மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் இருபத்திஏழாம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
அபகூக். 1:2-3; 2:2-4 2 | திமொத்தேயு 1:6-8; 13-14 | லூக்கா 17:5-10

நம்பிக்கை

மனிதன் வாழ்வதே நம்பிக்கையால்தான். நிலத்தை உழுது விதைப்பவன் உரிய காலத்தில் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையால்தான். கடின உழைப்போடு படிக்கும் மாணவன் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவேன் என்ற நம்பிக்கையால் தான். சேர வேண்டிய இலக்கை, இடத்தை நோக்கிச் சேருவோம் என்ற நம்பிக்கையால்தான் பேருந்துகளிலும், புகை வண்டியிலும் பயணம் தொடர்கிறோம். ஒரு கவிஞர் கூறியதுபோல, நீ இன்று சுமக்கும் நம்பிக்கை, நாளை நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும். நம்பிக்கை வாழ்வின் ஆணி வேராக அமைகிறது. நம்பிக்கை இழந்தவன் செத்தவனாவான். எனவேதான் இயேசு கூறுகிறார், என் தந்தையின் மீது நம்பிக்கை வையுங்கள். என் மீதும் நம்பிக்கை வையுங்கள் (யோவா. 14:1). உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னை நம்புவோர் என்றும் வாழ்வர்(யோவா. 6:47) என்று .

ஆண்டவரே, எத்துணை காலத்திற்கு நான் துணை வேண்டி கூக்குரலிடுவேன். நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? கொள்ளையும், வன்முறையும் என் கண் முன் நிற்கின்றன என்று புலம்புகின்ற வருக்கு (அபகூக். 2:4) எதிர்பார்த்து காத்திரு. அது நிறைவேறியே தீரும். நேர்மை உடையவர் நம்பிக்கையால் வாழ்வடைவர் (முதல் வாசகம்) என்று பதில் தருகிறார் ஆண்டவர்.

இன்றைய நற்செய்தி இன்னும் ஆழமான உணர்வுக்கு நம்மை அழைக்கிறது. காட்டு அத்திமரத்தை நோக்கி, நீ வேரோடு பெயர்ந்துபோய் கடலில் வேறூன்றி நில் என்றால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும் (லூக். 17:6) என்று. இது என்ன நடக்கக் கூடியதா? என்ற கேள்வி நம்மிலும் எழலாம். ஆம் நடக்கக் கூடியதுதான். நடக்காததை நமக்கு ஆண்டவர் போதிக்க மாட்டார். விவிலியத்தில் கூறப்படும் பிறவினத்தாளாகிய கனானேயப் பெண், பிள்ளைகளுக்கு முதலில் உணவைக் கொடும். ஆனால் அதிலிருந்து கீழே விழும் சிறு துண்டுகளையாவது நாய்களாகிய நாங்கள் பொறுக்கித் தின்ன உரிமை' தாரும் என்று நம்பிக்கையோடு கூறி இயேசுவையே அசைத்துவிட்டார் (மத். 15:28).

மராட்டிய நாட்டிலே சிவாஜி என்ற மன்னன் ஆட்சி செய்த காலம், வறுமையால், நோயில் உயிருக்காகப் போராடிய தன் தாயைக் காப்பாற்ற விரும்பி எதிரியின் வாக்குறுதியை நம்பி, அரசனைத் தொலைத்துக் கட்ட 18 வயது இளைஞன் ஒருவன் அரசனின் படுக்கை அறைக்கு வாளோடு நுழைந்தான். ஆனால் வீரர்களால் பிடிபட்டான். இந்தச் செயலுக்காக அரசன் அவனைத் தூக்கிலிடப் பணித்தான். ஆனால் அந்த இளைஞன், அரசே! நான் செய்யத் துணிந்த குற்றம் பெரியது. உங்கள் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் என்னை நம்புங்கள். விலங்கு மாட்டாது என்னை அனுப்பி வையுங்கள். நான் வீடு சென்று அம்மாவிடம் ஆசீர் பெற்றுத் திரும்புகிறேன். அதன்பின் எனக்குத் தண்டனை கொடுங்கள் என்று வேண்டினான். ஏனெனில் நான் மானமுள்ள மராட்டியன் என்றான். அரசனும் இறுதியாக நம்பி, போகவும் அனுமதி கொடுத்தார். குறிப்பிட்டபடி, அம்மாவின் ஆசீர் பெற்று, அரசன் முன் நின்றான். இதைக் கண்ட அரசன், உன்னைப்போல நம்பிக்கைக்கு உரிய ஒருவனை, நான் இதுவரைப் பார்த்ததே இல்லை. நீயே என் நம்பிக்கைக்குரியவன் எனப் பரிசு வழங்கி, தன் படையிலும் சேர்த்துக் கொண்டார். ஆம், நாம் மூவொரு இறைவனில் நம்பிக்கைக் கொண்டவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். ஏனெனில் உன் கால்கள் இடறாதபடி பார்த்துக் கொள்வார். உம்மைக் காக்கும் அவர் உறங்குவதும் இல்லை . கண் அயர்வதும் இல்லை (திபா. 121:3).

ஆபேலை நேர்மையாளராக, நோவா வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட, ஆப்ரகாம் துணிந்து தன் ஒரே மகன் ஈசாக்கைப் பலியிடத் துணிந்ததும் (எபி. 11:4-11) நம்பிக்கையால்தான்.

சிந்தனை
குரங்கு குட்டியானது, தாயை நன்றாகப் பற்றிக் கொள்ளும். பூனையோ தன் குட்டியை வாயில் கவ்விச் செல்லும். நாம் குரங்கு குட்டிபோல நம்பிக்கையோடு இறைவனைப் பற்றிக் கொண்டோமானால், இறைவன் பூனையைப்போல நம்மைத் தூக்கிச் செல்வார்.
நம்புவோம், செபிப்போம், நல்லது நடக்கும், நல்லதும் செய்வோம்.

ser

நம்பிக்கை நம்மை வாழவைக்கும்

இன்றைய நற்செய்தியில், திருத்தூதர்கள் ஆண்டவரிடம், எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும் (லூக் 17:5) என்று கேட்கின்றார்கள். நம்பிக்கை என்றால் என்ன?

