மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

ஆண்டின் 16ஆம் ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
சாலமோனின் ஞானம் 12:13,16-19 | உரோமையர் 8:26-27 | மத்தேயு 13:24-43

ser

நீடித்த வாழ்வு நமக்குக் கிடைக்கின்றது

ஒரு காட்டில் தவம் புரிந்து கொண்டிருந்த முனிவர் ஒருவர் தன் இரு சீடர்களை அழைத்தார். ஒரு சீடரிடம், ஊருக்குள் போய் ஒரு நல்ல மனிதரை அழைத்து வா' என்றார். அதேபோல் மற்றொரு சீடரைப் பார்த்து, ஊருக்குள் போய் ஒரு கெட்ட மனிதரைக் கூட்டி வா' என்றார். இருவரும் போனார்கள். ஒரு வாரம் தேடினார்கள். ஆனால் வெறும் கையோடு திரும்பினார்கள். யாரும் கிடைக்க வில்லையா? என்று கேட்டார் முனிவர். குருவே எல்லா இடங்களையும் தேடி அலைந்தேன். ஒரு நல்லவர் கூட கிடைக்கவில்லை. எல்லாரிடத்திலும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது' என்றார். இரண்டாவது சீடர் வந்து, குருவே, தேடாத இடமே இல்லை . ஆனால் ஒரு கெட்டவர் கூட கிடைத்த பாடில்லை. ஏனென்றால் எல்லாரிடத்திலும் ஏதாவது ஒரு நன்மை இருக்கத்தான் செய்கிறது' என்றார்.

உண்மையும் பொய்யும் சேர்ந்ததுதான் இந்த உலகம். உப்பும் தண்ணீ ரும் கலந்து தான் கடலாகிறது. இரவும் பகலும் சேர்ந்துதான் ஒரு நாள் உருவாகிறது. பள்ளமும் மேடும் சேர்ந்துதான் பாதை ஆகிறது. பயிரும் களையும் சேர்ந்துதான் நிலமாகிறது. என் இன்பமும் துன்பமும் சேர்ந்துதான் வாழ்க்கையே அமைகிறது. இதில் நல்லவரும் கெட்டவரும் வாழ்கின்றனர்.

எல்லாம் வல்ல , முடிவற்ற அன்பும், முடிவற்ற நன்மையும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரென்றால் உலகில் எப்படித் தீமை ஆட்கொள்ள முடியும். ஏன் தீமையை உடன் களைவதில்லை என்ற கேள்வியை மனிதன் கேட்கிறான். கடவுள் நல்லவர் (மாற். 10:18). இதற்குப் பதில் தரும் வகையில் தான் இன்றைய நற்செய்தியில் நமக்குத் தரப்படுகின்றது. தீமை என்பது இறைவனிடமிருந்து வருவது அல்ல. சாத்தானின் செயல். மனிதரின் சுதந்திரச் சக்தியால் தானே தனக்குத் தேர்ந்தெடுப்பது நல்லது அல்லது தீயது. ஆனால் இறைவன் மனிதனின் சுதந்திரத்தை மதிக்கின்றவர். பழைய ஏற்பாட்டிலே மோசே மக்களை நோக்கிச் சொன்னார்: "உங்களுக்கு வாழ்வையும், சாத்தான் உண்டாக்கிய சாவையும் முன் வைக்கின்றேன். ஆனால் உண்மையான வாழ்வைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பொறுப்பு. இதே வார்த்தைகளைத் தான் யோசுவா, மோசேக்குச் சொன்னார்.

ஆனால் அன்பார்ந்தவர்களே! நாம் சில நேரத்தில் இது என் தலைவிதி அல்லது இவன் தலை எழுத்து என்று பதில் சொல்லி தப்பிக்கப் பார்க்கிறோம். ஆனால் இன்றைய நற்செய்தியிலே ஒரு விளக்கம் தரப்படுகின்றது. தோட்டத்தின் ஊழியன், தன் தலைவனிடம் போய், நான் போய்க் களைகளைப் பிடுங்கி எறியவா என்ற கேட்டவுடன் அதைத் தலைவர் தடுக்கின்றார். நீ களையை பிடுங்கும்போது பலன் தரும் நல்ல பயிரும் பிடுங்கப்படும். தீயவர் என்பவரிடத்தில் நல்லவையும் உண்டு. நல்லவரிடத்தில் தீயவையும் உண்டு. தீயவரிடத்தில் நல்லதும் வரலாம். எனவே அவசரப்பட வேண்டாம். ஒருவேளை காலம் தாழ்த்தும் நிலை ஒருவரை நல்லவராக்கலாம் என்று ஆண்டவர் கூறுகின்றார். நமக்காக இறைவன் பொறுமையோடு இருக்கிறார். யாரும் அழிந்து போகாமல் எல்லோரும் மனம் மாறவேண்டும் என விரும்புகிறார் (2 பேதுரு 3:9). எனவே இந்த உவமையின் மூலம் நீடித்த வாழ்வு நமக்குக் கிடைக்கின்றது என்றால் நாம் மனம் திரும்பி நல்லதை தேர்ந்தெடுத்து வாழ்வு பெறவேண்டும் என்றுதான் இறைவன் வயது கூட்டித் தருகின்றார். எப்படித் தெரியுமா?

தாய்லாந்து தேசத்தில் ஒருவகையான குரங்குகள் உண்டு. அவைகள் மாசாக்கா என்று அழைக்கப்படுகின்றன. மக்களுக்குப் பலவகையான தொல்லைகள் கொடுக்கும் குரங்கு வகைகள். ஆனால் மக்கள் அவற்றை அழித்து ஒழிப்பதில்லை. ஏனெனில் இந்த குரங்குகளைப் பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணமாக உள்ளார்கள். நாட்டிற்கும் மக்களுக்கும் வாழ்வுக்கு ஏற்ற பண வசூல் கிடைக்கிறது. இதேபோல்தான் சுதந்திரத்தில் தவறான பாதையில் சென்று மற்றவருக்குப் பாரமாக இருக்கிறார்கள் மக்கள் சிலர். ஆனால் கடவுள் இவர்களை உடன் தண்டிப்ப தில்லை. மாறாக ஒவ்வொரு நாளும் அன்புகாட்டி மனம் திரும்ப சந்தர்ப்பம் கொடுக்கிறார். நமக்காக அவர் பொறுமையோடு இருக்கிறார். யாரும் அழிந்து போகாமல் எல்லோரும் மனம் மாற வேண்டும் என விரும்புகிறார் (2 பேதுரு. 3:9). இந்தச் செய்தியை நாம் ஏற்றுக்கொள்வோம். ஏனெனில் கடவுள் உலகத்தை உண்டாக்கியபோது (தொ.நூ. 1:31) அவை நல்லவை எனக் கண்டார். இடையில் தீமைகளும் தோன்றின (தொ.நூ .6:5-6).

