மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் இருபத்திரண்டாம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
I சீராக்கின் ஞானம் 3:1718,20,28-29 II எபிரேயர் 12: 18-19, 22-24 III லூக்கா 14: 1-7, 14

தாழ்ச்சி

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஜெர்மனி சென்றபோது ஒரு 'சிறுவனின் புதுநன்மை விழாவிலும், அவனது தாத்தாவின் 50-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவிலும் பங்கெடுக்க வாய்ப்புக் கிடைத்தது. ஏராளமான விருந்தினர்கள் இந்த விருந்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். எல்லா (International food) நாட்டின் உணவையும் உள்ளடக்கிய சுவையான விருந்து தயாரிக்கப் பட்டிருந்தது. சுவையான பல நாட்டு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நல்லதொரு நன்றி அறிதல் திருப்பலிக்குப்பின் விருந்து நடைபெற்றது.

ஆனால் எல்லாப் பிறந்த நாட்கள் கொண்டாட்டங்களைவிட இது வித்தியாசமான ஒன்று. அழைப்பிதழில் நன்கொடைகள், அன்பளிப்புகள் தவிர்க்கப்பட வேண்டும், வாங்கப்படாது என்று தெளிவாகப் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் ஏழை நாடாகிய ஆப்பிரிக்கா, இந்தியாவில் உள்ள அனாதை இல்லங்களுக்கு நன்கொடை கொடுத்தால் அது ஆயர்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் வருகை தந்த அனைவரும் தாராள உள்ளத்துடன் தந்த அன்பளிப்புக்கள் 25 லட்சம் கிடைத்தது. அதை இந்திய நாட்டிற்கு அனுப்புவதாக அறிவித்தார்கள். இந்த விருந்தானது நம் ஆண்டவர் படம் பிடித்துக் காட்டும் விருந்துக்கு மிகப் பொருத்தம் ஆகும். நீ விருந்துக்கு அழைக்கப்படும்போது முதல் இடம் தேடாதே. ஏனெனில் அழைப்பவன் தான் யாருக்கு எந்த இடம் என குறிப்பிட உரிமை உண்டு. அது நீ அல்ல. இரண்டாவது நீ விருந்து கொடுக்கும்போது ஏழைகள், அனாதைகள், ஊனமுற்றோர் இவர்களை அழைத்து உதவி செய். இவர்கள் உடன் திருப்பித் தரமுடியாதவர்கள், ஆனால் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என்று தெளிவாக்கப்படுகிறது.

ஆண்டவர் இரண்டு கருத்துகளை இன்று முன் நிறுத்த விரும்புகின்றார்.

* நாம் நம்மையே தாழ்த்திக்கொள்ளவில்லை என்றால் பிறரால் தாழ்த்தப்படுவோம் என்ற எச்சரிக்கையைத் தருகிறார்.

தாழ்ச்சி உள்ளவர்கள் மற்றவர் மீது குறிப்பாக ஏழைகள் மீது அக்கறை காட்ட முடியும். வாழ்விலும் ஆன்மீகத்திலும் முதிர்ச்சி அடைந்தவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ள விரும்புவதில்லை. அறிவியல் கண்டுபிடிப்புக்களை மேற்கொண்ட நியூட்டன் தன் வாழ்வின் இறுதியில் நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன். இங்கே ஒரு கூழாங்கல், அங்கு ஒரு சங்கு என சிலவற்றைக் கண்டுபிடித்திருக்கிறேன் என்று தன்னைப் பற்றித் தாழ்ச்சியாக கூறியுள்ளார்.

அன்னை தெரெசாவும் தன் அன்பு மற்றும் அறப்பணிகளைப் பற்றிப் பேசும்போது, நாங்கள் செய்யும் எல்லாப் பணிகளையும் இவ்வுலகில் நடைபெறும் பணிகளோடு ஒப்பிடும்போது அவை கடலின் ஒரு துளிக்குச் சமம் என்றார்கள்.

தாழ்ச்சி உள்ளவர்கள் பெறக்கூடிய நன்மைகள் பற்றியும் இன்றைய வாசகங்கள் எடுத்துரைக்கின்றன.

தாழ்ச்சியோடு செயல்படுபவர்கள் கடவுளால் உயர்த்தப் படுவார்கள். எனவே யாக்கோபு தன் திருமடலில் ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள். அவர் உங்களை உயர்த்துவார் (யாக். 4:10) என்கிறார்.

நீதிமொழிகள் இறுமாப்பு ஒருவரை தாழ்த்தும். தாழ்ச்சி ஒருவரை உயர்த்தும் (நீதிமொழி 29:23) என்கின்றன. அன்னை தெரெசா இதற்குச் சான்று.

தாழ்ச்சி உள்ளவர்களுக்குக் கடவுளின் மறைபொருள் வெளிப்படுத்தப்படுகிறது. எளியோருக்குத்தான் நற்செய்தி என்கிறார் இயேசு. ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் மறைத்து குழந்தைகளுக்கு, அதாவது குழந்தை உள்ளம் கொண்ட வர்களுக்கு விண்ணரசின் மறைபொருளை - கடவுள் வெளிப்படுத்துகிறார் (லூக். 10:21) எளியோருக்குத் தான் ஆண்டவர் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார் (சீராக் 3:19).

தாழ்ச்சி உள்ளவர்கள் ஆண்டவரை மாட்சிமைப்படுத்தும் பேறு பெற்றவர்கள். சீராக் நூலில் கூறப்படுவதுபோல், தாழ்ந்தோரால் அவர் மாட்சிமை பெறுகிறார் (சீராக் 3:20).

இதற்கு உதாரணமாகத் திகழ்பவர் நம் ஆண்டவர் இயேசு - (யோவா. 17:4). நம் தாய் மரியா.

தாழ்ச்சி உள்ளவர்கள் வாழ்வில் வீழ்வதில்லை. மாறாக ஆணவம் உள்ளவர்கள்தான் வீழ்த்தப்படுவார்கள். உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை சிதறடித்து வருகிறார். வலியோரை . அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார் (லூக். 153) தாழ்ச்சி உள்ளவர்கள். விட்டுக் கொடுக்கும் மனம் உடையவர்கள். தாழ்ச்சி என்றால் வளைந்து கொடுப்பதாகும்.

மார்ட்டின் லூத்தர் கூறுகிறார், ஒரு ஆற்றின் குறுகியப் பாலத்தின் நடுவே இரண்டு மலைகள். ஆடுகள் எதிர் எதிராக நடந்து வந்தன. விலகிச் செல்வதற்கு வழியில்லை . மோதிக்கொண்டால் ஆற்றில் விழ வேண்டும். பின்னோக்கிச் செல்லவும் முடியாது. இந்த நிலையில் ஒரு ஆடு படுத்துக் கொள்ள மற்ற ஆடுகள் அதன்மீது கடந்து சென்றன. தாழ்ச்சி இருந்தால் வாழ்க்கைப் பாலத்தை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் கடப்போம் - என்பது உறுதி.

