சாத்தானே எச்சரிக்கை


அ.அல்போன்ஸ்-திருச்சி
Star and 3 kings

யூதாஸ்
நற்செய்தியின் பக்கங்களின்
துரோகி என
பச்சை குத்தப்பட்டவன்

இயேசு தந்ததோர்
காசாளர் பொறுப்பு

அவனோ
நிலத்தடி நெருப்பு

பூகம்பமாய் புறப்பட்டு
அழிந்து போனவன்

அவனிடம் கண்டது
பகைபுத்த புன்னகை

அப்பதுண்டை வாங்கியபின்
வஞ்சகபேய் அவன்
உள்ளத்தில் நுழைந்தது

இரவு பந்தியிலிருந்து
வெளியேறி
கையில்
விளக்கேந்தி
சூழ்ச்சியோடு
கெத்சமேனி தோட்டத்தில்
முகாமிட்டது - யூத
காவலருடன்

வெளிச்ச ராத்திரியில்
முத்த சத்தம்

முத்தமிட்டா
காட்டி கொடுக்கிறாய்
இதயம் வெடித்து
வெளியில் வந்த
இயேசுவின்
சூரியச் சொற்கள்
சீடரே மீட்பரின்
சிறகை வெட்டுகிறான்

மேகமே வானத்தை
சிறைப் பிடிக்கிறது

யூதாஸே
உன்மேல் வைத்த
அன்பை அம்பாகமாற்றி
கன்னத்தில்
கையெழுத்திட்டாய்

மூன்றாண்டு காலம்
கூடவே வாழ்ந்து
முத்தத்தோடு உறவை
முறித்து விட்டாய்

நீ ஒரு பொய்
நிஜத்தை தீண்டலாம்
ஆனால்
அழித்துவிடமுடியாது

அவர் ஒரு ஒளி
உன்னால்
அணைக்க முடியாது

இயேசுவே
உன்னால்
விண்ணரசு திறந்தது
உன் சீடரால்
நரகவாசல் திறந்தது

சாத்தானே
எச்சரிக்கை
முத்தம் தர அவன்
உன்னிடம் வருகிறான்.....
 

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்