திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

2024 டிசம்பர் 16-ஆம் நாள் - திருவருகைக் காலத்தின் மூன்றாம் வாரம் - திங்கள்கிழமை

“விண்ணக அதிகாரத்தின் விடாமுயற்சி”

எண்ணைக்கை 24:2-7, 15-17அ; மத்தேயு 21:23-27


மறைநூல் வாக்கு:

“எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? (மத்தேயு 21:23)

சிந்தனை:

எந்த மதத் தலைவர்களாக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தோடு உரையாற்ற வேண்டியது அவசியம். அத்தகைய அதிகாரம், அவர்களுடைய மதநம்பிக்கையிலும், போதனையிலும், மதத்தின் விதிமுறைகளைக் கடைபிடிப்பதிலும் வெளிப்படுகிறது. இயேசு ஏற்கனவே கோவிலின் உள்ளே விற்பவர்கள், வாங்குபவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தினார். நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்போரின் இருக்கைகளையும் கவிழ்த்துப் போட்டார். யூத மதத் தலைவர்களின் அனுமதியோடு கோவிலினுள் நடைபெறும் வியாபாரத்தைச் சீர்குலைக்கவும், அகற்றவும் இவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கருதிய தலைமைக் குருக்களும், மூப்பர்களும் இயேசுவிடம், “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? என்று கேட்கிறார்கள்.


தலைமைக் குருக்களும், மூப்பர்களும் இவ்வுலக வாழ்வுக்குட் தொடர்புடைய அதிகாரத்தைப் பற்றிய புரிதலோடு இயேசுவிடம் கேள்விக் கேட்டார்கள்… ஆனால், இறைமகன் இயேசு தெய்வீக அதிகாரத்தோடு பேசினார்; செயலாற்றினார். ஆகவே, தன்னுடைய அதிகாரம் எத்தகையது என்று யாருக்கும் தெளிவுபடுத்தி நிரூபிக்க வேண்டியது அவசியம் என்று இயேசு நினைக்கவில்லை. யூத மதத்தலைவர்கள் வெளியிலிருந்து அல்லது உயர்பதவியிலிருக்கின்ற யாரிடமிருந்து இவருக்கு அதிகாரம் கிடைத்தது என்று தேடினார்கள். இறைமகனாகிய தனக்கு அதிகாரம் விண்ணகத்திலிருந்து வந்தது என்பதைத் தன்னுடைய செயல்களில் மூலமாக அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இயேசு நினைக்கிறார்.

இறைவேண்டல்:

என்றும் வாழும் இறைவா! உம் மக்களாகிய எங்கள் வாழ்வில் குறிக்கோளும், அர்த்தமும் கொண்ட உமது அருள்கொடைகளை எந்நாளும் வழங்கி வருகிறீர். உம்முடைய இறைவல்லமையின் அதிகாரத்தை உணர்ந்து கொள்ளவும், நீர் வழங்குகின்ற அருள்கொடைகளைச் சரியான முறையில் பயன்படுத்தவும் எங்களுக்கு வரத் தாரும்.


அன்பின்மடல் முகப்பு