ஒருமுறை வின்சென்ட் தே பவுல் அவரது அலுவலகத்தில் அமர்ந்து இருந்தார். பெண்ணொருத்தி அவரை அணுகி, என் மகனுக்கு வேலை வேண்டும் என்று கேட்டார். ஆகட்டும், பார்க்கலாம் என்றார். அந்தப் பெண்ணுக்கு வந்தது கோபம். உடனே வேலை கொடுக்காமல் ஆகட்டும் பார்க்கலாம் என்று, சொல்வதா எனச் சொல்லி மேசை மீதிருந்த பேப்பர் வெயிட்டைத் தூக்கிப் புனிதர் மீது எறிந்தாள். தலையில் காயம், குருதி கொட்டியது. குருதியைத் துடைத்துக் கொண்டே தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்து, இந்தப் பெண் இவளது மகனை எவ்வளவு அன்பு செய்கிறாள் பாருங்கள் என்றார். இன்று இந்தப் புனிதர் வணக்கம் பெறுகிறார்.

அருகம்புல் தரையிலே படர்ந்து வளரும் தாவரம். தண்ணீர் உள்ள இடத்தில் தலைதூக்கி நிற்கும். வெயிலிலும், மழையிலும் அழிவுறாத ஒன்று. எல்லாக் காலங்களிலும் கால்நடைகளுக்கு உணவாகிறது. மனிதருக்கு மருந்தாகிறது. ஆம் தாழ்ச்சியுள்ள வர்கள் அருகம்புல் போன்றவர்கள். தாழ்நிலை பொருளாதாரம் கொண்டவராக இருக்கலாம். ஆனால் இறைவனைப் பற்றிக் கொள்பவர்கள் சார்ந்து இருப்பவர்கள். தன் ஒவ்வொரு செயலையும் இறைவனில் ஊன்றிச் செய்பவர்., எப்பொழுதும் ஒரே நிலைப்பாடு கொண்டவர், எல்லாருக்கும் பணிந்திருப்பவர், பணி செய்பவர், நம்பிக்கைக்குரிய மருந்தாக உள்ளவர். இதைத்தான் சீராக் நூல் போற்றுகிறது.

ஆனால் அகந்தை" உள்ளவர்கள் திருத்தம் பெற " இயலாதவர்கள். தன்' எண்ணம், தன் மேம்பாடு, தன் செயல்களே மேலானவை என்று தம்மையே கடவுளாக்கிக் கொள்பவர்கள். இவர்களது வாழ்வு அழிவு சக்திகளாகத்தான் மாறும். சமூக அமைப்பில் வேறுபாட்டைப் புகுத்தி சமூகம் துண்டாக்கப்படும். பழைய ஏற்பாட்டிலே குருக்கள், பரிசேயர், - சதுசேயர், மூப்பர்கள் தங்களை மேலானவர்களாகக் கருதி பிறரை ஏற்காத அகந்தை நிலையில் வாழ்ந்தார்கள். இவர்களைத்தான் இயேசு கடினவார்த்தை கொண்டு சாடினார், (லூக். 18:9-14) ஆயக்காரன். - பரிசேயன் உவமை.

இயேசு முதல் இடம் பிடித்து விருந்துண்ண வந்தவர்களுக்குக் கூறுவதாவது, உங்களுள் முதல்வராக இருக்க விரும்புகிறவர் பணியாளராக இருக்கட்டும் (மத். 20:27). குழந்தைகளாக - மாறாவிடில் விண்ணரசில் சேரமாட்டீர்கள் (மத். 18:3) என்றும் கூறுகிறார்.

இரண்டாவது விருந்து படைக்கிறவர்களுக்கு ஓர் அறிவுரை கூறுகிறார். உறவினர்களோடும், அடுத்திருப்போரிடமும், செல்வந்தர்களோடும் பகிர்ந்து கொள்வதைவிட தாழ்நிலை நிற்பவர்களோடு பகிர்தல் மேலானது என்றும் கூறுகின்றார். தாழ்ச்சி என்பது தன்னைத் தாழ்த்திக் கொள்வது, செயல்பாடாக மாறும்போது தன்னை ஏழைகளோடு ஒருவராக மாற்றிக் கொள்வது. கைமாறு எதிர்பாராமல் பணி செய்வது. இது கடினமான பண்பு. இதை சிறிது சிறிதாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நான் கனிவும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள் (மத். 11:29) என்கிறார் இயேசு. தன்னையேவெறுமையாக்கி அடிமையின் தன்மை பூண்ட இயேசுவின் தாழ்ச்சியைவிட நாம் பின்பற்ற வேறு எதுவும் இல்லை. இதைப் பின்பற்றியவள்தான் நம் தாய் மரியா. இதோ உமது அடிமை. உம் 'வார்த்தையின்படி நடக்கட்டும் என்றாள் (லூக். 1:38),

இரு தத்துவங்கள்:
1.தண்ணீரில் நீந்துபவன் கையைக் கீழே அமுக்கினால்தான் மேல்நோக்கி வரமுடியும்.
2.ஆகாயத்திலே பறக்கிற பறவையானது தன் இறக்கைகள் இரண்டையும் கீழே அமுக்குவதால்தான் மேல் நோக்கிப் பறக்க முடியும்.

ser

எதையும் எதிர்பாராமல் தர்மம் செய்வோம் !


ஓ மனிதா!
ஆடிவரும் தென்றலும்
பாடிவரும் பறவையும்
ஓடிவரும் அருவியும்
உலகத்திடமிருந்து எதையுமே எதிர்பார்ப்பதில்லை!
நீ இயற்கையின் சிகரமல்லவா?
வெளியே வா! உன் சுயநலச் சிறையை விட்டு
வெளியே வா!
உடைத்தெறி - உடைத்து எரி
கைம்மாறு கருதி தர்மம் செய்யும் உன் மனத்தை
உடைத்தெறி -உடைத்து எரி
அப்போது உனக்கு வானம் கூட வசப்படும்.
இதுதான் இன்றைய நற்செய்தி தரும் அருள்வாக்கு!

இன்றைய நற்செய்தியிலே நாம் யாருக்கு உலகத்திலே விருந்து வைக்க வேண்டும்? யாரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்? என்பதை இயேசு தெளிவாக்குகின்றார். நாம் பேறுபெற்றவர்களாய். அதாவது ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக, உயிர்த்தெழும்போது அவரிடமிருந்து கைம்மாறு பெறுகின்றவர்களாக வாழ, நாம் இவ்வுலகில் என்ன செய்ய வேண்டும்? என்பதை நமக்கு நம் ஆண்டவர் சுட்டிக்காட்டுகின்றார்!

இன்று இயேசு நம்மைப் பார்த்து, நீங்கள் செய்த உதவிக்குக் கைம்மாறாக யார் திரும்ப உதவி செய்ய முடியாதோ அவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்கின்றார். செல்வரும் இலாசரும் உவமையில் ஆபிரகாம் செல்வரைப் பார்த்து, மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய் ; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக் கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகின்றார் ; நீயோ மிகுந்த வேதனைப்படுகின்றாய் (லூக் 16:25) என்று கூறுவதைப் பார்க்கின்றோம்.

