மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் இருபத்திஎட்டாம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
2 அரசர்கள் 5:14-17 | 2 திமொத்தேயு 2:8-13 | லூக்கா 17:11-19

நன்றி

அமெரிக்கா ஜனாதிபதியாக ஆகுமுன் ஆப்ரகாம் லிங்கன் ஒரு தடவை உணவருந்த ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருந்தார். உணவு அருந்தியபின், உணவுக்கு உரிய பணத்தை சர்வரிடம் கொடுத்து, உன் அன்பான சேவைக்கு நன்றி' என்று சொன்னார். அந்தப் பணியாளர் உள்ளத்தில் பெருமகிழ்ச்சியோடு, 'ஐயா! நான் இந்த உணவு விடுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். இங்கு வரும் ஒவ்வொருவரையும் அன்போடு உபசரித்துள்ளேன். ஆனால் நீங்கள் மட்டும்தான் அன்பாகப் பேசி, எனக்கு நன்றி சொன்னீர்கள். உங்களை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன்' என்றான். மறு ஆண்டே ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நன்றியுள்ளவர்கள் அனைவராலும் போற்றப் படுவார்கள்! எல்லா பண்புகளுக்கும் தாயாக இருப்பது நன்றிதான் என சீசர் கூறுகிறார். எத்தகைய குற்றங்களுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால் செய் நன்றி மறந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்கிறார் திருவள்ளுவர்.

இறைவாக்கினர் எலிசா சீரியா நாட்டு நாமான் என்பவனைக் குணமாக்குகிறார். நாமான் திரும்பி வந்து நன்றி கூறி , அன்பளிப்பு வழங்குகிறார். ஆனால் எலிசா அன்பளிப்பை வாங்க மறுத்தபோது, இஸ்ரயேலின் கடவுள் ஒருவரே உண்மையான கடவுள், (2 அர. 5:15) என்று அறிக்கையிடுகிறார் நாமான். இவர் ஒரு யூதரல்லாத பிறவினத்தைச் சேர்ந்தவர் (முதல் வாசகம்).

இன்று வாசித்த நற்செய்தியிலே, இயேசு பத்து தொழு நோயாளிகளைக் குணமாக்குகிறார். குணம் பெற்றவர்களில் யூதரல்லாத சமாரியன் மட்டும் திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி சொல்லுகிறான். "ஆனால் பத்து பேர் குணமாகவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே ? (லூக். 17:17-18) கடவுளைப் போற்றிப் புகழ, இந்த அந்நியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பி வரக் காணோமே" என்கிறார் இயேசு (மூன்றாம் வாசகம் ). இன்று கூட கிறிஸ்தவ திருத்தலங்களுக்குப், பிற சமயத்தவர்தான் நன்றி உணர்வோடு அதிகமாகக் காணிக்கை செலுத்த வருகிறார்கள்.

நாம் கடவுளுக்குப் புகழுரையும், நன்றியும் செலுத்த வேண்டும் என்பதற்கு நம் ஆண்டவர் இயேசுவும், அன்னை மரியாவும் நமக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர். இலாசரை உயிர்பிக்கும் முன்பாகக் கடவுளுக்கு நன்றி கூறுகிறார் இயேசு (யோவா. 11:41). இறுதி உணவின் போது அப்பத்தை எடுத்து கடவுளுக்கு நன்றி கூறித்தான் தன் உடலாக , இரத்தமாக மாற்றுகிறார் (லூக். 22:19).

"இதோ என் உள்ளம் ஆண்டவரைப் போற்றிப் பெருமைப் படுத்துகிறது. என் மீட்பராம் கடவுளை நினைத்து என் மனம் பேருவகை கொள்ளுகிறது” (லூக். 1:46-47) என்று அன்னை மரியா புகழ்ச்சிப் பாடல் இசைக்கிறார். திருப்பாடல் ஆசிரியர் பாடிய 150 பாடல்களில், பாதிக்குமேல் நன்றியும், புகழ்ச்சியும் கலந்த கீதங்கள் அல்லவா.

அன்பார்ந்தவர்களே , கடவுளைப் போற்றுவது இன்பத்தில் மட்டுமல்ல, துன்பத்திலும் நாம் கடவுளைப் புகழக் கற்றுக்கொள்ள வேண்டும். துன்பம் வந்தால் கடவுள் தான் காரணம் என்று திட்டுகிறோம். நல்லது நடந்தால் கடவுள் காணாமற்போய் விடுகிறார் ! ஒரு தாய் தன் பச்சிளங் குழந்தையோடு தூங்கிக் கொண்டிருந்தபோது கருந்தேள் ஒன்று அந்தத் தாயைக் கொட்ட வேதனையால் துடி துடித்தாள். ஆனால் இந்த வேதனையிலும், என் குழந்தையைக் கொட்டாமல், என்னைக் கொட்டியதற்காக, இறைவா! உமக்கு நன்றி என்றாள். இந்த மனநிலைதான் இன்று நமக்குத் தேவை என்பதை உணருவோம்.

ser

இயேசுவுக்கு என்ன பிடிக்கும்?


சிலருக்கு ஆடுவது பிடிக்கும்!
சிலருக்குப் பாடுவது பிடிக்கும்!
சிலருக்கு உண்பது பிடிக்கும்!
சிலருக்கு உடுத்துவது பிடிக்கும்!
சிலருக்கு உறங்குவது பிடிக்கும்!
சிலருக்கு முத்தமிழ் பிடிக்கும்!
சிலருக்கு முக்கனி பிடிக்கும்!

இயேசுவுக்கு என்ன பிடிக்கும்? என்பதை இன்றைய நற்செய்தி சுட்டிக்காட்டுகின்றது. இயேசுவுக்கு நன்றி பிடிக்கும் (லூக் 17:16), புகழ்ச்சி பிடிக்கும் (லூக் 17:18). இவ்வாறு இயேசு நன்றியையும், புகழ்ச்சியையும் நம்மிடமிருந்து எதிர்ப்பார்ப்பதற்குக் காரணம் உண்டு! நன்றி சொல்பவர்களையும், தன்னைப் புகழ்கின்றவர்களையும் கடவுள் வரலாற்றிலே வாழ்வாங்கு வாழவைத்திருக்கின்றார். நாம் இறைவனிடமிருந்து எழில்மிகு வரங்களைப் பெற்று, வளமுடன் வாழ, இறைவனுக்கு நன்றி சொல்லி வாழ, இறைவனைப் புகழ்ந்து வாழ இயேசு நம்மை அழைக்கின்றார்.

