“இறையாசீர் பெருகிவரும் வழித்தடங்கள்”
“பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே!" (லூக்கா 1:42)
சிறிய வயதினர் பெரியவர்களைச் சந்திக்கும்போது, அவர்களுக்கு மரியாதையுடன் வணக்கம் தெரிவிப்பது நமது பண்பு. அது போன்ற சமயங்களில், “கடவுள் உம்மை ஆசீர்வதித்துக் காப்பாராக! உம்மைப் பாதுகாத்து வழிநடத்தி, எல்லா நாள்களிலும் உமக்கு மகிழ்ச்சியும், உடல் நலமும் அருள்வராக!” என்று பெரியவர்கள் வாழ்த்துகிறார்கள். இதைப் போன்ற வாழ்த்தைத் தான் பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் (4:7) “அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்” என்று திருத்தூதர் புனித பவுல் வழங்குகிறார்/p>
திருப்பாடல் 4:8-ல் “நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர்” என்றூ வாசிக்கிறோம். மெசியாவின் வருகையை அறிவிப்பதற்கு அப்போது இருந்த குருக்களுக்குக் கடவுள் அழைப்பு விடுக்கவில்லை. ‘மீட்பராம் மெசியா எந்த நேரத்திலும் பிறக்கலாம்’ என்றவொரு நிலையில், அவருடைய பிறப்பைக் கொண்டாடுவதற்காக ஆடம்பரமான சடங்கு ஒன்றை நடத்துவதற்கு அவர் உத்தரவிடவில்லை.
மாறாக, மலைநாட்டில் இருந்த ஒரு சிறிய வீட்டில், திருமணம் ஆகாத ஒரு இளம்பெண்ணையும், கருவுற்று மகவைப் பெற்றெடுக்கும் வயதைக் கடந்த ஒரு முதிய பெண்மணியையும் தூயஆவியாரால் நிறைத்து, அவர்களின் வழியாக இந்த நற்செய்தியை வெளிக்கொணர்கிறார். அவர்களுடைய உதரத்திலிருக்கின்ற குழந்தைகளும் துள்ளி மகிழ்கின்ற அற்புதம் நிகழ்கின்றது.
அன்னை மரியாவின் வயிற்றில் இருக்கின்ற குழந்தையை “ஆண்டவர்” என்று விளிக்கின்ற முதல் நபராக எலிசபெத்தை புனித லூக்கா தனது நற்செய்தியில் காட்டுகிறார். தூயஆவியாரால் நிரப்பப்பட்ட எலிசபெத்து, மரியாவையும், அவருடைய வயிற்றில் வளர்கின்ற குழந்தையையும், அளப்பரிய உவகையோடும், எல்லையில்லாத வியப்போடும் வாழ்த்துக் கூறி ஆசி வழங்குகிறார். மரியா, எலிசபெத் ஆகிய இருவரைப் போலத் தூயஆவியாரின் அருளை நாமும் நம் உள்ளத்தில் உணர்ந்து, நம்மை சந்திக்கின்ற எல்லோருக்கும் ஆசி வழங்குகின்ற கருவிகளாக மாறிட இறையருள் வேண்டுவோம்.
பேரன்பின் நிறைவான இறைவா! நீர் அன்பு செய்கின்ற இவ்வுலக மக்கள்மீது உமது ஆவியின் அருளை வழங்குவீராக! எங்களை ஆசீர்வதித்துக் காத்தருள்வீராக! உமது திருமுகத்தை எங்கள்மீது ஒளிரச் செய்து, எங்களுக்கு உமது அருளைப் பொழிந்து, அமைதியை தருவீராக!