மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
எசாயா 22:19-23 | உரோமையர் 11:33-36 | மத்தேயு 16:13-20

ser

இயேசு எனக்கு யார்?

நிகழ்ச்சி

பல ஆண்டுகளாக ஒருவர் மேஸ்திரியாக ஒரு காண்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்தான். அவரின் செயல்பாடுகள், நேர்மைக் குணம் முதலாளிக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மேஸ்திரி முதலாளியிடம் சென்று, “ஐயா! நான் அடுத்த மாதத்திலிருந்து வேலையைவிட்டு நின்றுவிடலாம் என நினைக்கிறேன்” என்றான். முதலாளி கோபமாக, "இப்படி திடீரெனச் சொன்னால் எப்படி? இன்னும் ஆறு மாதங்கள் நீ என்னிடம் வேலை செய்துதான் ஆக வேண்டும்” என்றார். “உன் குடிசைக்கு எதிரே உள்ள பாறை மீது ஒரு நவீன மாடலில் ஒரு வீடு கட்ட வேண்டும். அதை முடித்துவிட்டு வேலையிலிருந்து நீ நின்றுகொள்” என்றார். சரி என்று சொல்லி ஆறு மாதத்திற்குள் பாறைமீது அழகான ஒரு வீட்டைக் கட்டி முடித்துக் கொடுத்தார் அந்த மேஸ்திரி. அப்போது முதலாளி அந்த மேஸ்திரியைப் பார்த்து, நீ பல ஆண்டுகளாக என்னிடம் வேலை செய்தவர். சில நேரங்களில் உனக்கு என் மீது நம்பிக்கை இல்லாமல் போயிற்று. பல சமயங்களில் என்னை நீ சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இருப்பினும் இத்தனை ஆண்டுகள் என்னைவிட்டுப் பிரியாமல், பலவிதமான துன்பங்களோடு என்னோடு இருந்து, எனக்கு ஆறுதல் தந்தாய். காலப்போக்கில் மனதளவில் நீ என்னை மற்றவர்களைவிட நன்கு புரிந்துகொண்டாய். அதற்கு வெகுமதியாக உனக்கு நான் பரிசு கொடுக்க வேண்டும். அதனால் பாறைமீது நீ கட்டிய வீட்டை உனக்கே பரிசாகத் தருகிறேன் என்று கூறி, புதிய வீட்டுச் சாவியை அந்த மேஸ்திரியிடம் கொடுத்தார் அந்த முதலாளி.

ஆண்டவர் இயேசுவும் தனது மேஸ்திரியாக இருந்த பேதுருவையும் இவ்வாறுதான் எடைபோட்டார். எனவே உன் பெயர் பாறை, இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். விண்ணகத்தின் திறவுகோல்களை உனக்குத் தருவேன் (மத். 16:18) என்று கூறி அதிகாரத்தின் சாவியை புனித பேதுருவிடம் ஆண்டவர் இயேசு ஒப்படைக்கின்றார். ஏனெனில் தொடக்கத்தில் இயேசுவை அறிவுப்பூர்வமாகப் புரிந்து கொண்ட பேதுரு, காலப்போக்கில் அனுபவத்தின் வழியாக, இதயப்பூர்வமாக உணர்ந்து கொண்டார். எனவேதான் நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் (மத். 16:17) என்று வெளிப்படுத்தினார்.

அன்பார்ந்தவர்களே! மூன்று ஆண்டுகளாகத் தன்னோடு இருந்து, உண்டு, உறங்கி சென்ற இடமெல்லாம் பின்தொடர்ந்து, தான் செய்த வல்ல செயல்களையெல்லாம் கண்ணாரக் கண்ட தன் சீடர்களை நோக்கி, இயேசு ஒரு கேள்வி எழுப்புகிறார். மனுமகனை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள்? நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் (மத். 16:14-15) என்றும் கேட்கிறார். ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறார் ? இதுவரைப் பின்தொடர்ந்த மக்கள் பலர் இயேசுவில் விசுவாசமிழந்தனர். உற்றார், உறவினர் அவர்மேல் இடறல் பட்டனர். சீடர் பலர் இயேசு தன் உடலை உணவாகத் தருவேன் என்றவுடனும் நெருக்கடி நிலை ஏற்பட்டவுடனும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றனர். இந்த சூழலில் தந்தையாகிய இறைவன் இவ்வுலகிற்கு இயேசுவை எதற்காக அனுப்பினார் என்பதை மக்கள் புரிந்துகொண்டனரா , அந்தப் பணியை இந்தச் சீடர்கள் தொடர்ந்து செய்வார்களா? தன்னோடு மூன்று ஆண்டுகள் இருந்து பயிற்சி பெற்ற சீடர்கள் தன்னைப் புரிந்துகொண்டார்களா என்பதை அறிய , ஒரு நேர்முகத் தேர்வு நடத்துகிறார் இயேசு. ஏனெனில் இன்றைய இரண்டாம் வாசகத்தில் (உரோ. 11:33) கடவுளின் அருட்செல்வம் ஞானம், அறிவு, தீர்ப்புகள் இவற்றை மனிதன் தன் அறிவினால் அறிய இயலாது. அனைத்தும் அவரிடமிருந்தே, அவருக்காகவே இருக்கின்றன என்கிறார் புனித பவுல் அடிகளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலை வந்தபோது, இயேசுவின் இதயம் எழுப்பிய கேள்விதான், மக்கள் என்னை யாரென்று சொல்லுகிறார்கள். ஆனால் இயேசுவை அனுபவ ரீதியாக அறிந்த பேதுரு , ஒரே வரியில் பதில் சொல்லி, இயேசுவின் இதயத்தில் நிரந்தர இடத்தைப் பிடித்துவிட்டார். இதை அறிந்த இயேசு, பேதுருவை அடித்தளமாகக் கொண்டு திருச்சபையைக் கட்டுவேன் என்கிறார்.

