மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் நான்காம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
மலாக்கி 3: 1-4 | எபிரேயர் 2: 14-18 | லூக்கா 2: 22-40

 

ser

"ஆண்டவரின் நற்செய்தியை எடுத்துரைக்கும் சீடர்களாவோம்"

இயேசுவின் நற்செய்திப் பணியைச் செய்கின்ற யாவரும் தங்களுடைய வார்த்தைகளை அல்ல, கடவுளுடைய வார்த்தையை எடுத்துரைக்கவேண்டும், அதுதான் மனிதருடைய உள்ளத்தை ஊடுருவிப்பாயும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது.

ஆண்டவர் இயேசு தன்னுடைய சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்புகிறார். அப்போது அவர் கூறுகின்ற அறிவுரைதான் இன்றைய நற்செய்தி வாசகமாக அமைந்திருக்கிறது. இயேசு சீடர்களை பணித்தளத்திற்கு அனுப்புகிறபோது கூறுகின்ற முதன்மையான அறிவுரை, “பயணத்திற்கு கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக்கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்” என்பதுதான். இயேசு எதற்கு இப்படிச் சொல்லவேண்டும் என சிந்திக்கலாம். ஆனால் அதற்கு விவிலிய அறிஞர்கள் கூறுகின்ற கருத்து, எருசலேம் திருக்கோவிலில் நுழைகின்ற யாரும் தன்னிடம் இருக்கும் எதையும் உள்ளே எடுத்துக்கொண்டு போகக்கூடாது, வெறுமனேதான் செல்லவேண்டும். இயேசு நற்செய்தி அறிவிப்புப் பணியை ஆலயத்திற்கு பிரவேசிக்கின்ற திருப்பணியாகக் கருதியதால் என்னவோ, அவர் கையில் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என சொல்லியதாக அவர்கள் கூறுவார்கள்.

விவிலிய அறிஞர்கள் கூறுகின்ற இன்னொரு விளக்கம் நற்செய்தியைப் பணியாளர்களை, அவர்கள் எந்த ஊரில் பணிசெய்கிறார்களோ அவர்கள் பராமரித்துக்கொள்ளவேண்டும். அது அவர்களுடைய தலையாயக் கடமையாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் கையில் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என இயேசு கூறியதாகச் சொல்வார்கள்.

அடுத்ததாக இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களிடம் என்ன செய்தியை மக்களுக்குப் போதிக்கச் சொன்னார் என சிந்தித்துப் பார்ப்பது மிகப் பொருத்தமானதாகும். அவர் அவர்களிடத்தில் போதிக்கச் சொன்ன முக்கியமான செய்தி மனமாற்றம்தான். சீடர்கள் ஆண்டவர் இயேசு தங்களுக்குச் சொன்னதுபோன்று மனமாற்றச் செய்தியை மக்களுக்கு அறிவித்தார்கள், அவர்களை இறைவன் பக்கம் திரும்பினார்கள்.

இந்த இடத்தில் நற்செய்திப் பணி செய்யும் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்று இருக்கின்றது. அதுதான் தங்களுடைய செய்தியை அல்ல, ஆண்டவருடைய செய்தியைப் போதிக்கவேண்டும் என்பதாகும். சீடர்கள் யாவரும் ஆண்டவர் இயேசு தங்களுக்குச் சொன்ன மனமாற்றச் செய்தியை மக்களுக்குப் போதித்து, அவர்கள் மனமாறச் செய்தார்கள். அதைப் போன்று இறைவாக்குப் பணிசெய்யும் ஒவ்வொருவரும் தங்களுடைய செய்தியை அல்ல, இறைவனுடைய செய்தியை மக்களுக்கு எடுத்துரைக்கவேண்டும். அதுதான் ஆண்டவர் இயேசு தன்னுடைய பணியாளர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்க்கும் ஒன்றாக இருக்கின்றது.