பழைய ஏற்பாட்டில் செங்கடலைக் கடந்த பிறகு மோசேயும், அவருடைய மக்களும் கடவுளுக்கு நன்றி சொல்லி, அவரைப் புகழ்ந்து பாடினர் (விப 15:1-21). அவ்வாறு நன்றி சொன்ன, புகழ்ந்த மோசேயைக் கடவுள் வரலாற்றிலே உயர்த்தி வளமுடன் வாழவைத்தார். புதிய ஏற்பாட்டிலே திருச்சபையின் ஆரம்பகாலத்திலே வாழ்ந்த கிறிஸ்தவர்கள் நடுவிலே இல்லை என்ற சொல்லே இல்லாமல் இறைவன் பார்த்துக்கொண்டார். காரணம் அவர்கள் ஒவ்வொரு நாளும் அப்பத்தைப் பிட்டு, கடவுளைப் போற்றி வந்தார்கள் (திப 2:46-47).

இறைவனிடமிருந்து நாம் பெற்ற நன்மைகளை நினைத்துப்பார்த்தால் அங்கே நன்றி மன்றாட்டுப் பிறக்கும். இறைவனுடைய இணையில்லா அன்பையும், ஆற்றலையும் நினைத்துப் பார்த்தால் அங்கே புகழ்ச்சி மன்றாட்டு பிறக்கும். இந்த இருவகையான மன்றாட்டுக்களுக்கும் தாயாக விளங்குவது நம்பிக்கை. இறைவன் ஒருவர் இருக்கின்றார். அவர் அன்பே உருவானவர். அவர் ஆற்றல் மிக்கவர். அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளாத எதுவும் என்னிடமில்லை என்று சொல்லி, சொல்வதை வாழ்ந்து காட்ட விரும்புகின்றவர்கள் மட்டுமே இறைவனுக்கு நன்றி சொல்வர். இறைவனைப் புகழ்வர்.

நன்றி சொல்பவர்களும், புகழ்கின்றவர்களும் கடவுளை நம்பி வாழ்வதால், அவரை நம்புகின்றவர்களை இறைவன் கைவிடுவதில்லை. இதனால் தான் புனித பவுலடிகளார், நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள் (எபே 5:20) என்றும், எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள் (1 தெச 5:18) என்றும் கூறுகின்றார். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம், எப்போதும் நாம் கடவுளுக்குப் புகழ்ச்சிப் பலியைச் செலுத்துவோமாக (எபி 13:15அ) எனக் கூறுகின்றது.

ஒரு சின்ன சந்தேகம்! நமக்கு ஏற்படும் இழப்புகளுக்காகக் கூட கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? இந்தக் கேள்விக்கு ஒரு வாக்கியக் கதை ஒன்று பதில் சொல்லும். இதோ அந்தக் கதை : தவமிருந்து பெற்ற தன் முதல் குழந்தை இறந்தாலும் அந்தப் பெண் தனக்குத் தாய்மையை அளித்த கடவுளுக்கு நன்றி சொன்னாள்.

நம்மை ஒருபோதும் மறுதலிக்க விரும்பாத (2 திமொ 2:13) இறைவனுக்கு இன்ப நேரத்தில், நலம் பெற்ற நாமானைப் போலவும், துன்பநேரத்தில் கதையில் வந்த பெண்ணைப் போலவும் நன்றி கலந்த புகழ்ச்சி மன்றாட்டை சமர்ப்பித்து அவரின் நிறையாசிகளைப் பெற்று நாளும் வளமுடன் வாழ்வோம்.

மேலும் அறிவோம் :

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் (குறள் : 104).
பொருள் : நன்றி பாராட்டும் பண்புடையவர், பிறர் தமக்குச் சிறிதளவே உதவினாலும் அதனைப் பெருமை பொருந்திய பனையளவாகக் கருதிப் போற்றுவர்.

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்

கடவுள் இரண்டு வானதூதர்களை வையகத்துக்கு அனுப்பினார். ஒரு வானதூதரை மக்களின் விண்ணப்பத்தையும், மற்றொரு வானதூதரை மக்களின் நன்றியறிதலையும் பெற்று வரும்படி கேட்டார். மக்களின் விண்ணப்பங்களையெல்லாம் சேகரித்த வானதூதர் அவற்றைப் பெரிய சாக்கு ஒன்றில் போட்டுச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு வந்தார். ஆனால் மக்களின் நன்றியறிதலைச் சேகரித்த வானதூதரோ அவற்றை ஒரு சிறிய பையில் போட்டுக் கொண்டுவந்தார். இக்கதை கூறும் செய்தி: கடவுளிடம் வரங்கள் கேட்டு விண்ணப்பம் செய்வோர் பலர்; பெற்ற வரங்களுக்காகக் கடவுளுக்கு நன்றி செலுத்துவோர் ஒரு சிலரே!

மனிதர் செய்யும் எத்தகைய பாவங்களுக்கும் மன்னிப்பு உண்டு; ஆனால் செய்நன்றி மறந்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்கிறார் வள்ளுவர். எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு (குறள் 10)

இன்றைய முதல் வாசகத்தில், எலிசா என்ற இறைவாக்கினர் சீரிய நாட்டுத் தொழுநோயாளி நாமான் என்பவரைக் குணப்படுத்துகிறார். நாமான் எலிசாவுக்கு நன்றி செலுத்தும் வண்ணம் அவருக்கு அன்பளிப்பு வழங்குகின்றார். ஆனால் எலிசா அந்த அன்பளிப்பை வாங்க மறுத்தபோது, இஸ்ரயேலின் கடவுள் ஒருவரே உண்மையான கடவுள் என்று அறிக்கையிடுகிறார் நாமான். அவர் பிற இனத்தைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து பத்துத் தொழுநோயாளிகளைக் குணப்படுத்துகிறார். ஆனால் அவர்களில் ஒருவர் மட்டும் கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகிறார். அவர் பிற இனத்தவர். கிறிஸ்து மிகவும் மனம் வருந்திக் கூறுகிறார்: "பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா! மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப்புகழ அன்னியராகிய உம்மைத்தவிர வேறு எவரும் திரும்பி வரக் காணோமே?” (லூக் 17: 17-18),

இன்றும்கூட கிறிஸ்தவத் திருத்தலங்களுக்கு வரும் பிற சமயத்தவர் தான் அதிகமாகக் காணிக்கை செலுத்துகின்றனர். கடவுளுக்கும் மாதாவுக்கும் நன்றியுள்ளவர்களாகத் திகழ்கின்றனர். ஓர் இந்து மனிதர் சகாய அன்னையிடம் விண்ணப்பித்து அவருக்கு வேலை கிடைத்தது; அவர் தனது முதல் மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாயையும் அப்படியே மாதாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார். அவரிடம் இருந்த நன்றி உணர்வு எத்தனைக் கிறிஸ்தவர்களிடம் இருக்கின்றது?

