மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
தொடக்க நூல் 18:1-10 | கொலோசையர் 1:24-28 | லூக்கா 10:38-42

செயலும் செபமும் ஆன்மீக வாழ்வின் இரு இறக்கைகள்

ஒருநாள் ஒரு துறவியைப் பார்த்து இளைஞன் ஒருவன், நான் என் தந்தையை அதிகம் அன்பு செய்ய வேண்டுமா? அல்லது என் தாயை அதிகம் அன்பு செய்ய வேண்டுமா? என்று கேட்டான் அதற்கு அந்தத் துறவி அந்த இளைஞனை நோக்கி: உன் இரண்டு கண்களில் எந்தக் கண் உனக்குச் சிறந்த கண்? என்று கேட்டார். இரண்டும்தான் என்றான் அந்த இளைஞன். உன் தாயும், தந்தையும் உன் இரு கண்கள் போன்றவை என்றார் அந்தத் துறவி.

இன்று இறைவனைப் பார்த்து நற்செயல் சிறந்ததா? அல்லது செபம் சிறந்ததா? என்று கேட்டால் இன்றைய முதல் வாசகத்தைச் சுட்டிக்காட்டிச் செயல் தான் சிறந்தது என்பார். நற்செய்தியைச் சுட்டிக்காட்டி செபம்தான் சிறந்தது என்பார். இன்றைய முதல் வாசகம் தொடக்க நூல் (18:1-10) நாம் வாசிக்கக் கேட்டோமே! நல்ல வெயில் நேரத்தில் ஆபிரகாமின் கூடாரத்தின் பக்கத்தில் மூன்று மனிதர்கள். அவர்களைச் சந்திக்க ஆபிரகாம் ஓடினார். மூன்று பேரையும் தாழ்ந்து வணங்கி விருந்துண்ண அழைக்கிறார். நன்றாக உபசரிக்கப்பட்டுத் திரும்பும் அந்த மனிதர்கள் மூலம் ஆண்டவர் குரல் ஒலிக்கிறது. நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் வருவேன். அப்பொழுது இதுவரை பிள்ளை பெற இயலாத உன் மனைவி சாராள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள் என்றார். அதன்படி முதிர்ந்த வயதில் கடவுள் வாக்களித்தபடி சாராள் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள் (தொநூ. 21:2).

நாம் நமது வாழ்வில் பல்வேறு விழாக்களில் பங்கெடுக்கிறோம். திருவிழா, திருமண விழா, புதுமனைப் புகுவிழா என்றெல்லாம் பல்வேறு விழாக்கள் வாழ்வில் நம்மை ஒன்று சேர்க்கின்றன. எல்லா விழாக்களிலும் முக்கியத்துவம் பெறுவது விருந்து. விருந்து இல்லாமல் விழாக்கள் இல்லை. அப்படித்தான் . பல்வேறு கட்டங்களில் விருந்து இடம் பெறுவதாக பைபிளில் பார்க்கிறோம். ஆபிரகாம் 3 மனிதருக்கு விருந்து அளிக்கிறார். இயேசு கானாவூர் விருந்தில் பங்கெடுத்தார். சக்கேயு, சிமியோன், மத்தேயு, மார்த்தா, மேரி இல்லங்களில் இயேசு விருந்துண்கிறார். 2. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது முதுமொழி.

விருந்தோம்பல் என்பது நம் கலாச்சாரத்தின் சிறந்த பண்பு. நாம் பரிவுடனும், பாசத்துடனும் முகமலர்ச்சியுடனும் அதோடு தாராள, தியாக உணர்வோடும் விருந்தோம்பல் செய்யும் போது இயேசு கிறிஸ்து அவர்களில் வருகிறார். எனவேதான் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் ஏறக்குறைய 20 ஆண்டுகளில் ஒரு நாளாவது எங்கள் இல்லத்தில் விருந்தினர் இல்லாமல் இல்லை என்று சொன்னார். பகிர்ந்து உண்பது தான் விருந்தோம்பல். அதைத்தான் இயேசு இன்றும் பலிபீடத்தில் செய்யப் போகின்றார். அன்புடன் உபசரிப்பவரை, மகிழ்வுடன் விருந்து அளிப்பவரை ஆண்டவர் அருளால், ஆவியால் நிரப்புகிறார் என்பதை இன்றைய முதல் வாசகம் தெளிவாக எடுத்துரைக்கிறது (தொ.நூ. 18:1-10).

அதேபோல் மார்த்தாள், களைப்போடு தன் வீடு வந்திருக்கும் இயேசுவுக்கு நல்லதொரு விருந்து படைக்க பரபரப்பாக அடுப்பறையில் வேலை செய்வதை இன்றைய மூன்றாம் வாசகத்தில் பார்க்கிறோம். இது அவளது விருந்தோம்பல் செயல்பாடு எனக் கூறலாம்.

ஆனால் மார்த்தாவின் தங்கை மரியா அடுப்பறை சென்று தன் சகோதரிக்கு உதவி செய்யாது இயேசுவின் காலடியில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். மார்த்தாள் வந்து, என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே எனக்கு உதவி செய்ய அனுப்பும் என்று கேட்டபோது மார்த்தா நீ பல காரியங்கள் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய். ஆனால் தேவை யானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள். அது அவளிடமிருந்து எடுபடாது என்றார் (லூக். 10:41-42)

இங்கே மார்த்தா, மரியாவைப் பார்க்கிறீர்கள். இருவரும் செவ்விருந்தோம்பி வரும் விருந்து பார்த்திருப்பவர்கள். மார்த்தா செயலில் ஈடுபட , மரியா செபத்தில் ஈடுபடுகிறாள். செபத்தில் நான்கு வகை உண்டு. (1) புகழ்ச்சிச் செபம், (2) நன்றி செபம் (3) கேட்டல் (மன்றாட்டு) செபம் (4) ஆராதித்தல் செபம். மரியாள் ஆராதித்தல் செபத்தில் ஈடுபடுகிறாள்.

அன்பார்ந்தவர்களே! (1) செயலும் செபமும் ஆன்மீக வாழ்வின் இரு இறக்கைகள் (2) நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது (3) படகோட்டியின் இரு துடுப்புக்கள் என்றும் கூறலாம்.

உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது (2 தெச. 3:10). நீங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என்று ஆண்டவர் இயேசு பெயரால் கட்டளை இடுகிறேன் என்கிறார் புனித பவுல் அடிகளார் (2 தெச. 3:12). செயலற்ற நம்பிக்கை (விசுவாசம்) செத்ததே என்கிறார் புனித யாக்கோபு (யாக். 2:26)

அதேநேரத்தில் ஆண்டவர் இயேசு இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறு பெற்றோர் (லூக். 11:28). இவர்கள் கற்பாறையின் மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார் (மத். 7:24) என்றும் கூறுகிறார். சோதனைக்கு உட்படாதபடி விழித்திருந்து செபியுங்கள் (மத். 26:41). இடைவிடாது செபியுங்கள் (1 தெச. 5:17) ஆக, இயேசுவைப் பொறுத்தவரையில் செபத்திற்கே முதலிடம். அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்கு கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார் (லூக். 6:12). இத்தகையச் செப வாழ்வில் ஈடுபட்ட புனித பவுல் அடிகளார் இன்று வாசித்த இரண்டாம் வாசகத்தில் கூறப்பட்டது போல உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் (கொலோ. 1:24). இது அவரது ஆழ்ந்த செபத்தில் எழுகின்ற அற்புத அருள்வாக்கு.

அன்னை தெரெசாவைப் பார்த்து இத்தனை ஆயிரம் பேரையும் வைத்துக் கண்காணிக்க உங்களுக்கு எங்கிருந்து ஆற்றல் கிடைத்தது என்று கேட்டவர்களுக்கு, நடுநாயகனாம் நற்கருணை நாதரோடு கொண்ட உறவு. அதனால் தினசரி ஒவ்வொரு சகோதரியும் நற்கருணை ஆண்டவரிடம் ஒரு மணி நேரம் செபத்தில் செலவழிக்கின்றார்கள் என்றார். நம் தேசப்பிதா காந்திமகான் ஒவ்வொரு வெள்ளியும் மௌன விரதத்தில் கடவுளோடு ஒன்றித்து இருந்தார் என்பது வரலாறு. நம் இதயத்தில் செபவிளக்கு எரியும் போது நம்மைச் சுற்றி உள்ளவர்கள் ஆனந்தம் அடைவார்கள்.

ser

செயல் சிறந்ததா? மன்றாட்டு சிறந்ததா?

துறவி ஒருவரைப் பார்த்து ஓர் இளைஞன், நான் என் தந்தையை அதிகம் அன்பு செய்யவேண்டுமா? என் தாயை அதிகம் அன்பு செய்ய வேண்டுமா? என்று கேட்டான். அதற்கு அந்தத் துறவி இளைஞனைப் பார்த்து, உன் இரண்டு கண்களில் எந்தக் கண் சிறந்த கண்? என்றார். இரண்டும்தான் என்றான் இளைஞன். உன் தாயும் தந்தையும் உன் இரு கண்கள் போன்றவர்கள் என்றார் துறவி.

இன்று இறைவனைப் பார்த்து, செயல் சிறந்ததா? மன்றாட்டு சிறந்ததா? என்று கேட்டால், இறைவன் இன்றைய முதல் வாசகத்தைச் சுட்டிக்காட்டி செயல்தான் சிறந்தது என்பார்; நற்செய்தியைச் சுட்டிக்காட்டி மன்றாட்டுதான் சிறந்தது என்பார்.

இன்றைய முதல் வாசகத்தில் நாம் படிப்பதென்ன? ஆபிரகாமின் கூடாரத்தின் பக்கத்திலே மூன்று மனிதர்கள்! நல்ல வெயில்! அவர்களைச் சந்திக்க ஆபிரகாம் ஓடினார். மூன்று மனிதர்களையும் தாழ்ந்து பணிந்து விருந்துண்ண அழைக்கின்றார். விருந்து நடக்கின்றது. விருந்துக்குப் பிறகு சற்றும் எதிர்பாராத ஒன்று நடக்கின்றது! மூவரின் குரல், இல்லை, இல்லை , ஆண்டவரின் குரல் ஒலித்தது. ஆண்டவர் ஆபிரகாமைப் பார்த்து, நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான் என்றார் ! கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார் (தொநூ 21:2).

ஆபிரகாம் அந்த மூன்று மனிதருக்கும் அன்பு காட்டாமலிருந்திருந்தால் அவருக்கு ஆண்டவரிடமிருந்து சிறப்பு ஆசி கிடைத்திருக்காது; ஈசாக்கு பிறந்திருக்கமாட்டான். உயிர் இல்லாத உடல் போல், செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே (யாக் 2:26) என்கின்றார் திருத்தூதர் புனித யாக்கோபு.

நற்செய்தியிலே மரியாவையும், மார்த்தாவையும் சந்திக்கின்றோம். இருவரும் செல்விருந்தோம்பி வரவிருந்து பார்த்திருப்பவர்கள்! இயேசு விருந்தினராக வீட்டுக்குள் புகுந்ததும் இருவருக்கும் எல்லையில்லா பெருமகிழ்ச்சி. மார்த்தா செயலில் ஈடுபட , மரியா மன்றாட்டில் ஈடுபட்டாள்! மன்றாட்டிலே ஐந்து வகையான மன்றாட்டுகள் உள்ளன! 1. புகழ்ச்சி மன்றாட்டு, 2. நன்றி மன்றாட்டு, 3. கேட்டல் மன்றாட்டு, 4. ஆராதித்தல் மன்றாட்டு, 5. பரிந்துரை மன்றாட்டு. மரியா ஆராதித்தல் மன்றாட்டிலே ஈடுபட்டாள்.

மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டாள்! இயேசு சொன்னதை இரசித்து இரசித்துக் கேட்டாள் ; கேட்டுக்கேட்டு இரசித்தாள். இயேசு சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் அவள் ஆராதித்தாள்! மார்த்தா பரபரப்பாகி பணிவிடை புரிந்தாலும், மரியா நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்தாகக் கூறுகின்றார் இயேசு. முதல் பரிசு மரியாவிற்குச் செல்கின்றது.

ஆக, செயல் சிறந்ததா? மன்றாட்டு சிறந்ததா? என்று இறைவனைக் கேட்டால், இரண்டுமே சிறந்தவைதான் என்பார் இறைவன்.

செயலும், மன்றாட்டும் ஆன்மிக வாழ்வின் இரு இறக்கைகள். இரண்டும் சிறந்து விளங்கும் போது நமது வாழ்க்கைப் பறவை இறைவனை நோக்கி உயர, உயரப் பறக்கும்.

புனித பவுலடிகளார் இரண்டாம் வாசகத்தில் சுட்டிக்காட்டும் முதிர்ச்சி நிலையை அடைய நமக்கு உறுதுணையாக இருப்பவை செயலும், மன்றாட்டும்!

செயலில்லாத மன்றாட்டும், மன்றாட்டில்லாத செயலும் நம்மில் குடிகொண்டிருப்பின், அவற்றை இன்றைய இறைவாக்கின் அறிவுரைக்கு ஏற்ப சரிசெய்துகொள்வது நமது கடமையாகும்.

