் வழியாக அடைந்த வெற்றியைக் குறித்துக்காட்டி, திருமுழுக்குத் தண்ணீர் வழியாக நாம் பெறுகிற மீட்பை எடுத்துரைக்கிறார். ‘மனித இயல்பு’, ‘ஆவிக்குரிய இயல்பு’ என்று இரு இயல்புகள் இயேசுவிடம் இருந்தன என எழுதுகிறார் பேதுரு. ‘மனித இயல்பு’ என்பது இயேசுவின் மனுவுருவாதலையும், ‘ஆவிக்குரிய இயல்பு’ என்பது அவருடைய உயிர்ப்பையும் குறிக்கின்றன. ஆண்டவராகிய கடவுள் உயிர்ப்பில் பெற்ற புதிய தொடக்கத்தை, நம்பிக்கையாளர்களும் பெற்றுக்கொள்வார்கள் என்பது பேதுருவின் எதிர்நோக்காக இருக்கிறது.

இயேசு சோதிக்கப்படும் நிகழ்வையும் அவருடைய பணித்தொடக்கத்தையும் நற்செய்தி வாசகத்தில் வாசிக்கிறோம். லூக்கா, மத்தேயு போல இயேசுவின் சோதனைகளின் வரிசையையும் அமைப்பையும் பற்றி மாற்கு எழுதவில்லை. மாறாக, சோதனைகள் நிகழ்வை இயேசுவின் பணித்தொடக்கத்துக்கான அமைப்புத்தளமாகப் பதிவு செய்கிறார்.

‘பாலை நிலம்,’ ‘நாற்பது நாள்கள்,’ ‘அலகை,’ ‘சோதனை,’ ‘காட்டு விலங்குகள்,’ ‘வானதூதர்’ என ஆறு அடையாளங்களைக் குறிப்பிடுகிறார். நம் தமிழ்மரபின் ஐந்து நிலங்கள் பிரிவின்படி பார்த்தால் ‘பாலை நிலம்’ மற்றவற்றின் இல்லாத நிலை. அதாவது, மலை, காடு, வயல், கடல் இவை எதுவும் இல்லாத இடமே பாலை. உயிர்கள் வாழ இயலாத, வளமை இல்லாத இடமே பாலை. யோர்தான் ஆற்றங்கரையில் இயேசுவோடு நின்ற தூய ஆவியார், நீரின் மறுபக்கமான பாலை நிலத்துக்கு அவரை அனுப்பி வைக்கிறார். பாலை என்பது வாழ்வின் மறுபக்கம். ‘நாற்பது’ என்னும் எண், இஸ்ரயேல் மக்களின் ‘நாற்பது ஆண்டுகால’ பாலைநிலப் பயணத்தைக் குறித்துக்காட்டுகிறது. நோவா பெருவெள்ள நிகழ்வின் பின்புலத்தில், ‘நாற்பது நாள்கள்’ என்னும் சொல்லாடல் வெள்ளம் வடிந்த புதிய தொடக்கத்தைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். ‘அலகை’ என்பதை எதிரி என்றும், சோதிப்பவர் என்றும் பொருள்கொள்ளலாம். ‘சோதனை’ என்றால் ‘துன்பம்’ அல்லது ‘சோதித்துப் பார்த்தல்’ என்று பொருள். படைப்பின் தொடக்கத்தில் ஆதாம் காட்டு விலங்குகளோடு வாழ்கிறார். புதிய ஆதாமாகிய கிறிஸ்துவும் காட்டு விலங்குகளின் நடுவில் வாழ்கிறார். ‘வானதூதரின் பணிவிடை’ என்பதை கடவுளின் பராமரிப்பு என எடுத்துக்கொள்ளலாம்.

இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வுக்கும் அவருடைய பணித்தொடக்கத்துக்குமான இணைப்புக் கோடாக இருக்கிறது சோதனைகள் நிகழ்வு.

இயேசுவின் முதல் அறிவிக்கை, இரண்டு நேர்முகமான வாக்கியங்களாகவும் இரண்டு கட்டளைகளாகவும் அமைந்துள்ளது: ‘காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கிவிட்டது,’ ‘மனம் மாறுங்கள். நற்செய்தியை நம்புங்கள்.’ நம்பிக்கை என்பது மக்கள் கொடுக்க வேண்டிய பதிலிறுப்பாக உள்ளது.

இயேசுவுக்கான தொடக்கம் மட்டுமல்ல, இயேசுவின் நற்செய்தியைக் கேட்பவர்களுக்குமான தொடக்கமாகவும் இது அமைகிறது.

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் செய்தி என்ன?

(அ) புதிய தொடக்கம் கடவுளிடமிருந்தே வருகிறது

முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள்தாமே மழையை நிறுத்துகிறார். அவரே தம் வில்லை வானில் வைக்கிறார். அவரே உடன்படிக்கை செய்கிறார். மனுக்குலத்துக்குப் புதிய தொடக்கத்தை அவரே தருகிறார். நாம் தவக்காலத்தில் மேற்கொள்கிற அனைத்துத் தவ முயற்சிகளும் கடவுளை நோக்கிய பயணத்துக்கான வழிகள்தாம் என்பதை உணரக் கற்றுக்கொள்வோம். ஏனெனில், நம் முயற்சிகளால் அல்ல, மாறாக, அவருடைய இரக்கத்தாலேயே நாம் புதிய தொடக்கத்தைப் பெறுகிறோம்.

