மறையுரைச் சிந்தனைத் தொகுப்பு

Tamil Sunday Homily collection..

பொதுக்காலம் 14-ஆம்‌ ஞாயிறு
முதலாம் ஆண்டு


இன்றைய வாசகங்கள்:-
செக்கரியா 9: 9-10 | உரோமையர் 8: 9, 11-13 | மத்தேயு 11: 25-30

ser

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 520 ஆண்டுகளுக்கு முன் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து திரும்பி இஸ்ரயேல் நாட்டுக்குள் புகுந்த மக்களோடு வந்த இறைவாக்கினரில் செக்கரியா என்பவரும் ஒருவர் செக்கரியா என்பதற்கு ஆண்டவர் நினைவுகூர்ந்தார் என்பது பொருள் நாடு திரும்பிய மக்கள் முன்னால் காட்சி அளித்ததெல்லாம் அவர்களது விழுந்து கிடந்த நகரங்களும் அவர்களது பெருமையின் சின்னமாக விளங்க வேண்டிய யெருசலேம் ஆலயமும்தான் மக்களின் மனதை அவநம்பிக்கையும் அச்சமும் ஆட்கொள்ளத் தொடங்கின. அந்த நேரத்தில்தான் இறைவாக்கினர் செக்கரியா இஸ்ரயேல் மக்களைப் பாரத்து, “மக்களே! உங்களுக்கு நீதியையும் வெற்றியையும் சமாதானத்தையும் அளிக்க அரசர் ஒருவர் வருவார்” என்றார் இதைத்தான் முதல் வாசகம் குறிப்பிடுகிறது.

அறிவிக்கப்பட்ட அரசருக்காக இஸ்ரயேல் நாடு காத்திருந்தது! ஆண்டுகள் மறைந்தன!... ஆண்டவர் பிறந்தார் வளர்பிறைபோல் வளந்தார்! 30 ஆண்டுகள் மறைந்து இருந்தவர் ஒரு நாள் அவர் செக்கரியா முன்னுரைத்த அரசர் நானே என்பதைச் சுட்டிக்காட்ட எளிமையின் மறு உருவாய் வாழ்ந்து மக்களைப் பார்த்து: பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாற்றுதல் தருவேன் உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும் (மத் 11:28-29) என்றார் இந்த உண்மையைத்தான் நற்செய்தி சுட்டிக்‌காட்டுகிறது!

உலகம் தேடுகின்ற நீதியையும் வெற்றியையும் அமைதியையும் இளைப்பாற்றியையும் ஆண்டவர் இயேசு நமக்கு எப்படித் தருகிறார் என்பதற்கு இரண்டாம் வாசகம் பதில் கூறுகின்றது. ஒருவர் தன் இதயத்தில் வாழுகின்ற கிறிஸ்துவின் ஆவியினால் இயக்கப்பட்டு, அந்த ஆவியின் வழி நடந்தால் (கலா.5:22-25) அவர் தேடும் அனைத்தையும் பெறுவார் என்கிறார் புனித பவுல்

கிறிஸ்துவின் ஆவியின் வழியில் வாழ முன் வருகின்றவர்கள் இயேசு வாக்களித்த இளைப்பாற்றியை அடைவர் என்பதற்கு இதோ ஒரு சான்று.

அவர் பெயர் நிக்கி க்ரூஸ் புபெடோ ரிக்கோவைச் சேர்ந்தவர் அவர் வீட்டில் 17 உறுப்பினர்கள் நியூயார்க் நகருக்கு வேலை தேடிச் சென்றார் அங்கே என்ன நடந்தது என்பதை அவர் எழுதிய ஓடு பாப்பா ஓடு (Run Baby Run) என்னும் புத்தகத்தில் விளக்குகின்றார் வேலை கிடைக்கவில்லை. ப்ரூக்ளின் நகரின் தெருக்களில் கொள்ளையடிக்கும் கூட்டம் ஒன்றில் சேர்ந்தார் நிக்கி க்ரூஸ் பின் கூட்டத்தின் தலைவனானார் அவர் செய்யாத பாவம் இல்லை என்று சொல்லலாம் அன்று அவரிடம் வேண்டிய அளவு பணமிருந்தது!
ஆனால் அவர்‌  இதயத்திலிருந்த அமைதியை அவர் இழந்துவிட்டார்‌!

ஒரு நாள் ஒரு செபக் கூட்டத்திற்குள் வேடிக்கைப் பார்ப்பதற்காக அந்த கொள்ளைக்காரர் நுழைந்தார்!கல்வாரியில் கள்வனை மனம் மாற்றிய கர்த்தர் அவருக்காக அங்கே
காத்திருந்தார்

அங்கே அதுவரை அவன் வாழ்க்கையில் அனுபவிக்காத நிகழ்ச்சி ஒன்று நடந்தது! இயேசுவின் ஆவி அவன் உள்ளத்தைக் கிள்ளினார்!அப்போது அவன் ஏதேதோ பேச நினைத்தான் ஆனால் பேசமுடியவில்லை. தான் பேச நினைத்ததைத் தனது புத்தகத்திலே எழுதியுள்ளார் என் இறைவா, நீ என்னை அன்பு செய்தால் என் வாழ்க்கையில் இன்று குறுக்கிடும் நான் ஓடிக் களைத்துவிட்டேன் நான் ஓடியது போதும் என்னை மாற்றும் என்னை தயவுசெய்து மாற்றும் - இதுதான் அவன் சொல்ல நினைத்தது!