நற்செய்திப் பணியாளர்கள் ஆண்டவருடைய சேதியை அறிவித்து, மக்களை மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று சிந்தித்த நாம், ஆண்டவரின் நற்செய்தியை அறிவிக்கும் நற்செய்திப் பணியாளர்களுக்கு – குருக்களுக்கு - எத்தகைய மதிப்பளிக்கவேண்டும் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். இயேசு தன்னுடைய சீடர்களை கையில் எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம் என்று சொன்னார். எதற்காக என்றால் அவர்கள் பணியாற்றுகின்ற இடத்தில் இருக்கும் மக்கள்தான் அவர்களைப் பராமரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில். எனவே, இறைவார்த்தையைக் கேட்கின்ற மக்கள், அதனை அவர்களுக்கு அறிவிக்க பணியாளர்களை உரிய முறையில் கவனித்துக் கொள்கிறார்களா?, அவர்களுக்குத் தகுந்த மதிப்பளிக்கிறார்களா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில் கூறுவார், “நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாயக்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்” என்று. இயேசுவின் இவ்வார்த்தைகள், இறைவார்த்தையை – இறைவாக்கை எடுத்துச் சொல்லும் பணியாளர்களை – ஏற்றுக்கொள்ளாத மக்களுக்குக் கிடைக்கும் தண்டனையாக இருக்கின்றது.

ஆகவே, இறைவாக்கை எடுத்துச் சொல்லும் நற்செய்திப் பணியாளர்கள் இறைவாக்கை மட்டும் எடுத்துரைப்பவர்களாக இருக்கவும், இறைவார்த்தையைக் கேட்கும் மக்கள், அதன்படி நடக்கவும், அந்த இறைவாக்கை எடுத்துச் சொல்லும் நற்செய்தி பணியாளர்களுக்கு உரிய மதிப்புத் தரவும் ஜெபிப்போம், இவ்வாறு இறைவனுக்கு உகந்த மக்களாய் வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

 

"இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்"

புத்தரிடம் சீடராகச் சேர்ந்து ஆசி பெறுவதற்காக தேவதத்தர் வந்தார். அவரிடம் புத்தர், “நான் உன்னை என்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு உனக்கு ஆசிவழங்கவேண்டும் என்றால், நீ நாளை அதிகாலை 4 மணிக்குத் தனியாக வரவேண்டும்” என்றார்.

அதன்படி தேவதத்தர் மறுநாள் அதிகாலை 4 மணிக்குத் தனியாக புத்தர் இருந்த குடிசைக்கு வந்தார். அவரைக் கூர்ந்து நோக்கிய புத்தர், “நான் உன்னைத் தனியாகத்தானே வரச் சொன்னேன். எதற்காக இப்படி இரண்டு மூன்று ஆட்களை உன்னோடு கூட்டிவந்திருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவர், எங்கே தனக்குப் பின்னால் யாராது இருக்கிறார்களா? என்று திரும்பிப் பார்த்தார். அதற்கு புத்தர், “நான் வெளியே உள்ள ஆட்களைச் சொல்லவில்லை, உனக்கு உள்ளே இருக்கும் ஆட்களைப் பற்றிச் சொல்கிறேன்” என்றார்.

தேவதத்தர் தனக்குள் கவனித்தார், அப்போதுதான் அவருக்குத் உண்மை தெரிந்தது தனக்குள் தன்னுடைய மனைவி, பிள்ளைகள், தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்து, புகழ் எல்லாம் இருக்கிறது என்று. உடனே அவர் புத்தரிடம், “எனக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுங்கள். அதற்குள் நான் என்னையே தகுதிப்படுத்திக் கொண்டு, மீண்டுமாக வந்து உங்களுடைய சீடராகச் சேர்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார்.

ஓராண்டு காலம் முடிந்த பிறகு அவர் மீண்டுமாக புத்தரிடம் வந்தார். இப்போது அவரைப் பார்த்த புத்தர், அவர் மிகவும் பக்குவமடைந்து தனி ஆளாக வந்திருப்பதை அறிந்து, அவரைத் தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு ஆசி வழங்கினார்.

துறவு வாழ்வுக்கு/ பொது வாழ்வுக்கு தங்களையே அர்ப்பணிப்போர் எல்லாவற்றையும் துறந்துவிட்டு, தங்களையே அர்பணிக்கவேண்டும் என்பதை இந்த நிகழ்வானது நமக்கு உணர்த்துகின்றது.

இன்று திருஅவையானது ஆண்டவராகிய இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடுகின்றது. தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் அதிகாரம் 5:15 ல் கூறுவதுபோல “வாழ்வோர் இனி தங்களுக்காக வாழாமல், தங்களுக்காக இறந்து, உயிர்த்த கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்று இவ்விழாவானது நமக்கு அழைப்புத் தருகின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மலாக்கி கூறுவார், “இதோ! நீங்கள் தேடுகின்ற தலைவர் திடிரென்று தம் கோவிலுக்கு வருவார்; நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்” என்று. அதன்படி நற்செய்தி வாசகத்தில் தூய்மைச் சடங்கை நிறைவேற்றுவதற்காக குழந்தை இயேசுவை அதனுடைய பெற்றோர்கள் எருசலேம் ஆலயத்திற்கு கொண்டுவருகிறார்கள்.

