மனம் மாறிய மால்கு

திரு. இரான்சம் - சென்னை24

எருசலேம் நகர் தேவாலயத்தின் வளாகம் எங்கும் நறுமண புகை பரவியிருந்தது. பாஸ்கா திருவிழா காலமாதலால், வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமயிருந்தது. ஆலய வளாகத்தினுள் ஒரு மண்டப வாயிலில் கூடியிருந்த மக்களிடைய ஒரு குரல் ஒலித்தது: "வழியும் உண்மையும் வாழ்வும் நானே என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.." ஆம், நாசரேத்தூர் இளம் போதகர் இயேசு மக்கள் நடுவில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார். எல்லோரும் இயேசுவை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கூட்டத்திலிருந்த ஒரு ஆள் மட்டும் பதுங்கிப் பதுங்கி போதகரின் அருகே வர முயன்று கொண்டிருந்தான்.

அவன் பெயர் மால்கு. யூத தலைமை குருவாயிருந்த கயபாவின் ஊழியன், அவருடைய அந்தரங்க ஒற்றன். இயேசுவின் சொற்கள் அவன் மனதில் கடுப்பேற்றின. "என்னவொரு ஆணவம் இந்த மனிதனுக்கு?" என்று மனதில் எண்ணிக்கொண்டு, அடுத்து போதகர் கூறப்போகும் கருத்துகளைக் கேட்க தன் காதுகளை தீட்டிக் கொண்டான். அன்று காலையில் தான் அவனுடைய எஜமானர், தலைமை குரு கயபா, அந்த நாசரேத்து போதகரைக் குறித்து சரியாக உளவறிந்து சொல்லவில்லை என்று மால்குவை கடிந்து கொண்டார். அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிராக இயேசு ஏதாவது கூறினால், அதை அப்படியே தன் எஜமானருககு சொல்ல வேண்டும் என்பதால், போதகரின் வார்த்தைகளை நன்றாக கேட்பதற்கு, கூட்டத்தை இடித்துக் மனம் மாறிய மால்கு கொண்டு முன்னே சென்றான். கயபா அடிக்கடி செல்வார் "மால்கு, நீ தான் என்னுடைய செவி. ஆகவே உன் செவியில் விழும் செய்திகள் உள்ளது உள்ளபடி என்னிடம் சொல்லவேண்டும்..."

இயேசு தொடர்ந்து பேசினார் "பெருஞ்சுமை சுமந்து சேர்ந்திருப்பவர்களே, எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்... ஆம், என் நுகம் அழுத்தாது, என் சுமை எளிதாயுள்ளது." மால்கு நிமிர்ந்து பார்த்தான். செருக்கும் தற்பெருமையும் கண்ட தலமை குருவோடு நாள்தோறும் பழகிய மால்கு வியப்படைந்தான். "இது என்ன? சற்று முன் கர்வத்தோடு பேசிய இந்த போதகரின் பேச்சில் இப்போது மென்மையும் பணிவும் தெரிகிறதே!" மீண்டும் இயேசுவின் குரல் மால்குவின் காதுகளில் ஒலித்தது. "உங்களுள் பெரியவராய் இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும், உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் அனைவருக்கும் பணியாளனாக இருக்கட்டும்... ஏனெனில் மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரை கொடுப்பதற்கும் வந்தார்.." மால்கு சற்று யோசித்தான். புதுமையான போதனை... புதியதொரு சிந்தனை...

தலைமைகுருவின் ஊழியனுக்கு இயேசுவின் சொற்கள் திகைப்பூட்டின. இந்த போதகர் தன்னை ஒரு எதிர்கால சர்வாதிகாரியாக அல்லாமல், சாதாரண தொண்டனாகவே காண்கிறார்... ஆஹா.. கயபாவுக்கும் இவருக்கும் எவ்வளவு வேறுபாடு?... தன் யோசனையை நிறுத்திவிட்டு, போதகரை சுற்றி நின்ற சீடர்களை மால்கு கவனத்தோடு உற்று பார்த்தான். துணிவும் குழப்பமும் கலந்த உணர்ச்சிகளின் போரட்டத்தைக் கண்களில் தேக்கியிருந்த ஒரு சீடனை அணுகி, தோழமை உணர்வோடு அவனிடம் உரையாடத் தொடங்கினன். அந்த சீடனின் பெயர் யூதாஸ் என்று தெரிந்து கொண்ட பிறகு, மெதுவாக அவனைத் தனியே அழைத்துச் சென்று பேசினான். அடுத்த இரண்டாவது நாள் தலைமை குருவோடு கலந்து பேசுவதற்கான ரகசிய சந்திப்பிற்கு யூதாஸை மால்கு கூட்டிச் சென்றான்.