நமது புகழுரையும் நன்றியறிதலும் கடவுளுக்குத் தேவையில்லை. மாறாக, அவை நாம் மீட்படைய பயன்படுகின்றது. என்று திருச்சபை தனது திருவழிபாட்டில் எடுத்துரைக்கின்றது. (திருப்பலி, தொடக்கவுரைகள், பொது IV ).

நாம் கடவுளுக்குப் புகழுரையும் நன்றியும் செலுத்த வேண்டும் என்பதற்குக் கிறிஸ்து சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார். விண்ணரசின் மறைபொருளை ஞானிகளுக்கு வெளிப்படுத்தாமல் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியதற்காகக் கடவுளைப் போற்றுகிறார் (லூக் 10:21). ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் முன் கடவுளைப் போற்றுகிறார் (மாற் 6:41). அவ்வாறே ஏழு அப்பங்களைக் கொண்டு நாலாயிரம் பேருக்கு உணவளிக்கு முன் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார் (மாற் 8:6). இலாசரை உயிர்த்தெழச் செய்யுமுன் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார் (யோவா 11:41). இறுதி இரவு உணவின் போது அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார் (லூக் 22:19). உயிர்த்தபின் எம்மாவு சீடர்களுடன் பந்தியில் அமர்ந்து அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றுகின்றார் (லூக் 24:30), எனவே கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் கடவுளைப் போற்றி அவருக்கு நன்றி செலுத்துவது தகுதியும் நீதியுமாகும்.

இன்பத்தில் கடவுளைப் போற்றவும் அவருக்கு நன்றி செலுத்தவும் இயலும். ஆனால், துன்பத்தில் துவளும்போது, சோதனை வாட்டி வதைக்கும் போது கடவுளை எவ்வாறு புகழ்வது? திருத்தூதர் பவுல் கூறுகிறார்: “எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள்" (1 தெச 5:18). இது சாத்தியமாகுமா? சாத்தியம் என்பதற்குத் திருத்தூதர் பவுலே நமக்கு ஓர் எடுத்துக்காட்டு. பிலிப்பு நகரில் பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்; கையிலும் காலிலும் விலங்குகள்; அந்நிலையிலும் "நள்ளிரவில் பவுலும் சீலாவும் கடவுளுக்குப் புகழ்பாடி இறைவனிடம் வேண்டினர்" (திப 16:24-25),

ஒரு தாய் தனது ஒரு வயது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரைக் கருந்தேள் ஒன்று கொட்டி விட்டது. வலியால் துடித்த அவர் : "கடவுளே! இத்தேள் என் குழந்தையைக் கொட்டாமல், என்னைக் கொட்டியதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்" என்றார்.

எத்தீமையிலும் ஒரு நன்மை உண்டு. உண்மையில் கடவுளின்மேல் அன்பு செலுத்துபவர்களுக்கு அனைத்தும் நன்மையாக மாறும். இன்றைய இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்துவுக்காகப் பல துன்பங்களை ஏற்ற பவுல் கூறுகிறார்: "நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; ஆட்சி செய்வோம்" (2 திமொ 8:13). ஒவ்வொரு சாவிலும் ஓர் உயிர்ப்பு உண்டு.

கடவுளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் நமது நன்றியுணர்வைக் காட்ட வேண்டும், குறிப்பாக நமது பெற்றோர்களுக்கு நன்றி காட்ட வேண்டும். ஏழை விதவை ஒருவர் தன் வீட்டின் முன் தென்னம்பிள்ளை வைத்து, தன் மகனைப் படிக்க வைத்தார். மகன் படித்து அமெரிக்காவில் வேலை பார்த்தான். அம்மா அடக்கத்திற்கு அவன் வரவில்லை . அம்மா இறக்குமுன் மகனுக்குப் பின்வருமாறு கடிதம் எழுதி வைத்தார்: "மகனே. நீ பிறந்தபோதுதான் நம் வீட்டின் முன் தென்னம்பிள்ளை நட்டேன்; நீயும் வளர்ந்தாய், தென்னம்பிள்ளையும் வளர்ந்தது; அது கொடுத்த தேங்காய்களை விற்று உன்னைப் படிக்க வைத்தேன். இன்று அமெரிக்காவில் இருந்து கொண்டு என் அடக்கத்திற்குக் கூட வர உன்னால் முடியவில்லை. ஆனால் நான் வளர்த்த தென்னம்பிள்ளையின் பாளை என்னோடு கல்லறைக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்துகிறது." இது கதையல்ல நிஜம். தென்னையைப் பெத்தா இளநீர்; பிள்ளையைப் பெத்தா கண்ணீர்!

'நற்கருணை' என்ற சொல்லுக்கு 'நன்றியறிதல்' என்பது பொருள். ஒவ்வொரு திருப்பலியிலும் கடவுளைப் போற்றி நன்றி கூறுகிறோம். அப்ப, இரசத்தை எடுத்து. “ஆண்டவரே! அனைத்துலகின் இறைவா! உம்மைப் போற்றுகிறோம்” என்கிறார் குரு. “இவர் வழியாக இவரோடு, இவரில்" என்ற இறுதிப் புகழுரை நன்றிப் புகழுரை. கடவுளுக்கு உதட்டால் மட்டுமல்ல, உள்ளத்தால் நன்றி செலுத்துவோம். நமது வாழ்வே ஓர் இறைபுகழாக, நன்றியுரையாக அமையட்டும்.

“ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.. (திபா 118:1)

இறைவனுக்கு நன்றி கூறுவோமா?


நிகழ்வு
சூஃபி ஞானி ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் பக்கத்து ஊரில் போதித்துவிட்டு, இரவில் நெடுநேரம் கழித்து, தான் இருந்த இல்லத்திற்குத் திரும்பினார். அன்று அவர்க்கு கடுமையாகப் பசியெடுத்தது. அதனால் அவர் உணவுக்குப் பொறுப்பாக இருந்த சீடரை எழுப்பி, “சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா?” என்று கேட்டார். அதற்குச் சீடர், “குருவே! என்னை மன்னிக்கவேண்டும். வீட்டில் இருந்த உணவுப் பொருள்கள் எல்லாம் தீர்ந்துவிட்டன... உணவுப் பொருள்களை வாங்குவதற்கும் இப்பொழுது காசு இல்லை” என்றார்.

ஞானி அவரிடம் எதுவும் பேசாமல், தரையில் முழந்தாள் படியிட்டு இறைவனுக்கு நன்றி செலுத்தத் தொடங்கினார். சீடர்க்கு வியப்பாக இருந்தது. ‘இவர்தான் ஒன்றுமே சாப்பிடவில்லையே! அப்புறம் எதற்கு சாப்பிட்டு முடித்துவிட்டு வழக்கமாகச் சொல்லும் மன்றாட்டைச் சொல்கிறார்’ என்று அவரையே பார்த்தார்.