இயேசு எனக்கு யார்? சிலுவையில் தொங்கிய வலது புறத்துக் கள்வன், நான் யார் ? ஏன் இப்படி ஆனேன் என்று சிந்தித்தான். விபச்சாரப் பெண் மதலேன் மரியாள் இப்படி ஏன் தள்ளப்பட்டேன் என்று சுய ஆய்வு செய்தாள். சக்கேயு தன் எதிர்கால நிலைப்பாடு என்ன என்று யோசித்தான். இதனால் அறிவு ரீதியாக மட்டுமல்ல, இதயப்பூர்வமாக இயேசுவைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள்

  • இந்த மூவரும். இன்று கிறிஸ்தவர்களாகிய நம்மைப் பிற மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள்? கல்வி, மருத்துவம் போன்ற உதவியால் மதம் மாற்றுபவர்கள், சமூக அக்கறையற்றவர்கள், பிரச்சனையைக் கண்டு கொள்ளாதவர்கள் கோழைகள் ! அல்லேலூயா கோஷ்டிகள், பெயரளவில் கிறிஸ்தவர்கள் என்கிறார்களா? அப்படியென்றால் அது உண்மையா?
  • நாம் நம்மைச் சுற்றி எத்தகைய சமூகத்தைக் கட்டி எழுப்புகிறோம்? சாதியம், ஆணாதிக்கம், மத அடிப்படை வாதம், சுய நலம் நிறைந்த அடிமை சமூகத்தையா? அல்லது நீதி, அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த சமூகத்தையா?
ser ser

நமக்குள்ளே ஒரு விலை உயர்ந்த கருவூலம் உண்டு

ஸ்காட்லாந்து நாட்டில் ஒரு வயதான பெண்ணொருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய மகன் அமெரிக்காவிலே பெரிய செல்வந்தனாக வாழ்ந்து வந்தான். ஆனால் அந்த வயதான பெண்ணோ , அவனுடைய தாயோ ஸ்காட்லாந்தில் வறுமையில் வாடினார்.
ஒருநாள் பக்கத்து வீட்டுப் பெண் அந்த ஏழைப் பெண்ணைப் பார்த்து, பாட்டி, நீ இங்கு இப்படி வறுமையில் வாடுவது தெரிந்தால் உன் மகன் உனக்கு நிச்சயமாக உதவி செய்வார் என்றாள். அதற்கு அந்தப்பாட்டி, என் மகனுக்கு என்ன செலவோ! பணம் அனுப்புவதில்லை! ஆனால் வாரம் தவறினாலும் அவன் அன்போடு எழுதும் கடிதம் மட்டும் எனக்கு வரத் தவறாது. கடிதத்தோடு ஓர் அழகான படமும் வரும். அந்தப் படங்ளையெல்லாம் சேர்த்து வைத்திருக்கின்றேன். அவை அழகாக இருக்கின்றன என்றார். அந்தப் பாட்டியோ பைபிளை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்து இதற்குள்தான் எல்லா படங்களும் இருக்கின்றன என்றார். அடுத்த வீட்டுப் பெண் பைபிளைத் திறந்தாள். அதற்குள் இருந்ததெல்லாம் படங்கள் அல்ல பணம், அமெரிக்க டாலர் நோட்டுகள்.

பாவம் அந்த வயதான பெண்! அவளிடம் விலை உயர்ந்த ஒரு கருவூலம் இருந்தது. இருந்தும் அவள் ஏழையாக வாழ்ந்து கொண்டிருந்தாள் !

நம் நடுவே, நமக்குள்ளே ஒரு விலை உயர்ந்த கருவூலம் உண்டு. அந்தக் கருவூலத்தின் பெயர் இயேசு ! அவருடைய அருமையையும், பெருமையையும் நாம் உணர்ந்து, அவரை இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் பேதுருவைப்போல மெசியாவாக, கடவுளின் மகனாக (மத் 16:16) ஏற்று வாழ்கின்றோமா?

இயேசுவைக் கடவுளாக நாம் ஏற்றுக்கொண்டால், நமக்குள் கடவுளின் மிகுதியான அருள் செல்வம், அவருடைய ஆழமான ஞானம், அறிவு, அறிவுக்கு எட்டாத அவருடைய தீர்ப்புகள், ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட அவருடைய செயல்முறைகள் (இரண்டாம் வாசகம்) அனைத்தும் குடிகொள்ளும்.