அவர் செபம் கேட்கப்பட்டது. அதன் பிறகு அவர் அந்த செபக் கூட்டத்தில் கேட்ட முதல் இறைவார்த்தை: ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார் (2 கொரி. 5:17) என்பதாகும்

அவர் ஆன்மாவிற்கு ஆறுதல் கிடைத்தது, இளைப்பாற்றி கிடைத்தது! உள்ளம் தெளிய உடலும் தெளிந்தது! இன்று நற்செய்தியாளராகப் பணியாற்றி எண்ணற்ற இளைஞர்களின்‌
வாழ்க்கையில் விளக்கேற்றிக் கொண்டிருக்கிறார் நிக்கி க்ரூஸ்

நம் இறைவன் நமக்கு என்றுமே ஆறுதல் அளிக்கும் இறைவன்

ser ser

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும்
என்னிடம் வாருங்கள்

மகன் ஒருவன் அவனுடைய தகப்பனை அடியோடு வெறுத்தான் வயதான காலம்!தந்தை திண்ணையில் படுத்திருந்தார் உன்னால் இந்த வீட்டிற்கு என்ன நன்மை? செத்துத் தொலைய வேண்டியதுதானே! “ஏன் என் உயிரை வாங்குறே! என்றான் மகன்

ஒரு நாள் சவப்‌பெட்டியோடு தகப்பன் முன்னால் வந்து நின்றான் மகன் !தகப்பனைப் பார்த்து, இந்தச் சவப்‌பட்டிக்குள் படு என்றான் தகப்பன் மகனின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட சவப்பெட்டிக்குள் படுத்துக்கொண்டார் அப்பெட்டியை அந்த மகன் ஓர் உயரமான மலை உச்சிக்குக் கொண்டு சென்றான் மலை உச்சியை அடைந்த போது, மகன் செத்துத் தொலை என்று சொல்லிக்கொண்டு சவப்பெட்டியை உருட்டிவிடப் போனான்

அப்போது பெட்டிக்குள்ளேயிருந்த தகப்பன் பட்டியின் மேல்பகுதியைத் தட்டினார் எதையோ சொல்ல மறந்துவிட்டார் போலும் என்று நினைத்து பெட்டியைத் திறந்தான் மகன்‌!

அப்போது அந்தத் தந்தை, மகனே! இந்தப் பெட்டி அழகாக இருக்கின்றது! இதை ஏன் வீணாக்குகின்றாய்‌? நானே குதித்து
 செத்துவிடுகின்றேன் என்றார் தகப்பன் என்ன சொல்ல விரும்புகின்றார் என்பதை மகன் புரிந்துகொண்டான்‌!

உடனே தந்தையின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்!அப்பா! ஒருவரின் சுமையை இன்னொருவர் சுமக்க மறுத்தால் யாருமே இந்த உலகில் நிம்மதியாக வாழமுடியாது! வாங்க வீட்டுக்குப் போவோம் என்றான் மகன்

நம்மைச் சுற்றியுள்ளவர்களின் சுமையைச் சுமக்க நாம் முன்வந்தால்தான் மற்றவர்களால் சுகமாக வாழமுடியும்   இது ஆண்டவர் இயேசுவுக்கு நன்றாகத் தெரியும்!இதனால்தான் இன்று உலக மக்களைப் பார்த்து, பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் [மத் 11: 28) என்கின்றார்

சில சுமைகளை நாமே இறக்கிவைத்துவிடலாம்!சில சுமைகளை மற்றவர்களின் உதவியோடு இறக்கிவைத்துவிடலாம்!சில பெருஞ்சுமைகளை கடவுளால் ஆண்டவர் இயேசுவால் மட்டுமே இறக்கிவைக்கமுழியும்‌!

சுமை என்றால் துன்பம்‌!
சுமை என்றால் துயரம்‌!
சுமை என்றால் இழப்பு!
சுமை என்றால் ஏமாற்றம்‌!

தங்கள் இல்லத்திலிருந்த, உள்ளத்திலிருந்த, பெருஞ்சுமைகளையல்லாம் இறக்கிவைக்க முடியாமல் மக்கள் தவித்த போது அவர்களின் சுமைகளையெல்லாம் இறக்கி வைத்தார் இயேசு.
இதோ சில உதாரணங்கள்‌:

யோவா 2: 1-11 இங்கே இயேசு தாகரமெனும் சுமையை இறக்கிவைக்கின்றார்
யோவா 6: 1-13 இங்கே இயேசு பசியன்னும் சுமையை இறக்கிவைக்கின்றார்
லூக் 17: 11-19 இங்கே இயேசு நோரயன்னும் சுமையை இறக்கிவைக்கின்றார்
லூக் 19: 1-10 இங்கே இயேசு பாவிமனும் சுமையை இறக்கிவைக்கின்றார்
லூக் 7: 01-15 இங்கே இயேசு மரணரமனும் சுமையை இறக்கிவைக்கின்றார் .
திப 2: 1-13 இங்கே இயேசு பயமெனும் சுமையை இறக்கிலைக்கின்றார்

ஆக, இயேசுவின் திருவழகளில் சரணாகதி அடைகின்றவர்கள் சுமைகளிலிருந்து விடுதலை அடைந்து சுதந்தரக் காற்றைச் சுவாசிப்பார்கள்

இயேசு நீதி நிறைந்தவர் (முதல் வாசகம்‌) அவரவர்க்கு உரியதை அவரவர்க்குத் தவறாமல் தந்துவிடுவார் விண் மண் நீர் நெருப்பு, காற்று அனைத்தையும் அவர் கட்டுக்குள் கொண்டுவந்து, மகிழ்ச்சி தரும் அற்புதக் கருவிகளாக மாற்றுவார்

நாம் இறந்தால் கூட, இயேசு நம்முள்ளே வாழுகின்ற தூய ஆவியார் (இரண்டாம் வாசகம்‌) வழியாக சாவுக்குரிய நமது உடலை உயிர்த்தெழச்செய்து நம்மை வாழ்வாங்கு வாழவைப்பார்

ஆகவே, நமது நம்பிக்கை நிறைந்த கண்களை ஆற்றலும் அன்பும் மிக்க இயேசுவின் பக்கம் திரும்புவோம்

மேலும் அறிவோம் :

தனக்குவமை கல்லாதான் தாள்சேர்ந்தார்க்‌(கு) அல்லால்‌
மனக்கவலை மாற்றல் அரிது (குறள்: 7).