இதோ புனித பவுலடியார் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி (திப 27:13-26): புனித பவுலடிகளாரும், அவருடைய நண்பர்களும் பயணம் செய்த கப்பல் கிரேத்துத் தீவுக்குப் பக்கத்தில் பேய்க்காற்றில் சிக்கிக்கொண்டது. ஒரு நாள் முழுவதும் அவர்கள் புயலோடு போராடினார்கள். மறு நாள் கப்பலிலிருந்த சரக்குகளை அவர்கள் கடலில் எறியத் தொடங்கினார்கள். மூன்றாம் நாளும் புயல் ஓயவில்லை. கப்பலின் தளவாடங்களை அவர்கள் கடலுக்குள் எறிந்தனர். கதிரவனோ, விண்மீன்களோ அவர்கள் கண்களுக்குத் தெரியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடவுளின் தூதர் புனித பவுலடிகளாருக்குத் தோன்றினார். தூதர் புனித பவுலடிகளாரிடம், அஞ்சாதீர்! நீர் சீசர் முன்பாக விசாரிக்கப்பட வேண்டும். உம்மோடுகூடக் கப்பலிலுள்ள அனைவரையும் கடவுள் காப்பாற்றப் போகின்றார் (திப 27:24) என்று கூறினார். விண்ணகத்தூதரின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, புனித பவுலடிகாளர் தன் உடன் பயணிகளைப் பார்த்து, மன உறுதியுடனிருங்கள். நான் கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருக்கின்றேன். அவர் என்னிடம் சொன்னவாறே நடக்கும் (திப 27:25) என்றார். புனித பவுலடிகளார் நம்பியபடியே கப்பலிலிருந்த இருநூற்று எழுபத்தாறு பேரும் பதினான்கு நாள்களுக்குப் பிறகு மால்தா தீவில் கரையிறங்கினார்கள்.

இறைவனின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு, வாக்களிக்கப்பட்டது கிடைக்கும் என்ற மன உறுதியோடு காத்திருப்பதற்குப் பெயர்தான் நம்பிக்கை .

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம், நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி ; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை (எபி 11:1) என்று கூறுகின்றது. நாம் கடவுளிடம் கேட்பது கிடைக்கும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்வதற்குப் பெயர்தான் நம்பிக்கை. நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது, எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்றுவிட்டீர்கள் என நம்புங்கள். நீங்கள் கேட்டபடியே நடக்கும் (மாற் 11:24) என்கின்றார் இயேசு.

ஐந்து வயது சிறுவனும், சிறுமியும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். சிறுவன் சிறுமியைப் பார்த்து, உன்னிடம் எவ்வளவு காசு இருக்கின்றது? என்றான். சிறுமி, ஒரு ரூபாய் என்றாள். சிறுமி சிறுவனைப் பார்த்து, நீ எவ்வளவு வைத்திருக்கின்றாய்? என்றாள். சிறுவன், இரண்டு ரூபாய் என்றான். சிறுமி, அந்த இரண்டு ரூபாயையும் காட்டு என்றாள். சிறுவன் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் காட்டினான். சிறுமி, என்ன இரண்டு ரூபாய் என்று சொல்லிவிட்டு ஒரு ரூபாயைக் காட்டுகின்றாய்? என்றாள். அதற்கு அந்தச் சிறுவன், சாயந்திரம் எங்க அப்பா ஆபீஸ்லேயிருந்து வந்ததும் ஒரு ரூபாய் தர்றேன்னு சொல்லியிருக்காங்க. அதையும் சேர்த்தா இரண்டு ரூபாய்தானே! என்றான்.

ஒரு ரூபாய் அந்தச் சிறுவனின் கைக்கு இன்னும் வரவில்லை! இருந்தாலும் வந்துவிட்டதாக, கிடைத்துவிட்டதாக அவன் நம்பினான். என்ன அருமையான நம்பிக்கை வாழ்வு!

நம்பிக்கையால் நமக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள் எவை? நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர் (அப் 2:4ஆ) என்கின்றது முதல் வாசகம்.

இன்றைய நற்செய்தியில், கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்திமரத்தை நோக்கி, நீ வேரோடே பெயர்ந்து போய் கடலில் வேரூன்றி நில் எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும் என்கின்றார் இயேசு. நம்பிக்கை நிறைந்த நல்வாழ்வுக்குள் இன்று நாம் நுழைவோம். புனித பவுலடிகளார் இரண்டாவது வாசகத்தில் கூறுவது போல கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கைக்கொண்டு வாழ்வோம்.


'என்னை மட்டும் நம்பும்போது இடறி விழுகின்றேன்.
எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கின்றேன்.
என்னுள் வாழும் உன்னை நம்பி எழுந்து நடப்பேன்.
இனி இமயம் போன்ற தடைவரினும் எளிதாய்க் கடப்பேன்
எனப் பாடி நம் பயணத்தைத் தொடர்வோம்.

மேலும் அறிவோம் :

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்(கு) அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).
பொருள் :
தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.

ஓர் ஊரிலே ஒரு கிறிஸ்தவர் கடவுளை மறுத்து அவருக்கு எதிராக எப்போதும் பேசி நாத்திகக் கொள்கையைப் பரப்பி வந்தார். அவர் ஒருநாள் காட்டுக்குச் சென்றபோது ஒரு சிங்கம் அவரைத் துரத்திக்கொண்டு வந்தது. அப்போது அவர் பயந்து கொண்டு, "இயேசுவே என்னைக் காப்பாற்றும்" என்று கத்தினார். இயேசு அவரிடம், "வாழ்நாள் முழுவதும் கடவுளை மறுத்த உங்களைச் சாகும்போது எப்படிக் கிறிஸ்தவராக மாற்றுவது?” என்று கேட்டார். அதற்கு அந்த நாத்திகர், "என்னைக் கிறிஸ்தவராக மாற்ற முடியாது என்றால், இச்சிங்கத்தையாவது கிறிஸ்தவராக மாற்றும். அப்போது என்னைக் கொல்லாமல் விட்டுவிடும்" என்றார். இயேசு அச்சிங்கத்தைக் கிறிஸ்தவராக மாற்றினார்.உடனே அது தனது இரண்டு கைகளையும் குவித்து, "இயேசுவே, நான் உண்ணப்போகும் இவ்வுணவை ஆசீர்வதியும்!" என்று செபித்து, அந்த ஆளைக் கொன்று சாப்பிட்டுவிட்டுத் தனக்குக் கிடைத்த உணவுக்காக நன்றி செலுத்தியதாம்!

வாழ்நாள் முழுவதும் கடவுளை மறுத்த நாத்திகர் சாகும்போது கடவுள் பக்தராக மாறுவது அரிது. "இரண்டு கண்ணும் கெட்டபின் சூரிய நமஸ்காரம் எதற்கு ?" இருப்பினும், ஒரு சிலர் கடவுளை மறுப்பதற்குக் காரணம்: மக்கள், குறிப்பாக ஏழை எளியவர்கள் படும் துன்பம்; அத் துன்பத்தைக் கண்டும் கடவுள் அதைத் தீர்க்காமல் இருப்பது.