நாம் விண்ணகத்தை அடையவோ, விண்லாக எருசலேமை அடையவோ, பல்லாயிரக்கணக்கான வானதூதர் நடுவில் வாழவோ, நேர்மையாளர்களின் கூட்டத்தில் சேரவோ, புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையில் நிற்கவோ (எபி 12:22-24) விரும்பினால், கைம்மாறு கருதாது பிறருக்கு உதவி செய்ய முன்வரவேண்டும். கைம்மாறு கருதாது, அதாவது எதையும் எதிர்பார்க்காது, நயாகரா நீர்வீழ்ச்சியைப் போல் நம்மால் வாழ முடியுமா?

நமக்கு முன்னே வாழ்ந்தவர் கோடி உண்டு! இதோ விவிலியத்திலிருந்து இரு உதாரணங்கள்!

அரசர்கள் இரண்டாம் நூலில் ஐந்தாம் இயலில் நாமான் நலம் பெற்றதைப்பற்றி நாம் படிக்கும் போது, செய்த புதுமைக்குக் கைம்மாறாக எதையுமே ஏற்றுக்கொள்ள விரும்பாத எலிசா இறைவாக்கினரைச் சந்திக்கின்றோம்!

சிரியா மன்னனின் படைத்தலைவனான நாமான், எலிசா கூறியபடியே ஏழுமுறை யோர்தான் நதியில் மூழ்கி நலமடைகின்றார். நலமடைந்தவுடன் அவர் எலிசாவிடம் வந்து, இதோ, உம் அடியான்; என் அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளும் (2 அர 5:15) என்றார். அதற்கு எலிசா, நான் பணியும் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன் என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை (2 அர 5:16).

எலிசாவின் பணியாளன் கேசகி, எலிசாவிற்குத் தெரியாமல் நாமானிடமிருந்து அன்பளிப்புப் பெற்றபோது அவனைத் தொழுநோய் பிடித்துக்கொண்ட நிகழ்ச்சியை அரசர்கள் இரண்டாம் நூலில் ஐந்தாவது இயலில் நாம் படிக்கின்றோம் (2 அர 5:20-27).

கைம்மாறு கருதாது பிறருக்கு உதவி செய்த எலிசாவைக் கடவுள் மாபெரும் இறைவாக்கினராக, மக்களால் வானளாவப் புகழப்படும் தீர்க்கதரிசியாக உயர்த்தினார். எலிசா நோயினால் பாதிக்கப்பட்டு, சாகக்கிடந்தபொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாசு எலிசாவைப் பார்த்து, "என் தந்தாய், என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே " என்று சொல்லி ! கதறி அழுதான். எலிசா இறந்த பிறகு அவரது எலும்புகள்கூட புதுமை செய்தன (2 அர 13:21ஆ) என்று அறிகின்றோம்.

புதிய ஏற்பாட்டிலே எதையுமே மக்களிடமிருந்து எதிர்பார்க்காது தன்னிடம் உள்ளதைப் பிறரோடு பகிர்ந்துகொண்ட கன்னி மரியாவைச் சந்திக்கின்றோம். மங்கள வார்த்தைத் திருநாளன்று தன் வாழ்வை உலகுக்குக் கொடுத்தார் (லூக் 1:26-38). கானாவூர் திருமணத்தின் போது தம் மகன் வழியாக திராட்சை இரசத்தை திருமண வீட்டாருக்குக் கொடுத்தார் (யோவா 2:1-11). கல்வாரியில் பாவிகள் மீட்புப்பெற தம் மகனையே கொடுத்தார் (யோவா 19:25-27).

வாழ்க்கையில் ஒருமுறைகூட அன்னை மரியா தனக்கென்று எதையும் பிறரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை! இப்படிப்பட்ட வாழ்வுக்குப் பரிசாக மரியாவிற்கு எத்தகைய பரிசுகளைக் கடவுள் தந்திருக்கின்றார் என்பதை ஊரறியும், உலகறியும். இன்று அன்னையின் பெயர் சொன்னால் எங்கும் அருள் மணக்கும், எட்டுத்திக்கும் புகழ் மணக்கும்; விண்ணகமும், மண்ணகமும் அருள்நிறை மரியே வாழ்க! என வாழ்த்தும்.

எதையும் எதிர்பார்க்காது பிறருக்கு உதவி செய்கின்றவர்களுக்கு * மட்டுமே மறு உலகம் கிடைக்கும்; இரண்டாம் வாசகம் சுட்டிக்காட்டும் விண்ணகத்தில் நமக்கு இடம் கிடைக்கும்.

இம்மை போதும், மறுமையை யார் பார்த்தது? என்ற வெளிப்புலன்களுக்கு உட்பட்ட எண்ண அலைகளுக்குள் நாம் சிக்குண்டு வாழ்ந்தால், அந்த சிக்கலிலிருந்து விடுபட இன்றே நாம் தர்மம் செய்யப்புறப்படுவோம். தண்ணீர் நெருப்பை அணைப்பது போல, நம் உள்ளத்தில் பற்றி எரியும் சுயநலத்தை, பாவத்தை தர்மம் அணைக்கும் (சீஞா 3:30).

மேலும் அறிவோம்:

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்(டு)
என்னாற்றும் கொல்லோ உலகு (குறள் : 211).
பொருள் : காலம் அறிந்து, உலக மக்கள் வாழ்வதற்காக வான்மழை பொழிகிறது. அதற்கு இவ்வுலகம் எத்தகைய மாற்று உதவியும் செய்வதில்லை. மழை பொழியும் மேகத்தைப் போன்றவர் உலக நலம் கருதும் ஒப்புரவாளர் ஆவர். அவர்கள் எதிருதவி எதையும் எதிர்பாராது உதவுகின்றனர்.

ஒரு கணவர் ஓர் அறிஞரிடம் சென்று. "என் மனைவி நான் கிழிச்ச கோட்டைத் தாண்டக்கூடாது. அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டதற்கு அறிஞர் கூறியது: "முதலில் கோட்டை எங்கே கிழிப்பது என்பதை உங்கள் மனைவியைக் கேட்டுக் கிழியுங்கள்."

இன்றைய உலகை அச்சுறுத்துவது ஆணவம் என்ற அரக்கன்; கலக்கப் போவது யார்? நீயா? நானா? என்ற அகம்பாவம், யார் பெரியவர்?: கணவரா ? மனைவியா?; மாமியா? மருமகளா?; ஆளுங்கட்சியா? எதிர்க்கட்சியா?: அருள்பணியாளர்களா? பொது நிலையினரா? இப்பின்னணியில் இன்றைய அருள்வாக்கு வழிபாடு தாழ்ச்சியின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. ஆணவத்தால் வீழ்ச்சியுற்ற உலகைத் தமது தாழ்ச்சியால் உயர்த்திய இயேசு கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் கூறுகிறார்: “தம்மை உயர்த்துபவர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்" (லூக் 14:11), கிறிஸ்துவே தாழ்ச்சிக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு. கிறிஸ்து தம்மையே வெறுமையாக்கி, சாவை. அதுவும் சிலுவைச் சாவை ஏற்றுக் கொள்ளும் அளவுக்குத் தம்மைத் தாழ்த்தினார்; எனவே கடவுள் அவரை எல்லார்க்கும் மேலாக உயர்த்தினார் (பிலி 2: 6 - 11). அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது: "நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன் என்று என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்" (மத் 11: 29).

