மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் பதினான்காம் ஞாயிறு
மூன்றாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 66: 10-14; | கலாத்தியர் 6: 14-18; | லூக்கா 10: 1-12, 17-20)

இயேசுவின் தூதுவர்களாய்...


நிகழ்வு
பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஸ்காட்லாந்தில் உள்ள பெல்ஹெல்வி (Belhelvie) என்ற ஊரில் ஜார்ஜ் ஸ்டாட் (George Stott 1835 -1889) என்றோர் ஆசிரியர் இருந்தார். அவர்க்கு ஒரு கால் கிடையாது. இளம்பிள்ளை வாதத்தால்தான் அவர் தன் காலை இழந்திருந்தார். ஆனாலும், அவர் துடிப்புமிக்க ஓர் ஆசிரியராய்ப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சீனாவில் மறைபரப்புப் பணியைச் செய்துவந்த ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் என்பர் என்பவர் ஜார்ஜ் ஸ்டாட் வழக்கமாகச் செல்லும் ஆலயத்திற்கு வந்து, “யாராரெல்லாம் சீனாவில் ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்க ஆர்வமாய் இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவர் இவ்வாறு கேட்டதற்கு ஆலயத்தில் இருந்த யாரும் தங்களுடைய விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை. பின்வரிசையில் உட்கார்ந்திருந்த ஜார்ஜ் ஸ்டாட் மட்டும், “நான் ஆர்வமாய் இருக்கின்றேன்” என்று தன்னுடைய கையை உயர்த்தினார். அதற்கு ஹட்சன் டெய்லர் அவரிடம், “உங்கட்குத்தான் ஓர் கால் இல்லையே! நீங்கள் எப்படி சீனாவிற்கு வந்து நற்செய்தியை அறிவிக்க முடியும்?” என்று கேட்பதற்கு, அவர், “இரண்டு கால்கள் நன்றாக உள்ளவர்கள் சீனாவிற்கு வந்து நற்செய்தி அறிவிக்க விருப்பம் தெரிவிக்காததால், ஒற்றைக் காலுள்ள நான் விருப்பம் தெரிவித்தேன்” என்றார்.

இதைக்கேட்டு ஹட்சன் டெய்லர் மிகவும் மகிழ்ந்துபோய் அவரைக் கட்டித்தழுவி முத்தமிட்டார். பின்னர் அவர் ஜார்ஜ் ஸ்டாட்டிற்கு செயற்கைக் காலினைப் பொருத்தி, சீனாவில் நற்செய்தியை அறிவிக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். 1865 ஆம் ஆண்டு சீனாவிற்குச் சென்ற ஜார்ஜ் ஸ்டாட் ஏறக்குறைய இருபத்தி ஆறு ஆண்டுகள் ஆண்டவரின் நற்செய்தியை மிகுந்த உத்வேகத்தோடு அறிவித்து, பலரும் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்குக் காரணமாக இருந்தார். இன்றைக்கு சீனாவில் கிறிஸ்துவம் இந்தளவுக்கு வேரூன்றி இருக்கின்றதென்றால், அதற்கு இவர் ஆற்றிய பணிதான் காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

தனக்கு ஒரு காலை இல்லை என்பதைக்கூட ஒரு குறையாகக் கருதாமல், ஆண்டவரின் நற்செய்தியை மிகுந்த வல்லமையோடு அறிவித்த ஜார்ஜ் ஸ்டாட் நமது கவனத்திற்கு உரியவர். இவரைப் போன்று நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் நற்செய்தியை எல்லா மக்கட்கும் எடுத்துரைவேண்டும் என்பதை இன்றைய இறைவார்த்தை எடுத்துச் சொல்கின்றது. எனவே, நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

நற்செய்தியானது எல்லா மக்கட்கும் அறிவிக்கப்படவேண்டும்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு எழுபத்தி இரண்டு அல்லது எழுபது சீடர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நிகழ்விற்கும் இயேசு பன்னிரு திருத்தூதர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்ற நிகழ்விற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். இயேசு பன்னிரு திருத்தூதர்களை பணித்தளங்கட்கு அனுப்புகின்ற நிகழ்வில், அவர் அவர்களைக் கலிலேயாப் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றார் (மத் 10; லூக் 9: 1-11). ஆனால், இயேசு எழுபத்தி இரண்டு சீடர்களை அனுப்புகின்ற நிகழ்வில் அவர்களை யூதேயப் பகுதிக்கு அனுப்பி வைக்கின்றார். முன்னவர்களோ திருத்தூதர்கள், பின்னவர்களோ சீடர்கள்.

இயேசு எழுபத்தி இரண்டு சீடர்களை அனுப்புகின்ற நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே இடம்பெறுகின்றது. இதன்மூலம் நற்செய்தியாளர் நமக்குச் சொல்லவருகின்ற செய்தி, இயேசுவின் நற்செய்தி எல்லா நாட்டு மக்கட்கும் அறிவிக்கப்படவேண்டும் என்பதாகும். இதை எப்படிப் புரிந்துகொள்வது என்றால், தொடக்க நூல் பத்தாம் அதிகாரத்தில் எழுபது நாடுகள் குறிப்பிடப்படுகின்றன. (அக்காலத்தில் எழுபது நாடுகள்தான் இருந்திருக்கும் போல). இயேசு, அந்த எழுபது நாடுகட்கும் தன் சீடர்களை அனுப்புவதைக் குறிக்கின்ற விதமாக எழுபது அல்லது எழுபத்தி இரண்டு சீடர்களை அனுப்புகின்றார். இவ்வாறு அவர் எல்லா மக்களும் தன்னுடைய நற்செய்தியை அறிந்துகொள்ளச் செய்கின்றார்.

நற்செய்திப் பணி ஆண்டவரை நம்பிச் செய்யப்படவேண்டும்

இயேசு தன்னுடைய நற்செய்தியானது எல்லா மக்கட்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார் என்று மேலே பார்த்தோம். இப்பொழுது தன்னுடைய நற்செய்தியை அறிவிக்கக்கூடியவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கின்றார் என்று இப்பொழுது பார்ப்போம்.

