மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டின் ஐந்தாம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 58: 7-10 | கொரிந்தியர் 2: 1-5 | மத்தேயு 5: 13-16

ser

நாம் வழிகாட்டும் ஒளியாக வாழ முன் வருவோம்.

ஓர் அரசன் தன் மூன்று மகன்களையும் அழைத்து நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா என்று கேட்டார். உங்களை மாணிக்கக் கற்களைப்போல நேசிக்கிறேன்' என்றான் முதல் மகன். இரண்டாவது மகன், 'உங்களைப் பொன்னைப்போல நேசிக்கிறேன்' என்றான். மூன்றாம் மகனோ, 'உங்களை உப்பைப்போல நேசிக்கிறேன்' என்றான். மூன்றாம் மகனின் பதிலைக் கேட்டவுடன் அரசனுக்குக் கோபம் வந்துவிட்டது. இதையறிந்த சமையற்காரன் அரசனுக்கு உப்பு போடாமல் சமையல் செய்து வைத்தான். உப்பில்லா உணவைச் சுவைத்த அரசன் கோபத்தோடு சமையற்காரனைக் கூப்பிட்டான். அப்போது மூன்றாம் மகன், அப்பா ! உப்பில்லா உணவு சுவையற்றது. நீங்கள் எனக்கு உப்பைப் போன்றவர்கள். என் வாழ்வுக்குச் சுவையூட்டி, வழிகாட்டும் ஒளியாக மேன்மைப்படுத்துகிறீர்கள் என்று சொன்னவுடன் அரசன் உப்பின் தன்மையை உணர்ந்து கொண்டான்.

இன்றைய வார்த்தை வழிபாடு நாம் அனைவரும் பிறருக்குப் பயன் தரக்கூடிய சாரமுள்ள உப்பாக, ஒளி கொடுக்கும் விளக்காக வாழ வலியுறுத்துகிறது. விழிகளுக்கு ஒளியாக, உணவுக்கு உப்பாக, உலகிற்கு நாம் மாற வேண்டும். உண்மையை அறிந்து, தீமைகளைக் களைந்து நன்மைகளில் மிளிர வேண்டும். உப்பு தன்னையே முழுவதும் கரைத்துக் கொள்ளும்போதுதான் அதன் பயன் முழு நிறைவடைகிறது. மெழுகுதிரி தன்னையே கரைக்கும் போதுதான் ஒளி தர முடிகிறது. ஒருவரை கிறிஸ்துவின் சீடராக்குவது அவருடைய சாரமுள்ள சான்று வாழ்வுதான். இதனால் தான் இயேசு மனித வாழ்வை உப்புக்கும் ஒளிக்கும் ஒப்பிடுகின்றார். இருளின் நடுவே உன் ஒளி உதிப்பதாக (எசா. 58:10).

உப்புக் கரைந்தால் தான் சுவை. மெழுகு உருகினால் தான் ஒளி. சந்தனம் வெட்டப்பட்டால் தான் மணம். ஆம்! மலராக மணம் வீசவும், சந்தனமாக மணக்கவும், நாம் நம்மையே இழக்காமல் கொடுக்க முடியாது. கொடுக்காமல் மன நிறைவோடு வாழவும் முடியாது. சாரமுள்ள உப்பாக, மற்றவர்களின் வாழ்வுக்கு ஒளியாக மாறும்போதுதான் நாம் மேன்மையடைகிறோம். உப்பானது பாதுகாக்கும் தன்மை கொண்டது. திருடுவதற்கும் கொல்லுவதற்கும், அழிப்பதற்குமின்றி திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு வந்தேன் (1யோவா 10:10) என்ற இயேசுவின் அமுதமொழி நமக்கும் உரியதாகும்.

உப்பானது மருந்தாகும் தன்மை கொண்டது. நோய்க்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் அது கலக்கப்படுகிறது. நமது வாழ்வும், சொல்லும், செயலும் மற்றவரைக் குணமாக்க வேண்டும் (1பேதுரு 2: 24).

உப்பானது ருசி தரக்கூடியது. "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே" என்பது பழமொழி. "ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்" (திபா. 34:8) என்று திருப்பாடல் ஆசிரியர் கூறியதுபோல கிறிஸ்தவர்களாகிய நாம் சுவைமிக்க வாழ்வை வாழ வேண்டும்.

உப்பானது வெள்ளையானது. கருப்பான கடல் நீரானது உப்பாக மாறிய பின் வெண்ணிறமாகிறதுபோல திருமுழுக்கால் நாம் புனிதம் (1பேதுரு 1: 15) பெற்றதை உணர்ந்து வாழ வேண்டும்.

சாரமுள்ள மனித வாழ்வு கிறிஸ்துவைப்போல சுடர்விட்டு எரிய வேண்டும். எசாயாவைப் போல நாம் வழிகாட்டும் ஒளியாக வாழ முன் வருவோம். இறையரசுக் கனவை நனவாக்கப் புறப்படுவோம்.

ser ser

நான் நலம் பெற என்ன செய்ய வேண்டும்?

ஒருவனுக்கு இறைவனிடமிருந்து நலம் கிடைக்க, நீதி அவன்முன் நடக்க, ஆண்டவருடைய மகிமை அவனைப் பின்தொடர, அவனுடைய கூக்குரல் இறைவனால் கேட்கப்பட, அவன் இருளின் நடுவே கலங்கரைத் தீபமாய்த் திகழ, அவன் ஏழை எளியவரின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், மதிப்பு ஆகிய நான்கினையும் அவர்களுக்களித்து, துன்புறுகின்ற அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என இறைவாக்கினர் எசாயா முதல் வாசகத்தில் குறிப்பிடுகின்றார். சுருக்கமாகச் சொன்னால் கொடுப்பவருக்குக் கொடுக்கப்படும் என்கின்றது இன்றைய முதல் வாசகம். கொடுப்பதில் மூன்று வகைகள் உள்ளன.