அப்பொழுது நமக்குள்ளும், நம் நடுவிலும் புதிய யுகம் ஒன்று பிறக்கும் ; நாம் வாழ்வின் திறவுகோலை (முதல் வாசகம்) கையிலேந்தி வலம் வருவோம்.

மேலும் அறிவோம் :

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின் (குறள் : 540).

பொருள் : நினைக்கத் தக்கதை நினைத்து அதனை மறவாது செய்தால், ஒவ்வொருவரும் தாம் அடைய நினைத்த பொருளை எண்ணியவாறே பெறுவது எளிதாகும்!

ser ser

"நான் யார்?"

16-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து அரசராக இருந்த ஒருவர் காலையில் வெளியே சென்றவர் நள்ளிரவு வீடு திரும்பினார். அரசி கதவைத் தாளிட்டுத் தூங்கிவிட்டார். அரசர் கதவைத் தட்ட அரசி, "யார் அது?" என்று கேட்க, அரசர், "நான்தான் இங்கிலாந்து அரசர்" என்று கூற அரசி கதவைத் திறக்கவில்லை . மறுபடியும் அரசர் கதவைத் தட்ட, "யார் அது?" என்று அரசி கேட்க, அரசர், "நான்தான் முப்படைகளின் தலைவர்” என்று கூற அரசி கதவைத் திறக்கவில்லை . ஆத்திரமடைந்த அரசர் மூன்றாம் முறைச் சற்றுக் கோபத்துடன் கதவைத் தட்ட அரசி, "யார் அது?" என்று கேட்க, அரசர், "நான்தான் உன் அன்புக் கணவர்" என்று சொன்னவுடன் அரசி கதவைத் திறந்து அரசரைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். ஒருவர் அரசராகவும் முப்படைத் தலைவராகவும் இருக்கலாம். ஆனால் அரசிக்கு அவர் முதலில் கணவர். அதன் பிறகுதான் மற்றெல்லாம்.

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து, "நான் யார்?" என்று கேட்ட கேள்விக்கு, அவருடைய சீடர்கள், மக்கள் நடுவில் அவரைப் பற்றி நிலவிய கருத்துக்களைப் பிரதிபலித்து, கிறிஸ்துவைத் திருமுழுக்கு யோவான் என்றும், எரேமியா, எலியா, இறைவாக்கினருள் ஒருவர் என்றும் பதில் கூறினர். ஆனால் இதெல்லாம் உண்மையான பதில் இல்லை . அந்நிலையில் பேதுரு, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று சொன்னவுடன் கிறிஸ்து அவரிடம் விண்ணகத்தின் திறவுகோலை ஒப்படைக்கிறார்; கட்டவும் கட்டவிழ்க்கவும் அவருக்கு அதிகாரம் அளிக்கிறார்,

அரசியைப் பொறுத்தமட்டில் அரசர் முதலில் அவரது கணவர், அவ்வாறே கிறிஸ்துவைப் பொறுத்தமட்டில் அவர் முதல் முதல் கடவுளின் மகன். அதன் பின்தான் அவருடைய மற்றப் பணிகள், கிறிஸ்து, "நான் யார்?" என்று கேட்கிறார். "எனது பணி என்ன?" என்று கேட்கவில்லை. ஒருவருடைய இயல்பிலிருந்து அவருடைய செயல்கள் பிறக்கின்றன. இந்த அடிப்படையான மெய்யியல் உண்மையை மறந்து ஒருசில இறையியலார்கள் கிறிஸ்துவின் இறைத்தன்மையை ஓரங்கட்டிவிட்டு அவருடைய பணிகளை மையப்படுத்தி அவரை ஒரு புரட்சியாளராக வெளிச்சம் போட்டுக் காட்டுவது முழுமையான இறையியலாக இருக்க முடியாது. அன்று மகதலா மரியா அழுது கொண்டு, என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர். அவரை எங்கு வைத்தனரோ எனக்குத் தெரியவில்லை" (யோவா 20:13) என்று கேட்டதைப் போல் கேட்கவேண்டியுள்ளது.

கிறிஸ்துவை கடவுளுடைய மகனாக ஏற்றுக்கொள்வதற்கு மனித அறிவு மட்டும் போதாது. இறைவெளிப்பாடு தேவைப்படுகிறது. எனவேதான் கிறிஸ்து பேதுருவிடம் கூறுகிறார்: "யோனாவின் மகளான சீமோனே, நீ பேறு பெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தத்தையே வெளிப்படுத்தினார்" (மத் 16:17), கிறிஸ்துவிடம் வருவதற்குக் கடவுளின் தனிப்பட்ட அருள் தேவைப்படுகிறது. "என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது" (யோவா 6:65) என்று கிறிஸ்து யூதர்களிடம் கூறியது இதை எண்பிக்கிறது.