இயேசு எழுபத்தி இரண்டு பேரை அனுப்புகின்றபோது, தான் போகவிருந்த இடங்கட்கு தனக்கு முன்பாக, தன் சார்பாக அனுப்புவதாக நற்செய்தியாளர் பதிவுசெய்கின்றார். அப்படியானால், இயேசுவின் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொருவரும் அவருடைய நற்செய்தியை அறிவிக்கவேண்டுமே ஒழிய, தன்னுடைய நற்செய்தியை அறிவிக்கக்கூடாது. அடுத்ததாக, பயணத்திற்கு பணப்பையோ, வேறு பையோ மிதியடிகளோ எதுவும் எடுத்துச் செல்லவேண்டும் என்று கூறுகின்றார். இதற்குக் காரணம், நற்செய்திப் பணி என்பது ஆண்டவருடைய பணி, ஆண்டவரை நம்பிச் செய்யப்படும் பணி. அப்படிப்பட்ட பணியை பணத்தையோ, பொருளையோ நம்பிச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் இயேசு அவ்வாறு சொல்கின்றார். மேலும், இயேசு குறிப்பிடுவது போல, ‘வேலையாள் கூலிக்கு உரிமையுடைவர்’ (லூக் 10:17). அப்படியிருக்கும்போது, யாராரெல்லாம் நற்செய்தியைக் கேட்கின்றார்களோ அவர்களெல்லாம் நற்செய்தியை அறிவிக்கின்றவர்கட்கு உணவும் உடையும் உறைவிடமும் தருவது அவர்களுடைய கடமையாகும்.

இயேசு தன்னுடைய சீடர்களிடம், வழியில் எவர்க்கும் வணக்கம் செலுத்தவேண்டாம் என்று குறிப்பிடுகின்றார். அதற்குக் காரணம், அறுவடை அதிகமாக இருக்க, வேலையாட்களோ மிகவும் குறைவாக இருக்கின்றார்கள். இப்படி இருக்கும்போது எல்லார்க்கும் வணக்கம் தெரிவித்துக்கொண்டிருந்தால், நற்செய்திப் பணியைச் செய்து முடிக்கமுடியாது என்பதற்காக அப்படிக் கூறுகின்றார். ஆகையால், விரைவாக அதுவும் ஆண்டவரை நம்பிச் செய்யப்படவேண்டிய நற்செய்திப் பணியை அவரை நம்பிச் செய்வது மிகவும் நல்லதாகும்.

நற்செய்திப்பணி செய்ய ஆண்டவர் ஆற்றலைத் தருகின்றார்

எல்லா மக்களையும் சென்றடைய வேண்டிய நற்செய்திப் பணி எத்துணை முக்கியமானது என்பதைச் சிந்தித்துப் பார்த்த நாம், நற்செய்திப் பணியைச் செய்வோர்க்கு இறைவன் தருகின்ற பாதுகாப்பையும் வல்லைமையும் நாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகவும்.

நற்செய்திப் பணியைச் செய்கின்றபோது ஓநாய்கள் போன்று பகைவர்களிடமிருந்து எதிர்ப்பும் இன்னலும் இடையூறும் வரலாம். இத்தகைய தருணங்களில் இறைவன் நம்மைக் கைவிட்டு விடமாட்டார் என்பதை இறைவார்த்தை மிக அழகாக எடுத்துச் சொல்கின்றது. திருத்தூதர்களைப் பணித்தளங்கட்கு அனுப்புகின்றபோது, பேய்களை ஒட்டவும் பிணிகளைப் போக்கவும் இயேசு அதிகாரமும் வல்லமையும் கொடுத்தார் என்று லூக் 9:1 ல் வாசிக்கின்றோம். அத்தகைய வல்லமையையும் அதிகாரத்தையும் உடனிருப்பையும் சீடர்கட்கும் தந்தார் என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். அதனால்தான் சீடர்கள் பணித்தளங்கட்குச் சென்று, திரும்புகின்றபோது, “உம் பெயரைச் சொன்னால் பேய்கள்கூட அடிபணிகின்றன” என்கின்றார்கள்.

ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற ஒவ்வொருவரும் அவருடைய நற்செய்தியை அறிவிப்பது நம் ஒவ்வொருவருடைய கடமை என்பதை உணர்ந்து, அவர்தரும் ஆற்றலையும் வல்லமையும் பாதுகாப்பையும் உணர்ந்து அவருடைய பணியைச் செய்வோம்.

சிந்தனை

‘நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்’ (எரே 1: 18,20) என்று இறைவாக்கினர் எரேமியாவைப் பார்த்து ஆண்டவர் கூறுவார். இதே வார்த்தைகளைத் தான் நம் ஒவ்வொருவரையும் பார்த்து ஆண்டவர் கூறுகின்றார். ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் அவருடைய நற்செய்திப் பணியை மனவுறுதியோடு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

அவர் மடியில் மகிழ்ச்சி!

ஒரு குழுவினர். அவர்கள் சென்றார்கள். அவர்கள் வெறுங்கையராய்ச் சென்றார்கள். அவர்கள் ஆட்டுக்குட்டிகளைப் போல சாந்தமாக இருந்தார்கள். அவர்களைச் சுற்றியிருந்தவர்களோ ஓநாய்களைப் போல ஆபத்தானவர்களாய் இருந்தார்கள். அவர்கள் கைகளில் ஒன்றுமில்லை. தோளில் பைகள் இல்லை. மாற்று உடைகள் இல்லை. அரையில் பணம் இல்லை. பாதங்களில் மிதியடிகள் இல்லை. அவர்கள் போகும் வழியில் யாருக்கும் வணக்கம் செலுத்தவில்லை. ஏனெனில் அடுத்தவருக்கு வணக்கம் செலுத்தி முகஸ்துதி செய்யும் குணமும் அவர்களிடம் இல்லை. யாருடைய உறவும் அவர்களுக்குத் தேவையாய் இல்லை. உறவுகளை அவர்கள் சுமைகளாய் நினைத்தார்கள். தங்கள் கண்களில் பட்ட வீட்டிற்குள் நுழைந்தார்கள். அவர்கள் முன் வைக்கப்பட்டதை உண்டார்கள். அங்கிருந்தவர்களின் நோய்களைக் குணமாக்கினார்கள். இறையரசு வந்துவிட்டது என்ற செய்தியைச் சொன்னார்கள். சிலர் கதவுகளைத் திறந்து ஏற்றுக்கொண்டனர். பலர் கதவு இடுக்கின் வழியே இவர்களைப் பார்த்துவிட்டு, கதவுகளைத் திறக்கவில்லை. சிலர் இவர்களோடு வாக்குவாதம் செய்தனர். சிலர் இவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. இவர்களின் வேலை முடிந்து தன் தலைவரிடம், தன்னை அனுப்பியவரிடம் திரும்பினார்கள். இவர்களின் உள்ளத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி. இவர்களைப் பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். ஒன்றும் இல்லாமல் இருந்தாலும், எல்லாவற்றையும் இழந்தவர்களாக இருந்தாலும் எப்படி இவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? அவர்களின் தலைவர் அவர்களின் மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்துகின்றார்: 'உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்று மகிழுங்கள்!' என்கிறார். மனிதர்களின் நினைவில் மறைந்துவிடும் இவர்களின் பெயர்கள் அழியாத இடத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.