  1.  உள்ளதிலிருந்து கொடுத்தல் (லூக் 19:1-10).
  2.  உள்ளதையெல்லாம் கொடுத்தல் (மாற் 12:41-44).
  3.  உள்ளதையும் கொடுத்து, உயிரையும் கொடுத்தல் (யோவா 19:28-30).

நாம் நலம்பெற என்ன செய்ய வேண்டும்?

முன்னொரு காலத்தில் ஓர் ஊர்மக்கள், அவ்வூரில் உள்ள மூன்று பணக்காரர்களில் யார் பெரியவன் என்பதை அறிந்துகொள்ள, ஒரே ஆளை மூன்று பணக்காரர்களிடமும் உதவி கேட்க அனுப்பினார்கள். முதல் பணக்காரன் உதவி கேட்டவனைப் பார்த்து : இந்த வீட்டிலிருந்து நீ எதை வேண்டுமானாலும் எடுத்துப்போகலாம் என்றான். இரண்டவாது பணக்காரன் : இந்த வீட்டிலுள்ள எல்லாவற்றையும் எடுத்துப்போ என்றான். மூன்றாவது பணக்காரன் : இந்த வீட்டிலுள்ள எல்லாவற்றையும் எடுத்துக்கொள். ஆனால் உடனே போய்விடாதே, சற்றுநேரம் பொறுத்திரு என்று சொல்லிவிட்டுத் தனது வேலைக்காரனை அழைத்துக்கொண்டு எங்கோ சென்றான்.

காத்திருந்தவன். வேலைக்காரன் மட்டும் திரும்பி வருவதைக் கண்டான். வேலைக்காரன் உதவிகேட்டு வந்தவனைப் பார்த்து. இதோ, இந்தப் பொற்காசுகளையும் என் தலைவன் உன்னிடம் கொடுக்கச் சொன்னார். உனக்காகத் தம்மையே அடிமையாக விற்றுவிட்டார் என்றான். மூன்று பணக்காரர்களில் மூன்றாவது பணக்காரன்தான் பெரியவன், உயர்ந்தவன், உன்னதமானவன், சிறந்தவன் என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

தன்னிடம் உள்ளதை தனது சகோதர, சகோதரிகளோடு பகிர்ந்துகொள்ளும் எவரையும் இறைவன் உயர்த்தத் தவறுவதில்லை. இரண்டாம் வாசகம் குறிப்பிடுவது போல புனித பவுலடிகளார் சிலுவையில் அறையுண்ட இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறெதையும் விரும்பவில்லை என்கின்றார். சிலுவை வெறுமையின் சின்னம், ஏழ்மையின் சின்னம், அன்பின் சின்னம், கொடுத்தலின் சின்னம். சிலுவையை மட்டுமே விரும்பினேன் என்று கூறுவதின் மூலம், அவரிடமிருந்த அனைத்தையும் அயலாருக்கு அளித்து விட்டதாகப் புனித பவுலடிகளார் கூறுகின்றார்.

இப்படிப்பட்ட பவுலடியாருக்கு இறைவன் அளித்த பரிசு என்ன என்பதை நாமறிவோம். கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் முதல் இயலில் முதல் இறைவாக்கியத்தில் புனித பவுலடிகளார் தன்னை இயேசுவின் திருத்தூதர் என்று அழைத்துக்கொள்கின்றார். ஆம். இயேசுவால் அழைக்கப்பட்டவர்களுக்கு உரிய திருநாமம் புனித பவுலடியாருக்கும் இறைவனால் அளிக்கப்பட்டது. அது அவர் வாழ்ந்த பற்றற்ற வாழ்வுக்கு இறைவன் அளித்த மாபெரும் பரிசு.

உப்பு உணவிற்குள் கரைந்து, கலந்து, அதற்குச் சுவை ஊட்டுகின்றது; உணவைப் பாதுகாக்கின்றது. எந்த உணவோடு அது உறவாடுகின்றதோ, அந்த உணவிலிருந்து அது எதையும் பெறுவதில்லை! அப்படித்தான் ஒளியும் எதையும் பெறாமல் உலகிற்கு வெளிச்சத்தை அளிக்கின்றது; மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பாதுகாப்பை அளிக்கின்றது. இப்படியே நாமும் வாழவேண்டுமென்பது இயேசுவின் அவா. அவரின் அவாவை நிறைவேற்றி, இறைவனின் நிறையருளைப் பெற்று நலமுடன் வாழ்வோமாக!

 மேலும் அறிவோம் :

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள் : 212).

பொருள் : ஒருவன் உழைத்துச் சேர்த்த பொருள் அனைத்தும் உதவி பெறத் தகுதியுடைய சான்றோர் வளர்ச்சிக்குத் துணை புரிவதற்காகவே அமையும்.

ser ser

நாம் சாரமுள்ள உப்பா?  நாம் ஒளியின் மக்களா?

ஒரு தாத்தா தன் பேரனிடம், 'பேராண்டி! என் நாக்குச் செத்துப் போய்விட்டது" என்றதற்கு பேரன் அவரிடம், "செத்துப்போன நாக்கைப் புதைத்தீர்களா? எரித்தீர்களா?"என்று கேட்டான்.

