இன்றைய நற்செய்தி:

யோவான் 15:26-16:4

"உங்களைத் தொழுகைக் கூடத்திலிருந்து ஒதுக்கி வைப்பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்ய எண்ணும் காலமும் வரும்."

அருள்மொழி :

தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள்..
யோவான் 16:3

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, உலகு சீடர்களை எவ்வாறு வெறுக்கும் என்பதை முன்கூட்டியே சீடர்களுக்கு விழிப்புணர்வு தருகிறார். நீதியின்பாலும் உண்மைக்குச் சான்று பகரும் உங்களைத் தொழுகைக் கூடத்திலிருந்து ஒதுக்கிவிட்டுப் பொறாமையினிமித்தம் உங்களைக் கொல்லுவோர், கடவுளுக்குத் திருப்பணி செய்வதாகத் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்வார்கள். அவர்கள் அநீதியை நியாயப்படுத்தி, மக்களை அடக்கி, அடிமைகளாகவும் நடத்துவார்கள். அவர்களது பட்டம், பதவி வெறித்தனமாகி, எந்த நிலைக்கும் தள்ளப்படுவார்கள். எனவேதான் நான் உங்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கின்றேன். நான் உங்களுக்கு உண்மையை நோக்கி வழி நடத்த தூய ஆவியாரை அனுப்புகிறேன். அவர் உங்களை வழி நடத்துவார் என்று அறிவுறுத்துகிறார்.

சுயஆய்வு :

  1. போதனைகளின்படி வாழ என் முயற்சி யாது?
  2. எந்நிலையிலும் இறைவாக்கைக் கடைப்பிடிக்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழும் வரம் தாரும். ஆமென்.