பேதுருவின் நம்பிக்கை அறிக்கையின் மீது தமது திருச்சபையைக் கட்டி எழுப்புவதாகக் கிறிஸ்து கூறுகின்றார். கிறிஸ்து பேதுருவைப் பாறை என்று அழைக்கின்றார் விவிலியம் கடவுளைப் பாறை என்று அழைக்கிறது. "என் கற்பாறையும் கோட்டையும் நீரே" (திபா 31:3), பாறை உறுதியானது; அதைவிட உறுதியானது கடவுளின் அன்பு, "மலைகள் நிலைசாயினும், குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது தான் கொண்ட பேரன்போ நிலைசாயாது" (எசா 54:10).

கடவுள் உண்மையுள்ளவர், கிறிஸ்துவும் உண்மையுள்ளவர். கிறிஸ்துவுக்கு 'ஆமென்' என்று பெயர்; ஏனெனில் அவர் தம்பிக்கைக்குரியவர்; உண்மையான சாட்சி (திவெ 3:14), அவ்வாறே திருச்சபையும் உண்மையானது. திருத்தூதர் பவுல் திருச்சபையைக் "கடவுளின் வீடு" என்றழைத்து, “திருச்சபை உண்மைக்குத் தூணும் அடித்தளமுமாய் இருக்கிறது" (1 திமொ 3:14-15) என்கிறார்.

இன்றைய முதல் வாசகம் பின்வருமாறு கூறுகிறது. தாவீது குடும்பத்தின் திறவுகோலைக் கடவுள் கிறிஸ்துவுக்குக் கொடுப்பார், அவருக்குத் திறக்கவும் பூட்டவும் அதிகாரம் இருக்கும் (எசா 22:19-23). கிறிஸ்து தமக்குள்ள அதிகாரத்தைப் பேதுருவுக்குக் கொடுக்கிறார். பேதுருவின் வழித்தோன்றல்கள் திருத்தந்தையர்கள். திருத்தந்தையர் களின் தலையான பணி விசுவாசிகளை உறுதிப்படுத்தும் பணி (லூக் 22:32) பேதுரு மட்டுமல்ல முழுத் திருச்சபையும் கிறிஸ்துவிடமிருந்து திறவுகோலைப் பெற்றது என்கிறார் புனித அகுஸ்தின், இரண்டாம் வத்திக்கான் சங்கமும் முழுத் திருச்சபையும் விசுவாச, அறநெறி கோட்பாட்டில் வழுவா வரம் கொண்டுள்ளது என்று அறிக்கையிட்டுள்ளது. "தூயவரான கடவுளால் அருள்பொழிவு பெற்று தம்பிக்கை கொண்டோர் அனைவரின் கூட்டம் நம்பிக்கையிலே தவற முடியாது" (திருச்சபை, எண் 12).

மனைவி ஒருவர் தன் கணவரிடம், "என்னங்க என்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" என்று கேட்டதற்கு கணவர் அவரிடம், "நீ போட்டிருக்கிற நகையெல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு"
என்றார். அதற்கு மனைவி, "அத்தனையும் கல்யாணி கவரிங் நகை" என்றார். இன்று "கவரிங் நகை" போன்ற போலியான சபைகள் மக்களைக் கவர்ந்து ஈர்க்கின்றனர்.  போலிப் போதகர்களின் கவர்ச்சியான போதகத்தில் மயங்கிக் கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து விலகாதிருக்க விழிப்புடன் இருக்க வேண்டும். கிறிஸ்தவர்களுடைய முக்கியமான கடமைகளில் ஒன்று திருச்சபையின் ஒன்றிப்பில் நிலைத்திருப்பது என்று திருச்சபைச் சட்டம் கூறுகிறது. "கிறிஸ்தவ விசுவாசிகள், தங்கள் செயல்பாட்டு முறையிலும் கூடத் திருச்சபையோடு உள்ள உறவு ஒன்றிப்பை எப்பொழுதும் பேணிக் காக்கக் கடமைப்பட்டுள்ளனர் " (தி. ச. 209, ப 1).
.
திருச்சபையில், திரு மேய்ப்பர்களிடம் பல குறைகள் இருக்கலாம். ஆனால், திருத்தந்தை ஆறாம் பவுல் கூறியதுபோல, *திருச்சபை நோயுற்றிருப்பதற்காகவே அதை நாம் அதிகம் அன்பு செய்ய வேண்டும்." 'தமது சிறு மந்தையாகிய' (மத் 12:32) திருச்சபையைக் கிறிஸ்து கைவிட மாட்டார். "பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா" (மத் 16-18).

ser ser

“நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்”

நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவிலிருந்த ஒரு கத்தோலிக்கத் திருக்கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் யூதப் பெண்மணி ஒருவர் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்தார். தற்செயலாக அவரைப் பார்த்த அவருக்கு அறிமுகமான ஒருவர் அவரிடம், “பொதுவாக யூதர்கள் இயேசுவை இறைமகன் என்று ஏற்றுக்கொள்வதில்லையே! அப்படியிருக்கும்போது நீங்கள், எங்களுடைய வழிபாட்டில் கலந்துகொள்வது மிகவும் வியப்பாக இருக்கின்றது! ஒருவேளை நீங்கள் கத்தோலிக்கராக மாறிவிட்டீர்களா...?” என்றார்.

