திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

2024 டிசம்பர் 24-ஆம் நாள் - திருவருகைக் காலத்தின் நான்காம் வாரம் - செவ்வாய்கிழமை

“கடவுள் நம்முடன் இருக்கிறார்”

வாசகங்கள்: 2 சாமுவேல் 7:1-5, 8-12, 14, 16; லூக்கா 1:67-79


மறைநூல் வாக்கு:

அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்... இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’என்பது பொருள் (மத்தேயு 1:23)

சிந்தனை:

இயேசு கிறிஸ்துவை ஒரு புதிய கண்ணோட்டத்தில் கருத்தூன்றி பார்ப்பதற்கு இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாக் காலத்தில் நாம் அழைக்கப்படுகிறோம். என்றுமுள்ள இறைவார்த்தையான எல்லாம் வல்லக் கடவுளின் திருமகனாகிய இயேசு, மனிதவுரு எடுத்து நம்மோடு உறவாட இங்கு நம்மிடையே வருகிறார். ”வார்த்தை மனிதன் ஆனார்” என்னும் வரலாற்று நிகழ்வை நம்பிக்கையோடு கொண்டாடுவதற்குக் கிறிஸ்துமஸ் காலம் நமக்கு வாய்ப்புத் தருகிறது.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு பச்சிளம் பாலகனாக இயேசு பிறந்தபோது, “இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறாற்” என்று வானதூதர்கள் ஆட்டிடையர்களுக்குக் கூறினார்கள். அந்தக் கணத்திலிருந்து உலகம் முடிவுறும் நாள்வரையில் இந்தப் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தி “கடவுள் நம்முடன் இருக்கிறார்” என்னும் பேருண்மையை உறுதிசெய்துகொண்டிருக்கிறது. ஆம்! கடவுள் நம்மோடு இருக்கிறார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் நிகழ்ந்தது போல அருங்குறிகள் மற்றும் அற்புதங்கள் வழியாகவோ அல்லது கடவுளின் வார்த்தையைப் பறைசாற்றிய இறைவாக்கினர் வழியாகவோ கடவுள் எங்கோ வெகுதூரத்திலிருந்து தன்னை வெளிப்படுத்தவில்லை.


மாறாக, நம்மைப் போன்ற உருவத்தில் மற்றொரு மனிதனைப் போல நம்மோடு உறவாட நம் நடுவே வருகின்றார். கடவுள் என்னும் நிலையில் தான் கொண்டிருந்த மேலான மாட்சியையும், தெய்வீகத்தையும் துறந்து, தன்னைத் தானே வெறுமையாக்கிக் கொண்டு மனித அவதாரம் எடுக்கத் திருவுளம் கொள்கிறார். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, உண்மை, இரக்கம், தூய்மை, எதிர்நோக்கு – இவற்றின் வடிவாகக் கடவுள் நம்முடன் இருக்கிறார். இங்கே, இந்த நேரத்தில் நமது இன்பத்திலும், துன்பத்திலும் கடவுள் நம்முடன் இருக்கிறார். நம்முடைய ஆற்றலையும், பலவீனங்களையும் அறிந்த அவர், நம்மை எந்நாளும் பாதுகாத்து அன்பு செய்கிறார். நமது இளமையிலும், முதுமையிலும், செல்வநிலையிலும், ஏழ்மையிலும் கடவுள் நம்முடன் இருக்கிறார். அச்சத்திலும், துயரத்திலும் நமக்கு மனௌறுதியும், நம்பிக்கையும் தருவதற்கும், நமது பாவங்களை மன்னித்து நம்மை அரவணைத்துக் கொள்வதற்கும் கடவுள் நம்முடன் இருக்கிறார்.

இறைவேண்டல்:

நிறைவான அன்பின் பெருக்கே, இறைவா! உம்முடைய படைப்புகளோடு எந்நாளும் உடனிருந்து வழிநடத்துவதற்காக உமது திருமகனை இவ்வுலகிற்கு மனித வடிவில் அனுப்பினீர். இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாக் காலங்களில் நாங்கள் சந்திக்கின்ற ஓவ்வொருவருடனும் உம்முடைய அன்பையும், எதிர்நோக்கையும் பகிர்ந்து கொள்ளும் வரத்தை எங்கள் மனதில் தந்தருளும்.


அன்பின்மடல் முகப்பு