இன்னொரு குழுவினர். செழிப்பாக வாழ்ந்தார்கள். நிலம், கடவுள், ஓய்வுநாள், திருச்சட்டம் என வாழ்க்கை இனிதே நகர்ந்தது. ஆனாலும், உடன்படிக்கை மீறலால் நாடுகடத்தப்பட்டார்கள். அடிமைகளாக அடுத்த நாட்டிலும், அநாதைகளாக சொந்த நாட்டிலும் திரிந்தனர். அவர்களின் இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற ஆண்டவராகிய கடவுள் அவர்களைத் தன் தோள்மேல் சுமந்து, 'இதோ! என் மகன்! என் மகள்!' என வலம் வருகின்றார். 'உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும்' என்கிறார் அவர்.

இருவருமே இழந்தார்கள்! ஆனால், இழந்த அவர்களை அவர் தன் மடியில் ஏந்திக்கொண்டார். அவரின் மடியில் மகிழ்ச்சி. அவரின் மடியில் மட்டுமே மகிழ்ச்சி!

கடந்த இரண்டு வாரங்களாக இயேசு தரும் சீடத்துவத்தின் பாடங்களைச் சிந்தித்தோம். தன்னை மறுப்பதும், தன் சிலுவையைச் சுமந்து கொண்டு இயேசுவை நாள்தோறும் பின்பற்றுதலுமே சீடத்துவம் என்று கற்பித்த இயேசு தன் சீடர்கள் எழுபத்திரண்டு பேரை இறையரசுப் பணிக்கு அனுப்புவதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 10:1-12, 17-20) வாசிக்கக் கேட்டோம். எல்லாவற்றையும் இழந்தவர்களாய் அவர்களை வழியனுப்பும் இயேசு, இறைவனின் மடியில் தங்கள் மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள அவர்களுக்குக் கற்பிக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 66:10-14), பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட யூதா குலத்தினர் தங்களின் சொந்த நகராம் எருசலேம் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையின் செய்தியை விதைக்கின்ற மூன்றாம் எசாயா, எருசலேமை ஒரு தாயாக உருவகித்து அந்தத் தாயை நோக்கி அனைத்து நாட்டினரும் வர வேண்டும் எனவும், அவளின் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டும் எனவும் அழைக்கின்றார்.

'தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல நான் உங்களைத் தேற்றுவேன். எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள்' (66:13) என்று கடவுளைத் தாயாக உருவகிக்கும் எசாயா, அதே உருவகத்தைக் கொண்டு எருசலேமையும் உருவகிக்கின்றார். 'அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகள்,' 'அவளின் மார்பு,' 'பால்,' 'அவளின் மடி' என்னும் வார்த்தைகள் புதிதாக குழந்தையைப் பெற்றெடுத்த இளம் தாயை நம் கண்முன் கொண்டு வருகின்றன. எருசலேம் நகரம் இயற்கையாகவே மலைப்பாங்கான பகுதி. மலைமுகடுகளை மார்பாக உருவகிக்கின்ற எசாயா, முகடுகளில் வழிந்தோடும் நீரைப் பால் எனவும், முகடுகள் ஏற்படுத்தும் பள்ளத்தாக்குகளை தாயின் மடி என்றும் உருவகிக்கின்றார். முலைகள், மார்பு, பால், மடி போன்றவை குழந்தைக்கு மகிழ்ச்சி, நிறைவு, அல்லது இன்பம் தந்தாலும், இந்த மகிழ்ச்சிக்கு முன்னால் அந்தத் தாய் அனுபவித்த மரண வேதனையையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். பேறுகால வேதனையுற்று தன் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய், புதிய உயிர் இந்த உலகிற்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் தன் வேதனையை மறந்துவிடுகின்றாள். பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டதும், அங்கே யூதா நாட்டினர் அனுபவத்த துயரங்கள், இழப்புகளும் பேறுகால வேதனை போன்றவைதாம். ஆனால் இன்று அவை மறைந்துவிட்டன. ஏனெனில் இறைவன் அவர்களை மீண்டும் தங்களின் சொந்த ஊருக்கு அழைத்து வந்துவிட்டார் இறைவன். இறைவன் தரும் மீட்பு மற்றும் விடுதலை என்ற புதிய மகிழ்ச்சி அவர்களின் பழைய இழப்புக்களை மறக்கச் செய்கிறது. இழப்பு அவர்களுக்கு மாபெரும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்துவிட்டது.

'

நீங்கள் பால் பருகுவீர்கள்,' 'மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்,' 'மடியில் வைத்து தாலாட்டப்படுவீர்கள்' என மகிழ்ச்சிக்கு மூன்று பரிமாணங்களைத் தருகின்றார் எசாயா. 'பால் பருகுவீர்கள்' - தாய்மையின் நிறைவே இது. ஒரு தாய் தன் இரத்தத்தை பாலாக மாற்றி தன் குழந்தையின் பசி தீர்க்கின்றாள். தன் உடலில் பத்து மாதங்கள் சுமந்து குழந்தைக்கு உடலும், இரத்தமும் கொடுத்த ஒரு தாய் தொடர்ந்து பால் வழியாக தன் உடலையும் இரத்தத்தையும் குழந்தைக்குக் கொடுக்கின்றாள். (தன் உடலையும், இரத்தத்தையும் கொடுக்க வல்லவள் பெண் மட்டுமே. அப்படி இருக்க, இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் எடுத்து, 'இது என் உடல்,' 'இது என் இரத்தம்' என ஓர் ஆண் கொடுப்பதை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்? அப்படி நியாயப்படுத்துவதை இயற்கையை இருட்டடிப்பது போல இருக்கிறதே! சிந்திக்க வேண்டிய கேள்வி.) இறைவனின் இரத்தமும், நாடு திரும்பியவர்களின் இரத்தமும் இனி ஒன்றாகிவிடும். 'மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்' - தாயின் இந்தச் செயல் குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கிறது. மார்பில் அணைத்துச் சுமக்கப்படாத குழந்தைகள் வளர்ந்தவர்களாகும்போது பாதுகாப்பின்மையால் வருந்துகிறார்கள் என்பது உறுதிசெய்யப்பட்ட உளவியல் உண்மை. எதிரிகளின் கைகளில் பாதுகாப்பு இல்லாமல் இருந்தவர்கள் இனி இறைவன் தரும் பாதுகாப்பை பெறுவார்கள். 'மடியில் வைத்து தாலாட்டப்படுவீர்கள்' - எந்த ஒரு ஆபத்தும் இல்லாத நிலையை இது குறிக்கிறது. எந்த ஒரு பதட்டமும், கலக்கமும் இல்லாமல் தரையில் அமர்ந்திருக்கும் தாய் தன் குழந்தையைத் தன் மடியில் அல்லது தொட்டிலில் கிடத்தி தாலாட்டுகிறாள். போரும், வன்முறையும், இயற்கைச் சீற்றமும் இருக்கும் இடத்தில் ஒரு தாயால் அமரவோ, தன் குழந்தையைத் தாலாட்டவோ முடியுமா? இல்லை. ஆக, இனி போர் இல்லை. வன்முறை இல்லை. இயற்கைச் சீற்றம் இல்லை.

