மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection.

பாஸ்கா காலம் ஆம்ஞாயிறு
2-ஆம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
திருத்தூதர் பணிகள் 2:1-11 | கலாத்தியர் 5:16-25 | யோவான் 15:26-27; 16:12-15

உங்களுக்குத் தேவையான கட்டுரையைத் தேர்வு செய்யவும்


மனித இதயத்தில்‌ குடிபுகுந்த ஆவியானவர்‌

அன்றாட வாழ்வில்‌ பல இன்ப துன்பங்களைச்‌ சந்திக்கிறோம்‌. மனித வாழ்வு வளர்ச்சியை நோக்கிப்‌ பயணம்‌ செய்யும்போது, அவ்வப்போது தடுமாற்றம்‌, மேடு பள்ளங்களைச்‌ சந்திக்கிறோம்‌. அப்படிப்பட்ட சூழ்நிலையில்‌ நம்மை வழிநடத்த ஒரு துணை 'தேவைப்படுகிறது. அந்த துணையாளர்தான்‌ தூய ஆவியானவர்‌. படைப்பின்‌ தொடக்கமே தூய ஆவியின்‌ செயல்பாடுதான்‌. தூய ஆவியானவர்‌ தண்ணீரின்‌ மீது அசைவாடிக்‌ கொண்டிருந்தார்‌ (தொ.நூ. 1:2). அவரால்‌ படைப்பாற்றல்‌ உருவானது. மனிதன்‌ தனிமையாய்‌ இருப்பது நல்லதல்ல என்பதை அறிந்த கடவுள்‌ அவனுக்கு சரி நிகராக ஒரு துணையை உருவாக்கினார்‌. துணை இருக்கும்போது நம்பிக்கை பிறக்கிறது. விரக்தி, வேதனைகளைப்‌ பகிர்ந்து கொள்ள முடிகிறது. உள்ளத்திற்கு உறுதி கிடைக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில்‌ தூய ஆவியின்‌ ஆற்றலையும்‌, செயலாக்கத்தையும்‌ நாம்‌ புரிந்துகொள்கிறோம்‌. தடுமாறும்‌ மனிதனை, பாதை மாறிச்‌ செல்லும்‌ மனிதனை இயேசுவிடம்‌ அழைத்துச்‌ செல்லும்‌ மகத்தான பணியைச்‌ சிறப்பாகச்‌ செய்பவர்‌ தூய ஆவியானவர்‌. தூய ஆவியானவர்‌ கடவுளுக்கும்‌, மனிதனுக்கும்‌ இடையே ஓர்‌ இணைப்புப்‌ பாலம்‌, இடைநிலையாளர்‌, ஒருங்கிணைப்பாளர்‌ எனலாம்‌.

தந்தையின்‌ விருப்பங்களை இம்மண்ணுலகில்‌ நிறைவு செய்வதற்கு, அனைத்துத்‌ துன்பங்களையும்‌ தாங்கிக்கொள்ள பக்குவப்பட்ட மனநிலையை, தூய ஆவியின்‌ வழியாகவே இறைமகன்‌ இயேசு பெற்றுக்கொண்டார்‌. விண்ணகம்‌ சென்ற இயேசு, தூய ஆவியானவரை அனுப்பினார்‌. ஆவியானவர்‌. மிகுந்த வல்லமையோடு இறங்கி வந்தார்‌. பயந்து நடுங்கிய திருத்தூதர்கள்‌ துணிவோடு போதிக்கவும்‌, பல மொழிகளில்‌ பேசவும்‌ தொடங்கினர்‌. வலுவற்ற நிலையில்‌ இருந்த அவர்களுக்கு தூய ஆவியானவர்‌ துணை நின்றார்‌ (உரோ. 8:26).

தூய ஆவியின்‌ கொடைகளைப்‌ பெற்றவர்கள்‌ சோதனைகளைக்‌ கடந்து, சாதனைகள்‌ படைப்பார்கள்‌. இயேசுவின்‌ திருமுழுக்கு, பாலைவனச்‌ சோதனை, கலிலேயாவில்‌ பொதுப்பணி தொடக்கம்‌ இதை தெளிவாக்குகிறது (லூக்‌. 3:21-45). குழப்பம்‌ வரும்போதெல்லாம்‌ இயேசுவைத்‌ தந்தையிடம்‌ அழைத்துச்‌ சென்றவர்‌ தூய ஆவியானவர்‌. பணி வாழ்வின்‌ வழியாக, தான்‌ பெற்ற அனுபவத்தைத்‌ தனது சீடர்களுக்கும்‌ பகிர்ந்து கொடுத்தார்‌. உயிர்த்த இயேசு இரண்டு முறை உங்களுக்குச்‌ சமாதானம்‌ என்று . கூறி, தூய ஆவியானவரை அனுப்பினார்‌ (யோவா. 20:19-21). இந்த சமாதானத்தை நமக்கு அளிப்பவர்‌ தூய ஆவியானவரே. நானும்‌ தந்தையைக்‌ கேட்பேன்‌. அவர்‌ மற்றொரு துணையாளரை உங்களுக்குத்‌ தருவார்‌. அவர்‌ உங்களோடு என்றும்‌ இருப்பார்‌, அவர்‌ உண்மையின்‌ ஆவியானவர்‌ (யோவா. 14:16-17). கிறிஸ்து வாக்களித்த தூய ஆவியை நாம்‌ திருவருட்சாதனங்கள்‌ வழியாகப்‌ பெற்றுக்கொள்கிறோம்‌.

ஆதிக்‌ கிறிஸ்தவர்களிடம்‌ ஒரே மனம்‌, ஒரே உள்ளம்‌, கூடி செபித்தல்‌, தேவைக்கு ஏற்ப பகிர்தல்‌ இவைகள்‌ அனைத்தையும்‌ செயலாக்கம்‌ பெறச்‌ செய்தது தூய ஆவியின்‌ ஆற்றலே. அவர்களின்‌ அகத்திலிருந்து தூய ஆவியின்‌ ஆற்றல்‌ வெளிப்பட்டதால்தான்‌ பல இடங்களுக்குச்‌ சென்று போதித்தனர்‌. பொதுவுடைமை நோக்கில்‌ உறவுகளில்‌ மேம்பாடு கண்டனர்‌.

