திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

2024 டிசம்பர் 25-ஆம் நாள் - கிறிஸ்து பிறப்பு பெருவிழா - புதன்கிழமை

“இறையொளி நம்மிடையே வாழ்கின்றது”


மறைநூல் வாக்கு:

திருவிழிப்பு: எசாயா 9:1-6; தீத்து 2:11-14; லூக்கா 2:1-14
விடியற்காலை: எசாயா 62:11-12; தீத்து 3:4-7; லூக்கா 2:15-20
பகல்: எசாயா 52:7-10; எபிரேயர் 1:1-6; யோவான் 1:1-18

சிந்தனை:

“அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது. (யோவான் 1:9) சிந்தனை: இன்றைய நாள் ஒரு புனிதமான நாள். அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்த நாள். திருமுழுக்கு யோவான் பிறந்தவுடன் அவருடைய தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு இறைபுகழ்ச்சிப் பாடல் ஒன்றைப் பாடினார். அந்தப் பாடலின் இறுதியில், “இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது” என்று செக்கரியா பாடுகிறார். ஆம்! உலகில் உள்ள இருளை அகற்றிட ஒளி தேவைப்படுகிறது. நம் உள்ளத்திலிருக்கின்ற பாவத்தின் இருளை அகற்றிட இறைவனின் தெய்வீக ஒளி தேவைப்படுகிறது.


பொருளாதாரத்தை மையமாகக் கொண்ட இன்றைய உலகில் நம்மைச் சுற்றிலும் ஏராளமான விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை மக்களுடைய நேரத்தையும், பணத்தையும் செலவு செய்வதற்கான பெருவணிக வளாகங்களையும், பொழுதுபோக்கு அரங்குகளையும் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடவுள் மனிதனாகப் பிறந்த இந்நாளில், உலக மாந்தர் அனைவருக்கும் நல்வழி காட்டுகின்ற உண்மையின் ஒளி விண்ணிலிருந்து நம்மைத் தேடி வந்தது. கிறிஸ்துவே அந்த உண்மையான ஒளி என்று மகிழ்ச்சியுற்று இன்றைய விழாவைக் கொண்டாடுகிறோம்.


கிறிஸ்துவே அன்பின் ஊற்றாகவும், உண்மையின் பிறப்பிடமாகவும், முடிவில்லா வாழ்வுக்கு வழியாகவும் விளங்குகிறார். அந்த ஒளி நம்மைக் கடவுளோடு நெருக்கமான உறவுநிலைக்கும், நிலைவாழ்வுக்கும் நம்மைக் கூட்டிச் செல்கிறது. திருத்தூதர் யோவன் தனது நற்செய்தி நூலின் ஆரம்பத்தில், “தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. அனைத்தும் அவரால் உண்டாயின; அவரிடம் வாழ்வு இருந்தது; அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது" என்று சொல்கிறார். கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடுகின்ற இந்த நாளில், உலகின் ஒளி நம்மோடு வாழ்கின்றது என்னும் உண்மையை உணர்ந்து நாம் அகமகிழ்ந்து களிகூருவோம்.

இறைவேண்டல்:

உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!


அன்பின்மடல் முகப்பு