ஆக, எல்லாவற்றையும் இழந்தவர்கள் ஆண்டவரின் மடியில் நிறைவான மகிழ்ச்சியைப் பெறுகிறார்கள் முதல் வாசகத்தில்.

தான் அறிவித்த நற்செய்தி, அந்த நற்செய்தியை தான் பெற்ற விதம், தன் பணி, தன் பணியால் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்கள் பெற்ற உரிமை வாழ்வு, அந்த உரிமை வாழ்வால் உந்தப் பெறும் தூய ஆவியானவரின் கனிகள் என எழுதி, கலாத்திய திருஅவையை நம்பிக்கையில் நிலைத்திருக்க அறிவுறுத்தும் பவுல் தன் கடிதத்தை நிறைவு செய்யும் பகுதியே இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கலா 6:14-18). 'நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி, வேறு எதைப் பற்றியும் ஒரு போதும் பெருமை பாராட்ட மாட்டேன்' என்னும் பவுல், 'என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதன் அடையாளம்' என்று சொல்லி பெருமிதம் கொள்கிறார்.

இழப்பின், அழிவின், அவமானத்தின் சின்னமாகிய சிலுவையைப் பற்றி பவுல் எப்படி பெருமைப் பட முடியும்? தன் பணியின் தோல்வி மற்றும் தான் அடைந்த துன்பங்களின் அடையாளமான தழும்புகளைக் கொண்டு எப்படி பெருமிதம் கொள்ள முடியும்? மேலும், 'என்னைப் பொறுத்தவரையில் உலகமும், உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன்' என்கிறார் பவுல். அதாவது, சிலுவை. அந்தச் சிலுவையின் ஒரு பக்கத்தில் உலகம். மறு பக்கத்தில் பவுல். உலகையும், பவுலையும் இணைப்பது சிலுவையும், அந்தச் சிலுவையில் தொங்கும் இயேசுவும். சிலுவையில் அறையப்பட்டிருப்பது வேதனையை, வலியைத் தந்தாலும், அந்த வலிதான் பவுலை இயேசுவோடும், உலகத்தோடும் இணைக்கிறது.

ஆக, வலி, துன்பம், அவமானம், அழிவு அனைத்தும் இழப்புகள் என்றாலும், அந்த இழப்புகள் பவுலுக்கு மகிழ்ச்சியை நிறைவாகக் கொடுக்கின்றன.

சிலுவை என்பதை சீடத்துவத்தின் நீட்சி என்று போதிக்கும் இயேசு தன் சீடர்கள் எழுபத்திரண்டு பேரை தாம் போகவிருந்த ஊருக்கு தமக்கு முன் இருவர் இருவராக அனுப்புகிறார். இந்த நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சில கிரேக்க பிரதிகள் 'எழுபது பேரை' அனுப்பியதாகக் குறிப்பிடுகின்றன. நோவா காலத்து வெள்ளப் பெருக்கிற்குப் பின் இருந்த 72 (அல்லது 70) நாடுகளையும் (காண். தொநூ 10), அல்லது மோசே தன் உதவிக்காக தெரிவு செய்த 72 (அல்லது 70) பேரையும் (காண். விப 24:1, எண் 11:16, 24) இது குறிக்கலாம். இருவர் இருவராக அனுப்பக் காரணம் மோசேயின் சட்டப்படி இருவரின் சாட்சியமே செல்லும் என்பதற்காகவும் (காண். இச 19:15) அல்லது பாலைநிலப் பகுதிகளின் ஆபத்து காரணமாக இருவர் சேர்ந்து அனுப்பப்படுதல் மரபாகவும் இருந்தது. திருத்தூதர் பணிகள் நூலிலும், பேதுரு மற்றும் யோவான் (8:14), பவுல் மற்றும் பர்னபா (11:30, 13:1), பர்னபா மற்றும் மாற்கு (15:39), பவுல் மற்றும் சீலா (15:40) என திருத்தூதர்கள் இருவர் இருவராகவே பணி செய்கின்றனர்.

'இருவர்' என்னும் இலக்கியக்கூறும் இங்கே கையாளப்படுகிறது. இங்கே இயேசு சொல்லும் பழமொழிகளும் இரண்டு: (அ) 'அறுவடையோ மிகுதி. வேலையாள்களோ குறைவு.' (ஆ) ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டி. மக்கள் சீடர்களை ஏற்றுக்கொள்ளும் விதமும் இரண்டு: (அ) 'நேர்முகமாக ஏற்றுக்கொள்வார்கள்.' (ஆ) 'எதிர்மறையாக உதறித் தள்ளுவார்கள்.' இயேசுவின் போதனையும் இரண்டு: (அ) வீட்டிற்குள் போகும் போது என்ன செய்ய வேண்டும்? (ஆ) நகருக்குள் போகும்போது என்ன செய்ய வேண்டும்?

முதல் ஏற்பாட்டில் அறுவடை என்பது வரப்போகும் இறுதித்தீர்ப்பையும், இஸ்ரயேல் மக்கள் ஒன்றுகூட்டப்படுதலையும் குறித்தது (காண். யோவே 3:13, மீக் 4:11-13). அறுவடைக் காலம் என்பது விறுவிறுப்பான காலம். விறுவிறுப்பும், வேகமும் இல்லையென்றால் அறுவடை சாத்தியமல்ல. அறுவடைக் காலத்தில் சோம்பித் திரிந்தால் அது முதலுக்கே மோசம் கொண்டுவந்துவிடும். அறுவடைக்கால வேகம் இயேசுவின் மற்ற அறிவுரையிலும் வெளிப்படுகிறது: 'எதையும் கொண்டு செல்லாதீர்கள் - ஏனெனில், நீங்கள் எதையாவது கொண்டு சென்றால் உங்கள் கவனமெல்லாம் உங்கள் உடைமையில்தான் இருக்கும்!' 'யாருக்கும் வணக்கம் செலுத்தி நேரத்தை வீணாக்காதீர்கள்!' 'இந்த ஊரு, வீடு ஓகேவா, அந்த ஊரு, வீடு ஓகேவா, என ஒவ்வொரு ஊராக, வீடாக மாறிக் கொண்டு இராதீர்கள்!'