இன்றைய முதல் வாசகத்தில் அபக்கூக் என்ற இறைவாக்கினர். தாமும் தம்முடைய இனத்தவரும் படும் துன்பங்கள் நடுவில் இறைவன் காத்துவரும் மெளனத்தை அவருக்குச் சுட்டிக்காட்டின் பின்வருமாறு புலம்புகிறார்: "ஆண்டவரே எத்துணை காலத்திற்கு நான் துணைவேண்டிக் கூக்குரலிடுவேன். நீர் செவிசாய்க்கா திருப்பீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண் முன் நிற்க்கின்றன. வழக்கும் வாதும் எழும்புகின்றன" ( அப 1:2-3 ) கடவுள் அபக்கூக்குக் கூறும் பதில்: "(கடவுளுடைய தீர்ப்பு) காலத்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு. அது நிறையேறியே தீரும்... நேர்மையுடையவர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்" (அப 2:2-4). அதாவது, நீதிமான் விசுவாசத்தல் வாழ்கிறார்.

"எதிர் பார்த்து காத்திரு." எனவே நமக்குத் தேவையானது நம்பிக்கையும் பொறுமையும் ஆகும். முதலாவது. நமக்கு நம்பிக்கை தேவை, இன்றைய நற்செய்தியிலே கிறிஸ்து கூறுவது கடுகளவு நம்பிக்கை நம்மிடம் இருந்தால் நம்மால் எல்லாம் செய்ய முடியும் (லூக் 17:6). நம்பிக்கை, மரங்களை வேரோடு பிடுங்கவும் மலைகளைப் பெயர்க்கவும் வல்லது. அதாவது, நம்பிக்கை உடையோர் எத்தகைய இடையூறுகளையும் மேற்கொள்ள முடியும்.

'கடுகளவு நம்பிக்கை' என்று கிறிஸ்து குறிப்பிடுவது நம்பிக்கையின் தரத்தைப் பற்றியது. "கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது." நாம் எவ்வளவு நம்புகிறோம் என்பதைவிட எவ்வாறு நம்புகிறோம் என்பதே முக்கியமாகும். நமது நம்பிக்கை ஆழமானதாக, அசைக்க முடியாததாக இருத்தல் வேண்டும்.

இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: "அவரே நம் கடவுள்: நாமே அவரது மேய்ச்சலின் மக்கள், நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்" (திப 95:7). ஆயன் தன் மந்தையைக் காப்பதுபோல் ஆண்டவர் நம்மைக் காக்கின்றார். எனவே நாம் ஒருபோதும் கடவுள் நம்பிக்கையில் தளர்ச்சியடையக் கூடாது, நமக்குக் கடவுள் நம்பிக்கையுடன் பொறுமையும் வேண்டும். நாம் நினைப்பதெல்லாம் உடனடியாகக் கைகூட வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு . "நடவுக்கு ஒருகாலம்; அறுவடைக்கு ஒருகாலம்" (சஉ 3:2) புனித யாக்கோபு கூறுகிறார்: "பயிரிடுபவர் விளைச்சலை எதிர்பார்த்துப் பொறுமையோடு இருப்பதுபோல, நாமும் ஆண்டவரின் வருகைவரை பொறுமையோடு இருக்க வேண்டும்” (யாக் 5:7-8). இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர் (மத் 24:13) என்று ஆண்டவரும் நமக்கு அறிவுறுத்துகிறார்.

கொக்கு ஏன் ஒரு காலைத் தூக்கிக்கொண்டு நிற்கிறது? இரண்டு காலையும் தூக்கினால் அது கீழே விழுந்துவிடும்! (கடி ஜோக்). கொக்கு ஏன் ஒத்தக்காலில் நிற்கிறது? கொத்துவதற்கான பெரிய மீன் வரும்வரை அது பொறுமையோடு காத்திருக்கிறது.

"ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் வாடியிருக்குமாம் கொக்கு." இதே கருத்தை வள்ளுவர் பின்வரும் குறளில் எடுத்துரைக்கின்றார்.

கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து (குறள் 490)

இறுதியாக, நாம் என்ன செய்தாலும் பிரதிபலன், அதாவது கைமாறு கருதி செய்கிறோம். ஆனால் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார்: “உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம் எனச் சொல்லுங்கள்" (லூக் 17:10). பகவத்கீதை கூறும் முக்கிய செய்தி நிஷ்காம் கர்மா, அதாவது, “கடமையைச் செய், கைமாறு எதிர்பார்க்காதே."

பெற்றோர்கள் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டிப் பிள்ளைகளை வளர்க்கின்றனர், பிள்ளைகள் பெற்றோர்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுகின்றனர். ஓர் அம்மா தன் மகனிடம், "ராஜா! உனக்கு நான் மூக்கும் முழியுமாக ஒரு பெண்ணைப் பார்த்திருக்கின்றேன்" என்று சொன்னதற்கு அவன் அம்மாவிடம், "நான் ஏற்கெனவே ஒரு பெண்ணைக் காதலித்து அவள் வாயும் வயிறுமாறு இருக்கின்றாள்” என்றான். இந்நிலையில் பெற்றோர்கள் சொல்ல வேண்டியது: "நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தோம். அவர்கள் நன்றியுள்ளவர்களாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; நல்லா இருக்கட்டும்."

மழை எத்தகைய கைமாறும் எதிர் பாராது மண்மீது பொழிந்து உலகத்தாரை வாழ வைக்கின்றது. மழைபோன்றவர்கள் தாங்கள் செய்யும் உதவிகளுக்குக் கைமாறு எதிர்பார்க்க மாட்டார்கள்,

கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னஆற்றும் கொல்லோ உலகு? (குறள் 211)

‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’