கதிரவன் மறைந்து வெகுநேரமாயிற்று. அந்த இரவு, ஆண்டவரின் பாஸ்கா இரவு. இரண்டாம் சமத்தில் குருக்களும் மூப்பர்களும் படைவீரர்களும் அடங்கிய ஒரு கூட்டம் கெத்சமனி தோட்டத்தில் நுழைந்தது, அந்தக் கூட்டத்தில் யூதாசும் மால்குவும் இருந்தனர். அந்தக் கூட்டத்தின் முன்னால் இயேசு வந்து நின்றார். கூட்டத்திலிருந்து முன்னே வந்த யூதாஸ், இயேசுவின் அருகே சென்று "ரபி" என்று கூறிக் கொண்டே அவரை முத்தமிட்டான். படைவீரர்கள் இயேசுவை கைது செய்ய நெருங்கி வந்தார்கள். அப்போது இயேசுவின் சீடர்களில் ஒருவர் சட்டென வாளை உருவி தலைமை குருவின் ஊழியனைத் தாக்கி அவனுடைய வலது காதை வெட்டினார். தாக்கப்பட்ட மால்குவின் தலையிலிருந்து இரத்தம் வழிந்தது. காது மடல் துண்டிக்கப்பட்டு தனியாகத் தொங்கியது. வலி தாங்காமல் கதறிய மால்கு, காயத்தை கைகளால் மூடிக் கொண்டான். அவன் கால்கள் சரிந்தன. கழுத்தில் வழிந்த இரத்தம் அவனது மேலாடையை நனைத்தது. கீழே விழுந்த மால்குவின் கண்பார்வை மங்கிற்று. திடீரென தன் தலயருகே ஒரு வெதுவெதுப்பை மால்கு உணர்ந்தான். வலி மறைந்து, உடலில் புத்துணர்ச்சியும் புதிய வலிமையும் ஏற்பட்டதாக உணர்ந்த மால்கு, கண் திறந்து பார்த்தான். தன் முன்னே இயேசு மண்டியிட்டிருப்பது தீப்பந்தங்களின் ஒளியில் தெரிந்தது. இயேசுவின் கரம் ஒன்று மால்குவின் தலையில் காயத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது. அவருடைய கனிவான கண்கள் மால்குவின் உள்ளத்தை ஊடுருவிச் சென்றன. அந்தக் கண்களின் அன்பும் கருணையும் மால்குவின் உள்ளத்திலிருந்த தீய எண்ணங்களயும் பகைமைணர்வையும் பெசுக்கிவிட்டன. இயேசு கனிவோடு சொன்னார் "இனி நீ முற்றிலும் நலமடைவாய்..".

அருகில் நின்றிருந்த படைவீரர்கள் இருவர் இயேசுவைத் தூக்கி நிறுத்தினார்கள். மற்ற இரண்டு வீரர்கள் அவரை கயிறுகளால் கட்டிபிணைத்தார்கள். மூப்பர்களின் அதிகாரதெனியும், படைவீரர்களின் காலணி சத்தமும், பலருடைய பேச்சுக்குரல்களும் அங்கே ஒரு குழப்பமான சூழலைக் காட்டின. கண்களில் மிரட்சியும் மனதில் திகிலும் நிறைந்திருக்க, மால்கு தன் கைகளை காயம் பட்ட இடத்தில் வைத்தான். அங்கே காதுமடல் எந்த சதமுமின்றி முழுமையாக இருந்தது. இரத்தம் வழிவதும் நின்றிருந்தது. வலி கொஞ்சமும் இல்லை. அவனுடைய மேலாடையிலிருந்த இரத்தக்கறை மட்டுமே காயத்தின் ஒரே சாட்சியாக இருந்தது. மால்கு தள்ளாடி எழுந்து நின்றபோது, இயேசுவை கைது செய்த கூட்டம் தோட்டத்தை விட்டு வெளியே போய்க் கொண்டிருந்தது .

