விண்ணப்பம் செய்தான் விண்ணகம் கண்டான்.

அ.அல்போன்ஸ்-திருச்சி

வாழ்க்கையை இரு முரண்களின் மோதல்களாகக் காணும் காட்சியை உலகியலில் காணலாம். விவிலியப் பார்வையிலும் இருமுரண்களின் மோதல் உள்ளது. வாழ்க்கையில் நன்மையும் தீமையும் போரட்டமாகவே சித்தரிக்கின்றது.

விவிலியம் தந்தையின் அன்பும், யூதர்களின் பொறாமையும் இயேசுவை மையப்படுத்திப் போராடுகின்றன. மானுடமனாரங்கில் கிளர்ந்தெழும் அரக்கதனத்துக்கும் தெய்வகத்துக்கும் நிகழும் போராட்டம் அது. நிறைவில் மனிதம் பெறும் மீட்பு. தீமையின் அழிவுக்கு ஏற்படும் நன்மையின் நட்டம். அதாவது அன்பைச் சிலுவையில் அறையப்படும் பொழுது அவலம் சுரக்கிறது. இயேசுவின் வாழ்க்கையினை உன்னில் வடித்தெடுக்கும் போது உன் ஆன்ம நலத்திற்குக் கல்வாரி நிச்சயம் உண்டு. பாவத்தின் அழிவிற்கும், இயேசுவின் மீட்பிற்கும் கல்வாரியின் திண்மை மிக முக்கியம்.

கல்வாரியிலே ஒரு காட்சி.

இயேசுவின் வலதுப் பக்கத்திலே அறையப் படிருக்கும் ஒரு கள்வன். இவன் கதை ஆச்சரியமானது. பலப்பலப் பரிமாணங்ளைத் தாங்கியது. மானிடத் தர்மத்தின் சரியான இலக்கணம் என்ன என்பதை இவன் கதை நமக்கு உணர்த்துகிறது. கள்வனின் வாழ்வும் - அவன் பெற்ற தாழ்வும் - இறுதியில் மீள்வும் - அந்த மீள்வுக் கொடுத்த விண்ணக மாண்பும் நினைத்தாலே ஆச்சரியம்.

அவன் தீயவன்.
பரபாஸ் போன்ற தீயசக்திகளுல் ஒன்றாகக் கருதப்பட்டுச் சிலுவை மரணத்தைப் பெற்றவன்.
விவிலியப் பாத்திரங்களில் இயேசுவோடு பழகிய சீடர்கள், பெண்கள் அனைவரையும் விட மிக அருகில் சிலுவையில் ஆறுமணிநேரம் அந்தப் பரமனோடு வாழ்ந்தவன் இவன் கதை விவிலியத்தில் மிகச்சிறியதாகப் பேசப்படுகிறது.
லூக்கா தனது நற்செய்தியில் ஜந்து வசனங்களில் வடிக்கப்பட்ட சித்திரம் இவன். கடை நிலையில் வாழ்ந்தவன்
பபித்தளைத் தகடு ஒன்று பத்தரைமாற்றுத் தங்கமாகின்ற நிகழ்வு விவிலியம் மிகச்சிறந்த இறை இயலைக் கூறுகின்றது.

"நீ மெசியா அல்லவா! உன்னையும் எங்களையும் காப்பாற்று" என்று ஒரு கள்வன் இயேசுவைப் பழிக்கின்ற பொழுது அதற்குப் பதிலாக மனம் மாறியக் கள்வன் “கடவுள் மட்டில் உனக்கு அச்சமே இல்லையா?” என்கின்ற பொழுது தான் நாம் அவனைப் பார்க்கின்றோம். தீயவனாக விலங்காக வாழ்ந்து மரணதண்டனைப் பெற்றவன். இப்பொழுது இயேசுவுக்காகப் பேசுகின்றான்.
கள்வனின் அகமனதில் தூயாறிவும் ஞானமும் தோன்றுகின்றன. அருகில் இருப்பவர் சாதாரண மனிதன் அல்ல என்று கூறுகிறது அகமனம். புறமனத்தினால் பார்த்தக் கள்வன் இயேசுவை ஏசுவது உண்மைதான். கடிந்து கொண்ட பொழுது அவன் அகமனம் விழிப்படையச் செய்கிறது.
அவ்விழிப்பு ஏற்பட்டவுடன் அவன் காணும் காட்சி முற்றிலும் மாறுப்பட்டதாக அமைந்துவிடுகிறது. அவன் வார்த்தையைக் கேட்போமா “கடவுள் மட்டில் உனக்கு அச்சம் இல்லையா? ” கடவுளுக்குப் பயப்படுவதே ஞானத்தின் முதல்படி. கடவுளுக்குப் பயப்படவேண்டும் என்ற ஞானத்தின் முதல்படியில் கால் வைக்கின்றான்.