(ஆ) கடவுளுக்குத் தரும் வாக்குறுதி

ஆண்டவராகிய கடவுள் நம்மை அழிப்பது இல்லை என நமக்கு வாக்குறுதி கொடுத்தாலும், இரண்டாம் வாசகத்தின்படி, திருமுழுக்குத் தண்ணீர் என்பது கடவுளுக்கு நாம் தரும் வாக்குறுதி எனப் பேதுரு சொல்வது நம் கவனத்தை ஈர்க்கிறது. திருமுழுக்கின் அருளை நாம் இந்த நாள்களில் மீட்டெடுக்க முயற்சி செய்ய வேண்டும். திருமுழுக்கின் வழியாக நாம் கடவுளுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுகூர்ந்து வாழ வேண்டும்.

(இ) பாலைநிலம் என்னும் தொடக்கம்

நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பாலைநில அனுபவங்களை இயேசுவும் பெற்றிருக்கிறார். அலகையும் வானதூதரும் ஒருங்கே வாழும் இந்த இடம் புதிய தொடக்கத்துக்கான பாதையை வரையறுக்கிறது.

இறுதியாக, பெருவெள்ளம், தண்ணீர், பாலைநிலம் என்னும் உருவகங்கள் வழியாக மனுக்குலத்தின் புதிய தொடக்கம் முன்மொழியப்படுகிறது. இந்தப் புதிய தொடக்கம் கடவுள் என்னும் புள்ளியில் தொடங்குகிறது.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

மனம் மாறி ஆவிக்குரிய இயல்போடு உயிர்ப்போமா!

இன்று தவக்காலத்தின் முதல் ஞாயிறு. தவக்காலம் எதற்காக என்றால் தகுந்த தயாரிப்போடு கிறிஸ்துவின் உயிர்ப்பில் பங்குபெற தகுதியுள்ளவர்களாய் நம்மை மாற்றுவதற்காகவே. இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் "இயேசு மனித இயல்போடு இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்போடு உயிர்த்தார் "என்று கூறுகிறார். ஆவிக்குரிய இயல்போடு அவர் உயிர்க்க இயேசு மண்ணுலகில் வாழ்ந்த போதே தம்மைத் தயாரித்தார் என்பதை நாம் அறிவோம். அதற்கு சிறந்த உதாரணம் இன்றைய நற்செய்தியில் நாம் தியானிக்கும் பாலைநிலத்தில் இயேசு சோதனையை வென்ற நிகழ்வுதான்.

அலகை அவரை ஊனியல்பினால் மடக்கப்பார்த்தது. ஊனியல்பின் இச்சைகளான உணவு, உலகம் எனும் உடைமை, பலவீனமாகிய சாத்தானுக்கு கீழ்படிதல் போன்ற ஆசைகளை இயேசுவிடம் தூண்டிவிட்டு அடிபணியச் செய்தது. ஆனால் இயேசு இறைவார்த்தையையும் தூய ஆவியையும் இறுகப்பிடித்து சோதனைகளை வென்றார். இவ்வாறு மனித இயல்போடு வாழ்ந்தாலும் ஆவிக்குரிய இயல்புகளை தன்னகத்தை வளர்த்துக்கொண்டார். இத்தகைய நிலையை நாமும் அடையவே இத்தவக்காலம் நமக்கெல்லாம் தரப்பட்டுள்ளது.

சோதனைக்குப்பின் தன் பணியைத் தொடர்ந்த இயேசு பறைசாற்றியது என்ன? மனம்திரும்பி நற்செய்தியை நம்புங்கள் என்பதே. அதாவது மனித இயல்புகளுக்கு அடிமையாய் இருந்தது போதும். மாறாக ஆவிக்குரிய இயல்புகளை வளர்த்துக்கொள்ள முயலுங்கள் என்பதே இயேசு கொடுத்த அரைகூவல்.

நாமெல்லாம் சிந்திக்கலாம் ...பிடித்த உணவுகளை உண்பது,பலவீனங்களைக் கொண்டிருப்பது, உடைமைகள் வைத்திருப்பது போன்றவை தவறா? என்று. உணவை உண்ணலாம் ஆனால் அளவுகளை மீறக்கூடாது. பலவீனங்கள் இருப்பது இயல்பு ஆனால் அதற்கு அடிமையாகிடக் கூடாது. உடைமைகள் இருக்கலாம். ஆனால் அவை நமக்கு ககடவுளாகிவிடக் கூடாது. ஏனென்றால் அலகை சமயம் பார்த்து நம்மை சூழ்ச்சியில் ஆழ்த்துபவன். நம் பலவீனங்களை நமக்கு எதிராகவே திருப்பி விடுபவன். எனவே நாமும் இறைவார்த்தையையும் தூய ஆவியையும் இயேசுவைப் போல இறுகப் பற்றி சோதனைகளை வெல்ல வேண்டும். ஏனென்றால் நம் அன்றாட வாழ்க்கையில் சோதனையை நம்மால் தவிர்க்கமுடியாது. நாம் ஆவிக்குரிய இயல்பை வளர்த்துக்கொண்டால் மட்டுமே இத்தகைய பாவ சூழல்களை வென்று இயேசுவோடு உயிர்க்க இயலும். இதைக் கருத்தில் கொண்டு தூய ஆவியாரின் துணையோடும் இறைவார்த்தையை வாழ்வாக்குவதன் முலமும் பாவ வழிகளை விட்டு மனம்திரும்பி ஆவிக்குரிய இயல்போடு வாழ முயல்வோம்.

இறைவேண்டல்

சோதனைகளை வென்ற இயேசுவே ! அலகையின் சூழ்ச்சியில் சிக்காத வண்ணம் ஆவிக்குரிய இயல்போடு வாழக்கூடியவர்களாய் எம்மை மாற்றுவீராக. ஆமென்

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser