கிளாடியாவின் கனவு

திரு இரான்சம்பரந்து விரிந்த கடல்வெளி. சுற்றிலும் இருள் சூழ்ந்திருக்கிறது. கிளாடியா கப்பலில் பயணம் செய்து கொண்டிருக்கிறாள். வானத்தின் மதகுகள் அனைத்தும் திறந்து கொண்டதைப் போல பெருமழை கொட்டிக் கொண்டிருக்கின்றது. பலத்த புயற்காற்று சுழன்றடித்ததன் விளைவாக கடலில் அலைகள் சீற்றத்துடன் எழுந்து விழுந்தபோது, அந்தக் கப்பல் மேலே ஏறியும், ‘தடால்’ எனக் கீழே இறங்கியும் நிலையின்றி சுற்றி வருகிறது. அந்த பெருங்காற்றின் இரைச்சலையும் மீறி, வேதனையின் உச்சத்தில் யாரோ கதறுகின்ற ஒரு மரணஓலம் கேட்கிறது. கப்பலின் மாலுமி, “அய்யோ! அண்டசராசரங்களை ஆக்கி இயக்குவோன் உயிர் துறந்துவிட்டார்” என்று அவளிடம் சொல்கிறான். கிளாடியா அவனிடம், “கடவுள் உயிர் துறப்பது எங்ஙனம், தளபதி?” என்று கேட்கிறாள். அதற்கு மாலுமி, “அரசி, உமக்கு நினைவில்லையா? அவர்கள் அவரை சிலுவையில் அறைந்துவிட்டார்கள்; போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் அவரை சிலுவையில் அறைந்துக் கொன்றுவிட்டார்கள்..” என்று மறுமொழி சொல்கிறான். இதனைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றாக இணைந்து பெருங்குரலெடுத்து, “போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார்” என்னும் சொற்களை அடுத்தடுத்து பற்பல மொழிகளில் சொல்வது போன்ற பேரொலி ஆகாயமெங்கும் இடிமுழக்கத்தைப் போல மீண்டும் மீண்டும் நாலாதிசைகளிலும் ஒலித்துக்கொண்டே இருந்தது.

காதுகளை செவிடாக்கும் அந்தப் பேரோலியை சகித்துக் கொள்ள முடியாமல் திடுக்கிட்டு எழுந்தாள், கிளாடியா. வியர்வையால் நனைந்திருந்த அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. மெல்ல நடந்து வந்து சாளரத்தின் திரைச்சீலையை விலக்கி, வெளியே பார்த்தாள். பின்னிரவு நேரம்.. மூன்றாம் சாமம் தாண்டியிருக்கவேண்டும். மேற்றிசையில் பொன்தகடு போல ஜொலித்த முழுநிலவு, இரவை பகலாக்கிக் கொண்டிருந்தது. அந்த மேன்மாடத்திலிருந்து பார்த்தபோது, எருசலேம் நகரத்து கோட்டை மதிலும், ஆங்காங்கே இருந்த காவல் கோபுரங்களும், மாளிகைகளும், வீடுகளும் தெளிவாக தென்பட்டன. தூரத்தில் யூதர்களின் தேவாலயம் கம்பீரமாகக் காட்சியளித்தது. வெளியிலிருந்து இதமான குளிர்காற்று சாளரத்தின் வழியாக மேன்மாடத்தில் வீசியபோது, ஜன்னலின் அருகே நின்றிருந்த கிளாடியாவின் உடல் மீண்டும் நடுங்கியது. அவள் கண்கள் சிவந்திருந்தன. மனதில் இருந்த கலக்கம் அவள் முகத்தில் பிரதிபலித்தது. இந்த பயங்கரமான கனவின் பொருள் என்ன? தன் கணவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சம்பவம் ஏதேனும் நிகழுமோ? காலாகாலத்திற்கும் அழியாத பழி ஏதும் அவர் மேல் வந்து சேருமோ?

உரோமைப் சாம்ராஜ்ஜியத்தின் ஒரு மாநிலமாக இருந்த யூதேயா தேசத்தின் ஆளுநரான போஞ்சு பிலாத்துவின் மனைவி, கிளாடியா. யூதேய சூழ்நிலையும், அந்நாட்டு மக்களின் மாறுபட்டக் கலாச்சாரமும், உரோமை நகரில் உயர்குடியில் பிறந்து வளர்ந்த கிளாடியாவுக்கு புதுமையாக இருந்தன. உரோமைப் பேரரசின் ஆளுமையை யூதர்கள் விரும்பவில்லை என்பது வெளிப்படை. இதன் காரணமாக அந்நாட்டில் எந்நேரத்திலும் கிளர்ச்சி வெடிக்கலாம் என்றொரு சூழ்நிலை இருந்தது. வடக்கே நாசரேத்து என்னும் ஊரிலிருந்து வந்த இளம்போதகர் ஒருவர், யூத தலைமைச் சங்கத்திற்கும், உரோமைப் பேரரசிற்கும் எதிராக கிளர்ச்சியைத் தூண்டும் விதமாகப் பேசிவருவதாக அரசியல் உயர்மட்டத்தில் பேச்சாக இருந்தது. இறையாட்சியின் மேன்மை, அயலாரை நேசித்தல், தவறிழைத்தோரை மன்னித்தல், நெருங்கிவரும் புதுவாழ்வு – இப்படி பல புதிய கருத்துகளை நசரேத்து போதகர் எடுத்துரைத்தாலும், அவர் ஆற்றிய அருங்குறிகள் மக்களை வியப்பில் ஆழ்த்தின. ஒருநாள் கிளாடியா நகரினுள் சென்றுவரும்போது, எருசலேம் தேவாலயத்தை ஒட்டிய வீதி ஒன்றில் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. நாசரேத்து போதகர் கூட்டத்தின் நடுவே நின்று பேசிக்கொண்டிருந்ததை, தன் பரிவாரங்களோடு ஒதுங்கி நின்ற கிளாடியாவும் கேட்க நேர்ந்தது.

அந்த இளம்போதகர், “நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்... நான் உண்மையைக் கூறுவதால் நீங்கள் என்னை நம்புவதில்லை..... என்னிடம் பாவம் உண்டு என்று உங்களுள் யாராவது என்மேல் குற்றம் சுமத்த முடியுமா?.... உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்" என்றார். கூட்டத்திலிருந்த சிலர், “உனக்கு இன்னும் ஐம்பது வயது கூட ஆகவில்லையே? நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?" என்று கேட்டார்கள். அதற்கு மறுமொழியாக, “ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அந்த போதகர் சொன்னபோது, கூட்டத்தில் ஒரு சலசலப்பும், முறுமுறுப்பும் ஏற்பட்டது. போதகரை நேரிலே கண்ட கிளாடியாவுக்கு அவர் கிளர்ச்சி செய்பவராகத் தோன்றவில்லை. ஐந்து நாள்களுக்கு முன்னர், பெருந்திரளான மக்கள் கூட்டம் மரக்கிளைகளை ஏந்திக்கொண்டு, உற்சாகத்தோடும் அரச மரியாதையோடும் போதகரை வாழ்த்தி, நகரினுள் அழைத்து வந்ததை இதே சாளரத்தில் நின்றுகொண்டு கிளாடியா பார்த்திருந்தாள். அவருடைய முகத்திலிருந்த தெய்வீகக் களையும், பேச்சிலே தெரிந்த கனிவும், அதிகாரத்தோடு அவர் பேசிய தொனியும், போதகர் மேல் மரியாதையை ஏற்படுத்தின.

பொழுது புலரத் தொடங்கியிருந்தது. அரண்மனை வாயிலில் பலர் உரத்த குரலில் பேசுவது போன்ற சத்தம் கேட்டு, கீழே நோக்கினாள். அங்கே யூதத் தலைமைச் சங்கத்தைச் சேர்ந்த குருக்களும், மூப்பர்களும், படைவீரர்களும், நகரத்து மாந்தரும் அடங்கிய சிறுகூட்டம் ஒன்று, தங்களை உள்ளே அனுமதிக்குமாறு காவல் வீரர்களோடு வாக்குவாதம் செய்துகொண்டிருந்தது. கூட்டத்தின் நடுவே கைகளிரண்டும் உடலோடு பின்புறமாக சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் நாசரேத்து போதகர் ஒரு குற்றவாளியைப் போல நிற்பது தெரிந்தது. வாயிற்கதவு திறக்கப்பட்டவுடன், போதகரை இழுத்துக்கொண்டு மாளிகையின் முற்றத்திற்குள் மக்கள் கூட்டம் ஆரவாரத்தோடு நுழைந்தது.

ஏற்கனவே தான் கண்ட கனவினால் கலக்கமுற்றிருந்த கிளாடியா, ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று உணர்ந்து, ஆடைகளைத் திருத்திக் கொண்டு, தன் பணிப்பெண்ணுடன் கீழே இறங்கிச் சென்றாள். இது போன்ற நீதிவிசாரணை நிகழ்வுகளின் போது அரண்மனைப் பெண்டிர் நேரடியாகக் கலந்து கொள்வது வழக்கமில்லை. எனவே, பிலாத்து அமர்ந்திருந்த இருக்கைக்கு சற்று அப்பால் நின்றுகொண்டு நடப்பவனற்றை கவனிக்கத் தொடங்கினாள். உரோமைப் படைதளபதிகளும், நூற்றுவர் தலைவர்களும், ஆளுநரின் ஆலோசகர்களும் பிலாத்துவின் இருக்கைக்கு அருகே நின்றிருந்தார்கள். படிக்கட்டுகளுக்குக் கீழே முற்றத்தில் குற்றவாளியைப் போல நாசரேத்து போதகரும், அவரைச் சுற்றிலும் தலைமைக் குருக்களும், மூப்பர்களும், அவர்களுக்குப் பின்னால் கூச்சலிட்டுக் கொண்டிருந்த மக்களும் நின்றிருந்தனர். வரம்பு மீறிய வெறியோடு மக்கள் இருந்ததால், உரோமைப் படைவீரர்களுக்கு கூட்டத்தைக் கட்டுக்குள் வைப்பது மிகவும் சிரமமாயிருந்தது. தலைமைக் குருக்களும், அவர்களோடு வந்திருந்தவர்களும் போதகர் மீது பல குற்றசாட்டுகளைச் சொல்லி, அவரைக் கொலை செய்ய ஆணையிட வேண்டுமென்று கோபாவேசத்தோடு ஆளுநருடன் விவாதம் செய்தார்கள். கூட்டத்தில் சிலர் போதகரை கைகளால் இடித்தும், கால்களால் உதைத்தும், எபிரேய மொழியில் நிந்தித்தும், பரிகாசம் செய்து நகைத்தார்கள். ஆனால், போதகர் இவற்றிக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை; வாய்திறந்து எதுவும் பேசவும் இல்லை. அவர் மிகவும் சோர்வுற்றிருப்பதாகத் தெரிந்தது.

"உனக்கு எதிராக எத்தனையோ குற்றசாட்டுகளும், சான்றுகளும் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?" என்ற ஆளுநரின் கேள்விக்கு, அவர் பதிலேதும் சொல்லவில்லை. போதகர் மீது சொல்லப்பட்ட குற்றசாட்டுகள் எல்லாம் பொய்யானவை என்றும், அவர்கள் பொறாமையால்தான் போதகரைத் தன்னிடம் ஒப்புவித்திருக்கிறார்கள் என்றும் அறிந்திருந்த பிலாத்து, குழப்பத்தில் ஆழ்ந்தார். அருகிலே நின்றிருந்த தனது ஆலோசகர் பக்கமாகத் திரும்பிய ஆளுநர், தன் மனைவியின் முகத்திலிருந்த தவிப்பை கண்ணுற்று, சட்டென எழுந்து கிளாடியாவை நோக்கி வந்தார். அருகிலே வந்த பிலாத்துவின் கரங்களைப் பற்றிக் கொண்டு, அவர் முன் மண்டியிட்டு வணங்கிய கிளாடியா, “என்னை பொறுத்தருளுக, அரசரே! இப்போது குற்றவாளியாக உம் முன்னே நிற்கிற மனிதர் நீதிமானாகவும், இறையருள் பெற்ற ஞானியாகவும் தெரிகிறது. உம்மை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன், அவருடைய வழக்கில் நீர் தலையிட வேண்டாம்… ஏனெனில் அவர் பொருட்டு இன்று கனவில் நான் மிகவும் துன்புற்றேன்.. இதிலே நீர் மிகுந்த கவனத்தோடு செயல்படாவிட்டால், நம் குடும்பத்திற்கு தீராத பழி வந்துசேருமோ என்று அஞ்சுகிறேன்”.. என்று கண்ணீர் மல்க தன் கணவனை வேண்டிக் கொண்டாள். கிளாடியாவின் தோளைத் தொட்டுத் தூக்கிய பிலாத்து, ஆழ்ந்த சிந்தனையுடன் தலையை மட்டும் அசைத்துவிட்டு, நடுவர் இருக்கையை நோக்கிச் சென்றார்.

அதன் பிறகு போதகரை விடுவிப்பதற்கான வழிகளை பிலாத்து மேற்கொண்டார். விழாக்காலத்தில் மக்கள் விரும்பும் கைதி ஒருவரை விடுவிக்கும் வழக்கத்தையொட்டி, போதகரை விடுதலை செய்யலாமா என்று கேட்டதற்கு, தலைமை சங்கத்தாரின் தூண்டுதலின் பேரில் கூடியிருந்த கூட்டம் பரபா என்றக் கைதியை விடுவிக்கச் சொன்னது. சாட்டையால் அடிக்கச் செய்து, கசையடி களத்திலிருந்து இழுத்து வரப்பட்ட போதகரை மக்களுக்குக் காட்டியபோதும், கூடி நின்றவரெல்லாரும், “சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்!” என்று கத்தினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போவதைக் கண்ட பிலாத்து, ‘மக்களின் கொந்தளிப்பு கலவரமாக மாறிட அனுமதிக்கக் கூடாது’ என எண்ணி, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, "இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை… நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறித் தன் கைகளைக் கழுவினார். போதகரை சிலுவையில் அறைவதற்கான ஆயத்தங்களோடு, உரோமைப் படைவீரர்கள் அவரை இழுத்துச் செல்ல, நிந்தித்துத் தூற்றும் கோஷங்களோடு, தலைமைக் குருக்களும், மக்களும் மாளிகையைவிட்டு வெளியேறினார்கள்.

மேன்மாடத்திலிருந்த தன் அறைக்குத் திரும்பிய கிளாடியா அதிர்ச்சியும், கவலையும் கொண்டிருந்தாள். குற்றமற்ற போதகருக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை பற்றியே நினைத்துக் கொண்டு உறங்கிப்போன அவள், பணிப்பெண்ணின் அழைப்பைக் கேட்டு எழுந்தாள். வெளியே இருட்டாயிருந்தது. “பொழுது சாய்ந்து இருட்டும்வரை என்னை எழுப்பாமல் விட்டுவிட்டாயே?” என்று பணிப்பெண்ணைக் கடிந்து கொண்டாள். அதற்கு “அரசி! இன்னும் பொழுது சாயவில்லை.. இப்போது மத்தியான வேளைதான்” என்று பணிப்பெண் கூறியதைக் கேட்ட கிளாடியா துணுக்குற்றாள். “என்ன சொல்கிறாய், இது நண்பகல் நேரம்தானா? நடுநிசியைப் போல இருள் சூழ்ந்திருக்கிறதே?” என்று கேட்டுக்கொண்டே சாளரத்தின் அருகே சென்று, வெளியே நோக்கினாள்.

பகல் நேரம் தான்.. கதிரவன் தன்னையே மறைத்துக் கொண்டதால், ஆகாயமெங்கும் காரிருள் படர்ந்திருந்தது. வடதிசையில் கோட்டைக்கு வெளியே கல்வாரிக் குன்று பகுதியிலும், கிழக்கே தேவாலயத்தின் மேலும் கரிய மேகங்கள் திரண்டிருந்தன. சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. கிளாடியா பார்த்துக் கொண்டிருக்கும்போதே, வானத்தை இரண்டாகக் கிழிப்பது போல மின்னல் தோன்றி மறைந்தது. அதைத் தொடர்ந்து வந்த இடியோசை காதை பிளந்தது. விட்டுவிட்டு நிலஅதிர்ச்சி உண்டனதால், மாளிகை குலுங்கி ஆட்டம் கண்டது. கிளாடியாவின் கால்களைப் பற்றிக்கொண்டு பணிப்பெண் நடுங்கிக் கொண்டிருந்தாள். அச்சமும், வியப்பும் மேலோங்க நின்ற கிளாடியா, ‘நிச்சயமாக இந்த போதகர் ஒரு தெய்வப்பிறவி தான்’ என்று முணுமுணுத்தாள். சூரியன் மறைவதற்கு சற்று முன்னதாக இயல்புநிலை திரும்பியதாகத் தோன்றியது. கீழ்த்திசையில் மேலெழுந்து வந்த முழுநிலவு இரத்தச் சிவப்பாகக் காணப்பட்டது. இரவுஉணவின் போது, போதகர் இறந்துவிட்டாரென்றும், அவர் உடலை அடக்கம் செய்வதற்காக அரிமத்தியா ஊர்க்காரர் ஒருவர் அனுமதி பெற்றுச் சென்றதாகவும் பிலாத்து கூறினார்.

