திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

2024 டிசம்பர் 19-ஆம் நாள்-திருவருகைக் காலத்தின் மூன்றாம் வாரம் - வியாழக்கிழமை

“கடவுளின் நிலையான உடனிருப்பு”

வாசகங்கள்: நீதித்தலைவர்கள் 13:2-7, 24-25; லூக்கா 1:5-25


மறைநூல் வாக்கு:

அவர்களுக்குப் பிள்ளை இல்லை; ஏனெனில், எலிசபெத்து கருவுற இயலாதவராய் இருந்தார். மேலும், அவர்கள் வயது முதிர்ந்தவர்களாயும் இருந்தார்கள் (லூக்கா 1:7)

சிந்தனை:

புனித லூக்கா தனது நற்செய்தியை “யூதேய நாட்டில் ஏரோது அரசனாக இருந்த காலத்தில்” என்று ஆரம்பிக்கிறார். யூத வரலாற்றில் ஏரோது ஒரு கொடிய அரசனாக இருந்ததால், அவருடைய ஆட்சிக் காலம் ஒர் இருண்டக் காலமாகப் பார்க்கப்படுகிறது. செக்காரியாவும், எலிசபெத்துவும் வயது முதிர்ந்த தம்பதியர் தான்; ஆனாலும், கடவுள் பார்வையில் அவர்கள் நேர்மையாளர்களாக இருந்தார்கள். இருவரும் இருளில் ஒளிரும் விளக்குகளாக வாழ்ந்து வந்தார்கள். ஆழ்ந்த இறைநம்பிக்கையும், எதிர்நோக்கும் கொண்டிருந்த அவர்கள், அமைதியாகக் கடவுளுக்குச் சேவை செய்து வந்தார்கள்.

ஆயினும், தங்களுக்குக் குழந்தைபேறு இல்லையே என்னும் கவலை அவர்களை வேதனைக்குள்ளாக்கியது. வயது முதிர்ந்த நிலையில் இதற்குப் பிறகு தங்களுக்குக் குழந்தை பிறக்கும் என்ற சந்தேகம் கூட அவர்களுக்கு இருந்திருக்கலாம். அவர்களுடைய தளராத நம்பிக்கையின் பயனாக, அவர்கள் எதிர்பாராத ஒரு கட்டத்தில் கடவுள் அவர்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுகிறார். ஆம்! செக்காரியாவோடும், எலிசபெத்துவோடும் தங்கியிருந்து, அவர்களுக்கு நன்மை செய்தக் கடவுள், நம்மோடும் தங்கியிருக்கிறார்; நமக்குத் தேவையான அருள்வரங்களைத் தருவதற்குத் தயாராக இருக்கிறார். நமது துன்பத்திலும், வேதனையிலும் கடவுளுக்குப் பணிந்து நடக்க நாம் தயாராக இருக்கிறோமா? சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவேண்டல்:

கருணையின் ஊற்றான இறைவா! துன்பத்திலும், துயரத்திலும் உம்முடைய உதவியையும், துணையையும் வேண்டி ஏங்கியிருக்கின்ற மக்கள் எல்லாரையும் உமது இதமான அன்பின் அரவணைப்பில் இணைத்துக் காத்தருளும். மனதில் காயப்பட்டு வருந்தி நிற்கின்றவர்களின் உள்ளங்கள் நிலையான உமது உடனிருப்பை உணரச் செய்தருளும்.எ


அன்பின்மடல் முகப்பு