தாழ்ச்சி என்பது ஒருவருடைய மனநிலையைப் பொறுத்தது. தாழ்ச்சியுடையவர் எப்போதும் கடவுளுக்குப் பணிந்திருப்பார்; ஏழை எளியவர்களுடன் தோழமை கொள்வார். கிறிஸ்து தமது விருப்பத்தை நிறைவேற்றாமல் தமது தந்தையின் விருப்பத்தையே நிறைவேற்றினார். அவர் மேட்டுக்குடி மக்களோடு பழகாமல் ஏழை எளியவர்களுடன் பழகினார். விவிலியத்தில் 'அனாவிம்' என்ற வர்க்கத்தினர் இருந்தனர், அவர்களிடம் செல்வமோ செல்வாக்கோ இல்லை; அவர்கள் செல்வந்தர்களால் ஒடுக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் முழுக்க முழுக்கக் கடவுளையே சார்ந்திருந்தனர். இவர்கள் "கடவுளின் ஏழைகள்" என்று அழைக்கப்பட்டனர். இவர்களைப்பற்றி இன்றைய பதிலுரைப்பாடல் பின்வருமாறு கூறுகிறது: "கடவுளே நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர்" (திபா 68; 10),

எல்லார்க்கும் நன்றும் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து (குறள் 125)

தாழ்ச்சி என்பது தாழ்வு மனப்பான்மை அல்ல. ஓர் அக்கா தன் தங்கையிடம் கூறியது: "நீ என் தங்கச்சி; நாமிருவரும் ஒரு கட்சி; நம்மால் ஒன்றும் செய்ய முடியாது; ஏனெனில் நாமிருவரும் பொட்டச்சி." இவ்வாறு சொல்வது பெண் குலத்தையே இழிவுபடுத்துவதாகும். மரியன்னையிடம் தாழ்ச்சி இருந்தது. எனவேதான் அவர் கூறினார்: "அவர் (கடவுள்) தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார் " (லூக் 1:48), ஆனால் மரியன்னையிடம் தாழ்வு மனப்பான்மை இல்லை. எனவேதான் அவர் தன்னைப் பற்றி இறைவாக்குரைத்தார்: "இது முதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்" (லூக் 1: 49).

தாழ்ச்சி என்பது உண்மை நிலை. உண்மை நிலை என்ன? " நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளோ விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை; நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை; விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை" (1 கொரி 3:6-7). நாம் அடையும் வெற்றியைப்பற்றி இறுமாப்புக் கொள்ளாமல், அவ்வெற்றியை நமக்குக் கொடுத்த இறைவனுக்கு மகிமை அளிப்பதே உண்மையான தாழ்ச்சியாகும். அக நிலையில் தாழ்ச்சியுள்ளவர்களாக இருந்தால், புறநிலையில் ஏழை எளியவர்களுடன் பழகுவோம். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறும் அறிவுரை: "விருந்துக்குப் பணக்கார உறவினர்களையும் நண்பர்களையும் அழைக்காமல், ஏழை எளியவர்களை யும் அழையுங்கள். அப்போது மறுமையில் கைம்மாறு கிடைக்கும்" (லூக் 14:12-14). ஒரு பணக்காரர் தனது திருமண வெள்ளிவிழாவை ஓர் அனாதை இல்லத்தில் கொண்டாடி, அனாதை சிறுவர், சிறுமிகளுக்கு விருந்தளித்தார், நாமும் அவ்வாறு செய்யலாமே! அதற்கு மனமாற்றம் தேவை, இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது: "நாம் இருப்பது சீனாய் மலை அல்ல; மாறாக, சீயோன் மலை," முன்னது அடிமை வாழ்வையும், பின்னது உரிமை வாழ்வையும் குறிக்கின்றன. நாம் ஆணவம் என்னும் அடிமைத்தளையை உதறித் தள்ளிவிட்டு, பணிவு என்னும் உரிமை வாழ்வைக் கடைப்பிடிப்போம்.

"ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார்" (2 கொரி 5: 17).

விண்ணகம் எங்கே?

நிகழ்வு
மலையடிவாரத்தில் இருந்த பங்குக்கோயில் அது. அதில் ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின்போது அங்கிருந்த பங்குத்தந்தை ‘விண்ணகம்’ குறித்து மறையுரை ஆற்றினார். திருப்பலி முடிந்ததும் பங்குத்தந்தையைச் சந்திக்க பணக்காரப் பெண்மணி ஒருவர் வந்தார். அவர் பங்குத்தந்தையிடம், “தந்தையே! விண்ணகம் குறித்து மிக அருமையதொரு மறையுரை ஆற்றினீர்கள். வாழ்த்துகள். எல்லாவற்றையும் மிகத் தெளிவாக விளக்கின நீங்கள், விண்ணகம் எங்கே இருக்கின்றது என்பதை மட்டும் சொல்லாமல் விட்டுவிட்டீர்கள். இப்பொழுதாவது விண்ணகம் எங்கே இருக்கின்றது என்று சொல்லுங்கள்?” என்றார்.

அந்தப் பணக்காரரப் பெண்மணியை பங்குத்தந்தை நன்கு அறிவார். அதனால் அவர் அந்தப் பெண்மணியிடம், “அம்மா! நீங்கள் குடியிருக்கின்ற அதே தெருவின், கடைகோடியில் ஒரு குடிசை இருக்கின்றது... அங்கு ஓர் ஏழை மூதாட்டி இருக்கின்றார். அவர் உடம்புக்கு முடியாமல் படுக்கையில் கிடக்கின்றார். இரண்டு நாட்களுக்கு முன்னம்தான் நான் அந்த மூதாட்டியைப் பார்த்துவிட்டு வந்தேன். நீங்களும் அந்த மூதாட்டியைப் போய்ப் பார்த்தீர்கள் என்றால், விண்ணகம் எங்கிருக்கின்றது என்று தெரிந்துகொள்வீர்கள்” என்றார்.