இருவர்‌ படகில்‌ ஏறி அக்கரையில்‌ உள்ள வீட்டுக்குச்‌ செல்லும்‌ முன்‌ படகை கரையோர மரத்தில்‌ கட்டிவிட்டு, வீட்டிற்குத்‌ தேவையான உணவுப்‌ பொருட்களை வாங்கினர்‌. பின்பு மதுக்கடைக்குச்‌ சென்று நன்கு குடித்துவிட்டு வந்து படகில்‌ ஏறி மிகுந்த உற்சாகத்துடன்‌ தண்டு வலித்தனர்‌. நீண்ட நேரத்திற்குப்‌ பிறகு போதை தெளிந்தது. கரையில்‌ உள்ள மரத்தில்‌ படகு கட்டப்பட்டிருப்பது நிதானம்‌ வந்த பிறகுதான்‌ அவர்களுக்குத்‌ தெரிந்தது. தூய ஆவியைப்‌ பெற்ற பிறகும்‌ வாழ்வில்‌ மாற்றமும்‌, வளர்ச்சியும்‌ இல்லாமல்‌ பழைய நிலையிலேயே வாழும்‌ மனிதர்களையும்‌ பார்க்கிறோம்‌. இப்படிப்பட்ட மனிதர்கள்‌ புது வாழ்வு பெற தூய ஆவியானவர்‌ அழைப்பு விடுக்கின்றார்‌.

தூய ஆவியின்‌ செயலாக்கம்‌

குடும்ப உறவுகளில்‌ தடுமாறும்‌ மனிதனை, நல்‌ வழிப்படுத்துவது தூய ஆவியே. அந்த ஆவியால்‌ செயலாக்கம்‌ பெறும்போது அங்கே அமைதி பிறக்கிறது. உறவுகள்‌ அனைவரையும்‌ ஒருமுகப்படுத்துகிறது. கடவுளின்‌ ஆவியானவர்‌ தண்ணீரின்‌ மீது அசைவாடிக் கொண்டிருந்தார்‌. உலக தொடக்கமே ஆவியின்‌ செயல்பாடாக அமைந்தது (தொ.நூ. 1:2).

அந்நேரமுதல்‌ கடவுளால்‌ ஏவப்பட்டவராய்‌ அவர்‌ இறைவாக்கு உரைத்தார்‌ (எண்‌. 24:1).

ஆண்டவரின்‌ ஆவி என்னைத்‌ தூக்கிக்கொண்டு போய்‌ ஒரு பள்ளத்தாக்கின்‌ நடுவில்‌ விட்டது (எசே. 37:1).

ஆண்டவரின்‌ ஆவி என்‌ மேலே. அவர்‌ என்னை அருட்பொழிவு செய்துள்ளார்‌ (லூக்‌. 4:18).

இயேசு அலகையால்‌ சோதிக்கப்பட்டார்‌. தூய ஆவியின்‌ துணையால்‌ வெற்றி பெற்றார்‌ (மத்‌. 4:11).

தாயின்‌ வயிற்றிலிருக்கும்போதே அவர்‌ தூய ஆவியால்‌ முற்றிலும்‌ ஆட்கொள்ளப்பட்டார்‌ (லூக்‌. 1:15.)

வானதூதர்‌ மரியாவிடம்‌, தூய ஆவி உன்‌ மீது வருவார்‌. உன்னத கடவுளின்‌ வல்லமை உன்‌ மீது நிழலிடும்‌ (லூக்‌. 1:35) என்றார்‌.

இயேசு திருமுழுக்குப்‌ பெற்று செபித்துக்‌ கொண்டிருந்த போது வானம்‌ திறந்தது. தூய ஆவி புறா வடிவில்‌ அவர்‌ மீது இறங்கினார்‌ (லூக்‌. 3:22).

ஒரு தாய்‌ கருவுறும்போது தாயின்‌ சுவாசத்திலேயே குழந்தை உயிர்‌ வாழ்கிறது. அந்த சுவாசம்‌, ஆதியிலே ஆவியானவர்‌ மனிதன்‌ மேல்‌ ஊதிய சுவாசமே. இன்றைக்கும்‌ அது தலைமுறை தலைமுறையாக, பிள்ளைகளின்‌ பிள்ளைகளாகத்‌ தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. வயிற்றுக்குள்‌ தாயினுடைய சுவாசத்தினால்‌ உயிர்‌ வாழ்கின்ற குழந்தை, உலகத்தில்‌ பிறக்கும்போது தானாகவே சுவாசிக்க ஆரம்பித்துவிடுகிறது. இது எத்தனை ஆச்சரியமான செயல்‌. இந்தக்‌ காட்சியை சற்றே கற்பனை செய்துப்‌ பாருங்கள்‌. நமக்கு ஆவிக்குரிய நுரையீரல்‌ இருக்கிறது என்று வைத்துக்‌ கொள்வோம்‌. கிறிஸ்து நம்மீது ஊதி தூய ஆவியைப்‌ பெற்றுக்‌ கொள்ளுங்கள்‌ என்று சொல்லும்போது அந்த ஆவிக்குரிய சுவாசப்‌ பைகள்‌ இயங்கத்‌ தொடங்குகின்றன. அப்போது நாம்‌ அனைவரும்‌ இறைவனுக்குச்‌ சொந்தமானவர்களாக முத்திரையிடப்படுகிறோம்‌.

"நாம்‌ கூடி செபிக்கும்போது அங்கே இறைவன்‌ இருக்கிறார்‌. தூய ஆவியால்‌ நிரப்பப்படுகிறோம்‌. எனக்கு உறுதியூட்டும்‌ இறைவனின்‌ துணையால்‌ எதையும்‌ செய்ய எனக்கு ஆற்றல்‌ உண்டு (பிலி, 4:13)

உலகத்‌ தொடக்கத்தில்‌ மனித இதயத்தில்‌ குடிபுகுந்த ஆவியானவர்‌ இன்றும்‌ நம்மை வழிநடத்தி வருகிறார்‌. துன்பத்தில்‌ தோள்‌ கொடுக்கிறார்‌. நமது போராட்ட வாழ்வுக்கு மத்தியில்‌ சமாதானத்தின்‌ தூதுவராக நமக்குள்‌ இருந்து செயல்படுகிறார்‌. நமக்கு ஆற்றல்‌ தந்து ஆன்மீக வாழ்வில்‌ வளமைக்‌. காண தூய ஆவியின்‌ துணை வேண்டி செபிப்போம்‌.

