“பெருகிவரும் இறையாற்றல்”
“இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” (லூக்கா 1:66)
ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறந்தவுடன் உறவினர்களும், அண்டை வீட்டாரும் அந்தக் குழந்தையின் எதிர்காலத்தைக் குறித்துப் பற்பல யூகங்களைச் சொல்வது வழக்கம் தான். ஆயினும், எலிசபெத்துவுக்குக் குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்டவர்கள், “இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று சொல்லியதற்குச் சில காரணங்கள் இருந்தன. கருவுற இயலாத முதியவராக இருந்த எலிசபெத்துத் தாய்மைப் பேறு அடைந்தது, குருத்துவப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட செக்காரியா ஆலயத்திலிருந்து வந்தபோது பேச முடியாதவராக இருந்தது, அந்தக் குடும்ப வழக்கில் இல்லாத “யோவான்” என்னும் பெயரைக் குழந்தைக்குச் சூட்டியது, அடுத்தக் கணத்தில் செக்காரியாவுக்குப் பேசும் திறன் கிடைத்தது – இவையெல்லாமே சுற்றியிருந்த எல்லோருக்கும் வியப்பாகவும், அதிசயமாகவும் இருந்தன.
“உம் மனைவி உமக்கு ஒரு மகனைப் பெற்றெடுப்பார்” என்று வானதூதர் செக்காரியாவிடம் கூறியபோது, "ஆண்டவர் பார்வையில் பெரியவராய் இருப்பார்... தாய் வயிற்றில் இருக்கும்போதே தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்படுவார்.... இஸ்ரயேல் மக்களுள் பலரைத் தம் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வரச் செய்வார். எலியாவின் உளப்பாங்கையும் வல்லமையையும் உடையவராய் அவருக்கு முன் செல்வார்; தந்தையரும் மக்களும் உளம் ஒத்துப்போகச் செய்வார்; நேர்மையாளர்களின் மனநிலையைக் கீழ்ப்படியாதவர்கள் பெறச் செய்வார்" என்றெல்லம் அந்தக் குழந்தையைக் குறித்துச் சில முன்னறிவித்திருந்தார். பின்னாளில் யோர்தான் நதிக்கரையில் உரையாற்றும்போது, மக்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்கு கொடுத்து, முறைகேடான தீய வாழ்விலிருந்து மனம் மாற அழைப்பு விடுத்து, இறைஆட்சியின் மேன்மையைக் கண்டுணர்வதற்கு ஆயத்தம் செய்கிறார். “எப்படிப்பட்டதாக இருக்குமோ?” என்று சுற்றத்தார் ஆச்சரியப்பட்ட அந்தக் குழந்தையிடம் இறையாற்றல் பெருகியிருப்பதையும், வியத்தகு செயல்களை அவர் செய்வதையும் பின்னாளில் காணமுடிகிறது.
அதிசயங்களைச் செய்கின்ற இறைவா! வியத்தகு முறையில் எம்முள்ளே இறையாற்றலை பொழிகின்றவர் நீரே. கருவுற இயலாதவர் என்று கருதப்பட்ட எலிசபெத்துவின் உதரத்திலிருந்து ஆற்றல் மிக்க மகன் பிறக்க நீர் அருள்செய்தீர். இறையாற்றலின் திருவருளை எம்முள் பொழிந்து, இறையன்பில் வாழுகின்ற மக்களாக எம்மை வழிநடத்துவீராக.