இன்று வாரத்தின் முதல் நாள். போதகரைக் கழுவிலேற்றி இன்றோடு மூன்று நாள்களாகின்றன. சூரியோதயம் ஆகி ஒருமணி நேரம் ஆனபோது, ஆலோசனை மண்டபத்தில் ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. என்னவென்று அறிந்து கொள்வதற்காக கிளாடியா கீழே சென்றாள். அங்கே பிலாத்துவும், படைத் தளபதியும், நூற்றுவர் தலைவர்களும், சில படைவீரர்களும் இருந்தனர். யூதத் தலைமை குருவும், மூப்பர்கள் சிலரும் உடனிருந்தனர்.

பிலாத்து கேட்டார்: “தலைமைக் குருக்களும், பரிசேயர்களும் கேட்டபடி, கல்லறையை மூடியிருந்தக் கல்லை சங்கிலிகளால் பிணைத்து முத்திரையிடவும், இரவுபகல் எந்நேரமும் ஓய்வின்றி முழுநேரக் காவலுக்கு ஏற்பாடு செய்யவும் ஆணையிட்டிருந்தோமே?” அதற்கு படைத் தளபதி, “ஆம், பிரபு! கல்லறையை மூடிய வாயிற்கல்லை நான் தான் முத்திரையிட்டேன். விதிமுறைகளின்படி எட்டு மணி நேரத்திற்கொரு முறை வீரர்களை மாற்றவும் உத்தரவிடப்பட்டு, அதன்படியே நடந்தது. இதோ, இங்கே வந்துள்ள குருக்களுக்குத் தெரியும்.” என்றார். மீண்டும் பிலாத்து, “அப்படி என்றால், போதகரின் உடலைக் காணவில்லை என்று இப்போது நீங்கள் சொல்வது எப்படி?” என்று கேட்டார். படைத் தளபதி நூற்றுவர் தலைவனைப் பார்க்க, அவர் ஆளுநர் முன்வந்து பணிவுடன், “அரசே! கல்லறையில் காவலிருந்த மூன்று வீரர்களும், ஏதோ பேய்பிசாசைக் கண்டவர்கள் போல நடுக்கத்துடன் இன்று சூரியோதயத்திற்கு முன்னதாக எனது பாசறைக்கு மூச்சிரைக்க ஓடிவந்தார்கள். “அவர் உயிரோடு இருக்கிறார்!!” என்று பதற்றத்தோடு சொன்னார்கள். நான் அவர்களை ஆசுவாசப்படுத்திவிட்டு, நடந்ததை நிதானமாகச் சொல்லும்படிக் கேட்டேன். அவர்களையும் கூட்டி வந்திருக்கிறேன்.. நீங்கள் அனுமதித்தால் அவர்களை இங்கே வரவழைக்கிறேன்” என்றார். ஆளுநர் கையசைத்திட மூன்று வீரர்களும் உள்ளே வந்தனர்.