“தலைப்பேறு அனைத்தும் எனக்கு அர்ப்பணம் செய்” (விப 13:2) என்ற ஆண்டவரின் வாக்கிற்கிணங்க இஸ்ரேயல் மக்கள் தங்களுடைய தலைப்பேறை ஆண்டவருக்கு காணிக்கையாகச் செலுத்திவந்தார்கள். அதன்படியே இயேசுவின் பெற்றோர்களும் அவரைக் கோவிலில் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இதன்மூலம் இயேசு இறைவனுக்குக் கையளிக்கப்பட்டவர் ஆகிறார்.

இறைவனுக்கு கையளிக்கப்படல் என்று சொல்கிறபோது நமது வாழ்க்கையை இறைவனுக்காக முற்றிலுமாகக் கையளித்து, அவரது விருப்பத்தின்படி வாழ்வதாகும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனுக்காகத் தன்னையே முற்றிலுமாகக் கையளித்து, அவரது விருப்பத்தின்படி வாழ்ந்தார் என்பதை நற்செய்தியில் பல இடங்களில் வாசிக்கின்றோம். குறிப்பாக கெத்சமனித் தோட்டத்தில் ஆண்டவர் இயேசு சிலுவைப் பாடுகளை ஏற்பதற்கு முன்பாக, “தந்தையே! உமக்கு விருப்பமானால் இந்தத் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்படி அல்ல; உம் விருப்பப்படி நிகழட்டும்” (லூக் 22:42) என்கிறார்.

ஆக, இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தந்தையின் திருவுளத்தை ஏற்று நடந்தார் என்பதை நாம் மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். திருமுழுக்கின் வழியாக கடவுளுக்கு அர்பணிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருமே இறைத் திருவுளத்தின்படி வாழவேண்டும் என்பதுதான் நமக்குத் தரப்படும் அழைப்பாக இருக்கிறது.

இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் கூறுவார், “ஊனும் இரத்தமும்கொண்ட பிள்ளைகளைப் போல கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்குகொண்டார்; இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாக அழித்துவிட்டார்” என்று. ஆம், இயேசு கிறிஸ்து தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி சாவின்மீது வெற்றிகொண்டார் என்றால், அவரது சீடர்களாக இருக்கும் நாமும் தந்தையின் திருவுளத்தின்படி நடந்து சாவின் சக்திகளான வேற்றுமை, வறுமை, பஞ்சம், பசி, பட்டினி போன்றவற்றைக் களையவேண்டும்.

“சமூக நலன் என்ற அக்கினியில் சுயநல ஆசைகளைச் சுட்டேரிப்பதே தூய துறவு” என்பார் விவேகானந்தர். கடவுளுக்கு தங்களை முழுமையாக அர்பணிப்போரும் தன்னால ஆசைகளைத் துறந்து, தன் விருப்பத்தை நிறைவேற்றுவதை விடுத்து, இறைவிருப்பதை நிறைவேற்றவேண்டும்.

ஆதலால் ஆண்டவர் இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த விழாவைக் கொண்டாடும் நாமும் இயேசுவைப் போன்று இறைத்திருவுளம் நிறைவேற்றுவோம். இறையருளை நிறைவாய் பெறுவோம்.

ser
ser

"மீட்பைக் கண்டுகொள்தல்"

நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்க்கும் தன் தந்தைக்காக சிறுவன் ஒருவன் வாசலில் காத்திருந்தான். மாலை மங்கும் நேரம். பணியாளர்கள் வரிசையாக வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். சுரங்கத்தில் வேலை பார்த்ததால் எல்லார் முகமும் கறுப்பாக இருக்கின்றது. சிறுவன் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த வாயில் காப்போன் கேட்கின்றார்: 'தம்பி, ஏறக்குறைய 700 பேர் இந்தச் சுரங்கத்தில் வேலை செய்கிறார்கள். எல்லாரும் வேலை முடிந்து வரும்போது கரி பிடித்துத்தான் வருவார்கள். எல்லாரும் ஹெல்மெட்டும் அணிந்திருப்பார்கள். இவர்களில் உன் அப்பாவை எப்படிக் கண்டுபிடிப்பாய்?' சிறுவன் சொல்கிறான்: 'என்னால் அவரைக் கண்டுபிடிப்பது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம். ஆனால் அவர் என்னை எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார். ஆகையால் தான் நான் இங்கே நிற்கிறேன்.'