பொருள் : தன்னிகரற்ற அருளாளனாகிய இறைவன் திருவடி சேர்வோர் உள்ளத்தில் துன்ப துயரங்கள் நீங்கிவிடும் ஏனையோர் மனக்கவலை மாறாது.

ser ser

ஆற்றங்கரையில் இருந்த தேள் ஒரு தவளையிடம், "எனக்கு நீந்தத் தெரியாது, என்னை உன் முதுகில் ஏற்றி ஆற்றின் மறு கரைக்குக் கொண்டு செல்" என்று கேட்டது. அதற்குத் தவளை தேளிடம், "நான் உன்னை என் முதுகில் ஏற்றிக்கொண்டு ஆற்றில் நீந்தும்போது பாதி வழியில் என்னைக் கொட்டிவிடுவாய்" என்றது. ஆனால் தேள் தவளையை அவ்வாறு கொட்டமாட்டேன் என்று சத்தியம் செய்ததன் பேரில், தவளை தேளைத் தன் முதுகில் ஏற்றி ஆற்றில் நீந்தியபோது நடு ஆற்றில் தேள் தவளையைக் கொட்டிவிட்டது. "சத்திய வாக்கை மீறி நீ என்னைக் கொட்டினாய்?" என்று தவளை தேளைக் கேட்டதற்குத் தேள் கூறியது: "நான் என்ன செய்வது? என் இயல்பை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லையோ!"

நாம் நமது இயல்பை மாற்ற முடியவில்லை. சென்மப் புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது என்பது பழமொழி. ஆனால் இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கூறுகிறார்: "நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள். ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால் நீங்கள் வாழ்வீர்கள்" (உரோ 8:13), ஊன் இயல்பின் செயல்களில் ஒன்று: சீற்றம். அதாவது கோபம் (கலா 5:21). தூய ஆவியின் கனிகளில் ஒன்று: பொறுமை, அதாவது சாந்தம் (கலா 5:22). ஊன் இயல்பின் செயலாகிய கோபத்தைக் குழிதோண்டி புதைத்து விட்டு, ஆவியின் செயலாகிய பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சினத்தை நாம் அடக்காவிட்டால் சினம் நம்மை அடக்கம் செய்துவிடும் என்று எச்சரிக்கின்றார் வள்ளுவர்,

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க, காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் (குறள் 305)

இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து தன் இயல்பைப் பற்றிக் கூறுகிறார்: "நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்" (மத் 11:29). கிறிஸ்துவின் தனிச்சிறப்புப் பண்புகள் கனிவும் மனத்தாழ்மையும், அதாவது, சாந்தமும் மனத்தாழ்ச்சியும், இவையே கடவுளின் தனிப் பண்புகள் என்று கூறுகிறது இன்றைய பதிலுரைப் பாடல்: "ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்" (திபா 145:8),

இன்றைய முதல் வாசகத்தின் சுருக்கம்: மெசியா சாந்தமுள்ளவராய்க் கழுதைக் குட்டியின்மேல் ஏறி அமைதியின் மன்னராக எருசலேில் நுழைவார் (செக் 95-10), செக்கரியாவின் இந்த "இறைவாக்கைக் கிறிஸ்து குருத்து ஞாயிறு அன்று நிறைவேற்றினார்‌" (மத் 21:1-5).

கிறிஸ்துவைப் பின்பற்றி நாமும் சாந்தம் உள்ளவராக வாழ இன்றைய அருள்வாக்கு வழிபாடு நம்மை அன்புடன் அழைக்கிறது. சாந்தம் உள்ளவர்கள் தான் கனிவுடையோர் (மத் 5:5) அவர்கள்தான் அனாவிம் னன அழைக்கப்படும் இறைவனின் ஏழைகள்‌; இவர்களே நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் இவர்களில் முதல் இடம் வகிப்பவர் கிறிஸ்து. அவர் சிலுவைச் சாவை எற்கும் அனவக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழத்தினார் (பிலி 2:8)

இரண்டு பேர் கிணற்றில் குதித்தனர் அவர்களில் ஒருவர் தண்ணீரில் செத்தார் ஏனெனில் அவர் தலைக்கனம் பிடித்தவர் மற்றவர் தண்ணீர் மூழ்கால் மிதக்கின்றார்‌; ஏனெனில் அவர் மண்டை அவ்வாறே கிறிஸ்துவின் சீடர்களில் ஒரு சிலர் தலைக்கனம் பிடித்தவர்கள் முதலிடத்திற்காகரச் சண்டை போட்டனர் வெறு சிலர் கிறிஸ்துவின் போதனையை புரிந்துகொள்ள முடியாத, மந்தல் புத்தியுள்ள மரமண்டைகளாய்த் திகழ்ந்தனர். இந்திலையில் கிறிஸ்து அவர்களுக்குச் செய்முறை விளக்கம் கொடுத்தார். அவர்களுடைய காலடிகளைக் கழுவித் துடைக்தபின் அவர்களிடம், "நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்‌” (யோவா 13:18) என்றார்

கிறிஸ்து செய்தது ஓர் அடிமையின் வேலை, பிறகுடைய பாதங்களைக் கழுவும் அளவுக்கு நாம் நம்மைத் தாழ்த்த வேண்டும் "ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள்‌” (கலா 5:13) என்று திருத்தூதர் பவுல் நமக்கு அறிவறுத்துகிறார். "அடியார்க்கு அடியார் ” என்று திருத்தந்தை கையொப்பமிடுகிறார்.