நாக்குச் செத்துப்போய்விட்டது என்றால், நாக்கு சுவை இழந்துவிட்டது என்று பொருள். உணவுக்குச் சுவையூட்டுவது உப்பு, 'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி, உணவைச் சுவைத்து உண்ணக் கற்றுக்கொண்டுள்ள நாம், வாழ்வைச் சுவைத்து வாழ் ஏன் கற்றுக்கொள்ளவில்லை? சுவையற்ற வாழ்வுக்குச் சுவையூட்ட வேண்டியவர்கள் கிறிஸ்துவின் சீடர்கள். இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தம் சீடர்களிடம் கூறுகிறார்:" நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள்” (மத் 5:13).

உப்பு தன்னை உணவுப் பொருளுடன் கரைத்துக் கொண்டு, தன்னுருவை இழந்து உணவுக்குச் சுவை கொடுக்கிறது. அவ்வாறே கிறிஸ்தவர்கள் எங்கே, எந்தப் பண்பாட்டில் வாழ்கின்றனரோ அங்கே அந்தப் பண்பாட்டில் தங்களையே கரைத்துக்கொண்டு மக்களுக்கும் பண்பாட்டிற்கும் சுவையூட்ட வேண்டும். உப்பானது பொருள்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கின்றது. அவ்வாறே சிற்றின்பம், நுகர்வு கலாச்சாரம், கட்டுப்பாடின்மை ஆகிய தீமைகளால் இவ்வுலகம் கெட்டுப்போகாமல் அதைப் பாதுகாக்க வேண்டியதும் கிறிஸ்தவர்களுடைய கடமையாகும்.
உப்பு ஞானத்தைக் குறிக்கிறது. ஞானத்தை பசு ஞானம், பதி ஞானம் என்று இரு வகையாகக் பிரிக்கலாம். பசு ஞானம் என்பது இவ்வுலகைப் பற்றிய அறிவு; பதி ஞானம் என்பது கடவுளைப் பற்றிய அறிவு, இன்றைய அதி நவீன உலகில் அறிவு வளர்ந்த அளவுக்கு ஆன்மிகம் வளரவில்லை. பக்தி மார்க்கம் காணாமற் போய்விட்டது; பண மார்க்கம் கொடிகட்டிப் பறக்கின்றது. இந்நிலையில் கிறிஸ்துவின் சீடர்கள் உலகிற்கு உண்மை ஞானத்தைக் கொடுக்க வேண்டும். கடவுள் நம் வாழ்வில் கருப்பொருளாக, மையமாக அமைய வேண்டும்; மற்றவை அனைத்தும் இரண்டாம் நிலையில் வைக்கப்பட வேண்டும், இதுவே உண்மையான ஞானம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: நமது நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே (1 கொரி 2:5), அதே திருத்தூதர் மேலும் கூறுகிறார்: இவ்வுலகம் மடமை என்று கருதும் சிலுவையில் அறையுண்ட மெசியாவே கடவுளுடைய வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார் (1 கொரி 1:22-25). கிறிஸ்துவின் சிலுவையே நமது மகிமை என்பதை தாம் உலகிற்குப் பறைசாற்ற வேண்டும்.

கடவுளின் ஞானமாகிய கிறிஸ்து உரத்த குரலில் உலகிற்குக் கூறுவது: "மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாகக் கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்" (மத் 4:4), "மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? " (மத் 16:26).

இவ்வுலகத்தின் போக்கின்படி நடக்காமல், நம் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாற்றம் அடைய வேண்டும் (உரோ 12:2), இவ்வுலக இன்பங்களை வெறுக்க வேண்டும் என்பதல்ல, மாறாக இவ்வுலகப் பொருள்களையும் இன்பங்களையும் ஞானத்துடன் சீர்தூக்கிப் பார்த்து, தற்செய்திக்கு ஒவ்வாதவற்றை அகற்ற வேண்டும்.

நாம் உலகிற்கு உப்பாக மட்டுமன்று. ஒளியாகவும் இருக்கவேண்டுமென்று கூறுகிறார் கிறிஸ்து. “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்" (மத் 5:14).

ஓர் அப்பா தனது மூன்று மகன்களிடம் ஆளுக்கு 100 ரூபாய் கொடுத்து, அப்பணத்தைக் கொண்டு வாங்கிய பொருள்களால் ஒரு சிறிய அறையை திரப்ப வேண்டும் என்றார். இரண்டு மகன்கள் குப்பைகளையும் வைக்கோலையும் வாங்கி அறையை நிரப்ப முயன்றனர். ஆனால் மூன்றாவது மகனோ 100 ரூபாய்க்கு மெழுகுதிரிகளை வாங்கி அவற்றை அச்சிற்றறையில் ஏற்ற. அந்த அறை முழுவதும் ஒளியால் நிரம்பி வழிந்தது.

இருளைப் பழிப்பதைவிட ஒளியேற்றுவது மேல், சூரியனை நோக்கி நடந்தால் நிழல் பின்னால் போய்விடும். இவ்வுலகின் தீமைகளைச் சபிப்பதைவிட்டுவிட்டு, எதிர்மறை எண்ணங்களை அகற்றிவிட்டு, நன்மையால் தீமையை வெல்வோம் (உரோ 12:21).