அவர்களில் ஒருவன் சொல்ல ஆரம்பித்தான்: “காவல் சுழற்சி முறைப்படி, நள்ளிரவுக்குப் பின் ஒரு மணிநேரம் கழித்து நாங்கள் மூவரும் பணியை ஏற்றுக்கொண்டோம். இரவு முழுவதும் தூங்காமல், உரோமையில் இருக்கின்ற எங்கள் குடும்பங்களைப் பற்றி பேசிக் கொண்டே விழிப்புடன் இருந்தோம். விடியலுக்கு முந்தைய வைகறைப் பொழுதில், திடீரென கல்லறையின் உள்புறம் சூரியனே வந்து புகுந்தாற்போல பளீரென்று ஒளிர்ந்தது. அதன் உள்ளே இருந்து வந்த ஒளிக்கீற்றுகளால் சுற்றுபுறமெங்கும் வெளிச்சம் பரவி பகல் போலாகியது. மின்னலைப் போல் ஆடை அணிந்த வானதூதர் ஒருவர் மேலிருந்து இறங்கிவந்து கல்லறையை மூடியிருந்த பெருங்கல்லை மிக எளிதாக உருட்டிவிட்டதை நாங்கள் கண்டோம். கண்களைக் கூசச் செய்த அந்தப் பேரொளியைக் கண்டு அஞ்சி நடுங்கி, முகத்தை மூடிக் கொண்டு கீழே விழுந்த நாங்கள் செயலிழந்து தரையிலேயே கிடந்தோம். கொஞ்ச நேரத்தில் ஒளி மறைந்து மீண்டும் இருள் சூழ்ந்தவுடன், நாங்கள் எழுந்துபோது, தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் கல்லறை திறந்திருப்பது தெரிந்தது. மனதில் பயம் இருந்தாலும், மெதுவாக கல்லறையின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கே போதகரின் உடல் இல்லை… அவர் உடலை சுற்றியிருந்த துணிகள் மட்டும் நேர்த்தியாக மடிக்கப்பட்டு ஓரமாக இருந்தன.. கல்லறையின் உள்ளேயும், அதனைச் சுற்றிலும் தேடி பார்த்த்போதும் போதகரின் உடல் எங்குமே இல்லை… பிறகு தான் நூற்றுவர் தலைவரிடம் தகவலைச் சொல்ல வந்தோம்.”

தலைமைச் சங்கத்து மூப்பர் ஒருவர் கோபத்துடன், “பொய்.. இவன் பொய் சொல்கிறான்” என்று கத்தினார். படைத் தளபதியை ஏளனத்தோடு பார்த்த பிலாத்து நகைத்தவாறே, “நல்ல கட்டுக்கதை தான்.. இதை என்னை நம்பச் சொல்கிறாயா?” என்று கேட்டார். மூன்று வீரர்களில் ஒருவன், “இது கட்டுக்கதை அல்ல, அரசே! அங்கே நிஜமாக நடந்ததையும், நாங்கள் நேரிலே கண்டதையும் தான் கூறுகிறேன்” என்றான். மூத்தவராயிருந்த தலைமை குரு மூர்க்கமான தொனியில், “வீரர்களே, பொய்யும், புனைந்துரையும் இங்கு வேண்டாம்.. பணியிலிருந்த இரவுநேரத்தில் தூங்கிவிட்டு, இப்போது ஏதேதோ சொல்லி மறைக்கப் பார்க்கிறீர்களா?” என்று கேட்டார். நூற்றுவர்த் தலைவன் குறுக்கிட்டு, “மாண்புமிகு ஆளுநரும், தளபதியும் நான் இடையில் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும். இந்த மூன்று பேரையும் நான் நன்கு அறிவேன். எகிப்திலும், கிரேக்கத்திலும் உரோமைப் பேரரசின் போர்களில் தீரமாக பணியாற்றிய அனுபவமிக்க வீரர்கள் இவர்கள்; கடமை தவறாதவர்கள்… நானும் அந்தக் கல்லறை பகுதியில் ஆய்வு செய்துவிட்டு தான் வருகிறேன்.. வலுவான அந்த வாயிற்கல்லை சத்தமின்றி உருட்டிப் போடுவது அத்தனை எளிதான காரியமல்ல… ஆகவே, இவர்கள் சொல்வது உண்மையென்றே நான் கருதுகிறேன்… அங்கு நடந்தது இயற்கையை மீறிய ஒரு நிகழ்வு என்பது திண்ணம்” என்றான்.