இறைவன் இறுதியாக ஒரு நம்பிக்கையையும், எச்சரிக்கையையும் வைக்கின்றார்! அலகை வல்லமை உடையவன் அல்ல. இயேசு கிறிஸ்து உலகை வென்றுவிட்டார் (1 கொரி. 15:55). சாவே உன் வெற்றி எங்கே. சாவே உன் கொடுக்கு எங்கே என்று கேட்கிறார் பவுல். சாத்தானையும் முறியடித்துவிட்டார். உலக முடிவில் சாத்தானின் கொட்டம் முடிவடையும். அப்போது கந்தக நெருப்பில் அவனும் அவர் சகாக்களும் சுட்டு எரிக்கப்படுவார்கள். உண்மைக்கும் பொய்மைக்கும், இன்பத்திற்கும் துன்பத்திற்கும், நல்லவை கெட்டவைக்கு நடந்த போராட்டம் முடிவு பெறும். இறுதியில் பொய் தோல்வி அடையும். உண்மையே வெல்லும். எனவே இயேசுவின் வருகையை எதிர்நோக்கி , (மத். 6:13 லூக். 11:4) எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் என்று விழிப்போடு செபிப்போம்.

ser ser

விண்ணரசு என்றால் என்ன?

இன்றைய நற்செய்தியின் மையக் கருத்து விண்ணரசு. விண்ணரசு என்றால் என்ன? என்பதற்கு ஓர் அற்புதமான விளக்கத்தைப் புனித பவுலடிகளார் தந்துள்ளார். இறையாட்சி (விண்ணரசு) என்பது நாம் உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது (உரோ 14:17).

சுவிட்சர்லாந்து நாட்டின் உச்சநீதி மன்றத்திலே ஓர் அழகிய ஓவியம் உண்டு ! அந்த ஓவியத்திலுள்ள நீதி தேவதையின் கண்கள் கருப்புத் துணியால் கட்டப்படாமலும், அதன் கையிலிருக்கும் வாளின் முனை அதன் பாதங்களுக்கு முன்னேயிருக்கும் ஒரு புத்தகத்தைச் சுட்டிக்காட்டுவது போலும் அமைந்துள்ளது. அந்தப் புத்தகத்தில் இறைவார்த்தை (The Word of God) என்று எழுதப்பட்டிருக்கின்றது. நீதிபதிகள் இறைவார்த்தையை அளவுகோலாக வைத்தே நீதி வழங்க வேண்டும் என்பதை இந்த ஓவியம் சுட்டிக்காட்டுகின்றது. ஆக, நீதி என்பது இறைவார்த்தையின் ஒளியில் அவரவர்க்கு உரியதை அவரவருக்குக் கொடுப்பதாகும்.

இரண்டாவது உலகப் போரின்போது இரவு நேரத்தில் இலண்டன் மீது குண்டு மாரி பொழியப்பட்டது. மக்கள் சுரங்கங்களில் இரவு நேரத்தைக் கழித்தார்கள். ஆனால் ஒரு கிறிஸ்தவப் பெண் மட்டும் அவள் வீட்டை விட்டு எங்கும் செல்லாமல், இரவு நேரத்தில் அவள் வீட்டிலேயே தங்கி அமைதியாக உறங்கி எழுந்தாள். உனக்குப் பயமே இல்லையா? என்று கேட்டபோது, அவள் அமைதி ததும்பும் முகத்தோடு, நான் உறங்கினாலும், என் கடவுள் உறங்குவதில்லை என்றாள். என் கடவுள் என்னோடு இருக்கின்றார். ஆண்டவரே என் ஆயர் ; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது என்னை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்வார் (திபா 23:1-2) என்று திருப்பாடல் ஆசிரியரோடு நாம் பாடும்போது நம் உள்ளத்திலே ஓர் இதம் பிறக்கும், ஒரு நம்பிக்கை உணர்வு பிறக்கும். அந்த இதத்திற்குப் பெயர்தான் நம்பிக்கை, அந்த நம்பிக்கை உணர்வுக்குப் பெயர்தான் அமைதி .

நல்லுறவு என்னும் மலருக்குள்ளிருக்கும் தேன்தான் மகிழ்ச்சி. நமக்கும் இறைவனுக்குமிடையே , நமக்கும் நம் அயலாருக்குமிடையே, நமக்கும் நம் மனசாட்சிக்குமிடையே , நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள இயற்கைக்குமிடையே நல்ல உறவு நின்று நிலவுமானால் நமக்குள் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ; அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

உண்மையான நீதியையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் கடவுளிடமிருந்து மட்டுமே நாம் பெற முடியும்; செபத்தால் மட்டுமே இவற்றை நம்முடையவையாக்கிக்கொள்ள முடியும் (முதல் வாசகம்).

இதுவே நமது செபமாக இருக்கட்டும் : தூய ஆவியாரே, நாங்கள் நீதியையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் எல்லாம் வல்ல பரமதந்தையிடமிருந்து பெற்று வாழ எங்களுக்குத் துணையாக வாரும்! பாவிகளாகிய , பலவீனர்களாகிய எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும். எங்கள் உள்ளங்களை ஊடுருவிப்பாயும் ஆற்றல் மிக்க ஆவியாரே, உமது பரிந்து பேசுதலின் மீது முழு நம்பிக்கை வைத்து, புனித பவுலடிகளாரின் அறிவுரைக்குச் செவிமடுத்து (இரண்டாம் வாசகம்) உம்மை கெஞ்சி மன்றாடுகின்றோம். எங்களை நீதியினாலும், அமைதியினாலும், மகிழ்ச்சியினாலும் அருள்பொழிவு செய்து எங்களை வாழ்வாங்கு வாழவையும். இந்த மண்ணகத்திலேயே விண்ணரசைச் சுவைக்கும் பாக்கியத்தை இறைவனிடமிருந்து பெற்றுத் தாரும். ஆமென்.

மேலும் அறிவோம் :

முதல் இலார்க்(கு) ஊதியம் இல்லை மதலையாம்
சார்பு இலார்க்(கு) இல்லை நிலை (குறள் : 449).

பொருள் : முதலீடு செய்யப் பொருளில்லாத வணிகர்க்கு , அதனால் வரக்கூடிய ஈட்டமாகிய ஊதியம் எதுவும் கிடைக்காது. அதுபோன்று, தளர்வுற்றபோது ஆதரித்துத் தாங்கும் பெரியோர் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லாது போகும்.

ser ser

கடவுள் மிகுந்த பொறுமையோடு மனிதர்களை ஆள்கிறார்

ஓர் ஆலமரத்தடியில் படுத்து உறங்கிய ஒருவர் கண் விழித்தார். அம்மரத்தின் அருகாமையில் இருந்த ஒரு சுரைச் செடியில் பெரிய சுரைக்காய் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து கடவுளிடம், "கடவுளே, உமக்கு அறிவு இருக்கிறதா? இவ்வளவு பெரிய ஆலமரத்துக்குச் சிறிய பழத்தையும், இவ்வளவு சிறிய சுரைக் கொடிக்குப் பெரிய காயையும் என் படைத்தாய்?" என்று கேட்டார். அவ்வேளையில் ஆலம்பழம் ஒன்று அவர் கண்மேல் விழுந்தது. உடனே, "கடவுளே! என்னை மன்னித்துடு; ஆலமரத்திற்குப் பெரிய பழம் இருந்திருந்தால், இந்தேரம் என் கண்கள் சிதறிப் போயிருக்கும்" என்றார்.