உலகின் ஒளியாகிய கிறிஸ்து (யோவா 8:12), கடவுளுடைய வியத்தகு செயலை அறிக்கையிட நம்மை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துள்ளார் (1 பேது 2:9), நாம் ஒளியின் மக்களாக வாழ என்ன செய்யவேண்டுமென்று இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. நமது உணவைப் பசியோடு இருப்பவர்களுடன் பகிர வேண்டும்; ஆடையற்றவர்களை உடுத்த வேண்டும்; வீடு இல்லாதவருக்கு நம் வீட்டில் தங்க இடம் கொடுக்க வேண்டும். அப்போது நமது வாழ்வு விடியல்போல் எழும்: இருள் நடுவே நம் ஒளி உதிக்கும் (எசா 58:7-10).

இன்றைய பதிலுரைப்பாடல் கூறுகிறது: "ஆண்டவருக்கு அஞ்சுவோர் இருளில் ஒளியென மிளிர்வர்... அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர். அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்” (திபா 112:4, 9). அன்பு செய்யும்போது ஒளியில் வாழ்கிறோம்; பகைமையில் வாழும்போது இருளில் சிக்கித் தவிக்கிறோம் (1 யோவா 1:9-11),

ஒளியின் களி: நீதி, உண்மை , நன்மை (எபே 5:8-10). உண்மையை பேசி, நன்மையைச் செய்து, நீதியைக் கடைப்பிடிப்போம்.

நாம் சாரமுள்ள உப்பா? அல்லது சாரமற்ற உப்பா?
நாம் ஒளியின் மக்களா? அல்லது இருளின் மக்களா?

ser ser

உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க...

நிகழ்வு

துறவி ஒருவர் இருந்தார். அவர் மலையடிவாரத்தில் ஒரு குடிசை அமைத்து அங்கு வருவோருக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வந்தார். ஒருநாள் அவரைச் சந்திக்க வந்த இளைஞன் ஒருவன் அவரிடம் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தான். தற்செயலாக அவன் வெளியே பார்த்தபொழுதுதான் நன்றாக இருட்டியிருந்தது தெரிந்தது. உடனே அவன் துறவியிடம், “நேரமாகிவிட்டது. கிளம்புகிறேன்” என்றான். துறவி அவனிடம், “இன்றிரவு இங்கு தங்கிவிட்டு அதிகாலையில் கிளம்பு... இது கொடிய விலங்குகள் நடமாடக்கூடிய பகுதி” என்றார். அவனோ அங்கிருந்து கிளம்புவதில் விடாப்பிடியாக இருந்ததால், அவர் அவனை அங்கிருந்து போக அனுமதித்தார்.

வெளியே வந்து பார்த்தான் அவன். ஒரே கும்மிருட்டாக இருந்தது. இப்பொழுது அவனுக்குள் ஊருக்குப் போகவா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது. இதைக் கவனித்த துறவி தன்னுடைய குடிசையிலிருந்த ஒரு விளக்கை எடுத்து அவனிடம் கொடுத்து, “இதை வைத்துக்கொண்டு உன்னுடைய பயணத்தைத் தொடர்” என்றார். அவனும் துறவி கொடுத்த விளக்கை வைத்துக்கொண்டு மெல்ல நடந்து சென்றான்.

அவனுடைய நடையில் ஒருவிதமான தளர்ச்சி தெரிந்தது. அதைக் கவனித்த துறவி வேகமாக அவனருகே சென்று, அவன் வைத்திருந்த விளக்கை ‘பூ’ என ஊதினார். விளக்கு உடனே அணைந்துபோக, அவன் அப்படியே அதிர்ந்துபோய் நின்றான். “என்ன சுவாமி இப்படிச்செய்து விட்டீர்கள். இனி நான் ஊருக்கு எப்படிப் போவது?” என்றான். துறவி, அவனை ஒரு வினாடி உற்றுப் பார்த்துவிட்டுத் தீர்க்கமான குரலில் சொன்னார்: “இரவல் விளக்கு நீண்ட நேரம் துணைக்கு வராது. உனக்குள் இருக்கும் விளக்கே/ஒளியே இறுதிவரை உன்னோடு வரும். உன் கையில் விளக்கு தேவையென்றால், உனக்குள்ளே பயம் உறைந்திருக்கின்றது என்று பொருள். உள்ளே துணிவிருந்தால் உனக்கு விளக்கு தேவையில்லை. அதனால் உன் துணிவு என்னும் ஒளியால் உன் பயணத்தைத் தொடர்.”

துறவி சொன்ன இந்த நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளைக் கேட்ட இளைஞன். கையில் விளக்கேதும் இல்லாமல், தனக்குள் இருந்த துணிவு என்ற விளக்கைக் கொண்டு, அந்த அடர்ந்த காட்டின் வழியாக நடந்து வீடு வந்து சேர்ந்தான்.

உனக்கு நீயே விளக்கு/ ஒளி என்ற உண்மையை எடுத்துரைக்கும் இந்த ஜென் கதை இன்றைய இறைவார்த்தையின் முதன்மைச் சிந்தனையை அப்படியே எடுத்துரைப்பதாக இருக்கின்றது. இன்றைய இறைவார்த்தை நாம் ஒவ்வொருவரும் உலகிற்கு ஒளியாக இருக்கவேண்டும் என்ற சிந்தனையை எடுத்துக்கூறுகின்றது. இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பாப்போம்.