ஒரு தாய் தனது எழு வயது மகனைக் கடைக்குக் கூட்டச் சென்று தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையை வாங்கிக் கொடுத்தார் இப்போது அவன் அம்மாவிடம் "இது வேண்டாம்‌: அதுதான் நீ சொல்வதெற்கெல்லாம் தலை ஆட்ட வீட்டில் அப்பா இருக்கிறார். வேறு எதாவது உருப்படியாக வாங்கக் கொடு” என்றான்

பெரியவர்கள் சொல்வதற்கெல்லால் தலையை ஆட்டும் கீழ்ப்படிதல் முறையானது அல்ல, தமது கீழ்ப்படிதல் அறிவு சார்ந்த கீழ்ப்பதலாகவும் அதே நோத்தில் விசுவாசக் கீழ்ப்படிதலாகவும் இருக்கு வேண்டும் மரியா கன்னியாய் இருந்துகொண்டே மீட்பரின் தாயாக வேண்டும் என்று வானதூதர் கூறியபோது. "இது எப்படி நிகழும்‌?" நான் கன்னி ஆயிற்றே” (லூக் 1:24) என்று கேள்வி கேட்டார் வானதூதர் உரிய வணக்கம் கொடுத்த பின்னைரே, "நான் ஆண்டவருடைவ அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்‌” (லூக் 1:38) என்றார்‌

கடவுள் தம்மை ஞானிகளுக்கு வெளிப்படுத்தாமல் குழந்தைகளுக்கு வெளிப்படுத்துவதாக இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுகிறார் (மத் 13:25). குழந்தைகளிடத்தில் இறுமாப்பு,
செருக்கு இல்லை. "ஆண்டவரே என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை. தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது" (திபா 131:1-2)

குழந்தைகளின் உள்ளத்துடன் இறுமாப்பின்றி இருக்கும் போது, கிறிஸ்து நமது சுமைகளை எளிதாக்குவார் அவரது நுகம் அழுத்தாது: அவரது சுமை எளிது (மத் 11.30)

ser ser

இளைப்பாறுதல் தரும் இயேசு

நிகழ்வு

ஜெசி, மெர்சி என்று தோழிகள் இருவர் இருந்தனர். இருவரும் சிறுவயதிலிருந்தே அவ்வளவு நெருக்கம்; ஒரே பள்ளிக்கூடத்தில்தான் படித்தார்கள்; ஒரே ஊரில்தான் திருமணமும் செய்துகொண்டார்கள். திருமணத்திற்குப் பிறகு இருவடைய வாழ்க்கையும் மாறிப்போனது. ஜெசி சாதாரண குடும்பத்தில் வாக்கப்பட்டாலும், அவளுடைய கணவர் அவளை நல்லமுறையில் பார்த்துக்கொண்டார். மெர்சி வசதியான குடும்பத்தில் வாக்கப்பட்டாள். ஆனால், அவளுடைய கணவர் கொஞ்சம் ஊதாரியாக இருந்தார். இதனால் மெர்சி தன்னுடைய தோழி ஜெசியிடம் எப்பொழுதும் தன்னுடைய கணவரைப் பற்றிப் புலம்பத் தொடங்கினாள். தொடக்கத்தில் தன்னுடைய கணவரைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருந்த மெர்சி, பின்னர் சிறு சிறு பிரச்சனைகளையெல்லாம் அவளிடம் சொல்லிப் புலம்பத் தொடங்கினாள். இதனாலேயே மெர்சியின் வாழ்க்கை நிம்மதியில்லாமல் போனது.

இப்படி இருக்கையில், ஒருநாள் ஜெசி தன்னுடைய தோழி மெர்சியைப் பார்த்தபொழுது மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்பட்டாள். அவளைப் அப்படிப் பார்த்து நீண்ட நாள்கள் ஆகியிருந்தன. அதனால் ஜெசி, மெர்சியிடம், “உனக்கு என்னாயிற்று...? இன்றைக்கு இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றாயே!” என்றார்.

உடனே மெர்சி அவளிடம், “நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன். அந்தக் கனவில் எல்லாரும் ஒரு நீண்ட சாலையில் தங்களுடைய சுமைகளை எல்லாம் மூட்டையாகக் கட்டி, சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு சென்றார்கள். நானும் என்னுடைய சுமைகளைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு சென்றேன். திடீரென்று எனக்கு முன்பாக இயேசு வந்து நின்றார். அவரிடம் நான், ‘இயேசுவே! என்னுடைய சுமையெல்லாம் இறக்கி வைத்து விட்டு, எனக்கு இளைப்பாறுதல் தாரும்’ என்றேன். அவரோ, ‘நீ சுமந்துகொண்டிருப்பதோ சாத்தானின் சுமை. அதையெல்லாம் என்னால் இறக்கி வைக்க முடியாது. நீதான் அதைத் தூக்கிக் கீழே போடவேண்டும். முதலில் சாத்தானின் சுமையைக் கீழே தூக்கி எறி. அப்பொழுது நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்’ என்று சொல்லிவிட்டு மறைந்து போனார்.

நான் தூக்கத்திலிருந்து எழுந்தபொழுது, இத்தனை நாள்களும் நான் சாத்தானின் சுமையைத்தான் சுமந்து கொண்டிருந்திருக்கிறேன்; இயேசுவின் சுமையை அல்ல என்ற உண்மை விளங்கியது. அதனால் நான் சாத்தானின் சுமையைத் தூக்கி எறிந்துவிட்டு, இயேசுவின் சுமையைச் சுமந்துகொண்டேன். அதனால்தான் நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்” என்றாள்.