அதற்கு அந்த யூதப் பெண், “நான் யூத மறையில்தான் இன்னும் இருக்கிறேன்; கத்தோலிக்கராக மாறவில்லை” என்றார். இப்படிச் சொல்லிவிட்டுத் அவர் தொடர்ந்து பேசினார்: “யூதர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றபோதும், அவர் மூன்றாம் நாள் வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்தார்! இயேசு இறைமகன் இல்லையென்றால் அவரால் உயிர்த்தெழுந்திருக்க முடியுமா...? அவருடைய உயிர்த்தெழுதல் மட்டுமல்ல, அவருடைய வாழ்வும் பணிகளும்கூட அவர் இறைமகன் என்பதற்குச் சான்றுகள். இதனாலேயே நான் அவரை இறைமகன் என்று ஏற்றுக்கொண்டு, இந்த வழிபாட்டில் கலந்துகொண்டேன்.”

அந்த யூதப் பெண் இவ்வாறு விளக்கமளித்ததைக் கேட்ட, கிறிஸ்துவப் பெண் இயேசுவின்மீது இன்னும் ஆழமாக நம்பிக்கை கொள்ளத் தொடங்கினார்.

ஆம், இயேசு இறைமகன்; மெசியா. அதைத்தான் இந்த நிகழ்வும், பொதுக்காலம் இருபத்து ஒன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகமும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இயேசு இறைமகன், மெசியா என்றால், அவர் எப்படிப்பட்ட மெசியா என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மானிட மகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?

ஒரு நிறுவனமோ அல்லது இயக்கமோ... எதுவாக இருந்தாலும், அதை அவ்வப்பொழுது ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கவேண்டும். அப்பொழுதுதான் அந்த நிறுவனமும் இயக்கமும் கடந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் நல்ல முறையில் இயங்க முடியும்.

இறையாட்சிப் பணியைச் செய்யத் தொடங்கிய இயேசு, பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து, அவர்களோடு சேர்ந்து அப்பணியைச் செய்துவந்தார். இத்தகைய சூழ்நிலையில், அவர் தன்னோடு இருந்த சீடர்கள், தன்னைக் குறித்து என்ன தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதை அறிய விரும்பினார். அதற்காக அவர் அவர்களிடம், இரண்டு கேள்விகளைக் கேட்கின்றார். இயேசு அவர்களிடம் கேட்கின்ற முதல் கேள்வி, “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்பதாகும். இயேசு இப்படியொரு கேள்வியை தன் சீடர்களைப் பார்த்துக் கேட்டதும் அவர்கள், “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும், வேறு சிலர் எலியா எனவும், மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்” என்கின்றார்கள்.

இயேசு செய்த பணிகளைப் பார்த்துவிட்டு ஏரோது, “இவர் திருமுழுக்கு யோவான்தான்” (மத் 14: 1-2) என்றான். இயேசுவை மக்கள் எலியா என்று சொன்னதற்குக் காரணம், சுழற்காற்றில் விண்ணகத்திற்குச் சென்ற எலியா (2அர 2: 11), ஆண்டவரின் நாள் வருமுன் வருவார் (மலா 4:5) என்ற நம்பிக்கை இருந்ததால் ஆகும். இயேசுவை மக்கள் எரேமியா என்று சொன்னதற்குக் காரணம், அவருடைய இறப்பைக் குறித்து திருவிவிலியத்தில் எங்கும் பதிவுசெய்யவில்லை. அதனால் இயேசுவை, இறைவாக்கினர் எரேமியா என்றும் சொன்னார்கள். இப்படி மக்கள் தன்னைக் குறித்து எப்படியெல்லாம் சொல்கின்றார்கள் என்பதை அறிந்த இயேசு, அவர்களிடம் அடுத்த கேள்வியைக் கேட்கின்றார்.

நீங்கள், நான் யாரெனச் சொல்கிறீர்கள்?

இயேசு தன்னுடைய சீடர்களிடம் கேட்கின்ற இரண்டாவது கேள்வி, “நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்பதாகும். இயேசு முதல் கேள்வியோடு நிறுத்திருக்கலாம். காரணம் மக்கள் எண்ண ஓட்டத்தையே சீடர்களும் வெளிப்படுத்தினார்கள்; ஆனால், அவர் தன்னோடு இருந்தவர்கள் தன்னைக் குறித்து அறியாமல் இருந்தால், அது அவ்வளவு நல்லதல்ல என்பதால், அவர்களிடம் இரண்டாவது கேள்வியைக் கேட்கின்றார்.