பலவேளைகளில் இயற்கைச் சீற்றங்களையும் மனிதரின் அவலங்களையும் கண்டு கடவுளைக் குறை கூறுகிறோம். ஓர் ஊரிலே ஒரே தெருவிலே ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு நிகழ்வுகள் நடக்கின்றன. ஒரு பெண் திருமணம் செய்து, பூவும் பொட்டும் வைத்து, கழுத்தில் தாலி அணிந்து மணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். அதே தெருவில் வேறொரு பெண் தன் கணவரைப் பறி கொடுத்து, தாலி அறுபட்டு, வெள்ளைப் புடவை அணிந்து, விதவையாகக் காட்சி அளிக்கிறார். வேறுபட்ட இரண்டு காட்சிகளைக் கண்ட புலவர் பக்குடுக்கை நன்கணியார், கடவுள் பண்பில்லாமல் உலகைப் படைத்துள்ளார்; இவ்வுலகம் கொடியது எனப்பாடியுள்ளார்.

படைத்தோன் மன்ற அப் பண்பிலாளன்
இன்னா தம்ம இவ்வுலகம் - புறம் 194

இவ்வுலகில் ஒரு சிலர் பிச்சை எடுத்துத்தான் பிழைக்க வேண்டும் என்பது கடவுளின் நியதி என்றால் அக்கடவுளே பிச்சை எடுத்து அழியட்டும் என்று கடவுளையே சபிக்கிறார் வள்ளுவர்,

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் (குறள் 1052)

கடவுள் இவ்வுலகை நன்றாக, மிகவும் நன்றாகப் படைத்தார். "கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன" (தொநூ 1:31), நன்மையே உருவான கடவுளிடமிருந்து தீமை வரமுடியாது, "சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழவோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை" (சாஞா 1;13) அப்படியானால் கடவுளின் படைப்பில் தீமை எவ்வாறு துழைந்தது? இக்கேள்விக்கு "வயலில் தோன்றிய களைகள் உவமை" மூலம் இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து பதிலளிக்கிறார். வயலில் நல்ல பயிர்கள் நடுவே களைகள் தோன்றுகின்றன. இக்களைகளை விதைத்தவன் பகைவன், அலகை. அலகை யார்? பொய்யன், பொய்மையின் பிறப்பிடம் (யோவா 8:44); மனிதர்களை விழுங்க முயலும் கர்ச்சிக்கும் சிங்கம் (1 பேது 5:8), உலகம் முழுவதும் அவன் பிடியில் இருக்கிறது ( 1 யோவா 5:19).

களைகளை உடனடியாகக் களையக் கடவுளிடம் சக்தி இல்லையா? இக்கேள்விக்கு இன்றைய முதல் வாசகம் கூறுகிறது: "கடவுள் மிகுந்த பொறுமையோடு மனிதர்களை ஆள்கிறார்" (சாஞா 12:18), பதிலுரைப் பாடல் கூறுகிறது: "கடவுள் அருள் மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்" (திபா 86:15), பொறுமை உள்ள கடவுள் உடனடியாகத் தீயவர்களை அழிக்காமல், இறுதி நாள் வரை பயிர்களுடன் களைகளையும் வளர அனுமதிக்கிறார். அறுவடை நாளில் களைகளைப் பறித்துச் சுட்டெரிப்பார் (மத் 13:30).

கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின்போது உலகம் புத்துயிர் பெறும் புதிய வானகமும் புதிய வையகமும் மலரும். அந்நாள்வரை உண்மையும் பொய்யும், ஒளியும் இருளும், சாவும் வாழ்வும் கலந்தே இருக்கும். உலக முடிவில்தான் தீயோர் தீக்குளையில் தள்ளப்படுவர்; நேர்மையாளர் விண்ணகத்தில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் (மத் 13:43), நெறிகெட்டவனை ஆண்டவர் வாயினால் ஊதி ஒழிப்பார் (2 தெச 2:6), மனிதர்களை ஏமாற்றி வந்த அலகை கந்தக நெருப்பு ஏரியில் எறியப்படும் (திவெ 20:10).

இறுதியில்தான் நன்மை தீமையை வெல்லும் என்று கூறிக்கொண்டு நாம் செயலற்று இருக்கக் கூடாது. இப்போதே தீய சக்திகளின் அச்சை முறிக்க வேண்டும். அரசியல்வாதிகளின் அயோக்கியதனத்தை, மதவாதிகளின் போலித்தனத்தை, வன்முறையாளர்களின் வக்கிரப் புத்தியை, வியாபாரிகளின் கலப்படத்தை. உலகச் சந்தையின் இறையாண்மையை. வல்லரசுகளின் புதிய காலனி ஆதிக்கத்தை இனம் கண்டு வோறுக்க வேண்டும். ஏனெனில் இத் தீய சக்திகளின் மூலமாக அலகை தனது இருளின் ஆட்சியைப் பரப்பிக் கொண்டிருக்கிறது.

ஓர் ஆலமரத்தடியில் குட்டிச் சாத்தான்கள் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதைக் கண்ட லூசிப்பேய் அவற்றைச் சாட்டையால் அடித்து, "என் மனிதர்களைக் கெடுக்காமல் சோம்பேறிகளாக அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு அக்குட்டிச் சாத்தான்கள், "தலைவா! தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் மனிதர்கள் எங்களைவிட நன்றாகச் செய்கிறார்கள்!" என்றன. சாத்தானின் கையாட்கள் திருச்சபையிலும் இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனைக்கு உரியது. "திருச்சபை தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளது" என்று திருத்தந்தை ஆறாம் பவுல் கூறியது குறிப்பிடத்தக்கது. எனினும், நாம் மன விரக்தி அடையாது தீமையை எதிர்த்துப் போராட வேண்டும். இப்போராட்டத்தில் தூய ஆவியார் நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாக நமக்காகப் பரிந்து பேசுகிறார் என்று திருத்தூதர் பவுல் இரண்டாம் வாசகத்தில் கூறுகிறார் (உரோ 8:26), இவ்வுலகின் தலைவனாகிய அலகைக்குக் கிறிஸ்துவின் மேல் அதிகாரமில்லை (யோவா 14:30). கிறிஸ்து தமது இறுதிச் செபத்தில், "தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்று வேண்டு கிறேன்" (யோவா 17:15) என்று நமக்காக மன்றாடியுள்ளார். அவரது மன்றாட்டு வீண்போகாது.

புனித யோவான் கூறுகிறார்: "உங்களுள் இருப்பவர் (கடவுள்) உலகில் இருக்கும் அந்த எதிர்க் கிறிஸ்துவைவிடப் பெரியவா" (1 யோவா 4:4). புனித யாக்கோபு கூறுகிறார்: “அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்போது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும் (யாக் 4:7), எனவே, நாம் கடவுள் நம் சார்பில் இருப்பதை உணர்ந்து தீய சக்திகளை எதிர்ப்போம். அலகையின் அச்சாணியை முறிப்போம்.
"எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும் தீயோனிடமிருந்து எங்களை விடுவியும்” (மத் 6:13).

ser ser

கனிவோடு தீர்ப்பு வழங்கும் இறைவன்

நிகழ்வு

ஒரு சிற்றூரில் இரண்டு விவசாயிகள் இருந்தார்கள். அவர்கள் இருவருடைய வயலும் அருகருகே இருந்தன. இதில் ஒரு விவசாயி கடவுள்மீது கொண்டவர்; இன்னொரு விவசாயியோ கடவுள்மீது நம்பிக்கை இல்லாதவர். கடவுள்மீது நம்பிக்கை இல்லாத விவசாயி தன்னுடைய விருப்பம்போல் வாழ்ந்துவந்தார். அதனால் கடவுள்மீது நம்பிக்கைகொண்ட விவசாயி அவரிடம், புத்திமதிகளைச் சொல்லி நல்லமுறையில் வாழவேண்டும் என்றும், இல்லையென்றால் கடவுள் அதற்கேற்ற தண்டனையைத் தருவார் என்றும் சொல்லி வந்தார். இதனைக் கடவுள்மீது நம்பிக்கை இல்லாத விவசாயி கண்டுகொள்ளவே இல்லை.

