இரண்டு முத்தங்கள்

அ.அல்போன்ஸ்-திருச்சி

எதை வழிகாட்டுதலாக ஒரு மனிதன் எடுத்துக்கொள்ள வேண்டும்?
தனது விருப்பு வெறுப்புக்கள் அல்லது நியாயமான ஆசைகளில் ஒரு மனிதன் என்ன செய்ய வேண்டும்?
ஆசைகளின் வழி சென்று அல்லல்பட்டு திருந்த முடியுமா?
திருந்தி வரும்பொழுது நம்மை ஏற்றுக் கொள்வார்களா?
தந்தையின் விருப்பத்திற்கு மாறாகத் தன்பங்கை வாங்கி வெளியூருக்கு சென்று வாழ்க்கையை தொலைத்த இளைய மகன் தன் தவற்றைத் திருத்தித் தந்தையிடம் வருகிறான்.
இரண்டாவதாகத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே என் உணவு என்றும் நானும் தந்தையும் ஒன்று என்ற இயேசு பூமிக்கு வந்து அன்பின் வழியாக நம்மை வழிநடத்தி நமக்காக உயிரைதந்து தியாகம் செய்து நம்மை வானகத்திற்கு அழைத்துச் செல்ல வந்த இயேசுவை ஏற்றுக் கொள்கின்றோமா?
இரண்டு நிகழ்வுகளையும் நாம் எப்படி எதிர்நோக்குகின்றோம்…? இளைய மகன் தந்தையிடம் வருவதை லூக்கா தெரிவிக்கின்றார்.
இயேசு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வருகின்றார். பிலாத்துவை எதிர்கொள்கின்றார்.

முதல் காட்சி

Prodigal_Sonதொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். (லூக் 15:20)
தந்தையின் தவிப்பை நம் கண்முன்னே தத்ருபமாகக் கொண்டு வந்து நிறுத்துகின்றார்.
மறுவாசிப்பு செய்வோம்
தொலையில் வந்துகொண்டிருந்தபோதே
பரிவு கொண்டு
ஓடிப்போய்
கட்டித் தழுவி
முத்தமிட்டார்.
தந்தையின் ஐந்து செயல்களும் உணர்வு என்ற வண்ணத்தூரிகையில் வரையப்பட்ட ஒவியமாகிறது.

கெத்சமனித் தோட்டத்தில் பார்ப்போம்…

அங்கே இயேசு தனது நேரம் வந்துவிட்டது என்பதை உணர்ந்த இயேசு “எழுந்திருங்கள் போவோம்” என்று தம்மை பிடிப்பவர்களை நோக்கி வந்தார். தலைமை குருக்களும் மூப்பரும் அனுப்பிய யூதவீரர்கள் ரோமவீரர்கள் சேர்ந்த பெருங்கூட்டம் ஒன்று வாள்களேடும் தடியோடும் யூதாசுடன் வந்து இயேசுவை அணுகி “ரபி வாழ்க” என்று அவரை முத்தமிட்டான்.

இங்கேயும் ஐந்து பிரிவாகப் பார்க்கலாம்
பெருங்கூட்டம் ஒன்று (ஒருவரை பிடிக்க ஒரு பெருங்கூட்டம்)
வாள்களோடும்
தடியோடும்
யூதாசுடன் வந்து இயேசுவை அணுகி “ரபி வாழ்க” என்று
அவரை முத்தமிட்டான்.

Jesus“நான் ஒருவரை முத்தமிடுவேன். அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள்.” என்றான் (மாற்கு 14: 43) அவர்கள் அவர்மேல் கைபோட்டுப் பிடித்தார்கள் இயேசுவின் கைளை கட்டி இழுத்து சென்றார். இரவு ஒரு மணிக்குக் கட்டப்பட்ட கைகள் அதே நிலையில் அன்னா கயபா யூதசங்கம் பிலாத்து ஏரோது மீண்டும் பிலாத்துவின் விசாரணைவரை காலை ஆறு மணிவரை கைளை கட்டியபடியே இருந்தது.

இரண்டாவது காட்சி.

தந்தை இளையமகனை அருகில் வைத்துக் கொண்டு தனது ஊழியர்களை நோக்கி “முதல் தரமான ஆடைகளைக் கொண்டுவந்து உடுத்துங்கள்” என்றார். (லூக் :15:22) “ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகள் செய்து அவர்கள் அணியச்செய்தார்” என்பதை தொடக்கநூல் (3:21)கூறுகின்றது.
எசாயா தன் நூலில் “ஆண்டவரில் நான் பெருமகிழ்ச்சி அடைவேன்; என் கடவுளில் என் உள்ளம் பூரிப்படையும்; மலர்மாலை அணிந்த மணமகன் போலும், நகைகளால் அழகுபடுத்தப்பட்ட மணமகள் போலும், விடுதலை என்னும் உடைகளை அவர் எனக்கு உடுத்தினார்; நேர்மை என்னும் ஆடையை எனக்கு அணிவித்தார். ” (எசாயா 61:10) (இசை 61:10)
பிலாத்துவின் அரண்மணையில்…
இயேசுவின் முன்பு வீரர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்தனர். அவருடைய ஆடைகளைக் களைந்து செந்நிறப் போர்வையை அவருக்குப் போர்த்தினர்.