சிந்தனைக்கு
ஒரு கண்ணாடிக்‌ குடுவையைத்‌ தண்ணீர்‌ ஊற்றி நிரப்பினால்‌ உள்ளே இருக்கும்‌ எல்லா வாயுவும்‌ மெல்ல மெல்ல வெளியே போய்விடும்‌. அதுபோல நம்‌ உள்ளத்தில்‌ இருக்கின்ற அசுத்த நினைவுகள்‌, சிந்தனைகள்‌, தீய செயல்பாடுகள்‌ எல்லாம்‌ வெளியே போக வேண்டுமென்றால்‌ நமக்குள்ளே தூய ஆவியானவர்‌ ஊற்றப்பட வேண்டும்‌. அவர்‌ நம்‌ உள்ளத்தில்‌ நிரம்பி வழியும்போது அசுத்தங்கள்‌ தானாகவே விலகிவிடும்‌. அப்போது நமது இதயமும்‌, செயல்பாடுகளும்‌ பரிசுத்தமானதாக இருக்கும்‌.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

அச்சம் அகற்றி அமைதியில் வாழ்வோம்

 1. தூய ஆவியார் நமக்கு என்னென்ன நன்மைகளைச் செய்வார்? கடவுளின் மாபெரும் செயல்களைப் பற்றி நமக்கு எடுத்துரைப்பார் (முதல் வாசகம்).
 2. இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்ற உண்மையை நமக்குச் சுட்டிக்காட்டுவார் (இரண்டாம் வாசகம்).
 3. நமது மனத்திலிருக்கும் அச்சத்தை அகற்றி அமைதியை அளிப்பார் (நற்செய்தி).

தூய ஆவியார் யார்?

ஒரு கிராமத்திலிருந்து புனித இடங்களையெல்லாம் சுற்றிப்பார்க்க 100 பேர் புறப்பட்டனர். அவர்களுடைய திருப்பயணத்தில் ஒரு நாள். ஒரு காட்டின் நடுவே ஓடிக்கொண்டிருந்த ஆறு ஒன்றில் குளித்துவிட்டு 100 பேரும் கரையேறினர். பயணத்தைத் தொடர்வதற்கு முன்னால் ஒருவர் எல்லாரையும் எண்ணினார். ஒருவர் குறைந்தார். ஒருவரை ஆறு அடித்துச்சென்றுவிட்டது எனச் சொல்லி அத்தனைபேரும் கண்கலங்கினர். அந்த நேரத்தில் அந்தப்பக்கமாக ஞானமே உருவான குரு ஒருவர் வந்தார்! அந்த ஞானி அவர்களைப் பார்த்து, ஏன் இந்த சோகம்? என்றார். அந்த மக்கள் நடந்ததைச் சொன்னார்கள். குரு எண்ணினார்! சரியாக 100 பேரும் இருந்தார்கள்! குரு, "எண்ணியவர் தன்னை எண்ணிக்கையில் சேர்க்க விட்டுவிட்டார். அதனால்தான் இந்தக் குழப்பம்" என்றார். ஞானம் பெற்ற மக்கள் ஞானிக்கு நன்றி சொல்லி, பயணத்தைத் தொடர்ந்தனர்.

இந்தக் கதையிலே வந்த ஞானியைப் போன்றவர்தான், இல்லை, இல்லை, ஞானிகளுக்கெல்லாம் ஞானியாக விளங்குபவர்தான், இல்லை, இல்லை ஞானத்தின் ஊற்றுதான் தூய ஆவியார்.

நம்மைப்பற்றி எண்ணிப்பார்க்காமல் நாம் வாழ்வதுதான் நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்குக் காரணம்! இந்த உண்மையைச் சுட்டிக்காட்டுபவர்தான் தூய ஆவியார்.

இதோ தூய ஆவியார் நம்மோடு இவ்வாறு பேசுகின்றார் :

உன்னையே நீ உற்றுப்பார் ! திருமுழுக்கு நாளன்று உனக்குள் வாழ வந்த நான் உன்னில் உடனிருப்பதை நீ அறிவாய்! அந்த அறிவு இறைவனின் மாபெரும் செயல்களைப்பற்றி உன்னைச் சிந்திக்க வைக்கும்; இயேசு கிறிஸ்து ஆண்டவர் என்பதை உனக்குப் புரியவைக்கும்; அச்சத்தை அகற்றி அமைதியில் உன்னை வாழவைக்கும்.

மேலும் அறிவோம் :

அச்சம் உடையார்க்(கு) அரண்இல்லை ஆங்கில்லை
பொச்சாப்(பு) உடையார்க்கு நன்கு (குறள் : 534).


பொருள் : உள்ளத்தில் அஞ்சி நடுங்குபவர்க்குப் புறத்தே எத்தகைய பாதுகாப்பு இருந்தும் பயனில்லை. அதேபோன்று, மனத்தகத்தே மறதி உடையவர்க்கு எவ்வளவு செல்வம் சேர்ந்தாலும் அவற்றால் பயன் எதுவும் விளையாது!

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

"பரிசுத்த ஆவியார் எப்போது வருகிறார்?"

ஒரு பங்குத் தந்தை தனது பங்கிலே தங்குவதில்லை, ஞாயிறு திருப்பலியை நிறைவேற்றியபின் உடனடியாக, "மோட்டார் சைக்கிளில்" மாயமாக மறைந்து விடுவார். ஒரு ஞாயிறு அன்று திருப்பலி திறைவேற்றிய உடனே "மோட்டார் சைக்களில்' வழக்கம் போல் பறந்து சென்ற அவர், ஒரு பெரிய குழியில் விழுந்து விட்டார்; வெளியே வரமுடியாமல் திணறினார், அவ்வழியே சென்று பங்கு மக்கள், "இவர் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தான் நமக்குத் தேவைப்படுவோர், அதுவரை அவர் இக்குழியிலேயே கிடக்கட்டும்" என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

இன்று சுத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து மக்கள் பல்வேறு சபைகளுக்குச் செல்வதற்குப் பல காரணங்கள் கூறுகின்றனர், அக்காரணங்களில் ஒன்று. "பங்குத் தந்தைக்கு மேய்ப்புப்பணி சார்ந்த அக்கறையில்லை, அவர் பங்கில் தங்குவதில்லை, பங்கு மக்களை அவர்களின் வீடுகளுக்குச் சென்று சந்திப்பதில்லை."

இப்பின்னணியில் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கும் 'நல்லாயன் உவமை” முக்கியத்துவம் பெறுகிறது. பழைய உடன்படிக்கையில், கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையே நிலவிய உறவு ஓர் ஆயனுக்கும் அவருடைய ஆடுகளுக்கும் இடையே நிலவிய உறவுக்கு ஒப்பிடப்பட்டுள்ளது (எசா 40:11; எரே 23:3-4; எசே 34:11-18: திபா 23).

நல்லாயனுடைய தனிப்பண்புகள்: "அவர் இரவும் பகலும் தன் ஆடுகளுடன் இருக்கிறார். அவற்றின்மீது அக்கறை கொண்டு, அவற்றின் தேவைகளை நிறைவுசெய்து, அவற்றிற்காகத் தம் உயிரையும் கொடுத்து, அவற்றைக் கொடிய விலங்குகளிடமிருந்து பாதுகாக்கிறார்."