பங்குத்தந்தையிடமிருந்து விடைபெற்ற அந்தப் பணக்காரப் பெண்மணி தான் குடியிருந்த தெருவின் கடைக்கோடியில் இருந்த குடிசைவீட்டிற்குள் நுழைந்தார். வீட்டினுள் மூதாட்டியைத் தவிர வேறு யாருமே இல்லை. மூதாட்டி படுக்கையில் சாய்ந்து படுத்துக்கிடந்தார். அவரருகில் சென்ற பணக்காரப் பெண்மணி அவரைத் தொட்டுப் பார்த்தார். காய்ச்சால் கொஞ்சம் அதிகமாகவே அவர்க்கு இருந்தது. உடனே அவர் தன்னுடைய குடும்ப மருத்துவரைத் தொடர்புகொண்டு, அங்கு வரவழைத்து அவர்க்குக் சிகிச்சை அளித்தார். இதனால் காய்ச்சல் அன்று மாலையே அவரைவிட்டு நீங்கிற்று. அதன்பிறகு அவர் ‘இந்த சமயத்தில் மூதாட்டி இப்படித் தனியாக இருப்பது நல்லதல்ல’ என்பதை உணர்ந்து, அவரைத் தன்னுடைய வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அங்கு ஓர் அறையில் தங்க வைத்து, அவர்க்குப் பிடித்தமான உணவுவகைகளைச் செய்துகொடுத்து, அவர் முழுமையாகக் குணமாகும்வரை அவரைத் தன் தாயைப்போன்று பார்த்துக்கொண்டார்.

மூதாட்டியால் எல்லாவற்றையும் தாமாகவே செய்துகொள்ள முடியும் என்ற நிலை வந்ததும், பணக்காரப் பெண்மணி, அவரை அவருடைய வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு, பங்குத்தந்தையைப் பார்க்கச் சென்றார். பங்குத்தந்தையைப் பார்த்ததும் அவரிடம் மிகவும் மகிழ்ச்சியோடு, “தந்தையே! நீங்கள் சொன்னதுபோன்று செய்தேன்... விண்ணகம் எங்கிருக்கின்றது என்று கண்டுகொண்டேன். மிக்க நன்றி” என்று சொல்லிவிட்டு அவர் பங்குத்தந்தையிடமிருந்து விடைபெற்றார்.

நம்மோடு இருக்கக்கூடிய வறியவர்கள், ஏழைகள், கைவிடப்பட்டோர் ஆகியோர்க்கு நாம் அளிக்கின்ற விருந்துதான் உண்மையான விருந்து, அத்தகைய விருந்தினை அளிக்கின்றவர்கள் விண்ணகத்தை கண்டுகொள்வார்கள், அதை அடையவும் செய்வார்கள் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலம் இருபத்து இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று. நாம் வாசிக்கக்கேட்க நற்செய்தி வாசகம் உண்மையான விருந்து எது என்ற கேள்விக்கு விடையாக இருக்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

பெருமைக்காகக் கொடுப்பது நல்ல விருந்தாக இருக்காது நற்செய்தியில், ஓய்வுநாள் அன்று பரிசேயர்த் தலைவர் ஒருவர் இயேசுவை விருந்துக்கு அழைக்கின்றார். அவருடைய அழைப்பினை ஏற்று அவருடைய வீட்டிற்குச் செல்லும் இயேசு, அங்கு நடக்கின்ற குளறுபடிகளைப் பார்த்துவிட்டு, ஒருவர் கொடுக்கின்ற விருந்து எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு விளக்கம் தருகின்றார். விருந்து தொடர்பாக இயேசு தருகின்ற விளக்கத்திலிருந்து, ஒருவர் அளிக்கின்ற விருந்து எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்பதைச் சிந்தித்துப் பார்த்துவிட்டு, விருந்து எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

இன்றைய காலக்கட்டத்தில், பலர் விருந்தளிக்கின்றபோது, ‘சமூகத்தில் தாங்கள் எவ்வளவு பெரிய ஆள்’ என்பதை நிரூபிப்பதற்காக விருந்துகொடுப்பதைக் காணமுடிகின்றது. ‘விருந்துக்கு மட்டும் இவ்வளவு இலட்சங்கள்/ கோடிகள் செலவாயின’, ‘இன்னாரெல்லாம் விருந்துக்கு வந்திருந்தார்கள்’ என்பதுபோன்ற உரையாடல்கள், பேச்சுகள் மனிதர்கள் விருந்தை வெறும் விருந்தாக மட்டும் நினைக்காமல், சமூகத்தில் தங்களுடைய கெளரவத்தை/அந்தஸ்தை நிரூபிப்பதற்கான ஒரு கருவியாகப் நினைப்பது உண்மையாகின்றது. நற்செய்தியில் இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயரும்கூட, ‘இயேசுவை விருந்துக்கு அழைத்தால் தன்னுடைய பெயர் ஓங்கும்’ என்ற எண்ணத்தில்தான் அழைத்திருக்கக்கூடும். இத்தகைய உள்நோக்கத்தோடு அளிக்கப்படும் விருந்து உண்மையான விருந்தாக இருக்காது என்பதுதான் இயேசு சொல்லும் செய்தியாக இருக்கின்றது.

கைம்மாறு கருதிக் கொடுப்பது நல்ல விருந்தாக இருக்காது பெருமைக்காக விருந்து கொடுப்போர் ஒருவகையினால் என்றால், கைம்மாறு கருதி விருந்து கொடுப்பவர் இன்னொரு வகையினர். இன்றைக்குப் பெரும்பாலோர் ‘இப்பொழுது நான் விருந்து கொடுக்கிறேன்... பின்னொரு நாளில் அவர் எனக்கு விருந்துகொடுப்பார்’ என்ற எதிர்பார்ப்பிலும் ‘இப்பொழுது நான் இவர்க்கு இவ்வளவு மொய் செய்கின்றேன்... பின்னொரு நாளில் அவர் எனக்கு இவ்வளவு மொய் செய்வார்’ என்ற எதிர்பார்ப்பிலும்தான் விருந்தளிப்பதைக் காணமுடிகின்றது.

அண்மையில் புலனத்தில் (Whatsapp) வலம்வந்த அழைப்பிதழில் ஒருவர், ‘பல ஆண்டுகட்குப் பிறகு எங்களுடைய வீட்டில் நடைபெறும் சுபநிகழ்வு இதுதான்... அதனால் யார் யார்க்கெல்லாம் நான் மொய் செய்திருக்கின்றேனோ, அவர்கள் அந்த பொய்யை என் வீட்டில் நடைபெற்று இந்தச் சுபநிகழ்வில் திரும்பிச் செலுத்தவும்’ என்ற கூறியிருந்த வார்த்தைகள், நாம் எத்தகைய மனநிலையோடு விருந்தளிக்கின்றோம் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. ஆகையால், கைம்மாறு கருதி அளிக்கப்படும் விருந்தும் நல்லதொரு விருந்தாக இருக்காது என்பதை நம்முடைய கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