தன்னை இழக்கத் தயராய் இருக்கவேண்டும்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாக, ஒளியாக இருக்கின்றீர்கள் என்று கூறுகின்றார். உப்பு, ஒளி இரண்டும் வேறு வேறாக இருந்தாலும், இரண்டுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கின்றது. அது என்ன ஒன்றுமை எனில், தன்னை இழப்பதாகும். உப்பு தன்னை இழந்து உணவிற்குச் சுவையூட்டுகின்றது.... ஒளியோ தன்னைக் கரைத்துக்கொண்டு அல்லது தன்னை இழந்து உலகிற்கு ஒளிகொடுக்கின்றது. அப்படியானால் இயேசு மக்களைப் பார்த்து அல்லது சீடர்களைப் பார்த்து, நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய், ஒளியாய் இருக்கிறீர்கள் என்று கூறுகின்றார் என்றால், அவர்கள் தங்களை இழந்து விண்ணகத் தந்தைக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்பதுதான் இதன் பொருளாக இருக்கின்றது.

சீடத்துவ வாழ்வில் இழத்தல் என்ற பண்பு முக்கிய இடம் வகிக்கின்றது. “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும்; மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” (யோவா 12: 24) என்று சொல்லும் சொல்லும் இயேசு, நாம் நம்மை இழக்கின்றபொழுது மட்டுமே உலகிற்கு உப்பாக ஒளியாக இருக்க முடியும் என்று கூறுகின்றார்.

அஞ்சாதிருக்கவேண்டும்

உலகிற்கு உப்பாக, ஒளியாக இருக்கத் தன்னை இழப்பது முதல்படி என்றால், அஞ்சாதிருப்பது அடுத்த படி என்று சொல்லலாம். இதற்கான தெளிவினை நற்செய்தி வாசகத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளலாம்.

இன்றைய நற்செய்தியில் இயேசு, “எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின்மீதே வைப்பர்” என்று கூறுகின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகளுக்கு விளக்கம் அளிக்கின்றபொழுது, திருவிவிலிய அறிஞர்கள், “கிறிஸ்தவம் வேகமாகப் பரவி வந்த தொடக்கக் காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்கள்மீது தொடர் தாக்குதல்களும் வன்முறைகளும் நடந்த வன்ணமாய் இருந்தன. இத்தகைய சூழ்நிலையில் கிறிஸ்தவர்களில் ஒருசிலர், தாங்கள் கிறிஸ்தவர்கள் என்று அரசாங்கத்திற்குத் தெரிந்தால், தங்களுடைய உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சி அஞ்சி வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்து, அஞ்சி அஞ்சி வாழாமல், அஞ்சாமல் துணிவோடு சான்று பகர்ந்து வாழவேண்டும்” என்று விளக்கம் அளிப்பார்கள்.

ஆம், உலகிற்கு உப்பாக, ஒளியாக இருக்கவேண்டியவர்கள் பிறர் என்ன நினைப்பார்களோ என்று தங்களுடைய கிறிஸ்தவ அடையாளத்தை மறைத்துகொண்டு அஞ்சி அஞ்சி வாழ்ந்தார்கள் எனில், அவர்களால் உலகிற்கு ஒளியாக, உப்பாக இருக்க முடியாது. அவர்கள் ஆண்டவருக்கு மட்டுமே அஞ்சி, அவருக்குச் சான்று பகர்ந்து வாழவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் உலகிற்கு உப்பாக, ஒளியாக இருக்கமுடியும்.

வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டும்

உலகிற்கு உப்பாக, ஒளியாக இருப்பதற்கான மூன்றாவது மற்றும் நிறைவான படி, வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும். அது எப்படி வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் வழியாக நாம் உலகிற்கு உப்பாக, ஒளியாக மாற முடியும் என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலை இன்றைய முதல் வாசகம் தருகின்றது. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தின் இறுதியில், “வறியோரின் தேவையை நிறைவுசெய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும் “ என்று கூறுகின்றார். இறைவாக்கினர் எசாயா கூறுவதுபோல் நாம் வறியோரின் தேவைகளை நிறைவுசெய்பவர்களாக இருக்கின்றோமா? அல்லது அவர்களைக் கண்டும் காணாமல் இருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

அண்மையில் செய்தித்தாளில் வெளிவந்த ஒரு செய்தி இது: சண்டிகரைச் சார்ந்த குர்கிரெத் என்ற பத்து வயதுச் சிறுவன், ஏழை ஒருவரின் மருத்துவச் செலவிற்காக ரூபாய் முப்பதாயிரம் நன்கொடை வழங்கியிருக்கின்றான். இவ்வளவு பெரிய தொகை இவனுக்கு எப்படிக் கிடைத்தது என்ற கேள்வி எழலாம். இவனுடைய பெற்றோர் இவனுடைய செலவுக்காகக் கொடுத்த பணத்தை இவன் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்தான். அதிலிருந்துதான் இவன் ஏழை ஒருவருடைய மருத்துவச் செலவிற்கு உதவியிருக்கின்றான். தற்பொழுது ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இச்சிறுவன், நாம் வறியவர்களுக்கு உதவி செய்வதற்கு வயதோ, குடும்பச் சூழ்நிலையோ ஒரு பொருட்டல்ல என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.

ஆகையால், நாம் எந்த நிலையில் இருந்தாலும் வறியோருக்கு உதவி செய்து, அவர்களின் தேவைகளை நிறைவு செய்யவேண்டும். அப்பொழுது நாம் உலகிற்கு உப்பாக, ஒளியாக இருக்க முடியும் என்பது உறுதி.

சிந்தனை

‘நன்மை செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்’ (எசா 1:17) என்பார் இறைவாக்கினர் எசாயா. ஆகையால், நாம் எல்லா மக்களுக்கும் நன்மை செய்து, உலகிற்கு ஒளியாக, உப்பாக விளங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

மனிதர்முன் ஒளிர்க!

