“இயேசுவின் மூதாதையர் மரபுவழி”
தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல் (மத்தேயு 1:1)
ஒரு குழந்தை உலகத்தில் பிறக்கின்றபோது, அந்தக் குடும்பத்தின் வம்சாவளி உறவுகள் நீட்டிக்கப்படுகின்றன. குடும்பத்தில் உள்ள சொந்தங்களின் விரிவாக்கமாகக் குழந்தையின் பிறப்பு அமைகிறது. பிறந்த குழந்தையின் குடும்பவழி முன்னோர் யார், அந்தக் குழந்தை யாருடைய பண்புகளையும், குணாதிசயங்களையும் கொண்டிருக்கும் என்றெல்லாம் பேசப்படும்.
தனது நற்செய்தி நூலின் தொடக்கத்தில் இயேசுவின் மூதாதையர் பட்டியலை விரிவாகத் தருகிறார், திருத்தூதர் புனித மத்தேயு. கடவுள் மனிதனாகிறார். அறிவுக்கு எட்டாத இறைத்தன்மை கொண்ட கடவுள், மனிதவுரு எடுக்கத் திருவுளம் கொள்கிறார். உன்னதரான கடவுள் தன் உயர்நிலையைத் துறந்து, குறைபாடுகளும், களங்கமும் நிறைந்த தாழ்நிலையை மேற்கொண்டு, தன் படைப்புகளாகிய மனித இனத்தோடு உறவாட முன்வருகிறார். உலக மக்களின் மீட்புக்காகத் தன்னையே பலியாக ஒப்புக்கொடுப்பதற்கு இஸ்ராயேலின் முதுபெரும்தந்தையான ஆபிரகாமின் குடும்பப் பரம்பரையில் துளிர்க்கின்ற தளிராகத் தோன்ற சித்தமாகிறார்.
இரக்கமும், கருணையும் நிறைந்தவரே, இறைவா! உம்முடைய தெய்வீக அன்பின் வல்லமையை உமது திருமகனாகிய இயேசுவின் வழியாக வெளிப்படுத்தினீர். அருள்பெருக்கின் நிறைவான உமது அன்பை எங்கள் குடும்பத்தாரோடும், அயலாரோடும் பகிர்ந்து கொள்கின்ற துணிவை எங்கள் இதயத்தில் பொழிவீராக.