ஞானி இறைவனுக்கு நன்றிகூறி முடித்ததும், சீடர் அவரிடம், “நீங்கள்தான் எதுவும் சாப்பிடவில்லையே! பிறகு எதற்கு சாப்பிட்டு முடித்ததும் வழக்கமாகச் சொல்லும் நன்றி மன்றாட்டைச் சொன்னீர்கள்?” என்றார். உடனே ஞானி அவரிடம், “இப்பொழுது எனக்கு சாப்பிடுவதற்கு உணவுதான் இல்லையே ஒழிய, சாப்பிடும் விரும்பம் (Appetite) நிறைய இருக்கின்றது. எத்தனையோ மனிதர்கட்கு சாப்பிடுவதற்கு உணவு இருந்தும், சாப்பிடும் விருப்பம் இருப்பதில்லையே! அப்படிப்பட்ட மனிதர்கட்கு நடுவில், இறைவன் எனக்குச் சாப்பிடும் விருப்பத்தைக் கொடுத்திருக்கின்றாரே, அதற்குத்தான் நான் அவர்க்கு நன்றிகூறினேன்” என்றார். இதைக் கேட்டு சீடர் குருவின் உள்ளத்தில் பொங்கி வழிந்த நன்றிப் பெருக்கை எண்ணி வியந்து நின்றார்.

இறைவன் நமக்கு எவ்வளவோ நன்மைகளைச் செய்திருக்கின்றார், அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் இருபத்து எட்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை, இறைவனுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.


இயேசுவின் உதவியை நாடுதல்
இயேசு கலிலேயா மற்றும் சமாரியா வழியாக எருசலேம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில், ஓர் ஊருக்குள் நுழைந்ததும், பத்துத் தொழுநோயாளர் அவரை எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, “ஐயா! இயேசுவே, எங்கட்கு இரங்கும்” என்று வேண்டுகிறார்கள். இவ்வாறு வேண்டி நின்ற அந்தப் பத்துத் தொழுநோயாளர்களிடம் இயேசு என்ன கூறினார் என்று சிந்தித்துப் பார்க்கும் முன்னம், இஸ்ரயேல் சமூகத்தில் தொழுநோயாளர்களின் நிலை எப்படி இருந்தது எனத் தெரிந்துகொள்வது நல்லது.

தொழுநோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கின்றார் என்றால், அவர் தீட்டானவராகக் கருதப்படுவார். அதனால் அவர் ஊருக்கு வெளியில், கிழிந்த உடை அணிந்துகொண்டு, தலை வாராமல், மேலுதட்டை மறைத்துக்கொண்டு, “தீட்டு, தீட்டு” என்று குரலெழுப்ப வேண்டும் (லேவி 13: 45). அவ்வாறு அவர் குரலெழுப்புவதற்கு முக்கியமான காரணம், யாரும் அவரை நெருங்கிவிடக்கூடாது என்பதால்தான். இப்படியொரு மோசமான நிலையில் வாழ்ந்துவந்த தொழுநோயாளர் வெறுமனே உடல் வேதனையை மட்டும் அனுப்பவிக்க வில்லை; மக்களால் புறக்கணிக்கப்பட்டு, மனவேதனையையும் அனுபவிக்கும் நிலைக்கு ஆளானார்.. நற்செய்தியில் வருகின்ற பத்துத் தொழுநோயாளர்களும் இதே போன்றுதான் உடலளவில் மட்டுமல்லாது, மனதளவிலும் கொடுமைகளை அனுபவித்திருக்கவேண்டும். அதனால்தான் அவர்கள் ‘ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்” என்ற வார்த்தைகளைச் சொல்லி உரக்க வேண்டுகிறார்கள்.

பத்துத் தொழுநோயாளர்களும் இயேசுவைப் பார்த்து, ‘ஐயா’ என்று சொல்லி வேண்டுவது லூக்கா நற்செய்தியில் சீமோன் பேதுரு ‘ஐயா’ (லூக் 5:5) என்று சொல்வதை ஒத்திருக்கின்றது. ‘ஐயா’ என்ற சொல், இயேசு இயற்கையின்மீதும் சாவின்மீதும் நோயின்மீதும் அதிகாரம் கொண்டிருப்பவர் என்ற உண்மையை உணர்த்துவதாக இருக்கின்றது. இயேசுவால் தங்களுடைய நோயைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை அவர்கட்கு இருந்தது. அந்த ந்மபிக்கையில்தான் அவர்கள் இயேசுவிடம் வருகின்றார்கள்.


இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்ததால் நலம்
மக்கள்மீது அதிலும் குறிப்பாக தொழுநோயாளர்கள் உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்மீது பரிவுகொள்ளும் இயேசு (மாற் 1: 41; 6:24) இன்றைய நற்செய்தியிலும் தன்னிடம் வரக்கூடிய தொழுநோயாளர்கள்மீதும் பரிவு கொள்கின்றார். அவர்கள்மீது இயேசுவின் பரிவு எப்படி வெளிப்பட்டது என்பதை, அவர் அவர்களைப் பார்த்(து)தார் என்ற வார்த்தைகளில் நாம் அறிந்துகொள்ளலாம்.

வழக்கமாகத் தொழுநோயாளர்களைக் கண்டாலே மக்கள் தங்களது முகத்தை மறைத்துகொள்வர். ஆனால், இயேசு மற்ற மக்களைப் போன்று இல்லாது, தொழுநோயாளர்களைப் பார்த்து, “நீங்கள் போய் உங்களைக் குருவிடம் காண்பியுங்கள்” என்கின்றார். அவர்களும் இயேசுவின் வார்த்தைகட்குக் கீழ்ப்படிந்து தங்களைக் குருவிடம் காண்பிக்கச் செல்கின்றார்கள். அவர்கள் போகிற வழியிலேயே அவர்களுடைய நோய் நீங்குகிறது. இவ்வாறு அவர்கள் இயேசுவின் வார்த்தைகட்குக் கீழ்படிந்ததால் தொழுநோய் நீங்கப் பெறுகின்றார்.

இதுவரைக்கும் அந்தப் பத்துத் தொழுநோயாளர்களும் ஒன்றுபோலவே இயேசுவிடம் வருகின்றார்கள்; ஒன்று போலவே குருவிடம் காண்பிக்கச் செல்கின்றார்கள். எப்பொழுது அவர்களிடமிருந்து தொழுநோய் நீங்கியதை அவர்கள் உணர்ந்தார்களோ அவர்களுடைய செயலில் மாற்றம் ஏற்படுகின்றது. அவர்களுடைய செயலில் ஏற்பட்ட மாற்றம் என்ன...? அதனால் அவர்கட்கு விளைந்தது என்ன என்பதைத் தொடர்ந்து சிந்தித்து பார்ப்போம்.