நிகழ்வு

இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்திருந்த சமயம். ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராகக் கலகம் செய்ததாக 46 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார்கள். அவர்கள் சார்பாக வழக்குரைஞர் ஒருவர் பேச்சில் அனல் பறக்க வாதித்துக் கொண்டிருந்தார். நடுவில் அந்த வழக்குரைஞரின் உதவியாளர் அவரிடம் வந்து, ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்துவிட்டுப் போனார். அதை வாசித்துப் பார்த்த வழக்குரைஞர் ஒரு கணம் அதிர்ந்துபோனார். பின்னர் அவர் அந்தத் துண்டுக் காகிதத்தை தான் அணிந்திருந்த சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு, அந்த 46 இந்தியர்கட்காக வாதிட்டார். வழக்கின் முடிவில் அந்த 46 இந்தியர்களும் நிரபராதிகள் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பு வழங்கப்பட்ட பின் வழக்காடிய வழக்குரைஞரிடம் வந்த அந்த (ஆகிலேய) நீதிபதி அவரிடம், “குற்றம் சுமத்தப்பட்ட இந்த 46 இந்தியர்கட்காக நீங்கள் வாதாடும்போது, நடுவில் உங்களுடைய உதவியாளர் கொண்டுவந்து கொடுத்த துண்டுக் காகிதத்தைப் படித்ததும் ஒரு கணம் நீங்கள் அதிர்ந்துபோனீர்களே! அதில் என்ன எழுதியிருந்தது?” என்றார். “அதுவா! என்னுடைய மனைவி இறந்துவிட்டார் என்ற செய்தி” என்றார் அந்த வழக்குரைஞர். “என்ன உங்களுடைய மனைவி இறந்துவிட்டார்களா...? உங்களுடைய மனைவி இறந்த செய்தியை அறிந்தும், நீங்கள் ஏன் வழக்கை அப்படியே விட்டுவிட்டு பாதியிலேயே சென்றிருக்கக்கூடாது...? என்றார் நீதிபதி.

“நீங்கள் சொல்வதுபோன்று இந்த வழக்கைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் போயிருந்தால் இறந்துபோன என் மனைவி திரும்பக் கிடைத்துவிடுவாளா...? இல்லைதானே! ஆனால், நான் அங்கு செல்லாமல் இருந்தால், அநியாயமாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இந்த 46 இந்தியர்களையும் தூக்குத் தண்டனையிலிருந்து மீட்க முடியும். அதனால்தான் என்னுடைய மனைவியின் இறப்புச் செய்தியை அறிந்தபின்னும் வீட்டுக்குப் போகாமல், இங்கேயே இருந்து, இவர்கட்காக வாதிட்டேன்” என்றார். இதைக் கேட்ட அந்த ஆங்கிலேயே நீதிபதி, ‘இப்படியெல்லாம் கடமை உணர்வோடு மனிதர்கள் இருப்பார்களா! என்று வியந்து நின்றார். தன்னுடைய மனைவி இறப்புச் செய்தியை அறிந்தபின்னும் 46 இந்தியர்கட்காக வாதித்த அந்த வழக்குரைஞர் வேறு யாருமல்ல, இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல்தான்!

நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை யாருடைய பாராட்டுக்காகவும் இல்லாமல், பிறர் நலனுக்காக (இறைவனின் மகிமைக்காகக்) கடமை உணர்வோடு செய்யவேண்டும் என்ற உண்மையை உணர்த்தும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் இருபத்து ஏழாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், கடமையுணர்வோடு இறையாட்சிப் பணியையும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பணியினையும் செய்யவேண்டும் என்றோர் அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

பிரதிபலன் பாராது பணிசெய்யவேண்டும்

இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில், இயேசு பயனற்ற பணியாளர் உவமையைச் சொல்கிறார். இவ்வுவமையில் வருகின்ற பணியாளர் வயலில் உழுதுவிட்டோ, மந்தையை மேய்த்துவிட்டோ வருகின்றபோது, அவருடைய தலைவர் அவரிடம், ‘உணவருந்த அமரும்’ என்று சொல்லவில்லை. மாறாக, அவர் அவரிடம், ‘எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்... எனக்குப் பணிசெய்யும்’ என்றுதான் சொல்கின்றார்; அந்தப் பணியாளர் செய்த பணிக்காகத் தலைவர் அவர்க்கு நன்றி கூறவில்லை. நீங்களும் அந்தப் பணியாளரைப் போன்று இருங்கள் என்கின்றார் இயேசு.

உவமையில் வருகின்ற பணியாளர் செய்கின்ற பணிகளாக இயேசு, உழுவதையும் மந்தையை மேய்ப்பதையும் குறிப்பிடுகின்றார். இந்த இரண்டு பணிகளும் நற்செய்திப் பணியோடு தொடர்புடையவை. எப்படி என்றால், உழவர் உழுது விதைகளை விதைத்து, பின்னர் அறுவடை செய்கின்றார். அதுபோன்று நற்செய்திப் பணியாளர் ஆண்டவருடைய வார்த்தையை மனிதர்களுடைய உள்ளம் என்று நிலத்தில் விதைக்கின்றார்.

மேலும் மந்தையை மேய்ப்பவர், தன்னுடைய மந்தைக்குத் தேவையானதைச் செய்துதந்து, அதனை முன்னின்று வழிநடத்தி, நல்லாயனைப் போன்று விளங்குகின்றார். அவரைப்போன்று இயேசுவின் சீடரும் ஆயனைப் போன்று இருந்து, மக்களைப் பேணிவளர்க்க வளர்க்கின்றார் (யோவா 21: 15-17). அப்படியென்றால், உவமையில் வருகின்ற பணியாளர் எப்படி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை தலைவரின் பாராட்டையோ நன்றியையோ எதிர்பாராமல் அது தன்னுடைய கடமை என்ற உணர்வோடு செய்கின்றாரோ, அதுபோன்று நற்செய்தியை அறிவிகின்றவரும் மந்தையை மேய்க்கிறவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை தலைவராகிய ஆண்டவரின் பாராட்டையோ நன்றியையோ எதிர்பாராமல் தன்னுடைய கடமை என்ற உணர்வோடு செய்யவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனுக்குப் பணிசெய்யவேண்டும் என்கின்றார் இயேசு

அன்போடு பணிசெய்யவேண்டும்

இயேசு தன்னுடைய சீடர்கள் யாவரும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை கடமையுணர்வோடு செய்யவேண்டும் என்று சொன்னதை ‘கடமைக்காகச் செய்வது’ என்றோ, ‘அடிமை மனோபாவத்தோடு செய்வது’ என்றால் நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. இன்றைக்குப் பலர் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை கடமைக்காக ஏனோதானோ என்று செய்கின்ற போக்கானது நிலவிக்கொண்டிருக்கின்றது. இது இயேசுவின் சீடர்களிடமிருந்து முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டியதொன்றாக இருக்கின்றது. மேலும் ஒருசிலர் தங்களை அடிமை என கருதிக்கொண்டு பணிசெய்கின்ற போக்கையும் காணமுடிகின்றது. இதுவும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. இயேசுவின் சீடர்கள் கடமைக்காகவோ அல்லது அடிமை மனபாவத்தோடோ அல்ல, அன்போடு அல்லது உளமாரப் பணிசெய்ய வேண்டும்.