ஆனால், போலி ஆயர்கள் தங்கள் ஆடுகளை மேய்க்காமல் தங்களையே மேய்த்துக் கொண்ட அவலநிலையில் (எசா 24:7-8). 'என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன்' என்று கடவுள் வாக்களித்தார் (எரே 3: 11:5), கடவுளால் வரக்களிக்கப்பட்ட ஒப்புயர்வற்ற ஆயர் இயேசு கிறிஸ்துவே. அவர் தம் ஆடுகள் ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறையில் அறிந்து, அன்புசெய்து. அவற்றிற்காகத் தன் இன்னுயிரையும் கையளிக்கிறார். மேலும் அவரது மந்தையைச் சாராத மற்ற ஆடுகளையும் கூட்டிச் சேர்த்து ஒரே மேய்ப்பன் கீழ் ஒரே மந்தையை உருவாக்குகிறார் (யோவா 10:14-16), நல்லாயன் கிறிஸ்துவைப் பின்பற்றி, திருப்பணியாளர்கள், குறிப்பாக பங்குத்தந்தையர்கள். தங்களுடைய பங்கில் தங்கியிருந்து, சிறுவர்களிடம் அவர், "பரிசுத்த ஆவியார் எப்போது வருகிறார்?" என்று கேட்டார், அதற்கு அவர்கள்: "ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறார்” என்று பதில் சொன்னார்கள். இது கதையல்ல, நிஜம்!

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறவர் தூய ஆவியார் அல்ல. அவர் நம்பிக்கை கொள்வோர் உள்ளத்தில் நிரந்தரமாகக் குடி கொண்டுள்ளார், "தூய ஆவியாரின் நிரந்தரமான இயக்கத்தில் விசுவாசத்தில் வாழ்கிறவரே கிறிஸ்துவர்", கிறிஸ்தவர் களுக்கு அருமையான இலக்கணம் இது! உண்மையில், திருத்தூதர் பவுல், 'கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களோ கடவுளின் மக்கள்' (உரோ 8:14) என்றும், 'கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல' (உரோ 8:9) என்றும், "தூய ஆவியின் தூண்டுதலன்றி 'இயேசு ஆண்டவர்' என்று எவரும் கூற இயலாது' (1கொரி 12:13) என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளார். தூய ஆவியார் நம்மை அகநிலையிலும் புறநிலையிலும் இயக்கி வருகிறார், அகநிலையில் நம்முள் குடியிருந்து நம்மை அவரது ஆலயமாக்கிப் புனிதப்படுகிறார். புறநிலையில் நம்மை இயேசுவுக்குச் சாட்சிகளாகத் திகழச் செய்கின்றனர்.

நமது நாட்டு ஞானிகள் நமது உடலைப் பற்றி இழிவாகப் பேசுவர், நமது உடல் 'ஒரு புழுக்கூடு: வெறும் கட்டை.' காற்றடித்தால் கீழே விழுகின்ற தென்னமட்டை; பாம்பு கழற்றிப் போடும் சட்டை; அதை உற்றுப்பார்த்தால் வெறும் லொட லொட்டை' என்றெல்லாம் கூறுவர், ஆனால் தூய பவுல், " நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?" (1கொரி 3:16) என்று கேட்கிறார். மேலும், காமச்சகதியில் புரண்ட கொரிந்தியர்களுக்கு, "உடல் பரத்தமைக்கு அல்ல, ஆண்டவருக்குரியது (1கொரி 6:13) என்று உரைக்கிறார்.

ஒரு 'குண்டு' அம்மா பங்குத் தந்தையிடம், "நானுமா பரிசுத்த ஆவியின் ஆலயம் என்று கேட்டதற்கு, பங்குத் தந்தை அவரிடம், "நீங்கள் பரிசுத்த ஆவியின் 'பசிலிக்கா' என்றாராம்!

தூய ஆவியார் நமது உள்ளத்தின் இனிய விருந்தினர், விருந்தினர்களை மென்மையாக, அனிச்ச மல்) ரைப் போல் நடத்த வேண்டும், வித்தியாசமாக அவர்களைப் பார்த்தால், அவர்கள் முகம் வாடிவிடும் என்கிறார் வள்ளுவர்

'மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து, நோக்கக் குழையும் விருந்து' (குறள் 90)

நமது உள்ளத்தின் விருந்தினரான தூய ஆவிக்கு நமது முறைகெட்ட சொல்லாலும் செயலாலும் வருத்தம் வருவிக்கவோ (எபே 4:30). அல்லது அவரது செயல்பாட்டைத் தடுக்கவோ (1தெச 5:19) கூடாது.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

சுடரொளியே வழிகாட்டு

நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னே இத்தாலி யினின்று இங்கிலாந்து நோக்கிப் புறப்பட்டது கப்பல் ஒன்று. அந்தக் கப்பலின் மேல் தளத்தில் அறிவின் சிகரம், மேதை - பிற்காலத்தில் கத்தோலிக்குத் திருச்சபையில் கர்தினாலாக உயர்ந்து நின்ற - நியூ மென் ஒருவித மனக் குழப்பத்தில் அமைதியின்றி நடந்து கொண்டிருக்கிறார். உண்மை எது? அது எங்கிருக்கிறது? இயேசுவின் உண்மை வழியை உணர்த்தும் சபை எது? தான் இதுவரை வாழ்ந்து வந்த ஆங்கிலிக்கன் சபையா? தனக்கு முன் காட்சி தரும் கத்தோலிக்கு சபையா?... அந்த மனப் போராட்டத்தில் அவர் உள்ளம் துடித்துப் பாடியது தான் “Lead kindly light” என்ற அழியாத அமரத்துவம் பெற்ற ஆங்கிலப் பாடல்:

சூழ்ந்திடும் இருளில் ஊழல்கின்றேன்
அன்புச் சுடரொளியே வழிகாட்டு
பாழ்இருள் இரவிது வீடோ தொலைவினில்
பரிவொளியே வழிகாட்டு
பாதையின் முடிவில் உள்ளதோர் காட்சி
பார்த்திட வேண்டிலேன் - இங்கென்
பாதம் பெயர்த்திட ஓரடி போதும்
பரஞ்சுடரே வழிகாட்டு
என்னை நீ அழைத்துச் செல் என நின்னை
ஏழையேன் இறைஞ்சியதில்லை
என்றுமே முரடாய் என்வழி சென்றேன்
என்னினும் வழிகாட்டு
பகட்டொளி உலகப் படரிலே படர்ந்தேன்
பயம் என்னைப் பற்றிய போதும்
அகம்பிடித் தலைந்தேன் அதையெல்லாம் எண்ணாது
அருஞ்சுடரே வழிகாட்டு.

"உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும் போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்” (யோ.16:13) என்ற இயேசுவின் வாக்குறுதியே நியூமெனைப் பாட வைத்தது.

உண்மையின் ஆவியானவர் எப்படியெல்லாம் மனித வாழ்வில் செயல்படுகிறார்!

நியூமென் கத்தோலிக்குத் திருச்சபையைத் தழுவிய போது அவர் விட்டுக் கொடுத்தது ஏதோ ஒரு கொள்கையை மட்டுமல்ல. தனது வழியை, தானே தெரிந்து கொள்ள வேண்டிய உரிமையை முழுதும் தூய ஆவியிடம் ஒப்படைத்தார். அதனால்தான் அவருடைய மனமாற்றத்தைத் தூய பவுல், தூய அகுஸ்தின் போன்றவர்களின் மனமாற்றத்தோடு ஒப்பிடலாம். தனது வாழ்வின் கதியை, தானே நிர்ணயிக்க வேண்டிய மாபெரும் பொறுப்பை தூய ஆவியிடம் ஒப்படைக்கத் துணிவும் தியாகமும் வேண்டும். கண்ணை மூடிக் கொண்டு கடவுளின் அழைப்பை ஏற்று அவர் எங்கு நடத்திச் சென்றாலும் சரி என்ற மனப்பான்மையோடு அவரைப் பின் சென்றது ஒரு கண நேரத்தில் தோன்றிய உணர்ச்சியின் விளைவு அன்று. அது நீண்ட மனப்போராட்டத்தில் பிறந்த தூண்டுதலே யாகும். இதையே தன்னை முழுவதும் கையளித்தல் என்கிறோம். இயேசு எதிர்பார்க்கும் மனநிலை இது!

தன்னை முழுவதும் தூய ஆவியிடம் கையளித்தல் என்பது உடைத்து உருவாக்க நாம் கொடுக்கும் அனுமதியாகும். அப்போது அச்சுறுத்தும் ஆவியாகக் கூடத் தோன்றுவார். ஆவியானவரைப் பயன்படுத்தும் மக்களாக இல்லாமல் அவரால் பயன்படுத்தப்படும் கருவிகளாக வாழுவோம்.

உயிருள்ள இறைவனின் ஆவியே என்னுள் எழுந்தருளும்
உடையும் என்னை உருவாக்கும்
நிரப்பும் என்னைப் பயன்படுத்தும்
தனியாக ஒருமையிலும் (என்னுள்) குழுவாகப் பன்மையிலும் 
(எம்முள்) உணர்ந்து அர்ப்பணித்துப் பாட வேண்டிய பாடல் இது.

எதனால் நிரப்புகிறார்? தனது வரங்களினால், கொடைகளினால், கனிகளினால் நிரப்பிப் புத்துயிர் அளிக்கும் ஆற்றலே தூய ஆவி.

ஆவியின் அருங்கொடைகள் 9 என்று பவுல் ஒரு பட்டியல் தருகிறார். ஞானம் நிறைந்த சொல் வளம், அறிவு செறிந்த சொல் வளம், நம்பிக்கை, பிணி தீர்க்கும் அருள்கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் வரம், ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் திறன், பரவசப் பேச்சு, அப்பேச்சை விளக்கும் ஆற்றல் (1 கொரி. 12:8-11)

ஆவியின் வரங்கள் (ஆறா? ஏழா?) என இறைவாக்கினர் எசாயா சொல்வது: ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத் திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப் பற்றிய அச்சம் (எசாயா 11:2).

ஆவியின் கனிகளோ 9. அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை , கனிவு, தன்னடக்கம். (கலா.5:22)

இவற்றில் வரங்களும் கொடைகளும் மானியம் போல இறைவன் நமக்கு அருள்பவை. அவற்றைவிட முக்கியமானவைகள் கனிகள். இவை தூய ஆவியோடு ஒத்துழைத்து நாமே வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள். கனியைக் கொண்டே மரத்தை அறிகிறோம்.

இந்த வரங்கள், கொடைகள், கனிகள் எந்த அடிப்படையில் தொகுக்கப்பட்டன என்பதே கேள்விக்கும் சிந்தனைக்கும் உரியது. அவை பற்றி எந்தக் குறிப்பும் நற்செய்தி ஏடுகளில் இல்லை. "இயேசு அவர்கள் மேல் ஊதி தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று ஆவியின் கொடையாக வாக்களித்தது ஒன்றே ஒன்றுதான். அது மன்னிக்கும் வரம் "எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப் படும், எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” (யோவான் 20:22,23).

திருச்சபையின் முக்கிய செயல்பாடுகள் இரண்டு. இரண்டுக்குமே ஊற்று தூய ஆவியே.

1. செபம். “தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார். எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது. தூய ஆவியார் தாமே சொல் வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுக்களின் வாயிலாய் நமக்காகப் பரிந்து பேசுகிறார்” (உரோமை. 8:26)

2. அன்பு. (மன்னிக்கும் அன்பு) “நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. (உரோமை 5:5).

எல்லாவற்றிற்கும் மேலாக, தூய ஆவியே கடவுள் நமக்குத் தந்த மிகப் பெரிய கொடை. (லூக். 11:13)

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா

இஞ்ஞாயிறன்று நாம் சிறப்பிக்கும் தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவை, ‘பெந்தக்கோஸ்து’ என்றும் அழைக்கிறோம். ‘பெந்தக்கோஸ்து’ என்ற சொல்லுக்கு, ‘ஐம்பதாம் நாள்’ என்று பொருள். உயிர்ப்புப் பெருவிழாவைத் தொடர்ந்துவந்த ஐம்பது நாட்களில், இறைஇரக்க ஞாயிறு, நல்லாயன் ஞாயிறு, விண்ணேற்றப் பெருவிழா என்று, பல விழாக்களைக் கொண்டாடினோம். இனிவரும் நாட்களிலும், மூவொரு இறைவன், கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தம், கிறிஸ்துவின் திரு இருதயம் என்று, விழாக்களும், கொண்டாட்டங்களும் தொடரும். ஒவ்வொரு விழாவையும் கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது, எதைக் கொண்டாடுகிறோம், எப்படி கொண்டாடுகிறோம் என்பதைச் சிந்திப்பது நல்லது.

இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை என்ற இந்த மூன்று நிகழ்வுகளும், நமது கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமான உண்மைகள். இந்த முக்கியமான மறையுண்மைகள், முதன்முதலில் நிகழ்ந்தபோது, உலகினர் கவனத்தை ஈர்க்கும்வண்ணம், எக்காள முழக்கமும், வாணவேடிக்கைகளும், இடம்பெற்றிருக்க வேண்டாமா? அப்படி நடந்ததாகத் தெரியவில்லையே! மாறாக, இந்நிகழ்வுகள் ஒவ்வொன்றும, முதன் முதலில் நடந்தபோது, அமைதியாய் நடந்தன.

எப்போது, எப்படி நடந்ததென்றே தெரியாமல், நிகழ்ந்த ஒரு முக்கிய மறையுண்மை, உயிர்ப்பு. நெருங்கியச் சீடர்களுக்கு மட்டும் இயேசு தந்த ஓர் அமைதியான அனுபவம், விண்ணேற்றம். இன்று நாம் எண்ணிப்பார்க்கும் தூய ஆவியாரின் விழாவோ, அன்னை மரியாவுக்கும், சீடர்களுக்கும் அந்த மேலறையில் உண்டான மாற்றங்களைக் கூறும் ஒரு விழா. அந்த மேலறை அனுபவத்திற்குப் பின், எருசலேமில் இருந்தோர் பலருக்கு இந்தப் பெருவிழாவின் தாக்கம் வெளிப்பட்டது என்று இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. கிறிஸ்தவ நம்பிக்கையின் அடித்தளமான இந்த மறையுண்மைகள் அனைத்துமே, உலகின் கவனத்தை அதிகம் ஈர்க்காமல் நடைபெற்ற நிகழ்வுகள்.

‘விழா’ என்ற சொல்லுக்கு, இவ்வுலகம் வகுத்துள்ள இலக்கணத்திலிருந்து, முற்றிலும் மாறுபட்டதோர் இலக்கணத்தை, திருஅவையில் நாம் சிறப்பிக்கும் இவ்விழாக்கள் வகுத்துள்ளன. உலகம் வகுத்துள்ள இலக்கணத்தில், பகட்டு, பிரமிப்பு, பிரம்மாண்டம் இவைகளே, விழாக்களின் உயிர்நாடிகளாய் உள்ளன. இந்த விழாக்கள் எதற்காக கொண்டாடப்பட்டன என்று அடுத்தநாள் கேட்டால்கூட, நமக்கு ஒன்றும் நினைவிருக்காது. அவர்கள் செய்த ஆர்ப்பாட்டமே, நினைவில் நிறைந்து, நமக்கு எரிச்சலூட்டும்.

அண்மையில் நமக்கு எரிச்சலையும், ஏன், கோபத்தையும் உண்டாக்கிய விழாக்கள், இப்போது நம் நினைவில் வலம்வருகின்றன. இவ்வாண்டு மார்ச் மாதம், இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் கொண்டாட்டங்களை நாம் மறந்திருக்க வாய்ப்பில்லை. இன்று, இந்தியாவில் நிகழும் உயிர் பலிகளுக்கு, அக்கொண்டாட்டங்கள் ஏதோ ஒருவகையில் காரணமாக இருந்தன என்பதை யாரும் மறுக்கஇயலாது. மக்களின் உயிர்களை, ஏணிகளாகப் பயன்படுத்தி, அரியணை எறியபின், ஏணிகளை எட்டி உதைப்பது, அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை.

கொண்டாட்டம் என்ற சொல்லுக்கே புது இலக்கணம் தந்து, நமக்கு, பாடங்களையும் சொல்லித்தந்துள்ளனர், இயேசுவும், அவரது சீடர்களும். கொண்டாட்டம் என்பது, எப்போதும், பிறரது கவனத்தை ஈர்ப்பதிலேயே குறியாய் இருக்கவேண்டும் என்று இல்லை. நாம் கொண்டாடும் விழாவின் உள்பொருள் எவ்வளவு தூரம் நம் வாழ்வை மாற்றுகிறது என்பதில், நம் கவனம் இருக்கவேண்டும். இவ்விதம் கொண்டாடப்படும் விழாக்கள், ஒருநாள் கேளிக்கையாகக் கடந்துபோகாமல், வாழ்நாளெல்லாம் நம்முள் மாற்றங்களை உருவாக்கும் வாய்ப்பாக அமையும். இத்தகையப் பாடங்களை நமக்குச் சொல்லித்தரும் விழாக்கள் - இயேசுவின் உயிர்ப்பு, விண்ணேற்றம், தூய ஆவியாரின் வருகை ஆகிய முப்பெரும் விழாக்கள்.

தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவன்று, இறைவனின் ஆவியைக் குறித்து விவிலியம் பயன்படுத்தும் உருவகங்களை சிந்திப்பது பயனுள்ள ஒரு முயற்சி. குறிப்பாக, இவ்வாண்டு, கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையினால் நசுக்கப்பட்டுள்ள இந்தியாவில், மூச்சுக்காற்றுக்காக மக்கள் போராடிவரும் வேளையில், தூய ஆவியார் மூச்சுக்காற்றாக இருக்கிறார் என்பதை, விவிலியத்திலிருந்து புரிந்துகொள்வதும், அவ்வுண்மையை நம்பி ஏற்றுக்கொள்வதும் அவசியம். தூய ஆவியாரின் வருகை, இன்றைய முதல் வாசகத்தில் (திருத்தூதர்கள் பணிகள் 2:1-11) காற்று, நெருப்பு என்ற இரு அடையாளங்களால் கூறப்பட்டுள்ளது.

தூய ஆவியாரை, மூச்சுக்காற்றாக உருவகப்படுத்தும் வேறு சில விவிலியப் பகுதிகளை நினைவுக்குக் கொணர்வோம்:
மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட மனிதன் மீது, ஆண்டவராகிய கடவுள், 'உயிர்மூச்சை ஊத', மனிதன் உயிர் உள்ளவன் ஆனான் என்று தொடக்க நூலில் வாசிக்கிறோம் (தொடக்க நூல் 2:7).

