"ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்”(லூக்கா 1:45)
"பாறைப் பிளவுகளில் இருப்பவளே, குன்றின் வெடிப்புகளில் இருக்கும் என் வெண்புறாவே! காட்டிடு எனக்கு உன் முகத்தை; எழுப்பிடு நான் கேட்க உன் குரலை. உன் குரல் இனிது! உன் முகம் எழிலே". இவை இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்ட கடைசி வரிகள். தனது உதரத்தினுள் இறைமகன் இயேசுவை இனிய சுமையாகச் சுமந்திருந்த சமயத்தில் அன்னை மரியாவின் உள்மனதில் எழுந்திருக்கக் கூடிய உணர்வுகளை இந்த வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன. கருவுற்றிருக்கும் ஒரு இளம்பெண்ணின் புலன்களெல்லம் துய்த்துணர்கின்ற இன்பமான மகிழ்ச்சி இது. இயல்பான இந்த மகிழ்ச்சி நிச்சயமாக மரியாவின் முகத்தில் ஒளிவீசியிருக்க வேண்டும்.
கிறிஸ்துமஸ் காலங்களில் நாம் பாடுகின்ற பாடல்களும், பார்க்கின்ற காட்சிகளும், மரியாவை ஒரு கனிவான, அடக்கமான, பெண்ணாகவும், ஏழ்மையான ஒரு குடிலில் தன் பாலகனை தூங்கவைத்துக் கொண்டிருக்கும் இளம் தாயாகவும் உருவகப்படுத்திக் காட்டுகின்றன. “அருள்மிகப் பெற்றவரே* வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்ற வாழ்த்தை வானதூதரிடம் கேட்ட நேரத்திலிருந்தே வலிமையான உறுதியைத் தன் உள்ளத்தில் பெற்றிருந்தார். நம்பையலாத ஒரு நிகழ்வின் மேல் நம்பிக்கை வைத்தபோதே இந்த உறுதி மரியாவிடம் வெளிப்பட்டது. வானதூதரின் தூதுரையை நம்புவதற்கும், இறைமகனின் கருவைத் தன் உதரத்தில் தாங்குவதற்கும் இந்த உறுதியே துணையாக இருந்தது. கடவுள் உரைத்த யாவும் நிச்சயம் நிறைவேறும் என்னும் நம்பிக்கையே, மரியாவின் இந்த மனௌறுதிக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. இறைமகன் இயேசு இவ்வுலகில் உறைவதற்கு முதன்மையான, மேன்மையான மனிதப் பேழையாக இருந்தவர், மரியா தான்.
உலக மக்களோடு உறவாட முன்வந்த உன்னதரே, இறைவா! உம் திருமகன் இவ்வுலகில் மனிதனாகப் பிறப்பதற்கு அன்னை மரியாவை கருவியாகத் தேர்ந்துகொண்டீர். உமது துணையில் நம்பிக்கை வைத்து, தங்கள் குழந்தைகளைப் பேணிக்காக்கின்ற நிலையிலிருக்கும் பெற்றோர்களை ஆசீர்வதித்து அவர்களுக்கு உமது பாதுகாப்பையும், வல்லமையையும் பொழிவீராக.