இயேசுவிற்கு நன்றி செலுத்தியதால் பாவம் நீங்கப் பெற்ற சமாரியர்
இயேசுவின் கட்டளைப்படி அந்தப் பத்துத் தொழுநோயாளர்களும் தங்களைக் குருவிடம் காட்டுவதற்குச் செல்கின்றபோது, அவர்களுடைய தொழுநோய் நீங்குகின்றது. அப்பொழுது சமாரியரைத் தவித்து மற்ற ஒன்பது பேர், ‘தாங்கள் விரும்பியது நிறைவேறிவிட்டது’ என்று தங்கட்கு நலம் தந்த இயேசுவை மறந்துவிட்டு தங்களுடைய வழியில் போய்விடுகின்றார்கள். ஆனால், அவர்களில் இருந்த இந்த ஒரு சமாரியர், ‘இயேசுவால்தான் தனக்கு நலம் கிடைத்தது’ என்று நன்றிப் பெருக்கோடு அவரிடம் வந்து, அவருடைய காலில் விழுந்து தன்னுடைய நன்றியைச் செலுத்துகின்றார். அப்பொழுதுதான் இயேசு அவரிடம், “எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்கின்றார்.

இங்கு இயேசு அந்த சமாரியரிடம் சொல்கின்ற வார்த்தைகள், இயேசு தன்னுடைய காலடிகளைக் கழுவிய ‘பாவிப் பெண்ணிடம் சொன்ன ‘உமது நம்பிக்கை உம்மை மீட்டது’ (லூக் 7: 50) என்ற வார்த்தைகளை ஒத்திருக்கின்றது. ஆம், இயேசு எப்படி பாவிப்பெண்ணின் பாவங்களை மன்னித்து, அவர்க்கு மீட்பினை அளித்தரோ, அதுபோன்று நன்றிப் பெருக்கோடு இருந்த சமாரியர்க்கு பாவத்திலிருந்து விடுதலை அளித்து, மீட்பினை வழங்குகின்றார். அப்படியானால், நாம் இயேசுவுக்கு நன்றியுள்ளவர்களாய் இருந்தோமெனில், நமக்கு நலமான வாழ்வு அமைவதோடு மட்டுமல்லாமல், அவர் நமக்கு வழங்கும் மீட்பும் கிடைக்கும் என்பது உறுதி.

இன்றைக்குப் பலர் இயேசுவிடமிருந்து நலம் பெற்று, அவர்க்கு நன்றி செலுத்த வராத ஒன்பது பேரைப் போன்று நன்றியுணர்வு இல்லாதவர்களாகவே இருக்கின்றார்கள். எந்த உள்ளத்தில் நன்றியுணர்வு இல்லையோ, அந்த உள்ளத்தில் சாத்தான் மிக எளிதாகக் குடிபுகுந்துவிடும் என்பார்கள் பெரியோர். ஆகையால், இறைவன் நமக்குச் செய்த ஏராளமான நன்மைகள் நினைத்து, திருப்பாடல் ஆசிரியரைப் போன்று (திபா 107:8), சமாரியரைப் போன்று நன்றி செலுத்துவோம்; மனநிறைவு நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்வோம்.


சிந்தனை
‘மனிதனிடமுள்ள பொய், செருக்கு, பிதற்றல், குடிவெறி மற்றும் வேறு எந்தத் தீமையை விடவும், நன்றி மறத்தல் மிகவும் மோசமானது. ஏனென்றால், அது அவனுடைய வாழ்வையே அழித்துவிடும்’ என்பார் ஷேக்பியர். எனவே, நன்றி மறந்தவர்களாய் அழிந்து போகாமல், நன்றி உள்ளவர்களாய் இருந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்

ser

திரும்பி வருதல்

அவள் பெயர் அன்னா. அவளுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. அவளுடைய ஓரகத்தி அவளைக் கேலி செய்கின்றாள். அவளுடைய கணவன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றான். அவள் ஆண்டவருடைய சந்நிதிக்கு ஓடுகின்றாள். மண்டியிட்டுச் செபிக்கின்றாள். சந்நிதியில் இருந்த குருவும் இவளைச் சாடுகின்றார். இறுதியில் நம்பிக்கை வார்த்தைகள் கூறுகின்றார். அன்னா வீடு திரும்புகிறாள். ஆண்மகவைப் பெற்றெடுக்கிறாள். குழந்தையின் பால்குடி காலம் முடிந்ததும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆண்டவரின் இல்லம் ஓடுகிறாள். கடவுளிடம் சென்றவள் அவரிடமே திரும்பிச் செல்கின்றாள்.

அவர் பெயர் அலங்காரம். அவருடைய மகளுக்குத் திருமணம். திருமண நாள் நெருங்கி வர அவர் சேமித்து வைத்திருந்த நிதி நிறுவனம் தலைமறைவாகிவிட்டது. திருமண நாளை மாற்றவும் விருப்பமில்லை. திருமணத்திற்குப் பணமும் கைவசம் இல்லை. கையறுநிலையில் இருக்கின்ற அவரிடம் வருகின்ற அவருடைய நண்பர் அவருக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து, 'திருமணத்தை நன்றாக நடத்து. அப்புறம் பார்க்கலாம்!' என்று சொல்லிவிட்டுச் செல்கின்றார். திருமணம் நன்றாக முடிந்தது. அலங்காரம் தன் மகளையும் மருமகனையும் அழைத்துக்கொண்டு முதல் வேலையாக அந்த நண்பரின் இல்லம் நோக்கிச் செல்கின்றார். 'உன் உதவியால் திருமணம் நடந்தது' என்கிறார் அலங்காரம். 'உன்னுடைய நட்பால் திருமணம் நடந்தது' என்று வழியனுப்புகிறார் நண்பர். நண்பரிடம் சென்றவர் அவரிடமே திரும்பிச் செல்கின்றார்.

மேற்காணும் அனுபவங்கள் நமக்கும் நடந்திருக்கலாம். வேளாங்கண்ணி அல்லது பூண்டி திருத்தலத்தில் நாம் செய்த நேர்ச்சை நிறைவேறி, நாம் நன்றிக்கடன் செலுத்த அத்திருத்தலங்களுக்குத் 'திரும்பச் செல்கின்றோம்.' அல்லது நமக்குத் தேவையில் உதவியவர்களிடம் திரும்பச் சென்று அவர்களுக்கு நன்றி கூறுகின்றோம்.

இவ்வாறு திரும்பி வருதலின் இனிமையை நமக்கு எடுத்துரைக்கின்றது இன்றைய திருவழிபாடு.