எருசலேம் கோவிலுக்குள் தினமும் எத்தனையோ குழந்தைகள் கொண்டுவரப்படுவார்கள். அவர்களில் இவர்தான் 'நான் எதிர்பார்த்த குழந்தை!' என எப்படி முதியவர் சிமியோனால் கண்டுபிடிக்க முடிந்தது?

இன்று நாம் நம் ஆண்டவரை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்த நாளைக் கொண்டாடுகிறோம். கைகளில் மெழுகுதிரிகள் ஏந்தி பவனியாக வந்தோம். இந்த நாளை அர்ப்பணத்தின் நாள் என்றும், துறவற வாழ்வில் தங்களையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்தவர்களின் நான் என்றும் திருஅவை கொண்டாடுகிறது. மேலும், குழந்தைகள் பற்றிய புரிதல் நாள் என்றும், அல்லது குழந்தைகள் நாள் என்றும் திருஅவை கொண்டாடி மகிழ்கிறது.

மரியாவும் யோசேப்பும் கொண்டு வந்த குழந்தையைக் கைகளில் ஏந்துகிற சிமியோன், 'மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன' என்று ஆர்ப்பரித்து மகிழ்கின்றார்.

மீட்பு என்றால் என்ன?

'மீட்பு' என்பதை கிரேக்கத்தில் இரண்டு சொல்லாடல்கள் வழியாகக் குறிக்கலாம்: ஒன்று, 'ஸொத்தேரியா'. இது பெண்பால் பெயரெச்சம். இதன் பொருள் 'நலம்' அல்லது 'விடுதலை' அல்லது 'பாவத்திலிருந்து விடுதலை.' இரண்டு, 'ஸொத்தேரியோன்'. இது பலவின்பால் பெயரெச்சம். இது இறைவனின் அரும்பெரும் செயல்களைக் குறிக்கும். நம்முடைய வாசகத்தில் இரண்டாவது சொல்லாடல்தான், அதாவது, 'இறைவனின் அரும்பெரும் செயல்' இடம்பெற்றுள்ளது.

கைகளில் தான் ஏந்தி நிற்கும் குழந்தையில் இறைவனின் அரும்பெரும் செயல்களைக் கண்டுகொள்கிறார் சிமியோன்.

சிறிய விதையில் நிறைய நெல்மணிகளைப் பார்ப்பதுபோல,
ஒற்றைத் துளியில் ஒரு பெரிய கடலைப் பார்ப்பது போல,
ஒற்றை நொடியில் காலாகாலத்தைப் பார்ப்பது போல,
ஒரு மண்துகளில் ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தைப் பார்ப்பது போல,
பார்க்கிறார் சிமியோன்.

இறைவனின் அரும்பெரும் செயல்களை நாம் கண்டுகொள்ள முடியுமா?

முதல் ஏற்பாட்டில் இரண்டு எடுத்துக்காட்டுக்களை எடுத்துக்கொள்வோம்.

முதலில் சிம்சோனின் தந்தையும் தாயும். சிம்சோனின் பிறப்பு அறிவிக்கப்படும் நிகழ்வில் (காண். நீத 13) சிம்சோனின் அப்பா பெயர் மனோவாகு என்று கொடுக்கப்பட்டுள்ளது. அம்மாவின் பெயர் கொடுக்கப்படவில்லை. ஆண்டவரின் தூதர் சிம்சோனின் பிறப்பைப் பற்றி முதலில் பெண்ணுக்கும் இரண்டாவது ஆணுக்கும் அறிவிக்கின்றார். இந்நிகழ்வின் இறுதியில் மனோவாகு தம் மனைவியிடம், 'நாம் செத்தோம். ஏனெனில் நாம் கடவுளைப் பார்த்துவிட்டோம்' (காண். நீத 13:22) என்கிறார். ஆக, கடவுளைப் பார்த்த எவரும் உயிரோடு இருப்பதில்லை என்பது முதல் ஏற்பாட்டின் ஒருவகைப் புரிதலாக இருக்கிறது. ஏனெனில், கடவுள் ஒளிமயமானவர். கடவுள் நம்மைவிட்டுத் தூரமாய் இருப்பவர். கடவுள் தூயவர், மாட்சி மிக்கவர். அவரின் தூய்மையும், மாட்சியும் மனிதர்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று.