பின் என்னதான் செய்ய வேண்டும் அவர்கள்? சீடர்கள் செய்ய வேண்டியது மூன்று காரியங்கள் மட்டுமே: (அ) 'உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள்' - இதுதான் புதிய நற்கருணைப் படிப்பினை. எதையும் முணுமுணுக்காமல் ஏற்றுக்கொள்ளும், தன்னிடம் உள்ளதை அப்படியே பகிர்ந்து கொடுக்கும் உள்ளம்தான் நற்கருணையைக் கொண்டாட முடியும்! (ஆ) 'உடல்நலம் குன்றியோரைக் குணமாக்குங்கள்' - இறையாட்சிப் பணி என்பது ஆன்மீகப் பணி அல்ல. 'நல்லா இருங்க, சாப்பிடுங்க, நான் உங்களுக்காக வேண்டிக்கிறேன், நீங்களும் எனக்காக வேண்டிக்கோங்க!' என வாயிலேயே அவரைப் பந்தல் போடும் பணி அல்ல. மாறாக, உடல்சார்ந்த தேவைகளையும் நிவர்த்தி செய்தல் - பசித்தோரின் பசி போக்குதல், பிணியுற்றோரின் பிணி போக்குதலே இறையாட்சிப் பணி. (இ) 'இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்' - சில நேரங்களில் இந்தச் செய்தியை சொல்வது நமக்கு கூச்சமாக இருக்கின்றது!

இப்படி எல்லாவற்றையும் இழந்தவர்களாய் இறையாட்சிப் பணிக்குச் சென்ற சீடர்கள் தங்கள் பணி முடிந்து இயேசுவிடம் திரும்புகிறார்கள். இவர்கள் செய்த பணியின் காலம், இடம் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆனால், அவர்கள் வீடு திரும்பும்போது அவர்களின் உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்துப் போய் இருக்கின்றது. 'ஐயோ! கையில காசு இல்லாம கஷ்டப்பட்டோம்! வழியில் பாம்பு கடிச்சது! மேலாடை இல்லாமல் ரொம்ப குளிரா இருந்தது! அந்தா அவருக்கு காலில் கல் எத்தியது!' என்ற எந்தப் புலம்பலும் இல்லை. மாறாக, 'பேய்கள் கூட அடிபணிகின்றன!' என்று மகிழ்ச்சியால் துள்ளுகின்றார்கள். சீடர்கள் தீமையின் மேல் ('பாம்பு,' 'தேள்,' 'பகைவரின் வல்லமை,' 'தீய ஆவி') அதிகாரம் பெறுகின்றனர். இதைவிட மேலாக அவர்களின் 'பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன'. இந்த இறுதிக் காரணத்திற்காக அவர்கள் மகிழ வேண்டும்.

ஆக, பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனின் மடியில் மகிழ்ச்சி காண்கின்றனர். திருத்தூதர் பவுல் இயேசுவின் சிலுவையின் மடியில் மகிழ்ச்சி காண்கிறார். இயேசுவின் சீடர்கள் தங்களுடைய பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருப்பது குறித்து மகிழ்கிறார்கள்.

'அவரின் மடியில் மகிழ' நாம் என்ன செய்ய வேண்டும்?

அ. கிறிஸ்துவின் இடத்தில் நாம் இருத்தல் வேண்டும்

'இயேசு தான் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் தமக்கு முன் சீடர்களை அனுப்புகிறார்.' இதை சீடர்கள் உணர்ந்தார்கள். ஒவ்வொருவரும் மறு இயேசுவாக தங்கள் பணியிடத்திற்குச் சென்றார்கள். இன்று நாம் இந்த உலகிற்குள் மறு கிறிஸ்துவாக வந்துள்ளோம். பல நேரங்களில் 'நான்' என்ற 'ஈகோ' அல்லது 'தான்மை' உணர்வு நம்மில் மேலோங்கி இருக்கிறது. ஆனால், நான் கடவுளின் பதிலியாக இங்கு வந்துள்ளேன் என்றால் கடவுள்போல சிந்திப்பேன், மன்னிப்பேன், பரிவு காட்டுவேன். ஆக, ஒவ்வொரு நிகழ்விலும் நான் கிறிஸ்துவைப் போல வாழ வேண்டும். கிறிஸ்துவைப் போல சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும்.

ஆ. ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டிகள்

ஓநாய் வன்மையின் அடையாளம். ஆட்டுக்குட்டி மென்மையின் அடையாளம். ஆட்டுக்குட்டி எந்நேரமும் கடிக்கப்படலாம், விழுங்கப்படலாம். அதற்காக, ஆட்டுக்குட்டி தன் இயல்பை விட்டுவிட வேண்டியதில்லை. எதிர்ப்பு அல்லது ஆபத்து எந்நேரமும் நம்மைச் சூழ்ந்தே இருக்கும். இது எதிர்மறைச் செய்தி அல்ல. மாறாக, எதார்த்தச் செய்தி. எல்லாம் நமக்கு நன்றாக இருந்தாலும் நமக்கு மேல் இறப்பு என்ற ஓநாய் தொங்கிக்கொண்டிருக்கிறது. இல்லையா? ஆக, எதிர்மறை உணர்வுகள், எதிர்மறையான மக்கள், எதிர்மறையான நிகழ்வுகள் அனைத்தோடும் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

இ. அமைதி உங்களிடம் திரும்பிவிடும்

வீட்டிற்குள் செல்லும் சீடர் அமைதியை அளித்து, அமைதி அங்கே ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அவர் மனம் தளரக்கூடாது. அதற்காக, அவர் தன் அமைதியை இழந்துவிடக் கூடாது. அவருடைய அமைதி அவரிடம் திரும்பிவிடும். இன்று நாம் சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் அமைதி இழக்கிறோம். நாம் அழைத்த நபரின் அலைபேசி பிஸியாக இருந்தால், வாட்ஸ்ஆப்பில் இரண்டு டிக் விழுந்தும் நமக்குப் பதில் வராமல் இருந்தால், கண்டக்டர் சில்லறை தர மறந்தால், சுகர் டெஸ்டில் சில புள்ளிகள் கூட இருந்தால், உடல் எடை கூடினால் குறைந்தால் என எல்லாவற்றிற்கும் அமைதி இழக்கின்றோம். 'என் அமைதி என் உரிமை' என்ற ஒரு புதிய பதாகையை நாம் ஏந்திக்கொள்ளலாமே!

