arulvakku

பிப்ரவரி 26
திருநீற்றுப் புதன்

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 6:1-6, 16-18

" தர்மம் மறைவாய் உள்ளத் தந்தை அறிவார். "

அருள்மொழி:

"அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம், மறைவாயிருக்கும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைமாறு அளிப்பார்."
மத்தேயு 6:4

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தர்மத்தை எவ்வாறு அடுத்தவருக்குக் கொடுக்க வேண்டுமென அறிவுறுத்துகிறார். எப்படி எனில் நம் ஒவ்வொருவரின் செயல்களை நமக்குள் இருக்கும் தூய ஆவி கண் காணித்து வருகின்றார். நாம் நல்லதைச் செய்தாலும் தீயவற்றைச் செய்தாலும் அவர் அறியாமல் இருப்பதில்லை. வலக்கைச் செய்வதை இடக்கை அறியாதிருக்கட்டும் என்பதையே இயேசு விரும்புகின்றார். நமக்குள் பலர் குறுக்கு வழிகளில் சம்பாதிப்பவர்கள் தானம் - தர்மம் செய்வார்கள் அதை ஊர் அறிய உலகறியச் செய்வார்கள் அதை இறைவன் விரும்புவதில்லை. புறச் செயல்கள் இவ்வுலகப் பெருமையைத் தான் உணர்த்துகின்றன. ஆனால் அகத்திற்குள் இறைவனுக்குச் செய்யும் அறப்பணிகள் அனைத்தும் இறைவனடி சேர்கின்றது. இதனைத் தூய ஆவியானவரும் உணர்கின்றார். எனவே நமது தர்மம் இரகசியமாகவே இருப்பது மேலானது.

சுயஆய்வு :

  1. நான் செய்யும் தர்மம் அடுத்தவர் அறியாமல் செய்கின்றேனா?
  2. எப்படிச் செய்வது என்பதை அறிய முயற்சிக்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே!, நான் அடுத்தவர் அறியாமல் தர்மம் செய்யவேண்டுமென்ற மனதினைத் தாரும். இத்தவக்காலம் முழுவதையும் சிறந்த முறையில் பயன்படுத்தி இறையாசிர் நிறைவாய் பெற்றிட அருள்பரியும்.. ஆமென்.


www.anbinmadal.org