ஆம். பல நேரங்களில் நாம் சுமைகள் என்று தூக்கச் சுமக்கின்ற சுமைகள் யாரும் சாத்தான் தருகின்ற சுமைகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொதுக்காலத்தின் பதினான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, இயேசு தரும் சுமையை அல்லது இயேசு தரும் இளைப்பாறுதலைப் பெற நாம் என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சுமைகளால் பாழாகும் மனித வாழ்க்கை

மனிதர்களாகிய நாம் இன்றைக்குப் பலவிதமான சுமைகளைத் தூக்கிக்கொண்டு அலைகின்றோம். இதனால் நம்முடைய வாழ்க்கையே பாழாகி, நிம்மதியில்லாமல் போய்விடுகின்றது. ஒவ்வொருநாளும் நாம் சுமக்கக்கூடிய சுமைகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, சாத்தான் நம்மீது சுமத்தக்கூடிய சுமை. இதனை நாம் பார்த்த மேலே பார்த்த சுமையோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். பலநேரங்களில் நாம் கடந்த காலத்தைக் குறித்த கவலை... எதிர்காலத்தைக் குறித்த அச்சம்... இப்படித் தேவையில்லாதவற்றை எல்லாம் சுமையாகச் சுமந்துகொண்டு அலைகின்றோம். என்றைக்கு நாம் அதைத் தேவையில்லாத சுமை என்றும், சாத்தனுடைய சுமை என்றும் உணர்கின்றோமோ, அன்றைக்கு நாம் அதை உதறித் தள்ளிவிட்டுவிட்டு, மகிழ்ச்சியாக வாழலாம்.

நாம் சுமக்கக்கூடிய இரண்டாவது சுமை, நமக்கு மேலே அதிகாரத்தில் உள்ளவர்கள் நம்மீது சுமத்தக்கூடிய சுமை. இயேசுவின் காலத்தில் வாழ்ந்து வந்த சாதாரண மக்கள்மீது அதிகாரத்தில் இருந்த பரிசேயர்கள் ‘சட்டம்’ என்ற சுமக்க முடியாத சுமைகளைச் சுமத்தினார்கள் (மத் 23: 1-4). அதனால் மக்கள் மிகவும் துன்பப்பட்டார்கள். இன்றைக்கும் கூட நம்மை ஆளக்கூடியவர்கள் தேவையில்லாதையெல்லாம் நம்மீது சுமத்திக்கொண்டிருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் நாம் ஓர் அமைப்பாகத் திரண்டு எழுகின்றபொழுது, அப்புறப்படுத்த முடியும் என்பது உறுதி. நாம் சுமக்கக்கூடிய மூன்றாவது சுமை, இயேசுவின் சுமை; ஆனால், இதை நாம் சுமை என்று சொல்வதை விடவும் சுகமான சுமை அல்லது இளைப்பாறுதல் என்று சொல்வதே சிறந்தது.

இயேசுவின் சுமை எத்தகையது?

இயேசு தரும் சுமையைச் சுமக்க அல்லது அவர் தரும் இளைப்பாறுதலைப் பெற, நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னால், அச்சுமை எத்தகையது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்வது நல்லது.

இயேசு தரும் சுமை அல்லது இளைபாறுதல் என்பது துன்பமே இல்லாத வாழ்வு கிடையாது. மாறாகத் துன்பங்களை துணிவோடு தாங்கிக்கொள்ளக்கூடியது. மேலும் இத்தகைய இளைப்பாறுதல் நாம் இயேசுவிடம் விளங்கும் கனிவு, மனத்தாழ்மை, இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கக்கூடிய நீதி, எளிமை ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதால் வரக்கூடியது. இன்றைக்கு ஒருசில போலிப் போதகர்கள் ‘என்னிடம் வந்தால் நிம்மதி கிடைக்கும்’, ‘மகிழ்ச்சியான வாழ்க்கை கிடைக்கும்’ என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள். இயேசு அப்படிப் போலியான அறிவிப்பைக் கொடுக்கவில்லை. மாறாக, கனிவின் வழியாக, மனத்தாழ்மையின் வழியாகக் கிடைக்கின்ற இளைப்பாறுதலைத் தருவதாகக் கூறுகின்றார்.

இயேசு அளிக்கும் இறைப்பாறுதலைப் பெற என்ன செய்வது?

இயேசு தருகின்ற இளைப்பாறுதல், இந்த உலகம் தருகின்ற இளைப்பாறுதலைப் போன்றது அல்ல, அது கனிவின் வழியாக, மனத்தாழ்மையின் வழியாகக் கிடைக்கக்கூடாது என்று பார்த்தோம். இத்தகைய இளைபாறுதலைப் பெற ஒருவர் என்ன செய்யவேண்டும் என்கின்ற கேள்வி எழுகின்றது.

இன்றைய நற்செய்தியின் தொடக்கத்தில் இயேசு, “...ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்” என்று தந்தையைப் போற்றிப் புகழ்வார். ஆம், கடவுளின் வெளிப்பாடு மட்டுமல்ல, அவர் தருகின்ற இளைபாறுதலும் குழந்தைகளுக்கும், குழந்தை உள்ளம் கொண்டுவர்களுக்கும் மட்டுமே கிடைக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் குழந்தையின் உள்ளம் கொண்டிருப்பவரிடமே கனிவும் மனத்தாழ்மையும் குடிகொண்டு இருக்கின்றன. அப்படியானால், நாம் இயேசு தருகின்ற இளைப்பாறுதலைப் பெற, நம்மிடம் இருக்கின்ற ஆணவத்தை அகற்றிவிட்டு, மனத்தாழ்மைமையோடு வாழ்வது இன்றியமையாதது. ஆகையால், நாம் இயேசு தருகின்ற இளைப்பாறுதலை, அவர் தருகின்ற சுகமான சுமையைப் பெற மனத்தாழ்மையோடும் தாழ்ச்சியோடும் வாழக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனை

‘இறைவனை அடைய ஒரே பாதைதான் உண்டு. அதுதான் தாழ்ச்சி. மற்ற பாதைகள் வேறிடங்களுக்குக் கொண்டுபோய் விடும்’ என்பார் பாய்லியோ என்ற சிந்தனையாளர். ஆகையால், நாம் இறைவனையும் அவர் அளிக்கும் இளைப்பாறுதலையும் பெற, மனத்தாழ்மையோடும் கனிவோடும் வாழப் பழகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

ser ser

கழுதையும் குதிரையும்

'பனையன் மகனே பனையன் மகனே

பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே

தினையின் அளவே பிறவுயிர் வாடினும்

துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே - நின்

பறம்பு நிலமும் படர்ந்த காடும்

தவழும் காற்றும் தழலும் வானும்

அண்டுவார் தம்மை அணைக்கும் தாய்மடி

அளவிலா அன்பைப் பொழியும் தொல்குடி'

(சு. வெங்கடேசன், வேள்பாரி, பிரிவு 111)

கடந்த வாரம், திரு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' என்னும் நூலை வாசித்தேன். வள்ளல் பாரி வசித்த பரம்பு நாட்டிற்கே சென்று, அவரோடு நேரில் வாழ்ந்த ஒரு உணர்வைத் தருகிறது இந்நூல். வாசித்து முடித்த நாள் முதல் இன்று வரை பாரியும், கபிலரும், திசைவேழரும், தேவாங்கும், பொற்சுவையும், சுகமதியும், தேக்கனும், ஆதினியும், முடியனும், உதிரனும், அங்கவையும், நீலனும், மயிலாவும், கோவனும், செம்பாவும், சூலிவேளும், தூதுவையும் அடிக்கடி கனவில் வந்துசெல்கின்றனர். 

தட்டியங்காடு என்னும் இடத்தில், சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்களுக்கும், வேள்பாரிக்கும் நடந்த போரோடும், அந்தப் போரில் பாரி அடைந்த வெற்றியோடும் நிறைவுபெறுகிறது இந்நூல்.

பாரியின் மிக முக்கிய நல்ல குணங்களில் நான் ஒன்றாக இந்நூலில் கண்டது, 'இவர் தன்னை மற்றவரில் கண்டார்.' தேரில் படர்ந்த முல்லையில், கப்பலில் துடிதுடித்த ஈங்கையனில், தனக்காக இன்னுயிர் ஈந்த பொற்சுவையில், தன்னை அண்டிவந்த பன்னிரு குடிகளில் அவன் தன்னைக் கண்டான். சேர, சோழ, பாண்டியர்களோ, 'மற்றவர்கள் தன்னைக் காண வேண்டும்' என்னும் முனைப்பில் இருந்தனர். 

மிகச் சிறிய பாரியின் குடிகள் மிகப் பெரிய மூவேந்தர்களை விரட்டியடிக்கின்றனர்.

மகாபாரதத்தில், மிகச் சிறிய பாண்டவர் குழுவினர் மிகப் பெரிய கௌரவர் குழுவினரை எதிர்கொண்டு வெற்றிகொள்கின்றனர்.

விவிலியத்தில், மிகச் சிறிய இஸ்ரயேல் மக்கள் குழு, மிகப் பெரிய பாரவோன் குழுவை வெற்றிகொள்கிறது.

சிம்சோன், மிகச் சிறிய கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு, மிகப் பெரிய பெலிஸ்தியர் குழுவை எதிர்கொள்கின்றார்.

தாவீது, மிகச் சிறிய கல் கொண்டு, மிகப் பெரிய கோலியாத்தை வெல்கின்றார்.

மொத்தத்தில், சிறியவை என்றும் சிறியவை அல்ல என்றும், அவற்றால் பெரியவற்றையும் வெல்ல முடியும் என்றும் சொல்கிறது இன்றைய இறைவாக்கு வழிபாடு.

மிக நல்ல எடுத்துக்காட்டு, கோவித்-19 என்னும் தீநுண்மி (குட்டி வைரஸ்). நம் பிரமாண்டங்களை ஒரே அடியாகக் கவிழ்த்துப் போட்டுவிட்டது இந்த நுண்மி. பெரிய கூட்டம், பெரிய திருவிழா, பெரிய விமானம், பெரிய பேருந்து, பெரிய ஓட்டல், பெரிய திருமண விழா, பெரிய கடை, பெரிய மால், பெரிய கல்லூரி, பெரிய பள்ளிக்கூடம் என நாம் பெருமைப்பட்டுக் கொண்ட அனைத்தையும், கண்ணுக்குத் தெரியாத நுண்மி புரட்டிப் போட்டுவிட்டது. ஆனாலும், நாம் மீண்டு எழுவோம். தீநுண்மி இப்போது பிரமாண்டமாய் மாறிவிட்ட நிலையில், இதையும் கவிழ்த்துப்போட ஒரு எதிர்நுண்மி விரைவில் வரும்.

பெரியவற்றை சிறியவை எதிர்கொள்தல் பற்றி நான்கு நிலைகளில் இறைவார்த்தை வழிபாடு எடுத்துரைக்கின்றது.

(அ) 'கழுதையின்மேல் வருபவர்' 'குதிரைப் படையை' அறவே ஒழித்து விடுவார் (முதல் வாசகம்).
(ஆ) 'தூய ஆவி' 'உடலின் தீச்செயலை' அழித்துவிடும் (இரண்டாம் வாசகம்).
(இ) 'மடைமை' 'கடவுளின் மறைபொருளை' உணர்ந்துகொள்ளும் (நற்செய்தி வாசகம்).
(ஈ) 'இயேசுவின் நுகம்' 'மற்ற சுமைகளை' எளிதாக்கும் (நற்செய்தி வாசகம்).

ஒவ்வொன்றாகப் புரிந்துகொள்வோம்.