இவ்வாறாக, அவரின் மடியில் கிடைக்கும் மகிழ்ச்சி, இறப்பக்குப் பின் கிடைக்கும் நிலைவாழ்வு அல்ல. இது இப்போதே இங்கே கிடைக்கும் மகிழ்ச்சி. இது இழப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சி.

அவரின் மடியில் மகிழ்தல் நலமே!

ser

சீடனின் பண்புகள்

மனிதன் விளம்பரப் பிரியனாக மாறிக் கொண்டிருக்கிற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தன் பெயரை எங்கேயாகிலும் எழுதி நிலைநாட்ட விரும்புகிறான். தன் புகைப்படம், தன் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை பிறர் படித்துப் பார்க்கவேண்டும் என்பது அவனது ஆசை. அச்சில் தன் பெயரை முதலில் காணும்போது, அவனது உள்ளம் துள்ளுகிறது.

உல்லாசப் பயணமாக மலை உச்சிக்குச் சென்றால் அங்கே பாறைகளிலே பல்வேறு பெயர்கள் செதுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ஆலயம் சென்றால் அங்கே மின் விளக்குகளிலும், மின்விசிறிகளிலும் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். திறப்பு விழாக்களிலும், கட்டடங்களில் உள்ள கல்வெட்டுகளிலும் பெயரைப் பதிவு செய்வதைப் பார்க்கலாம். ஏன், இன்று இரயில் பெட்டிகளிலும், பேருந்துகளிலும், கழிவறைகளிலும் சிலர் தங்கள் பெயர்களை எழுதுகின்ற நிலை.

ஆனால் ஆண்டவர் திருத்தூதர்களை நோக்கி தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள் (லூக். 10:20) என்கிறார். சீடன் என்பவர் யார்? (லூக். 14:27) என் சீடன் தன் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் அனைவரையுமே ஏன், தன் உயிரையுமே இழந்து தன் சிலுவையைச் சுமந்து செல்ல வேண்டும் என்கிறார். இல்லையேல் அவன் என் சீடன் அல்ல.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டிலே ஆண்டவர் தன் சீடனாக இருப்பவனுக்கு 4 நிலைகளைக் காட்டுகின்றார்.


முதலாவதாக: சமாதானத்தின் தூதுவனாக இருக்க வேண்டும். 1. எந்த வீட்டுக்கு, எந்த ஊருக்குள் நுழைந்தாலும் இந்த வீட்டிற்கு இந்த ஊருக்குச் சமாதானம் என வாழ்த்துங்கள் என்கிறார். திருத்தூதன் சமாதானத்தின் தூதுவனாக அனுப்பப்படுகிறான். மேலும் இயேசு சொன்னார் (யோவா. 14:27) நான் தரும் சமாதானமோ உலகம் தரும் சமாதானம் போன்றது அல்ல என்றார். உலகில் பிறந்த போதும் சரி, உயிர்த்து காட்சி தந்த போதும் சரி, உங்களுக்குச் சமாதானம் என்று வாழ்த்தினாரே அந்த சமாதானப் புறா, அவர்தான் அந்தச் சமாதானம். அதைக் கொடுப்பதற்காகத்தான் நாம் அழைக்கப் பட்டிருக்கிறோம்.


இரண்டாவது : சீடனுக்குப் பெருமை சிலுவையில்தான். 2. உண்மைச் சீடன் சிலுவையில்தான் பெருமைப் படுவான். பணம், பட்டம், பதவி என்பதில் பெருமைப்பட மாட்டான். எனவேதான் பணப்பையோ, கைப்பையோ எடுத்துச் செல்ல வேண்டாம். ஆண்டவரின் ஏழ்மையே அவன் சொத்தாகத் தாங்கிச் செல்ல வேண்டும் என்கிறார் ஆண்டவர். சிலுவையின் மூலமாகத்தான் அப்போஸ்தலர் உலகோடும், உலகம் திருத்தூதர்களோடும் அறையப்படுகின்றன. நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் அன்றி வேறு எதிலும் ஒருபோதும் பெருமைப்பட மாட்டேன் (கலாத். 6:14) என்றார். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டு விட்டேன். இனி வாழ்வது நான் அல்ல. கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார் (கலாத். 2:19-20) என்கிறார்.


முன்றாவது: சீடன் ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டியாக அனுப்பப்படுகிறான். 3. ஓநாய்கள் மத்தியில் ஒரு ஆட்டுக்குட்டி சென்றால் என்ன நடக்கும்? கடித்துக் குதறப்படும். இதை அறிந்த இயேசு ஆபத்து இருந்தாலும் ஓநாய்களிடையே ஆட்டுக்குட்டியைப் போல் உங்களை அனுப்புகிறேன் என்கிறார். அவரது பாதுகாப்பு உண்டு. நிறை உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியானவர் உங்களோடு இருப்பார் (யோவா. 16:13) என்றும் வாக்களித்துள்ளார். உலகம் முடியும் மட்டும் உங்களோடு இருப்பேன் (மத். 28:20)


நான்காவதாக: சீடன் என்பவன் மகிழ்பவன் 4. துன்பத்தில் மகிழ்பவன்தான் இயேசுவின் உண்மை சீடன். பணியின் காரணமாக சீடன் துன்பப்படும்போது அது விண்ணகத்தில் கணக்கில் எழுதப்பட்டுள்ளது என்பதை அவன் மனதில் கொள்ள வேண்டும்.

நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள். அப்போது உலகம் மகிழும். ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும். பெண்ணுக்குப் பேறுகால வேதனை வந்துவிட்டதால் வேதனை அடைகிறாள். ஆனால் உலகில் ஒரு உயிர் தோன்றியுள்ளது என்னும் மகிழ்ச்சியால் தன் வேதனையை அவள் மறந்துவிடுவாள் (யோவா. 16:20-21). அதுபோல உழைப்பவனுக்குப் பலன் கிடைக்கும். எனவே மகிழுங்கள் என்கிறார் ஆண்டவர்.

என் பெயர் எங்கே எழுதப்பட்டுள்ளது? வானகத்தில் எழுதப்பட்டுள்ளதா? எழுதப்பட நான் சீடனாகப் பணிபுரிகிறேனா? அல்லது சிலுவையைக் கண்டு, ஓநாயைக் கண்டு ஓடுவது போல ஓடி விடுகின்றேனா?