புனித பவுல் இதைத்தான், “கிறிஸ்துவின் பணியாளர்களாய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள்” (எபே 6:6) என்று குறிப்பிடுகின்றார். கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்ற வேண்டும் என்றால், அதற்கு கடவுளின்மீது/ இயேசுவின்மீது நமக்கு உண்மையான அன்பு இருக்கவேண்டும். ஏனென்றால் இயேசுவின்மீது உண்மையான அன்பு கொண்டிருப்பவரால் மட்டுமே, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க (யோவா 14: 15) முடியும்; அதன்மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியையும் அடைய முடியும் (திபா 40: 8). இயேசுவின் பணியை அல்லது கடவுளின் திருவுளத்தை கடமைக்காகவும் அடிமை மனோபாவத்தோடும் செய்தால், அங்கு மகிழ்ச்சி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை

இயேசுவைப் போன்று பணிசெய்ய வேண்டும்

கடவுளின் பணியை உளமாரச் செய்யவேண்டும் என்பதை இதுவரையில் பார்த்தோம். அதை வேறுசொற்களில் சொல்லவேண்டும் என்றால், நாம் செய்யும் பணியை இயேசுவைப் போன்று செய்யவேண்டும் என்று சொல்லலாம்.

இயேசு கடவுள் தன்மையில் விளங்கியபோதும், அதை வலிந்து பற்றிக் கொண்டிருக்காமல், தம்மையே வெறுமையாக்கி மனிதரானார் (பிலி 2: 6-7) மட்டுமல்லாமல், தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றவே வந்தேன் (மாற் 10: 45) என்று சொல்லி, சீடர்களின் காலடிகளைக் கழுவி, அவர்களையும் அவ்வாறு இருக்கச் சொல்கின்றார் (யோவா 13: 14). இதுதான் நாம் இயேசுவிடமிருந்து கற்கவேண்டிய பாடமாக இருக்கின்றது. ஆம், இயேசு இறைப்பணியை கடமைக்காகவோ அல்லது அடிமை மனோபாவத்தோடா செய்யவில்லை. மாறாக அவர் அதை உளமாரச் செய்தார். ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும் நமக்குப் பணிக்கப்பட்ட பணிகளை உளமாரவும் அன்போடும் செய்யவேண்டும். அதன்மூலம் இயேசு விரும்பும் நல்ல சீடர்களாக, பணியாளர்களாக மாறவேண்டும்.

சிந்தனை ‘மனிதராகப் பிறந்தவர்க்கு எவ்வளவோ நற்பேறுகள் – பாக்கியங்கள் – உண்டு. அந்த நற்பேறுகளில் எல்லாம் தலைசிறந்த பேறு பிறருக்குப் பணி – சேவைசெய்வதே’ என்பார்கள் பெரியோர். ஆகையால், நாம் இறைவனுக்கும் அவருடைய மக்களுக்கும் பணிசெய்வதையே மிகப்பெரிய பேறாக நினைத்து வாழ்வோம். மேலும் அதை கடமைக்காகவோ அல்லது அடிமை மனோபாவத்தோடோ செய்யாமல் உளமாரவும் உள்ளார்ந்த அன்போடும் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser

நம்பிக்கையை வாழ்தல்

நீங்கள் என்றைக்காவது உழைத்து ஓய்ந்துபோன, மற்றவர்கள் பயன்படுத்தித் தள்ளிவிட்ட கழுதைபோல (exhausted ass) உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது 'நான் நல்லது செய்கிறேன் ஆனால் நல்லதே எனக்கு நடப்பதில்லை' என்று நீங்கள் புலம்பியதுண்டா? அல்லது 'நான் எழுப்பும் கூக்குரலுக்குக் கடவுள் செவிமடுப்பதில்லை' என்று நீங்கள் சோர்ந்து போவதுண்டா? அல்லது எங்கே செல்கிறதோ வாழ்க்கை என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் நகர்ந்துகொண்டிருக்கிறதா? அல்லது 'இது என்னால் முடியுமா? இதை நான் செய்ய முடியுமா?' என்று தன்ஐயத்தால் (self-doubt) நீங்கள் வருந்தியதுண்டா? அல்லது 'எல்லாரும் என்னைப் பயன்படுத்திக்கொள்கிறார்களே தவிர, என்னுடைய மகிழ்ச்சியை, துன்பத்தைப் பகிர்ந்துகொள்ள யாரும் என்னோடு இல்லை' என்று நீங்கள் புலம்பியது உண்டா?

இந்தக் கேள்விகளுள் எதற்காவது உங்களுடைய பதில் 'ஆம்' என்றால் இன்றைய இறைவாக்கு வழிபாடு உங்களுக்குத்தான். நீங்கள் எழுப்பும் அந்தக் கேள்விக்கான விடையை இன்றைய வாசகங்கள் உங்களுக்குத் தருகின்றன.

எப்படி?
நம்பிக்கைக்கு பல வரையறைகளும் வடிவங்களும் உள்ளன. இன்றைய இறைவாக்கு வழிபாடு நம்பிக்கையின் ஒரு வரையறையும் வடிவத்தையும் நமக்கு விளக்குகிறது: நம்பிக்கை அன்றாடம் வாழ்வாக்கப்பட வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். அப 1:2-3,2:2-4) நாம் காணும் இறைவாக்கினர் அபகூக்கு யூதா நாடு அனுபவித்த மிகப்பெரிய மாற்றத்தின் காலத்தில் வாழ்ந்தார். யோசியா அரசன் நிறைய சமூக, அரசியல் மாற்றங்களைச் செய்தார். சிலைவழிபாட்டுத் தளங்களை ஒழித்தார். அரசவையில் விளங்கிய சிலைவழிபாட்டையும் தடை செய்தார். இப்படியாக கடவுளையும் அவருடைய திருச்சட்டத்தையுமே மையமாக வைத்து ஆட்சி செய்த அவர் திடீரென கிமு 609ல் எகிப்தியருக்கு எதிரான போரில் இறந்து போகின்றார். அதன்பின், எகிப்தியர்கள், பாபிலோனியர்கள் என்ற அந்நியர்கள் யூதாவை ஆட்சி செய்கின்றனர். அந்நியர்களின் கொடுங்கோல் ஆட்சி நம்பிக்கை கொண்ட பல இஸ்ரயேலர்களின் உள்ளத்தில் நிறைய கேள்விகளை எழுப்பியது: 'கடவுள் இருக்கிறாரா? கடவுள் இருந்தால் ஏன் இப்படி எல்லாம் தீமை நடக்கிறது? தீமையின் மேல் நன்மை வெற்றி கொள்வது ஏன்? நன்மையும் அன்பும் உருவான கடவுள் தீமையை எப்படி அனுமதிக்கலாம்?' - இப்படியாக நிறையக் கேள்விகளை மக்கள் கேட்பதோடல்லாமல் இறைவாக்கினர் அபகூக்கும் கேட்கின்றார்.