இவற்றை எல்லாம் பிலாத்து ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். நிலைமை மேலும் சிக்கலாவதைக் கண்ட படைத் தளபதி, “இப்போது மக்களிடம் என்ன சொல்வது, நூற்றுவர் தலைவனே? மாண்டு போன அந்த போதகர் மீண்டும் உயிரோடு எழுந்துவிட்டார் என்றா சொல்ல முடியும்?” என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு நூற்றுவர் தலைவன், “மக்களிடம் என்ன சொல்வது என்பது எனக்குத் தெரியாது, தளபதி! ஆனால், இன்று அதிகாலையில் நடந்தது என்ன என்பதற்கு இந்த காவலர்களே சாட்சிகள்.. இவர்கள் சொல்வது நிச்சயமாக உண்மைதான்.. அந்த போதகர் உயிருடன் தான் இருக்கிறார்” என்று சொன்னான். தலைமை குருவும், மூப்பர்களும், தளபதியும் ஆளுநரின் அருகே சென்று, தாழ்ந்த குரலில் சற்று நேரம் பேசிக் கொண்டார்கள். பின்னர் காவலர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்த தளபதி, “இந்தக் கதையெல்லாம் ஏற்புடையதல்ல,.. நூற்றுவர் தலைவனே, காவலர்களே, நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள்.. நேற்று இரவு நீங்கள் அயர்ந்து தூங்கிவிட்ட நேரத்தில், அந்த போதகரின் சீடர்கள் அவருடைய உடலை திருடிக் கொண்டு போய்விட்டார்கள்.. இதுதான் நடந்தது.. யார் கேட்டாலும் நீங்கள் இப்படித் தான் சொல்ல வேண்டும்.. உங்கள் தேவைக்கும் அதிகமான பொற்காசுகள் யூதத் தலைமைச் சங்கத்திலிருந்து உங்களுக்கு வந்து சேரும்.. இதன் பின்விளைவுகள் எதுவாயிருந்தாலும், நாங்கள் பார்த்துக் கொள்வோம்.. எனவே, நீங்கள் எதையும் பார்க்கவில்லை, இது பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாது.. புரிகிறதா?” என்று கண்டிப்பாகக் கூறினார்.

காவலன் ஒருவன் தளபதியின் முன்னால் வந்து மண்டியிட்டு, “மன்னிக்க வேண்டும், தளபதி! நாங்கள் எல்லாவற்றையும் நேரிடையாகப் பார்த்தோம்.. நடந்தது என்ன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்… நேருக்கு நேராக பார்த்தவற்றை நாங்கள் மறக்க முடியாது.. மறைக்கவும் முடியாது… எங்கள் கண் முன்னே நடந்த உண்மை சம்பவத்தை மாற்றிடவும் முடியாது… அந்த நாசரேத்து போதகர் உயிரோடு தான் இருக்கிறார்.. அதற்கும் மேலான ஒரு உன்னத நிலையில் இருக்கிறார்” என்று சொன்னான். நூற்றுவர் தலைவன், “தளபதி, இரண்டு நாள்களாக நடந்த சம்பவங்களை உங்களால் மறக்கமுடியும் என்றால், நீங்கள் மறந்துவிடுங்கள்.. அன்று கல்வாரிக் குன்றில் நிகழ்ந்த கழுவேற்றத்திற்கு தலைமை ஏற்றிருந்தவன் நான்.. கடைசியாக அந்த போதகர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்வதற்காக அவருடைய விலாவில் ஈட்டியால் குத்தியவனும் நானே.. நாங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்த நாசரேத்து போதகர் சாதாரண மனிதரல்ல, கடவுளின் மகன் என்று அப்போதே நான் உணர்ந்து கொண்டேன். ‘இறந்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன்’ என்று ஏற்கனவே அவர் சொன்னது தான் இன்று நடந்திருக்கிறது. மாண்புமிகு அரசரே! தளபதியே! கதிரவன் ஒளியை நம் கைகளால் மறைத்திட முடியாது.. அது போல உண்மையை வெகுநாள்களுக்கு மூடி மறைக்க முடியாது.. இன்று அதிகாலையில் இந்தக் காவலர்கள் முன்னே நிகழ்ந்த சம்பவம், சரித்திரத்தில் ஒரு மாபெரும் மாற்றத்திற்கான தொடக்கம் என்றே நான் நினைக்கிறேன்” என்று கூறினான்.

தலைமைக் குருவும், மூப்பர்களும், படைத் தளபதியும் இதைக் கேட்டு திகைத்து நின்றனர். இருக்கையிலிருந்து எழுந்த ஆளுநர் பிலாத்து, தலையைத் திருப்பி ஓரமாக நின்றிருந்த தன் மனைவியை நோக்கினார். கிளாடியாவின் முகத்தில் அமைதியும், இதழ்களில் இளமுறுவலும் தவழ்ந்தன.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்