வறியோர்க்குக் கொடுப்பதே உண்மையான, நல்ல விருந்து பெருமைக்காகக் கொடுக்கப்படும் விருந்தும் கைம்மாறி கருதிக் கொடுக்கப்படும் விருந்தும் உண்மையான விருந்தாக இருக்காது என்று சொன்ன இயேசு, திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கின்ற வறியர்கள், ஏழைகள், கைவிடப்பட்டோர் ஆகியோர்க்குக் கொடுக்கப்படும் விருந்துதான் உண்மையான விருந்து என்கின்றார். ஆம், எவரும் இரண்டு இடங்களில் கைம்மாறு பெற முடியாது. மனிதர்களிடம் கைம்மாறினை எதிர்பார்க்கின்றவர் கடவுளிடமிருந்து கைம்மாறு பெறமுடியாது. மாறாக மனிதர்களிடமிருந்து கைம்மாறு எதிர்பாராதவர் கடவுளிடமிருந்து கைம்மாறு பெறுவார்கள். உண்மையை இன்னும் உரக்கச் சொல்லவேண்டும் என்றால், மனிதர்கள் தரும் கைம்மாறை விட, கடவுள் தரும் கைம்மாறு மிக உயர்ந்தது. ஆகையால், ஒவ்வொருவரும் விருந்தளிக்கின்றபோது வறியவர்களையும் எளியர்களையும் கருத்தில் கொண்டு விருந்தளிக்கவேண்டும். இது அவ்வளவு எளிதான காரியமில்லை என்றாலும், முடியாத காரியமல்ல

நிறைவாக, விருந்தளிக்கின்றபோது ஒருவர் எப்படி விருந்தளிக்கவேண்டும் என்று சொன்ன இயேசு, விருந்தில் கலந்துகொள்கின்றவர் எத்தகைய மனநிலையோடு கலந்து கொள்ளவேண்டும் என்பதையும் எடுத்துச் சொல்கின்றார். அதற்கு ஒருவர் செய்யவேண்டியதெல்லாம், உள்ளத்தில் தாழ்ச்சியோடு விருந்தில் கலந்துகொள்வதுதான். தாழ்ச்சி என்பது தன்னைக் குறித்து குறைவாக நினைப்பது அல்ல, தன்னைப்பற்றியே நினையாமல் இருப்பது. எவர் ஒருவர் தன்னைப் பற்றி நினையாமல், பிறரைப் பற்றி உயர்வாக நினைக்கின்றாரோ, அவர் உயர்த்தப்படுவார் என்பது உறுதி.

ஆகையால், விருந்தளிக்கும்போது வறியவர்களைக் கருத்தில் கொண்டு விருந்தளிப்போம். விருந்துக்குச் செல்கின்றபோது பிறரைக் கருத்தில் கொண்டு செயல்படுவோம். அதன்மூலம் இயேசு தருகின்ற விண்ணகத்தைக் கொடையாகப் பெறுவோம்.

சிந்தனை
‘மனத்தில் வறியவர்கட்கு இடமிருந்தால், வீட்டிலும் இடமிருக்கும்’ என்கிறது டானிஸ் பழமொழி. நாம் நம்முடைய உள்ளத்திலும் இல்லத்திலும் விருந்திலும் வறியவர்கட்கு முதன்மையான இடம்தருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser

பணிவும் பரிவும்!

தாழ்ச்சி என்ற மதிப்பீட்டுக்குப் பல நேரங்களில் எடுத்துக்காட்டுக்களை நாம் நமக்கு வெளியில் தேடுகிறோம். ஒபாமா தன்னுடைய உதவியாளருக்கு கை கொடுத்தார், போப் பிரான்சிஸ் தன்னுடைய காவலாளருக்கு நாற்காலி கொடுத்தார், அவர் தன்னுடைய காலணிகளுக்குத் தாமே பாலிஷ் போட்டார், இவர் தன்னுடைய வீரர் ஒருவருக்குத் தானே உதவி செய்தார். இப்படி நாம் நினைக்கும் பெரியவர்கள் தங்கள் வாழ்வில் தாழ்ச்சியாக இருந்த தருணங்களையே எண்ணிப் பார்க்கிறோம். மேற்காணும் நிகழ்வுகளில் தாழ்ச்சி இருப்பது உண்மைதான். ஆனால், தாழ்ச்சியோடு கலந்து பரிவு நமக்கு அருகிலேயே இருக்கிறது.

'ஏம்மா! உனக்கு அறிவே இல்லையா?' என்று கேட்கும் தன் குழந்தையிடம் தாய் ஒருபோதும் தன்னுடைய கல்லூரி கோல்ட் மெடலைக் கொண்டுவந்து காட்டுவதில்லை. அப்படிக் கேட்கும் குழந்தையிடம் சிரித்துக் கொண்டே குனிந்து குழந்தையின் காலணிகளை மெதுவாக அவிழ்ப்பாள் தாய். இதுதான் தாழ்ச்சியுடன் கூடிய பரிவு. அல்லது பரிவுடன் கூடிய தாழ்ச்சி.

வெறும் தாழ்ச்சியாக (பணிவாக) இருப்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை? தாழ்ச்சியோடு பரிவும் சேரும்போதுதான் அது மற்றவரின் மேல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாடு பணிவும் பரிவும் இணைந்து செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றது.

இன்றைய முதல் வாசகம் (காண். சீஞா 3:17-18,20,28-29) இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) அறிவுரைப் பகுதி, (ஆ) பழமொழி. அறிவுரைப் பகுதியில், ஒருவர் பணிவை அல்லது தாழ்ச்சியைத் தனதாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை, ஆசிரியர் மூன்று எளிதான முறைகளாகக் கற்பிக்கின்றார்: (அ) பணிவான அல்லது தாழ்ச்சியான மனிதர் சமூகத்தில் தனக்குள்ள கடமைகளைப் பொறுப்புடன், மனச்சான்றுக்குக் கட்டுப்பட்டும் செய்வார். இதற்கு முரணானவர்கள் தங்களுடைய கடமைகளைப் பற்றி அக்கறையின்றி இருப்பார்கள். (ஆ) பணிவு அல்லது தாழ்ச்சி கொண்ட மனிதர் தன்னுடைய சமூக நிலை அல்லது அந்தஸ்தைப் பயன்படுத்தி மற்றவர்கள்மேல் அதிகாரம் செலுத்த மாட்டார். எந்த அளவுக்குத் தன்னுடைய அந்தஸ்து உயர்கிறதோ அந்த அளவுக்கு அவர் பணிசெய்பவராக இருப்பார். (இ) பணிவுகொண்டிருப்பவர் தன்னுடைய ஆற்றலுக்கும் திறனுக்கும் அப்பாற்பட்ட எதையும் பெற அல்லது செய்ய பேரார்வம் காட்டமாட்டார். இங்கே பணிவு என்பது ஒருவர் தான் பெற்றிருக்கின்ற ஆற்றல்கள் மற்றும் திறன்களை முழுமையாகப் பயன்படுத்துவதையும், தன் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதன்மேல் தன்னுடைய நேரம் மற்றும் ஆற்றலைச் செலவிடாத மனப்பக்குவத்தையும் குறிக்கிறது.