இன்றைய முதல் வாசகத்தின் (காண். 2 அர 5:14-17) கதாநாயகன் நாமான். இவர் சிரிய நாட்டுப்படைத்தலைவர். 'வலிமைமிக்க வீரர். மதிப்பிற்குரிய தலைவர். ஆனால், தொழுநோயாளர்.' மற்ற நோய் என்றால் கூட மூடி மறைத்துவிடலாம். தோல் தொடர்பான நோய் என்பதால் எளிதாக மற்றவர்களுக்குத் தெரியக்கூடிய, அதனால் மற்றவர்கள் விலகி ஓடக்கூடிய ஒரு நோய். இவருடைய வீட்டில் அடிமைச் சிறுமியாக இஸ்ரயேல் சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் நாமானின் மனைவியிடம், 'என் தலைவர் சமாரியாவில் இருக்கும் இறைவாக்கினர் முன்னிலையில் சென்றால் அவர் இவரது நோயைக் குணமாக்குவார்' என்கிறார். இங்கே சிறுமியின் வார்த்தைகள் நமக்கு ஆச்சர்யமாக இருக்கின்றன. ஒருவன் தன்னை அடிமையாகக் கடத்தி வந்திருக்கிறான் என்ற கோபம் அந்தச் சிறுமிக்கு இல்லை. தன்மேல் விழும் கடப்பாரையைத் தாங்கும் நிலம் போல தன் தலைவனைத் தாங்குகிறாள் அவள். தலைவனின் நலத்தை நாடுகிறாள். நாமான் இதை உடனடியாகச் செயல்படுத்துகிறார். ஆனாலும், அவரிடம் மூன்று தயக்கம் இருந்திருக்க வேண்டும்: ஒன்று, சிறுமியின் பேச்சைக் கேட்பதா? என்பது. இரண்டு, வேற்று நாட்டுக்குச் செல்வதா? அப்படி என்றால், என் ஊர் மருத்துவத்தை நான் கேலி செய்வது போல் ஆகாதா? மூன்று, ஒருவேளை அங்கு சென்று சரியாகாவிட்டால் இந்த ஊர் இன்னும் அதிகம் கேலி பேசுமே? தயக்கங்களை ஒதுக்கிவிட்டு உடனே செல்கின்றார் என்றால் அவருடைய அவசியம் நமக்குப் புரிகிறது. சிரியா மன்னரும் பரிந்துரைக் கடிதம் கொடுத்து அனுப்புகின்றார். நாமான் ஏறக்குறைய 400 கிலோ வெள்ளிக்காசு, 6000 பொற்காசுகள், 10 பட்டாடைகள் என எடுத்துக்கொண்டு புறப்படுகிறார். இறைவாக்கினருக்கு இவர் வழங்க நினைத்த பரிசாக இருக்கலாம் இது. இஸ்ரயேல் அரசன் பரிந்துரைக் கடிதம் பெற்றவுடன், ஆடைகளைக் கிழித்துக் கொண்டு சிரியா அரசன் தன்னை வம்புக்கு இழுப்பதாக நினைக்கிறார்: 'நானென்ன கடவுளா?' என்று கேட்கின்றார். அக்காலத்தில் தொழுநோய் குணமாக்க முடியாத நோயாக இருந்தது. கடவுள் மட்டுமே குணமாக்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் இருந்தது. அரசன் தன்னுடைய ஆடைகளைக் கிழித்ததை எலிசா அறிகின்றார். கடவுளின் மனிதர் எப்படி தொடர்பில் இருக்கிறார் என்று பாருங்கள்! நாம் கடவுளோடு தொடர்பில் இருக்கும்போது மற்ற எல்லாத் தொடர்புகளும் மிகவும் பொருத்தமாகவும், ஒருங்கமைந்தும் இருக்கின்றன. ஆளனுப்பி, 'நீர் ஏன் உம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டீர்? அவன் என்னிடம் வரட்டும். இஸ்ரயேலில் ஓர் இறைவாக்கினர் உள்ளார் என அவன் அறியட்டும்' என்கிறார் எலிசா. 'இறைவாக்கினர் ஒருவர் உள்ளார்' என்றால், 'இறைவன் ஒருவர் உள்ளார்' என்று பொருள். ஆக, இப்போது சிரியாவின் கடவுளுக்கும் இஸ்ரயேலின் கடவுளுக்குமான போட்டியாக மாறுகிறது நிகழ்வு.

நாமான் படை பரிவாரங்களுடன் எலிசாவின் வீட்டு வாசலில்முன் வந்து நிற்கிறார். எலிசா பதற்றமில்லாம் வீட்டிற்குள் அமர்ந்திருக்கிறார். படை பரிவாரங்களைக் கண்டு பயப்படவோ, அவனுடன் வந்திருக்கும் பரிசுகளைக் கண்டு கையேந்தவோ இல்லை. அவருடைய தன்மதிப்பைக் காட்டுகிறது இது. அல்லது கடவுளே போதும் என்றிருப்பவருக்கு வேறு எதுவும் தேவை இல்லை என்பதும், கடவுளுக்கு பணிகிற ஒருவர் வேறு எவருக்கும் பணியத் தேவையில்லை என்பதும் தெரிகிறது. தன்னுடைய வேலைக்காரர் ஒருவரை அனுப்பி, 'நீ போய் யோர்தானில் ஏழு முறை மூழ்கினால் உன் உடல் நலம் பெறும்' என்று சொல்லி விடுகின்றார். கூடவும் பேசவில்லை, குறைவாகவும் பேசவில்லை. நாமானுக்கு கோபம், சினம்! தன்னை இறைவாக்கினர் அவமானப்படுத்திவிட்டார் என்றும், என் படைவீரர்கள்முன் அவமானப்படுத்திவிட்டார் என்றும் கோபம்! மேலும், 'எங்க ஊர் ஆறுகளைவிடவா யோர்தான் சிறந்தது?' என்கிறார். யோர்தான் வெறும் ஓடைதான்! அப்பொழுது, அவருடைய வேலைக்காரருள் ஒருவர், 'எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குச் சொன்னால் செய்திருப்பீர் அல்லவா! குளிக்கிறதுதானே! குளித்துவிடுங்கள்!' என்கிறார். அங்கே சிறுமி! இங்கே வேலைக்காரர்! கடவுள் சின்னஞ்சிறியவர்கள் வழியாக அவரைத் தொடுகின்றார். நாமானின் குழந்தையுள்ளத்தை இங்கே பார்க்கிறோம். 'நீ யாருடா எனக்கு புத்தி சொல்ல!' என்று வேலைக்காரரைப் பார்த்துக் கோபிக்காமல், உடனே போய் யோர்தானில் மூழ்கி எழுகின்றார் ஏழுமுறை! அதிசயம்! அற்புதம்! அவருடைய தோல் சிறுபிள்ளையின் உடல் போல் மாறினது. சிறுமியின் வார்த்தையைக் கேட்ட வந்த பெரியவர் ஒருவரின் உடல் சிறுபிள்ளையின் உடல் போல மாறுகிறது - மிகப்பெரிய அற்புதம்! அந்த நேரம் அவர் தன்னுடைய அவமானம் எல்லாம் அழிந்ததாக உணர்ந்திருப்பார்! ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார்! எல்லாரையும் கட்டிப்பிடித்துக் கதறியிருப்பார்! அங்கேயே மண்ணில் புரண்டு கொண்டாடியிருப்பார்! 'அவர் கடவுளின் அடியவரிடம் திரும்பினார்' என்று சொல்கிறார் ஆசிரியர். 'இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லை என உறுதியாக அறிந்துகொண்டேன்' என்கிறார். எவ்வளவு பெரிய வார்த்தைகள் இவை! தொழுநோயைக் கடவுள்தான் குணமாக்க முடியும். நான் எங்கெங்கோ சென்று குணமாகவில்லை. இங்கே குணமாகியிருக்கிறது. ஆக, இங்கே மட்டுமே இறைவன் இருக்கிறார். திரும்பி வந்தவர் அன்பளிப்புக்கள் கொடுக்கிறார் எலிசாவுக்கு. ஆனால், 'நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்!' என்கிறார் எலிசா. வற்புறுத்தியும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது நாமான் ஒரு வேண்டுகோள் வைக்கிறார். 'இங்கிருந்து இரண்டு பொதி மண் எடுத்துச் செல்ல அனுமதியும்!' அந்த மண்ணில் இறைவன் குடியிருக்கிறார் எனவும், அந்த இறைவனைத் தான் வணங்க விரும்புவதாகவும் சொல்கின்றார். இறைவாக்கினரும் அனுமதிக்கின்றார்.