பள்ளத்தாக்கில் நிறைந்திருந்த எலும்புகள் மீது, நரம்புகள், தசை, தோல் என்று படிப்படியாக இணைக்கப்பட்டு, அவ்வுடல்களில் உயிர்மூச்சு புகுந்ததும், அவை அனைத்தும் மாபெரும் படைத்திரள்போல் நின்றன (எசேக்கியல் 37:1-10) என்பது, இறைவாக்கினர் எசேக்கியேல் நூலில் நாம் காணும் ஓர் அழகிய காட்சி. புதிய ஏற்பாட்டைப் பொருத்தவரை, தூய ஆவியாரின் வருகை என்ற நிகழ்வு, திருத்தூதர் பணிகள் நூலில் மட்டுமே இடம்பெற்றுள்ளது, நற்செய்திகளில் இது ஒரு நிகழ்வாகக் கூறப்படவில்லை என்பதை நாம் அறிவோம். இருப்பினும், உயிர்த்த இயேசு, சீடர்களுக்குத் தோன்றியவேளையில், அந்த மேலறையில் தூய ஆவியாரின் வருகை நிகழ்ந்தது என்பதை, யோவான் நற்செய்தியில் இவ்வாறு வாசிக்கிறோம்:

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்பகிறேன்" என்றார். இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, "தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்." என்றார். (யோவான் 20:21-22) படைப்பின் துவக்கத்தில் மண்ணால் உருவாக்கப்பட்ட மனிதனின் நாசிகளில் ஆண்டவராகிய கடவுள், உயிர் மூச்சை ஊதி, மனிதரைப் படைத்ததுபோல், தன் சீடர்கள் மீது, இயேசு, உயிர் மூச்சை ஊதி, அவர்களை, புதுப் படைப்பாக மாற்றினார்.

நம் வாழ்வை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய அளவுகோலாக உயிர்மூச்சு உள்ளது என்பதை, கடந்த ஓராண்டளவாக, குறிப்பாக, கடந்த இரு மாதங்களாக மிகத் தெளிவாக உணர்ந்துவருகிறோம். ‘மூச்சு விடுதல்’ என்ற இந்த ஒரு செயல்பாடுதான், பிறந்தது முதல் நம்மை இயக்கிவருகிறது.

மருத்துவராகவும், எழுத்தாளராகவும் விளங்கும் Geoffrey Simmons என்பவர் எழுதிய "Billions of Missing Links" என்ற நூலில், ஒரு குழந்தை பிறக்கும் தருணத்தில் நிகழும் விந்தைகளை விளக்கிக்கூறியுள்ளார்:

“தாயின் உதரத்திலிருந்து வெளியேறும் வரை, குழந்தை தானாகவே சுவாசிப்பதில்லை. அது, வெளியேறுவதற்கு முன்னர், அன்னையின் உதரத்தில் சுவாசிக்க ஆரம்பித்தால், சூழப்பட்ட திரவத்தால் மூச்சடைத்துப்போகும்; வெளியேறியபின், தாமதமாகச் சுவாசித்தால், மூளைப்பகுதி பாதிக்கப்படும். இவ்வாறு, பல வியப்பான அம்சங்கள் இணைந்து, ஒரு புதிய உயிரை இவ்வுலகிற்கு கொணரும் புதுமையைப் புரிகின்றன”.

தாயின் உதரத்திலிருந்து வெளியேறிய அந்நொடியில், நமது நுரையீரலை நிறைத்திருந்த நீரை வெளியேற்றிவிட்டு, நாம் முதல்முறை, சுயமாக, சுகமாக சுவாசிக்க ஆரம்பித்தோம். இருப்பினும், சுகமான அத்தருணத்தை, ஒவ்வொரு குழந்தையும், தன் அழுகையால் அறிவிக்கிறது. அக்குழந்தையின் அழுகுரல், சூழ இருப்பவர்களை மகிழ்வில் நிறைக்கிறது. இத்தருணத்தை, நாம், இன்றைய பெருவிழாவுடன் இணைத்து சிந்திக்கும்போது, தூய ஆவியார் தனக்குள் வந்துவிட்டார் என்பதை, அக்குழந்தை, தன் அழுகையின் வழியே இவ்வுலகிற்கு அறிவிக்கிறது என்று கூறலாம்.

சராசரி மனித வாழ்வில், ஒவ்வொருவரும் 650 மில்லியன் முறை, அதாவது 65 கோடி முறை சுவாசிக்கிறோம். ஒரு மூச்சிலிருந்து அடுத்த மூச்சுக்கு நம்மை அழைத்துச் செல்வது, ஆண்டவராகிய கடவுள் நம் நாசிகளில் ஊதிய உயிர் மூச்சே. ஆண்டவர் வழங்கிய இந்த அற்புதக் கோடைக்கு நாம் அளிக்கவேண்டிய பதிலிறுப்பு என்ன? நாம் அனைவருமே, அனைத்து உயிர்களின் உயிர்மூச்சைப் பராமரிக்க உருவாக்கப்பட்ட 'தோட்டக்காரர்களாக' வாழ்வதே, நாம் தரக்கூடிய தகுதியான பதிலிறுப்பு.

இந்த ஞாயிறன்று நம் பதிலுரைப் பாடலில் "ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்" (திருப்பாடல் 104:30) என்று மீண்டும், மீண்டும் கூறினோம். ஆனால், மனிதர்களாகிய நாம், நமது சுயநலத்தால், நம்மைச் சுற்றியுள்ள படைப்புக்களைப் புதுப்பிப்பதற்கு வரும், அந்த ஆவியின் மூச்சை நிறுத்த முற்பட்டுள்ளோம். ஆண்டவர் வழங்கிய அற்புதக் கொடையான காற்றை, களங்கப்படுத்திவிட்டோம். இப்போது, அந்தக் காற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து வலம்வருகிறோம். நமது சுவாசமே நமக்கு சாவைக் கொண்டுவருமோ என்ற அச்சத்தில் ஓராண்டுக்கும் மேலாக வாழ்ந்துவருகிறோம்.

தூய ஆவியார் உயிர் மூச்சாக விளங்குகிறார் என்று கூறும் விவிலியச் சொற்கள், இன்று நாம் வாழும் சூழலில், நமக்கு உறுதியூட்டும் சொற்களாக விளங்கவேண்டும் என்று மன்றாடுவோம். தூய ஆவியாரின் வருகைப்பெருவிழா நமக்குச் சொல்லித்தரும் முக்கியப் பாடம் இதுதான்... அவர், வானிலிருந்து இறங்கிவந்து, சிறிது காலம் நம்மோடு தங்கிவிட்டு, மீண்டும் விண்ணகம் சென்றுவிடும் இறைவன் அல்ல, மாறாக, அவர் நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள படைப்பு அனைத்திற்கும், உயிர் வழங்கும் மூச்சாக, எப்போதும் உறைந்திருக்கும் இறைவன் என்பது, இப்பெருவிழா பறைசாற்றும் பேருண்மை.

இன்று நாம் ஒரு பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். ஆம்... தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவன்று, திருஅவை என்ற குழந்தை பிறந்தது. ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் பிறக்கும்போது, அக்குழந்தையைப் பற்றிய எதிர்பார்ப்புக்கள் இருக்கும். திருஅவை என்ற குழந்தை பிறந்தபோதும், பல எதிர்பார்ப்புக்கள் இருந்தன. திருஅவை என்ற குழந்தை பிறந்தவிதம், பிறந்ததும் அக்குழந்தையிடம் வெளிப்பட்ட குணம் ஆகியவற்றை, இப்பிறந்தநாளன்று நாம் சிந்திப்பது பயனளிக்கும்.