அந்த ஆண்டு அவர்கள் இருவரும் தங்களுடைய வயலில் நாற்று நட்டு, பயிர்கள் நன்றாக வளர வேண்டியதையெல்லாம் செய்து, அறுவடைக்காகக் காத்திருந்தார்கள். அறுவடையின்பொழுது கடவுள்மீது நம்பிக்கையில்லாத விவசாயிக்கு அமோக விளைச்சல் கிடைத்தது; கடவுள்மீது நம்பிக்கைகொண்ட விவசாயிக்கு விளைச்சல் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

இதனால் கடவுள்மீது நம்பிக்கை இல்லாத விவசாயி, கடவுள் நம்பிக்கைகொண்ட விவசாயியிடம், “கடவுளுக்கு அஞ்சி நல்ல வழியில் வாழாவிட்டால், அவர் தண்டிப்பார் என்று என்னவெல்லாமோ என்னிடத்தில் சொன்னாயே...! இப்பொழுது பார்! கடவுள்மீது நம்பிக்கை கொண்ட உனக்கு சொல்லிக்கொள்ளும்படியாக விளைச்சல் இல்லை. ஆனால், கடவுள்மீது நம்பிக்கை இல்லாமல், விரும்பம்போல் வாழ்ந்த எனக்கு அமோக விளைச்சல் கிடைத்திருக்கின்றது” என்றார். அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கடவுள்மீது நம்பிக்கை கொண்ட விவசாயி இப்படிச் சொன்னார்: “கடவுள் மனிதரைப் போன்று ஒவ்வோர் ஆண்டும் அல்லது ஒவ்வொரு மாதமும் படியளப்பார் கிடையாது. அவர் படியளக்க வேண்டுமானால் காலம் தாழ்த்தலாம்; ஆனால், நிச்சயம் எல்லாருக்கும் படியளப்பார்.” இவ்வார்த்தைகள் கடவுள்மீது நம்பிக்கை இல்லாத விவசாயியை மிகவே சிந்திக்க வைத்தன.

கடவுள் படியளக்க அல்லது தீர்ப்பு வழங்கக் காலம் தாழ்த்தலாம்; ஆனால், இறுதித் தீர்ப்பின்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பத் தீர்ப்பு வழங்குவார். இது உறுதி. பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, ‘கனிவோடு தீர்ப்பு வழங்கும் இறைவன்’ என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

அனைத்தையும் நன்றாய்ப் படைத்த இறைவன்

நற்செய்தியில் இயேசு, வயலில் தோன்றிய களைகள் உவமை, கடுகுவிதை உவமை, புளிப்பு மாவு உவமை என்று மூன்று உவமைகளைச் சொல்கின்றார். இந்த மூன்று உவமைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய இருந்தாலும், வயலில் தோன்றிய களைகள் உவமையை மட்டும் நாம் முதன்மையாக எடுத்துச் சிந்திப்போம்.

இயேசு சொல்லக்கூடிய வயலில் தோன்றிய களைகள் உவமையில் வரும் நிலக்கிழார், தன்னுடைய நிலத்தில் நல்ல விதைகளை விதைக்கின்றார். அவர் நல்ல விதைகளை விதைத்தது, ஆண்டவராகிய கடவுள், தான் உருவாக்கிய அனைத்தையும் நோக்க, அவை மிகவும் நன்றாய் இருந்தன (தொநூ 1: 31) என்ற வார்த்தைகளையும், இயேசு காதுகேளாதவரைப் பேசச் செய்ததைப் பார்த்துவிட்டு, மக்கள், “இவர் எத்துணை நன்றாய் யாவற்றையும் செய்துவருகின்றார்” (மாற் 7: 37) என்ற வார்த்தைகளையும் நமக்கு நினைவுபடுத்துவதாக் இருக்கின்றன.

நிலக்கிழார் நல்லவிதைகளை விதைத்தாலும், அவருடைய பகைவர்கள் கோதுமைகளுக்கு இடையே களைகளையும் விதைத்து விட்டுப் போகின்றார்கள். இது சாத்தானுடைய சூழ்ச்சியை (தொநூ 3:1) நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. நல்லவை விதைக்கப்பட்டபொழுது, அல்லவை விதைக்கப்பட்டதே, அது உடனே அகற்றப்பட்டதா...? அதற்கென்று காலம் ஒதுக்கப்பட்டதா? என்பதைக் குறித்து தொடர்ந்து சிந்திப்போம்.

பொறுமையோடு கனிவோடும் இருக்கும் இறைவன்

நிலக்கிழாருடைய பணியாளர்கள், வயலில் கதிர்களோடு களைகளும் இருப்பதைப் பார்த்துவிட்டு, களைகளை அகற்றிவிடலாமா? என்று கேட்கின்றபோழுது, நிலக்கிழார் அவர்களிடம், களைகளைப் பறிக்கும்பொழுது, அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள்” என்கின்றார். நிலக்கிழார் சொல்லக்கூடிய வார்த்தைகள், புனித பேதுரு தன்னுடைய இரண்டாவது திருமுகத்தில் கூறுகின்ற, “ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றிக் காலம்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர்; ஆனால், அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை; மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார்” (2 பேது 3: 9-10) என்ற வார்த்தைகளை நமக்கு நினைவுபடுத்துகின்றன.

ஆம், ஆண்டவராகிய கடவுள், களைகள் போன்று இருக்கும் மனிதர்களை உடனே அப்புறப்படுத்தாமல், பொறுமையோடு இருக்க முதல் காரணம், புனித பேதுரு சொல்வது போல, அவர் யாரும் அழிந்துபோகாமல், மனம்மாறவேண்டும் என்று விரும்புவதால்தான். இரண்டாவது காரணம், சீராக்கின் ஞானநூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போல், கடவுள் கனிவோடு தீர்ப்பு வழங்குவதால் ஆகும். இவ்வாறு கடவுள் நம்மீது கனிவோடு இருந்து, நாம் அனைவரும் மனம்மாறவேண்டும் என்று விரும்புவதால்தான் பொறுமையோடு இருக்கின்றார்.

அவரவர் செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கும் இறைவன்

கடவுள் கனிவுள்ளவராகவும் பொறுமையுள்ளவராகவும் இருந்தாலும், அறுவடையின்பொழுது நிலக்கிழார் எப்படித் தன்னுடைய பணியாளர்கள் மூலமாகக் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்த்து வைத்துவிட்டு, களைகளை எரிப்பதற்காகக் கட்டுகின்றாரோ, அப்படி, இறுதித் தீர்ப்பின்பொழுது கடவுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பார் அல்லது தீர்ப்பு வழங்குவார் (மத் 25: 31-46; உரோ 2: 6).

இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு, வயலில் தோன்றிய களைகள் உவமைக்கு விளக்கம் அளிக்கின்றபொழுது, “வானதூதர் நெறிகெட்டோரைத் தீச்சூளையில் தள்ளுவார் அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளிவீசுவர்” என்று சொல்கின்றாரே, நாம் தீச்சூளையில் தள்ளப்படுவதும், கதிரவனைப் போன்று ஒளிவீசுவதும் நம்முடைய கையில் அல்லது நாம் வாழும் வாழ்க்கையைப் பொருத்துதான் இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

“அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்” (யோவா 3:15) என்று இயேசு கூறுவதாக யோவான் நற்செய்தியில் வாசிக்கின்றோம். அப்படியானால், நாம் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு வாழ்ந்தோமெனில் நிலைவாழ்வைப் பெறுவோம்; கதிரவனைப் போன்றும் ஒளிவீசுவோம். அதே நேரத்தில் நாம் இயேசுவிடம் நம்பிக்கைகொண்டு வாழாமல், மனம்மாறுவதற்கு நமக்குக் கொடுக்கப்படும் வாய்ப்புகளையும் நாம் உதறித் தள்ளிவிட்டு வாழ்ந்தோம் எனில், அதற்குரிய தண்டனையைத்தான் நாம் பெறுவோம் என்பது உறுதி.

நாம் இயேசுவின்மீது நம்பிக்கைகொண்டு நிலைவாழ்வைப் பெறப்போகிறோமா? அல்லது அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் தண்டனையைப் பெறப் போகிறோமா? இரண்டில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம். சிந்திப்போம்.

சிந்தனை

‘எங்களுடைய செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்ட மக்களிடம் இயேசு, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்’ (யோவா 6: 28,29) என்பார். ஆகையால், நாம் மனம்மாறவேண்டும்; இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகப் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கும் கடவுளிடம், நம்பிக்கை கொண்டவர்களாய் அவரிடம் செல்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

இரு விதைகளும் வினைகளும்

நாம் கடந்த ஞாயிறன்று வாசித்த 'ஆறுவகை நிலங்களின்' தொடர்ச்சியாக இருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த நற்செய்தி வாசகம் மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கிறது. இதன் பின்புலம் இதுதான்: மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில், இருவகையான மனிதர்கள் இருக்கின்றார்கள்: நேர்மையாளர்கள், பொல்லாதவர்கள். பொல்லாதவர்களைத் தங்கள் குழுமத்திலிருந்து வெளியேற்றுவதா? அல்லது அவர்களை அப்படியே வைத்துக்கொள்வதா? வெளியேற்றுவது என்றால் எப்போது வெளியேற்றுவது? வைத்துக்கொள்வது என்றால் எதுவரை வைத்துக்கொள்வது? அவர்களை என்ன செய்வது? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக அமைகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

வயலில் தோன்றிய களைகள் உவமை.

வழக்கமாக, மத்தேயு நற்செய்தியாளரின் உவமைப் பொழிவில் சொல்லப்பட்டுள்ள உவமைகள் இறையாட்சி பற்றிய உவமைகளாக மட்டுமே இருக்கின்றன. ஆனால், இந்த உவமை இரண்டு காரணங்களுக்காகச் சொல்லப்படுகிறது: ஒன்று, இறையாட்சி அல்லது விண்ணரசு என்றால் என்ப என்பதை அறிய. இரண்டு, இறுதி நாள் நிகழ்வுகளைப் பற்றியது அல்லது இறுதித் தீர்ப்பின் போது நடப்பது பற்றியது.

இன்றைய உவமையில், எல்லாம் இரட்டைப் படையில் இருக்கின்றன:

1. விதைகள் இருவகை: கோதுமை, களை

2. விதைப்பவர்கள் இருவகை: நிலக்கிழார், பகைவன்

3. எதிர்வினைகள் இருவகை: அனைத்தையும் வளர விடுவது, களைகளைப் பறிப்பது

4. விளைவுகள் இருவகை: கோதுமை களஞ்சியத்தில் சேர்க்கப்படுகிறது, களைகள் நெருப்பில் எரிக்கப்படுகின்றன

5. உணர்வுகள் இருவகை: நிலக்கிழாரின் பொறுமை, வேலையாள்களின் அவசரம்

6. மனிதர்கள் இருவகை: நேர்மையாளர், நெறிகெட்டோர்

7. வாழ்வியல்நிலை இருவகை: கடவுளின் பொறுமை, மனித அவசரம்

'கடவுளின் பொறுமை, மனித அவசரம்' என்னும் இறுதி இணையை மையமாக வைத்து, இன்றைய நாள் வாசகங்களைப் புரிந்துகொள்வோம்.

'பொறுமை'

முதலில், ரத்தக் கண்ணீர் திரைப்படத்தில், காந்தா, தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கும் மோகனிடம், 'எனக்கு வைர நெக்லஸ் எப்போது வாங்கித் தருவீர்கள்?' என்று கேட்கிறார். அதற்கு மோகன், 'கொஞ்சம் பொறுமையாக இரு! மார்க்கெட் நிலவரம் சரியில்லை! கையில் உள்ள காசும் வேகமாகக் காலியாகிறது! அம்மாவுக்கும் உடல்நிலை சரியில்லை!' என்று பதில் சொல்வார். உடனே காந்தா, 'மோகன்! பொறுமையா? வறுமையில் இருப்பவர்கள் அல்லவா பொறுமையைப் பற்றிப் பேச வேண்டும்!' எனச் சொல்லித் துள்ளி எழுவார்.

இங்கே சொல்லப்படும் பொறுமையின் பொருள் காத்திருத்தல்.

இரண்டாவதாக, உளவியலில் பொறுமை என்பது, 'தூண்டுதலுக்கும்' (stimulus) 'எதிர்வினைக்கும்' (response) இடைப்பட்ட தொலைவு. எடுத்துக்காட்டாக, நான் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, ஒரு மாணவர் இன்னொருவரிடம் பேசிக்கொண்டே இருக்கின்றார். அவர் செய்யும் தொந்தரவு எனக்கு ஒரு 'தூண்டுதல்.' 'தம்பிகளா! எழுந்து வெளியே போங்க!' என்று அவர்களைப் பார்த்துச் சொல்வது என் 'எதிர்வினை.' ஆனால், நான் எந்த எதிர்வினையை உடனே ஆற்றாமல், இன்னும் கொஞ்ச நேரத்திற்குத் தள்ளிப் போடுகிறேன். எவ்வளவு தூரம் என்னால் தள்ளிப் போட முடிகிறதோ அவ்வளவு நேரம் நான் பொறுமையாக இருக்கிறேன். மேலும், என்னுடைய பொறுமையின் அளவு கூடக் கூட என்னுடைய உணர்வு முதிர்ச்சி கூடுகிறது.

இங்கே சொல்லப்படும் பொறுமையில் காத்திருத்தல் இருக்கிறது. அத்தோடு, இந்தப் பொறுமையில் என்னுள்ளும் மாற்றம் நிகழ்கிறது. என் மாணவர்களிலும் மாற்றம் நிகழ்கிறது. ஏனெனில், அவர்கள் தங்கள் பேச்சை நிறுத்திக் கொண்டு வகுப்பைக் கவனிக்கத் தொடங்குகின்றனர்.