நாமான் நம்பிக்கையால் கடவுளின் அடியவரிடம் திரும்பி வருகின்றார். அவருக்கு நிகழ்ந்த அற்புதம் அவருடைய நம்பிக்கையை உறுதி செய்கிறது. அவர் உடல் அளவில் தொழுநோய் நீங்குகிறார். உள்ளத்தளவில் உண்மையான கடவுளைக் கண்டு கொள்கிறார். இவ்வாறாக, முதல் வருகை அவருடைய உடல் நோயையும், திரும்பி வருதல் அவருடைய உள்ளத்து நோயையும் குணமாக்குகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 2 திமொ 2:8-13), நம்பிக்கையில் தான் பெற்றெடுத்த பிள்ளை திமொத்தேயுவிடம், 'நீ ஒரு நல்ல படைவீரனாய், விளையாட்டு வீரனாய், நிலத்தில் பாடுபட்டு உழைக்கும் தொழிலாளராய் இருக்க வேண்டும்' என்று அறிவுறுத்துகின்ற பவுல், தான் சிறைப்பட்டிருப்பதையும் சொல்கின்றார். தொடர்ந்து, அக்காலத்தில் பரவலாக மொழியப்பட்ட இறையியல் கூற்று ஒன்றை மேற்கோள் காட்டுகின்றார்: 'நாம் அவரோடு இறந்தால் அவரோடு வாழ்வோம். அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார்' - இரண்டு நிபந்தனை வாக்கியங்கள் இவை. 'இதைச் செய்தால் அது நடக்கும்' என்று சொல்லிவிட்டு, 'நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது' என்று கடவுளின் நம்பகத்தன்மையை அடிக்கோடிடுகின்றார். இங்கே, 'அவரோடு இறத்தல்' என்பதை 'அவரிடம் திரும்பி வருதல்' என்று நாம் பொருள்கொள்ளலாம். நம்பிக்கை கொண்டால்தான் ஒருவர் அவரிடம் திரும்பி வர முடியும்.

திமொத்தேயு தன்னுடைய நம்பிக்கையால் கடவுளிடம் திரும்பி வர வேண்டும் என்று சொல்வதோடு, இதையே அவர் தன்னுடைய சபையிலும் கற்பிக்க வேண்டும் என்றும் சொல்கின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 17:11-19) முதல் வாசகத்தின் நீட்சியாக இருக்கிறது. இயேசு தொழுநோயாளர் ஒருவரைக் குணமாக்குவதை (காண். மத் 8:1-4) அல்லது தொழுநோயாளர்களைக் குணமாக்கும் அதிகாரத்தை திருத்தூதர்களுக்கு வழங்குவதை (காண். மத் 10:8) மத்தேயு நற்செய்தியில் பார்க்கிறோம். ஆனால், இயேசு பத்து தொழுநோயாளர்களைக் குணமாக்கும் நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இயேசு நயீன் நகர நுழைவாயிலில் கைம்பெண்ணின் மகனுக்கு உயிர்தந்த நிகழ்வின் இறுதியில், 'நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்' என்று மக்கள் ஆர்ப்பரிக்கின்றனர். இஸ்ரயேலில் பெரிய இறைவாக்கினர்கள் என்று மக்களால் எண்ணப்பட்டவர்கள் எலியாவும், எலிசாவும். இந்த இரண்டு இறைவாக்கினர்கள் செய்ததை இயேசுவும் செய்ததாக எழுதுவதன் வழியாக, இயேசுவை பெரிய இறைவாக்கினர் என்று அறிமுகம் செய்கிறார் லூக்கா. எலியா சாரிபாத்துக் கைம்பெண்ணின் மகனுக்கு உயிர் தருகிறார் (காண். 1 அர 17:17-24). அதே போல இயேசு நயீன் நகரப் பெண்ணின் மகனுக்கு உயிர் தருகின்றார். எலிசா தொழுநோயாளர் நாமானுக்கு நலம் தருகிறார் (காண். முதல் வாசகம்). அது போல இயேசு பத்துத் தொழுநோயாளர்கள் நோயை நீக்குகின்றார். நாமான் சிரிய நாட்டினர் - புறவினத்தவர். இங்கே, திரும்பி வருகின்ற ஒருவர் சமாரியர் - புறவினத்தவர். அங்கே நாமான் யோர்தான் ஆற்றில் ஏழு முறை மூழ்கி ஏழுகின்றார். இங்கே இவர்கள் குருக்களை நோக்கிச் செல்கின்றனர். அங்கே நாமான் திரும்பி வந்து இஸ்ரயேலின் கடவுளே உண்மையான கடவுள் என அறிக்கையிடுகின்றார். இங்கே இவர் இயேசுவின் காலில் முகங்குப்புற விழுகின்றார் - கடவுளைத் தொழுதலின் அடையாளம். ஆக, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறார் லூக்கா. தொழுநோய் நீக்கிய அந்த நொடியில் அவரை எலிசா போன்ற இறைவாக்கினர் எனவும், தொழுநோய் நீங்கியவர் காலில் விழுவதால் யாவே கடவுள் போல இயேசுவே ஆண்டவர் என்றும் சொல்கின்றார்.