மேலும் அறிவோம்:
சூழ்ச்சி முடிவு துணி(வு எய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது (குறள் : 671).

பொருள் :
ஒரு செயலை நிறைவேற்ற முடிவு செய்யும்போது அச்செயலால் தோன்றும் விளைவுகளையும் தெளிவாக ஆராய வேண்டும்; திட்டமிட்ட பிறகு காலம் தாழ்த்துவது பெருந்தீமையாகும்!

ஒரு திருமண விருந்தில் ஒருவர் நான்கு பந்தியிலும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார், பந்தி பரிமாறியவர் அவரிடம், "என்னப்பா! நான்கு பந்தியிலும் தொடர்ந்து சாப்பிடுகிறாய்; எனக்கு ஞாபக சக்தி இல்லையா?" என்று கேட்டார். அதற்கு அவர், “நான் என்ன செய்வது? உங்களுக்கு ஞாபக சக்தி அதிகம்; எனக்கு ஜீரண சக்தி அதிகம்" என்றார்,

பொதுவாக நமக்கு ஞாபக சக்தியைவிட ஜீரண சக்திதான் அதிக மாக இருக்கின்றது. மூளைக்கு வேலை கொடுப்பதைவிட வயிற்றுக்கு அதிகமாக வேலை கொடுக்கின்றோம். நாம் உணவு வகைகளைச் சுவைத்துச் சாப்பிடுகிறோம். ஆனால் கடவுளுடைய வார்த்தையைச் சுவைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. வாய்வழியாக உட்கொள்ளும் உணவைவிடச் செவிவழியாக உட்கொள்ளும் உணவு மேலானது, உண்மையில், செவிக்கு உணவு இல்லாதபோதுதான் வயிற்றுக்குச் சிறிதளவு உணவு கொடுக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும் (குறள் 412)

இன்றைய நற்செய்தியில் வருகின்ற அக்காள் மார்த்தா வயிற்று உணவைச் சமைப்பதில் சிரமம் எடுத்துக் கொள்கின்றார். ஆனால் அவரின் தங்கை மரியாவோ செவி உணவுக்கு முன்னுரிமை கொடுத்து, இயேசுவின் வார்த்தையைக் கேட்டுச் சுவைத்து மகிழ்கின்றார். தனக்கு வேலையில் உதவி செய்யும்படி மரியாவைப் பணிக்க வேண்டுமென்று இயேசுவிடம் மார்த்தா கேட்கிறார். இயேசுவோ மரியாவிடம். “மார்த்தா நீ எனக்குக் கொடுக்கும் உணவைச் சுவைப்பதைவிட, நான் உனக்குக் கொடுக்கும் உணவைச் சுவைப்பதுதான் மேலானது. உன் தங்கை புத்திசாலி, அவளுக்குத் தெரிந்தது உனக்குத் தெரியவில்லையே" என்று கூறுகிறார்.

இன்றைய உலகில் மனிதர், தொகை தொகையாகச் செலவழித்து வகைவகையாக உணவை உட்கொள்வதில் அதிகம் நாட்டம் கொண் டுள்ளனர். ஆனால், "ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்" (திப 34:8) என்பதையும், "உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை" (திபா 119:103) என்பதையும் அடியோடு மறந்து விட்டனர். "மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்” (இச் 8:3) என்பதைக் கருத்திற்கொண்டு, மரியாவைப் பின்பற்றி, கடவுளின் வார்த்தையைச் சுவைத்து உயிர் வாழ்வோம்.

இயேசுவின் காலத்தில் பெண்கள் ஒரு குருவின் சீடராக முடியாது. எந்தவொரு 'ரபியும்' (போதகர்) ஒரு பெண்ணுக்கு மறைநூல் கற்றுக் கொடுக்கமாட்டார். ஏனெனில், பெண்கள் மறைநூலைப் பயில அருகதையற்றவர்கள். ஆனால் இயேசு இம்மரபை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டார். மரியா இயேசுவின் காலடியில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். இங்கு இயேசு குருவாகவும் மரியா சீடத்தியாகவும் திகழ்கின்றனர். இயேசுவுக்குப் பெண் சீடர்கள் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார் நற்செய்தியாளர் லூக்கா (லூக் 8:1-3).

பெண்கள் தங்களுக்குத் திருச்சபை திருப்பட்டங்களை வழங்க மறுக்கின்றது என்று ஆதங்கப்படத் தேவையில்லை. திருப்பட்டங்கள் பெறுவது முக்கியமில்லை ; இயேசுவின் சீடராவதே முக்கியம். பெண்கள் இயேசுவின் சீடர்களாக முடியும். திருப்பட்டங்கள் பெறாமலே பெண்கள் திருச்சபையில் ஏராளமான பணிகளைத் தாராளமாக ஆற்ற முடியும்; ஆற்றவும் வேண்டும்.

ஒரு சிறுவன் தன் அப்பாவிடம், "காக்கா கத்தினா விருந்தாளிகள் வருவார்களா?" என்று கேட்டான். அதற்கு அப்பா அவனிடம், "ஆமா. காக்கா கத்தினால் விருந்தாளிகள் வருவார்கள்; உன் அம்மா கத்தினால் விருந்தாளிகள் போய்விடுவார்கள்" என்றார். விருந்தினரை உபசரிப்பது பெண்களின் தனிப்பண்பு. மார்த்தாவிடம் இருந்த விருந்தோம்பல் என்ற பண்பை நாமும் பின்பற்ற வேண்டும்,

இன்றைய முதல் வாசகத்தில் மனிதர் உருவில் வந்த ஆண்டவருக்கு ஆபிரகாமும் சாராவும் விருந்தளிக்கின்றனர். அதற்குக் கைமாறாக, மலடி யாக இருந்த சாராவுக்குக் குழந்தைப்பேறு கிடைக்கிறது (தொ நூ 18:1-10). இல்லறத்தாரின் தலையாய கடமை விருந்தோம்பல் ஆகும் என்கிறார் திருவள்ளுவர்.


இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு | (குறள் 81)

"வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; விருந்தோம்பலில் கருத்தாய் இருங்கள்" (உரோ 12:13) என்று அறிவுறுத்துகிறார் திருத்தூதர் பவுல்.

ஒரு கணவர் தன் மனைவியைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்: "என் மனைவியும் பத்தினி; அவர் வைக்கிற குழம்பும் பத்தினி. என் மனைவி பத்தினி, ஏனென்றால் என்னைத் தவிர வேறு எவரும் அவளைத் தொட முடியாது. அவள் வைக்கும் குழம்பும் பத்தினி, ஏனெனில் என்னைத் தவிர வேறு எவரும் அதைச் சாப்பிட முடியாது." மனைவியர் நாக்குக்கு ருசியாகச் சமைத்துப் போடவேண்டும் என்று கணவர்களும் குழந்தைகளும் எதிர்பார்க்கின்றனர், பெண்கள் சமையல் கலையைக் கற்றுக்கொண்டால், குடும்ப வாழ்வு சுவையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை .

முடிவாக, மரியா செபவாழ்வுக்கும், மார்த்தா செயல் வாழ்வுக்கும் சிறந்த எடுதுக்காட்டாகத் திகழ்கின்றனர். வாழ்விலே செபம், செயல் ஆகிய இரண்டுமே முக்கியமானது. செபமில்லாத செயல் வேரில்லாத மரம்; செயவில்லாத செபம் கனிதராத மரம். இயேசுவின் வாழ்வில் இரண்டு மையப்புள்ளிகள்: ஒன்று மலை, மற்றொன்று மக்கள். மலையில் இரவெல்லாம் செபத்தில் மூழ்கித் திளைத்தார்; பகலெல்லாம் மக்களுக்கு நன்மை செய்தார். இயேசுவைப் பின்பற்றிச் செபத்தையும் செயலையும் நமது வாழ்வின் இரு கண்களாகக் கொள் வோம்; நம் வாழ்வு சுவைபெறும்,

ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள் (திப 34:8),

தேவையானது ஒன்றே!

நிகழ்வு
ஒரு நகரில் பெரும் தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவருடைய பிரதான நோக்கமே பணமீட்டுவதுதான். இப்படிப் பணமீட்டுவதே தனது வாழ்வின் பிரதான நோக்கம் என்று வாழ்ந்து வந்த அவர், ஒருநாள் தன்னுடைய வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு நள்ளிரவில் வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். இதற்கிடையில் அவரைப் பலநாட்களாக  நோட்டமிட்டுக்கொண்டிருந்த அதே நகரில் இருந்த திருடன் ஒருவன், சரியான இடம் பார்த்து, துப்பாக்கியுடன் அவர் முன் வந்து நின்றான். அவனைப் பார்த்து திடுக்கிட்டுப் போன அவர், ஒருநிமிடம் செய்வதறியாது நின்றார். அப்பொழுது அந்தத் திருடன் அவரிடம், “உனக்குப் பணம் வேண்டுமா? உயிர் வேண்டுமா?” என்று துப்பாக்கியை அவருடைய நெற்றிப்பொட்டில் வைத்து மிரட்டினான். அவர் சிறிதும் தாமதியாமல், “எனக்குப் பணம்தான் முக்கியம்... அது இருந்தால்தான் வயதான காலத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கையை அனுபவிக்க முடியும்” என்றார்.

தொழிலதிபர் இவ்வாறு சொன்னது அந்தத் திருடனுக்குப் பயங்கர எரிச்சலூட்டியது. உடனே அவன் தன்னுடைய கையில் வைத்திருந்த துப்பாக்கியை ஓர் அழுத்து அழுத்த, தொழிலதிபர் தலை சிதறி இறந்துபோனார்.

வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சாதாரண காரியங்கட்கு முக்கியத்துவம் கொடுத்து வாழக்கூடியவர்கள் கடைசியில் இப்படித்தான் அழிந்து போவார்கள் என்ற உண்மையை இந்த நிகழ்வு மிக அழகாக எடுத்துக் கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும், நம்முடைய வாழ்க்கையில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவேண்டும் என்ற தெளிவனைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

பற்பல பணிகளில் பரபரப்பாக இருந்த மார்த்தா

நற்செய்தியில் இயேசு மார்த்தா, மரியாவின் வீட்டுக்குச் செல்கின்றார். அங்கு அவர் சென்றபோது மார்த்தா அவரை வரவேற்கின்றார். ஆனால், அவர் இயேசுவை வரவேற்பதோடு சரி, அதன்பிறகு அவர் இயேசுவுக்கு விருந்து ஏற்பாடு செய்யவேண்டும் என்று கிளம்பி விடுகின்றார். அதுமட்டுமல்லாமல், தனக்கு உதவிசெய்ய வரவில்லை என்று தன் சகோதரி மரியாவைக் குறைபட்டுக் கொள்கின்றார்.

இத்தகையோர் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்களெனில், இதே அதிகாரத்தின் (லூக் 10) தொடக்கத்தில் வருகின்ற இயேசுவின் சீடர்களைப் போன்று நற்செய்தி அறிவிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் அல்லது அதைத் தொடர்ந்து வருகின்ற நல்ல சமாரியர்களைப் போன்று வரியவர்கட்கும் தேவையில் உள்ளவர்கட்கும் உதவிசெய்வார்கள். நற்செய்தி அறிவிப்பதும் தேவையில் உள்ளவர்கட்கும் உதவி செய்வது தேவையாவைதான். அதற்காக அவர்கள் இயேசுவை விட்டுவிட்டு ஒன்றும் செய்யமுடியாது. யோவான் நற்செய்தியில் இயேசு இதைத்தான், “என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது (யோவா 15: 5) என்று கூறுகின்றார். ஆகையால், நாம் மார்த்தவைப் போன்று இயேசுவை விட்டுவிலகி, எதை எதையோ செய்துகொண்டிருந்தாலும் நம்மால் நல்ல பங்கைத் தேர்ந்துகொள்ளவே முடியாது என்பது உறுதி.

நல்ல பங்கைத் தேர்ந்துகொண்ட மரியா

மார்த்தா பற்பல பணிகளில் பரபரப்பாய் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது, மரியாவோ இயேசுவின் காலடியில் அமர்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்கின்றார். மார்த்தாவின் சகோதரி மரியாவைக் குறித்து விவிலியத்தில் மூன்று இடங்களில் வருகின்றன. இந்த மூன்று இடங்களிலும் அவர் இயேசுவின் காலடியில் இருப்பதாகவே வருகின்றது. அவரைக் குறித்து வருகின்ற முதலாவது இடம், இன்றைய நற்செய்தி வாசகம். இங்கு அவர் இயேசுவின் காலடியில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார் (லூக் 10: 38 -42). மரியாவைக் குறித்து வருகின்ற இரண்டாவது இடம், யோவான் 11: 32. இங்கு அவர் தன்னுடைய சகோதரன் லாசர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வருகின்ற இயேசுவின் காலில் விழுந்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்” என்கின்றார்.

