சீடராகி சீடனாக்க..

 பணி. அல்போன்ஸ் ச.ச
lent


ஒலிப்பெருக்கி ஒலித்தது. மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டன. இந்த மனிதர்கள் நம்மை வெட்டி எத்தனையோ சிலுவைகளை உருவாக விட்டார்கள். ஆனால் இந்த மனிதர்களால் ஓர் இயேசுவைக் கூட இன்னும் உருவாக்க முடியவில்லையே...


தவக்காலத்தில், கல்வாரி நம் கண்முன்னே கொடுஞ்சிலுவை மரம். நம் முன்னே கசையடிகள் நம் கண்களைக் குளமாக்குகின்றன. பாடுகள் நம் நெஞ்சை உருக வைக்கின்றன. ஆனால் ஆண்டுதோறும் வரும் தவக்காலம் நமக்கு வாடிக்கையாகிவிட்டதோ? சிலுவைப் பாதை நமக்குப் பழக்கமாகிவிட்டதோ? புனித வார நிகழ்வுகள் நமக்கு வேடிக்கையாகிவிட்டனவோ? ஏனென்றால் சண்டை போடுகிறவர்கள் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். அவதாறு பேசுகிறவர்கள் பேசிக்கொண்டுதான் உள்ளனர். பெயரைக் கெடுக்கிறவர்கள் கெடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். பங்காளித் தகராறு நடந்துகொண்டுதான் இருக்கிறது. பகைமை தொடர்கதையாக உள்ளது. மனத்தாங்கலோடு உள்ளவர்கள் உள்ளக் குமுறலோடு.


பணி. எம்.டி. சாலமோன் அவர்கள் தரும் நிகழ்வை சிந்திப்போமா? ஓர் இளைஞன் கொலைசெய்துவிட்டு இரத்தக் கறையோடு தப்பி, தன் அண்ணனிடம் ஓடி வந்தான். காவல்துறையினர் அவனைப் பின்தொடர்ந்து துரத்துகின்றனர். அவர்கள் அவனை நெருங்கு முன் அண்ணன் தன் ஆடையை தம்பிக்குக் கொடுத்துவிட்டு தம்பியின் இரத்தக் கறைபடிந்த ஆடையை உடுத்திக் கொண்டான். அண்ணனின் உடையைப் பார்த்து சந்தேகப்பட்ட காவல் அதிகாரி அவனைக் கைது செய்து முடிவில் தூக்குத் தண்டனைக்கு அழைத்துச் சென்றார்கள். தூக்கில் தொங்குமுன் தூர நின்ற தன் தம்பியைப் பார்த்து அண்ணன் சொன்னான், "இனி நீ நீதிமான், இனிமேலாவது எனது பரிசுத்த வாழ்வைக் கற்றுக் கொள்” என்றான். தம்பியின் குற்றத்தை அண்ணன் ஏற்றுக்கொண்டது போல் இயேசு நமது குற்றங்களுக்காக பாவங்களுக்காக தன்னை இழந்தார். இயேசுவின் சிலுவைப் பயணம் வீழ்ச்சியின் அடையாளம் அல்ல. வாழ்வுதரும் எழுச்சியின் முன் உதாரணம். இயேசுவின் சிலுவைப் பயணம் கோழை மனதின் வெளிப்பாடல்ல மாறாக வீரத்தின் அடையாளம்.


ஹிட்லரின் கொடுங்கோலாட்சியின்போது ஒரு முகாமில் அடைக்கப் பட்டிருந்த கைதிகளுள் இரு முதியவர்களையும் ஒரு குழந்தையையும் தூக்கிலிடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நாளில் அந்த தூக்குதண்டனையைப் பார்க்க (மேலும் தவறுகள் செய்யாமலிருக்க) அனைத்துக் கைதிகளும் கூடியிருக்க அம் மூவரும் தூக்கலிடப்பட்டனர். உடலின் கனத்தால் முதியவர்கள் இருவரும் உடனே இறந்து விட்டனர். ஆனால் அக்குழந்தை மட்டும் நீண்ட நேரம் துடித்து உயிருக்கு போராடி அணுஅணுவாக இறந்தது. இதைப்பார்த்து கொண்டிருந்த அனைவரும் துடிதுடித்துப் போயினர். ஒருவர் தன் அருகில் இருப்பவரைப் பார்த்து "இச்சின்னஞ்சிறு குழந்தைக்கு இத்தனைக் கொடூரமா? இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் இறைவன் எங்கே? எதற்காக இறைவன்? என்றெல்லாம் கேட்டார். அருகில் இருந்தவர் அவரைப் பார்த்து “அதோ அந்தக் குழந்தையில் இறைவன் துடித்துக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறார்" என்றார். சிந்திப்போமா?


'பகைவரை மன்னியுங்கள்' என்று போதித்த ஆண்டவர் இயேசு, மரண வேளையில் கூட "தந்தையே இவர்களை மன்னியும்” (லுக் 23-24) என்று கூறித் தமது பகைவர்களை மன்னிக்கின்றார். "செபியுங்கள்" என்று போதித்த இயேசு. விடியற்காலையிலும் பகலிலும் இரவு முழுவதும் செபித்தார். "பணிவிடை பெறுவதற்கென்று, பணிவிடை புரிய வந்தேன்” என்று கூறிய இயேசு தமது சீடர்களின் காலடிகளைக் கழுவி, தாம் ஒரு செயல்வீரர் என எண்பித்துக் காட்டியுள்ளார். கடவுளின் வார்த்தையைக்கேட்டு அதன்படி நடப்பவனே எனது தாயும் தந்தையும் சகோதரனும் எனக் கூறி இரத்த உறவுகளுக்கு அப்பாற்பட்டவராக நின்றார் இயேசு. விசாலமான இதயமும், விரிந்த நேயமும் கொண்டவராக இருந்தார். ஆனால் அவரது சீடர்களாகிய நாம் வழங்கப்படாத நியாயங்களுக்காய் வரிந்து கட்டியது உண்டா ? சமரசம் செய்யப்படும் சமூக மதிப்பீடுகளுக்காய் நாம் களம் இறங்கியதுண்டா ? நாமே நம்மை சிந்தனைத் தராசுகளில் எடைபோட்டு சீர் தூக்குவோம்.


இயேசுவின் சிலுவை நமக்கு சோகத்ததை உருவாக்குகிறது என்று நினைக்காமல், தீமைக்கு எதிராக போராடத் தூண்டுவதாக அமைய வேண்டும். கேள்வி கேட்போமா?

1. சீடனாகுவது என்பது என்னுடைய சிலுவைகளை கிறிஸ்துவின் துணையோடு என்றும் சுமப்பது. சீடனாக்குவது என்பது பிறரின் சுமைகளைத் தாங்கும் சுமைதாங்கியாக என்னை உருமாற்றுவது.

2.என்னுடைய சிலுவைகளை பிறர்மேல் சுமத்தாமல் பிறரின் சுமைகளையும் சுமக்க நான் எடுக்கும் முடிவுகள் என்ன?

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்