(அ) கழுதையும் குதிரையும்

இன்றைய முதல் வாசகம் (காண். செக் 9:9-10) செக்கரியா இறைவாக்கினர் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'செக்கரியா' என்றால் 'ஆண்டவர் நினைவுகூர்கிறார்' என்று பொருள். இவர் ஆகாய் இறைவாக்கினரின் சமகாலத்தவர். கிமு 520க்கும் 518க்கும் இடையே எழுதப்பட்டிருக்கலாம். இந்நூலின் முதல் பகுதி (1-8) எருசலேமின் மீட்பு பற்றியும், இரண்டாம் பகுதி (9-14) மெசியாவின் வருகை பற்றியும் எடுத்துரைக்கின்றது. இன்றைய வாசகம், நூலின் இரண்டாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. சீயோனுக்கு (எருசலேம்) வரப்போகும் அரசர் பற்றி முன்னுரைக்கின்றார் செக்கரியா. மிக அழகான கான்ட்ராஸ்ட் (முரண்) உருவகத்தை இவர் பதிவு செய்கின்றார்: 'அவர் கழுதையின்மேல், குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர் ... இவர் தேர்ப்படையையும், குதிரைப் படையையும் ஒழித்துவிடுவார்.' எருசலேம் நகருக்குள் தேர்களிலும், குதிரைகளிலும் வந்த சார்கனும், நெபுகத்னேசரும் போர்களையும், கண்ணீரையும், இரத்தத்தையும் கொண்டுவந்தனர். அவர்கள் வரும்போது பெரும் ஆரவாரம் இருந்தது. எல்லாரும் பார்க்கக்கூடிய நிலையில் இருந்தது. ஆனால், வரப்போகும் அரசர் அமைதியையும், பரிவையும், இரக்கத்தையும் கொண்டு வருகிறார். அவர் வரும்போது ஆர்ப்பரிப்பவர் எவரும் இல்லை. முக்கியமற்ற, அற்பமான நிலையில் வருகிறார் அவர். ஆனால், அவரின் வருகை முந்தையை வருகையையும், அதன் விளைவுகளையும் புரட்டிப் போட்டுவிடுகிறது. முன்னவர்கள் போரைக் கொண்டுவர, இவரோ அமைதியைக் கொண்டு வருகிறார்.

(ஆ) ஆவியும் ஊனியல்பும்

உரோமையருக்கு எழுதுகின்ற திருமடலில், தூய ஆவி அருளும் வாழ்வு பற்றிய கருத்துருவைப் பகிரத் தொடங்குகின்ற பவுல், 'ஆவிக்கும்' 'உடலுக்கும்' இடையே நடைபெறுகின்ற போராட்டத்தையும், இந்த முரணில் ஆவி வெற்றிபெற வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்கின்றார். உடலின் இயல்பு நம்மை அழிக்கும் என்றும், தூய ஆவியின் இயல்பு நமக்கு வாழ்வுதரும் என்றும் சொல்கின்றார் பவுல். நாம் உடலைக் காண்பது போல ஆவியை அல்லது உள்ளத்தைக் காண இயலாது. நம் உடல் பெரியது, சிறியதாக இருக்கலாம். ஆனால், உள்ளுக்குள் இருக்கும் ஆவி அனைவருக்கும் ஒன்றுதான். உடல் நமக்கு வாழ்வு தருவதுபோல இருக்கிறது. உடலின் இயல்பு நமக்குப் புத்துயிர் தருவது போல இருக்கிறது. ஆனால், அது வாழ்வை அல்ல, இன்பத்தையே தருகிறது. இன்பம் மறையக்கூடியது. மறையாத மகிழ்ச்சியைத் தருவது தூய ஆவியின் இயல்பே. ஆக, காணக்கூடிய பெரிய உடலையும், காண இயலாத சிறிய ஆவி வெற்றிகொண்டுவிடுகிறது. அப்படி வெற்றி கொண்டால்தான் அங்கே வாழ்வு இருக்கும். 'உடல்' தனக்கு விருப்பமானதைச் செய்யும். 'ஆவி' மட்டுமே சரியானதைச் செய்யும். 

(இ) மடைமையும் ஞானமும்

இன்றைய நற்செய்தி வாசகத்தின் (காண். மத் 11:25-30), இயேசு தன் தந்தையைப் புகழ்கின்றார். எதற்காக? 'விண்ணரசின் மறைபொருளை ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தியதற்காக.' யூத மரபில், குழந்தைகள் தோரா கற்றுக்கொள்ளும் தகுதி அற்றவர்கள். இங்கே, 'குழந்தைகள்' என்பது இயேசுவின் சீடர்களை உருவகமாக அழைக்கின்றது. தங்களையே திருச்சட்டத்தின் ஞானிகளாகவும், அறிஞர்களாகவும், மேதாவிகளாகவும் கருதிய ரபிக்களுக்கும், பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும், திருச்சட்ட வல்லுநர்களுக்கும் மறைக்கப்படும் விண்ணரசின் மறைபொருள், மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களுக்கும், வரி வாங்கிக்கொண்டிருந்தவர்களுக்கும், கத்தி எடுத்து போராட விரும்பியவர்களுக்கும் வெளிப்படுத்தப்படுகிறது. அல்லது மடைமை ஞானத்தைத் தனதாக்கிக்கொள்கிறது. ஞானம் மடைமையால் வெட்கத்துக்குள்ளாகிறது. மடைமை ஞானத்தைத் தனதாக்க வேண்டுமென்றால், கடவுளின் வெளிப்பாட்டுக்குத் தன்னையே கையளிக்க வேண்டும். ஞானம் முந்திக்கொள்ளும். மடைமை காத்திருக்கும். அந்தக் காத்திருத்தலில் இறைவெளிப்பாடு நிகழும்.