இயேசுவின் சீடர்களும் அங்கிருந்து வெளியேறியிருந்தார்கள். தனியாக நின்றிருந்த மால்கு மெதுவாக நடந்து, ஒரு ஒலிவமரத்தின் அடியில் சாய்ந்து அமர்ந்தான். மால்குவின் மனதில் தலைமை குருவின் வார்த்தைகள் ஒலித்தன. "மால்கு, நீ தான் என்னுடைய செவி..." இங்கு நடந்தவற்றை எல்லாம் உடனே தன் எஜமானருக்கு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றினலும், அவனால் அதை செயல்படுத்த முடியவில்ல. தன் எஜமானரின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வம் அவனிடமிருந்து மறைந்து போயிற்று. அவனுடைய உள்ளத்தைத் துளைத்த இயேசுவின் கனிவான கண்களயும், அவன் தலையைத் தொட்டுத் தடவிய அன்புக் கரங்களையும் அவனால் மறக்க முடியவில்லை. தனக்கு எதிராக சதி செய்த ஒரு தீயவனின் மேல் அந்த போதகர் காட்டிய கருணை ஒப்பற்றது... வெகுநேரம் யோசித்துக் கொண்டிருந்த மால்கு, மெதுவாக எழுந்து நகரத்தை நோக்கி நடந்தான். இந்நேரம், தலைமைகுருவின் முன்னிலையில் விசாரணை தொடங்கியிருக்கும்... அரண்மனைக்குச் செல்ல விரும்பாமல் மால்கு தன் அறைக்கு வந்தான். தன் ஆடைகள கழற்றி விட்டு, இரத்தம் காய்ந்து கறைபடிந்திருந்த கழுத்து, மார்பு, தோள்களில் தண்ணீர்விட்டு கழுவினான். முகத்தையும் கழுவி துடைத்து விட்டு. கண்ணாடியில் பார்த்தபோது, தன் காது எந்த சேதமும் இல்லாமல் முழுமையாக இருந்ததைக் கண்டான். பகைவனுக்கும் அன்புசெய்கின்ற அந்த நல்லவருக்கு தீங்கு நினத்தேனா என்று நொந்தபடி படுக்கையில் விழுந்த மால்கு, அப்படியே உறக்கத்தில் ஆழ்ந்தான்.

மறுநாள் மால்கு கண் விழித்தபோது, வெயில் நன்றாக ஏறியிருந்தது. வீதியெங்கும் கூட்டம் கூட்டமாக மக்கள் நகரின் வெளிவாயிலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். போதகருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு, கொல்கொதா குன்றின் மேல் சிலுவையில் அறையப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டான். கொல்கொதா குன்றுக்கு மால்கு வந்தபோது, இயேசு சிலுவையில் அறையப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தார். அவரது முகமும் உடலும் அடையாளம் தெரியாதபடி சிதவுற்றிருந்தன. சிலுவையின் அடியில் ஒரு யூதனும் சில பெண்களும் நின்று அழுது கொண்டிருந்தார்கள். சுற்றிலும் எருசலேம் நகர் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. இயேசுவின் சிதயுணட உடலைக் கண்ட மால்குவின் மனதில் பயமும் திகிலும் மேலோங்கின. இத்தகைய கொடிய தண்டனைக்கு இந்த போதகரை ஆளாக்க நடந்த சதியில் தனக்கும் பங்கு உண்டு என்று நினைத்த போது, அவன் கண்களில் நீர் பெருகிற்று. சற்று தூரத்தில் ஏதோ ஆரவாரம் கேட்டு, மால்கு அங்கே பார்த்தான். தலைமை குரு கயபா தன் பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார். தலைமை குருவின் முகத்தில் ஏளனமும், கேலியும், வெறுப்பும், வஞ்சகசிரிப்பும் வெளிப்படையாகத் தெரிந்தன.

crucifixion_malchus திடீரென சூரியன் ஒளியிழந்தது போல எங்கும் இருள் சூழ்ந்தது. காற்றும் வேகமாக வீசியது. தான் செய்த தவறை எண்ணி மால்கு வருத்தமுற்றான். ஒரு மரத்தின் ஒரமாகச் சென்று மண்டியிட்டு சிலுவையில் தொங்கியவரை நோக்கி தன் தவறுக்கு மன்னிப்பு வேண்டினன். இருண்டு கறுத்திருத்த வானத்தில் காதை செவிடாக்கும் ஓசையுடன் இடி முழக்கம் கேட்டது. பலத்த காற்று சுழன்றடித்தது. சரிந்து விழுவது போல அந்த மலைப்பகுதி அதிர்ந்தது. அந்த இரைச்சலுக்கிடையே மால்குவின் வேண்டுதலுக்கு பதில் சொல்வது போல இயேசுவின் தீனமான குரல் கேட்டது: "தந்தையே, இவர்களை மன்னியும்... தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை..." மால்கு தெளிவடைந்தான். அவன் மனதில் ஏற்பட்ட உறுதி அவனுடைய முகத்தில் தெரிந்தது. மரத்தின் மறைவிலிருந்து வெளிய வந்து, சிலுவையை நோக்கி கைகூப்பி தலை வணங்கினான். தலைமைகுருவின் ஒற்றனாக பணியாற்றிய மால்கு இப்போது இல்லை. மனமாற்றம் அடைந்த அந்த பணியாளன் அந்த நேரத்திலிருந்து வேறொரு எஜமானருக்கு சேவை செய்ய தன்னை அர்ப்பணித்துக் கொண்டான்.


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்