திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

2024 டிசம்பர் 18-ஆம் நாள் - திருவருகைக் காலத்தின் மூன்றாம் வாரம் - புதன்கிழமை

“இடையூறுகளை ஏற்கும் துணிவு”

வாசகங்கள்: எரேமியா 23:5-8; மத்தேயு 1:18-25


மறைநூல் வாக்கு:

“உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்” (மத்தேயு 1:20)

சிந்தனை:

நெருக்கடியில் நிலைதடுமாறுகின்ற ஒரு மனிதனாக யோசேப்புவை தனது நற்செய்தியில் புனித மத்தேயு காட்டுகிறார். தனது வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம் தலைகீழாக மாறிப் போயிருப்பதை யோசேப்பு காண்கிறார். “யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்” என்று நற்செய்தியில் வாசிக்கும்போது, நம்பிக்கை இழந்து மனக்கசப்போடு தடுமாறுகின்ற யோசேப்புவை நாம் பார்க்கின்றோம். அந்தக் காலத்தில் யூதரிடையே நிலவிய கலாச்சாரக் கட்டுப்பாடுகளின் சூழலில், திருமணம் ஆகாமல் மரியா கருவுற்றிருந்தது, யோசேப்புவின் மனநிலையைக் குழப்பத்தை உண்டாக்கியிருந்தது. “இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக மரியாவை விலக்கிவிடுவதைத் தவிற வேறு வழி அவருக்குத் தெரியவில்லை.


இத்தகைய இக்கட்டான நேரத்தில் தான், ஆண்டவரின் தூதர் கனவில் தோன்றி, “உம்மனைவியை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்” என்று கூறுகிறார். மனக்குழப்பத்தில் இருந்த யோசேப்புவின் உள்ளம் அமைதி அடைந்து, மரபுக்கும், வழக்கத்திற்கும் அப்பாற்பட்ட நடைமுறையை ஏற்றுகொள்கிறார். திருமணம் ஆகாமல் கருவுற்றிருக்கின்ற பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொள்வதில் உள்ள அவமானங்களையும், இடையூறுகளையும் தாங்கிக் கொள்ள அவர் துணிவுடன் தயாராகிறார். யோசேப்புவின் இந்தத் துணிச்சலான செயலின் விளைவாக இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறுகின்றது.

இறைவேண்டல்:

அன்பின் இறைவா! அயலாருக்கு இரக்கம் காட்டுவதற்காக இயேசு சொல்லும் வழிகள் சவால்களும், இடையூறுகளும் நிறைந்தவை. அவற்றை ஏற்று நடப்பதற்கான துணிவை எங்களுக்குத் தந்தருளும். சோதனை நேரங்களிலும், உறுதியற்ற மனநிலையிலும் எங்களைக் காத்தருளும். உமது துணை எங்களுக்குத் தேவைப்படுகின்ற சமயங்களில் உம்முடைய உடனிருப்பு எங்களோடு தங்குவதாக.


அன்பின்மடல் முகப்பு