புத்தாண்டு செபம்

அருள்தந்தை தம்புராஜ் சே.ச.

அப்பா அந்தாய் உம்மைப் போற்றுகிறோம். இயேசு ஆண்டவரே உம்மைப் புகழ்கிறோம். ஆவியாரே உம்மைத் துதிக்கின்றோம். திரியேக தேவனே, உமக்கு நன்றி கூறுகிறோம்.

இப்புத்தாண்டை எங்களுக்குக் கொடுத்ததற்காக நன்றி கூறுகின்றோம். இப்புத்தாண்டில் புதிய கிருபைகளைத் தாரும். “இதோ. எல்லாவற்றையும் புதியனவாக்குகிறேன்” என்றவரே, எம்மைப் புதுப்பித்தருளும். புதிய இதயத்தைத் தந்தருளும். பழைய கால உணர்ச்சிக் காயங்களைப் போக்கியருளும். எங்களுள் உள்ள எல்லா பகைமை உணர்ச்சிகளையும் அழித்துப் போடுவீராக! புதுப்புது நண்பர்களை இந்த ஆண்டில் எங்களுக்குத் தந்தருளும். அன்றாடக் கடமைகளை பொறுப்புணர்ச்சியோடு செய்ய எங்களுக்கு உதவியருளும். இருளின் ஆதிக்கத்திலிருந்து எங்களைக் காத்தருளும். ஒளியின் மக்களாகத் திகழச் செய்தருளும். ஆவி, ஆன்மா, உடல் ஆகிய எங்கள் ஆளுமைக்கு நீரே ஆண்டவராகச் செயல்படுவீராக!

இப்புத்தாண்டில் பிறருக்குச் சேவை செய்யும் மனப்பாங்கை எங்களுள் வளர்த்தருளும். எங்கள் அன்பைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவத்தைத் தந்தருளும். ஏழைஎளியோரின் கண்ணிரைத்துடைக்கும் இரக்க மனத்தை எங்களுக்கு ஈந்தருளும். நோயுற்றோர், துயருற்றோர், அனாதைகள், அடிமைத்தனத்தில் சிக்கி வாழ்வோர் அனைவருக்கும் நாங்கள் உறுதுணையாக இருக்கும் கருவிகளாக எங்களை வழிநடத்தும். இயேசுவின் அன்பின் நற்செய்தியைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும் கருவிகளாக எங்களைப் பயன்படுத்தும்.

உமது தூய ஆவியால் எங்களை நிறைத்து, அவரது குரலுக்குச் செவிமடுத்து அவரது வார்த்தையின்படி நடக்கும் சீடர்களாய் எங்களை நடத்தும்.

இந்த மன்றாட்டை உம் ஒரே பேறான திருமகன் இயேசுவின் நாமத்தில் ஏறெடுக்கின்றோம் பிதாவே, ஆமென்.

நன்றி: ஆவியின் அனல்


மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  பொது