எப்படி எங்கே அவன் மனமாற்றம் பெறுகிறன்? இவனே கூறுவான் “இவரோ ஒரு குற்றமும் செய்யவில்லை” என்று இயேசுவைக் குற்றமற்றவர் என்று பிலாத்து அறிந்திருந்தான் அவன் மனைவி அறிந்திருந்தாள். இப்பொழுது இந்தக் கள்வனும் உரைக்கின்றான்.
இயேசு தன்னைத் துன்புறுத்துவோர்காக மன்னிக்க மன்றாடுவதை இவன் தான் வெகு அருகில் கேட்டிருப்பான்.
கள்வன் கேட்டது - இயேசுவின் குரலை.
அவன் கண்டது - அவரின் திரு மேனியையும் சிலுவையில் உள்ள வாசகமும்.
அவனுக்குத் தன் குற்றம் தெரிகிறது. நாம் தண்டிக்கப்படுவது இயற்கையே. ஏனெனில் நம் செயல்களுக்குத் தக்கப் பலனைப்பெறுகிறோம். குற்றவாளியே தன் குற்றங்ளை ஒப்புக்கொள்கிறான் அந்த வாக்குமூலத்தை லுக்கா விவிலியத்தில் பதிவுச் செய்கிறார்.

இயேசுவின் மீது அவனையும் அறியாமல் ஏற்பட்ட பக்தி எனும் கண்கொண்டு தொலைநோக்குப் பார்வையாலேயே சிலுவையில் இறக்கின்ற இயேசுவைச் சரியாக மதிப்பீடு செய்கின்றான்..
அவன் மனம் உருகுகிறது.
விலங்கு நிலையில் வாழ்ந்தவன் இயேசுவினால் மனமாற்றம் பெற்று மனிதநிலையில் உயருகின்றான் சரணாகதி அவனிடம் தொடங்குகிறது. இயேசுவிடம் அளவற்ற மதிப்பு அவனுக்கு இருந்தது யூதர்களின் அரசன் என்று நினைக்கிறான். தனக்கு வந்த மரணத்தை அவன் பொருட்படுத்தவில்லை. இயேசு இறந்து விடுவார் என்பதையும் அவன் அறிவான். இருப்பினும் அதையும் பொருட்படுத்தவில்லை. அவர் அரசுரிமையோடு வரும்பொழுது வலமோ இடமோ முக்கியப் பதவியோ கேட்கவில்லை.
இருவருமே இறக்கப் போகிறார்கள்.
அப்படி இருந்தும் கள்வனால் எப்படி ‘நினைவில் வையும்’ என்கின்றான்?
நம்பிக்கை - முழுமையான நம்பிக்கை.

Jesus with Thief அந்த நம்பிக்கைப் பொய்த்துபோகாமல் ‘நினைவில் வையும் ‘ என்று விண்ணப்பிக்கின்றான். வீடுபேற்றை அருளும் பரிசாக "இன்றே என்னுடன் பரகதியிருப்பாய்" என்கின்றார் இயேசு.
அற்புதமான வார்த்தைகள் ……… “இன்றே ” என்பதோடு …….. “என்னுடனே ” என்ற இயேசுவோடு வாழ்கின்ற நிலையைக் காண்கின்றோம்.
விண்ணப்பம் செய்தான். விண்ணகம் கண்டான்.
விலங்கு மனம் மனிதமனதாக மாறுகிறது.
பின் இந்தப் பரம்பொருளை அறிந்து கொள்ளும்பொழுது இறைவனோடு ஓப்புரவு ஆகிறது.
மானுடம் வென்றது –
இறைவன் மீது வைத்த நம்பிக்கையால்.
ஒவ்வொரு வினையும் எதிர்வினைக் கொண்டதாகிறது
ஒவ்வொரு காரணமும் ஒரு காரியத்தில் விழைகிறது.
ஒவ்வொரு வருந்துதலும் மீட்புக்குக் கதவு திறக்கிறது.

விவிலியத்தில் எத்துனை விதமான மனிதர்களைச் சந்திக்கின்றோம்.
பேதுருவோடு சேர்ந்து மறுதலிக்கிறோம். பின்பு மனம் திருந்துகிறோம்.
யூதர்களோடு கோபமடைகிறோம்..
மரியாளோடு துன்பம் அடைகிறோம்.
தீயக் கள்வனோடு ஏளனம் செய்கிறோம்.
மனம் மாறியக் கள்வனோடு மனம் திரும்புகிறோம்.
எத்தனை எத்தனை பண்புகளோடு ஒட்டி நிற்கிறோம்.
எத்தனை எத்தனை அனுபவங்களைப் பெறுகிறோம்.
விவிலியம் வாசிக்கும் பொழுது உணர்ச்சி விசாலமும், அனுபவ அழுத்தமும் நன்மைத் தீமைத் தெளிவும், பெற்று வாழும் மனிதர்களாக மாறுகிறோம். உண்மையாக அன்பாக வாழவும் சக்திப் பெற்றுவிடுகிறோம். வாழ்க்கையின் உயரங்களுக்கும் ஆழங்களுக்கும் அழைத்துச்சென்று அனுபவ செழுமை வழங்குமிடம் கல்வாரி.
நம்பிக்கையில் அங்கே நிற்கும் சிலுவையைச் சிந்தனை கொள்வோம்.
இதற்கு அடித்தளம் நம்பிக்கைதான்.
இந்த நம்பிக்கை வீடுபேற்றை அருளும் பரிசு என்னும் இறையியல் தத்துவத்தைதான் கல்வாரியில் நிற்கும் கள்வனின் வழியாக விவிலியம் உணர்த்திவிடுகிறது.

பாரதிதாசன் வரிகள் நினைவிற்கு வருகின்றது.
"வானும் வசப்படவைக்கும் - இதில்
வைத்திடும் நம்பிக்கை வாழ்வைப் பெருக்கும்........... "

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்