இரண்டு நாள்களுக்கு முன் திருச்சி இரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும்போது நிறைய வெடிச்சத்தம். தானி பிடித்து சாலைக்கு வந்தால் சாலையில் மணமக்கள் ஊர்வலம். அப்போது இரவு 8 மணி. அந்த இரவில் நீண்ட ஊர்வலம். ஊர்வலத்தை ஒளிர்விக்க நிறைய விளக்குகள். பெரிய சாரட் வண்டியின்மேல் ஒருவருக்கு ஒருவர் சிரித்துப் பேசியபடி அமர்ந்திருந்த மணமக்கள். அவர்களுக்கு முன் நடனமாடிக்கொண்டே வேறு இரண்டு குதிரைகள். அவற்றைக் கட்டுப்படுத்த ஓர் ஆள். நீண்ட வரிசையில் ஆண்களும் பெண்களும். சிலர் சாலைகளைப் பார்த்துக்கொண்டு, சிலர் தங்கள் அலைபேசிகளைப் பார்த்துக்கொண்டு, சிலர் மணமக்களைப் பார்த்துக்கொண்டு, சிலர் குதிரைகளின் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டு, இன்னும் சிலர் செண்டை மேளக்காரர்களைப் பார்த்துக்கொண்டு. இப்படியாக ஊர்வலம் கடந்து போனது. ஊர்வலத்தையும் நான் கடந்து போனேன்.

எதற்காக இவ்வளவு பெரிய ஊர்வலம்? எதற்காக இவ்வளவு ஆடம்பரம்?

'மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக!'

இல்லையா?

அப்புறம்? 'பார்த்தவர்கள் புகழ வேண்டும், வியந்து பாராட்ட வேண்டும்'

யாரை? 'மணமக்களை, மணமக்கள் வீட்டாரை!'

'மற்றவர்கள் பார்க்க வேண்டும்!' சரி! ஆனால், அவர்கள் பாராட்ட வேண்டியது விண்ணகத் தந்தையை என்று மானிடரின் புரிதலைப் புரட்டிப் போடுகின்றார் இயேசு. இந்தப் புரட்டிப் போடுதலே சீடத்துவத்தின் புதிய பயணம்.

வாட்ஸ்ஆப்பில் ஸ்டேடஸ் போட்டுவிட்டு, 'எத்தனை பேர் அவற்றைப் பார்த்திருக்கிறார்கள்?' 'எத்தனைபேர் பதிலிறுப்பு செய்திருக்கிறார்கள்?' என்று நாம் பார்க்கும்போதும்கூட நாம் அடுத்தவர்கள் நம்மைப் பார்க்கவே விரும்புகிறோம். அடுத்தவர்கள் நம்மைப் பார்ப்பது நம்மேல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது. தன்னுடைய கால்கள் சிக்கி தானே விழும் குழந்தை யாரும் தன்னைப் பார்க்கவில்லையென்றால் மெதுவாக எழுந்து போய்விடுகிறது. ஆனால், யாராவது தன்னைப் பார்த்துவிட்டால் தேம்பித் தேம்பி அழ ஆரம்பிக்கிறது.

அடுத்தவர்கள் நம்மைப் பார்க்கிறார்கள் என்றால், அல்லது அவர்கள் பார்ப்பது நம் செய்கையைப் பாதிக்கிறது என்றால், நாம் அவர்கள் முன் ஒளிர வேண்டும் என்று நம்மை அழைக்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு!

இன்று நாம் ஒளிர்கிறோமோ இல்லையோ நம்மைச் சுற்றி நிறைய ஒளிரிகள் இருக்கின்றன. நம்முடைய கைகளில் ஒட்டிப்போன ஸ்மார்ட்ஃபோன், நமக்கு முன் ஒய்யாரமாக சுவரில் அறையப்பட்ட செவ்வகமாய் எல்இடி டிவி, நம் மடிக்கணிணி திரை, அறையின் ஒளிவிளக்குகள் என நம்மைச் சுற்றி நிறைய ஒளிர்ந்துகொண்டே இருக்கின்றன. இவைகளை நோக்கி நம் கண்கள் இயல்பாகவே செல்கின்றன. இவைகளே ஒளிரும்போது நாம் ஒளிர வேண்டாமா?

எதற்காக ஒளிர்தல் வேண்டும்?

'உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க' என்று தன்னுடைய சீடர்களைப் பார்த்துச் சொல்கின்ற இயேசு, இதே மத்தேயு நற்செய்தியின் மலைப்பொழிவில், தர்மம் செய்தல், இறைவேண்டல் செய்தல், நோன்பிருத்தல் என்னும் அறச்செயல்கள் பற்றிய அறிவுரைப் பகுதியில், 'மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்' (காண். மத் 6:1) என எச்சரிப்பது ஏன்?

இயேசுவைப் பொறுத்தவரையில் நம்முடைய செயல்கள் ஒளிர வேண்டும். ஏன்? அவற்றால் விண்ணகத்தந்தை பெருமைப்படுத்தப்படுவதால்!

இன்றைய முதல் வாசகமும் (காண். எசா 58:7-10) நற்செய்தி வாசகமும் (காண். மத் 5:13-16), 'ஒளி' என்ற வார்த்தையை மையமாக வைத்தே சுழல்கின்றன.