'இன்னும் எத்துணை காலத்திற்கு?' என்று இறைவாக்கினர் கேட்கும் கேள்வியில் அவருடைய சோர்வும் தளர்ச்சியும் வெளிப்படுகிறது. 'நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்?' என்ற கேள்வியில், 'இன்னும் நான் உயிரோடு இருக்க வேண்டுமா?' என்ற இறைவாக்கினரின் புலம்பல் தெரிகிறது.

வாசகத்தின் இரண்டாம் பகுதியில் ஆண்டவர் அவருக்கு மறுமொழி பகர்கின்றார். இந்த இக்கட்டான வேளையில் இறைவாக்கினரின் பணி என்ன என்பதை முதலில் உணர்த்துகின்றார் ஆண்டவர்: 'எழுதி வை! ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் தெளிவாக எழுதி வை!' கடவுள் சரியான நேரத்தில் குறுக்கிட்டு அனைத்தையும் சரி செய்வார். மக்கள் மடியும்போது கடவுள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதில்லை. மாறாக, கடவுள் ஒரு 'நோக்கமும் இலக்கும் பார்வையும்' வைத்துள்ளார். கடவுளின் திட்டத்திற்கும் நோக்கத்திற்கும் ஏற்ப வரலாறு விரிகிறது. கடவுளே அனைத்து நிகழ்வுகளையும் தன் கைக்குள் வைத்திருக்கிறார் என்பதும், தீமை கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்ற நம்பிக்கைச் செய்தி இங்கே புலப்படுகிறது. இதை நம்பாதவர்கள் 'உள்ளத்தில் நேர்மையற்றவராய் இருப்பர்' எனவும், 'நேர்மையுடையவர் தம் நம்பிக்கையால் வாழ்வடைவர்' என்றும் இறுதியில் வரையறுக்கின்ற ஆண்டவர், 'ஆணவமிக்கோர்' - 'நம்பிக்கையுடையோர்' என்ற இரு குழுவினரில் நம்பிக்கை உடையவர்களே வாழ்வு பெறுவர் என்கின்றார். நேர்மையுடையவரின் நம்பிக்கை என்ன? கடவுள் பார்ப்பதுபோல அனைத்தையும் பார்ப்பது, அல்லது கடவுளின் நோக்கம், இலக்கு, மற்றும் பார்வையை தன்னுடைய நோக்கம், இலக்கு, மற்றும் பார்வையாக ஆக்கியவரே நேர்மையடைவயர். இந்த நம்பிக்கைப் பார்வையை (faith vision) ஒருவர் கொண்டிருத்தலே நம்பிக்கையை வாழ்வாக்குதல்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 திமொ 1:6-8,13-14) தன்னுடைய உடனுழைப்பாளரான திமொத்தேயுவுக்கு பவுல் வழங்கும் அறிவுரையாக இருக்கின்றது. திமொத்தேயு என்ற இளவலின் கண்காணிப்பின்கீழ் எபேசு ஒப்படைக்கப்படுகிறது (காண். 1 திமொ 1:3). அங்கே அவர் பல பிரச்சினைகளைச் சந்திக்கின்றார். பலர் அவருடைய அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆகையால், திமொத்தேயு சோர்வுக்கும் விரக்திக்கும் உள்ளாகின்றார். இதை அறிகின்ற பவுல் அவருக்கு உந்துதல் தரும் பொருட்டு இன்றைய இறைவார்த்தைப் பகுதியை எழுதுகின்றார். இதற்கு முந்தைய பகுதியில் திமொத்தேயு பெற்றிருந்த நம்பிக்கையைப் பாராட்டுகின்றார்: 'வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது.' இந்த இரண்டு பெண்மணிகளின் நம்பிக்கையை மேல்வரிச்சட்டமாகக் காட்டி, திமொத்தேயுவின் திருத்தூது ஆர்வத்தைத் தூண்டு எழுப்புகிறார். திமொத்தேயு மேல் கைகளை வைத்து செபித்து அவரிடம் பணிப்பொறுப்பை வழங்குகின்றார். இப்போது அதே நிகழ்வைச் சுட்டிக்காட்டி, 'கடவுள் நமக்கு கோழையுள்ளத்தை அல்ல. வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்' என்று பெருமிதம் கொள்கின்றார். மேலும், ஆண்டவருக்குச் சான்று பகர்வதைக் குறித்து வெட்கப்பட வேண்டாம் என்று ஊக்கம் தருகின்றார். தன்னுடைய குழுமத்தில் தன்னை மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள் என்றும், தன்னைப் பயமுறுத்துகிறார்கள் என்றும் உணர்கின்ற திமொத்தேயு பயம், தாழ்வு மனப்பான்மை, கோழைத்தனம் (timidity), மற்றும் வெட்கம் கொள்கின்றார். ஆனால், அவர் தன்னுடைய அம்மா, பாட்டி, மற்றும் வழிகாட்டி பவுல் போல வாழ்ந்தால் நம்பிக்கையை வாழ முடியும் என உணர்கின்றார்.