இயேசு கேட்ட இரண்டாவது கேள்விக்கு, எப்பொழுதும் சீடர்களின் சார்பாக அல்லது எல்லாரையும் விட முந்திக்கொண்டு பேசும் பேதுரு, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைக்கின்றார். பேதுரு இவ்வாறு உரைத்ததும் இயேசு அவரிடம், நீ பேறுபெற்றவன்... இதை உனக்கு விண்ணகத்திலுள்ள தந்தையே வெளிப்படுத்தியுள்ளார் என்கின்றார். ஆம். மறையுண்மையை இறைவன் ஒருவருக்கு வெளிப்படுத்தாவிட்டால், அவரால் அதைப் புரிந்துகொள்ள முடியாது. மேலும் மறையுண்மைகள் குழந்தைகளுக்கும் குழந்தை உள்ளம் கொண்டவர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தப்படும் (மத் 11: 25) பேதுரு குழந்தை உள்ளம் கொண்டவராக இருந்திருக்கவேண்டும். அதனாலேயே அவர் இயேசுவை, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைக்கின்றார். இதற்காகவே இயேசு பேதுருவை நீர் பேறுபெற்றவன் என்கின்றார். மட்டுமல்லாமல், “உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருஅவையைக் கட்டுவேன்.....” என்கின்றார்.

தான் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று கூறும் இயேசு

மக்கள், தன்னை யாரென்று சொல்கின்றார்கள் என்பதைக் கேட்டறிந்த பின், தன்னுடைய சீடர்கள், தன்னை யாரெனச் சொல்கிறார்கள் என்பதைக் கேட்டறிந்த பின், இயேசு அவர்களிடம், “தாம் மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று கண்டிப்பாய்க் கூறுகின்றார்.

பேதுரு இயேசுவைப் பற்றி, “மெசியா” என்று சரியாய்த்தானே சொன்னார்...? பிறகு எதற்கு இயேசு, தாம் மெசியா என்பதை எவரிடம் சொல்லவேண்டாம் என்று சொன்னார் என்ற கேள்வி எழலாம். இதற்கு முக்கியமான காரணம், சீடர்களும் சரி, யூதர்களும் சரி, ‘மெசியா’வைப் பற்றிக்கொண்டிருந்த தவறான புரிதல் ஆகும். சீடர்கள் உட்பட யூதர்கள் மெசியா என்பவர், உரோமையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் தங்களை விடுவித்து, ஆட்சியை நிலைநிறுத்துவார் என்றுதான் நினைத்தார்கள். உண்மையில் இயேசு யூதர்கள் நினைத்ததுபோன்று அரசியல் மெசியா கிடையாது; அவர் துன்புறும் மெசியா. மேலும் அவர் பகைவர்களிடமிருந்து விடுதலையைப் பெற்றுத்தரும் மெசியா கிடையாது; பாவத்திலிருந்து மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் மெசியா. அதனால்தான் இயேசு தன்னுடைய சீடர்களிடம் தாம் மெசியா என்பதை எவரிடம் சொல்லவேண்டாம் என்கின்றார்.

நாம் இயேசுவைத் துன்புறும் மெசியாவாகவோ அல்லது அரசியல் மெசியாவாகவோ பார்ப்பதற்கும் நம்முடைய வாழ்விற்கும் நெருங்கிய தொடர்பிருக்கின்றது. எப்படியெல்லாம் இயேசுவை அரசியல் மெசியாவாகப் பார்க்கின்றபொழுது, நாம் இன்றைய அரசுகளைப் போன்று மக்களை அடக்கியாளத் துடிப்பவர்களாக இருப்போம். மாறாக, இயேசுவை நாம் துன்புறும் மெசியாவாகப் பார்த்தோமெனில், பிறருக்காக நாமும் துன்பங்களை ஏற்கத் துணிபவர்களாக இருப்போம். ஏனெனில், நம்முடைய எண்ணம் எப்படியோ, அப்படியே நம்முடைய வாழ்வும் இருக்கும்.

ஆகையால், நாம் இயேசுவை துன்புறும் மெசியாப் பார்த்து, பிறருடைய துன்பங்களில் நாமும் பங்குகொண்டு, அவர்களுடைய துன்பத்தைப் போக்கி, இன்பமாக மாற்ற, நம்மையே நாம் கையளிப்ப முன்வருவோம்.

சிந்தனை

‘இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?’ (1 யோவா 5: 5) என்பார் யோவான். ஆகையால், நாம் இயேசுவை இறைமகன் என நம்பி ஏற்றுக்கொண்டு, அவரைப் போன்று மானிட மீட்புக்காகப் பணிபுரிந்து, பலியாகத் தயாராவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