திரும்பி வந்த அந்த நபரை மட்டும் எடுத்துக்கொள்வோம். 'மற்ற ஒன்பது பேர் எங்கே?' மற்ற ஒன்பது பேர் இங்கே இல்லை. அவ்வளவுதான் விடை. மற்றவர்கள், 'இன்னும் நாங்கள் நலமாகவில்லை' என்றோ, அல்லது 'அவர் சொன்னபடி குருக்களிடம் செல்வோம்' என்றோ, அல்லது 'நலம் பெற்றாயிற்று. நாம் வீட்டிற்குச் செல்வோம்' என்றோ நினைத்திருக்கலாம். யாரையும் இயேசு திரும்பிவரச் சொல்லவில்லையே. அப்புறம் ஏன் இந்த ஒரு நபர் திரும்பி வந்தார்? இவர் சமாரியர் என்பதால் குரு இவரைச் சோதிக்கமாட்டார் என எண்ணி இயேசுவிடம் இவர் திரும்பினாரோ? ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். இவர் மற்றவர்களைப் போல இருக்கவில்லை. வித்தியாசமாக இருந்தார். அவர்கள் குருவைத் தேடிச் சென்றனர். இவரோ கடவுளைத் தேடி வந்தார். இதுதான் அந்த வித்தியாசம். முதலில், 'இயேசுவே நலம் தந்தார்' என நம்புகிறார். இரண்டாவது, 'நான் திரும்பிப் போவேன்' என முடிவெடுக்கின்றார். மூன்றாவது, 'நான் திரும்பிப் போனால் இவர் என்ன நினைப்பார் அவர் என்ன நினைப்பார்' என்று தன் கூட்டத்தைப் பற்றிக் கவலைப்படாமல் துணிவுடன் இயேசுவிடம் வருகின்றார். நான்காவது, 'நலம் பெற்ற பிறகு ஏன் தொழுநோயாளரின் குழு? உடனே புது வழியைத் தேடுவேன்' என தேடுகிறார் இயேசுவை. ஆக, இந்தச் சமாரியர் நமக்கு நன்றிக்கான பாடம் அல்ல. அதைவிட, நம்பிக்கைக்கான பாடம். மேற்காணும் நான்கு வழிகளும்தான் நம்பிக்கைக்கான வழிகள்.

ஆக, முதலில் இயேசுவிடம் வந்தபோது உடல்நலம் பெற்றவர், திரும்பி வந்தபோது உள்ள நலம் பெறுகின்றார்.

இன்று நாம் ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் கடவுளிடம் வருகின்றோம். ஆனால், என்றாவது ஒருநாள் திரும்பி வந்திருக்கிறோமா? திரும்பி வருதலுக்கான அற்புதம் நம் வாழ்வில் நடந்ததா? நாம் கடவுளிடம் தினமும்கூட வரலாம். ஆனால், அவரிடம் திரும்பி வரும் அந்த ஒரு நாளே நம் வாழ்வைப் புரட்டிப் போடும். சில நேரங்களில் அற்புதங்கள் பெற்ற நமக்கு மற்ற வேலைகள் வந்துவிட்டதால் அல்லது மற்ற கவனச் சிதறல்கள் வந்துவிட்டதால் அவரிடம் திரும்பி வருவதற்கு நாம் தாமதம் செய்யலாம். அல்லது அவரிடம் திரும்பி வந்தார் இன்னும் அவர் நம்மைக் குணமாக்கிவிடுவார் என்ற பயத்தில், 'அரைகுறை குணமே போதும்' என்று ஓய்ந்திருந்து, நாமே நம் நோய்க்கு மருந்திட்டுக் கொள்ளும் மடமையில் இருக்கலாம்.

இன்று அவரிடம் திரும்பி வர நாம் என்ன செய்ய வேண்டும்?
அ. அவரால்தான் எல்லாம் என்ற உறுதியான நம்பிக்கை வேண்டும் - இந்த நம்பிக்கை நாமானுக்கும், பவுலுக்கும், திமொத்தேயுவுக்கும், சமாரியருக்கும் இருந்தது. தொழுநோய் என்பது தோலை மூடும் அல்லது சிதைக்கும் ஒரு திரை. நம்பிக்கையின்மைகூட தொழுநோய்தான். கடவுளை அது நம் வாழ்விலிருந்து மூடிவிடுகிறது அல்லது கடவுளின் முகத்தை அடையாளம் தெரியாதவாறு சிதைத்துவிடுகிறது. இதிலிருந்து வெளிவர நாம் சில நேரங்களில் கொஞ்சம் நடந்தால் போதும். இன்னும் சில நேரங்களில் நாம் ஏழு முறை மூழ்கி எழ வேண்டிய நிலையும் வரும். ஆனால், அற்புதம் நடந்தவுடன் அங்கே அவரின் கைவன்மையைக் காண வேண்டும். 'ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது. நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' (திபா 118:23) என்று ஆச்சர்யப்பட வேண்டும்.

ஆ. அவரோடு இணைய வேண்டும் - முதலில் 'அவரால்தான்' என்று அறிகின்றோம். பின், 'அவரோடு' என இணைந்துகொள்ள வேண்டும். இரண்டு பொதி மண் எடுத்துக் கொண்டு தன் நாட்டிற்குச் செல்வதன் வழியாக எப்படியாவது இஸ்ரயேலின் கடவுளோடு தன்னை இணைத்துக்கொள்கிறார் நாமான். இயேசுவின் காலடிகளில் விழுந்து நன்றி செலுத்துவதன் வழியாக அவரோடு தன்னை இணைத்துக் கொள்கிறார் சமாரியர். இன்று நான் இயேசுவோடு என்னை இணைத்துக்கொள்கின்றேனா? எந்த அளவிற்கு?

இ. அவரே என்று நம் வழி புறப்பட வேண்டும் - குணம் பெற்ற நாமான் எலிசாவிடமும், சமாரியர் இயேசுவிடமும் தங்கிவிடவில்லை. தங்கள் வழி திரும்புகின்றனர். மீண்டும் தங்கள் வாழ்வை வாழப் புறப்படுகின்றனர். 'நானே' என்று வாழ்ந்தவர்கள் 'அவரே' என்று வாழப் புறப்படுகின்றனர்.

இவ்வாறாக, 'அவரால்,' 'அவரோடு,' 'அவரே' என்ற இறைமையமே நம்மை திரும்பி வரச் செய்கிறது. நலமுடன் திரும்பி வருக! ஏனெனில், திரும்பி வருதலே நலம்!

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com