மூன்றாவதாக, காலம் அனைத்துக் காயங்களையும் ஆற்றும் என்பது பழமொழி. இந்தப் பழமொழியிலும் பொறுமையே பின்புலத்தில் இருக்கிறது. வெறும் காலம் மற்றும் காயங்களை ஆற்றுவதில்லை. மாறாக, காயம் பட்டவர் தன்னுடைய பொறுமையால் தன் காயத்தை எதிர்கொள்கின்றார். நாள்கள் ஆக, ஆக, அனுபவங்களும் நிகழ்வுகளும் மாற, மாற காயம் காலத்தில் கரைந்துவிடுகிறது. இங்கே காயம் பட்டவர் ஒரு பக்கம் ஓய்ந்திருந்தாலும், அவருடைய உள்ளத்தில் அவர் தன்னையே குணமாக்கிக் கொள்கிறார்.

வயலில் களைகளைக் கண்ட பணியாளர்களுக்குக் கோபம் வருகிறது.

தங்கள் தலைவரிடம் 'வெரிகுட்' வாங்குவதற்காக, அவரிடம் ஓடி, 'வயலில் களைகள் காணப்படுவது எப்படி? நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா?' எனக் கேட்கின்றனர். இதைக்கேட்ட தலைவர் தனக்குள்ளே சிரித்திருப்பார். 'ஏன்டா! சோம்பேறிகளா! நான் சொல்ற வேலையவே பாதி பாதிதான் செய்வீர்கள்! இப்ப என்ன ஓவர் பில்ட் அப்!' எனத் தன் மனத்திற்குள் கேட்டிருப்பார். பணியாளர்களின் ஆர்வக் கோளாறைக் கண்டுபிடித்த அவர், 'வேண்டாம்! இவ்வளவு ஆர்வத்திலும் அவசரத்திலும் நீங்கள் கோதுமையையும் பறித்துவிடுவீர்கள்!'

இத்தலைவர் வெறும் விவசாயி மட்டுமல்ல. மாறாக, மேலாண்மையியலில் சிறந்தவரும் கூட.

அதாவது, வயலின் ஒரு பாத்தியில் 50 கோதுமைச் செடிகள், 50 களைகள் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். முளைத்து வருகின்ற பருவத்தில் கோதுமைச் செடிகளும், களைகளும் ஒன்றுபோலத் தெரியும். 40 களைகளோடு சேர்த்து 10 கோதுமைச் செடிகளையும் பறித்துவிட்டால் தலைவருக்கு 10 செடிகள் நஷ்டம். ஆனால், வேலைக்காரர்கள், ரொம்ப எளிதாக, 'ஸாரி!' சொல்லி ஒதுங்கிவிடுவார்கள். இவர்களுக்கு அது வெறும் 'ஸாரி!' தான். தலைவருக்கோ அது அவருடைய சொத்து. வேகமாக மனக்கணக்கு போடுகிற அவர், தன்னுடைய எந்தக் கோதுமையையும் இழக்கத் தயாராக இல்லை.

இந்த இடத்தில் நாம் மற்றொரு மேலாண்மையியல் பாடத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது, தலைவனைவிட ஊழியக்காரன் பரபரப்பாக இருக்கக் கூடாது. தலைவனே தூங்கப் போய்விட்டான். ஊழியக்காரன் ஏன் புலம்பிக் கொண்டிருக்க வேண்டும்? இவன் புலம்புவதால் களை வளராமல் போய்விடுமா? அல்லது இவன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா உழைத்தால் தலைவன் அள்ளிக் கொடுப்பானா? இல்லை! அப்புறம் ஏன் இந்த ஆரவாரம்! தலைவனுக்கு எல்லாம் தெரியும். அமைதியாகத் தூங்கச் செல்வதே பணியாளனுக்கு அழகு.

தலைவன் இங்கே பொறுமை காப்பதால் சில பிரச்சினைகளும் எழுகின்றன:

அ. களைகள், கோதுமைக்குத் தேவையான நிலத்தின் ஊட்டத்தை எடுத்துக்கொள்கின்றன.

ஆ. களைகள், கோதுமைக்குப் பாய்ச்சப்படும் நீரைப் பறித்துக்கொள்கின்றன.

இ. களைகள், பல பூச்சிகள் மற்றும் புழுக்களைத் தங்கள்பால் ஈர்ப்பதால், அவற்றாலும் கோதுமைப் பயிருக்கு தீங்கு நேர்கின்றது.

ஈ. களைகள் மண்டிக் கிடக்கும்போது அது வயலின் அழகைக் கெடுக்கிறது.

ஆனாலும், தலைவர் அமைதி காக்கிறார்?

ஏன்?

ஒரு கோதுமைப் பயிர்கூட அழிந்துவிடக் கூடாது என்பதற்காக, மேற்காணும் அனைத்துப் பிரச்சினைகளையும் தாங்கிக்கொள்கின்றார்.

இதுதான் கடவுளின் பொறுமை.

ஆக, கடவுள் காத்திருக்கின்றார்.

ஆனால், என்னுடைய பொறுமையான நேரத்தில் என் மாணவர்களின் இயல்பு மாறுவதுபோல, களைகளின் இயல்பு மாறுவதில்லை. களை எப்போதும் களைதான். பாதி தூரம் களையாக வந்தபின் அது கோதுமையாக மாற முடியாது. களையின் இயல்பு தன்னுடைய காத்திருத்தலால் மாறாது என்று தெரிந்தாலும் கடவுள் காத்திருக்கின்றார்.

கடவுளின் பொறுமை எதிரியின் செயலை இறுதியில் அழிக்கின்றது. களைகளின் இருப்பு கோதுமைப் பயிர்களுக்கு நெருடலாக இருந்தாலும், இறுதியில் களைகள் பறித்து எரிக்கப்படும்வரை அவை காத்திருக்க வேண்டும். களைகளின் இருப்பைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். தங்களுடைய வாழ்வாதரமான தண்ணீரும், உரமும், ஊட்டமும் அநீதியாகப் பகிரப்படுவதை அல்லது பறித்துக்கொள்ளப்படுவதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

கடவுளின் பொறுமை பல நேரங்களில் நம் அவசரத்தோடு பொருந்துவதில்லை.

நம்பிக்கையின் பிதாமகன் என அழைக்கப்படுகின்ற ஆபிரகாமே, தனக்குக் கடவுள் தந்த வாக்குறுதி நிறைவேறும் என்ற பொறுமை இல்லாமல், தனக்கான வாரிசாக, தன்னுடைய அடிமையின் மகன் எலியேசரை, உரிமைப் பிள்ளையாக தத்தெடுக்க முனைகின்றார்.

மீட்பின் நாயகன் என அழைக்கப்படுகின்ற மோசே, 'பாறைக்குக் கட்டளையிடு!' என்று கடவுள் சொன்னதை மறந்து, 'பாறையை இருமுறை அடித்து!' தன்னுடைய அவசரத்தால், வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகின்றார்.

இஸ்ரயேலின் முதல் அரசராகிய சவுல், ஆண்டவருக்குப் பலி செலுத்தி, அவரிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என அவசரப்பட்டு, அமலேக்கியரின் கால்நடைகளை அழிக்காமல், அவற்றை ஆண்டவருக்கென ஒதுக்கி வைத்ததால் அரச நிலையை இழக்கின்றார்.

ஒருங்கிணைந்த இஸ்ரயேலின் அரசராகிய தாவீது, 'ஆண்டவரிடம் கேட்டால் அவர் எனக்கு மனைவியரைத் தருவார்' என்று அறிந்திருந்தாலும், அவசரப்பட்டு பெத்சேபாவைத் தழுவிக்கொள்கின்றார். அவளுடைய கணவனைக் கொல்கின்றார். விளைவு, வாள் அவருடைய தலைக்குமேல் இறுதிவரை தொங்கிக்கொண்டே இருந்தது.