கடவுளின் தெரிவு

'உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.
பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா!
விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன்.'
பேதுருவைப் பார்த்து இயேசு சொல்லும் மேற்காணும் வார்த்தைகள், பேதுருவின்மேல் அவர் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கையைக் காட்டுகின்றன. அல்லது, வலுவற்ற பேதுருவை இயேசு தேர்ந்துகொண்டு அவரை வல்லமையாக்கும் செயல் நமக்குப் புலனாகிறது.
கடவுளின் தெரிவு நமக்கு ஆச்சரியமானதாகவே இருக்கிறது.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 22:19-23), அசீரியப் படை இஸ்ரயேலைச் சுற்றி நின்றபோது, தன் நாட்டு மக்களைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார் அரசர் செப்னா. அவரிடமிருந்து அரசாட்சியைப் பறிக்கும் ஆண்டவராகிய கடவுள், எளியவனான எலியாக்கிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்கின்றார். வலுவற்றை ஒன்றைத் தேர்வு செய்கின்றார் கடவுள்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 11:33-36), கடவுளின் அருள்செல்வத்தாலேயே நாம் நிரப்பப்படுகின்றோம் என்று, கடவுளின் அருளின் மேன்மையை அடிக்கோடிடுகின்றார் பவுல்.
இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?
(அ) வலுவற்ற நம்மைத் தெரிவு செய்வதன் வழியாகக் கடவுள் தன்னையே வலுவற்ற நிலைக்கு உட்படுத்துகின்றார்.
(ஆ) கடவுளை அறிவதும் அறிக்கையிடும் அவர் நம்மைத் தெரிந்துகொள்ளத் துணைபுரிகின்றன. பேதுரு நம்பிக்கை அறிக்கை செய்கின்றார். அந்த அறிக்கை அவருடைய அறிதலின் வெளிப்பாடாக இருக்கிறது.
(இ) 'கடவுளிடம் கொடுத்து வைத்தவர் எவருமிலர்' என்கிறார் பவுல். கடவுள் நமக்குக் கடன்பட்டவர் அல்லர். ஆனால், அவர் நம்மைச் செல்வராக்குகின்றார்.
இறுதியாக,
இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில், 'நான் யாரென மக்கள் சொல்கிறார்கள்?' என இயேசு தன் சீடர்களிடம் கேட்கின்றார்.
சீடர்களும், 'திருமுழுக்கு யோவான்,' 'எலியா,' 'எரேமியா,' 'இறைவாக்கினர்' என விடையளிக்கின்றனர்.
பேதுரு மட்டுமே, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என அறிக்கையிடுகின்றார்.
கடவுள் ஒருபோதும் மற்றவர்களைப் போல இருப்பதில்லை.
அல்லது, மற்றவர்களை விட மேலானவர் என்பதை பேதுரு அறிந்திருந்தார்.
அந்த அறிதல் மிக எளிதாக வருவதன்று.
மேலும், இன்றைய உலகில் நாம் பல நேரங்களில் அடுத்தவர்களைப் போல இருக்கவே விரும்பி, நம் நேரத்தையும் ஆற்றலையும் செலவிடுகிறோம். அடுத்தவரைப் போல இருப்பதைவிட, அடுத்தவரை விட மேலாக இருக்கும்போது நாம் தனித்தன்மை பெற்றுவிடுகிறோம்.
இயேசு யார்? என அறிந்துகொள்ள முனையும் நாம், அதே கேள்வியில், நாம் யார் என்பதையும் அறிந்துகொள்கிறோம்.
ஆகையால்தான், பேதுரு விடையளித்தவுடன், பாறையாக மாறுகின்றார்.

ser

உன்னை அறிவாயா?

நீண்டகால இடைவெளிக்குப்பிறகு, இரு கல்லூரித்தோழிகள் சந்திக்கிறார்கள். மகிழ்வுடன் அன்பைப் பரிமாறிக்கொண்டார்கள். தங்கள் வாழ்க்கை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள். தனக்கு திருமணமாகப் போவதாகவும், தன் படிப்பிற்கேற்ற நல்ல வேலையில் பணிபுரிவதாகவும் மகிழ்ச்சியாக  இருப்பதாகவும் ஒருவர் பகிர்ந்து கொண்டார். இவற்றையெல்லாம் கேட்ட மற்றொரு தோழி தன் வாழ்வே தடம்புரண்டதாக வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். புகுந்த வீட்டில் தன்னை எப்பொழுதும் ஒன்றுக்கும் உதவாதவள் என்றே கூறுதாக சொன்ன அவர், சிறந்த ஐ. ஏ.எஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற தன் கனவு பொய்யாய் போனது எனக் கூறி மிகவும் வேதனைப்பட்டார். இதைக்கேட்ட மற்றொரு தோழி "படிக்கின்ற காலத்தில் படு சுட்டியாய், அனைத்திலும் முதலானவளாய் துணிச்சலாய் இருந்த நீயா இப்படி பேசுகிறாய். மற்றவர்களின் விமர்சனத்தில் உன்னையே நீ தொலைத்து விட்டாய். உன்னையே நீ தேடு. மீண்டும் உன் கனவுக்காக உழை " என்று உற்சாகமூட்டினாள். தன்னிலை உணர்ந்தவளாய் தன்னைத்தேடிய பயணத்தை தொடங்கினாள் அந்தப்பெண்.

இன்றைய வழிபாடு "நான் யார் " என்றுணர நம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றது. "உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்" என்ற பாடல் வரிகள் நாம் அனைவரும் அறிந்ததே. தன்னையே அறிந்தவர் பிறருடைய தேவையற்ற விமர்சனங்களை கண்டு கொள்ள மாட்டார். அவற்றில் மூழ்கி தன் பொன்னான நேரங்களையும், தன் சுய மதிப்பையும் ஒருபோதும் இழக்க மாட்டார். அவரே சிறந்த தலைமைப் பண்பு கொண்டிருப்பார்.
ஞானத்தோடு பிறரையும் வழிநடத்துவார். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னைப்பற்றி நன்கு அறிந்தவரே தனக்குள் இருக்கும் இறைவனையும் உணந்தவராய் இருப்பார்.