மரியாவைக் குறித்து இடம்பெறும் மூன்றாவது இடம் யோவான் 12:13. இப்பகுதியில் மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற நறுமணத் தைலத்தை இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தன் கூந்தலால் துடைகின்றார். இவ்வாறு அவர் இயேசுவின் காலடியே தஞ்சமென்று கிடக்கின்றார். இதனால்தான் அவர் இயேசுவால், நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டதாகப் பாராட்டப்படுகின்றார். இயேசுவிடமிருந்து இத்தகையதொரு பாராட்டைப் பெறுவதற்கு அவர் கொடுத்துவைத்திருக்கவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும்.

இங்கு ஒரு கேள்வி எழலாம். அது என்ன கேள்வியெனில், மரியா இயேசுவின் காலடியே கதியெனக் கிடக்கிறாரே, அவர் தன் சகோதரிக்கு உதவியிருக்கலாமே என்பதுதான் அந்தக் கேள்வி. மரியா தன் சகோதரிக்கு கட்டாயம் உதவியிருக்கக்கூடும். ஆனால், அவர் இயேசுவுக்கு விருந்துகொடுப்பதை விடவும் அவருடைய காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்பது பெரியது அல்லது மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்திருந்தார்.  அதனால்தான் அவர் இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்கின்றார். இதையே நாம் வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், “மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல. மாறாக, கடவுள் வாய்ச்சொல் ஒவ்வொன்றால் வாழ்வர்’ (மத் 4:4) என்று இறைவார்த்தையின் அர்த்தத்தை மரியா உணர்ந்திருப்பார். அதனால்தான் அவர் இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்கின்றார்.

நாம் மார்த்தாவா? மரியாவா?

இதுவரையில் பற்பலப் பணிகளில் மிகவும் பரபரப்பாக இருந்த மார்த்தாவைக் குறித்தும் ஆண்டவர் இயேசுவின் காலடியில் அமர்ந்து அவருடைய வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்த மரியாவையும் குறித்துச் சிந்தித்துப் பார்த்தோம். இந்த இருவரில் நாம் யார்? என்று அறிந்து கொள்வது மிகவும் தேவையான ஒன்றாக இருக்கின்றது. பல நேரங்களில் நாம் மார்த்தாவைப் போன்று இது இதெல்லாம் மனித – கிறிஸ்தவ - வாழ்க்கைக்குத் தேவை என்று நினைத்துக்கொண்டு கிறிஸ்துவை விட்டும், அவருடைய விழுமியங்களை விட்டும் எங்கோ சென்றுகொண்டிருக்கின்றோம். இன்னும் ஒருசிலர் இருக்கின்றார்கள். அவர்கள் ‘இருக்கின்ற வேலையில் இறைவனிடம் வேண்டுவதற்கு எங்கே நேரம் இருக்கின்றது?’ என்று குறைபட்டுக்கொள்வார்கள். இத்தகையோர் மரியாவைப் போன்று இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு, அதன்மூலம் இயேசுவுக்கு உகந்தவர்கள் ஆவது நல்லது.

சிந்தனை

‘ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவர்க்கு ஏற்புடையவற்றையும் நாடுகள். அப்போது இவையனைத்தும் உங்கட்குச் சேர்த்து கொடுக்கப்படும்’ (மத் 6: 33) என்பார் இயேசு. ஆகையால், நாம் மரியாவைப் போன்று கடவுளின் வார்த்தையைக் கேட்டு, அதனைத் தியானிக்கவும் வாழ்வாக்கவும் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ஆனால் தேவையானது ஒன்றே!

ஏறக்குறைய பதினாறு ஆண்டுகளுக்கு முன், என் குருத்துவப் பயிற்சியின் ஆன்மீக ஆண்டில், தியானம் கற்பிக்க வந்த அருள்பணியாளரிடம், 'கண்களை மூடிக்கொண்டே அமர்ந்திருப்பதால் என்ன பயன்? இப்படிச் செய்வதால் என்ன மாற்றம் நடக்கும்? உலகில் அநீதி மறையுமா? புதிய கண்டுபிடிப்புக்கள் நடக்குமா? நாம் பல இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியுமா? பலருக்குப் பணி செய்ய முடியுமா? புதியவற்றைக் கற்க முடியுமா? சும்மா யார் வேண்டுமானாலும் கண்களை மூடிக்கொண்டு உட்கார முடியும். இல்லையா?' என்று நான் விவாதித்தது என் நினைவில் இருக்கிறது. பதினாறு ஆண்டுகள் கடந்துவிட்டன. அருள்பணி வாழ்வில் பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. நான் விழித்திருந்தது, பரபரப்பாக வேலை செய்தது, புதிதாகக் கற்றது போன்றவற்றால் உலகில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்பதை இன்று நான் கற்றுக்கொண்டேன். உலகம் தன் போக்கில் இயங்குகிறது. என் வேகத்தால் என்னில் மாற்றம் ஏற்பட்டதைவிட என் உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றே நான் உணர்கிறேன்.

நிறைய வேகம். நிறைய செயல்பாடுகள். எந்நேரமும் எதையே செய்துகொண்டிருக்க வேண்டும் என்று உலகம் சொல்கிறது. நேர மேலாண்மை, உறவு மேலாண்மை, இட மேலாண்மை என்று தன்னுதவி புத்தகங்கள் குவிகின்றன. யூடியூபில் காணொளிகள் நிறைகின்றன. 'உங்கள் நேரத்தை சேமிப்பது எப்படி?' 'உங்கள் பணத்தைச் சேமிப்பது எப்படி?' 'நிறைய நண்பர்களைச் சம்பாதிப்பது எப்படி?' 'குறைவான நேரத்தில் மிகுதியான செயல்களைச் செய்வது எப்படி?' என்று நிறைய 'எப்படி' இருக்கின்றது. நான் வேகமாகச் செல்ல விரும்பவில்லையென்றாலும் நான் எடுத்திருக்கின்ற பொறுப்புக்கள் என்னை வேகமாக இயக்கிக்கொண்டே இருக்கின்றன. கொஞ்ச நேரம் கோவிலில் அமர்ந்தாலும் என் வேலைகளில்தான் என் எண்ணம் இலயிக்கின்றது. என் வேலைகளுக்காக நான் தியாகம் செய்யும் நேரம் என் செப நேரமாகவே இருக்கின்றது. ஏன் இந்த வேகம்? ஏன் இவ்வளவு செயல்பாடுகள்? எனக்கு ஏன் நிறையப் பேரைத் தெரிய வேண்டும்? நான் ஏன் எல்லாரிடமும் நட்போடு இருக்க வேண்டும்? நான் ஏன் எல்லாக் குறுஞ்செய்திகளுக்கும் பதில் அனுப்ப வேண்டும்? நான் ஏன் எல்லா ஃபோட்டோக்களையும் விரும்ப வேண்டும்? நான் ஏன் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக்கொள்ள வேண்டும்? நான் ஏன் ஆன்லைன் பேங்கிங் செய்ய வேண்டும்?
ஒன்றுமே செய்யாமல் ஓய்ந்திருத்தல் தகாதா?
இலக்குகளே இல்லாமல் வாழ்வது கூடாதா?
வாழ்வே இலக்கு என்று இருக்கும் போது வாழ்வதற்கு ஏன் இழக்குகள்?