மனித அவசரங்கள் பல நேரங்களில் கோதுமைப் பயிர்களை அழிப்பதோடு, நிலத்தையும் பாழ்படுத்திவிடுகின்றன.

இந்தக் கொரோனா காலத்தில், கோதுமைப் பயிர்களாகிய நாம், களை என்னும் அந்த தீநுண்மியோடு வாழப் பழகிக்கொண்டோம். அவை நம்மை நெருக்கிக் கொண்டே இருந்தாலும், நம் அன்பு உறவுகளை நம்மைவிட்டுத் தூரமாக்கினாலும், நம்மைவிட்டு எடுத்துக்கொண்டாலும், 'எல்லாம் சரியாகிவிடும்!' என்று பொறுமையுடன் காத்துக்கொண்டேதான் இருக்கின்றோம்.

ஆனால், இந்தப் பொறுமை நம் இயலாமையால் வந்த பொறுமை.

இது மட்டும் நமக்குப் போதாது! ஏனெனில், இயலாமையில் வருவது பொறுமை அல்ல, மாறாக, கையறுநிலை.

கடவுளின் பொறுமையை நாம் எப்படி பெறுவது?

1. நம்பிக்கை பார்வை கொண்டிருப்பதால்.

2. தீமையின் இருப்பை ஏற்றுக்கொள்வதால்.

3. தீமை என்னுடைய நன்மையை எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை என்ற பரந்த மனம் கொள்வதால்.

4. வாழ்வின்மேல் உரிமை கொண்டாடுவதால்.

5. நன்மைத்தனத்தில் வளர்வதால்.

6. 'இதுவும் கடந்து போகும்!' என எண்ணுவதால்.

இறுதியாக, நாம் களைகளின் நடுவில் சிக்கிக்கொண்ட கோதுமைப் பயிர்களாக, ஆண்டவரை நோக்கி பெருமூச்சு எழுப்பினாலும் (காண். இரண்டாம் வாசகம்), அவர், பல நேரங்களில், 'பொறு!' என்கிறார். ஏனெனில், அவர் 'பொறுமையும், பேரன்பும் கொண்டவர்' (காண். முதல் வாசகம், பதிலுரைப் பாடல், திபா 86).

ser

"சிறியவற்றிலும் நன்மையா? "

அருட்சகோ. குழந்தைஇயேசு பாபு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி புனித மரியன்னை பேராலயத்தில் சிறையருட்பணிக்காக நிதி திரட்டுவதற்கு சிறையருட்பணி தன்னார்வத் தொண்டர்களோடு சென்றிருந்தேன். நிதி திரட்டுவதற்கு முந்தின வாரம் சிறையருட்பணியில் நாங்கள் செய்துவந்த நலத்திட்ட உதவிகளைப் பற்றி திருப்பலி முடிந்தவுடன் பங்கு பணியாளரின் அனுமதியோடு ஒலிபெருக்கியில் அறிவிப்பினை வழங்கினேன். அறிவிப்பு கொடுத்த அதற்கு அடுத்த வாரம் நாங்கள் ஆலயத்திற்கு வெளிப்புறம் நன்கொடை பெறுவதற்காக நின்றோம். தங்களால் இயன்றவரை மக்கள் பிறர்நலத்தோடு உதவி செய்தார்கள். அனைவரும் செய்த உதவிகளை விட ஒரு பத்து வயது சிறுமி செய்த உதவி என் உள்ளத்தை உருக வைத்தது. அறிவிப்பை கேட்ட 10 வயது சிறுமி தான் சேர்த்து வைத்திருந்த 350 ரூபாய் மதிப்பு மிக்க சில்லறைகளை நாங்கள் வைத்திருந்த வாளியில் போட்டாள். அப்பொழுது நான் அந்த சிறுமியிடம் "இவ்வளவு சில்லறை காசு உனக்கு எப்படி கிடைத்தது " என்று கேட்டேன். அதற்கு அந்த சிறுமி "கடந்த ஆண்டு சிறையருட்பணியைப் பற்றியும் இப்பணியின் வழியாக பயனடைந்து வரும் சிறைவாசிகளை பற்றியும் அவர்களின் குடும்பங்களைப் பற்றியும் அறிவிப்பில் ஒரு அருட்சகோதரர் எடுத்துரைத்தார். ஆனால் அறிவிப்பு கொடுத்த சமயத்தில் அவர்களுக்கு அந்த உதவி செய்ய என்னிடம் எதுவுமில்லை. எனவே அன்றிலிருந்து எனக்கு கிடைத்த சில்லறைகளை சேர்த்து வைத்தேன். இப்பணிக்கு கொடுப்பதற்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன். இப்பொழுது கொடுத்துவிட்டேன் "என்று கூறினார். இத்தகைய பதிலை அந்த 10 வயது சிறுமியிடம் கேட்டபொழுது நானும் என்னோடு நிதி திரட்டிய சிறையருட்பணித் தன்னார்வத் தொண்டர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்; வியப்புக்குள்ளானோம். பத்து வயது பிஞ்சு குழந்தைக்கு இருக்கும் உதவும் மனநிலை நம்மில் பலருக்கு இல்லை. கொடுத்து அளவில் சிறியதாக இருந்தாலும் கொடுக்க வேண்டும் நினைத்த மனம் பெரிது. பிறருக்கு நன்மை செய்து வாழவே இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுகின்றன. அது தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.

இன்றைய நற்செய்தியின் மையக்கருத்து விண்ணரசு (இறையாட்சி) . இறையாட்சி என்பது நாம் உண்பதையும், குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. (உரோ: 14:17). இன்று நற்செய்திலேயே நம் தூய ஆவியால் நிறப்பப்பட்ட நம் ஆண்டவர் இயேசு இறையாட்சியைப் புரிந்துக் கொள்ள மிக எளிமையாக மூன்று வகையான உவமைகளைக் கூறியுள்ளார். இயேசு பெரும்பாலும் உவமைகள் வழியாக போதித்தத்தன் காரணம் பாமர மக்கள் முதல் படித்த மக்கள் வரை இறையாட்சி மதிப்பீடுகளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

