“உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்”
மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி (செப்பானியா 3:14)
இளம்வயதில் நிகழ்ந்த சந்தோஷமான சில அனுபவங்களின் சுவடுகள் குழந்தைகள் எல்லோருடைய உள்மனதிலும் நீங்காத நினைவுகளாக நிலைபெற்றிருக்கும். குறிப்பாகத் தன் அம்மாவின் கரங்களின் அரவணைப்பில் பதுகாப்பாக இருந்து கொண்டு, அவருடைய முகத்தில் அலைமோதும் புன்னகையின் நிறைவை தன்னுள் உணர்வது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். அது போன்ற நேரங்களில் அந்தத் தாய் மெல்லிய குரலில் முணுமுணுக்கின்ற பாடல், குழந்தைகளுக்கு அமைதியும், ஆறுதலும் அளிக்கிறது. இளவயதைக் கடந்து வளர்ந்த பிறகும் கூடச் சில குழந்தைகள் அந்தப் பாடலைத் தட்டுத்தடுமாறி பாடுவதைக் கேட்டிருப்போம். அதைக் கேட்டு நாமும் மகிழ்ச்சி அடைகிறோம்.
திருவருகைக் காலத்தின் மூன்றாவது ஞாயிறு இத்தகைய மகிழ்ச்சியின் முனனுபவத்தை நமக்கு எடுத்துரைக்கிறது. தனது மக்களாகிய இஸ்ரயேலுடன் அகமகிழ்ந்து ஆடிப்பாடுகின்ற மகிழ்ச்சியின் கடவுளை இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் செப்பானியா காட்டுகிறார். தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவைத்து, பகைவர்களை அகற்றி, மனச்சோர்வை அக்களிப்பாக மாற்றுகின்ற கடவுளை நம் முன் வைக்கிறார். பல்லாண்டுகளாக அல்லலும், சோதனையுமாக இருந்த வாழ்க்கைநிலையைத் திருவிழா நாள்களைப் போல ஆக்குகிறார். கடவுளின் அருள்கரமும், அன்பும் இறுதிவரை நமக்கு ஆதரவும், ஆறுதலும் வழங்கும் என்னும் தெய்வீக வாக்குறுதியில் நம்பிக்கைக் கொண்டு, இந்த மகிழ்ச்சி ஞாயிறன்று இறைவனுக்கு நன்றி சொல்வோம்.
அருளின் ஊற்றாகிய இறைவா! உம்மை நம்பியிருக்கின்ற மக்களாகிய எங்கள் உள்ளங்களை உமது திருவருள் பெருக்கினால் நிறைத்தருள்வீராக. உம் திருமகனும், எங்கள் மீட்பருமான கிறிஸ்துவின் பிறப்பு விழாவுக்காகக் காத்திருக்கும் எங்களை விண்ணக மகிழ்ச்சி முழமையாக ஆட்கொள்வதாக!