நற்செய்தி வாசகத்திலிருந்து நம்முடைய சிந்தனையைத் தொடங்குவோம். இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் மலைப்பொழிவில், பேறுடைமைகளைத் தொடர்ந்து அமைந்திருக்கிறது. 'நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் ... நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள்' என்கிறார் இயேசு. 'நீங்கள்' என்பது இங்கே இயேசுவின் சீடர்களைக் குறிக்கிறது. 'உப்பாக இருக்கவும், ஒளியாக இருக்கவும்' அறிவுறுத்தவோ அல்லது வலியுறுத்தவோ இல்லை இயேசு. மாறாக, சீடர்கள் உப்பாகவும் ஒளியாகவும் இருப்பதாகவே சொல்கின்றார்.

இயேசுவைப் பொறுத்தவரையில் அவருடைய குழுமம் அல்லது குழுமத்தில் உறுப்பினர்களாக இருக்கிறவர்கள் எல்லாருமே உப்பாகவும் ஒளியாகவும் இருக்கிறார்கள்.

உப்பு மற்றும் ஒளி உருவகங்களை எப்படிப் புரிந்துகொள்வது?

உப்பு என்பது முதல் ஏற்பாட்டில் பலிப்பொருளில் கலக்கப்படும் பொருளாகவும், உடன்படிக்கை நிகழ்வில் பயன்படுத்தப்படும் பொருளாகவும், உணவைப் பாதுகாக்கும் பொருளாகவும், உணவிற்கு சுவையூட்டும் பொருளாகவும், கெட்டதை தூய்மையாக்கும் (கசப்பான தண்ணீரை நல்ல தண்ணீராக்கும்) பொருளாகவும் பயன்படுகிறது. ஒரே உப்பைச் சாப்பிடுவதன் வழியாக நட்பு வலுப்படுகிறது என்று மக்கள் நம்பினர். மேலும், ஆங்கிலத்தில் உள்ளத்தில் 'ஸேலரி' (சம்பளம்) என்ற வார்த்தையே 'ஸாலே' (உப்பு) என்ற இலத்தீன் சொல்லிலிருந்தே வருகிறது. ஏனெனில், தொடக்கத்தில் உரோமை படைவீரர்களின் சம்பளமாக உப்புதான் வழங்கப்பட்டது. இப்படிப் பல புரிதல்கள் இருந்தாலும், இன்றைய நற்செய்தியின் பின்புலத்தில் பார்க்கும்போது, உவர்ப்பு தன்மையைக் கொண்டிருக்கும் வரைதான் உப்பு மதிப்பு பெறுகிறது. ஆனால், அத்தன்மையை இழந்துவிட்டால் அது குப்பையாக மாறிவிடுகிறது, பயன்படாப் பொருளாக, வைத்திருப்பவருக்குச் சுமையாக மாறிவிடுகிறது. நீண்ட காலமாக உப்பை வைத்திருக்கும்போது, அல்லது அதிகமான வெயில், அதிகமான குளிர் என்று தட்பவெப்பநிலை மாறிக்கொண்டிருக்கும்போது, அல்லது தூசியான இடத்தில் வைக்கும்போது என இந்நேரங்களில் உப்பு தன் தன்மையை இழக்கும் வாய்ப்பு உள்ளது. உப்பானது நீரில் கரைக்கப்படும்போது அல்லது உணவுப்பொருள்களில் கலக்கும்போதும் அது தன் தன்மையை இழக்கும். ஆனால், அப்படிப்பட்ட இழப்பு வரவேற்கத்தக்கது. ஏனெனில், அங்கே அது பயன்பாட்டுப்பொருளாக மாறிவிடுகிறது. பயன்பாட்டுப் பொருளாக மாறாமல் தன்னிலேயே தன்மை இழப்பதுதான் ஆபத்தானது. ஏனெனில், அப்படிப்பட்ட நேரத்தில் உப்பு யாருக்கும் பயனில்லாமல் போய்விடுகிறது. ஆக, உப்பு சுவையாவதும், சுமையாவதும் அதனுடைய உவர்ப்புத்தன்மையில்தான் இருக்கிறது. அது போலவே, இயேசுவின் குழும உறுப்பினரும் சீடரும் உறுப்பினருக்குரிய சீடருக்குரிய தன்மையைக் கொண்டிருக்கும் வரை தான் அவர்கள் குழுமத்தில் இருக்க முடியும்.

ஒளி என்பது கடவுளையும் வாழ்வையும் குறிக்கிறது. படைப்பின் தொடக்கத்தில், இருளும் வெறுமையும் குழப்பமும் நிறைந்த இடம், 'ஒளி உண்டாகுக!' என்ற வார்த்தைகளால் உயிர்பெறுகின்றன. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து விடுதலை பெற்று வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குச் செல்லும்போது நெருப்புத்தூணாக உடன்செல்கின்றார் ஆண்டவராகிய கடவுள். இஸ்ரயேலைத் தன்னுடைய ஒளி என அழைத்து மகிழ்கின்றார் கடவுள். 'ஒளி இனிமையானது' என்று ஞான இலக்கியங்கள் கொண்டாடுகின்றன. இரண்டாம் ஏற்பாட்டிலும் ஒளி கடவுளிடமிருந்து வருவதாகவும், கடவுள் சார்ந்த செயல்கள் செய்பவர்கள் ஒளியிடமிருந்து பிறக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீடத்துவம் என்பது இத்தகைய ஒளியைத் தன்னகத்தே கொண்டிருப்பது. மேலும், இயேசுவின் சமகாலத்துப் பாலஸ்தீனத்தில் எல்லா வீடுகளிலும் விளக்கு எப்போதும் அணையாமல் இருக்கும். தீப்பெட்டி பயன்பாடு அரிதாக இருந்த காலத்தில் விளக்கை அணைந்துவிடாமல் பார்த்துக்கொள்வதும், திரியைச் சுருக்கி எரியவிடுவதும் இன்னும் கிராமங்களில் வழக்கத்தில் இருக்கிறது. அப்படி திரியை அணையவிடாமல் பாதுகாக்க அதை அவர்கள் மரக்காலின் கீழ் அல்லது கட்டிலின் கீழ் அல்லது ஒரு பாத்திரத்தால் மூடி வைப்பது வழக்கம். வீட்டிற்குள் யாராவது வரும்போதுதான் அவர்கள் அதைத் திறந்து வைப்பர். ஸ்விட்சைப் போட்ட அடுத்த நொடி எரியும் விளக்குகளுக்குப் பழகிவிட்ட நமக்கு இந்த உருவகம் சற்று தூரமாகவே இருக்கிறது. ஆனால், பொருள் மிகவும் எளிது. ஒளி பிறருக்குப் பயன்பட வேண்டும்.

