திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

2024 டிசம்பர் 13-ஆம் நாள் - திருவருகைக் காலத்தின் இரண்டாம் வாரம் - வெள்ளிக்கிழமை

“நமக்கு நடுவில் உறைகின்ற தூயவர்”

வாசகங்கள்: எசாயா 48:17-19; மத்தேயு 11:16-19


மறைநூல் வாக்கு:

உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! (எசாயா 48:17)

சிந்தனை:

நம்முடைய வாழ்விற்குப் பயன் தருகின்ற பற்பல வழிமுறைகளைக் கடவுள் நமக்கு எடுத்துரைக்கிறார். அவற்றைக் குறித்து ஏளனம் பேசி அலட்சியப்படுத்தாமல், கடவுளுடைய கட்டளைகளைக் கவனமுடன் கேட்டு அவற்றை நம் வாழ்வில் பின்பற்றிட விரும்புகிறார். இதைத் தான் இன்றைய முதல் வாசகத்தில், “என்னுடைய கட்டளைகளுக்குச் செவிசாய்த்து நடக்கத் தவறியதால் எத்தனை இன்னல்களுக்கு ஆளானீர்கள்?” என்று இஸ்ராயேல் மக்களைக் கடவுள் கேட்கிறார். இன்றைய நற்செய்தியிலும், தன்னைச் சரியாக அறிந்து கொள்ளாத மக்களுக்காக இயேசு வருந்துகிறார். அக்காலக் கட்டத்தில் வாழ்ந்த மக்கள் திருமுழுக்கு யோவானையும், இயேசுவையும் நம்பானல், அவர்களுடைய போதனைகளைச் சிறுபிள்ளைகளைப் போலக் கேலி செய்து புறந்தள்ளினார்கள்.


அக்காலத்தில் திருச்சட்ட விதிகளைக் கவனமுடன் பின்பற்றுவதில் பல கட்டுபாடுகளைத் திணித்து நடைமுறைபடுத்தி வந்த பரிசேயர்களைப் போலன்றி, திருமுழுக்கு யோவனும், இயேசுவும் உண்மையிலேயே மிக எளிமையான வாழ்க்கையைக் கடைபிடித்தார்கள். இயேசுவைப் பின்பற்றி வந்த பலர் அவருடைய போதணைகளின்படி நடந்தாலும், வேறு சிலர் அவற்றை அலட்சியப்படுத்தினார்கள். ஆனால் இத்தகைய ‘அலட்சிய மனப்பான்மை’ இன்றைக்கும் பலருக்கு இருக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. உன்னதரும், தூயவருமான இறைமகன் இயேசு இன்றும் நம்மோடு உடனிருந்து உறவாடுகிறார்; இக்கட்டான நேரங்களில் நமக்கு நன்மைகள் செய்திட காத்திருக்கிறார். கடவுளின் கட்டளைகளுக்கு முழுமனதோடு செவிசாய்க்க நாம் தயாராக இருக்கின்றோமா?

இறைவேண்டல்:

உண்மையின் பிறப்பிடமும், ஞானத்தின் ஊற்றுமாகிய இறைவா! இயேசுவின் நற்செய்தியை பிறருக்கு அறிவிக்கவும், அனைவரோடும் சகோதர உறவில் நிலைத்திருக்கவும் எங்களுக்கு வலுவூட்டி வழிகட்டுபவர் நீரே. எங்கள் அயலாரை அன்பு செய்யவும், உமது தெய்வீக அன்பை அவர்களோடு பகிர்ந்து கொள்ளும் கருவிகளாக நாங்கள் வாழவும் எங்களுக்கு வரம் தாரும்.


அன்பின்மடல் முகப்பு