இன்றைய நற்செய்தியில்
"தன்னை மக்கள் யாரென்று கூறுகிறார்கள்?" என இயேசு சீடர்களிடம் வினவுகிறார். இதனால் இயேசுவுக்குத் தன்னைப்பற்றி தெரியவில்லை என்று அர்த்தமல்ல. இயேசு தன்னை முழுமையாய் அறிந்திருந்தார். மேலும் தன்னைப்பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். அவரைத் பெருந்தீனீக்காரன் என்றார்கள். தச்சன் மகனுக்கா இத்துணை ஞானம் என விமர்சித்தார்கள். அதே மக்கள் அவருடைய வல்ல செயல்களைப் பார்த்த பின் இறைமகன் என்றார்கள். ஆனால் தன்னிலையை முழுவதும் அறிந்த இயேசு எதையும் கண்டுகொள்ளாமல் தன் இலக்கை நோக்கி நடக்கிறார் என்பதை அவருடைய வரலாறு தெளிவாகக் கூறுவதை நாம் காண்கிறோம்.
இருப்பினும் தன்னுடன் இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருக்கும் தன் சீடர்களின் புரிதல் என்ன என்று தெரிந்துகொள்ள இயேசு மீண்டுமாக ஒரு கேள்வி கேட்கிறார். "நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?" தலைவனை சரியாக அறியாத எந்த சீடனும் தன் தலைவனின் பணியை தொடர்வது இயலாத காரியம் என்பதை நன்கு உணர்ந்ததாலேயே இயேசு சீடர்களிடம் அவ்வாறு கேட்டார்.

மேலும் இன்றைய நற்செய்தியில் பேதுரு "நீரே மெசியா" என்று கூறி தன் தலைவனை பற்றிய தன் அறிவை வெளிப்படுத்துவதையும் அதனால் இயேசு அவரை திருஅவைத் தலைவராக நியமித்தார் என்பதையும் வாசிக்கிறோம். ஆனால் பேதுரு தன்னை அறிந்திருந்தாரா? இல்லை. அச்சமயத்தில் பேதுரு தன்னை அறியாதவராய் இருந்தார். எனவே தான் "நீயும் இயேசுவின் சீடர்களில் ஒருவன் தானே " என்று வினவியவர்களிடம் தான் இயேசுவின் சீடன் என்ற தன்  அடையாளத்தையே மறுதலித்தார். ஆனால் அதே நிலையில் அவர் நிலைத்திருக்கவில்லை.  "நீ என்னை அன்பு செய்கிறாயா" என்ற உயிர்த்த இயேசுவின் கேள்வியில், தன்னை திரு அவையின் பாறையாக மீண்டும் கண்டைந்தார். திருஅவையின் தலைசிறந்த தலைவரானார்.

இன்றைய முதல்வாசகம், சிறந்த தலைமைப்பண்பு உடையவர் தம் அதிகாரத்திற்குட்பட்ட மக்களுக்கு ஒரு தந்தையாக இருந்து வழிநடத்துகிறார் என்பதையும் அவருடைய திட்டங்களை எதிர்க்க யாரும் துணிய மாட்டார்கள் என்பதையும் அழுத்திக்கூறுகிறது. அருட்செல்வமும், அறிவும், ஞானமும் ஆண்டவரிடமிருந்து மட்டுமே வருகின்றன. அவருக்கு நிகர் அவரே என்ற கருத்தை இரண்டாம் வாசகம் கூறுகின்றது.

மொத்தத்தில் தன்னையே முழுமையாக அறிந்தவர்களாய், கடவுள் தந்த தலைமைப் பண்புகளை அவர் அளித்த அறிவோடும் ஞானத்தோடும் பயன்படுத்தி இறையரசின் திறவுகோல்களாக வாழ கடவுள் நம்மை அழைக்கின்றார். அவர் குரலுக்கு செவிகொடுப்போம்.

இறைவேண்டல்

நிகரில்லா ஞானமே இறைவா!
பல சமயங்களில் பிறருடைய விமர்சனங்களில் மூழ்கி நாங்கள் யாரென்பதையே மறந்து விடுகிறோம்.அறிவும் ஞானமும் உம்மிடமிருந்துதான் எங்களால் பெறமுடியும் என்பதை அறிவோம். நீர் அளித்த ஞானத்தைப் பயன்படுத்தி எம்மை உணரவும்,எமக்குள் வசிக்கும் உம்மை அறியவும் அருள்தாரும். மேலும் எங்கள் தலைமைப்பண்புகளைநேரிய வழியில் பயன்படுத்தி பிறரை விண்ணரசிற்கு அழைத்துவரும் திறவுகோல்களாக நாங்கள் வாழும் அருள் தாரும். ஆமென்.

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com