முதலாவதாக, நல்ல விதைக்கும் தீய விதைக்கும் இடையேயுள்ள முரண்பாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. நல்ல விதைகள் விதைக்கப்பட்ட இடத்தில் களைகளை வளரச்செய்யும் தீய விதையும் அலகையின் சூழ்ச்சியால் விதைக்கப்படுகிறது. நல்லதும் தீயதும் ஒன்றாக தெரிவதுபோல் பயிரும் களையும் ஒரே மாதிரி இருந்தது. எனவே இரண்டையும் வளரவிட்டு அறுவடை செய்யப்படும் பொழுது களைகள் அறுக்கப்பட்டு தீயிலிட்டு எரிக்கப்படும் என்றும் விளைந்த கோதுமை களஞ்சியத்தில் சேர்க்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. நாம் வாழும் இந்த சமூகத்தில் நல்லோரும் தீயோரும் ஒரேமாதிரி வாழ்ந்தாலும் இறுதியில் கடவுள் நல்லோரையும் தீயோரையும் தனியாகப் பிரிப்பார் என்ற சிந்தனையை முதல் உவமைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் இறையியல் பின்னணி என்னவென்றால் இறையாட்சியின் மதிப்பீடுகள் நமக்கு போதனைகளின் வழியாக விதைக்கப்படுகிறது. அவற்றை நாம் வாழ்வாக்க முயற்சி செய்யும்பொழுது, அலகையின் தீய விதையான அநீதிகளும் தீமைகளும் நம்மை இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி வாழவிடாமல் தடையாய் இருக்கிறது. அலகையின் வழிநடத்துதல் மகிழ்ச்சி நிறைந்ததாக தெரியும். ஆனால் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழும் பொழுது நமக்கு பல துன்பங்கள் வரும். மகிழ்ச்சி இல்லாத வாழ்வாகவும் சோதனையுள்ள வாழ்வாகவும் இருக்கும். ஆனால் துன்பத்தைக் கண்டு துவண்டு விடாமல் இறையாட்சியின் மதிப்பீட்டுக்கு சான்று பகரும் பொழுது நிச்சயம் இறுதியில் இறைவன் நமக்கு வெற்றியை தருவார். அலகையின் வழிநடத்தலில் வாழும் பொழுது மகிழ்ச்சி நிறைந்த வாழ்வாக தெரிந்தாலும், இறுதியில் நம் வாழ்வு கேள்விக்குறியாக மாறிவிடும். நாம் செய்த தீமையின் பொருட்டு பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும். களைகளுக்கு மத்தியிலும் நல்ல விதைகள் பலன் கொடுத்ததை போல நாமும் வாய்ப்புகளை பயன்படுத்தி அலகையின் திட்டத்திற்கு சாட்டை அடி கொடுப்போம். மனமாற கொடுக்கப்படுகின்ற வாய்ப்புகளை பயன்படுத்தி மனம் மாறுவோம். இறையாட்சியின் மதிப்பீடுகளின்படி பிறருக்கு பலன் கொடுக்கும் கருவிகளாக உருமாறுவோம். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் சக்கேயு. அவர் எவ்வளவுதான் பாவங்கள் செய்தாலும் இயேசுவை உள்ளத்தில் ஏற்றுக் கொண்ட பொழுது, அனைத்தையும் இழக்க தயாராக இருந்தார். உண்மை, நீதி, நேர்மை போன்ற இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வாக்க முடிவு செய்தார். அதன் பயனாக இயேசு கொடுத்த மீட்பைச் சுவைத்தார்.

இரண்டாவது உவமையில் ஆண்டவர் இயேசு கடுகு விதையை இறையாட்சிக்கு ஒப்பிடுகிறார். இறையாட்சி என்னும் சிறிய விதை கடுகு விதைக்கு ஒப்பிடப்படுகிறது. கடுகு விதை அளவில் சிறிதாக இருந்தாலும் அது வளர்ந்த பிறகு மற்ற செடிகளை விட மிகப்பெரிய செடியாக மாறுகின்றது. வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் தங்கும் அளவுக்கு பெரிதாக வளர்வதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. நம் ஆண்டவர் இயேசு தெரிந்தெடுத்த 12 சீடர்கள் ஒரு சிறிய திருஅவையாக இருந்தாலும், பின்பு இறையாட்சி மதிப்பீட்டின் தாக்கத்தின் காரணமாக மிகப்பெரிய திருஅவையாக உருமாறியது . எனவே இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வாக்கவும் அதைப் பிறரும் அறிந்து வாழ்வாக்கவும் நாம் எடுக்கக்கூடிய சிறிய சிறிய முயற்சிகள் மிகப் பெரிய வெற்றியை தரும். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நமது நாட்டில் முதன் முதலாக நற்செய்தி அறிவித்த புனித தோமையார். அவர் விதைத்த இறையாட்சி என்னும் ஒரு சிறிய விதை இன்று இந்தியத் திருஅவையாக வளர்ந்துள்ளது. அதேபோல நமது அன்றாட வாழ்விலே நீதியையும் உண்மையையும் அன்பையும் வாழ்வாக்கிட, சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதை முழுமையாக பயன்படுத்தி நாம் வாழும் சமூகத்தை இறையாட்சியின் சமூகமாக மாற்ற அழைக்கப்பட்டுள்ளோம். அவ்வாறு வாழும் பொழுது நாமும் இயேசுவைப் போல இவ்வுலகத்தில் இறையாட்சியை கட்டியெழுப்பும் இறைத்தந்தையின் கருவிகளாக உருமாற முடியும்.

மூன்றாவது உவமையில் புளிப்புமாவைப் பற்றி ஆண்டவர் இயேசு பேசியுள்ளார். புளிப்புமாவு எவ்வாறு பிசைந்து வைத்த மற்ற மாவை புளிப்புள்ளதாக மாற்றுகிறதோ, அதேபோல இறையாட்சி எனும் இயல்பை நாம் வாழ்ந்து நம் வாழ்வின் மூலம் பிறரையும் வாழவைக்க அழைக்கப்பட்டுள்ளோம். இயேசு கூறிய இந்த மூன்று உவமைகளும் இறையாட்சியின் ஆழமான பொருளை மிக எளிமையாக எடுத்துக்கூறி அதன்படி வாழ வழிகாட்டுகிறது.

எனவே இறையாட்சி மதிப்பீடுகளை வாழ்வாக்கும் பொழுது, நம் வாழ்வு நன்மைகளை வழங்கக் கூடிய வாழ்வாக மாறிவிடுகிறது. இந்த மனநிலையில் வாழ்ந்தவர்கள் தான் இருபதாம் நூற்றாண்டில் நம் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்த புனித அன்னை தெரசா. அதேபோல நாம் வாழ்கிற இந்த நூற்றாண்டிலும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இன்றைய முதல் வாசகமும் இறைவனின் நன்மைத் தனத்தைப் பற்றி சுட்டிக்காட்டுகின்றது . இறைவன் நீதியுள்ளவராக இருந்தது போல் நாமும் நீதியுள்ளவர்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். அதற்கு இந்த இரண்டாம் வாசகத்தில் வருவதுபோல தூய ஆவியாருடைய உடனிருப்பையும் வழிநடத்துதலையும் பெற்றுக்கொள்ள நாம் தூய ஆவியார் குடிகொள்ளும் ஆலயமாக நம் உடலையும் உள்ளத்தையும் மாற்றுவோம். தூய ஆவியாரின் துணையோடு நிச்சயமாக எத்தனை எதிர்ப்புகளும் இன்னல்களும் தடைகளும் வந்தாலும் திருத்தூதர் களைப்போல துணிச்சலோடு இறையாட்சியின் மதிப்பீடுகளை அறிவிக்க முடியும். இறைவன் நீதியுள்ளவராக இருந்ததுபோல நாமும் நீதியுள்ளவர்களாக உருமாற முடியும். எனவே இன்றைய நாளிலே இறையாட்சியின் மதிப்பீடுகளை மிகத் துணிச்சலோடு சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்தி தூய ஆவினுடைய வழிநடத்தலில் செய்ய இறையருளை வேண்டுவோம்.

இறைவேண்டல் : வல்லமையுள்ள இறைவா! நீர் இவ்வுலகத்திற்கு கொண்டுவந்த இறையாட்சியை நாங்கள் வாழ்வாக்கி, பிறரும் வாழ்வாக்க தூண்டும் ஒரு கருவிகளாகப் பயன்பட தூய ஆவியின் ஆற்றலை தரும். ஆமென்.


A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com