(ஈ) அழுத்தாத நுகமும் அழுத்தும் சுமையும்

இயேசு ஒரு விவசாய சமூக உருவகத்தை இங்கே பயன்படுத்துகின்றார்: நுகம். வண்டியையும் அல்லது ஏரையும் மாட்டையும் இணைக்கின்ற இணைப்புக் கோடுதான் நுகம். இது மாட்டையும் அழுத்தக் கூடாது. வண்டியின் சுமையிலிருந்தும் முறிந்துவிடக் கூடாது. இயேசுவின் சமகாலத்து மக்கள் அரசியல், சமூக, சமய, மற்றும் பொருளாதார சுமைகளைத் தூக்கிக் கொண்டு நின்றனர். உரோமையின் அரசாட்சி, சமூகத்தில் ஏற்றத்தாழ்வு, ஆலய மைய வழிபாடுகள், வரிகள் என அன்றாடம் விழிபிதுங்கி நின்றனர். அவர்களிடம், 'என்னிடம் வாருங்கள்' என அழைப்பு விடுக்கின்றார் இயேசு. அவர்களின் சுமைகளை அகற்றுவதற்காக அல்ல, அவர்கள்மேல் தன் சுமையை ஏற்றுக்கொள்ள அவர்களை அழைக்கின்றார். 'ஏழைகளும் வேலைகளும் எந்நாளும் உங்களோடு இருப்பார்கள்' என்பது போல, 'சுமைகளும் நம் வாழ்வில் என்றும் இருப்பவை.' ஆகையால்தான், சுமையை அகற்றும் வாக்குறுதியை இயேசு அளிக்கவில்லை. ஆனால், இயேசு முன்மொழியும் மாற்றுச் சுமை 'எளிதாக' உள்ளது. அது 'அழுத்துவதில்லை.' இயேசுவின் நுகம் என்ன? அவரே இனிய நுகம். அவரை முழுமையாக அனுபவித்தல், அவருடைய உடனிருப்பை உணர்தல் அனைத்துமே நுகங்கள்தாம். ஆனால், அவை இனிய நுகங்கள்.

இவ்வாறாக,

சிறியவற்றைக் கொண்டு பெரியவற்றை வெல்ல முடியும் என்கிறது இறைவாக்கு வழிபாடு.

இதை நாம் நம் வாழ்வில் எப்படிச் செயல்படுத்துவது?

1. பிரமாண்டங்கள் தவிர்க்க வேண்டும் (Shun Megalomania)

நம் கண்கள் பெரும்பாலும் பிரமாண்டங்களையே தேடுகின்றன. ஆனால், பிரமாண்டங்கள் எல்லாமே ஒப்பீட்டுச் சொற்கள். எடுத்துக்காட்டாக, 'அவன் பணக்காரன்' என்கிறோம். அதில் இன்னொரு கேள்வியும் இருக்கிறது: 'யாரைவிடப் பணக்காரன்.' 'அவள் அழகானவள்' - 'யாரைவிட அழகானவள்.' 'அவர் உயரமானவர்' - 'யாரைவிட உயரமானவர்.' 'அவர் அறிவாளி' - 'யாரைவிட அறிவாளி.' இவை யாவும் ஒப்பீட்டுச் சொற்கள் என்பதை மறந்துவிட்டு, இவற்றை அளவீட்டுச் சொற்களாக நினைத்து அவற்றோடு ஒட்டிக்கொள்கின்றோம். குதிரைகளைப் பார்த்து வியக்கவும், பெரிய மற்றும் அழகான உடலை ஆராதிக்கவும், ஞானத்தைப் புகழவும், சுமைகள் சுமத்துபவர்களைப் பாராட்டவும் செய்கிறோம். கோவித்-19க்குப் பின் உள்ள நம் வாழ்வில் நாம் பிரமாண்டங்களைத் தவிர்க்க வேண்டும்.

2. அற்பத்தன்மையைக் கொண்டாடுதல் (Celebrate Your Insignificance)

நம்முடைய கழுதை நிலையை, அல்லது கழுதைமேல் வருகின்ற நிலையை, அன்றாட ஆவிக்குரிய இயல்புப் போராட்டத்தை, மடைமையை நாம் கொண்டாட வேண்டும். 'தன்னால் அன்றி இந்த உலகம் இயலாது என்று சொன்னவர்கள் எல்லாம் கல்லறைகளில்' என்பார் டால்ஸ்டாய். நம்மால் அன்றி இந்த உலகம் இயலாது என நினைத்து அல்லும் பகலும் ஆலாய்ப் பறக்கிறோம் ('ஆலா' என்பது வேகமாகப் பாய்ந்து ஓடும் பொதிவெற்பனின் குதிரை). ஆனால், நாம் இல்லாவிட்டாலும் கதிரவன் எழும். ஆக, நமக்குரிய வாழ்வியல் நோக்கத்தை, நமக்குரிய நிலையில் செயல்படுத்துவது சால்பு.

இந்த இரண்டு வாழ்வியல் பாடங்களையும் தன் வாழ்வின் இறுதியில் உணர்ந்தவர் தாவீது. ஆகையால் இவர் இப்படி அழகாகப் பாடுகிறார்:

'ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை! என் பார்வையில் செருக்கு இல்லை!
எனக்கு மிஞ்சின அரிய, பெரிய செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.
மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது.
தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது.' (திபா 133:1-2)

கழுதையாய் குழந்தையாய் மாறும் அனைவரும் கடவுளின் அன்பராய் மாறுவர்.

இன்றைய பதிலுரைப்பாடல் (திபா 145) சொல்வது போல,
'அவர்கள் என்றும் ஆண்டவரைப் போற்றுவார்கள்.'

 

ser

A Tamil Catholic website based on the scripture ACTS 4:20 to share your experience in Jesus and Mary with everyone.
anbinmadal.org | 2002-2019 | Email ID: anbinmadal at gmail.com