மூன்றாவது காட்சி:

தந்தை “இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள் ”(லூக் 15:23) மோதிரத்தையும, மிதியடியும் “விரைவில்”; அணிவிக்க கூறும் வார்த்தைகள் கோடிபெறும்.
இங்கே மகனின் கையில் மோதிரத்தை கொடுக்கவில்லை அணிவித்தார். அதுவும் விரைவில் சீக்கரமே மோதிரம் போடும்பொழுது அது பந்தத்தை பாசத்தை காட்டுகின்றது. பாரவோன் யோசேப்புக்கு தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தை கழற்றி அதை அவன் கையில் போட்டு மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து தன் இரண்டாம் இரதத்தின் மேல் அமர்த்தி … அவனைத் தெண்டனிட்டு பணியுங்கள் என்று கூறினார்.
கடவுள் “மோசேயையும் ஆரோனையும் நீங்கள் அதனை உண்ணும் முறையாவது; இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள்.” என்பதை யாத்திராகமம் (12:11) கூறுகின்றது.
இயேசும் தன் சீடர்களிடம் மிதியடி போட்டுக் கொண்டு போகக் கூறினார் (மாற் 6:9)
Behold the Manபிலாத்துவின் அரண்மணையில்…

நீதி தராசை பிடிக்க வேண்டிய பிலாத்து…
அவனோ சிறிது அயர்ந்து தராசு தட்டிலேயே நீட்டிப் படுத்து விட்டான்…சுருதி பிசகி ஒரு மரணமும் பாடப்பட்டுவிட்டது.
படைவீரர்களோ ஒரு முள்முடியை பின்னி அவருடை தலையில் வைத்துக் கன்னத்தில் அறைந்தனர்.

நான்காவது காட்சி:

தந்தை மேலும் கூறினார் “கொழுத்தகன்றை கொண்டு வந்து அடியுங்கள்.” (லூக் 16:23). அங்கே பெரிய விருந்து நடக்கின்றது.
பிலாத்துவின் அரண்மணையில்…….
படைவீரர்களோ அவர் மேல் துப்பி முகத்தை மூடி பிரம்பை எடுத்து அவரைத் தலையில் அடித்தனர். வதை படலங்களின் ஊடே இரக்கமின்றி வதைக்கப்பட்ட காட்சியை மத்தேயு உரைக்கின்றார். (மத் 27:29)
தோலானலான சாட்டையில் கூரான எலும்பு துண்டுளை கட்டி அடிக்கின்றனர்.
அங்கே விருந்துக்காக கன்றை அடிக்கின்றனர் இங்கோ இயேசுவை அடிக்கின்றனர்.
வார்த்தை தசையானது (அரு 1:14) அந்த தசையில் ரத்தம் தான் வழிந்தது.
அன்பை போதித்த இயேசுவுக்கு இதுவரை கிடைத்தது என்ன...?…ரணங்கள்…
… ரணங்கள்… அத்தனையும் ரணங்கள்…

ஐந்தாவது காட்சி:

தந்தை கூறுவார் ‘இறந்து போயிருந்த என் மகன் இவன் மீண்டும் உயிர் பெற்றுள்ளான் (லூக் 16:24) இளையமகனைப் பார்த்து இதயம் வெடித்து அழுகை வார்த்தைகளாக கொப்பளித்து அந்த காட்சியை லூக்காஸ் அழகாக வடித்து தருகின்றார் படிக்கும் நமக்கு அழுகையும் வருகின்றது தந்தையின் அன்பைக் கண்டு ஆனந்தமும் வருகின்றது.
யெருசலேமில் பார்ப்போம் :
christ-before-caiaphasகைப்பாஸ் கூறுவான் “மக்களுக்காக ஒருவன்மட்டும் இறப்பது நலம்” (அரு 18:14) யூதசங்கமும் இவன் சாவுக்குரியவன் என்று தீர்ப்பிட்டது சிலுவை மரணத்தைத் தந்தனர் அந்தச் சமயத்தில்… வெளியே பலத்த ஆரவாரம் கேட்டது…
மக்களின் கூச்சல் “சிலுவையிலறையும்” என்று தீப்பொறியாக பறந்தன. தொடர்ந்து கூச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது.
புரிந்து விட்டது. இயேசுவுக்கு
இது தீப்பொறி அல்ல ……
தந்தையின் விருப்பம் ….
எனவே இயேசு கல்வாரிக்கு தயாரானார்.
அரண்மனை முற்றத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள்……..?
தலைமைகுருக்கள்
பிலாத்து
மக்கள்
இயேசு
மற்றும் இயேசுவின் மரணம்.

எந்த வழக்கிலும் வெற்றி தோல்வி தெரியும்…..ஆனால் இங்கே .. அதர்மம் தெரிந்தது ….. தர்மம் கண்ணில்படவே இல்லை.
கல்வாரியில் இயேசு ஒரே ஒரு தடவை மரித்தாரே தவிர ….
மற்றபடி நம் இதயங்களில் மரித்ததுமில்லை…
இந்த உலகம் அவரை மறக்கவுமில்லை.

நிலவிற்கு களங்கம் செய்தவர் யார் எனும் குறிப்பு நம்மிடம் இல்லை. ஆனால் சுட்டெரிக்கும் சூரியனின் மீது ஒரு களங்கம் இதுவென்றும்… ஏற்படுத்தியது இயேசு என்றும் யூத இனம் குறிப்பிடும் பொழுது அந்த வேதனை நமக்குத் துன்பம் செய்கிறது.
திருந்தி வந்த மகனைத் தந்தையானவர் (கடவுள்) எப்படி வரவேற்கின்றார் என்பதையும் …… நம்மைத் திருத்துவதற்காக இயேசு பூமிக்கு வந்தவரை நாம் எப்படி வரவேற்கன்றோம் என்பதையும் காண்கிறோம்.
நற்செய்திகளை
ஒருமுறை
ஒரே ஒருமுறை படியுங்கள்
அன்பில் கரைந்துபோவீர்கள்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்