“கடவுள் எங்கோ தூரத்தில் இல்லை”
“எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்த போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்" (மத்தேயு 17:11,12)
இன்றைய நற்செய்தி வாசகத்தின் உரையாடலுக்கு முன்னதாக இயேசுவின் தோற்ற மாற்றத்தையும், மோசேயும், எலியாவும் வந்து நின்று இயேசுவோடு உரையாடுவதையும் சீடர்கள் கண்டார்கள். மேலும் "இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்". என்று இறைவாக்கினர் மலாக்கி எழுதியிருப்பதும் சீடர்களுக்குத் தெரியும். அதனால் தான், “எலியாதான் முதலில் வர வேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?” என்று இயேசுவிடம் கேட்கிறார்கள்.
இறைவாக்கினர் மலாக்கியின் வாக்கு உண்மைதான் என்று கூறிய இயேசு, “அவர் ஏற்கனவே வந்துவிட்டார்” என்று கூறுகிறார். ‘உலகிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட எலியாவே மீண்டும் வருவார்’ என்று மறைநூல் அறிஞர்கள் நம்பியதால், இயேசுவின் வழியைச் சீர்ப்படுத்த வந்த திருமுழுக்கு யோவானை அவர்கள் கண்டுணரவில்லை. திருமுழுக்கு யோவானின் போதனை அநேக மக்களின் மனமாற்றத்திற்கு வித்திட்டாலும், இறுதியாக யூத மதத் தலைவர்களாலும், அரசியல் அதிகாரத்தாலும் அவர் நிராகரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இறைவாக்கினர் மலாக்கி உரைத்தவாறு இறைப்பணி செய்த திருமுழுக்கு யோவானை மக்கள் ஏற்றுகொள்ளாததைப் போல, மெசியாவான தன்னையும் நிராகரித்துக் கொலை செய்வார்கள் என்று இயேசு கூறுகிறார். இயேசுவின் பிறப்பு விழாவுக்காகத் தயாரிப்புச் செய்து கொண்டிருக்கின்ற நாம், இயேசுவை நம் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோமா?
எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே! அன்பு செலுத்துவதிலும், அயலாருக்கு தொண்டு செய்து வாழ்வதிலும் தலைமுறை தலைமுறையாக எங்கலை வழிநடத்தி வருபவர் நீரே! நீர் காட்டுகின்ற அன்புப் பாதையை நாங்களும் பின்பற்றி நடந்திட எங்களுக்கு அருள் தாரும்.