இரண்டாவது ஆகார். சாராவின் பணிப்பெண் இவர். எகிப்திய இளவல். ஆபிரகாமிற்கு குழந்தை வாக்களிக்கப்படுகிறது. ஆனால், குழந்தைப்பேறு தள்ளிப்போவதைக் காண்கிற சாரா, அவசரப்பட்டு ஆகாரை ஆபிரகாமிடம் அனுப்புகிறார். ஆகார் கருத்தரிக்கிறார். அவர் தன்னை ஏளனமாகப் பார்ப்பதாக நினைக்கின்ற சாரா அவரைக் கொடுமைப்படுத்த அவர் பாலைவனத்திற்குத் தப்பி ஓடுகின்றார். பாலைவனத்தில் ஆகாரை எதிர்கொள்கின்றார் கடவுள். கடவுளின் குரலைக் கேட்ட ஆகார், 'என்னைக் காண்பவரை நானும் இங்கே கண்டேன் அல்லவா!' என்று சொல்லி, 'காண்கின்ற இறைவன் நீர்' என்று கடவுளுக்குப் பெயரிடுகின்றார். இந்தப் புரிதலின்படி இறைவன் நம்மைக் காண்கிறார். நாமும் அவரைக் காண்கின்றோம். காணுதல் என்பது இறைவனின் பாதுகாப்புச் செயலை இங்கே குறிக்கிறது. சிறிய குழந்தைகள் வீட்டருகில் விளையாடும்போது, 'என் கண்பார்வையிலேயே இரு!' என்று தாய் சொல்வது, 'என் பாதுகாப்பிலேயே இரு!' என்று பொருள்படுவதுபோல, இங்கே கடவுளின் பார்வை நம்மேல் படுவதால் நாம் பாதுகாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றோம்.

ஆக,

கடவுளைக் காணுதல் மரணத்தைத் தரும் என்ற ஒரு புரிதலும், கடவுளைக் காணுதல் நம் பாதுகாப்பை உறுதி செய்யும் என்ற இன்னொரு புரிதலும் முதல் ஏற்பாட்டில் இருக்கிறது.

இன்றைய திருநாளின் பின்புலத்தில் பார்க்கும்போது, கடவுளின் அரும்செயலைக் காணும் சிமியோன் ஒரே நேரத்தில் மரணத்தைத் தழுவுதல் போலவும், இறைவனின் பாதுகாப்பை அனுபவிப்பது போலவும் இருக்கிறது. ஏனெனில், சிமியோன், 'ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்!' என்று தம்முடைய இறப்பைப் பற்றியும், 'மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன' என்று தான் பெற்றுள்ள பாதுகாப்பு உணர்வு பற்றியும் சொல்கின்றார்.

இறைவனின் அரும்பெரும் செயல்கள் எப்படி நடக்கும்? அவற்றை நாம் எப்படி கண்டுகொள்வது?

ஒன்று, தேடுகின்ற ஒருவர்தான் இறைவனைக் கண்டுகொள்ள முடியும் என்று சொல்கிறது இன்றைய முதல் வாசகம் (காண். மலா 3:1-4). யூதாவில் நிலவிய அறநெறி மற்றும் சமயப் பிரச்சினையின்போது இறைவாக்குரைக்கின்றார் மலாக்கி. எருசலேம் ஆலயம் கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது. பலிகள் ஏனோதானோவென்று நிறைவேற்றப்படுகின்றன. குருக்களும் மக்களும் தங்களுடைய அறநெறி வாழ்வு பற்றி அக்கறையில்லாமல் இருக்கின்றனர். இந்தப் பின்புலத்தில் கடவுள் தன்னுடைய தூதரை அனுப்புவார் என முன்னுரைக்கிறார் மலாக்கி: 'நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரென்று தம் கோவிலுக்கு வருவார் ... அவர் புடமிடுகிறவரின் நெருப்பு போலவும் சலவைக்காரரின் சவர்க்காரம் போலவும் - அதாவது, இன்று நாம் பயன்படுத்தும் ஸர்ஃப் எக்ஸெல் போல - இருப்பார்.' இங்கே இரண்டு விடயங்கள் முக்கியமானதாக இருக்கின்றன: (அ) தேடுகின்ற ஒருவர்தாம் அல்லது காத்திருக்கின்ற ஒருவர்தாம் திடீரென்ற வருகின்ற தூதரைக் கண்டுகொள்ள முடியும். (ஆ) இவர் ஆலயத்தையும், ஆலயத்திலிருக்கின்ற குருக்களையும், பலியிட வருகின்ற ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களையும் தூய்மைப்படுத்துவார்.