மோட்ச வாசற்படிக்கு ஓர் ஆன்மா வந்தது. யார் என்று பேதுரு கேட்டபோது நான் ஒரு பணக்காரன். நான் உள்ளே செல்ல வேண்டும் என்றான். மோட்சத்திற்குப் போகின்ற அளவுக்கு நீ என்ன நல்ல காரியம் செய்தாய் என்று கேட்டார் பேதுரு. ஒருமுறை ஈஸ்டர் விழாவிற்கு சென்றபோது 30 பைசா ஒரு ஏழைக்குக் கொடுத்தேன் என்றான். கணக்குப் புத்தகத்தில் எழுதப்பட்டள்ளதா என்று அக்கவுண்டண்ட் மத்தேயுவை புரட்டினார் பேதுரு. ஆமாம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றார் மத்தேயு . சரி இன்னும் வேறு என்ன செய்துள்ளாய் என்று கேட்டார்? இந்த கிறிஸ்மஸ் திருவிழாவில் ஒரு ஏழைக்கு 50 பைசா கொடுத்தேன் என்றான். அதுவும் வரவில் உள்ளது என்றார் மத்தேயு. வேறு ஏதாவது? இல்லை என்றான்.

யோவ்! மத்தேயு, 80 பைசாவை அவனிடம் கொடுத்து நரகத்திற்குத் தள்ளிவிடும் இந்த மனிதனை என்றார் பேதுரு.

ser

ஒரு தாயைப் போல நான் உன்னைத் தேற்றுவேன்

ஓர் அடர்ந்த காடு! அந்தக் காட்டுக்குள்ளே முனிவர் ஒருவர் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் முனிவர் சற்றும் எதிர்பாராத வேளையில் அவர் கண்ணெதிரே ஒன்று நடந்தது. அது கோடைகாலம். இரண்டு மரங்கள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டதால் தீப்பொறி பறக்க காடு பற்றிக்கொண்டது.

அவருக்கு முன்னேயிருந்த ஒரு பெரிய மரத்தின் உச்சியில் ஒரு குருவிக்கூடும். குருவிக்கூடு இருந்த அந்த மரமும் தீப்பற்றிக்கொண்டது.

தன் குஞ்சுகளுக்கு உணவு தேடிச் சென்ற தாய்ப்பறவை கூடு திரும்பியது. அதன் கண் முன்னால் அதன் கூடு இருந்த மரம் பற்றி எரிந்துகொண்டிருந்தது.

பாவம் அந்தத் தாய்ப்பறவை! அது கத்தியது, கதறியது, அழுதது, அலறியது. குஞ்சுகள், அம்மா என்று அலறின . சரியாக இறக்கை முளைக்காத குஞ்சுகள் உள்ள மரத்தைத் தாய்ப்பறவை கத்திக்கொண்டு சுற்றிச் சுற்றி பறந்தது. கூட்டை அதனால் நெருங்க முடியவில்லை ! நெருப்பின் அனல் அதைச் சுட்டது. கடைசியாக தாய்ப்பறவை ஒரு முடிவை எடுத்தது. தன் உயிரைக் கொடுத்தாவது தன் குழந்தைகளின் உயிரைக் காப்பது என்ற முடிவுக்கு வந்தது.

கூட்டை நோக்கிப் பாய்ந்தது. குஞ்சுகள் மீது அமர்ந்து அவற்றைத் தன் சிறகுகளால் மூடியது.

மரம் முழுவதும் நெருப்பில் எரிந்து கீழே சாய்ந்தது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த முனிவர் ஒரு குச்சியை எடுத்து கீழே கிடந்த குருவிக்கூட்டைக் குத்தினார்.

அவர் கண்களை அவரால் நம்பமுடியவில்லை! அந்தக் கூட்டுக்குள்ளே இரண்டு குஞ்சுகள் உயிரோடு இருந்தன. தாய்ப்பறவை தன் சிறகுகளால் அந்தக் குஞ்சுகளை மூடியவாறு இறந்து கிடந்தது.

இதுதான் ஒரு தாயின் அன்பு. தனது குழந்தையைத் தேற்றுவதற்காக எதையும் செய்ய முன்வருவாள் ஒரு தாய். இதோ இன்றைய முதல் வாசகத்தில் எசாயா இறைவாக்கினர் வழியாக தாய் தன் பிள்ளையைத் தேற்றுவது போல நான் உங்களைத் தேற்றுவேன் (எசா 66:13) என்கின்றார் இறைவன்.


மேலும் அறிவோம் : தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது (குறள் : 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும். ஏனையோர் மனக்கவலை மாறாது.

ஹெலன் ஓர் அழகான இளம் பெண் ; பணக்கார அப்பாவின் ஒரே மகள். அவளுக்கு எக்குறையும் இல்லை . இருப்பினும் அவள் தன் அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டாள். அவள் கடிதத்தில் எழுதியிருந்தது: " எனக்கு எல்லாம் இருந்தும் மன அமைதி இல்லை. நான் நித்திய சாந்தியைத் தேடிச் செல்கிறேன், எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்."

இன்றைய அறிவியல், தொழில் நுட்ப உலகம் மனிதருக்குப் பல்வேறு வசதிகளைக் கொடுத்துவிட்டு, மன அமைதியைத் திருடிக் கொண்டுவிட்டது. புதிய கண்டுபிடிப்புகள் புதிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. மனிதர் தங்களுடைய கண்டுபிடிப்புகளுக்கே பலிக்கிடாய் ஆகிவிட்டனர்.

இப்பின்னணியில் இன்றைய அருள் வாக்கு வழிபாடு அமைதியைப் பற்றிச் சிந்திக்க நம்மை அழைக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் தம் மக்களுக்கு நிறை வாழ்வை (அமைதியை) ஆறுபோலப் பாய்ந்தோடச் செய்வதாக வாக்களிக்கின்றார் (எசா 66:12). இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடம், "நீங்கள் எந்த வீட்டுக்குச் சென்றாலும் இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக' என்று வாழ்த்தும்படி கேட்கின்றார்" (லூக் 10:5), கிறிஸ்து இம்மண்ணுக்கு வந்தபோது கொண்டுவந்த முதல் கொடை அமைதி (லூக் 2:14). கிறிஸ்து விண்ணகம் சென்றபோது வழங்கிய இறுதிக் கொடை அமைதி (யோவா 14:27, கிறிஸ்துவின் நற்செய்தி அமைதியின் நற்செய்தி (எபே 4:17). அமைதி என்பது கடவுளின் கொடை: அதே நேரத்தில் மனித முயற்சியின் கனி,

அமைதிக்கு மாபெரும் இடையூறு பேராசை, ஆசைகளை வளர்க்க வளர்க்க அமைதி வெகு தொலைவில் சென்றுவிடுகிறது. மனிதர் கடவுளிடம் மட்டுமே முழுமையான அமைதி பெற முடியும். புனித அகுஸ்தீன் கூறுகிறார்: "இறைவா! எங்களை உமக்காகப் படைத்துள்ளீர். உம்மை அடையும்வரை எம் நெஞ்சத்திற்கு நிம்மதி கிடையாது."