ஆக,

உப்பு தன்னுடைய உவர்ப்புத்தன்மையாலும், ஒளி தன்னுடைய ஒளிரும் தன்மையாலும் மற்றவர்களின் வாழ்வுக்குப் பயன்தர வேண்டும். அப்படிப் பயன்பதருவதற்கான ஒரு வழியே நற்செயல்கள்.

இந்நற்செயல்கள் எவை என்பதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது:

பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து நாடு திரும்பிய இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய வழிபாடு சார்ந்த செயல்பாடுகளில் மூழ்கிக்கிடந்து வாழ்வுசார் செயல்களை மறந்துவிட்ட நிலையில் அவர்களுக்கு நோன்பு பற்றிய புதிய வரையறையைத் தருகின்றார் எசாயா. நோன்பு என்றால் என்ன? 'பசித்தோருக்கு உணவைப் பகிர்வது, தங்க இடமில்லாதவர்களுக்குத் தங்குவதற்கு இடம் தருவது, ஆடையற்றோரை உடுத்துவது, இனத்தாருக்கு உடனிருப்பது'. இத்தகைய நோன்பை மேற்கொள்பவர்கள் கடவுளின் உடனிருப்பைக் கண்டுகொள்வர். மேலும், 'உன்னிடம் இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு,' 'சுட்டிக் காட்டி குற்றம் சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு,' 'பசித்திருப்போருக்கு ஒருவர் தன்னையே கையளித்து,' 'வறியோரின் தேவையை நிறைவு செய்தால்' இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். இவை இஸ்ரயேல் மக்களின் இயலாமைகளாக, குறைகளாக இருந்தவை. இவற்றைக் களைய அவர்களை அழைக்கின்றார் கடவுள்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 2:1-5) புனித பவுல், தான் கொரிந்து நகர மக்களுக்கு நற்செய்தி அறிவிக்கச் சென்றபோது தன்னிடமிருந்த உணர்வையும் மனப்பாங்கையும் பதிவுசெய்கின்றார்: 'நான் உங்கள் நடுவில் வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும், நடுக்கத்தோடும் இருந்தேன்.' இப்படிப்பட்ட நிலையில் நற்செய்தி அறிவத்ததுதான் பவுலின் நற்செயல். இந்நற்செயலாலேயே இவர் ஒளிர்கின்றார்.

இன்று நாம் மனிதர்முன் எப்படி ஒளிர்வது?

அ. நற்செயல்கள் செய்வதால்

- எசாயா இறைவாக்கினர் முன்வைக்கும் பிறரன்புச் செயல்கள் வழியாக.

ஆ. நற்செய்தி அறிவிப்பதால்

- பவுல் போல தன்னையே இறைவனுக்கு சரணாகதியாக்கி அந்த அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்வது.

இ. கலப்பதாலும் கடந்து நிற்பதாலும்

உப்பு தன்னையே அழித்து, மறைத்து, தன் இயல்பை இழந்து உணவோடு கலக்கும்போது சுவை தருகிறது. தனித்து நிற்றலில் அல்ல, மாறாக, கலந்துவிடுவதில்தான் உப்பின் பயன்பாடு இருக்கிறது. ஒளி தன் இருப்பைவிட்டு கடந்து நிற்றால்தான் மற்றவர்களுக்குப் பயன்தர முடியும்.

இப்படி வாழ்வதால் நமக்கு மன அழுத்தம் கூடிவிடாதா? எந்நேரமும் நாம் ஏன் பயன்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்? நாம் என்ன பயன்பாட்டுப் பொருள்களா? நாம் என்ன கால்நடைகளா? இப்படிப்பட்ட கேள்விகளால் எழும் ஸ்ட்ரெஸ்ஸிலிருந்து நாம் எப்படி விடுபவது?

நம்முடைய செயல்களால் இறைவன் அதாவது நம்முடைய விண்ணகத்தந்தை மாட்சி பெற வேண்டும். ஒரு குழந்தையின் செயலைக் கண்டு அதன் தாயையும் தந்தையையும் பாராட்டுவதுபோல இறைவன் பாராட்டப்பட வேண்டும். ஏனெனில், சீடத்துவம் என்னும் உவர்ப்புத்தன்மையின் ஊற்றும், ஒளிரும்தன்மையின் ஊற்றும் அவரே. 'அவருக்கு அஞ்சிநடப்போர் இருளிலும் ஒளியென மிளிர்வர்' (திபா 112) என்கிறது இன்றைய பதிலுரைப்பாடல்.

 

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com