இதை, இன்றைய திருநாளுக்குப் பொருத்திப் பார்த்தால், காத்திருக்கின்ற சிமியோன் உடன்படிக்கையின் தூதராம் இயேசுவைக் கண்டுகொள்கின்றார். மேலும், குழந்தையை அதன் பெற்றோர் தூய்மைச்சடங்கிற்காக அழைத்து வருகின்றனர்.

இரண்டு, இறைவன் நம்மைப் போல ஆகிவிட்டதால் அவரைக் கண்டுகொள்வது எளிது என்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபி 2:14-18). இயேசு வெறும் மனித அவதாரம் அல்ல. மாறாக, அவர் மனிதராகவே பிறந்தார். இதை இரண்டு நிலைகளில் இரண்டாம் வாசகம் சொல்கிறது: (அ) 'சாவின்மேல் ஆற்றல்கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாகவே அழித்துவிட்டார்' - இறப்பு என்பது அலகையின் செயல் என்பது எபிரேய புரிதல் (காண். சாஞா 2:23-24). இறப்பையும் அதன் தலைவனையும் அழிக்க இயேசு மனித உடல் ஏற்கின்றார். ஏனெனில் இறப்பு மனித உடலைத்தான் அழிக்கிறது. (ஆ) இயேசு வலுவற்ற மனித உரு ஏற்றதாலேயே அவர் இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமைக்குருவாக மாறுகின்றார்: 'கடவுள் பணியில் இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமைக்குருவாயிருந்து, மக்களுடைய பாவங்களுக்குக் கழுவாயாகுமாறு எல்லாவற்றிலும் தம் சகோதரர் சகோதரியைப் போல ஆகவேண்டியதாயிற்று.' காணக்கூடாத அல்லது காண முடியாத இறைவன் நம்முடைய உடலை ஏற்றுவிட்டதால் அவரைக் காண்பது எளிதாயிற்று என்கிறது இரண்டாம் வாசகம்.

இதை, இன்றைய திருநாளுக்குப் பொருத்திப் பார்த்தால், மனித உரு ஏற்றுள்ள கடவுளை - இயேசுவை - அவருடைய பெற்றோர் ஆலயத்திற்கு அழைத்து வருகின்றனர். மேலும், அவர் கடவுளாக இருந்தாலும் மனித வலுவின்மைக்கு உட்பட்டதால் அவரை மீண்டும் கடவுளுக்கே அர்ப்பணிக்கும் கட்டாயத்திற்கு அவருடைய பெற்றோர் உட்படுத்தப்படுகின்றனர்.

ஆக, இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்களின் பின்புலத்தில், இறைவனையும் அவருடைய மீட்புச் செயல்களையும் கண்டுபிடிக்க இரண்டு வழிகள் உள்ளன:

ஒன்று, அவருக்காகக் காத்திருத்தல் அல்லது அவரைத் தேடுதல்.

இரண்டு, நம்முடைய வலுவின்மைகளை ஏற்றுக்கொள்ளுதல் - அந்த வலுவின்மைகளில் இறைவனின் வல்லமையைக் காணுதல்.

மீட்பைக் கண்டுகொள்ள நமக்கு இவ்விரு வழிகள் நிற்க இதை நேரடியாக நமக்கு வாழ்ந்து காட்டிய மூவரை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு முன்வைக்கிறது:

அ. யோசேப்பு - மரியா

இவர்கள் திருச்சட்டத்தை நிறைவேற்ற ஆர்வம் கொண்டிருக்கின்றனர். இது ஒருவகையான மாதிரி. அதாவது, சட்டங்கள் நிறைவேற்றுவதன் வழியாக, நல்ல அறநெறி வாழ்வு வாழ்வதன் வழியாக மீட்பைக் கண்டுகொள்வது. யோசேப்பு-மரியா பற்றிய மற்றொரு குறிப்பும் இங்கே உள்ளது. அவர்கள் இரண்டு மாடப்புறாக்களைக் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கின்றனர். இவை அவர்களின் ஏழ்மை நிலையைக் குறிக்கிறது. 'எங்களுடைய மகன்தான் மீட்பர்' என்று தாங்கள் பெற்ற கொடையில் பெருமை கொள்ளாமல், தங்களுடைய வலுவற்ற நிலையை ஏற்றுக்கொள்கின்றனர். ஆக, வலுவற்ற நிலையில் நாம் இருந்தாலும் நல்ல அறநெறி வாழ்வு வழியாக மீட்பைக் கண்டுகொள்ள முடியும் என்பது யோசேப்பு-மரியா உணர்த்தும் பாடம்.