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கூறுகிறார் "நீங்கள் பால் பருகுவீர்கள். மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள். மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்” (எசா 66:12-13). எவ்வளவு ஆறுதலான செய்தி! கடவுள் நம்மைத் தாயன்புடன் பேணிக் காக்கின்றார் என்பது உண்மையென்றால், நாமும் தாயின் மடியில் தவழும் குழந்தை போன்று கடவுளிடம் நம்பிக்கை வைக்க வேண்டாமா? நாம் இறுமாப்புக் கொள்ளாமல், நமது சக்திக்கு அப்பாற்பட்ட அரிய, பெரிய செயல்களில் ஈடுபடாமல், தாய்மடி தவழும் குழந்தைபோல் அமைதியுடன் ஆண்டவரை நம்பி வாழ வேண்டும் (திபா 131), கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யும் (மத் 6:24) இருமனப்பட்ட இதயம் கொண்டிராமல் கடவுளுக்கு மட்டும் பணிவிடை புரியும் ஒருமனப்பட்ட உள்ளம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களை நற்செய்திப் பணிக்கு அனுப்புகிறார், அப்போது அவர்களிடம் பணப்பையோ வேறு எப்பையோ எடுத்துச் செல்லக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறுகின்றார். ஏனெனில் பணத்தை நம்புகிற எவரும் நற்செய்தியை அறிவிக்கமாட்டார்கள். கடவுளுடைய அரசைப் பணத்தைக் கொண்டு எவரும் நிறுவமுடியாது. நற்செய்திப் பணிக்காகத் திருச்சபை நிறுவனங்களைக் கட்டி எழுப்பியது, ஆனால் காலப்போக்கில் திருச்சபை நிறுவனங்களைக் காப்பதில் கவனம் செலுத்திவிட்டு நற்செய்திப் பணியை ஓரங்கட்டிவிட்டது, இன்றையத் திருப்பணியாளர்கள் சிறந்த நிர்வாகிகள்; ஆனால் சிறந்த மறைப் பணியாளர்கள் அல்ல என்பது வேதனைக்குரியது.

நற்செய்திப் பணிக்குப் பணம் தேவையில்லையா? உலக முடிவும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் விரைவில் வரவிருக்கின்றது என்பதை வலியுறுத்தி ஒரு பிரிவினை சபையினர் “இயேசு வருகிறார்” என்ற தலைப்பைத் தாங்கிய ஒரு துண்டு பிரசுரத்தை ஒரு பேருந்தின் நடத்துனரிடம் கொடுத்தனர். அவர், “இயேசு வரட்டும்; ஆனால் பயணச் சீட்டு வாங்கிய பிறகுதான் பேருந்தில் ஏற வேண்டும்" என்று கண்டிப்பாகக் கூறினார். நற்செய்தியை அறிவிக்கும் பணியாளர்கள் பயணச்சீட்டு வாங்கப் பணம் வேண்டாமா? அத்துடன் அவர்களுடைய பொருளாதாரத் தேவைகளை யார் பூர்த்தி செய்வார்? இக்கேள்விகளுக்கு இயேசு கூறும் பதில் என்ன?

இயேசு கூறுகிறார்: "வேலையாள் தன் கூலிக்கு உரிமை உடையவரே" (லூக். 10:7). திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "கோவிலில் வேலை செய்வோர் கோவில் வருமானத்திலிருந்தே உணவு பெறுவர்” (1கொரி 9:13), “இறை வார்த்தையைக் கற்றுக்கொள்வோர் அதைக் கற்றுக்கொடுப்போருக்குத் தமக்குள்ள நலன்கள் அனைத்திலும் பங்கு அளிக்க வேண்டும்"(கலா 5:6). எனவே திருச்சபைக்கும் அதன் பணியாளர்களுக்கும் தேவையான பொருள் உதவியைக் கொடுப்பது பொதுநிலையினரின் கடமையாகும், ஒவ்வொருவரும் தம் வருமானத்தில் பத்தில் ஒரு பகுதியை இறைவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் என்பது பழைய ஏற்பாட்டின் விதிமுறை (தொநூ 28:22; லேவி 27:30). இறைவனுக்குரிய பங்கைக் கொடுக்காதவர் இறைவனையே கொள்ளையடிக்கின்றனர் (காண்: மலா 3:8-10), தற்போது கிறிஸ்தவர்கள் தங்களுடைய வருமானத்தில் ஒரு விழுக்காடு கொடுத்தாலே போதும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். மனவருத்தத்தோடு கொடுக்காமல் முகமலர்ச்சியுடன் கொடுக்க வேண்டும். (2கொரி 9:6-7). கொடுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும் (லூக் 6:38).

திருச்சபையின் தேவைகளுக்கு உதவிபுரிய கிறிஸ்தவ விசுவாசிகள் கடமைப்பட்டுள் ளனர் என்று திருச்சபைச் சட்டமும் கூறுகிறது (தி.ச. 222, ப. 1). பொதுநிலையினர் திருச்சபையின் பணியாளர்களைப் பராமரிக்க முன்வந்தால், திருப்பணியாளர்கள் காசைப்பற்றிக் கவலைப்படாமல் கடவுளின் அரசைப்பற்றிக் கவலைப்பட முடியும். தனது 10 வயது மகனுடன் திருப்பலிக்கு வந்த ஓர் அம்மா, திருப்பலி (முடிந்து வீட்டுக்குச் சென்றபோது பங்குத்தந்தையின் மறையுரையைப்பற்றி மிகவும் மட்டமாக விமர்சனம் செய்து கொண்டு போனார். அவருடைய மகன் அவரிடம், “பேசாம வாங்கம்மா! நீங்க போட்ட 10 பைசாவுக்கு இதைவிட நல்ல பிரசங்கம் வேணுமா?" என்று கேட்டு அம்மா வாயை அடைத்தான்!

கொடுப்பது 10 பைசா: கேட்பது பத்தாயிரம் கேள்விகள்? இது சரியா? பொதுநிலையினர் திருச்சபையின் தேவைகளைத் தாராள மனத்துடன் நிறைவு செய்தால், கடவுள் அவர்களுடைய தேவைகளை அபரிமிதமாகப் பூர்த்தி செய்வார். "நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்" (லூக் 5:38).

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com