என்னுடைய இன்றைய நாள் முழுமையாக வாழாதபோது எதற்காக நாளைக்கான சேமிப்புகள்? என் நண்பர்கள் நாளை என்னோடு இருப்பார்கள் என்பதற்காக நான் அவர்களோடு இன்று பழகுகிறேனா? ஏன் எல்லாவற்றையும் நான் நாளைக்காகச் செய்ய வேண்டும்?

ஒரு பக்கம் செய்ய வேண்டிய வேலை. இன்னொரு பக்கம் எடுக்க வேண்டிய ஓய்வு. இப்படிப்பட்ட குழப்பமான தருணத்தில் ஆண்டவரின் வார்த்தை இன்று நமக்கு ஆறுதலாக வருகிறது: 'ஆனால் தேவையானது ஒன்றே' என்கிறார் ஆண்டவர்.

'தேவதாரு மரங்களருகே ஆண்டவர் ஆபிரகாமுக்குத் தோன்றினார்' என்று தொடங்குகிறது இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 18:1-10). 'டைட்டன் ஷோரூம்,' 'கீர்த்தி டென்டல் கிளினிக்,' 'வோடஃபோன் ஷோரூம்,' 'சித்தி விநாயகர் கோவில்' என்று லேன்ட்மார்க்குகள் தோன்றாத அந்த நாட்களில் மரங்களை வைத்தேதான் இடங்கள் அடையாளம் சொல்லப்பட்டன. ஆண்டவர் ஆபிரகாமுக்குத் தோன்றிய இடம் அப்படிப்பட்ட ஒரு லேன்ட்மார்க் தான். தன் கூடாரத்தின் வாயிலில் அமர்ந்திருக்கும் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்க 'மூன்று மனிதர்கள் நிற்கின்றார்கள்.' இந்த 'மூன்று மனிதர்கள்'தாம் 'மூவொரு இறைவனின்' முதல் அடையாளம் என்கிறது நம் கத்தோலிக்க இறையியல். 'ஆபிரகாமின் காத்திருத்தல்' பற்றி வாசிக்கின்ற வாசகருக்கு இரண்டு விடயங்கள் புரிகின்றன: (அ) ஆபிரகாம் வாழ்வில் ஏதோ முக்கிமான நிகழ்வு ஒன்று நடக்கப் போகிறது. (ஆ) ஆபிரகாமின் காத்திருத்தல் அவரின் விருந்தோம்பல் பண்புக்குச் சான்றாக அமைகிறது.

முதலில் ஆபிரகாமின் காத்திருத்தலைப் புரிந்து கொள்வோம். தொடக்க கால சமூகத்தில், குறிப்பாக பாலைநிலங்கள் மிகுந்திருந்த மத்திய கிழக்கு பகுதியில் 'விருந்தோம்பல்' முதன்மையான மதிப்பீடாகக் கருதப்பட்டது. 'நீ இன்று ஒருவருக்குக் கொடுக்கும் தண்ணீரை நாளை உனக்கு வேறொருவருக்குக் கொடுப்பார்' என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. ஆகையால் வழிப்போக்கர்கள் யார் வந்தாலும், அவர்களுக்கு விருந்தோம்பல் செய்வது மத்திய கிழக்கு நாட்டு மரபு. விருந்தோம்பல் மிக மேன்மையான மதிப்பீடாகக் கருதப்பட்டதால்தான், லோத்து தன் இல்லத்தில் வந்திருக்கும் விருந்தினர்களைக் காப்பாற்றுவதற்காக தன் இரு மகள்களை பாலியல் பிறழ்வுக்கு உட்படுத்தத் தயாராக இருக்கின்றார் (காண். தொநூ 19). ஆக, ஆபிரகாமின் காத்திருத்தலும், அந்நியர்களைக் கண்டவுடன் அவர்களை ஓடிச் சென்று வரவேற்றலும், உணவு தந்து உபசரிப்பதும் அவரின் விருந்தோம்பலைக் காட்டுகின்றது. தன் வேலையை அவர் சாராவுடன் பகிர்ந்து செய்கின்றார். இவ்வாறாக, விருந்தோம்பலில் பெண்களும் சம உரிமை பெறுகின்றனர்.