பவுல் தான் அடைந்த துன்பம், அனுபவிக்கின்ற சிறைவாசம், அடைந்த எதிர்ப்புகள் அனைத்தையும் நம்பிக்கை கண் கொண்டு பார்க்கின்றார். இவை எல்லாவற்றிலும் தன் நம்பிக்கையை வாழ்கின்றார் பவுல். இதே போல வாழ திமொத்தேயுவை அழைக்கின்றார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 17:5-10) இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் திருத்தூதர்கள், 'எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்' என்று ஆண்டவரிடம் வேண்டுகிறார்கள். இப்படிக் கேட்பதால் அவர்களிடம் நம்பிக்கை இல்லை என்று பொருள் இல்லை. மாறாக, இயேசுவோடு ஒப்பிட்ட நிலையில் தங்களுடைய நம்பிக்கை குறைவுபடுவதாக ஐயம் கொண்டார்கள். 'கடுகளவு நம்பிக்கை கொண்டு மலையைப் பெயர்த்துவிடலாம்' என்று சொல்கிறார் இயேசு. கடுகு அளவில் மிகவும் சிறியது. மலையோ பெரியது. சிறியதைக் கொண்டு பெரியதைச் செய்துவிடலாம் என்று இயேசு அவர்களிடம் ஏற்கனவே இருக்கும் நம்பிக்கையின் சிறப்பை அடிக்கோடிடுகின்றார். இவ்வாறாக, நம்பிக்கை என்பது ஒருவர் பெற்றிருக்கின்ற பொருள் அல்ல. மாறாக, கொஞ்சம் கொஞ்சமாக ஒருவர் தனக்குள்ள உருவாக்கிக் கொள்கின்ற ஆற்றல் அல்லது திறன் என்கிறார் இயேசு. தொடர்ந்து, இரண்டாவது பகுதியில் அவர்கள் தங்கள் நம்பிக்கையை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று கற்பிக்கின்றார் - நம்பிக்கைக்குரிய மற்றும் பலனை எதிர்பாராத பணிவிடையின் வழியாக. தன்னுடைய சமகால மேட்டிமை சமூகத்தைச் சார்ந்தவர்கள் இல்லத்தில் நடக்கும் நிகழ்வின் பின்னணியில், பணியாளர்கள் அல்லது அடிமைகள் எந்தவொரு நன்றியையும், வெகுமதியையும் எதிர்பாராமல் உழைக்க வேண்டிய சூழலைச் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு. பணியாளர் பகல் முழுவதும் வயல்வெளியிலும், மாலையில் தலைவரின் உணவறையிலும் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. மேலும், இச்செயலைப் பொறுப்புடனும் கண்ணியமுடனும் அவர் நிறைவேற்றுவதற்காக அவருக்கு எந்தவொரு பாரட்டும் நன்றியும் வழங்கப்படவில்லை. 'பயனற்ற பணியாளர்கள்' என்றால் 'பயனை மையப்படுத்தியோ, மற்றவர்களின் பாராட்டை மையப்படுத்தியோ, நன்றியை எதிர்பார்த்தோ பணியாற்றாத பணியாளர்கள்' என்று பொருள்.

எந்தப் பணியாளருக்கு நம்பிக்கைப் பார்வை இருக்கிறதோ அவர் ஒருவரால்தான் இப்படி பயனையோ, பாராட்டையோ, நன்றியையோ எதிர்பாராமல் பணிசெய்ய முடியும். அதாவது, தன்னுடைய வேலை தன்னுடைய கடமை என்று மட்டும் எண்ணுவது. இப்படி எண்ணும்போது ஒருவர் எளிதில் சோர்வடைந்துவிடுவதில்லை. நான் காலையில் திருப்பலியில் மறையுரை நிகழ்த்தும்போது, 'எல்லாரும் என்னைப் பாராட்ட வேண்டும்' என்பது என் இலக்காக இருந்தால், யாரும் பாராட்டாதபோது நான் சோர்ந்துவிட வாய்ப்புண்டு. மாறாக, மறையுரை நிகழ்த்தும் பொறுப்பை, கடமையை நான் நேர்த்தியாகச் செய்வேன் என்று அங்கே என்னுடைய திருப்தி மற்றும் நிறைவை மட்டும் நான் முன்வைத்தால் நான் அப்படிச் சோர்வடைய மாட்டேன்.

ஆக, நம்பிக்கை என்பது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் வாழ்வாக்கப்பட வேண்டும். அபகூக்கைப் பொறுத்தவரையில் நம்பிக்கை என்பது சந்தேகம் மற்றும் எதிர்மறை நிகழ்வுகள் சூழ்ந்த நேரங்களில் கடவுள் செயலாற்றுவார் என்று கடவுளின் அகன்ற பார்வையைப் பெற்றிருப்பது. திமொத்தேயுவைப் பொறுத்தவரையில் நம்பிக்கை என்பது தான் நிராகரிக்கப்பட்டாலும், துன்பப்பட்டாலும் தன்னுடைய திருத்தூது தாகத்தைக் குறைத்துக்கொள்ளாமல் இருப்பது. இயேசுவின் திருத்தூதர்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கை என்பது மிகச் சிறியதாக இருந்தாலும் மிகப் பெரிய செயலை ஆற்றும் வல்லமை கொண்டது. மேலும், அன்றாட வாழ்வில் பணிவிடைச் செயல்களில் வாழப்பட வேண்டியது.

நம்பிக்கைப் பார்வை கொண்டிருப்பது என்பது வீட்டின் ஜன்னலுக்கு முன் நின்று வெளியில் பார்க்கும் குறுகிய பார்வை அன்று, மாறாக, வீட்டு மாடியில் நின்று பார்க்கும் அகன்ற பார்வை போன்றது. அந்தப் பார்வை நம் இலக்கை, நோக்கை, செயல்பாட்டை அதிகரிக்கும். அத்தகைய நம்பிக்கைப் பார்வை நம் வாழ்வின் செயல்களை மேம்படுத்தும்.

நம்பிக்கையை நாம் எப்படி வாழ்வாக்குவது?
1. கேள்வி கேட்கும் உள்ளமா? சரணாகதி ஆகும் உள்ளமா?
நம் வாழ்வின் துன்பமான நேரங்களில் நம்முடைய மூளை அதிகமாக வேலை பார்க்கும். 'இப்படியா?' 'அப்படியா?' 'இப்படி ஆகிவிடுமா?' 'அப்படி ஆகிவிடுமா?' 'இது ஏன்?' 'அது எப்படி?' என நிறைய அங்கலாய்க்கும். இம்மாதிரியான நேரங்களில் நாம் மூளையின் வேலையை அப்படியே நிறுத்த வேண்டும். இக்கேள்விகளுக்கு நாம் விடை தேடினால் குழப்பம் இன்னும் அதிகமாகும். இந்த மாதிரியான நேரங்களில் மூளையின் செயல்பாட்டைக் குறைத்து மனத்தின் செயல்பாட்டைக் கூட்ட வேண்டும். மூளையின் செயல்பாடு கேள்வி கேட்பது என்றால், மனத்தின் செயல்பாடு சரணாகதி ஆவது. நான் உரோமையில் இருந்த பங்கில் என்மேல் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய ரோஸா பாட்டியின் அணுகுமுறையும் இதுதான். 'சிறுவயதில் என் கணவரை இழந்தேன், என்னுடைய பிள்ளைகள் மூவரும் திருமணம் செய்ய மறுத்தனர், என்னுடைய இரண்டாவது மகளுக்கு மூளை வளர்ச்சி குறைந்தது, என்னுடைய மூத்தமகன் உடல்பருமனால் துன்பப்பட்டார், எனக்கு இடைவிடாத மூச்சுப் பிரச்சினை, என் வீடு ஏலத்தில் போய்விட்டது, ஊரில் உள்ள தோட்டம் வீணாய்க் கிடக்கிறது. ஆனால், நான் பார்க்கும் பார்வை ஒரு ஜன்னலுக்கு முன் நின்று பார்ப்பது போல. அவருடைய பார்வையில் இவை எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கும். அவர் பார்த்துக்கொள்வார்' என்று ஒரு முறை பகிர்ந்துகொண்டார். பல நேரங்களில் வெறும் ஜன்னலின் சிறிய ஓட்டைக்குள் பார்த்துவிட்டு, 'இதுதான் நாம்! இதுதான் உலகம்! இவ்வளவுதான் மனிதர்கள்! கடவுளும் இல்லை ஒன்றும் இல்லை!' என்று நாம் சோர்ந்துவிடுகிறோம். இல்லை! 'நேர்மையுடையவர்' - 'அதாவது கடவுளைப் போல பார்ப்பவர்,' 'நம்பிக்கை ஆற்றல்' (faith energy), 'நம்பிக்கை பார்வை' கொண்டிருப்பவர் அவருடைய நம்பிக்கையினால் வாழ்வு அடைவார். ஆக, கேள்விகள் குறைப்பது நம்பிக்கையை வாழ்வதற்கான முதல்படி.