இவ்வறிவுரைகளை முடித்தபின், சீராக், நீதிமொழிகள் அல்லது பழமொழிகளுக்குச் செவிமடுப்பவரைப் பாராட்டுகின்றார். பழமொழிகள் என்பவை ஒருவர் தனிமனித அல்லது சமூக அறநெறியுடன் வாழப் பயிற்றுவிக்கும் ஞானத்தின் சிறிய மாத்திரைகள். சில கிரேக்கப் பதிப்புக்களில், 'எரியும் நெருப்பைத் தண்ணீர் அவிக்கும். தருமம் செய்தல் பாவங்களைப் போக்கும்' என்ற வசனம் 29ஆவது வசனமாகத் தரப்பட்டுள்ளது. தண்ணீரும் தர்மமும் ஒரே ஆற்றலைக் கொண்டிருக்கிறது. நெருப்பு ஒன்றைச் சாம்பலாக்குகிறது. பாவம் ஒருவரைக் கடவுளிடமிருந்து அந்நியமாக்குகிறது. தண்ணீர் நெருப்பை அணைக்கிறது. தர்மம் கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைத்துவிடுகிறது. மேலும், கண்டுகொள்ளாத்தன்மை, மேட்டிமை உணர்வு போன்ற பாவங்களையும் தர்மம் அகற்றிவிடுகிறது.

ஆக, ஒருவரின் பணிவு அல்லது தாழ்ச்சி பரிவோடு இணைந்து தர்மம் செய்தல் அல்லது பிறரன்புச் செயல்கள் செய்தல் என்று மாறும்போது அங்கே மாற்றம் உண்டாகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 12:18-19,22-24), எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் இரண்டு மலைகளை ஒப்பிடுகின்றார்: சீனாய் மலை, சீயோன் மலை. சீனாய் மலை பயம் அல்லது குற்றவுணர்வை மையப்படுத்தியது என்றும், சீயோன் மலை இரக்கம் அல்லது மன்னிப்பை மையப்படுத்தியது என்றும் எழுதுகின்றார். மேலும், சீயோன் மலையில் நாம் அனைவரும் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையில் நிற்கிறோம். உடன்படிக்கையின் இணைப்பாளராக இயேசு மாறக் காரணம் அவருடைய தாழ்ச்சியான சிலுவை மரணமே. இயேசு சிலுவையில் அறைந்துகொள்ளத் தம்மையே தாழ்த்தினார் என பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் பதிவு செய்கிறார். இயேசுவின் தாழ்ச்சி அவருடைய பரிவில் நிறைவு பெறுகிறது.

ஆக, தாழ்ச்சியோடு கொண்ட பரிவு இயேசுவை உடன்படிக்கையின் இணைப்பாளராக மாற்றுகிறது.

நற்செய்தி வாசகம் (காண். லூக் 14:1,7-14) இயேசு பரிசேயர்களோடு உண்ணும் மூன்றாவது மற்றும் இறுதி உணவு நிகழ்வைப் பதிவு செய்கிறது. மேலும், 'நீங்கள் விருந்துக்குச் சென்றால் என்ன செய்ய வேண்டும்?' 'உங்களை யாராவது விருந்துக்கு அழைத்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்னும் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது நற்செய்தி வாசகம். இயேசுவின் சமகாலத்தில் விருந்தோம்பல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்பட்டது. விருந்தில் பங்கேற்பவர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நிறைய அறிவுரைகள் இருந்தன. இவ்வறிவுரைகளை நாம் ஞானநூல்களில் நிறைய வாசிக்கின்றோம். மேலும், விருந்திற்கு வருபவர் ஒவ்வொருவரும் எங்கே அமர வேண்டும் என்ற வரிசை அமைப்பும் முன்கூட்டியே தரப்படும். இப்படி இருக்க, இன்றைய நிகழ்வில் விருந்துக்கு வரும் விருந்தினர்கள் வித்தியாசமாகச் செயல்படுகின்றார்கள். முன்னுக்குப் பின் முண்டியடித்துக் கொண்டு முதன்மையான இடத்தை அடைய முயற்சிக்கிறார்கள். மேலும், விருந்திற்கு அழைத்தவரிடம் எதுவும் சொல்லாமல் தாங்களே தங்களுடைய இடத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட செயல்பாடு பொதுவிடத்தில் அவமானத்தையும் வெட்கத்தையும் தரும் என்று சுட்டிக்காட்டுகின்ற இயேசு, முதன்மையான இடத்தில் அமர்ந்திருப்பவர்கள் கீழே இறக்கப்படவும், மற்றவர்முன் அவமானப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்று சுட்டிக்காட்டுகின்றார்.

ஒருவரின் மதிப்பு என்பது அடுத்தவரை ஒதுக்கி வைத்து முடிவுசெய்யப்படுவதல்ல என்கிறார் இயேசு. இந்த நிகழ்வில், விருந்திற்கு அழைத்தவரே ஒவ்வொருவரையும் அவரவர் நிலையில் குறித்து வைக்கிறார். வாழ்விலும் ஒருவர் தன்னைப் பற்றிக் கொண்டிருக்கின்ற எண்ணம் மற்றவரோடு அவர் கொண்டுள்ள உறவோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். இயேசுவைப் பொறுத்தவரையில், ஒருவர் தன்னை மற்றவரோடு இணைத்துப் பார்க்கும்போதுதான் கடவுள் முன்னிலையில் உயர்வு பெறுகிறார். மாறாக, தங்களைத் தாங்களே உயர்வாக நினைப்பவர்கள் தாழ்த்தப்படுவார்கள் என்பது உறுதி. தாழ்ச்சியான நிலையைத் தழுவுபவர்கள் உயர்வைக் கண்டடைவார்கள் என்பதும் உறுதி.

இரண்டாவது பகுதியில் இயேசு அவரது சமகாலத்தில் இருந்த மற்றொரு பண்பை எடுத்துரைக்கின்றார்: விருந்திற்கு கைம்மாறு செய்வது. நம்ம ஊரில் மொய் செய்வது போல. ஒருவர் மற்றவருடைய வீட்டில் விருந்து உண்டு மொய் செய்திருக்கிறார் என்றால், இவரும் ஒரு விருந்து அளித்து அவரை மொய் செய்ய வைக்க எனக்கு கடமையும் உரிமையும் உண்டு. கைம்மாறு செய்ய முடிபவர்களுக்கே விருந்து வைக்காமல் கைம்மாறு செய்ய இயலாதவர்களுக்கு விருந்து வைக்குமாறு சொல்கிறார் இயேசு - ஏழைகளுக்கும் இயலாதவர்களுக்கும். மேற்காணும் தாழ்ச்சி இங்கே பரிவாக வெளிப்படுகின்றது. ஏழைகளுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும், கால் ஊனமுற்றவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும் விருந்து அளிப்பது மற்றவர்கள் பார்வையில் தாழ்வானதாகத் தெரியலாம். ஆனால், இவர்களோடு தன்னை இணைத்துக் கொள்ளும் அளவுக்கு ஒருவர் தம்மையே தாழ்த்திக் கொண்டால் கடவுள் முன்னிலையில் அவர் உயர்த்தப் பெறுவார். கடவுளே இவர்களுக்கு விருந்து படைக்கும் பேற்றை இவர்கள் பெறுவர்.