இரண்டாவதாக, ஆபிரகாமின் வழ்வில் நடக்கப் போகும் முக்கியமான நிகழ்வு. ஆபிரகாமின் விருந்தோம்பலில் நிறைவு பெற்ற மூன்று மனிதர்கள் ஆபிரகாமிடம், 'நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்' (18:10) என அவருக்கு ஒரு மகனை வாக்களிக்கின்றனர். இந்த வாக்குறுதியைக் சாராவும் கேட்கின்றார். கேட்ட சாரா டக்கென சிரித்து விடுகின்றார். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மகன் 'ஈசாக்கின்' பெயரின் பொருளும் அதுவே - 'அவன் என் சிரிப்பு' அல்லது 'அவன் என் மகிழ்ச்சி.' இவர்களின் இந்த வாக்குறுதி ஆபிரகாம் வாழ்வில் மிக முக்கியமானது. ஏனெனில், ஆபிரகாம்-சாரா தம்பதியினிரின் முதிர்வயதைக் கணக்கில் கொண்டு, இந்த வாக்குறுதி நிறைவேறுமா, இல்லையா என்ற சந்தேகம் வாசகர்களின் மனதில் எழுகின்றது. மேலும், தொநூ 12ல், 'உன் இனத்தைப் பலுகிப் பெருகச் செய்வேன்' என்று ஆண்டவர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதி நிறைவேறப்போகிறது என்ற நம்பிக்கை எழுகின்றது. தன்னுடைய முதிர்வயதில், தன்னுடைய விருந்தோம்பலில் கருத்தாயிருந்து, தன்னுடைய குழந்தையின்மை பற்றி வருந்திக்கொண்டிருந்த ஆபிரகாம் அந்த மூவரின் பாதங்களில் அமர்ந்ததால் சிரிக்கும் செய்தியைப் பெறுகின்றார். 'தேவையான ஒன்றை' பெற்றுக்கொள்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கொலோ 1:24-28), கிறிஸ்துவின் துன்பம் மற்றும் மாட்சி பற்றிய இறையியலை கொலோசை நகரத் திருஅவைக்கு எழுதும் பவுல், தான் இந்த நேரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் துன்பமும், திருஅவையினர் பட்டுக்கொண்டிருக்கும் துன்பமும் கிறிஸ்துவில் அவர்கள் இணைந்திருப்பதற்கான அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டி, துன்பத்தைப்போல மாட்சியும் பின்தொடரும் என வாக்குறுதி தருகின்றார். வெளியே தங்களுடைய ஆறுதலைத் தேடிக்கொண்டிருந்த கொலோசை நகர மக்களிடம், 'உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து' என்று பவுல் அவர்களைத் தங்களுக்கு உள்ளே கடந்து செல்லத் தூண்டுகின்றார். வெளியில் இருப்பவை தேவையற்றவை என உணர்கின்ற பவுல், உள்ளிருக்கும் அந்தத் தேவையானது நோக்கி அவர்களை அனுப்புகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (லூக் 10:38-42), கடந்த வாரம் நாம் வாசித்த 'திருச்சட்ட அறிஞரின் கேள்வி மற்றும் நல்ல சமாரியன் எடுத்துக்காட்டின்' (லூக் 10:25-37) தொடர்ச்சியாக இருக்கிறது. 'உன்னை அன்பு செய்வது போல உனக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்வாயாக!' என்ற பிறரன்புக் கட்டளையின் விளக்கமாக 'நல்ல சமாரியன் எடுத்துக்காட்டு' இருக்கிறது என்றால், 'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் ஆண்டவரை அன்பு செய்வாயாக என்ற இறையன்புக் கட்டளையின் விளக்கமாக இருக்கிறது 'மார்த்தா-மரியா எடுத்துக்காட்டு.' 'ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்' (10:30) என்று 'நல்ல சமாரியன் எடுத்துக்காட்டு' தொடங்குவதுபோல, 'பெண் ஒருவர் இயேசுவை தன் இல்லத்தில் வரவேற்றார்' (10:38) என்று தொடங்குகிறது. பெண்ணின் வரவேற்பை ஏற்று அவரின் இல்லத்திற்குள் நுழைந்த இயேசுவின் செயல், இயேசு தனது சீடர்களுக்குக் கொடுத்த மறைத்தூது அறிவுரையை அவரே வாழ்ந்து காட்டுவதாக இருக்கின்றது: 'உங்களை வரவேற்பவர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். உங்கள் முன் வைப்பவற்றை உண்டு, நலமற்றவர்களுக்கு நலம் தந்து, இறையரசு வந்துவிட்டது என அறிவியுங்கள்!' (லூக் 10:8). நற்சீடரின் பண்பு 'பார்ப்பது' என்று 'நல்ல சமாரியனும்,' நற்சீடரின் இன்னொரு பண்பு 'பாதத்தில் அமர்ந்து கேட்பது' என்று 'மரியாவும்' சீடத்துவ பாடம் கற்றுத்தருகின்றனர். ஆணாதிக்கமும், தூய்மை-தீட்டு வித்தியாசம் காணுதலும் மேலோங்கி நின்ற யூத மரபுக்குமுன், ஒரு பெண்ணையும், ஒரு சமாரியனையும் சீடத்துவத்தின் முன்மாதிரிகள் என்று நிறுத்துவது இயேசுவின் மரபுமீறலுக்குச் சான்று.

மார்த்தா இயேசுவை தன் இல்லத்திற்கு வரவேற்று விருந்தோம்பல் செய்கின்றார். மார்த்தாவைப் பற்றி தொடர்ந்து எதையும் பதிவு செய்யாமல், அவரின் சகோதரி மரியாவை வாசகருக்கு அறிமுகம் செய்கின்றார் லூக்கா. இயேசுவின் பாதங்கள் அருகே அமர்ந்து அவரின் வார்த்தைக்குச் செவிமடுப்பவராக அறிமுகம் செய்யப்டுகின்றார் மரியா. 'பாதத்தில் அமர்வதும்,' 'வார்த்தைகளைக் கேட்டலும்' சீடத்துவத்தின் இரண்டு முக்கிய பண்புகளாகக் கருதப்பட்டன (காண். திப 22:3, லூக் 5:1, 8:11, 21). யூதர்கள் நடுவில் துலங்கிய ரபிக்களின் பின்புலத்தில் இந்த நிகழ்வைப் பார்ப்போம். யூதர்களின் மிஷ்னா, 'உங்கள் இல்லம் ஞானியரின் சந்திப்பு இல்லமாக இருப்பதாக. ஞானியர் உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களின் காலடிகளில் அமர்ந்து அவர்களின் வார்த்தைகளால் உங்கள் தாகம் தீர்த்துக்கொள்ளுங்கள். பெண்கள் அதிகம் பேசவேண்டாம்' என்று கூறுகின்றது. ரபிக்கள் இல்லங்களுக்குள் நுழைவதுபோல இயேசுவும் நுழைகின்றார். ஆனால், மரியா இயேசுவின் காலடிகளில் அமர்வது ஒரு மரபு மீறல். ஏனெனில் ரபிக்களின் வருகையின் போது அவர் அருகில் அமர்ந்து போதனையைக் கேட்க தகுதி பெற்றவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்ட யூத ஆண்கள் மட்டுமே. யூத சிந்தனையின்படி, இங்கே சரியாகச் செயல்பட்டவர் மார்த்தா தான். ரபியின் வருகையின் போது அவரை உபசரிப்பதில் காட்ட வேண்டிய அக்கறையையும், பரபரப்பையும் சரியாகக் கொண்டிருக்கின்றார் மார்த்தா. ஆனால் இயேசு, மரியாவின் செயலை மேன்மையானதாகக் காட்டி, மார்த்தாவின் பரபரப்பையும், கவலைகளையும் சுட்டிக்காட்டி மீண்டும் ஒரு புரட்டிப்போடுதலைச் செய்கின்றார்.

முட்செடிகளின் நடுவே விழுந்த விதைக்கு உதாரணமாக இருக்கின்றார் மார்த்தா. ஏனெனில் கனி கொடுக்க விடாமல் அவரின் 'கவலையும், வாழ்வின் கவர்ச்சிகளும்' தடுக்கின்றன (காண். லூக் 8:14). தன் சமூகம் தனக்குக் கொடுத்த வேலையை சிரமேற்கொண்டு செய்பவராக மார்த்தா இருந்தாலும், 'மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை' (காண். 4:4) என்று உணர்ந்த அவரின் சகோதரி மரியா, 'எல்லாவற்றையும் துறந்தவராய் இயேசுவை மட்டும் பின்பற்றத் துணிகின்றார்' (காண். 5:11, 28). திருத்தூதர் பணிகள் நூலிலும், 'எந்தப் பணி முக்கியமானது? உணவு பரிமாறுவதா? அல்லது இறைவார்த்தையை அறிவிப்பதா?' என்ற கேள்வி எழும்போது, 'இறைவார்த்தை அறிவிப்பை' தேர்ந்து கொள்ளும் திருத்தூதர்கள், 'உணவு பரிமாறுவதற்காக' திருத்தொண்டர்களை ஏற்படுத்துகின்றனர் (காண். 6:1-6).