2. கோழையுள்ளமா? வல்லமையா?
'கடவுளிடம் நம்பிக்கை கொண்டால் எல்லாம் நன்றாக நடக்கும்' என்ற புரிதலை திமொத்தேயு கொண்டிருந்ததால், சின்னச் சின்ன பிறழ்வும் அவரைத் தாக்கிவிடுகிறது. ஆகையால் எளிதில் மனம்தளர்ந்துவிடுகிறார். கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருப்பதால் எல்லாம் நன்றாக இருக்கும் எந்த ஆட்டோமேடிக் தத்துவமும் உலகில் இல்லை. ஒன்றும் நன்றாக நடக்கவில்லை என்றாலும் கடவுள் நம்பிக்கை இருந்தால் நாம் வல்லமை பெறுவோம் என்பதே சரியான பார்வை. ஆக, கடவுளின் உடனிருப்பு துன்பத்தை இல்லாமல் செய்துவிடும் என்று நினைக்கக் கூடாது. மாறாக, கடவுளின் உடனிருப்பால் நான் துன்பத்தை ஏற்க முடியும் என்று நினைக்க வேண்டும். பவுல் திமொத்தேயுவின் வாழ்வில் நடந்த அருள்பொழிவு நிகழ்வை இங்கே சுட்டிக்காட்டுகிறார்: 'உன் மீது என் கைகளை வைத்து திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையைத் தூண்டி எழுப்புமாறு ...' நான் என்னுடைய தனிமை, விரக்தி, சோர்வு, பயம் போன்ற நேரங்களில் என்னுடைய அருள்பொழிவு நாளையே நினைவுகூர்வதுண்டு. அன்று என்னில் விதைக்கப்பட்ட வல்லமை என்ன ஆயிற்று? நான் ஏன் கோழையுள்ளம் கொள்கிறேன்? நான் ஏன் பயப்படுகிறேன்? நான் ஏன் பின்வாங்குகிறேன்? நம் ஒவ்வொருவருக்கும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இருக்கும் - அருள்பொழிவு, திருமண நாள், உறுதிப்பூசுதல் நாள், வேலை கிடைத்த நாள் - இப்படி ஏதாவது ஒரு நேர்முகமான நிகழ்வுகளில் நம் மனத்தை நங்கூரமிட்டுக்கொள்ளுதல் (anchoring) நம்பிக்கையை வாழ்வதற்கான இரண்டாம் படி.

3. செயல்களின் பயனை எதிர்பாராமல் வாழ்வது
இன்று சின்னச் சின்னச் செயல்கள் செய்தாலும் அதில் நம் பெயர் வர வேண்டும் என நினைக்கிறோம். பிறரின் பாராட்டுக்கள், ஏற்றுக்கொள்ளுதல், விமர்சனங்கள் நம் செயல்களை நிறையவே பாதிக்கின்றன. ஆனால், நம்பிக்கைப் பார்வை கொண்டவர்கள் தங்களுடைய செயல்களோடும் அவற்றின் கனிகளோடும் ஒருபோதும் தங்களை ஒன்றிணைத்துக் கொள்ளவே மாட்டார்கள். நான் என்பது என் செயல்களையும் தாண்டிய ஒன்று. எடுத்துக்காட்டாக, இன்று எனக்கு ஒரு விபத்து நடந்து என் கைகால்கள் முடமாகிப் போய், என்னால் ஒரு செயலும் செய்ய முடியவில்லை என்றால், 'நான் பயனற்றவன்' என்று ஆகிவிடுவேனா? ஆக, பயன்பாட்டையும் தாண்டிய ஒரு பண்பு மனிதனுக்கு உண்டு. நான் ஆற்றும் செயல்களோடு என்னைக் கட்டிக்கொள்ளாமல் என்னைச் செயல்படுவதற்கு அழைத்த என் தலைவனின் பார்வை கொண்டு நான் அனைத்தையும் பார்த்தால் என் மகிழ்ச்சியை நான் இழந்துவிட மாட்டேன். இதையே, 'விடாமுயற்சியோடும் முணுமுணுக்காமலும் பணி செய்யுங்கள்' என்று கற்பிக்கின்றார் பவுல்.

இறுதியாக, நம்பிக்கையை வாழ்வாக்குவது என்பது பறவை கூடு கட்டுவது போன்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு குச்சி என்று சேர்த்துக்கொண்டே இருப்பது போன்றது. அன்றைய வேலை அன்றைக்கு நிதானமாக நேர்த்தியாகச் செய்வது. சிறு குச்சிகள் அழகான கூடாக மாறும் என்ற பார்வையை மங்காமல் பார்த்துக்கொள்வது.
இப்படிப்பட்ட நம்பிக்கையாளரே, இன்றைய திருப்பாடல் ஆசிரியர் போல, 'அவரே நம் கடவுள். நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்' (காண். திபா 95:7) என்று சொல்ல முடியும்.

ser

sunday homily


முகப்பு பக்கம்
வத்திக்கான் வானொலி
கத்தோலிக்க இதழ்கள்
ஞாயிறு வாசகம்
விருந்தினர் பக்கம்
உம் வாக்கே விளக்கு!
சென்னை பங்குதலங்கள்
நூலகம்
திருத்தலச் சுற்றுலா
தவக்கால சிந்தனைகள்
ஒலியும் ஒளியும்
அன்னை தெரேசா
கிறிஸ்மஸ் மலர்கள்
பொங்கல்
செபமாலை
பாடல்கள்
செபமே ஜெயம்A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com