ஆ. சிமியோன்

இவர் நேர்மையாளர். இறைப்பற்றுக் கொண்டவர். வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர். தூய ஆவியால் தூண்டப்பட்டு ஆலயத்திற்கு வருகின்றார். தூய ஆவியின் தூண்டுதலைக் காண ஒருவர் கடவுளோடு இணைந்திருக்க வேண்டும். இணைந்திருத்தல் நிலையில்தான் தூண்டுதலை அனுபவிக்க முடியும். நம்முடைய மீட்புச் செயலை நாம் அனுபவிக்க நாமும் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும் என்று நம்மை அழைக்கிறார் சிமியோன்.

இ. அன்னா

இவர் கைம்பெண் என்ற நிலையிலும், 'கடவுள் தன்னுடைய கணவரை எடுத்துக்கொண்டார்' என்ற எந்தக் கோபமும் இல்லாமல், கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவருகிறார். இவர் தன்னுடைய வாழ்வியல் எதார்த்தங்கள் அனைத்தையும் முழுமையாக ஏற்று வாழ்கிறார். இவரின் எளிய மனம் நமக்கு உணர்த்தும் பாடம். எதைப்பற்றியும் அதிகம் சிந்திக்காமல், தன்னுடைய நேரத்தை தேவையானவற்றில் மட்டும் செலவழிக்கின்றார் அன்னா.

இத்திருநாள் விடுக்கும் வாழ்வியல் சவால் என்ன?

மீட்பு என்பதை நாம் பரந்த பார்வையில் புரிந்துகொள்ள வேண்டும். மீட்பு என்பது நம்முடைய இறப்புக்குப் பின் நடக்கும் நிகழ்வோ, அல்லது நம்முடைய திருமுழுக்கின்போது நடந்த நிகழ்வோ அல்ல. இது ஒரு அன்றாட நிகழ்வு. நம் வாழ்வில் நடக்கும் எல்லாமே நமக்கு மீட்புதான். ஏனெனில், எல்லா நிகழ்வுகளிலும் இறைவனே செயலாற்றுகின்றார். மறையுரை எழுத யோசித்துக்கொண்டே இருக்கிறேன். திடீரென ஒரு ஐடியா வருகிறது. அதுதான் மீட்பு. மாணவர்களுக்கு என்ன சொல்வது என்று யோசிக்கிறேன். அதுதான் மீட்பு. வங்கிக்குச் செல்கிறேன். பேனா மறந்து செல்கிறேன். 'இந்தாங்க இத வச்சி எழுதங்க' என்று ஒருவர் நீட்டுகிறார். அதுதான் மீட்பு. திடீரென காய்ச்சலால் படுக்கையில் சாய்கிறேன். அதுவும் இறைவனின் மீட்பு. இறைவனின் மீட்புச் செயல் அன்றாடம் நம்மைச் சுற்றி நடந்துகொண்டே இருக்கின்றது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், சிமியோன் போல ஒவ்வொரு பொழுதையும் ஒரு குழந்தைபோல நம்முடைய கைகளில் ஏந்தி வாழ வேண்டும். ஒவ்வொரு மனிதரையும் குழந்தைபோல கைகளில் ஏந்தி ஆச்சர்யப்பட வேண்டும். இதற்கு முதலில், ஒவ்வொரு அனுபவத்தையும் தேடிக் காத்திருக்க வேண்டும். நம்முடைய வலுவின்மைகளைக் கொண்டாட வேண்டும்.

இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 24) ஆசிரியர், 'வாயில்களே உயர்ந்து நில்லுங்கள்' என்கிறார். அவர் கடந்து செல்லும் வாயில் நாம். கொஞ்சம் எழுந்து நின்றால், அவர் நம்மை நோக்கி வருவார். அவரின் வருகையே நம் மீட்பு.

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com