திருஅவை என்ற குழந்தை பிறந்தது, ஒரு குழுவில், ஒரு குடும்பத்தில். தூய ஆவியார், காற்றாக, நெருப்பு நாவுகளாக, இறங்கிவந்த அனுபவம், தனியொரு மனிதருக்கு, காட்டின் நடுவில், அல்லது மலையுச்சியில் ஏற்பட்ட ஓர் அனுபவம் அல்ல. அன்னை மரியாவுடன் செபத்தில் இணைந்திருந்த சீடர்கள் நடுவில், தூய ஆவியார் இறங்கி வந்தபோது, திருஅவை பிறந்தது.

பொதுவாக, ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் ஒருவருக்கு, இறை அனுபவம் கிடைக்கும் என்று, ஏறத்தாழ, எல்லா மதங்களும் சொல்கின்றன. கிறிஸ்தவத் திருமறையிலோ, தனி மனிதர்கள் அடையும் இத்தகைய அனுபவத்துடன் நாம் நின்றுவிடுவதில்லை. குழுவாய், குடும்பமாய் நாம் இணைந்து வரும்போதும், ஆழ்ந்த இறை அனுபவம் உருவாகிறது என்பதை, தூயஆவியாரின் வருகைப்பெருவிழா நமக்குச் சொல்லித்தருகிறது.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, இறைமக்கள் என்ற குடும்பமாக நாம் கூடிவர இயலாத நிலையை பெருந்தொற்று உருவாக்கியுள்ளது. இந்த பெருந்தொற்று நீங்கி, நாம் மீண்டும் இறைமக்களாக இணைந்துவரும் வேளையில், நாம் தனி தீவுகள் அல்ல, மாறாக, ஒருவரையொருவர் சார்ந்து வாழும் குடும்பம் என்ற உண்மையை, தூய ஆவியார், நம் அனைவருக்கும் உணர்த்தவேண்டும் என்று மன்றாடுவோம்.

தூய ஆவியாரின் வருகையினால் உருவாகும் அழகிய வாழ்வை, திருத்தூதர் பவுல், கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் விவரிக்கிறார். தூய ஆவியாரின் வருகைப் பெருவிழா, வெறும் ஒருநாள் கொண்டாட்டமாக கடந்துசெல்லாமல், நம் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கும் ஓர் ஆழ்ந்த அனுபவமாக தங்குவதற்கு, அந்த ஆவியார் வழங்கும் கனிகளை நாம் பெறவேண்டும். இக்கனிகளைப் பற்றி இன்றைய 2ம் வாசகத்தில், புனித பவுல் அடியார் கூறும் சொற்களுடன் நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம்:

கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 5 : 16, 22-23, 25

தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்: தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்... தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.

மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு

மனிதகுல வரலாற்றில்‌ புதியன பிறப்பதும்‌ புதுமைகள்‌ படைப்பதும்‌ தூய ஆவியார்தான்‌. இந்தத்‌ தூய ஆவியாரை எபிரேய மொழியில்‌ “ரூவா” என்றும்‌, கிரேக்கத்தில்‌ “பினெயுமா' என்றும்‌ அழைப்பர்‌. ஆங்கிலத்தில்‌ “Holy Spirit" என்றும்‌, தமிழில்‌ “தூய ஆவியார்‌” என்றும்‌ மொழிபெயர்க்கப்படுகின்றது.

கடவுளின்‌ படைப்புத்‌ தொடங்கி, திருத்தூதர்கள்‌ நற்செய்திப்‌ பணிக்கு அனுப்பப்படும்வரையிலும்‌ தூய ஆவியாரின்‌ படைப்பு மிகப்‌ பெரும்‌ கொடையாக இருக்கிறது. நம்‌ “பெந்தக்கோஸ்தே” பெருவிழா தூய ஆவியாரின்‌ வல்லமையூட்டி 'நான்‌ இருக்கிறேன்‌ : என்ற அடையாளத்தை உணர்ந்து "கொள்ளும்‌ நாளாகும்‌. துணையாளாராம்‌ தூய ஆவியாரை உங்களுக்குத்‌ தருவேன்‌. உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன்‌ எனச்‌ சொன்ன இயேசு தனது வாாத்தைக்கு பிரமாணிக்கமாய்‌ தனது உயிர்ப்புக்குப்பின்‌, தூய ஆவியாரைச்‌ சீடா்கள்மீது ஊதித்‌ துணிவுடன்‌ பணியாற்ற அனுப்புகிறார்‌. படைப்பதும்‌, புதுப்படைப்பாக்குவதும்‌ தூய ஆவியின்‌ செயல்‌ என்பதனை தனது பிறப்பு முதல்‌ உயிர்ப்புவரை நன்கு உணர்ந்தவர்‌ ஆண்டவர்‌.

ஒன்றுமில்லா வெறுமையிலிருந்து படைப்பு உண்டானபோது (தொநூ 1:1) அங்கும்‌ தூய. ஆவியார்‌ செயல்படுகிறார்‌. தம்‌ உயிர்‌ மூச்சை ஊதி மனிதனைப்‌ படைக்கிறார்‌ கடவுள்‌. தூய ஆவியாரால்‌ இயக்கப்பட்ட இயேசு தனது உயிர்ப்புக்குபின்‌ அதே ஆவியை தன்‌ சீடர்களுக்கு புதுப்படைப்பின்‌ மூலக்கூறாக வழங்குகிறார்‌. உலகுக்குப்‌ பயந்து முடங்கிக்‌ கிடந்தவர்கள்‌, புது ஆற்றலைப்‌ பெற்று முழக்கமிட துணிகிறார்கள்‌. அறைகளுக்குள்‌ முடங்கிக்‌ கிடந்தவர்கள, ஆண்டவரின்‌ செய்தியைக்‌ கடைக்கோடி வரைக்கும்‌ எடுத்துரைக்க விரைகிறார்கள்‌. சீடர்களிடம்‌ பயம்‌ மறைந்து, துணிவு பிறக்கிறது. பிரிவினை மறைந்து, ஒற்றுமை மலர்கிறது. அவநம்பிக்கை மடிந்து, நம்பிக்கை வளர்கிறது. ஆக, முந்தைய நிலையை மாற்றி தூய ஆவியார்‌ நம்மை புதுப்படைப்பாக மாற்றுகிறார்‌

.
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
மேலே செல்ல அன்பின்மடல்-முகப்பு
ser