இவ்வாறாக, மேற்காணும் மூன்று வாசகங்களுமே பணிவையும் பரிவையும் மிக அழகாக இணைத்து இவ்விரண்டையும் அணிகலன்களாக அணிந்துகொள்ள நம்மைத் தூண்டுகின்றன. சீராக்கின் ஞானநூலில் ஒருவர் தன்னைப் பற்றி அறியும் பணிவு தர்மம் செய்யும் பரிவாக வெளிப்பட வேண்டும். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலைப் பொறுத்தவரையில் இயேசுவின் சிலுவைச் சாவு அவருடைய பணிவு மற்றும் பரிவின் வெளிப்பாடாக அமைந்து நம்மைக் கடவுளோடு ஒப்புரவாக்குகிறது. நற்செய்தி வாசகத்தில், தன்னை மற்றவரோடு இணைத்துப் பார்த்து தன் நிலையை அறிந்துகொண்டு தன்னைத் தாழ்த்துகிற ஒருவர் மற்றவர் முன்னிலையில் உயர்த்தப் பெறுவார். அந்தத் தாழ்ச்சி அவரைத் தனக்குக் கீழ் இருப்பவர்களோடு இணைத்துக்கொள்ளத் தூண்டியதென்றால் அவருடைய பரிவுக்குக் கடவுளிடமிருந்து கைம்மாறு பெறுவார்.

இன்றைய வாசகங்கள் காட்டும் பணிவையும் பரிவையும் நாம் எப்படி வாழ்வாக்குவது?
1. உனக்கு கடினமாக இருப்பதைத் தேடாதே இப்படி ஞானநூல் ஆசிரியர் தன் மாணவனுக்கு அறிவுரை கொடுக்கிறார். இது சரியான அறிவுரையா? கடினமாக இருப்பதைத் தேடி, அதற்கு நம் உழைப்பைச் செலுத்தினால்தானே நல்லது. இல்லையா? இல்லை என்கிறார் ஆசிரியர். ஏனெனில், ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராய்வதும், தேடுவதும் ஒருவருடைய விரக்தி மற்றும் சோர்வின் நிலையைக் கூட்டிவிடும். மனித உறவிற்கு இதைப் பொருத்திப் பார்க்கும்போது, 'உனக்கு மேலிருப்பவர்களோடு விருந்துண்ணாதே. நீ அவப்பெயரைச் சந்திக்க நேரிடும்' என்கிறது ஞான இலக்கியம். ஒருவர் தன்னைப் பற்றிய சரியான அறிதல் அல்லது புரிதல் இல்லாமல் இருந்தால் அவர் தன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல்களையும், நபர்களையும் நாடுவார். இதுவே அவருக்கு இறுமாப்பு அல்லது செருக்கு உணர்வைக் கொடுக்கும். இறுதியில் அவர் அவமானப்படுவது உறுதி. இதற்கு மாற்றாக இவர் தன்னை அறிந்தவராய், தன் ஆற்றலை உணர்ந்து செயல்படுபவராய் இருந்தால் ஆண்டவர் முன்னிலையில் அவருக்குப் பரிவு கிடைக்கும்.

2. இரக்கமும் மன்னிப்பும் சீனாய் மலை போல நெருப்பும் கோபமும் கொண்டிருப்பவர்கள் பணிவாகவும் பரிவாகவும் இருக்க முடியாது. இந்த இடத்தில் பயமும் குற்றவுணர்வுமே இருக்கும். ஆனால், சீயோன் மலை போல இருப்பவர்கள் இரக்கமும் மன்னிப்பும் கொண்டிருப்பார்கள். இரக்கம் கொண்டிருக்கும் ஒருவரே மற்றவரோடு இறங்கிவந்து அவரோடு நிற்க முடியும். மன்னிக்கும் ஒருவரே பரிவு காட்ட முடியும். ஆக, என் வாழ்வில் நான் பணிவும் பரிவும் கொண்டிருக்க இரக்கமும் மன்னிப்பும் கொண்டிருக்கின்றேனா?

3. விட்டுக் கொடுப்பதும் வீட்டுக்கு அழைப்பதும் விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை என்பது பழமொழி. உடனடியாக இது பலன் தரவில்லை என்றாலும் காலப்போக்கில் பலன் தரும் என்பது உறுதி. எனக்கு மேலிருப்பவருக்கு நான் ஒன்றை விட்டுக்கொடுப்பது எளிது. எடுத்துக்காட்டாக, ஒரு நாற்காலி இருக்கிறது. நானும் என்னுடைய அதிபரும் அங்கே அழைக்கப்பட்டுள்ளோம். நான் உடனடியாக அந்த இருக்கையை என் அதிபருக்கு விட்டுக் கொடுக்கிறேன். ஆனால், நானும் என் மாணவனும் செல்லும் இடத்தில் என்னால் அந்த இருக்கையை அந்த மாணவனுக்கு விட்டுக்கொடுக்க முடியுமா? அப்படி விட்டுக் கொடுப்பதுதான் தாழ்ச்சி. இங்கே மாணவனால் கைம்மாறு செய்ய முடியாது. அங்கே எனக்கு அதிபரிடமிருந்து கைம்மாறு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், எனக்குக் கீழிருப்பவர்களை என்னோடு உறவுகொள்ள, அல்லது என் வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கும்போது அது என்னுடைய தரத்தைக் குறைக்கலாம். உலகப் பார்வையில் அது தவறு என்றுகூடத் தோன்றலாம். ஆனால், சமூகப் பார்வையை உடைப்பதுதான் இயேசுவின் கருத்தியலாக இருக்கிறது. இன்று நான் யாரை எல்லாம் என்னோடு உறவுகொள்ள அழைக்கின்றேன்? எனக்கு மேலிருப்பவர்களை மட்டுமே - பணத்தில், பதவியில், பலத்தில் - நான் நாடுகிறேனா? அப்படி நாடினால் நான் அவர்களுடைய பரிவில் இருக்கும் நிலைதான் உருவாகுமே தவிர நான் பரிவுகாட்ட இயலாது.

இறுதியாக,
பணிவு, பரிவு என்னும் இவ்விரண்டு வார்த்தைகள் நம் அன்றாட வாழ்வியல் உறவுநிலைகளில் இருந்தால் உறவுகளில் மதிப்பும் உறுதியும் இருக்கும்.
லேய்ஸ் சிப்ஸ் பாக்கெட் போன்று இல்லாத ஒன்றை நான் இருப்பதாகக் காட்டிக்கொண்டால் நான் உடைவதும், என்னுள் இருப்பது மண்ணில் வீழ்வதும் உறுதி.
'கைகள் சுத்தமாக வேண்டுமென்றால் இரு கைகளையும் சேர்த்துக் கழுவு' என்பது ஆப்பிரிக்க பழமொழி. ஒரு கை மற்றொரு கைக்குக் கீழ் பணிந்தால்தான், பரிவு என்னும் தண்ணீர் விழுந்து கைகள் சுத்தமாகும்.

ser

sunday homily


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com