'மார்த்தா, மார்த்தா' என இருமுறை அழைத்து அவரைக் கடிந்து கொள்ளும் இயேசு, 'இறையன்பும், இறைவார்த்தைக்குச் செவிமடுத்தலும்' எல்லாவற்றையும் விட மேன்மையானது என்று உணர்த்துகின்றார். ('செவிக்கு உணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்' - ??? - என்று வள்ளுவப் பெருந்தகை சொல்வதும் இதற்கு ஒத்து இருக்கின்றது).மரியாள் 'தேர்ந்துகொள்ளப்பட்டவரையே' (9:35) தேர்ந்து கொள்கின்றார். அதுவே அவர் தேர்ந்து கொள்ளும் நல்ல பங்கு. அது அவரிடமிருந்து எடுக்கப்படாது.


இன்று நான் 'தேவையானது அந்த ஒன்றை தேர்ந்துகொள்வது' எப்படி?

1. தேவையானது எது என்பதை முதலில் நான் அறிய வேண்டும்
'இறைவன் ஒருவரே தேவையானவர். மற்றவர் அல்லது மற்றவை தேவையற்றவர்கள் அல்லது தேவையற்றவை' என்று எளிதாகச் சொல்லிவிட முடியுமா? தேவையான அந்த இறைவன் இன்று மற்றவர்கள் வழியாகத் தானே வருகின்றார். மருத்துவமனையில் நோயுற்றிருக்கும் நம் நண்பர் அல்லது உறவினர் அருகில் இருப்பது தேவையற்றதா? சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டுவது தேவையற்றதா? அழுதுகொண்டிருக்கும் என் நண்பரின் அழுகையைத் துடைப்பது தேவையற்றதா? ஆலயத்தில் அமர்ந்துகொண்டிருப்பது மட்டுமே தேவையானதா? சில நேரங்களில் நம்முடைய பொறுப்பைப் தட்டிக்கழித்துவிட்டு ஆலயத்தில் அமர்வதே பாவமாகி விடும். என்னைப் பொறுத்தவரையில் 'என் மூளை சொல்வதை நான் கேட்கும்போதெல்லாம் தேவையற்றதை நான் நாடுகிறேன். என் மனம் சொல்வதை நான் கேட்கும்போதெல்லாம் தேவையானது ஒன்றை நான் நாடுகிறேன்.' 'அவனைப் பார். நிறையப் படிக்கிறான். நீயும் படி!' - இது மூளையின் சொல். 'அவளைப் பார். உன்னைவிட அழகாக இருக்கிறாள். அதை வாங்கு!' 'அவன் உன்னைவிடப் பணக்காரன். நீ பணம் சம்பாதி!' 'அவன் வெற்றியாளன். நீயும் கடினமாக உழை!' இப்படி மூளை சொல்வது எல்லாமே நம்மைப் பரபரப்பாக்கிவிடும். ஒருவர் மற்றவரோடு நம்மை ஒப்பீடு செய்யத் தூண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றி புகார் அளிக்கத் தூண்டும். ஆனால், மனம் சொல்வதைக் கேட்பவர் மௌனமாகிறார். அல்லது மௌனமாக இருக்கும் ஒருவரே மனம் சொல்வதைக் கேட்க முடியும். ஆக, என் மூளையின் ஓசைகளைக் குறைத்து மனத்தின் மௌனம் நோக்கி நான் செல்ல வேண்டும்.

2. அமர வேண்டும் அமர்தல் என்பது கீழை மரபில் செவிமடுத்தலின், பணிவிடையின், ஏற்றுக்கொள்தலின் அடையாளம். மார்த்தா நின்று கொண்டிருப்பதால் அமர்ந்திருக்கும் இயேசுவுக்கு மேல் இருக்கிறாள். மரியாள் அமர்ந்திருப்பதால் இயேசுவுக்கு கீழ் இருக்கிறாள். நின்றுகொண்டிருப்பது நல்லதுதான். ஆனால் அது மேட்டிமை உணர்வையும் பரபரப்பையும் உண்டாக்கிவிடும். 'தலைவன் நானே இங்கு அமர்ந்திருக்கிறேன். ஊழியக்காரி நீ ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்?' என்று மார்த்தாவை மனதிற்குள் கேட்டிருப்பார் இயேசு. ஆக, வாழ்வில் எதற்கும் நாம் தலைவர்கள் அல்லர். தலைவர் இறைவனே அமர்ந்திருக்கிறார். ஊழியன் நான் ஏன் பரபரப்பாக நின்றுகொண்டிருக்க வேண்டும்?

p>3. கேட்க வேண்டும் அடுத்தவர் சொல்வதை நான் கேட்க வேண்டும் என்றால், இறைவனின் வார்த்தையை நான் கேட்க வேண்டும் என்றால், மீன் மார்க்கெட் போல இருக்கின்ற என் மனம் நூலகம் போல அமைதியாக வேண்டும். ஒரே நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் எட்டு ப்ரொஜெக்டர்களையும் ஒவ்வொன்றாக நான் அணைக்க வேண்டும். அப்போதுதான் குரல் கேட்கும், படம் தெரியும். இன்று நான் நிறையப் பாடல்கள் கேட்கிறேன், காணொளிகள் காண்கிறேன், உரையாடல்கள் செய்கிறேன். ஆனால், எல்லாம் முடிந்தவுடன் வெறுமையே மிஞ்சுகிறது. அப்படி என்றால் என் மனம் இன்னும் எதையோ கேட்க விரும்புகிறது. அதுதான் அவரின் குரல்.

இறுதியாக, இன்று நான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் அனைத்தையும் பட்டியலிடுகிறேன். 'ஏன் பரபரப்பாகிப் பதறுகிறாய்?' என்று அவரின் குரல் என்னில் கேட்கிறது. ஒன்றும் செய்யாமல் அவரின் பாதங்களில் அமர்வதே அவர் எனக்கு விடுக்கும் அழைப்பாக இருக்கிறது. நான் கொஞ்ச நேரம் அமர்ந்து பார்க்கிறேன். என் மௌனம் என்னைக் கொல்கிறது. எனவே, மெதுவாக என் இயர்ஃபோனை எடுத்து நான் காதுகளில் மாட்டுகிறேன். யாரோ எதையோ சத்தமாகப் பாடிக்கொண்டிருக்கிறார்.

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com